முதலில் கிளம்பிய
அன்பர்கள் துங்கநாத் செல்வதற்கான ஆதார தலமான சோப்டா என்ற இடத்திற்கு சென்று அனைவரும் தங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவே குப்தகாசி சென்றால் அதிக நேரம் ஆகிவிடும் எனவே உக்கிமத் மட்டும் சென்று பிறகு சோப்டா செல்லலாம் என்று முதலில் உக்கிமத் சென்றோம். பாதையில் குண்ட்
என்ற இடத்தில் கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்வதற்கான ஒரு பாதை பிரிகின்றது. அப்பாதையில் பயணித்து உக்கிமத் அடைந்தோம்.
இராமபிரானின் பாட்டனார் மாந்தாதா தவம் செய்ய சிவபெருமான் அவருக்கு ஓங்கார ரூபத்தில் தரிசனம் அளித்ததால் இவ்வாலயத்தின் இறைவன் ஓங்காரேஸ்வரரர் என்றழைக்கப்படுகின்றார். இலிங்க ரூபத்தில் தரிசனம் அளிக்கின்றார் ஓங்காரேஸ்வரர்.
குளிர்காலத்தில் பனி பெய்யும்போது கேதார்நாத் மற்றும் மத்மஹேஸ்வர் ஆலயங்கள் மூடப்படுகின்றன, அப்போது அவ்விரண்டு தலங்களின் உற்சவ மூர்த்தங்கள் இவ்வாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் இங்கு நடைபெறுகின்றது.
பஞ்சபாண்டவர்களில் பீமன் கட்டிய ஆலயம். பாண்டவர்கள் பஞ்ச கேதாரங்களின் சிவலிங்கங்களின் தரிசனம் பெற்ற தலம் என்பதால் பஞ்ச கேதாரங்களின் உற்சவ மூர்த்திகளை நாம் இத்தலத்தில் தரிச்சிக்கலாம். நமது தென்னாட்டின் பஞ்ச உலோக சந்திரசேகர மூர்த்தங்களாக அவர்கள் இங்கு அருள் பாலிக்கின்றனர். பஞ்ச லிங்கங்களுடன் வாராஹியையும், சண்டி தேவியையும் ஒரு சன்னதியில் தரிசிக்கலாம். இச்சன்னதிக்கு வெளிப்புறத்தில் பைரவருக்கு ஒரு சிறு தனி சன்னதி உள்ளது.
பாணாசுரனின் மகள் உஷைக்கும், கிருஷ்ணரின் பேரன் அநிருத்தனுக்கும் திருக்கல்யாணம் நடந்ததும் இத்தலத்தில்தான். அவ்விடத்தையும் நாம் தரிசிக்கலாம். அதன் அருகே சண்டி தேவிக்கான இன்னொரு சன்னதி அமைந்துள்ளது. இத்தலத்தில் அமைந்துள்ள நுழைவு வாயில் அற்புத மரவேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
ஊக்கிமத் துவாரம்
ருத்ரபிராயாகையிலிருந்து
பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையையும் கேதார்நாத் செல்லும் பாதையையும் இணைக்கும்
இப்பாதையில் சுத்தமாக போக்குவரத்தே இருக்கவில்லை, மலை உச்சியில் நெடிதுயர்ந்த மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகளுக்கிடையில்
பயணம் செய்வதே ஒரு தனி அனுபவமாக இருந்தது. ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது பார்க்கக்கூடிய மரங்களின் உச்சியை இவ்வழியாக செல்லும் போதும் பார்க்கமுடியும். இப்பயணத்தின்
போதும் மேகமூட்டம் இருந்ததால் பனி மூடிய சிகரங்களை காணமுடியவில்லை. வழியில் பல அருவிகளையும் கடந்தோம். குளிர்காற்று வருடித்தந்தது. அனைவரும் இப்பயணத்தை வெகுவாக இரசித்தனர்.
குப்தகாசி
உத்தராகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாகை மாவட்டத்தின் ஒரு பெருநகரம் குப்தகாசி. திருக்கேதாரத்திற்கு 47 கி.மீ தூரத்தில் 1319மீ உயரத்தில் சௌகம்பா பனிச்சிகரங்களின் மடியில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் காசிக்கு சமமான விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானை தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஐயன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் மறைவு என்ற பொருளில் குப்த்(காசி) என்ற திருப்பெயர் பெற்றது. பின்னர் பாண்டவர்கள் கௌரிகுண்டத்தின் அருகில் எம்பெருமானைக் கண்டனர்.
