Tuesday, November 5, 2019

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை – 68

இப்பணிக்காக  பல இடங்களில் மலைகளை வெட்டிகொண்டிருந்தனர், இவற்றால் நிலச்சரிவுகள் இன்னும் அதிகமாகுமோ என்ன செய்யப்போகின்றார்கள் என்று யோசித்துக்கொண்டே பயணம் செய்தோம். சுமார் 12 மணியளவில் தேவபிரயாகையை (பத்ரிநாத்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும், கங்கோத்ரியிலிருந்து வரும் பாகீரதி நதியும் சங்கமம் ஆகி புண்ணிய  கங்கை நதியாக பாயும் புண்ணிய கூடுதுறை) அடைந்தோம். பித்ரு பக்ஷம் என்பதால் சங்கமத்தில் நீராடி பித்ருகளுக்கு நீர்க்கடன் அளித்து விட்டு, படியேறி  பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட புருஷோத்தமனை திவ்யமாக தரிசனம் செய்து பயணத்தைத் தொடர்ந்தோம்


ஹரித்வார் மத்வாஸ்ரம கிருஷ்ணர்


மத்வாஸ்ரமத்தில் 



 சென்னை குழுவினர்


பெங்களூர் குழுவினர்





தேவ பிரயாகை 

 (அலக்நந்தா, பாகீரதி சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம்)


தேவப்பிரயாகை: கோமுகத்திலிருந்து ஓடிவரும் பாகீரதியும்,  வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம்  கழுவி மற்றும் தவுலி கங்கா, நந்தாங்கினி, பிண்டாரி மந்தாங்கினி,  ஆகிய  நதிகளுடன் இனைந்து ஓடிவரும் அலக்நந்தாவும்  சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் த்தேவப்பிரயாகை. தசரத சக்ரவர்த்தியும், பின்னர்  இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீர இராமபிரானும் தவம் செய்த தலம் இத்தேவப்பிரயாகை.  எனவே இதன் கரையில் இரகுநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலம் பெரியாழ்வாரால் மங்கலாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் எனும் திவ்வியதேசம் ஆகும். இக்கூடுதுறை திருமாலவனின்  நாபிக்கமலம் என்பது ஐதீகம் எனவே திரிவேணி சங்கமத்திற்கு ஈடான இச்சங்கமத்தில் நீராடி  பிண்டப் பிரதானம் அளிப்பது மிகவும் சிறந்தது. தேவ சர்மா என்ற முனிவர் தவம் செய்து பெருமாள் தரிசனம் பெற்ற தலம் என்பதால் இத்தலம் தேவப்பிரயாகை ஆயிற்று.


மகரவாஹினி கங்கை அம்மன்


கண்டம் என்னும் கடிநகர்

விமானம் புது வர்ணத்தில் மிளிர்கின்றது

இத்தலத்தை  பெரியாழ்வார் (தேவப்ரயாகையை)  கங்கைக் கண்டம் என்னும் கடிநகர் என்றும்  இந்த இராமபிரானை புருடோத்தமன் என்றும்  மங்கலாசாசனம்  செய்துள்ளார். தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்த தலம் என்பதால் அவர் பெயரால் தேவ பிரயாகை என்று அழைக்கப்படுகினறது. இயற்கை எழில் கொஞ்சும் இத்தலம் 618 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டேராடூனுக்கும், தேஹ்ரிக்கும் பாதைகள் செல்கின்றன.

இராமபிரான் அமர்ந்த கல் சிம்மாசனம்



 விஷ்ணுவின் நாபிக் கமலமான இந்த சங்கமத்தில் பித்ருகளுக்கு பிண்டஸ்ரார்த்தம் செய்வது மிகவும் உத்தமமானது. அதற்காகவே பல பண்டாக்கள் யாத்திரிகளுக்காக இங்கு காத்திருக்கின்றனர். வேண்டுபவர்கள் அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிறிது கவனமாக இருக்கவும். கங்கையில் நீராடி விட்டு  புருசோத்தமனை சேவிக்க மேலேறி சென்றோம்.  பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயம். முழுவதும் கல்லால் ஆன ஆலயம். இமயமலைக்கோவில் போல கோபுரம் மேலே வட்ட வடிவக்கல், மேலே கலசம்  காவி வர்ணக்கொடியுடன் எழிலாக நிமிர்ந்து நிற்கின்றது ஆலயம். ஒரு பிரகாரம். பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடி கருடன். உயரமான கருவறையில் இலக்குவணுடனும் மைதிலியுயுடனும்  15 அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார் கோதண்டராமர். மூவரும் சாளக்கிராம மூர்த்திகள், முகமண்டலங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தங்கையைமூக்கும் தமயனைத்தலையும் தடிந்த எந்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்தரசாண்ட எம்புருடோத்தமனிருக்கை
கங்கைகங்கை யென்னவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேற்கைதொழநின்ற கண்டமென்னுங்கடிநகரே.  


என்னும் பெரியாழ்வாரின் பாசுரங்களின்  பாசுரத்தை தூண்களில் எழுதி வைத்திருக்கின்றர்.

தேவப்ரயாகையென்று வழங்கும் கண்டமென்னுந் திருப்பதியின் மகிமையை பெரியாழ்வார் எப்படி பாடியுள்ளார் என்று பார்க்கலாமா?

சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில் தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனற்கங்கைக் கண்டமென்னுங்கடிநகரே...

 வாமனனாக வந்து மாபலியிடம் மூவடி மண் கேட்டு, பின்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உத்தமனாக மூவுலகையும் அளந்த போது பெருமாளின் திருப்பாதத்தில், பிரம்மதேவன் செய்த அபிஷேக நீர்தான் பின்னர் சிவபெருமானின் சடையில் தங்கி பின் கங்கையாக பூமியில் பாய்ந்தாள் அந்த கங்கையின் கரையில் கண்டமென்னும் கடிநகரில், தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கையையும், மூத்தவனான இராவணனின் பத்து தலைகளையும் அறுத்த புருடோத்தமனான ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார் வேயர் குலத்துதித்த விஷ்ணுசித்தர்.  மேலும்

இமவந்தந்தொடங்கியிருங்கடலளவும் இருகரையுலகிரைத்தாட
கமையுடைப் பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே..

உயர்ந்த இமயமலையில் தொடங்கி கடல் வரையும் இரு கரைகளும் அகலமாக விளங்கும் கங்கையின் கரையில் வலம்புரி கையில் ஏந்தி அசுரர்களின் தலைகளை இடரும் புருடோத்தமன் கோயில் கொண்டு சேவை சாதிக்கின்றான் என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

சிவபெருமானின் சடையின் கொன்றை மலர், திருமாலின் பாத திருத்துழாய், ஐராவதத்தின் மதநீர், கற்பக மலர், நீராடும் தேவ மங்கையரின் சாந்து ஆகியவை சேர்ந்து பாயும்

எழுமையுங்ககூடியீண்டியபாவம் இறைப்பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும்பெருமை கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே

 என்றும் பாடுகின்றார் வில்லிபுத்தூர்க்கோன். இவ்வாறு பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்து  மனதார பெருமாளை வணங்கிவிட்டு கோவிலை வலம் வரும் போது இராமர் அமர்ந்திருந்த கல் சிம்மாசனத்தை கண்டோம். கோவிலின் சுவர்களில் அருமையான சிற்பங்கள் உள்ளன. குளிர் காலத்தில் பத்ரிநாத்தின் பண்டாக்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.





 ஆற்றின் இடையில்  தாரிதேவி ஆலயம் 



வழியில் ஸ்ரீநகருக்கு அருகில் கட்டபட்ட  ஒரு தடுப்பணையின் காரணமாக மூழ்க இருந்த தாரி தேவி என்னும் அம்மனின் அலயத்தை உயர்த்திக் கட்டியிருந்ததை கவனித்தோம். புது வர்ணத்தில் எழிலாக காட்சி அளித்தது ஆலயம். வண்டியிலிருந்தே அம்மனை வணங்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.  


ருத்ர பிரயாகை (அலக்நந்தா, மந்தாங்கினி சங்கமம்)


ருத்ரப்பிரயாகை: கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து கேதாரீஸ்வரரின் பாதம் தழுவி ஓடி  வரும் மந்தாங்கினியும்,  வசுதரா அருவியிலிருந்து பத்ரி நாதரின் பாதம் தழுவி ஒடி வரும் அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ரப்பிரயாகையாகும்இசையில் தன்னை வெல்ல வந்த  நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம்ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம்சரசுவதி தேவி நாரதருக்கு மகதி என்னும் வீணை அளித்த தலம்.   சதிதேவி யாக குண்டத்தில் ட்சன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாகமலைமகளாககௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம்அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாதருக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளதுஇங்கிருந்து ஒரு பாதை மந்தாங்கினியின் கரையோரம் கேதாரநாத்திற்கும்மற்றொரு பாதை அலக்நந்தாவின் கரையோரம் பத்ரிநாதத்திற்கும் செல்கின்றது

ருத்ரபிரயாகைக்கு அருகில் மதிய உணவை முடித்துருத்ரபிரயாகையை தரிசனம் செய்து விட்டு மந்தாங்கினி பள்ளத்தாக்கில் பயணம் செய்து அகஸ்தியமுனி என்ற தலத்தை அடைந்தோம்.   அகஸ்திய முனியில் மறு பதிவில் அகத்தியரை தரிசிக்கலாம் அன்பர்களே.  

                                                                                                                                               யாத்திரை தொடரும் .....

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பயணம். உங்கள் மூலம் நாங்களும் இங்கே பயணிக்கிறோம்.

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

கோமதி அரசு said...

தேவப்ரயாகையை மீண்டும் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்.
பழைய நினைவுகள் வந்தன. அங்கு தரிசனம் செய்த நினைவுகள் வந்தன.
மிக இனிமையான யாத்திரை.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா.