Monday, October 19, 2015

அன்னையின் நவராத்திரி - 6

ஆறாம்   நாள்  கொலு



முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள், மூன்றாம்நாள் ,  நான்காம்நாள்,    ஐந்தாம்நாள்


முத்து மாரியம்மன் 
 திருவேற்காடு கருமாரி அலங்காரம் 



நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை, அங்காள ஈஸ்வரியை, ஸ்ரீ வித்யா பீஜாக்ஷர ரூபிணியாக சாம்பரி என்ற பெயரில் வழிபடுகின்றோம்.

*******************


திகேசவப்பெருமாள் கோவில் 
மயூரவல்லித்தாயார் கண்ணாடி பல்லக்கில் கொலு

பிரதி வெள்ளியன்று  மயூரவல்லித்தாயாருக்கு சிறப்பு ஸ்ரீஸுக்த வில்வ அர்ச்சனை நடைபெறுகின்றது அதில் கலந்து கொள்பவர்களின் குறைகளை தாயார் தீர்த்து வைப்பது கண்கூடு. 

இன்று சஷ்டியன்று தான் வங்காளத்திலே மஹா கைலாசத்திலிருந்து, பூலோகத்திற்கு துர்க்கா தேவி இறங்கி வந்து அருள் பாலிக்கும் துர்க்கா பூஜை தொடங்குகின்றது.

***********************


வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன் 
பத்மாசனி அலங்காரம் 

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை ஏழு வயது குழந்தையாக பாவித்து சண்டிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்டமுண்ட விநாசினீம் தாம்
சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

(சண்ட முண்டர்களை அழித்து மகா பாதகங்களை எந்த சக்தி நிவர்த்தி செய்கிறதோ அந்த சண்டிகையாகிய சக்தியை வணங்குகிறேன்.) 


*******************



காத்யாயினி துர்க்கா

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னை நவதுர்கைகளில் அன்னையை காத்யாயன முனிவரின் தவத்திற்கு இணங்கி அவரின் மகளாக அவதரித்த காத்யாயினியாக வழிபடுகின்றோம். அன்னை மும்மூர்த்திகள் மற்றும் சகல தேவர்களின் காந்தியால் உருவானாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படியாக கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.

சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |
காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||

(திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

*****************************


ரோக நிவாரணி அஷ்டகம்

நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே ||
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (6)

*******************************



மயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்
ஸ்ரீநிவாசப்பெருமாள் தாயாருடன் 
கண்ணாடி அறை சேவை 

துக்க நிவாரணி அஷ்டகம்

எண்ணியபடிநீ யருளிட வருவாய்
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (6)


**************************

திருமயிலையில் நவராத்திரியின் ஆறாம் நாள் இரவு கற்பகாம்பாள் இராஜராஜேஸ்வரியாக கொலு தர்பார் தரிசனம் தந்தருளுகின்றாள். மனிதர்களுக்குள்  உயர்ந்தவன் ராஜன். அந்த ராஜாக்களுள் உயர்ந்தவன் இராஜராலேஸ்வரனான சக்கரவர்த்தி. அவ்வாறே தெய்வத்துள் உயர்ந்தவள் எம் சக்தி மாதா என்று உணர்த்துவது போல ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக எழிற்கோலம் காட்டுகின்றாள் கற்பகவல்லி. 

******************************



முத்து மாரியம்மன் ஆலயம்
திருவாரூர் கமலாம்பாள் அலங்காரம்


ஜபோ ஜல்பஷ் ஷில்பம் ஸ்கலமபி முத்ராவிரசனா
கதி: ப்ரதாக்ஷிண்ய க்ரமண மஷநாத்யாஹுதிவிதி:
பரணாம: ஸம்வேஷ: ஸுகமகில மாத்மார் பணத்ருஷா
ஸபர்யா பர்யாயஸ்தவ பவது யன்மே விலஸிதம்.


பொருள்: பகவதி! எனது பேச்செல்லாம் உனது ஜபமாகவும், எல்லா செயல்களும் முத்திரைகளாகவும், எனது நடை பிரதக்ஷிணமாகவும், எனது உணவு உனக்கு செய்யும் ஆஹுதியாகவும், நான் படுத்துக் கொள்வது மற்றும் எனக்கு சுகத்தை கொடுக்கக் கூடியவை எல்லாம் உனக்கு செய்யும் பூஜைகளாகவும் ஆகட்டும்.

