Tuesday, May 31, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 21

      பவானி தரிசனம் - 2

அம்பாள் விமானம் - பள்ளியறை விமானம்

பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க வந்த குபேரன், இத்தலத்திற்கு வந்தபோது, யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் தவம் செய்வதைக் கண்டார். அத்துடன், மான், புலி, சிங்கம், பசு, யானை, நாகம், எலி என பல்வேறு உயிரினங்களும் ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவத்தில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதைக் கண்டு குபேரன் ஆச்சர்யம் அடைந்தார். அவ்விடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த அவர், இறைவனின் தரிசனம் வேண்டி பவானியில் தவம் மேற்கொண்டார். குபேரனின் தவத்தால் மகிழ்ந்த சிவனும், திருமாலும் காட்சியளித்து அருள்பாலித்தனர். அத்துடன் அங்குள்ள இலந்தை மரத்தின்கீழ் சுயம்பாகத் தோன்றி அருள்புரிந்தார் ஈசன். அப்போது, அளகேசன் என்ற பெயரால் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமென குபேரன் வரம் கேட்டுப் பெற்றார். அன்றிலிருந்து இத்தலம், ‘தட்சிண அளகை’ என்ற பெயர் பெற்றது. சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப் பெருமாளாக திருமால் எழுந்தருளினார். எனவே இராஜகோபுரம் வடக்குப் பக்கம் உள்ளது.

 ஆற்றங்கரையில் 

இக்கோயிலின் தீர்த்தங்கள் காவிரி, பவானி மற்றும் காவிரியில் அந்தர்வாகினியாக சங்கமிக்கும் அமுதநதி ஆகியன. கோயிலுக்கு வெளியில் காயத்ரி லிங்கக் கோயிலுக்கெதிரில் காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்  உள்ளன. காயத்ரி தீர்த்தத்தை பக்தர்கள் காயத்திரிமடு என்றழைப்பர். இதுதவிர, தேவதீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், உரோமச தீர்த்தம் என்பவைகளும் இக்கோவில் வளாகத்தில் உள்ளன.

புரட்டாசி, தை, ஆடி அமாவாசையிலும், ஆடிப் பதினெட்டிலும், தமிழ் மாதம் பிறப்பு, வருஷப் பிறப்பு பொங்கல் போன்ற புண்ணிய நாட்களிலும், கிரகண நாட்களிலும் பக்தர்கள் ஏராளமாக வந்து காயத்ரி மடுவில் நீராடி இறைவனை வழிபட்டுச் செல்வர்.  

“காலில் அரவம்  இரு  சுடரைப் பற்றும் காலத்திலே 

மேலுலகம் பெறுவோர் புனல் மூழ்க விரும்புவது

கோலம் மிகுந்த பவானியும் பொன்னியும் கூடுதுறை
வாலிப காசி நண்ணாவூர் பயில் கொங்கு மண்டலமே’’ -   

என்னும் கொங்கு மண்டலச் சதகப் பாடல் கிரகண காலத்தில் இத்தலத்தில் நீராடும் சிறப்பைப் பற்றி கூறுகிறது.  அமாவாசை நாட்களில் கூடுதுறையில்  நீராடி விட்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. 

 தேவாரப்பாடல் பெற்ற 274 திருத்தலங்களில், பவானி 207வது தலம். கொங்கேழ் தலங்களில் இது மூன்றாவது தலம். அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடைப்பிள்ளையார் ஒரு பதிகம் பெற்ற இத்தலம் திருநணா’ என்று அவர் பாடியுள்ளார். 

 பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி

அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்

வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்

செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே.  

 பொருள் : பந்தாடும் விரலை உடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, பாம்பை அணிகலனாகப் பூண்டு, எருதேறி, அழகிய மாலையாக அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலின் அருகே மந்திகள் நடனமாடவும் பூம் பொழிலில் வண்டுகள் பாடவும் செந்தேனின் தெளிவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும் வளமுடைய திருநணாவாகும் என்று நற்றமிழ் வல்ல திருஞானசம்பந்தர் பாடிய இத்தலத்தின்

இறைவன் :  சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம்,  வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன்,  நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)

இறைவி :  வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார்                              மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி,                                        வக்கிரேஸ்வரி

தல விருட்சம் :  இலந்தை

 தீர்த்தம் : காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம்,                                                            சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம், காயத்ரி தீர்த்தம்.

