சத்தியமங்கலம்
வேணுகோபால சுவாமி ஆலய தரிசனம்
பண்ணாரி அம்மனை திவ்யமாக தரிசித்த பின் அங்கிருந்து சுமார் 11:30 மணிக்கு புறப்பட்டோம் சத்தியமங்கலம் வந்து சேர்ந்தபோது 12:00 மணி ஆகிவிட்டது. அவ்வூரில் உள்ள வேணுகோபால பெருமாள் ஆலயத்தை சேவிக்க இவ்வாலயம் சென்றோம். சுமார் 800 ஆண்டுகளுக்கும் முந்தைய ஆலயம் வாணி என்று புகழ் பெற்ற பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பெருமாள் இவ்வாலயத்தில் மூன்று நிலைகளில் சேவை சாதிக்கின்றார். வேணுகோபால சுவாமியாக நின்ற நிலையிலும், லக்ஷ்மி நாராயணாராக அமர்ந்த நிலையிலும், அரங்கநாதராக கிடந்த நிலையிலும் அருள் பாலிக்கின்றார். இராமானுஜர் சோழநாட்டிலிருந்து மேலகோட்டை சென்ற போது இவ்வாலயத்தில் தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் ஆலயத்தில் விசாரித்த போது அப்படியொன்றும் இல்லை என்றார்கள். ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் உற்சவரும் நகைகளும் மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூர் வழியாக வந்து இக்கோவிலின் சுரங்க பாதை / பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார்கள். மேலும் திப்பு சுல்தானின் வரி வசூல் அதிகாரியான ரங்கய்யா என்ற அன்பர் தான் வசூலித்த வரியை செலுத்தாமல் இக்கோவிலின் 108 கால் மண்டபத்தை கட்டினார், இதனால் அவர் சிலை ஒரு தூணில் உள்ளது என்றார்கள்.
கொங்கு நாட்டுக்கே உரிய விளக்குத்தூண் இங்கு பிரம்மாண்டமாக 80 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இத்தூண் ஒரே கல்லால் ஆனது என்பது இதன் சிறப்பு.
வேணு கோபால சுவாமி விமானம்
இம்மண்டபத்தை அடுத்து செப்பு கவசம் பூண்ட கொடி மரம் மற்றும் பலிபீடமும் உள்ளது. அடுத்து கிழக்கு பார்த்த மூன்று நிலை இராச கோபுரம் அதில் சதுர் புஜராக சங்கு சக்கரங்களுடனும்,
ருக்மணி சத்யமாமா சகிதராக கருவறையில் சேவை சாதிப்பது போல வேணு கோபாலர் சுதை சிற்பம் அலங்கரிக்கின்றது.
இத்தலத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராக
வேணு கோபால சுவாமி நின்ற கோலத்திலும், லக்ஷ்மிநாராயணராக அமர்ந்த கோலத்திலும்,
கஸ்தூரி ரங்கநாதராக கிடந்த கோலத்திலும் சேவை சாதித்து அருளுகின்றார். தாயார்
சகல மங்களங்களையும் அருளும் கல்யாண மஹாலக்ஷ்மியாக அருள் பாலிக்கின்றாள்.
மேலும் சுதர்சன நரசிம்மர், ஆண்டாள், ஹயக்ரீவர், தன்வந்திரி பகவான், கல்யாண விநாயகர், ஐயப்பனும் இத்தலத்தில் அருளுகின்றனர். கிருஷ்ணர்
விமானத்தில் எழிலாக தசவதார கோலங்களை தரிசிக்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் வாமனரின் சிற்பம் சூரிய சந்திரர்களுடன் உள்ளது.
காஞ்சிபுரம் போல இவ்வாலயத்திலும் மோட்ச பல்லி சிற்பம் உள்ளது. விஷ ஜந்துக்களால்
பாதிக்கப்பட்டோர் இப்பல்லியை வந்து தொட்டு வணங்கி விட்டு செல்கின்றனர். பல மீன்
சிற்பங்கள் காணக்கிடைக்க்கின்றன எனவே பாண்டியர்கள் திருப்பணி
செய்திருக்கலாம். சூரிய சந்திர கிரகண
புடைப்பு சிற்பங்களையும் காணலாம்.
மண்டபத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம்
உற்சவரும் நகைகளும் மதுரை, கன்னியாகுமரி, கேரளா, மைசூர் வழியாக வந்து இக்கோவிலின் சுரங்க
பாதை / பாதாள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்ததாகவும், (எனவே அரங்கநாதர்
திருசன்னதி இத்தலத்தில் உள்ளது) திப்பு சுல்தான் போர் காலங்களில் இச்சுரங்க வழியை உபயோகப்படுத்தியதாவும்
இரு செய்திகள் இச்சுரங்கப்பாதையைப் பற்றி கூறுகின்றனர்.
No comments:
Post a Comment