இன்று ஐப்பசி பௌர்ணமி பல சிவாலயங்களில் ஐயனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் முடிந்தவர்கள் ஆலயம் சென்று கோடி சிவ தரிசன பலன் நல்கும் அன்னாபிஷேகத்தை கண்டு இறைவன் அருள் பெற வேண்டுகிறேன். அன்னாபிஷேகத்தின் சிறப்பை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லவும் அன்னாபிஷேகம்
அதிகாலை முதல் குழு ஹெலிகாப்டர் தளம் சென்றோம். வானம் நிர்மலமாக இருந்தது. எனவே ஹெலிகாப்டர் இயக்கம்
திட்டமிட்டப்படி துவங்கியது. ஹெலிகாப்டரில் எடையைப்
பொறுத்து பயணிகள் அனுப்பப்படுகிறார்கள் என்பதால் இக்குழுவினரே மூன்று
ஹெலிகாப்டரில் செல்ல வேண்டி இருந்தது. செர்சியிலிருந்து
கேதார்நாத் செல்ல சுமார் 5
நிமிடங்களே ஆயின, ஆயினும்
இந்நிறுவனத்தினருக்கு ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே இயக்க அனுமதி இருந்தது, மற்றும் கேதார்நாத்தில் ஒரு ஹெலிகாப்டர் தளம் மட்டுமே இருந்ததால் அனைத்து
ஹெலிகாப்டர்களும் அத்தளத்தில் மட்டுமே இறங்கி பின் அங்கிருந்தே புறப்பட வேண்டும்
என்பதாலும் ஒரு பயணத்திற்கும் அடுத்த பயணத்திற்கும் இடையே சுமார் 15 நிமிடங்கள் ஆனது.
ஹெலிகாப்டர் தளத்தில்
கேதார் சிகரங்கள்
அடியேன் சென்றபோது வானம் மேக மூட்டம் இல்லாமல் இருந்தது, பனி படர்ந்த கேதார சிகரங்கள் அருமையாக காட்சி தந்தன அவற்றின் அடிவாரத்தில் கேதார்நாத் ஆலயம் எழிலாக சூரிய வெளிச்சத்தில் மின்னியது. ஐயனை வணங்கிக்கொண்டே ஆலயத்தை நோக்கி விரைந்தோம். வழியில் மந்தாங்கினி கங்கையம்மனுக்கு ஒரு தனி சன்னதி புதிதாக அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். மந்தாங்கினி அன்னையை வணங்கி விட்டு தொடர்ந்தோம். மந்தாங்கினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாகத்தின் அருகில் இறங்கி மந்தாங்கினி ஆற்றில் முகம், கழுவிக்கொண்டு (குளிப்பது மிகவும் சிரமம்) திரும்பி போது ஒரு சாது கையில் பல பிரம்மகமல் மலர்களுடன் வந்து கொண்டிருந்தார். இமயமலையில் சுமார் 3000- 3500 மீ உயரத்தில் மட்டுமே மலரக்கூடிய மலர் இது. அதுவும் ஆகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் மட்டுமே பூக்கும் மலர் இது. இங்குள்ள அன்பர்கள் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மலர் இது என்று இதை பறித்து தங்கள் இல்லத்தில் வைத்துக்கொண்டு வாடிய பிறகும் போது கூட கேதாரீஸ்வரருக்கு சமர்பிக்கின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தின் மாநில மலர் என்ற சிறப்பும் இம்மலருக்கு உண்டு. புகைப்படம் எடுக்கலாம் என்று அவரிடம் கேட்க சென்ற போது அவர் ஒன்றும் பேசாமல் இரண்டு மலர்களை கையில் அளித்து விட்டு சென்று விட்டார். என்னே ஐயனுடைய கருணை அன்றலர்ந்த பிரம்மகமல் மலரை அவருக்கு சார்த்தும் பாக்கியம் கிட்டியது.
மந்தாங்கினி கங்கை சன்னதி
மந்தாங்கினி சரஸ்வதி நதி சங்கமம்
அரிய பிரம்மகமல் மலர்
திருக்கேதாரம்
பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்துக்கொண்டே ஆலயத்தை நோக்கி விரைந்தோம். இடையில் கோட்டைச் சுவர் போல பிரமாண்டமான மதில் சுவர் பணி நடந்து கொண்டிருந்ததை பார்த்தோம். வெள்ளத்தினால் மீண்டும் சேதம் ஏற்படாமல் இருக்க முயற்சி நடக்கின்றது. அன்று திங்கட்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வரிசையில் நின்று சென்றோம் சன்னதிக்குள் செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆனது. நம் குரு மரபிற்கு முதல்வரான நந்தி தேவரை வணங்கி அவர் அனுமதி பெற்றுக்கொண்டு அடுத்து துவார கணபதியை வணங்கி சன்னதிக்குள் நுழைந்தோம், முன் மண்டபத்தில் லட்சுமி, நரசிம்மர், கிருஷ்ணர், குந்தி மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் அம்மண்டபத்தில் உள்ள சிறிய நந்தியை வணங்கி அர்த்த மண்டபத்திற்கு செல்லும் போது வெள்ளி துவார கதவை சரியாக கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது. இத்துவாரம் “கேதார் புஷ்ப துவாரம்” என்றழக்கப்படுகின்றது. வெள்ளி கவசம் பூண்டுள்ள இக்கதவில் ஓம் நமசிவாய என்னும் மந்திரம், திரிசூலம்-உடுக்கை மற்றும் நந்தி அலங்கரிக்கின்றன. அடுத்து அர்த்த மண்டபத்தில் விநாயகரையும், கேதார கௌரி அம்பாளையும் தரிசித்தோம். கருவறையின் துவார கதவும் முன் துவாரம் போலவே உள்ளது. இத்துவாரம் “கேதார் இராம துவாரம்” என்றழைக்கப்படுகின்றது. உள்ளே சரியான கூட்டம் அதிக நேரம் இருக்க முடியவில்லை, எடுத்து சென்றிருந்த மானசரோவர் தீர்த்தம், மற்றும் தேவப்பிரயாகையில் இருந்து எடுத்துச் சென்றிருந்த கங்கா தீர்த்தத்தினாலும் அபிஷேகம் செய்து, ஐயனே அளித்த பிரம்மகமல் மலரை அவருக்கு சார்த்தி கையில் இருந்த நெய்வேத்ய பொருளை சிவபெருமானுக்கு படைத்து, அனைவரும் சுகமாக, நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருப்தியுடன் வெளியே வந்து ஆலயத்தை வலம் வந்தோம்.
கணேசர்
சுருக்கமாக கேதார்நாத் ஆலயத்தின் பெருமை, பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. "ஹிமாலயே து கேதாரம்" என்று சுவாமி போற்றப்படுகின்றார். சுவாமி சுயம்பு. ஒரு மலைச் சிகரமாகவே தரிசனம் அளிக்கின்றார். பஞ்ச பாண்டவர்கள், மஹாபாரதப் போரினால் ஏற்பட்ட தோஷங்களை போக்கிக் கொள்ள சிவபருமானை வணங்க திருக்கயிலாயம் சென்ற போது அவர்களுக்கு உடனே தரிசனம் வழங்காமல் இங்கு வந்து நந்தி ரூபத்தில் திரிந்து கொண்டிருந்த போது, பாண்டவர்கள் சுவாமியை புரிந்து கொண்டு, பீமன் அந்நந்தியை அதன் திமிலை பிடிக்க அவனிடமிருந்து தப்பிக்க ஐயனின் உடற்பாகங்கள் ஐந்து இடங்களில் வெளிப்பட்டன. திமில் வெளிப்பட்ட இடம் திருக்கேதாரம், பின்னர் பஞ்சபாண்டவர்களின் தோஷம் தீர்த்து அவர் வேண்டுகோளுக்கிணங்க சுயம்பு ஜோதிர்லிங்கமாக இன்றும் அருளுகின்றார். கேதார கௌரியாக, மலையரசன் பொற்பாவை பார்வதி தேவி தவம் இருந்து அயனின் இடப்பாகம் பெற்ற தலம். சம்பந்தரும், சுந்தரரும் தீந்தமிழால் பாடிய தலம், ஆதி சங்கரர் தமது அவதார நோக்கம் நிறைவேறிய பிறகு இங்கிருந்துதான் சிவலோகம் சென்றார். வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே நாம் சென்று தரிசிக்க முடியும், குளிர் காலத்தில் பனியினால் ஆலயம் சூழப்பட்டிருக்கும் எனவே ஆலயம் மூடப்பட்டிருக்கும், அப்போது தேவர்கள் சிவபெருமானை பூசிப்பதாக ஐதீகம். ஐயனுடைய உற்சவ திருமேனி அப்போது கீழே உக்கிமத் என்னும் ஆலயத்தில் பூசிக்கப்படுகின்றது.
நந்தியெம்பெருமான்
ஐயனை பீமன் அழுத்தி பிடித்ததால் ஏற்பட்ட வலி நீங்க ஐயனுக்கு நெய் தேய்த்து வழிபடுவது வழக்கம். இங்கு நெய்யால் நந்தியெம்பெருமானுக்கும் தேய்த்துள்ளனர்.
புனிதப்பாறை
இமாலய சுனாமியின் போது வந்து நின்று ஆலயம் ஒன்றும் ஆகாமல் காத்த "புனித பாறையை" தரிசித்தோம். இறைவா, உன்னுடைய கருணைதான், என்ன, இவ்வளவு பெரிய பாறையை எவ்வாறு இவ்விடத்தில் நிலை நிறுத்தினாய் என்று வியந்தோம். ஈசானேஸ்வரர் சன்னதி புதிதாக எழுப்பபடுவதைக் கண்டோம். ஐயனை பூசை செய்யும் ராவல் அவர்களை தரிசனம் செய்தோம். அவர் ருத்ராட்சம் வழங்கி ஆசீர்வாதம் அளித்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் மறுமுறை வரிசையில் நிற்கவில்லை. பைரவர் சன்னதி செல்லலாமா என்று யத்தனித்தோம், மிகவும் தூரம் என்பதாலும் சிறிது நேரத்திற்கு பின் திரும்பி வந்து விட்டோம். ஹெலிகாப்டர் தலத்தை அடைந்து திரும்பி செல்வதற்காக பதிவு செய்து விட்டு காத்திருந்த போது எங்கிருந்தோ மேக கூட்டம் வந்து ஹெலிகாப்டர் செல்லும் பாதையில் சேர, ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்பட்டது. மேரு மற்றும் சுமேரு மலைத்தொடர்களுக்கு இடையே பயணம் என்பதால் மேக மூட்டத்தினால் பாதை சரியாக தெரியாது என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்படுகின்றது. அடியோங்களின் குழுவில் சிலர் இன்னும் செர்சியிலே இருந்தனர்.
பைரவர் சன்னதி ( கொடிகள் உள்ள இடம்)
செர்சியில் தங்கிய விடுதி
அடுக்கு முறை பாசனம்
சுமார் ஒரு மணி நேரத்திற்குப்பின் மேக மூட்டம் விலகியது சிறிது நேரத்திற்கு ஹெலிகாப்தர் இயக்கம் மீண்டும் துவங்கியது. அடியோங்கள் செர்சி திரும்பி வந்தோம். குழுவினர் அனைவரும் கேதார்நாத் அடைந்தனர். அடியோங்கள் மதிய உணவு உண்டு அனைவரும் திரும்பி வர காத்திருந்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததாலும், மீண்டும் ஹெலிகாப்டர் இயக்கம் மீண்டும் நிறுத்தப்பட்டதால் தரிசனம் முடித்த பிறகு ஒரு சிலர் அங்கேயே காத்துக்கொண்டிருந்தினர். செர்சியில் இருந்தவர்கள் ஊக்கிமத் தரிசிப்பதற்காகவும், அடுத்து தங்கும் இடத்தில் அறைகளை எடுக்கும் பொருட்டும், ஒரு வண்டியில் சிறு பழுது பார்க்கும் வேலை இருந்ததாலும் அவர்களை பின்னர் வரக்கூறிவிட்டு முன்னே கிளம்பினோம். இரண்டு சிறு வண்டிகளில் வந்ததினால் இது சாத்தியமானது. அவர்கள் அன்றே திரும்பி வர முடிந்ததா? இல்லை கேதார்நாத்திலேயே மாட்டிக்கொண்டார்களா என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
4 comments:
//பிரம்மகமல் மலரை அவருக்கு சார்த்தி கையில் இருந்த நெய்வேத்ய பொருளை சிவபெருமானுக்கு படைத்து, அனைவரும் சுகமாக, நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருப்தியுடன் வெளியே வந்து ஆலயத்தை வலம் வந்தோம்.//
நல்ல வேண்டுதல். வேண்டுதல் பலித்து நல்ல மழை பெய்து தண்ணீர் கஷ்டம் தீர்ந்து வருகிறது.
நாங்கள் டோலியில் போனோம்.
மீண்டும் கேதாரம் தரிசனம் செய்தேன் மகிழ்ச்சியாக.
சம்பந்தரும், சுந்தரரும் தீந்தமிழால் பாடிய தலம்//
தேவாரங்கள் செதுக்கிய கல்வெட்டுகள் கோவிலுக்கு பின் இருந்ததே! இப்போது இருக்கா?
நாங்கள் போன போது கோவில் பின்னாடி பனி மலை போல் இருந்தது தேவார கல்வெட்டுக்கு எதிரில். எல்லோரும் கைலைமலையாக நினைத்து குங்குமம் போட்டு வழி பட்டனர்.
2013 ஹிமாலய சுனாமியில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பின்னால் இருந்த சுற்று சுவர் கட்டும் போது மீண்டும் நிறுவப்படலாம். தற்போது இல்லை.
நன்றாக மழை அவருடைய அருள் போல பெய்கின்றது.
Post a Comment