 புராண பெயர்         : திருநணா, பவானி முக்கூடல்

பாடியவர்: திருஞானசம்பந்தர்.

 இங்குள்ள இறைவன் “சங்கமேஸ்வரர், இரு ஆறுகளுக்கு இடையில்  கோவில் கொண்டிருப்பதால்  “நட்டாற்றீசர்”  என்று அழைக்கப்படுகிறார். பெரும்பாலானவர்கள் “சங்கமேஸ்வரர்” என்றே அழைக்கின்றனர். கல்வெட்டுக்களில் “திருநண்ணா உடையார்” என்று காணப்படுகிறது. “ஞானக்கண்ணகி நண்ணாவில் இருக்கும் சிவக்கொழுந்தை” என பவானி கூடற்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  அம்பாள் வேதநாயகி, வேதவல்லி, பொன்னார் மௌலி என்று அழைக்கப்படுகிறார். “பண்ணார் மொழியம்மையார்”  என்று அழகாகக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. நாம் இத்தலத்தின் வரலாறுகளை சிந்தித்து  முடிக்கவும் நடை திறக்கவும் சரியாக இருந்தது, வாருங்கள் இனி இவ்வாலயத்தை தரிசிக்கலாம்.

ஆலயத்திற்கு இரு வாயில்கள் உள்ளன. நகர்ப்புறம் இருந்து வருபவர்கள்  ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ள வடக்கு வாயில் வழியாக ஆலயத்திற்குள் செல்கின்றனர். ஆற்றிலிருந்து வருபவர்களுக்கு கிழக்குப் பக்கம் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கூடிய  ஒரு வாயில் உள்ளது.  கொரோனா காலம் என்பதால் வடக்கு நோக்கி உள்ள வாசல் வழியாக மட்டுமே அனுமதித்தனர். விநாயகர், முருகர் மற்றும் சிவ பார்வதி திருக்கல்யாண சுதை சிற்பங்கள் இக்கோபுரத்தின்  முன் பக்கத்தை அலங்கரிக்கின்றன. எச்செயலையும் செய்வதற்கு முன்னர் விநாயகரையும் நிறைவு செய்கின்ற போது இராமபக்த அனுமனையும் வணங்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வாசலுக்கு இடதுபுறம் விநாயகர் சன்னதியும்  வலது புறம் அனுமார் சன்னதியும் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.  வாயிலுக்கு எதிரே இராஜ நந்தியெம்பெருமான் வீற்றிருக்கும் நந்தி மண்டபம் உள்ளது. நந்தி தெற்கு நோக்கி உள்ளது.  உள்ளே நுழைந்தால் கோபுரத்தின் தெற்கு முகத்தில்  நடராஜர் மற்றும் தென்முகக்கடவுள் (தக்ஷிணாமூர்த்தி) பல்வேறு சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.   இக்கோபுரத்தை  ஒட்டி  இருபுறமும் விநாயகருக்கும்  முத்துக்குமாரசாமிக்கும் தனி திருச்சன்னதிகள் உள்ளன. சங்கம விநாயகர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சன்னதியின் முன் மண்டபத்தில் புருஷாமிருகம் சிவபெருமானை பூஜிக்கும் சிற்பத்தைக் காணலாம்.    எதிரே முத்துக்குமாரசுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.  கிழக்கு நோக்கி சுவாமி, அம்பாள், பெருமாள் சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்குப் பக்கம் பூங்காவாக பராமரிக்கின்றனர்.

