பவானி தரிசனம் - 1
இத்தலம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து கிளம்பிய போது பவானி 54 கிமீ தூரம் தானே சிறிது நேரத்தில் சென்று விடலாம் என்று வேகமாகவே பயணம் செய்தோம். நடை அடைப்பதற்கு முன்னர் சென்றாலும் திருக்கோவிலை முழுவதுமாக தரிசிக்க சமயம் கிட்டாது என்பதால் பிறகு சீர் வேகத்தில் பயணம் செய்து காவிரி நதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழிலாக தீவு போல காட்சியளிக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானி வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை அடைந்த போது நடை சார்த்தியிருந்தனர். எத்தலத்திலும் தீர்த்தத்தில் நீராடவில்லை, இங்கு முக்கூடலில் நீராடட்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் என்று எடுத்துக்கொண்டு வடக்கு பக்கம் உள்ள இராஜ கோபுரத்தை முதலில் தரிசனம் செய்தோம். இக்கோபுரத்தையொட்டி பரமபதவாசலும் உள்ளது. சைவமும் வைணவமும் இத்தலத்தில் இணைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் இராஜ கோபுரத்திற்கு முன்னர் இருபுறமும் விநாயகர் மற்றும் அனுமன் திருசன்னதிகள் உள்ளன. இராஜகோபுரமே இலிங்கம் என்பதால் கோபுரத்தை நோக்கியவாறு சிவனாரை என்றும் சேவிக்கும் நந்தி இராஜ நந்தியாக சிறு சன்னதியில் அருள் பாலிக்கின்றார்.
அவரை தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி |
தந்நோ நந்தி ப்ரசோதயாத் || என்று வணங்கினோம். பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு கூடுதுறைக்கு
சென்றோம்.
வடக்கிலிருந்து பாய்ந்து வரும் காவிரியும், மேற்கிலிருந்து பாயும் பவானியும் மற்றும் அந்தர்வாகினியாக அமுதநதி கூடும்
சங்கமத்தில் கை, கால், முகம் கழுவி பின்னர் கரையில் அமர்ந்து சங்கமத்தின் அழகை
இரசித்தோம். வடநாட்டில் கங்கையும்,
யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமாகும் அலகாபாத் திரிவேணி சங்கமம்
(பிரயாகை) என்றழைக்கப்படுகிறது. எனவே பவானி தக்ஷிண
திரிவேணி என்றழைக்கப்படுகின்றது. தக்ஷிண
திரிவேணி மட்டுமல்ல, தக்ஷிணப் பிரயாகை என்றும் மூன்று
நதிகளும் கூடுவதால் முக்கூடல், கூடுதுறை என்றும், குபேரன்
வழிபட்டதால் தட்சிண
அளகை, தட்சிண கைலாயம், போன்ற சிறப்புப் பெயர்களும்
இத்தலத்திற்கு உள்ளது. வடநாட்டின் திருக்காசியைப்
புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே
இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும், இலந்தை
மரம் தல விருட்சம் என்பதால் பத்ரி வனம் என்றும், பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை),
சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி
ஆகிய ஐந்து மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரே இராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளதால் “க்ஷேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர்,
சகஸ்வரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள்
ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும்
வழங்கப்படுகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரையான
அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யும் கூடுதுறை. பூமிக்குள் பல சிவலிங்கங்களை
கொண்ட அற்புதமான தலம். பித்ருக்களுக்கு செய்யவேண்டிய சிரார்த்தங்களை செய்ய உகந்த
தலம். இளைய காசி என்பதால் கூடுதுறையில் அஸ்தியை கரைக்க பலர் இத்தலத்திற்கு
வருகின்றனர். பரிகாரம் செய்பவர்களுக்காகவே ஒரு மண்டபம் ஆற்றுக்கும் ஆலயத்திற்கும்
இடையில் அமைத்துள்ளனர்.
இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின் இறைவனை தரிசிக்க அடியோங்கள் சிறிது
நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது கரையில் இருந்த விநாயகரையும் மற்றும் மூன்று திருச்சன்னதிகளை தரிசித்தோம். நாக தோஷம் உள்ளவர்கள் இவ்விநாயகர் சன்னதியில்
கல் நாகர் சிலை பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் விலகும் என்பதால் பல நாகர் சிலைகள்
இருப்பதைக் கண்டோம். கோயிலுக்கு வெளியில் தெற்கே
காவிரிக்கரையில் அமைந்த அச்சன்னதிகள் காயத்ரிலிங்க
சன்னதி, சகஸ்ர லிங்க சன்னதி, அமுதலிங்கேசர் சன்னதி ஆகும். விஸ்வாமித்திரர்
ஸ்தாபித்து காயத்ரி மந்திரம் ஓதி வழிபட்ட இலிங்கம் காயத்ரி லிங்கம்
என்றழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு
அருகில் காயத்ரி தீர்த்தம் உள்ளது. இராவணன் சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான் என்பது ஐதீகம். இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் இராகு – கேது
தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
பராசர முனிவர் சங்கமேஸ்வரரை குறித்து தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் தேவர்களும்
அசுரர்களும் அமுதம் வேண்டி மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை
கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். முதலில் ஆலாலம் என்ற விஷம் வந்தது அதை
சிவபெருமான் அருந்தி தேவர்களையும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து தியாகராஜர்
ஆனார். பின்னர் அமுதம் வந்தது. மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக அதை
தேவர்களுக்கு மட்டும் அளித்தார். பின்னர்
அமுத கலசத்தை பராசர முனிவரிடம் அளித்தார், அவரும் அதை இப்பத்ரிவனத்தில் மறைத்து
வைத்தார். இதை அறிந்த அசுரர்கள் அமிர்தத்தை கவர்ந்து செல்ல வந்தனர். பாராசரர்
வேதநாயகி அம்பாளிடம் வேண்ட அம்மனும் அசுரர்களை அழித்தாள். சிறிது காலம் சென்று
அமிர்த கலசம் வைத்திருந்த இடத்தை தோண்டிப்பார்த்த போது அமுதம் காவிரி, பவானி
சங்கமத்தில் சென்று கலந்திருந்தது. அமிர்த கலமும் சிவலிங்கமாக மாறி இருந்தது. எனவே
அவ்விலங்கம் அமுத லிங்கம் எம்றழைக்கப்படுகின்றது.