காசியில் உள்ளது போலவே எம்பெருமான் விஸ்வநாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். வாருங்கள் விஸ்வநாதரை சேவிக்கலாம். சாலையிலிருந்து மிக உயரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 100 படிகள் ஏறிச்செல்ல வேண்டும் சந்து போன்ற வழி இரு பக்கமும் கடைகளும், வீடுகளும் அமைந்துள்ளன. வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் ஒழுகுவதால் பாதை முழுவதும் ஈரமாக இருந்தது.
திரிவேணி சங்கமம்
பசுவின் வாய் வழியாக கங்கையும், யானையின் வாய் வழியாக யமுனையும் அந்தர்வாகினியாக சரஸ்வதியும் சங்கமம் ஆவதாக ஐதீகம்
இமயமலை ஆலயங்களைப் போல நெடிய கோபுரம், அர்த்தமண்டபத்துடன் அமைந்துள்ளது குப்தகாசி ஆலயம். கோபுர கோட்டத்தில் சிம்மம். தாமரை மலர்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. சிங்கி-பிங்கி எனும் துவாரபாலகர்கள் ஆலயத்தை காவல் காக்கின்றனர். கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே அருமையான மாலை மற்றும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் பஞ்சலோக சிறிய நந்தியெம்பெருமான். அர்த்தமண்டபத்தில் இடப வாகனத்தில் வராகர் மற்றும் யானை வாகனத்தில் மஹாலக்குமி சிற்பங்கள் அருமை. சிவபெருமான் கௌரியன்னையை இங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.
அர்த்தநாரீஸ்வரர்
ரிஷபத்தின் மேல் அமர்ந்த கோலம் ஒரு தனி சிறப்பு
திருமுகத்தில் ஒரு புறம் வீரமும் மறுபுறம் நளினமும் தோன்றும் அழகை கவனியுங்கள்
விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம் இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதி கோலத்தில் சிவசக்தின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார். இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை, திரிசூலம் திருப்பாதங்களில் நாகம் என்று அருமையாக அமைத்துள்ளார் சிற்பி. மிகவும் அருமையான மூர்த்தம். சிவசக்தி மேல் வைத்த கண்ணை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியவில்லை அவ்வளவு அழகு. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.
அருமையான கலைநுணுக்கத்துடன் கூடிய நந்தி
இவ்வாலயத்தின் சிறப்பு மணிகர்ணிகா குண்டம் ஆகும். இக்குண்டம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஐயன் பாண்டவர்களுக்கு தரிசனம் தந்து மறைந்தபோது அவர் சடாமுடியில் இருந்த கங்கையும் யமுனையும் இன்றும் இக்குண்டத்தில் பாய்கின்றனர் என்று ஐதீகம். கோமுகத்திலிருந்து கங்கையும், யானை முகத்திலிருந்து யமுனையும் குண்டத்தில் பாய்கின்றனர். அந்தர்வாகினியாக சரசுவதி சங்கமம் ஆகின்றாள் என்பது ஐதீகம். எனவே இக்குண்டத்தில் நீராடினால் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
உக்கிமத் தரிசனம்
முடித்து சோப்டா சென்றடைந்து சென்ற பயணத்தின் போது தங்கிய விடுதியை அடைந்தோம் அனைவருக்கும் அங்கு அறைகள் கிடைத்தன. விடுதியின் உரிமையாளரே
மறு நாள் துங்கநாத் செல்வதற்கு வழிகாட்டியாக வருகின்றேன் என்று கூறினார். அருகில் உள்ள
மலையில் துங்கநாத் அமைந்துள்ள இடம், சந்திரசிலா என்னும்
பாறை மற்றும் இராவண்சிலா ஆகிய இடங்களை சுட்டிக் காட்டினார். இலங்கையிலிருந்து இராவணன் கேதாரநாதரை தரிசிக்க வரும் போது தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி விட்டு சென்ற இடம் இராவண்சிலா என்றழைக்கப்படுகின்றது என்றார்.
அதிகாலை காட்சி
சுமார் ஆறு மணியளவில் கேதார்நாத்தில் இருந்த மற்றவர்கள் ஹெலிகாப்டர் மூலம்
செர்சி வந்தடைந்து, அங்கிருந்து கிளம்பி குப்தகாசி தரிசனம் செய்து பின்னர் இரவு ஒன்பது மணியளவில் சோப்டா வந்தடைந்தனர். மறுநாள் துங்கநாத் தரிசனம் எவ்வாறு அமைந்தது என்பதைப் பற்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
2 comments:
இன்று பதிவில் வந்த இடங்கள் எல்லாம் பார்த்து தரிசனம் செய்த இடங்கள்.மீண்டும் தரிசனம் செய்து கொண்டேன்.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி கோமதி அம்மா.
Post a Comment