பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயம், குரு பரிகாரத்தலத்தின் பிரம்மோற்சவ காட்சிகள் தொடர்கின்றன. இன்றைய தினம் ஏழாம் திருநாள் இரவு புஷ்ப பல்லக்கு சேவையை தொடர்ந்து தரிசிக்கலாம் அன்பர்களே.
குருவின் பாபம் நீங்கிய தலம்: குருவின் பாவம் தான் என்ன? வேதங்கள் அறிந்தவரும், அமைதியானவரும், ஞானம் நிறைந்தவரும் ஆன குரு பகவான் ஒரு முறை மனதளவில் தவறான எண்ணம் கொண்டார். மகரிஷி உதத்தியர் என்பவர் குருவின் சகோதரர் ஆவார். அவருக்கு மமதை என்ற அழகான, அடக்கமான மனைவியும் உண்டு .அண்ணன் மனைவியை தாயாய் நினைத்து வந்த வியாழன் மனதில் திடீரென்று ஒரு முறை தவறான எண்ணம் ஏற்பட்டது. சிறிது நேரமே, தன் அண்ணியை தவறான கண்ணுடன் மனதில் நினைத்துக்கொண்டு இருந்தார். உடனேயே தனது தவறினை நினைத்து வருந்தி தனது பார்வையை வேறு பக்கம் திருப்பினார். அவர் திரும்பிய இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதன் கிளை ஒன்றில் ஒரு கருங்குருவி (வலியன்) அழகாய் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தது. குருவின் பார்வை கருங்குருவியின் மீது பட்டதால், குருவின் வீர்யம் பார்வையாக குருவியின் மீது பட, குருவிற்கு கருங்குருவியின் முகமும், மனித உடலும் கொண்ட ஒரு குழந்தை பிறந்தது. விதி வலியது என்பதற்கேற்ப இந்த உருவம் அமைந்ததை எண்ணி பெருந்தவம் செய்தது. அண்ணனின் மனைவியை தாயாக நினைக்க வேண்டிய குரு தவறாக நினைத்தது பாவம் என்றும், அதனை போக்க முடிவு செய்து குருவி தவம் செய்யும் என்பதனை அறியாமல் குரு அதே இடத்திற்கு வந்து தவம் செய்தார். குரு ஓரிடமும், குருவி ஓரிடமும் அமர்ந்து, ஜகத்தை காக்கும் ஜகதீஸ்வரரிடம் இவர்களை காக்க தவம் இருந்தனர். வேண்டியதைத்தரும் பரம தயாளனான பரமேஸ்வரன் கருணையுடன் குருவிற்கும், குருவிக்கும் காட்சி தந்தார். இத்தலத்தில் தான் ஈசன் வலியன் குருவிக்கு சுய உருவம் அளித்தார். அந்த கருங்குருவி தான், நான்கு வேதங்களும் கற்றுணர்ந்த பரத்வாஜ மகரிஷியாவார். வலியன் என்ற கருங்குருவி வழிபட்டதால் இந்த இடம் வலிதாயம் என அழைக்கப்படும் என்று அருளினார். மனதாலேயே தீய எண்ணம் ஏற்பட்டாலும் அதனை போக்க எண்ணி தவமிருந்த குரு பகவானுக்கு, அவருடைய புகழ் அதிகரிக்க, அவர் செய்த வினை தீர்த்த இந்த தலத்தில் அவரது கீர்த்தி கூடியிருக்கும் என்றும், இத்தலம் குருவிற்கு தனிச்சிறப்பாக அமையும் என்றும் அருளினார்.