அடுத்து காணப்படுவது ஆதிகேசவப் பெருமாள் சன்னதி,  கருவறையில்  நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன் கிழக்கு நோக்கிய  திருமுகமண்டலத்துடன் சேவை சாதிக்க்கின்றார். இவருக்கு  வலது பக்கம் சௌந்தரவல்லித் தாயார், சந்தான கோபாலகிருஷ்ணன் சன்னதிகளும், இடதுபுறம் வேணுகோபால கிருஷ்ணன் சன்னதி தெற்கு நோக்கியிருக்கின்றது.  தாயார் சன்னதியின் ஒரு தூணில் கோதண்டராமர் திருவுருவம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. மற்றொரு தூணில் சீதாராமர் அமர்ந்த கோலம். அவர் திருவடிகளின் அருகில் அனுமன் வலது கையில் வீணையும் இடது கையில் தாளக் கட்டைகளுடன் பஜனை செய்யும் காட்சி உள்ளது. அடுத்து கல்லில் புலிக்காலும் யானை முகமும் படைத்த ஒரு உருவம் கையில் வீணையுடன் காட்சியளிக்கின்றது. ஸ்ரீவேணுகோபாலர் சன்னதிக்குப் பின்புறத்தில் பசுவின் சிற்பம் உள்ளது. இப்பசுவின் முன்பகுதியிலும், பின்பகுதியிலுமாக இரண்டு தலைகள் அமைந்திருக்கின்றன.  பெருமாளுக்கும் தாயாருக்கும் நடுவே ஸ்ரீயோக நரசிம்மர் ஸ்ரீலட்சுமியுடன் சாந்த சொரூபமாகக் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சகல யோகங்களும் கைகூடும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு தனி கொடிமரம் மட்டுமல்ல, தனி நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விளக்கு கம்பமும் உள்ளது. இவ்வாறு இத்தலத்தில் இரண்டு கொடிமரம், விளக்கு தூண் அமைந்துள்ளது சிறப்பு.

பெருமாள் கோயிலுக்குச் சற்று தெற்கே அழகிய வேலைப்பாடுடன் அமைந்த  லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கும்  சன்னதி உள்ளது. அதற்கும் தெற்காக விஸ்வநாதர் விசாலாட்சியின் கிழக்கு பார்த்த தனி சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும், தெற்காக ஜோதிர்லிங்கம் சன்னதி, இதற்கடுத்து வேதநாயகியம்பிகை சன்னதியும் உள்ளது.

வேதநாயகி அம்பாளை தரிசிப்பதற்கு முன்னர் அவள் வெள்ளையருக்கும் அருளிய கருணைத் திறத்தை முதலில் சிந்திக்கலாம் அன்பர்களே.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்லியம் காரோ (William Garrow) என்ற கலெக்டர்  கோயிலின் வடக்குக் கோபுர வாயிலின் அருகே மாளிகையொன்று கட்டி அதில் வசித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் அவர் கனவில் சிற்றாடை இடை அணிந்த ஒரு   சின்னஞ்சிறு பெண் ஒருத்தி வந்து படுத்திருந்த கலெக்டரை வெளியே செல்லுமாறு சொல்ல, அவரும் அப்படியே செய்தார். அடுத்த நிமிடம் படுக்கை அறைக்கு மேல் இருந்த மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. வேதநாயகியம்மனே தன்னைக் காப்பாற்றியதாக எண்ணி அளவு கடந்த பக்தி கொண்டு அதை வெளிப்படுத்தும் வகையில் பள்ளியறையில் ஒரு  தந்தக் கட்டில் செய்து உபயம் செய்தார். அதில் “பவானி கூடல் சங்கமேஸ்வரர் வேதநாயகியம்மனுக்கு வில்லியம் காரோ துரை மகனார் அளித்தது” என்று தமிழிலிலும், “W.Garrow, 1804” என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இன்றும் பள்ளி அறையில் இந்நிகழ்வுக்கு சான்றாக இக்கட்டில்  உள்ளது. கலெக்டர் வசித்த கட்டிடம் தற்போது பயணிகள் விடுதியாக மாறி அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.  இந்து ஆலயங்களில் மற்ற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை என்ற  காரணத்தினால் கலெக்டர் நாள்தோறும் வேதநாயகி அம்மனை தரிசிப்பதற்காக சன்னதிக்கு நேர் எதிரே  மதில் சுவற்றில் மூன்று துவாரங்கள்  செய்து அதன் மூலம் அம்பிகையை தினமும்  தரிசித்து வந்தார். அம்மூன்று துவாரங்கள்  மதில் சுவற்றில் இன்றும் காணப்படுகின்றன

அம்மனின் சன்னதி ஒரு கலைக்கூடம் முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள கற்சிற்பங்கள் மிகவும் அருமையாக செதுக்கியுள்ளார் சிற்பி. குதிரை வீரனின் ஒவ்வொரு நுணுக்கமும் அச்சிலைகளில் காணலாம். அம்மன் சன்னதி தூணில் உள்ள அழகிய ஒரு பெண் உருவத்தின் தலையில் தண்ணீரைக் கொட்டினால் அது சிரிப்பது போல் காட்சியளிக்கிறது, எனவே அதை சிரிக்கும் சிலை என்று சொல்கின்றனர்.  மஹா மண்டபத்தின் கூரையில் அமைந்துள்ள பிரதோஷ நாட்டிய சிற்பத்தொகுதி மிகவும் அருமை. விஷ்ணு மத்தளம் வாசிக்க நந்தியெம்பெருமான் மற்றும் பூத கணங்களும் ஆட, கந்தவர்கள் இசை பாட, அரம்பையர்கள் உடன் ஆட

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,

குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட,

ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,

நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட,

வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே. என்ற பாடலில் உள்ளது போல் அனைத்தையும் கல்லில் வடித்துள்ளனர்.


அம்பாள் முன்மண்டப கூரையில் உள்ள நடராஜர் சிற்பத் தொகுதி

வேதங்களுக்கெல்லாம் தலைவியாக விளங்குவதாலும், சதுர் வேதங்களும் பூசித்ததாலும்  வேதநாயகி என்றழைக்கப்படுகின்ற அம்பாளை தரிசிக்கின்றோம்.  அருணகிரிநாதர் குறட்டி திருப்புகழில்

நாரணி யறத்தி னாரி ஆறுசம யத்திபூத

       நாயக  ரிடத்து காமி

நாடக நடத்தி கோல  நீலவரு ணத்தி வேத

 நாயகி யுமைச்சி நீலி ………. அம்பாளைப் பாடியுள்ளார்.                                                                            

 நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் எழிலார் புன்னகையுடன் அருள் புரிகின்றாள் பவானி அம்மன். கீழ் திருக்கரங்கள் அபய வரதமாகவும், மேல் திருக்கரங்களில் மலர் ஏந்தியும் அருள் பாலிக்கின்றாள் அன்னை. பண்ணார் மொழியம்மனின் அருள் கனிந்த திருமுகம் பார்க்கப் பரவசமாக உள்ளது. கொங்குநாட்டுத் தலங்கள் அனைத்திலும் அம்பாளுக்கு திருவாசி உள்ளது போல இத்தலத்திலும் உள்ளது.  அம்பாளுக்கு உள்ள ஆயிரம் நாமங்களில் ஒன்று “அவ்யாஜ கருணா மூர்த்தி”, வ்யாஜம் என்றால் காரணம். எனவே அவ்யாஜம் என்றால் எவ்வித காரணமும் இல்லாமை. இவ்வம்பிகையும் ஒரு காரணமும் இல்லாமல் ஒருவரின் உயிரைக் காப்ப்பாற்றுகின்றாள் என்றால் அவளது கருணையை என்னவென்று சொல்ல. அம்பாளை தரிசிக்கும் உடல் சிலிர்க்கின்றது.    அம்பிகையை 

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ

தனயை மாதேவி! நின்னைச்

சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்

தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்

அழகு புகழ் பெருமை இளமை

அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி

ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ

சுகானந்த வாழ் வளிப்பாய்.

சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி

சூலி! மங்கள விசாலி!

மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை

வளர்திருக் கடவூரில் (திருநணாவில்) வாழ்

வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்

வாமி! அபிராமி (பவானி) உமையே! 

என்று அனைவருக்கும் அனைத்து செல்வங்களையும் வழங்கி, கொரோனாவிலிருந்து காப்பாற்ற வேண்டிக்கொண்டோம். பின்னர் அம்மன் கருவறையை சுற்றி வந்து பள்ளியறைக்கு வந்து பக்தியுடன் அன்பர் ஒருவர் அளித்த தந்தக் கட்டிலை தரிசித்தோம். அம்மன் சன்னதியை வெளியே சுற்றி வரும் போது பள்ளியறை  அறுகோண வடிவில் அமைந்துள்ளதை கவனித்தோம்.

அடுத்து சங்கமரேஸ்வரரை தரிசிக்க சென்றோம்.  ஐயனின் சன்னதி தென் கோடியில் உள்ளது. அவருக்கு முன்னர் கொடி மரமும், நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விளக்குத்தூணும் அமைந்துள்ளது. ஒரு  பிரகாரத்துடன் அமைந்துள்ளது ஐயனின் சன்னதி. மூலவர் சுயம்பு லிங்கம் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அவரை

முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த
அத்தே னளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.

பொருள் :  முத்துப் போன்ற பற்களை உடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு பூங்கொத்துக்களைச் சடைமிசை  சூடியுள்ள சிவபிரானது இடம், சோலைகளில் சூழ்ந்த வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசைபாடி ஆட, தும்பிகள் `தெத்தே` என்ற ஒலிக்குறிப்போடு முரல விளங்கும் அழகுடையதுமான திருநணா என்னும்  பெயர் சொல்லக் கேட்டார் வினைகள் கெடும் என்ற சம்பந்தரின் பாடல் பாடி வணங்கினோம்.

பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் பஞ்ச மூர்த்திகள் மற்றும் அறுபத்து மூவரின் உற்சவ மூர்த்தங்கள் கொலு அமைப்பில் அருமையாக அமைத்துள்ளனர். அடுத்து அறுபத்து மூவரின் மூல மூர்த்தங்கள் வரிசையாக உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி சிறிய கல்லால மரம்    அவருக்கு தலைப்பாகை போல விளங்குகின்றது.

ஐயனுக்கு பின் புறம்  விநாயகர், முருகன் தேவியர் இருவருடன் அருள் பாலிக்கும் சன்னதிகள் மற்றும் பஞ்ச லிங்கங்களின் சன்னதிகள்  உள்ளன. வடக்கு பிரகாரத்தில் பைரவர் மற்றும் நவகிரக சன்னதி அமைந்துள்ளன. 

அடுத்து வெளிப்பிரகாரம் வலம் வந்தோம் தல விருட்சமான இலந்தை மரம். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. மரத்தினடியில் விநாயகரும், புராதான குபேர லிங்கமும் அருள் பாலிக்கின்றனர். இம்மரம் இன்றும் கனிகளை கொடுக்கின்றது.  இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இதற்கு தெற்கே ஜுரஹரேசர் சன்னதி உள்ளது. மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் நடனக் கோலத்தில் காட்சியளிக்கின்றார். இவரை வழிபட்டால் தீராத நோயும் சரியாகும் என்பது ஐதீகம். இவருக்குச் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் மிளகு ரசம், அரைக்கீரை, சுண்டல் படைக்கப்படுகின்றன. காய்ச்சல், தோல் வியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஜுரஹரேஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, மிளகு ரச சாதத்துடன், அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்தால் உரிய நிவாரணத்தை பெறலாம். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு வில்வத்தால் அர்ச்சித்து அதனை உணவில் சேர்த்தால் நலம் பெறுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது.

அடுத்து  தெற்கே கிழக்கு நோக்கி  அமைந்திருக்கும் ஆறுமுகர் சன்னதியில் முருகன் மயில் மேலும், வள்ளி, தெய்வானை இருபுறம் இருக்கின்றனர். ஐயன் மற்றும் அம்மன் சன்னதிக்கிடையில் சோமாஸ்கந்தாமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வாறு பாடியுள்ளார்.

கலைமேவு ஞானப் பிரகாசக்      கடலாடி ஆசைக் ...... கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே      பதிஞான வாழ்வைத் ...... தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்      மனமேவு வாலக் ...... குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே      திருவாணி கூடற் ...... பெருமாளே.

பொருள்: சகல கலைகளையும் கற்று ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக்  குளித்து,   மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து,  மாய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், இறைவனைப் பற்றிய சிவ ஞானவாழ்வைத் தந்தருள்வாயாக. வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, சேவற் கொடியை திருக்கரத்தில் கொண்டவனே, (திருவாணி) லக்ஷ்மியும் சரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில் வாழும் பெருமாளே.

கொடிமரம் மற்றும் விளக்குத்தூண்

அடுத்திருப்பது சனீஸ்வரர் சன்னதி. மாந்தி தோஷம், குளிகன் சாந்தி தோஷம் உள்ளவர்கள் மாந்தி கிரகத்தின் ரூபத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் இச்சனி பகவானை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மற்ற கோவில்களில் இருப்பது போல் இக்கோயிலில் கல்வெட்டுக்கள் அதிகம் இல்லை. பவானி சங்கமேஸ்வரர் கோயிலைப்பற்றி திருஞானசம்பந்தர் தேவாரத்தில் 11 பாடல்களையும், அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலையும்,  செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் “பவானி கூடற்புராணம்’’ எனும் செய்யுள் நூலையும், தமிழாசிரியர் கு. குமாரசாமிப் பிள்ளை “பவானி கூடற்புராண வசனம்” எனும் உரை நடை நூலையும் எழுதியிருக்கின்றனர். முகவூர் கந்தசாமி கவிராயர் “வேதநாயகியம்மன் பிள்ளைத் தமிழ்” என்ற நூலையும், கோவை C.K. நாராயணசாமி முதலியார் “பவானி திருத்தல வரலாறு” என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதியிருக்கின்றனர்.

பரிகாரத்தலம் :  பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. அதேபோல, சிவராத்திரியன்றும் ஏராளமான பக்தர்கள் நீராடுகின்றனர். மறைந்த முன்னோருக்கு அமாவாசை நாட்களில் கூடுதுறையில் தர்ப்பணம் செய்வதற்கும், பிண்டம் கொடுப்பதற்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான  அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த தலம். எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், பவானியில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கரைப்பதும் பெருகி வருகிறது. நீண்ட ஆயுளுக்கும், திருமணத்தடை நீங்கவும், இங்கு வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கூடுதுறையில் நீராடி, விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இங்குள்ள இலந்தைப் பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  அகால மரணம் அடைந்தவர்களுக்கு பவானியில்நாராயண பலிபூஜை செய்யப்படுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் கல்லில் செய்த நாகரைக் கொண்டு வந்து, ஆற்றின் கரையில் உள்ள விநாயகர் அருகே பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்றும், செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்துக்கு தாலி கட்டி, அதை ஆற்றில் விடுவதும், பெண்கள் அரசங்கொத்துக்கு பூஜை செய்து ஆற்றில் விடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருவிழாக்கள் : இத்தலத்தில் தினமும் ஆறு கால பூசை நடைபெறுகின்றது.  மார்கழி, தை மாதங்களில் பவானித் திருமுறைக் கழகத்தினரால் பன்னிரு திருமுறை விழாவும், மார்கழி பஜனையும் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், ஆடிப் பதினெட்டுப்பெருக்குத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் 13 நாட்கள் தேரோட்டத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாலயம்  காலை 6 மணி முதல் பகல் 1 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். பக்தர்கள் தங்கி தரிசிக்க  கோவில் நிர்வாகம் சார்பில் 16 அறைகள் உள்ளன. இவ்வாறு  சிறிது நேரம் காத்திருந்தாலும் பவானியில் தரிசனத்தை சிறப்பாக நிறைவு செய்தபின் சென்னிமலைக்கு புறப்பட்டு சென்றோம்.

Saturday, May 21, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 20

                                                           பவானி தரிசனம் - 1

இத்தலம் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து கிளம்பிய போது பவானி 54 கிமீ தூரம் தானே சிறிது நேரத்தில் சென்று விடலாம் என்று  வேகமாகவே பயணம் செய்தோம். நடை அடைப்பதற்கு முன்னர் சென்றாலும் திருக்கோவிலை முழுவதுமாக தரிசிக்க சமயம் கிட்டாது  என்பதால்  பிறகு சீர் வேகத்தில் பயணம் செய்து காவிரி நதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழிலாக  தீவு போல காட்சியளிக்கும்  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  பவானி வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை  அடைந்த போது நடை சார்த்தியிருந்தனர். எத்தலத்திலும் தீர்த்தத்தில் நீராடவில்லை, இங்கு முக்கூடலில் நீராடட்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் என்று எடுத்துக்கொண்டு வடக்கு பக்கம் உள்ள இராஜ கோபுரத்தை முதலில் தரிசனம் செய்தோம். இக்கோபுரத்தையொட்டி பரமபதவாசலும் உள்ளது. சைவமும் வைணவமும் இத்தலத்தில் இணைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில்   இராஜ கோபுரத்திற்கு முன்னர் இருபுறமும் விநாயகர் மற்றும் அனுமன் திருசன்னதிகள் உள்ளன. இராஜகோபுரமே இலிங்கம் என்பதால் கோபுரத்தை  நோக்கியவாறு சிவனாரை என்றும் சேவிக்கும் நந்தி இராஜ நந்தியாக சிறு சன்னதியில் அருள் பாலிக்கின்றார்

இராஜநந்தி

 அவரை தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி  |

தந்நோ நந்தி ப்ரசோதயாத் || என்று வணங்கினோம். பின்னர் மதிய உணவை முடித்துக்கொண்டு கூடுதுறைக்கு சென்றோம்.  

வடக்கிலிருந்து பாய்ந்து வரும் காவிரியும், மேற்கிலிருந்து பாயும்  பவானியும்  மற்றும் அந்தர்வாகினியாக அமுதநதி கூடும் சங்கமத்தில் கை, கால், முகம் கழுவி பின்னர் கரையில் அமர்ந்து சங்கமத்தின் அழகை இரசித்தோம்.  வடநாட்டில் கங்கையும், யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமாகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் (பிரயாகை) என்றழைக்கப்படுகிறது. எனவே பவானி தக்ஷிண திரிவேணி என்றழைக்கப்படுகின்றது.  தக்ஷிண திரிவேணி மட்டுமல்ல, தக்ஷிணப் பிரயாகை என்றும் மூன்று நதிகளும் கூடுவதால் முக்கூடல், கூடுதுறை என்றும், குபேரன் வழிபட்டதால்  தட்சிண அளகை, தட்சிண கைலாயம், போன்ற சிறப்புப் பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளது.  வடநாட்டின் திருக்காசியைப் புண்ணியத் தலமாக வழிபடுவதற்கு இணையாகத் தென்நாட்டில் பவானி கூடுதுறையை “இளைய காசி” என்று அழைத்து வழிபடுகிறார்கள். காசியைப் போன்றே இங்கு இறந்தாலும், மோட்சம் என்றும்,  இலந்தை மரம் தல விருட்சம் என்பதால் பத்ரி வனம் என்றும்,    பராசர முனிவரால் வழிபடப்பட்டதால் பராசர தலம் என்றும், குபேரனால் வழிபடப்பட்டதால் குபேரபுரி என்றும் வக்கிராசுரன் இறைவனை வழிபட்டதால் வக்கிரபுரி என்றும், விஜய அரசரால் வழிபடப்பட்டதால் விசயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதகிரி (ஊராட்சிக் கோட்டை மலை), சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோட்டு மலை), மங்களகிரி (பெருமாள் மலை), பதுமகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கிடையே “பவானி” திருத்தலம் அமைந்துள்ளதால் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே இராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் அமைந்துள்ளதால் “க்ஷேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்வரலிங்கேசுவரர் மற்றும் காயத்ரி லிங்கேசுவரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கிணைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் வழங்கப்படுகிறது.

கிழக்கு இராஜகோபுரம்

பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யும் கூடுதுறை. பூமிக்குள் பல சிவலிங்கங்களை கொண்ட அற்புதமான தலம். பித்ருக்களுக்கு செய்யவேண்டிய சிரார்த்தங்களை செய்ய உகந்த தலம். இளைய காசி என்பதால் கூடுதுறையில் அஸ்தியை கரைக்க பலர் இத்தலத்திற்கு வருகின்றனர். பரிகாரம் செய்பவர்களுக்காகவே ஒரு மண்டபம் ஆற்றுக்கும் ஆலயத்திற்கும் இடையில் அமைத்துள்ளனர்.

இவ்வளவு சிறப்புப்பெற்ற இத்தலத்தின் இறைவனை தரிசிக்க அடியோங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது கரையில் இருந்த  விநாயகரையும் மற்றும் மூன்று  திருச்சன்னதிகளை தரிசித்தோம்.  நாக தோஷம் உள்ளவர்கள் இவ்விநாயகர் சன்னதியில் கல் நாகர் சிலை பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் விலகும் என்பதால் பல நாகர் சிலைகள் இருப்பதைக் கண்டோம்.  கோயிலுக்கு வெளியில் தெற்கே காவிரிக்கரையில் அமைந்த அச்சன்னதிகள்  காயத்ரிலிங்க சன்னதி, சகஸ்ர லிங்க சன்னதி, அமுதலிங்கேசர் சன்னதி ஆகும். விஸ்வாமித்திரர் ஸ்தாபித்து காயத்ரி மந்திரம் ஓதி வழிபட்ட இலிங்கம் காயத்ரி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு  அருகில் காயத்ரி தீர்த்தம் உள்ளது.  ராவணன்  சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான் என்பது ஐதீகம். இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் இராகு – கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம். 

பராசர முனிவர் சங்கமேஸ்வரரை குறித்து தவம் செய்து கொண்டிருந்த காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். முதலில் ஆலாலம் என்ற விஷம் வந்தது அதை சிவபெருமான் அருந்தி தேவர்களையும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து தியாகராஜர் ஆனார். பின்னர் அமுதம் வந்தது. மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக அதை தேவர்களுக்கு மட்டும் அளித்தார்.  பின்னர் அமுத கலசத்தை பராசர முனிவரிடம் அளித்தார், அவரும் அதை இப்பத்ரிவனத்தில் மறைத்து வைத்தார். இதை அறிந்த அசுரர்கள் அமிர்தத்தை கவர்ந்து செல்ல வந்தனர். பாராசரர் வேதநாயகி அம்பாளிடம் வேண்ட அம்மனும் அசுரர்களை அழித்தாள். சிறிது காலம் சென்று அமிர்த கலசம் வைத்திருந்த இடத்தை தோண்டிப்பார்த்த போது அமுதம் காவிரி, பவானி சங்கமத்தில் சென்று கலந்திருந்தது. அமிர்த கலமும் சிவலிங்கமாக மாறி இருந்தது. எனவே அவ்விலங்கம் அமுத லிங்கம் எம்றழைக்கப்படுகின்றது.

கூடுதுறையில்

குழந்தையில்லாதவர்கள் இந்த லிங்கத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரைச் சுற்றி வந்தால் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். ஆலயம் திறப்பதற்காக காத்திருந்த சமயத்தில் இச்சன்னதியின் முன் மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். இச்சமயத்தில் இத்தலத்தின் மற்ற வரலாறுகளை சிந்திப்போம் பின்னர் ஆலயத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.

அம்பாள், தலம், நதி ஆகிய மூன்றுக்கும் பவானி என்று பெயர். அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று இந்நாமம்.  "பவானி, பாவனா கம்யா, பவாரண்யா குடாரிகா “ என்பது லலிதா சகஸ்ரநாமத்தின் ஒரு ஸ்லோகம். பவானி என்பதன் பொருள்  பவன் என்ற சிவபெருமானின் பத்னி. பவ: என்பது சம்சார சாகரம் அதற்குப் பிராணனை கொடுப்பவள்.  அதாவது இயற்கையின் சக்தி அல்லது படைப்பு ஆற்றலின் ஆதாரம். தனது பக்தர்களுக்கு அருளை வழங்கும் ஒரு அன்னை என்றெல்லாம் பொருள். அருணகிரிநாதர் வேல் விருத்தத்தில் 

கங்காளீ சாமுண்டி வாராகி யிந்த்ராணி

     கௌமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவியமலை

      கௌரிகா மாக்ஷிசைவ

சிங்காரி யாமளை பவாநி  கார்த்திகை கொற்றி …… என்று அம்பாளைப் பாடியுள்ளார். 

இனி  பவானியாற்றின் சிறப்பைப் பற்றிக் காணலாம்.  பவானி ஆறு  காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, அதில் பெருங்குன்றூர்க்கிழார் என்ற புலவர் இளஞ்சேரல் இரும்பொறை எனும் சேர மன்னனைப் பற்றிய பாடலில்,

புனல்பாய் மகளிராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசத்தோன்றுஞ்

சாந்துவரு வானி நீரினுந்

தீந்தன் சாயலன் மன்றதானே  - என அரசனுடைய உடல் வானியாற்று நீரைப் போல் மென்மையும் தூய்மையும் உடையதாக இருந்தது என்று பாடுகிறார். 

பவானி ஆறு  தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தென்மேற்கு மூலை முகட்டில் உருவாகிறது. மலை முகட்டிலிருந்து கீழிறங்கத் தொடங்கும் பகுதியில் மேல் பவானி அணை கட்டப்படுள்ளது. அங்கிருந்து தென்மேற்காக கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் கிழக்கு நோக்கி திரும்பி பாய்கிறது.  கோவை நகருக்கு  சுவையான குடிநீரை  வழங்கும் சிறுவாணி ஆறு பவானியுடன் இணைந்த பின் மீண்டும் தமிழகத்துக்குள் பவானி நுழைகிறது.  பின் குந்தா ஆறு பவானியுடன் இணைகிறது. இதற்கு கீழ் பில்லூர் அணை பவானியில் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை  வழியாக கொத்தமங்கலம் அருகே  கீழ் பவானி அணைக்கட்டு எனப்படும்  பவானி சாகர் அணையை அடைகிறது .பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது. இந்த அணையினால் ஈரோடு,  கரூர் மாவட்டங்கள் வளம் பெறுகின்றன. பின் பவானி ஆறு கோபிசெட்டி பாளையம்  வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து  காளிங்கராயன் வாய்க்கால்  தொடங்குகிறது.  

பவானி நகரம் கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் உலகப் புகழ்பெற்றவை. இனி இத்தலத்தின் மற்ற வரலாறுகளைப் பற்றிக்காணலாம்.