Sunday, November 21, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 1

 

கருவூர் அலங்காரவல்லி சௌந்தர்யவல்லி உடனுறை ஆநிலையப்பர்

நீண்ட நாள் இடைவெளிக்குப்பிறகு  மீண்டும் பதிவிட வந்திருக்கின்றேன் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். இனி தினமும் சிறிது சமயம் ஒதுக்க முடியும் என்பதால் மறுபடியும் தொடர்கின்றேன். எவ்வளவோ எழுத உள்ளது. இறைவன் அருளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுகின்றேன். முன் போலவே அன்பர்கள் வந்து படித்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்களின் பக்தியுலா  சென்று வந்த அனுபவங்களை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவுகள்.  அவனருளால் தானே அவன் தாள் வணங்கமுடியும், அடியோங்கள் சில முறை முயற்சி செய்தும் இந்த யாத்திரை சித்திக்கவில்லை ஏதாவது ஒரு காரணத்தினால் தள்ளிச் சென்றது. எனவே தனுஷ்கோடி அவர்கள் இவ்வருடம் பிப்ரவரி மாதம் இந்த யாத்திரை செல்லலாம் என்று முதலில் கூறிய போது கொரோனா காலம் அல்லவா? எதற்காக வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும், வேண்டாம் என்றே கூறினார், அதற்கு அவர் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் சில முறை முயற்சித்து விட்டோம் வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை எடுத்துக்கொள்வோம் என்றார். அரை மனதுடன் ஒத்துக்கொண்டேன். அதற்கு முந்திய வாரம் சிவராத்திரிக்காக குல தெய்வ ஆலயம் செல்ல வேண்டிய கடமையும் இருந்ததால் அதற்கு சென்று விட்டு வந்து பின்னர் முடிவு செய்யலாம் என்றேன் ஒத்துக்கொண்டார்.

 

ஈங்கோய்மலை 

ஒரு வாரம் கழித்து கரோனாவிற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால்  திரு.தனுஷ்கோடியுடன் பணி புரியும் திரு.இந்துகுமார் அவர்களின் வாகனத்தில் மொத்தம் ஏழு அன்பர்கள் ஒரு  வெள்ளிக்கிழமை காலை சென்னையிலிருந்து  கிளம்பினோம். 

முதல் நாள் காவிரிக்கரை தலங்களான கடம்பந்துறை, ஈங்கோய்மலை, ஐயர் மலை தரிசித்து பின்  கொங்குநாட்டின் சிந்தலவாடி, தான்தோன்றிமலை,  கரூர், கொடுமுடி ஆகிய தலங்களை தரிசிக்க திருவருள் கிட்டியது. அன்றைய தினம் திட்டமிட்டபடி வெஞ்சமாக்கூடல் மற்றும் சிவன்மலை செல்ல இயலவில்லை. அன்றிரவு திருப்பூரில் தங்கினோம்.

 

மறு நாள் திருமுருகன்பூண்டி, அவிநாசி, பண்ணாரி மாரியம்மன், சத்யமங்கலம் வேணுகோபால சுவாமி, பவானி, சென்னி மலை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. முதலில் ஈரோட்டில் தங்கலாம் என்றிருந்தோம் திட்டத்தை மாறி திருச்செங்கோடு சென்று அங்கு தங்கினோம்.

 

திருச்செங்கோடு மாதொருபாகன்

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாதொரு பாகரையும் செங்கோட்டு வேலவரையும் தரிசனம் செய்தபின் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரையும், நரசிம்மரையும் சேவித்து பிறகு சேலம் வந்து தாரமங்கலம் கைலாசநாதர் மற்றும் அயோத்தியாபட்டிணம் பட்டாபிஷேக ராமரையும் தரிசித்து பகலிலேயே பயணம் செய்து இரவில் சென்னை வந்து நலமாக சேர்ந்தோம்.

 

யாத்திரை செய்த அன்பர்கள்

தரிசிக்க நினைத்த தலங்களில் வெஞ்சமாக்கூடல் மற்றும் சிவன்மலை மட்டுமே தரிசிக்க முடியாமல் போனது. மேலும் பவானியில் மட்டுமே சுவாமியை தரிசிக்க காத்திருக்க வேண்டி வந்தது  மற்ற அனைத்து தலங்களிலும் சென்றவுடன் தரிசனம் கிட்டியதும் அவனருளே. தேர்தல் சமயமாக இருந்தபோதும் எங்கும் எந்த சிக்கலில்லாமல் திரும்ப வந்து சேர்ந்தோம். யாருக்கும் எந்த துன்பமும் பின்னர் வரவில்லை என்பதும் அந்த இறைவனின் கருணையே. வாருங்கள் அன்பர்களே ஒவ்வொரு ஆலயமாக தரிசிக்கலாம்.


தரிசனம் தொடரும் . . . . . 

4 comments:

கோமதி அரசு said...

இறைவன் அருளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுகின்றேன். //

இறைவன் எழுத வைப்பார். எங்களுக்கு படிக்க அருள்செய்வார்.

படங்களும் சொல்லியவிதமும் அருமை.
தொடர்கிறேன் இறைவன் அருளால்.
வணக்கம், வாழ்க வளமுடன்.

Anuprem said...

மிக சிறப்பான பயணம் ஐயா ...

இனி வரும் பகுதிகளில் இவ்வாலயங்களின் பெருமைகளை அறிந்துக் கொள்ள வெகு ஆவல்...

இதில் ஈங்கோய்மலையின் மேலே சென்றும் , அன்று கார்த்திகை தீபம் ஆதலால் காலை நடை திறப்பு இல்ல என்பதால், எங்களுக்கு மரகதலிங்கேஸ்வர் தரிசனம் அமையவில்லை ...

போன வாரம் கடம்பந்துறை, கடம்பவனநாதர் தரிசனம் கிடைத்தது ...

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா. ஆட்டி வைப்பவர் அவர். அவரின் எண்ணப்படி நாம் இயங்குகின்றோம்.

தொடர்ந்து வாருங்கள் அம்மா.

S.Muruganandam said...

மிக்க நன்றி அனு பிரேம் அம்மா.

//இனி வரும் பகுதிகளில் இவ்வாலயங்களின் பெருமைகளை அறிந்துக் கொள்ள வெகு ஆவல்...//

தொடர்ந்து வாருங்கள் அம்மா.