புஷ்ப பல்லக்கில் சுவாமி
இக்கோவிலில் சுமார் 15 கல்வெட்டுகள் உள்ளன. அர்த்த மண்டப தெற்குப்புறமுகத்தில் உள்ள மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு நிவந்தங்கள் அளித்ததைத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு பரத்வாஜி திருவிடையான் திருராபீசுரமுடையர்களான திருப்பதியில் விண்ணப்பம் செய்யும் திருச்சிற்றம்பலமுடையான் ஆலயலிங்கமாக எழுந்தருளிவித்த நாயனார் அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார்க்குப் பூசை அமுது படிக்கு நற்காசு பத்து அளித்துள்ளதைக் கூறுகிறது. மதுராந்தக பொத்தப்பி சோழனுடைய கல்வெட்டில் திருவலிதாயத்து ஊரவர் தங்களூரில் உள்ள இறையிலி தேவதானங்கள் நீக்கி ஊர் முழுவதையும் ஸர்வமான்யமாகக் கொடுத்ததைக் காணமுடிகிறது. வாருங்கள் இனி இத்தலத்தின் தல வரலாறுகளைப் பற்றிக் காணலாம்.
அனுமன் வழிபட்ட லிங்கம்: இராவண வதம் முடித்த இராமபிரான் தன் பாவம் நீங்க ஒரு இலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்து அந்த இலிங்கத்தைக் காசியிலிருந்து எடுத்துவர அனுமனைப் பணித்தாா். காசிக்குச் சென்ற வாயு புத்திரன் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் அன்னை சீதா தேவி மணலில் ஒரு இலிங்கத்தை உருவாக்கித்தர அந்த இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குறித்த நேரத்தில் பூஜையைத் தொடங்கினாா் இராமபிரான்.பூஜை ஆரம்பித்த அடுத்த நொடியில் காசியிலிருந்து இலிங்கத்துடன் வந்துவிட்டாா் அனுமன். வேறு ஒரு இலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை நடப்பதைக்கண்ட அனுமன் முகத்தில் வருத்த ரேகை படா்ந்திருப்பதைக் கண்டாா் இராமபிரான். அனுமனை நோக்கிய ஶ்ரீராமன், “வருத்தம் வேண்டாம்; மணல் லிங்கத்தை எடுத்து விட்டு இந்த இலிங்கத்தைப் பிரதிஷ்டை
செய்யலாம்,” என்று கூறினாா். அனுமனும் மகிழ்ந்து மணல் இலிங்கத்தை அகற்ற முயல அந்த இலிங்கம்
சிறிதுகூட அசைந்து கொடுக்கவில்லை. அனுமன்
அந்த இலிங்கத்தை தனது வாலால் கட்டி இழுத்து தன் முழு பலத்தையும் பிரயோகித்தும்
பலன் ஏதும் இல்லை. ஈசனின் திருவுள்ளத்தை அறிந்த அனுமன் தன் தவறை
உணா்ந்து சீதாதேவி அமைத்த இலிங்கத்திற்கே ராமா் பூஜைகள் செய்யக் கேட்டுக்கொண்டாா். ஶ்ரீராமபிரானும் அந்த இலிங்கத்தை வழிபட்டு தன் தோஷம்
நீங்கப்பெற்றாா். இந்த நிகழ்வு நடைபெற்ற திருத்தலம் ஈசன் இராமலிங்கமாக
அருளும் இராமேஸ்வரம் தலமாகும். ஈசனின்
திருமேனியை தன் வாலால் கட்டி இழுத்ததால் மனம் வருந்திய அனுமன், தன் பாவம் தீர நாரத முனிவரைப் பணிந்து வழி கூறியருள
வேண்டினாா். அனுமனின் மனக்குறை தீா்க்க எண்ணிய நாரதா், திருவலிதாயம் திருத்தலம் சென்று அங்குள்ள புனித
தீா்த்தத்தில் நீராடி திருவல்லீஸ்வரா் எனும் வலிதாயநாதரை வழிபட, அனுமனின் பாவம் நிவா்த்தியாகும் என்று ஆலோசனை கூறினாா். அவரது ஆலோசனையின்படி திருவலிதாயம் வந்த அனுமன் இத்தல ஈசனை
வழிபட்டு தன் பாவம் நீங்கப் பெற்றாா்.
புஷ்ப பல்லக்கில் அம்பாள்
2 comments:
படங்கள் தகவல்கள் என அனைத்துமே சிறப்பு.
மிக்க நன்றி ஐயா.
Post a Comment