**********************
திருமயிலையில் இன்று திருநாட்டியத்தான்குடி சிறப்பு வரலாறு.  சுந்தரருடன் விளையாட சிவபெருமான் நெல் வயலுக்கு சென்று நாற்று நட்ட திருவிளையாடல்  



அபிராமி அம்மை பதிகம்  1

கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னிற்
கணப்போதும் அர்ச்சிக்கிலேன்

கண் போதினால் உன் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்

முப்போதில் ஒரு போதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்

முன் போதுவார் தமதுபின் போத நினைகிலேன்
மோசமே போதுகின்றேன்

மைப்போதகத்திற்கு நிகர் எனப்போதும் எரு
மைக்கடா மிசை ஏறியே

மாகோர காலன் வரும்போது தமியேன்
மனம் கலங்கித் தியங்கும் 

அப்போது வந்து உனது அருட்போது தந்தருள்!
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (10)

பொருள்:  கையில் மலர்களைக் கொண்டு உனது திருவடித்தாமரையில் ஒரு நொடிப்போது கூட அர்ச்சனை செய்யவில்லை. கண்களால் உன் தாமரை போன்ற திருமுகத்தை தரிசிக்கவில்லை.  மூன்று நேரங்களில் ஒரு நேரம் கூட என் உள்ளத்தில் உன்னை  நினைத்து , உன் ஆலயம் செல்லும் அன்பர்கள்  பின் செல்ல நினைக்கவில்லை. ைதனால் மோசமே போகின்றேன்.  கரிய யானை போன்ற எருமைக்கடா மீது ஏறி மகா கோரமான யமன் என் முன் வரும் போது வந்து நிற்கும் போது அடியேன் மனம் கலங்கி தவிக்கும் போது  நீ வந்து  உன் அருள் என்னும் மலரைத்தந்து அருள வேண்டும், ஆதி க்டவூரில் உறைபவளே!, அமுதீசர் இடப்பாகம் அக்லாதவளே!, திருக்கரங்களீல் கிளியை தாங்கியவளே! அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமை அன்னையே!் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.  

இப்பாடலில் "போது" என்ற சொல்லை அரும்பு, மலர், காலம், பொழுது என்ற பல பொருட்களில் பயன் படுத்து தனது கவிதா விலாசத்தை காட்டுகின்றார் அபிராமி பட்டர், 
நாற்றுடன் அம்பாள்
மண்வெட்டியுடன் சிவபெருமான்
ஆச்சரியமாக பார்க்கும் எம்பிரான் தோழர் சுந்தரர் 

மிகையும் துரத்த வெம்பிணியும் துரத்தமத
வெகுளி மேலும் துரத்த

மிடியும் துரத்த நரைதிரையும் துரத்த நனி
வேதனைகளும் துரத்தப்

பகையும் துரத்த வஞ்சனையும் துரத்த முப்
பசி என்பதும் துரத்தப்

பாவம் துரத்த அதி மோகம் துரத்தமுழு
நாணும் துரத்த வெகுவாய்

நாவறண்டோடி இருகால் தளர்ந்திர்டும் என்னை
நமனும் துரத்துவானோ?

 அகில உலகங்களுக்கு ஆதார தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (11)

அம்மையப்பருடன் பூத கணங்கள் நாற்று நடும் காட்சி

பொருள்:  துன்பம், கொடிய நோய், கோபம் மதம், வறுமை, மூப்பு, தளர்ச்சி, மிக்க வேதனைகள், பகை, சூழ்ச்சி, பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, பாவம், மோகம், மலங்கள், ஊழ்வினை, வெட்கம் இவையெல்லாம் அடியேனை துரத்துகின்றன.  இதனால் நாக்கு வறண்டு, ஓதியோடிக் காலகளும் தளர்ந்து போயின. இந்நிலையில் எமனும் வந்து எனை துரத்துவானோ?  அவ்வாறு துரத்தினால் நீயே கதி! அனைத்து உலகங்களுக்கும் ஆதாரம் என்று சொல்லப்படும் கடவூரின் வாழ்வே!  அமுதீசர் இடப்பாகத்தை ஒரு போதும் அகலாதவளே! கிளியை  தனது இடக்கரத்தில் ஏந்தியிருப்பவளே!  அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவளே! அபிராமி அன்னையே!  என்று  உலக மக்கள் படும் அவஸ்தைகளை பட்டியல் இட்டு இவற்றிலிருந்து  காப்பாற்ற வேண்டுகிறார் அபிராமி பட்டர்.   

அபிரமி அம்மை பதிகம் -1 நிறைவுற்றது. 

(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)

                                                                                                                            அம்மன் அருள் தொடரும். . . . .. ... 

No comments: