Tuesday, October 13, 2015

அன்னையின் நவராத்திரி - 1

முதல்நாள் தரிசனம் 

திருமயிலை கற்பகவல்லி
அன்னவாகனத்தில் கொலு

நவராத்திரி காலம் அம்பாளை வழிபட மிகவும் உகந்த காலம் ஒரு வருடத்தில் நான்கு ருதுகளில் ஒவ்வொரு நவராத்திரி வருகின்றது என்றாலும் சரத் ருதுவில் வரும் சாராதா நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. வீட்டளவில் நமது தமிழ் நாட்டில் கொலு வைத்தும், திருக்கோவில்களில் உற்சவர் அம்மன் பல் வேறு கோலங்களில் சிறப்பு அலங்காரத்தில் கொலு இருக்கின்றாள். மூலவர் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது. 
அலைமகள் கொலு

பொதுவாக முப்பெருந்தேவியரான வீரத்திற்குரிய  மஹாதுர்கா, செல்வத்திற்குரிய மஹா லக்ஷ்மி, கல்விக்குரிய மஹா சரஸ்வதி என்று மூன்று மூன்று நாட்களாக அன்னையை வழிபடுவது  ஒரு முறையாகும். அநேகர் இவ்விதமாகவே அன்னையை இந்த நவராத்திரி சமயத்தில் வழிபடுகின்றனர். 

திருக்கயிலை நாதர்

சில மேம்பட்ட சாதகர்கள் தினம் ஒவ்வொரு அம்மனின் அம்சமாக வழிபடுகின்றனர். இவற்றைப் பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அவற்றை மீண்டும்  பல அன்பர்களுக்காக பதிவிடுகின்றேன். இத்துடன் இவ்வருடம் அம்மனின் பல்வேறு அலங்காரங்களயும் தரிசிக்க வாருங்கள் அன்பர்களே. 

சில இடங்களில் அன்னையை நவ கன்னிகையாகவும் வணங்குகின்றனர், சில இடங்களில் அன்னையை நவ துர்க்கையாகவும் வணங்குகின்றனர்.

10 வயது நிரம்பாத கன்னியையாக நாள் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவகன்னிகை வழிபாடு. அது போல பார்வதி தேவியின் பல்வேறு நிலைகளில் அம்மையை துர்கையாக வழிபடுவது நவதுர்கா வழிபாடு.

நவ கன்னிகையாக வழிபடும் போது

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி 

மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
 

நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி


ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா

ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா

ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா என்று வணங்குகின்றோம்.



நவ துர்காவாக வழிபடும் போது அன்னையை, அகிலாண்ட நாயகியை, ஆதி பராசக்தியை, ஜகத்ஜனனியை, மஹா த்ரிபுரசுந்தரியை

முதல் நாளில் - ஷைலபுத்ரி இரண்டாம் நாள் - பிரம்மசாரிணி மூன்றாம் நாள் - சந்தரகாந்தா

நான்காம் நாள் - கூஷ்மாண்டா

ஐந்தாம் நாள் - ஸ்கந்த மாதா ஆறாம் நாள் - காத்யாயனி 

ஏழாம் நாள் - காலராத்ரி
 

எட்டாம் நாள் - மஹா கௌரி


ஒன்பதாம் நாள் - சித்திதாத்ரி என்ற ரூபத்தில் வணங்குகின்றோம்.

பெருமிழலைக் குறும்பர்


 ஒரு சிலர் முதல் நாள் அன்னையை  ஆதி பராசக்தியை மூன்று வயது பாலையாக பாவித்து வழிபடுகின்றோம்.  அன்பர்கள் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியை மூன்று வயதுள்ள குழந்தையாக தங்கள் இல்லங்களில் வழிபடுவதால் சகல மங்களங்களும் பெருகும்.


ருத்ராட்ச சிவலிங்கம் 

கன்னியாக வழிபடும் போது நவராத்திரியின் முதல் நாளான இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம்.

குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.

1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் ||

(ஒரு குழந்தையைப் போல லீலா வினோதங்களைச் செய்பவளை, பிரம்மன் முதலான தேவர்களை, எந்த சக்தி தனது லீலைகளினால் சிருஷ்டிக்கிறதோ, அந்த குமரியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


ஷைலபுத்ரி துர்கா

நவதுர்கையாக வழிபடும் போது  முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம் ஷைலபுத்ரி துர்காவை.

வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் |
வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||
என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.
( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். )


ரோக நிவாரணி அஷ்டகம்

பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க் கையளே
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடிடுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடுஜோதி யான வளே |
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (1)

என்று ரோக நிவாரண அஷ்டகத்தின் முதல் பாடலைப் பாடி மனமுருக துர்க்கா தேவியை வழிபட்டு நன்மையடைவோமாக.

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய

துக்க நிவாரணி அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் தீர்த்திட சடுதியில் வந்திடும்
சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கனிமுகங்கண்டநல்
கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (1)



ருத்ராட்சங்களால் கோலம் 

யா தேவி ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:



சகல ஜீவ ராசிகளிலும் தாயின் ரூபமாக விளங்கும் அந்த ஜகன் மாதாவை (சந்தான லக்ஷ்மி ) வணங்குகிறோம்.


யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் சக்தி ரூபமாக உள்ளனளோ அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியை வணங்குகிறோம்.


யாதேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:



எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் லக்ஷ்மியுருவில் உள்ளனளோ அந்த மஹா லக்ஷ்மியை வணங்குகிறோம்.


யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


எந்த தேவியானவள் சகல உயிரினங்களிலும் புத்தி ரூபமாக உள்ளனளோ அந்த மஹா சரஸ்வதியை வணங்குகிறோம்.



திருமயிலை கற்பகாம்பாள் அன்னவாகனத்தில் கொலு



திருமயிலையில் நாம் எல்லோரும் உய்ய ஆடும் மயிலாய் உருவெடுத்து ஐயன் தாள் நாடி அர்சித்த நாயகி கற்பகாம்பாள் தினமும் ஒரு கோலத்தில் கொலு விற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். நவராத்திரியின் முதல் நாள் அன்ன வாகனத்தில் தரிசனம் தருகின்றாள். நீரிலிருந்து பாலை பிரித்திடும் பண்பு கொண்டது அன்னப்பறவை. அது போல பாவச்சேற்றில் உழலும் மாந்தர் பக்தியோடு அன்னையை துதிக்கும் போது , அவர்களின் பாவங்களை ஒதுக்கிவிட்டு, பக்தியை மட்டும் போற்றி அவர்களை உய்விக்கும் கருணை அன்னைக்கு உண்டு என்பதை உணர்த்தவே நவராத்திரியின் முதல் நாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகிறாள் விரை ம்லர் குழல் வல்லி மரை மலர் பத வல்லி விமலி கற்பகவல்லி. 



கற்பகவல்லியின் பின்னழகு
தாமரை மலர்களால் ஜடை அலங்காரம் 

ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இந்த ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தினால் அன்னை  ஆவாஹனம் செய்யப்பட்டு (வரவேற்கப்பட்டு) மானசீக தியானத்தின் மூலம் ஆசனம் அளிக்கப்படுகின்றாள்.

ல்லோலஉல்லஸித அம்ருத- அப்தி  லஹரீ-
 மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதே
 காதம்ப-வாட்-உஜ்ஜ்வலே  |
ரத்ன-ஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-மத்யே விமான
 உத்தமே சிந்தா-ரத்ன விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே   ||   1.
அலை பொங்கும் அமிர்தக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில்கற்பகச்சோலை சூழ்ந்த கதம்ப வனம் விளங்குகிறதுஅவ்வனத்தில் ஆயிரக்கணக்கில் இரத்தினத் தூண்கள் அமைந்த சபையின் நடுவில் சீரிய விமானத்தின் கீழே சிந்தாமணியால் வடித்த சிம்மாசனத்தை ஹே தாயேமனதிற் பாவிக்கிறேன். ( அன்னையே வந்து அமர்ந்து எங்களின் மானசீக பூஜை ஏற்று அருள் புரிவாயாக)

 பொருள்: காதம்பவாடீ- கதம்பமரச் சோலை

அன்னை வந்து   அமர்ந்தவுடன்    அவளது   திருக்கோலத்தை வர்ணித்து நம் மனத்தில் இருத்தும்  தியானமே இந்த இரண்டாவது ஸ்லோகம்

ணாங்க-அநலபானு-மண்டல-லஸத்-
 ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
பால-அர்க-த்யுதி-பாஸுராம் கர-தலை:
 பாச அங்குசௌ  பிப்ரதீம் |
சாபம் பாணம்-அபி ப்ரஸன்ன-வதனாம்
கௌஸும்ப-வஸ்த்ர-அந்விதாம்
 தாம் த்வாம் சந்த்ரகலா-வதம்ஸ மகுடாம்
 சாரு-ஸ்மிதாம் பாவயே II         2.

சந்திரன், அக்னிசூர்ய மண்டலங்கள்   விளங்கும்   ஸ்ரீசக்ரத்தின்   நடுவில் வீற்றிருப்பவளும்இளம்   சூரியன்   போன்று  ஒளிர்பவளும்திருக்கரங்களில் பாசம்அங்குசம்வில்,  அம்புஇவற்றை தரித்தரிப்பவளும்மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன்காவி வஸ்திரம் அணிந்தவளும்சந்திரபிறை அலங்கரிக்கும் கிரீடம்   அணிந்தவளும்அழகிய புன்னகை தவழும்  முக மண்டலத்துடன் கூடிய  உன்னை மனதில் காண்கிறேன்.
ஏணாங்க: - சந்திரன்

நாம் பூஜையின் போது செய்யும் மற்ற உபசாரங்களை மானசீகமாக  செய்வது போல  மற்ற ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது ஸ்லோகம்  ஆசமநம் அளிப்பதை விளக்குகின்றது.

சாந-ஆதிபதம் சிவ-ஏக-பலகம்
  ரத்ன ssசனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதி-பரிதை:
 அர்க்யம் -ரத்ன-அக்ஷதை: I
சுத்தைஆசமநீயகம் தவஜலை:
 பக்த்யா மயா கல்பிதம்
காருண்ய அம்ருத வாரிதே தத் அகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம் II        3.
ஈசானன்பிரம்மாவிஷ்ணுருத்ரன் முதலியவர்களை கால்களாகவும்சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட  நல்ல இரத்தினமய சிம்மாசனம்ஹே அன்னையேஉனது மகிழ்ச்சிக்காக அமையட்டும்குங்குமம்சந்தனம்இவை கலந்த பாத்தியமும்,(திருப்பாதத்தில்) ரத்தினமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும் (திருக்கரங்களில்)சுத்த ஜலத்தால் ஆசமநீயகமும் (திருமுடியில்) நான் பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்ஹே கருணைக் கடலே!   இவையெல்லாம் உனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.



ஈசானாதிபதம்-  ஈசானன் முதலியவர்களை கால்களாகவும், 
சிவைக பலகம்- சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட (இரத்தின சிம்மாசனத்தில்)

அபிராமி அம்மை பதிகம்

காப்பு

தூய தமிழ் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் 
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் 
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் 

தாழாத கீர்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லா வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!   (1)

பொருள்: திருக்கடவூரில் வாழ்கின்ற அபிராமி அம்மையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அருளைப் பொழிபவளே! அமிர்தகடேஸ்வரரின் வாம பாகம் அகலாமல் இருக்கும் அன்னையே!  பாற்கடலில் யோக நித்திரை கொள்ளூம் மாயன் திருமாலின் தங்கையே!  உன்னை வணங்கும் அன்பர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கு அம்மா என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். 


காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்

கர்ண குண்டலுமு(ம்) மதிமுக மண்டலம் நுதற்
கத்தூரிப்பொட்டும் இட்டுக்

கூர் அணிந்திடுவிழியும் அமுத மொழியும் சிறிய 
கொவ்வையின் கனி அதரமும்

குமிழ் அனைய நாசியும் குந்தநிகர் தந்தமும்
கோடு சோடான களமும்

வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணி நூபுரப்பாதமும்

வந்து எனது முன்னின்று மந்தகாசமுமாக 
 வல்வினைகள் மாற்றுவாயே

ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை 
ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!   (2)

பொருள்: வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கும் மணி மாலைகள் பூண்ட அபிராமி அம்மையே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம்  அகலாதவளே!. கிளியைத் திருக்கரத்தில் எந்தியவளே! அருளை வழங்கும் அபிராமியே!  மேகம் போன்ற கரிய கூந்தல், அதில் மலர் மாலைகள், வில் போன்ற கரிய புருவங்கள், காதுகளில் விளங்கும் குண்டலங்கள், அழகிய திருமுகத்தில் கஸ்தூரிப்பொட்டு,  அமுத மொழி, கொவ்வைப்பஜம் போன்ற இதழ்கள், குமிழம்பூ போன்ற நாசி,  சங்கு போன்ற கழுத்து, தளராத திருத்தனங்கள்,  மெல்லிய இடையில் மேகலை , திருப்பாதங்களில் நூபுரங்களுடன் அடியேன் முன் புன்னகையுடன்  தோன்றி    என் கொடிய வினைகளை அகற்றி ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். 

(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)
*************************

நமது பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தீமையை நன்மை அழித்து எல்லாரும் சுகமாக விளங்குவதை குறிக்கும் வகையில் நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. ஒன்பது நாட்கள் அம்மன் தவம் இருந்து பத்தாம் நாள் விஜதசமியன்று  தீமையாம் மகிஷனை வதம் செய்ததை கொண்டாடுகிறோம். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தசரா என்று சிற்ப்பாக கொண்டாடுகின்றனர், இங்கு சாமுண்டீஸ்வரி இந்த பத்து நாட்களிலும் போற்றி வணங்கப்படுகின்றாள். கேரளாவில் விஜயதசமியன்று  அக்ஷராப்பியாசம் என்று குழந்தைகளுக்கு முதன் முதலில்  கல்வியை துவக்குகின்றனர். குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவு கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வட நாட்டில் ஒரு சாரார் கடுமையான விரதம் இருந்து அன்னையை நவ துர்காவாக வழிபடுக்ன்றனர்.  ஒரு சாரார் இதை இராம்லீலாவாக , இராமர், இராவணன வெற்றி கொண்டதை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் இராமாயணம் பாராயணம் செய்கின்றனர் பத்தாம் நாள் விஜய தசமியன்று, இராவணன், மேகநாதன்( இந்திரஜித்), கும்பகர்ணன் பொம்மைகளை கொளுத்துகின்றனர். வங்காளம் முதலான கிழக்குப் பகுதியில் துர்க்கா பூஜை மிகவும் சிறப்பு. சஷ்டியன்று  அன்னை துர்க்கை திருக்கயிலாயம் விடுத்து பூலோகத்திற்கு தன் அன்னை இல்லத்திற்கு தன் மகள்கள் மஹா லக்ஷ்மி மற்றும் மஹா சரஸ்வதி, மகன்கள் கணேசன் மற்றும் கார்த்திகேயன்(முருகர்) மற்றும் கணேசரின் மனைவி அபராஜிதாவுடன் எழுந்தருளி அருள் பாலித்து பூஜையை ஏற்றுக்கொள்கின்றாள். விஜய்தசமியன்று பின்னர் அன்னை திருக்கயிலாயம் திரும்பிச்செல்கின்றாள். 

நவராத்திரியின் போது தேவி மகாத்மியம் என்றும் துர்கா சப்தஸதீ என்றழைக்கபப்டும் ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதீ, அபிராமி அந்தாதி  மற்றும் அன்னையின் பல்வேறு தோத்திரங்களை படிப்பது மிகவும் உத்தமம். 
அம்மன் அருள் தொடரும். . . . .. ... .

No comments: