சித்திரைத்திருவிழாவின் மூன்றாம் நாள் காலை அதிகாரநந்தி சேவையை இப்பதிவில் கண்டு அருள் பெறலாம் அன்பர்களே.
குறுங்காலீஸ்வரர் அதிகார நந்தி சேவை
இவ்வாலயத்தில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அது நின்று
போய் மொட்டையாக இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2000-ஆம் ஆண்டில் நூதன 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பக்தர்களின் நன்கொடையால் கட்டப்பட்டு, திருப்பணிகள் நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தூய்மையான- கம்பீரமான
ஆலயம். புராண- வரலாற்றுப்
பெருமைகளை தன்னகத்தே கொண்டு, கோயில்
என்ற இலக்கணத்துக்கு உட்பட்டு, பாங்காக
அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலமாக குறுங்காலீஸ்வரர் ஆலயம்
விளங்குகின்றது. கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியதாக 21 கல்வெட்டுகள் உள்ளன.
கற்பூர ஆரத்தி
நாற்பது தூண்களுடன் கூடிய பிரமாண்ட முன் மண்டபம். நுழையும்போது நமக்கு வலப் புறம் அருள்மிகு விசாலாட்சி சமேத
விஸ்வநாதர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும்
காணப்படுகின்றன. சோமாஸ்கந்தர் தியாகராஜர் கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இத்தூண்களில் ஏராளமான சிற்பங்கள் அழகாக
வடிக்கப்பட்டுள்ளன. அதில் யாகக் குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்த நிலையில்
காணப்படும் குச - லவர்களின் கம்பீரமான காட்சி, கலைநயம்
மிக்கது.இந்த மண்டபத்தில்தான் குசலவ புரீஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர்
சந்நிதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தனி
அம்மன் சந்நிதியும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. ஐயன் குள்ளமாக, லவ –குசர்களுக்காக தன்னை குறுக்கிக்கொண்ட குறுங்காலீஸ்வரராக
அருள் பாலிக்கின்றார். அவரை வணங்கி உட்பிரகார வலம் வநதால் துவக்கத்தில் தெற்கு நோக்கி நடராஜர், சூரியன், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். பிராகார வலம் வரும் போது சண்டிகேஸ்வரர் (கோமுக தீர்த்தம் விழும் இடத்தில்), விநாயகர், ஜுரகரேஸ்வரர், அகத்தீஸ்வரர், இன்னொரு விநாயகர், சாஸ்தா, சுப்ரமண்யர், சிவலிங்கம், லட்சுமி, அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஞானசரஸ்வதி, நாகர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். பிரகார சுவற்றில் சுதர்சன அஷ்டகம், துர்கா ஸுக்தம், சிவப்புராணம், ஸங்காஷ்ட நாஸன கணேச ஸ்தோத்திரம் சலவைக்கல்லில் அமைத்துள்ளனர்
அடுத்து அம்மன் சன்னதி அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். திருவையாறில் அருள் பாலிக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசம்வர்த்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியை முன் எடுத்து வைத்த பாவத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கப் புறப்படத் தயாராக இருக்கிறாள் இந்த அம்பிகை .அம்மனை வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணப் பேறு வாய்க்கும். தீராத
வியாதிகள், மனக் குழப்பங்கள் அகலும்.
2 comments:
//அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசம்வர்த்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலத்தில், இடது திருவடியை முன் எடுத்து வைத்த பாவத்தில் பக்தர்களின் துயர் தீர்க்கப் புறப்படத் தயாராக இருக்கிறாள்//
அறம் வளர்க்கும் அம்மா தர்மசம்வர்த்தினி மக்கள் துயர் நீங்கி அன்பும் அமைதியுமாக வழி செய் அம்மா!
படங்கள், விள்க்கம் மிக அருமை.
நன்றி, வாழ்த்துக்கள்.
அறம் வளர்த்த நாயகி சரணம் அம்மா.
Post a Comment