Saturday, June 25, 2016

புல்டோசரால் தகர்க்க முடியாத கோவில் - 2

திருக்கல்யாணம் 

மல்லிகேஸ்வர சுவாமி

மஹேஸ்வரி அம்பாள்

பொதுவாகவே கும்பாபிஷேகம் என்பது ஆலயம் அமைந்திருக்கின்ற கிராமத்தில் உள்ளவர்களின்   நன்மைக்காவும் செய்யப்படுகின்றது. ஹோமத்தில் இடப்படுகின்ற சமித்துக்களும் மூலிகைகளும் மக்கள் அனைவருக்கும் நன்மை பயப்பவை ஆகும். அதே போல மாலை நடைபெறும் திருக்கல்யாணத்தை தரிசிப்பவர்கள்  சகல சௌபாக்கியங்களையும் அடைவர்  என்பது ஐதீகம், 


அம்மையும் அப்பனும் 

 திருமாங்கல்யம்

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களையும் உலகிற்கு உள்ளவாறு உணார்த்தி உய்யும் நெறியைக் காட்டும் மகா சித்தர்களுள் ஒருவர் ஸ்ரீதோபா சுவாமிகள். சித்தத்தை சிவமயமாக்கிச் செய்தல் தவம் அந்நெறியில் நின்றவர். தமது அருட்பண்பு கொண்டு அட்டமாசித்திகளை நிகழ்த்திக் காட்டியவர். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்தலை தமது பெருநெறியாகக் கொண்ட தயாளர்.

இனி தோபா சுவாமிகளின் சரிதத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா அன்பர்களே? சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளியில் வேளாளர் குலத்தில் சிவகுருபதம் பிள்ளை சிவகாமி தம்பதிகளுக்கு  இராமேஸ்வர பெருமானின் அருளால் மூன்றாவது பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு ராமலிங்கம் என்று திருநாமமிட்டனர். இவர் பிள்ளைப்பருவம் நீங்கி காளைப்பருவம் அடையும் முன்னரே பெற்றோர்கள் இருவரும் சிவனடி அடைந்தனர். இவருடைய நிலையைக் கண்ட ஆங்கில அரசு இவரது தந்தையார் பணி செய்த காவலாட்படையில் இவரை சேர்த்துக்கொண்டது. பயிற்சிக்குப்பின் இவரை சென்னைக்கு மாற்றினர். மற்ற காலாட்படை வீரர்களுடன் இவருக்கும் படைக்கல பயிற்சியும் அளித்தனர். போர் தொழிலை இவர் நிஷ்காமியமாகவே செய்து வந்தார். திருத்தணி முருகன் மீது அருட்பா பாடினார். தொடர்ந்து  பன்னிரு திருமுறைகள், உபநிடதம் ,கைவல்யம் முதலிய ஞான நூல்களையும் படித்து நித்தியம் எது? அநித்தியம் எது? என்று ஆராயலானார். திருஞானசம்பந்தரையே தமக்கு குருவாக  கொண்டு தியானத்தில் அமர்ந்தார். நிற்விகல்ப சமாதி எய்தும் நிலை பெற்றார். நிஷ்டை கலைந்து  வெளிமுகமாகும் போது தோ பா என்று இரு எழுத்துக்கள் பலமுறைகள் வெளிப்படும். எனவே இவர் தோபா சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். தோபா என்பதின் விளக்கம் தோவை முதலாகக் கொண்டு தோடுடைய செவியன் என்று பாட ஆரம்பித்த தன் குருமூர்த்தியாகிய ஸ்ரீ திருஞானசம்பந்தப் பெருமானை நினைவு கொள்வதைக்  குறிக்கும்.


திருமாங்கல்யத்துடன் பாகம் பிரியாள் 


ஸ்ரீதோபா சுவாமிகள் திருவொற்றீயூரில் தெரு ஓரமாக அமர்ந்து, அந்த வழியாக செல்பவர்களின் குணத்தைத் குறிப்பது போல, நாய் போகிறது, நரி வருகிறது, கழுதை கத்துகிறது, பேய் திரிகிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பாராம். ஒரு சமயம் வடலூர் இராமலிங்க அடிகளார் அந்த வழியே செல்லும் போது முதல் முறையாக மனிதர் வருகிறார் என்றாராம். வள்ளலாரும் தன்னைப் போல ஒரு மகான் இவர் என்பதை உணார்ந்து அங்குள்ளோர் அனைவரிடமும் தெரிவித்தார்.

தோபா சுவாமிகள் ஒரு நாள் ஒரு இல்லத்தின் வாயிலில் நின்று பிச்சை கேட்டார். அப்பெண்மணியோ மிகுந்த பக்தியுடன் பாதி வெந்து கொண்டிருந்த சாதத்தை அவசரமாக அவருக்கு அளித்தார். பிறகு உள்ளே சென்று பானை சாதத்தை கிளர முயன்ற போது சாதம் முழுமையாக வெந்திருந்ததாம், மகான் செய்த அற்புதம் இது என்கிறார்கள்.  

திருமாங்கல்ய தாரணம்  

பின்னர் இவர் திகம்பரராகி தன்னுடைய ஆடைகளை கழற்றி எறிந்து விட்டு, தனக்குரிய பொருட்களை எல்லாம் தானம் செய்துவிட்டு  திரிய ஆரம்பித்தார். இவர் திருவொற்றியூர், வேளச்சேரி மற்றும் சென்னையின் சில இடங்களில் தமது சித்துகளை  செய்தார். அனுமாஷ்யமான காரியங்களை செய்து   பலருக்கு அனுக்ரகும் செய்தார். சென்னையிலிருந்து வெல்லூருக்கு வந்தார் அங்கும் பல சித்துகளை செய்தார். பின்னர் . காரிவாகன சகாப்தம்  1772-ம் ஆண்டு கி.பி1850, சாதாரண வருடம், பங்குனி திங்கள், 27ம் நாள், புதன்கிழமை, பூர்வபட்சம் பிரதமை திதி ரேவதி நட்சத்திரம் கூடிய நன்னாளில் இவருடைய தலைமை சீடர் சித்தநாத ஸ்வாமிகள் கட்டிய சமாதி அடக்க குகையுள் சென்று பத்மாசனத்தில் அமர்ந்து தமது இச்சைப்படி ஞான யோக  வலிமையினால் ஒடுக்கம் பெற்றார். அவரது சீடர்கள் ஸ்வாமிகளின் திருமேனியை ஆகமமுறைப்படி அபிஷேகம், சோடஷோபசாரங்களுடன் பூசித்து அக்குகையை மூடி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தனர். தினமும் மூன்று கால பூசை நடத்தி வந்தனர்.



தீபாராதனை 

ஸ்ரீதோபா ஸ்வாமிகளின் ஜீவ சமாதி வேலூரை சேர்ந்த சைதாப்பேட்டை பகுதியில் உள்ளது. இன்றும் அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். 


இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்
                                                                                                                      


                                                                                                                              சுவாமி புறப்பாடு காட்சிகள் தொடரும்  .  .  .   .   .  .

No comments: