Saturday, February 29, 2020

திருப்பாத தரிசனம் - 11


                   திருவாரூர் திருத்தலத்தின் சிறப்புகள்



இப்பதிவிலும் சப்த விடங்களின் முதன்மைத்தலமான திருவாரூரின் சிறப்புகள் தொடர்கின்றன.

திருவாரூர் கோவில் தோன்றிய காலம்: ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான இறைவன் தோன்றிய போதே இத்திருக்கோவில் தோன்றியதோ என்பதை அப்பர் சுவாமிகள் இவ்வாறு பாடுகின்றார்

 ருவனாய் உலகத்தே நின்ற நாளோ
     ஓருருவமே மூவுருவமான நாளோ
ருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ                                                                    காமனையும் கண்ணழகால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான் மறிக்கையேந்தி யோர் மாதோர் பாகஞ்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாளே!

என்பதிலிருந்து இத்தலத்தின் பழந்தொன்மையை அறியலாம். சிவபெருமான் ஒருவனாய் அவன் மட்டும் உலகத்தில் நின்றபோதே இக்கோவிலில் குடிகொண்டாரோ என்று வினவுகிறார் அப்பர் பெருமான். அது மட்டுமன்றி பத்து பாடல்களிலும் சிவபெருமான் புரிந்த அத்தனை தீரச்செயல்களையும் குறிப்பிட்டு அவை அனைத்திற்கும் முன் தோன்றிய கோயில் திருவாரூர் என்று பாடுகிறார்.  இத்திருக்கோவில் தில்லையை விட பழமையானது என்பதால் இத்திருத்தலத்தில் திருச்சிற்றம்பலம் கூறும் வழக்கம் கிடையாது.

இப்பதிகத்தின் ஒரு பாடலில் அப்பர் பெருமான், பிறப்புகள் எட்டு, குற்றங்கள் எட்டு, புலன்கள் எட்டு, பொழில்கள் எட்டு, காட்சிகள் எட்டு, காப்புகள் எட்டு, இடர்கள் எட்டு, கால பேத அளவுகள் எட்டு, நன்மலர்கள் எட்டு, திசைகள் எட்டு இப்படி இவையனைத்தும் தோன்றுவதற்கு முன்னரே ஈசன் திருவாரூரில் குடி கொண்டதாகவும் பாடுகின்றார்.

சாக்த ந்திரங்களில் உள்ள வரலாறு.  சிவம் நாறும் வீதிகளும், கிளிகளும், நாகனவாய் புட்களும் நிறைந்த இத்தலத்தில் எம்பெருமான் எப்போது கோவில் கொண்டார் என்று தெரியாது. ஒரு சமயம் திருமால், இந்திரன் முதலான தேவர்கள் ஒன்று கூடி ஒரு யாகம் செய்ய எண்ணி,  குருக்ஷேத்திரமே அதற்கு தக்க இடம் என்று தேர்ந்தனர்.  யாகம் செய்வதிலே போட்டி ஏற்பட்டது. யார் அதிகமான நாட்கள் யாகம் செய்கின்றனர் என்பதே போட்டி. போட்டியில் திருமால் வெற்றி பெற்றார். முன்னவன் அருளால் ஓமகுண்டத்திலிருந்து ஒரு திவ்ய வில் வெளி வந்தது.  அந்த வெற்றிக் களிப்பில் யாகத்தின் மூலம் கிடைத்த வில்லைக் கொண்டு தேவர்களை அவர் துரத்த ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்புவதற்காக தேவர்கள் ஓட்டம்  எடுத்து பராசக்திபுரமான திருவாரூரில் அடைக்கலம் புகுந்தனர்.  துரத்திக் கொண்டு ஓடி வந்த திருமால்   திருவாரூரை அடைந்த போது களைப்பின் மிகுதியால் வில்லின் மேல் தன் தலையை வைத்து ஓய்வெடுத்தார்,  மெல்ல உறங்கிப் போனார்.

அப்போது தேவகுருவின் ஆலோசனைப்படி தேவர்கள் கரையான் வடிவம் எடுத்து அவ்வில்லின் நாணை அறுத்தனர், அறுந்த நாண் திருமாலின் தலையைக் கொய்தது. தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள் பரம கருணா மூர்த்தியான சிவபெருமானை வேண்ட, அவரும்  இத்தலத்தில் தோன்றி விஷ்ணுவைக் காப்பாற்றி பின் வெண்மணலால் ஆன புற்றில் சுயம்புவாக சிவலிங்க மூர்த்தியாகக் கோவில் கொண்டார். எனவே இவர் புற்றிடங்கொண்டார், வான்மீக நாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஐயனின் மற்ற திருநாமங்கள் ஆரூரன், திருமூலட்டநாதர் ஆகியவை ஆகும். ஐயனின் கருவறையில் அம்மை போக சக்தியாக பிரியாவிடை அம்மையாக எழுந்தருளி இடது கையை ஊன்றிய வண்ணம் அமர்ந்த கோலத்தில்  அருள் பாலிக்கின்றாள். அம்மை சந்நிதியை விட்டு வெளியே வருவதில்லை என்பதால் படிதாண்டா பத்தினி எனப்படுகிறாள்.




யாகத்தில் தியாக சிந்தாமணி - தேவ சிந்தாமணி தோன்றல்: சிவபெருமான் தேவர்களை நோக்கி “தேவர்களே! திருமால் முறையாக யாகத்தை முடித்திருந்தால், மேலும் அனேக அரும்பெரும் பொருட்களைப் பெற்றிருக்கலாம்; ஆனால் திருமாலின் ஆணவத்தினால் யாகம் முடிவுறாது நின்று போனது. நிறைவு பெறாத யாகம் தீமையைத் தரும் எனக்கூறி திருமாலின் உடலில் குதிரையின் தலையைப் பொருத்த, திருமால் உயிர்தெழுந்தார். அவரே ஹயக்ரீவர். பின்னர் அவரைக் கொண்டு யாகத்தைத் தொடறுமாறு சிவபெருமான் அருளினார்.

தேவர்கள் திருவாரூரில் பெரியதொரு யாகசாலை அமைத்து திருமாலை யாக கர்த்தாவாக அமரச்செய்து, பாதியில் நின்று போன யாகத்தை தொடர்ந்து யாகத்தை முடித்தனர். சிறப்புற ந்த யாகத்தின் நிறைவாக சிவபெருமான் திருமேனி தோன்றியது,

தேசுபயில் நாரணன்பால் இனிது பெற்று
செஞ்சுடர் வேற்குமரனொடும் தேவியொடும்
வாசவன் பூசனை புரிந்த தேவ சிந்தாமணி. அவ்வரிய திருமேனியே, தியாக சிந்தாமணி - தேவ சிந்தாமணி என்றழைக்கப்படும் ஸ்ரீதியாகராஜப்பெருமான்.

திருவாரூர் பெரியகோவிலில் சந்திரசேகரர் எழுந்தருளும் சந்நிதியின் முகமண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக இவ்வரலாறு செதுக்கப்பட்டுள்ளது. மாலவன் யாகம் செய்ய அவ்வேள்வி அக்னியில் இருந்து வில் தோன்றுதல், அவ்வில்லால் தேவர்களை திருமால் தக்குதல்,  தேவர்கள் கூடி நிற்றல், திருமால் வில்லின் மீது தலையை வைத்து உறங்குதல், பிரமன் திருமாலின் தலையை பொருத்துதல், திருமால் சிவபூசை செய்தல்,  விடை மேல்  அம்மையப்பர் காட்சி தருதல், இளமுருகு உடனுறை அம்மையப்பரை திருமால்  வணங்குதல், தியாகரை மான் மழு ஏந்திய சிவபெருமான் திருமாலுக்கு அளித்தல்,  தியாக வினோதரை திருமால் வழிபடுதல்,  இந்திரனுக்கு தியாகராஜரை அளித்தல், நான்முகன் துலாக்கோலினால் தலங்களை நிறுத்தல், வன்மீகர் மற்றும் தியாகராஜர் அருகருகே எழுந்தருளியுள்ள சிற்பங்களைக் காணலாம்.

சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட எழிலார்ந்த பேசும் பொற்சித்திரங்களாம் ஓவியங்கள் சந்திர சேகர மண்டபம், தேவாசிரிய மண்டபம், தியாகராஜ சுவாமி சன்னதி, வான்மீகர் சன்னதி பின்புறம், அசலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றன. இவற்றைக் காணக் கண் கோடி வேண்டும். திருக்கோவில் விமானத்திலும், புறச்சுவர்களிலும், கமலாலயத்தின் படிக் கட்டுகளின் சிறு சிறு மண்டபங்களிலும், பல அரிய சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன.

இரண்டாவது புராண வரலாறு:  ஒரு சமயம்  மகாக்ஷ்மி, மகாவிஷ்ணுவை பிரிந்து வருண தேவனிடம் சிறு பிராயம் முதல் வளர நேரிட்டது. ஒரு பெரிய போர் தேவர்களுக்கும், மது கைடபர் என்ற அசுரர்களுக்கும் நடைபெற்ற போது மகாவிஷ்ணு அசுரர்களை வென்று வாகை சூடினார் .அதன் வாயிலாக அப்போது இளம் பெண்ணாக வளர்ந்துவிட்ட லக்ஷ்மி தேவியின் மனதில் அவர் இடம் பெற்றார். மகாவிஷ்ணுவை தனது மனதில் கணவனாக வரித்துக் கொண்ட திருமகள், அந்த எண்ணம் பூர்த்தியாக பராசக்திபுரம் வந்து புற்றிடங்கொண்டார் என்கிற திருமூலட்டானேசுவரரை தரிசித்து, பின்னர் கடுந்தவம் மேற்கொண்டார். த்தவத்தில் மனங்கசிந்த ஈசுவரன், இலக்ஷ்மி தேவிக்கு காட்சியளித்து திருமாலை மணக்கவும்,  மன்மதனை மகவாகவும் அருளினார்.  திருமகளின் வேண்டுகோளையேற்று இப்பதி கமலாலயம் என்ற திருநாமம் பெறவும் அருளினார். அன்றிலிருந்து பராசக்திபுரத்தை மக்கள் கமலாலயம் என்றும் அழைக்கத் தொடங்கினர். திருமகள் வழிபட்ட தலம் என்பதை

. . . . .மலர் மென்பாவை
முழுதுள திருவும் என்னும் முடிவில் மங்கலமுமெய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன் திருவாரூர் -  என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 


k
திருவாரூர் பிறந்தார்கள்: பிறக்க முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் ஆகும். எனவே வன்தொண்டர், தம்பிரான் தோழர் நம்பியாரூரர் “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று பாடியுள்ளார். சேக்கிழார் பெருமானும்  திருத்தொண்டர் புராணத்தில்
திருக்கயிலை விற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார்
பெருக்கிய சீர்த்திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம்பொறியடக்கி மற்று அவர்தான் வணங்க
ஒருக்கிய நெஞ்சுடையவர்க்கே அணிதாழும் உயர்நெறியே என்று பாடியுள்ளார். மலையரையன் பொற்பாவை உடனாய கயிலை நாதனை மட்டுமல்லாமல் அப்பெருமான் அமர்ந்த சீர்மிகு திருவாரூரையும் புகழ்ந்து அத்திருத்தலத்தில் பிறப்பவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்று ஏத்துகின்றார்.



கமலாலயத்தின் மையத்தில் நாகநாதர் ஆலயம்

இத்தலத்திற்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள்.  பராக்திபுரம், தேவயாகபுரம், கந்தபுரம், முசுகுந்தபுரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாகிரியாபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் கியவை அவற்றுள் சில. இத்தலத்திற்கு இப்பெயர்கள் விளங்கும் காரணம் என்னவென்று காணலாம்.

தேவர்கள் கறையான் வடிவம் கொண்டு இயற்றிய புற்றில் இந்திரன் சிவபாவனை செய்ய, அப்புற்றில் எம்பெருமான் சுயம்புவாக  - புற்றிடங்கொண்ட ஈசனாக எழுந்தருளியதால்  -  வன்மீக நாதபுரம்.

பிரம்மனின் உடலாகிய பிரம்மாண்டத்திற்கு மூலாதாரமாக விளங்குவதாலும், யோகநெறிக்கு உதவுகின்ற காரணத்தாலும்மூலாதாரத்தலம். (ஆர் = மண், ஆர் + ஊர் = ஆரூர்.) ஐம்பூதங்களில் மண்ணைக் குறிப்பதாலும், மூலாதார சக்கரத்தின் தத்துவம் பிருத்வி என்பதாலும்பிருத்வித்தலம்.

முன்னாளில் பெருமானைச்சுற்றி சாமரங்கள் வீசும் பூமரங்கள் அமைந்திருந்தாலும், நிலமகளின்(பூதேவி) இதயக்கமலமாக விளங்குவதாலும்பூவிதயப் பெருங்கோயில்.

பரையாகிய ஆதிபராசக்தி இவ்வூர் சேர்ந்து தவமியற்றிதால்பரையூர் - பராசக்திபுரம்.

உலகம்மை கமலாம்பாள்  என்று பெயர் கொண்டதால், திருமகள் வழிபட்டு பேறு பெற்றதால்கமலாலயம் - கமலாபுரி

திருமகள் வருணனின் மகளாக பிறந்து, மது கைடபரை  வென்ற திருமாலை மணக்க தவம் செய்த தலம் என்பதால் - ஸ்ரீபுரம்.

பிற விடங்கத்தலங்களில் விளங்கும்  தியாகராஜ மூர்த்தங்கள் தேவதச்சன் விசுவகர்மாவால் உருவாகப்பட்டதாலும், திருப்பாற்கடலில், திருமால் தனது இதயக் கமலத்தில் வைத்து ஆராதித்த மூலமூர்த்தியான வீதிவிடங்கப்பெருமான் எழுந்தருளியிருப்பதால்சப்த விடங்க முதன்மைத் தலம்.

ஸ்ரீதியாகராஜப் பெருமான் வீதிவிடங்கரானதால்வீதிவிடங்கம்.

சோமாஸ்கந்த தத்துவம் விளக்கமுறும் தலமானதாலும், இவ்வாலயத்தின் உள்ளார்ந்த தத்துவ இரகசியங்களில் கந்தப்பெருமான் தனிப்பெரும் சிறப்புடன் விளங்குவதாலும். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர தோஷம் நீக்கி சத்புத்திர பேறு அளிக்கவல்ல திறத்தால்கந்தபுரம்.

சமற்காரன் என்ற மன்னன் பலகாலம் தவம் செய்து தொழு நோய் நீங்கப்பெற்றதால்சமத்காரபுரம்.

முனிவர்கள், மன்னவர்கள் மட்டுமல்ல தேவரும் மற்ற தெய்வங்களும் இத்தலத்தில் சிவபூசை செய்து வரம் பெற்றமையால்க்ஷேத்திரவரபுரம்.

இத்தலத்தில் பிறந்தவர்களுக்கு மீண்டும் பிறவா முக்தியை நல்குவதால் (இத்தலத்தில் உதித்தவர் பின்னும்  உதித்திடாததால்) – முக்தித்தலம்.

திருமாலின் தலைமையில் தேவர்கள் கூடி சிவபெருமானைக் குறித்து இத்தலத்தில் யாகம் இயற்றியதால்தேவயாகபுரம்.

தசரதன் இத்தலத்தில் தங்கியிருந்த போது தன்னையும் தன் தேசத்தையும் பிடிக்க வந்த சனியை எதிர்கொண்டு வாதிட்டு பிறகு சனீஸ்வரனுக்கு நண்பனாக, மன்னனுக்கு மட்டுமின்றி இப்பதியில் இனி உட்புகேன் என சனிபகவான் வாக்களித்தமையினால்கலி செலா(புகா) நகரம்.

வேதங்களின் ஆணவத்தை களைந்து அவைகளை பெருமான் இங்கே மரமாக்க அதனால் வேதங்கள் தனித்தனியே சிவலிங்கங்களை நிறுவி சிவபூசை செய்ததால்வேதபுரி; மறையூர்.

அட்ட வசுக்கள், ஏகாதச உருத்திரர்கள், பன்னிரு  ஆதித்தியர்கள், இரு அசுவினி தேவதைகள் ஆகிய முப்பத்துமூன்று கோடி கணங்கள் கூடி நாடி கந்தமாகும் இக்கோயில் ஆடகேச்சுரத்தை கொண்டு விளங்குவதால்அமாவாசை அற்புதம்.

விண்ணுலகை விடுத்து பூவுலகில்  திருவாரூரை விரும்பி இங்கே வந்து வீதி விடங்க தியாகராஜராக கோலோச்சும் பெருமானின் சத்திரிய பேரழகைக் கண்டு களிக்க அமரர்கள் தங்கள் முறை வரும் சமயம் பார்த்து ஆயிரங்கால் மண்டபத்தில் விரும்பி தங்கியிருப்பதால் தேவாசிரியபுரம்.

இத்திருத்தலத்தின் அந்திக்காப்பின் பொது ஏனைய சிவதலங்களின் சிவகலைகள் அனைத்தும் இத்தலத்தில் ஒடுங்குவதால்திருத்தலங்களின் தாய்.

“உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையான் நடுவில் நீயிருத்தி” என்று மாணிக்கவாசகப்பெருமான் பாடியபடி, ஐயனின் உட்புகுந்து அம்மையும், அம்மையின் உட்புகுந்து ஐயனும் பிரிவற அபின்ன பாவத்தில் இத்தலத்தில் விளங்குவதால்அந்தர்கதேசுரம்.

விண் துறந்து ஆரூர் மண் புகுந்த தியாகராஜர் கோலோச்சுவதால்பூலோக கயிலாயம்.

தன்னகத்தே உள்ள உயிர்கள் மட்டுமல்ல, தரிசிக்க வரும் மற்ற ஊர் அன்பர்கள் இங்கே பெருமானின் அருட்திறத்தால் சிவகணங்களாவதால்ஸ்பரிஷ தோஷம்நீக்கும் தலம் என்பதால்சர்வ தோஷ நிவர்த்தித் தலம்.

சமயக்குரவர்களும் புலவர் பெருமக்களும், சான்றோர்களும் சமய மணம் கமழ பக்தி நலம் பெருக சைவ நெறி பரப்ப,  தில்லைக்கும் மேலான களமாக அமைந்ததால்சைவ சமயத்தின் தலைமைப் பீடம்.

சைவர்களுக்கு கோயில் என்றால் தில்லை என்று குறிக்கும் கல்வெட்டு மொழி மரபில் திருவாரூர்பெரிய கோயில்.

நாம் வணங்குவதை மறைந்திருந்து தேவர்களும் காண்கின்ற பெருமை பெற்றதேவசிந்தாமணி பீடம்.

அருமைப் புதல்வன் என்றும் பாராமல் அவன் மீது தேரைச் செலுத்தி பசுவின் துயர் துடைத்த மனுநீதிச் சோழன்  அரசாண்டநீதித்தலம்.

சோழ மன்னர்கள் முடி கவித்துக்கொள்ள விருப்பமொடு தேர்ந்தெடுத்த  ஐந்து நகரங்களில் ஒன்றான காரணத்தால்மணிமுடி நகரம்.

இதுவரை எம்பெருமான் தியாகேசராக அருள் பாலிக்கும் திருவாரூர் தலத்தின் தனி சிறப்புகளைப் பற்றிக் கண்டோம் வாருங்கள் அன்பர்களே அத்தியாகேசப்பெருமானுக்கே உரிய சிறப்புகள் என்ன என்று அடுத்த பதிவில் காணலாம் .


                                                     திருப்பாத    தரிசனம் தொடரும் . . . . .