குழந்தையில்லாதவர்கள் இந்த லிங்கத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரைச்
சுற்றி வந்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும்.
ஆலயம் திறப்பதற்காக காத்திருந்த சமயத்தில் இச்சன்னதியின் முன் மண்டபத்தில்
அமர்ந்திருந்தோம். இச்சமயத்தில் இத்தலத்தின் மற்ற வரலாறுகளை சிந்திப்போம் பின்னர்
ஆலயத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.
அம்பாள், தலம், நதி ஆகிய
மூன்றுக்கும் பவானி என்று பெயர். அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று இந்நாமம். "பவானி, பாவனா கம்யா, பவாரண்யா குடாரிகா “
என்பது லலிதா சகஸ்ரநாமத்தின்
ஒரு ஸ்லோகம். பவானி என்பதன் பொருள் பவன் என்ற
சிவபெருமானின் பத்னி. பவ: என்பது சம்சார சாகரம் அதற்குப் பிராணனை கொடுப்பவள். அதாவது இயற்கையின் சக்தி அல்லது படைப்பு ஆற்றலின் ஆதாரம். தனது பக்தர்களுக்கு
அருளை வழங்கும் ஒரு அன்னை என்றெல்லாம் பொருள். அருணகிரிநாதர் வேல் விருத்தத்தில்
கங்காளீ சாமுண்டி வாராகி யிந்த்ராணி
கௌமாரி
கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலை
கௌரிகா
மாக்ஷிசைவ
சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி …… என்று அம்பாளைப் பாடியுள்ளார்.
இனி பவானியாற்றின் சிறப்பைப் பற்றிக்
காணலாம். பவானி ஆறு காவிரி ஆற்றின் முக்கிய
துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர
மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, அதில் பெருங்குன்றூர்க்கிழார்
என்ற புலவர் இளஞ்சேரல் இரும்பொறை எனும் சேர மன்னனைப் பற்றிய பாடலில்,
புனல்பாய் மகளிராட வொழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசத்தோன்றுஞ்
சாந்துவரு வானி நீரினுந்
தீந்தன் சாயலன் மன்றதானே - என அரசனுடைய உடல் வானியாற்று நீரைப் போல் மென்மையும்
தூய்மையும் உடையதாக இருந்தது என்று பாடுகிறார்.
பவானி ஆறு தமிழகத்தின் நீலகிரி
மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தென்மேற்கு மூலை முகட்டில் உருவாகிறது. மலை
முகட்டிலிருந்து கீழிறங்கத் தொடங்கும் பகுதியில் மேல் பவானி அணை கட்டப்படுள்ளது. அங்கிருந்து
தென்மேற்காக கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில்
பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் கிழக்கு நோக்கி திரும்பி பாய்கிறது. கோவை நகருக்கு
சுவையான குடிநீரை வழங்கும் சிறுவாணி
ஆறு பவானியுடன் இணைந்த பின் மீண்டும் தமிழகத்துக்குள் பவானி நுழைகிறது. பின் குந்தா ஆறு பவானியுடன் இணைகிறது. இதற்கு கீழ்
பில்லூர் அணை பவானியில் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை
அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டு எனப்படும் பவானி
சாகர் அணையை அடைகிறது .பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.
இந்த அணையினால் ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வளம்
பெறுகின்றன. பின் பவானி ஆறு கோபிசெட்டி பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில்
காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து காளிங்கராயன்
வாய்க்கால் தொடங்குகிறது.
பவானி நகரம் கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள்
உலகப் புகழ்பெற்றவை. இனி இத்தலத்தின் மற்ற வரலாறுகளைப்
பற்றிக்காணலாம்.
2 comments:
பாவனி திருக்கோயில் வரலாறு, அருணகிரி நாதர் பாடல் அனைத்து செய்திகளும் அருமை. பல வருடம் ஆகி விட்டது பாவனியை தரிசனம் செய்து.
உங்கள் பதிவு மூலம் மீண்டும் தரிசனம் செய்கிறேன்.
தொடர்கிறேன்.
மிக்க நன்றி. தொடருங்கள் அம்மா.
Post a Comment