Saturday, October 17, 2015

அன்னையின் நவராத்திரி - 5

                                 
 ஐந்தாம்   நாள்  கொலு



முத்து மாரியம்மன் 
காஞ்சி காமாட்சியம்மன்  அலங்காரம்

அம்மனின் திருவடி நிழலில்  காஞ்சி மஹாப்பெரியவர்  அமர்ந்து ஆசீர்வதிக்கும் அழகைக் காணுங்கள் அன்பர்களே. 

இந்த முத்துமாரியம்மன் ஆலயம் எங்கிருக்கின்றது என்று நினைத்தீர்களா? 


தருமமிகு சென்னையில் வெங்கட நாராயணா சாலை  தென் மேற்கு போக் சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. இந்த  வருட (2015) நவராத்திரி அம்மன் அலங்காரங்களுக்கான அட்டவணை இது. 

****************************

காஞ்சி காமாக்ஷியம்மன் 

நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் அம்பிகையை மாத்ருகா வர்ண ரூபிணியாக வணங்குகின்றோம். இவ்வாறூ சதாசக்ஷி என்று அன்னை ஆதி பரா சக்தியை ஆராதிக்க பொருளாதார துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

**************************


அங்காள பரமேஸ்வரி ரிஷப வாகன கொலு 

நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னையை ஆறு வயது குழந்தையாக பாவித்து காளிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

காளீகா லயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம் ஸ சராசரம்

கல்பார்ந்தே ஸமயே யாதாம் காளீகாம்யஹம் ||

(அசையும் பொருள் அசையாப் பொருள் எல்லாவற்றையும் பிரளய காலத்தில் எந்த சக்தி சம்ஹாரம் செய்கிறதோ அந்தக் காளியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

*******************


நவராத்திரியின் ஐந்தாம் நாள் அன்னை நவதுர்கைகளில், அழகன் முருகனின் அன்னையாக ஸ்கந்தமாதாவாக வணங்கப்படுகிறாள். முறையற்ற தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துன்புற்றனர். அந்த அசுர சக்தியை அழிக்க ஒரு தலைமகன் தோன்ற வேண்டியதால் சிவ பார்வதி திருமணம் நடந்தது. முருகனும் தோன்றினான்.

ஸ்கந்தமாதா அக்னி ஸ்வரூபமாக இருந்து உலகை காக்கின்றாள் . சிம்ம வாகனத்தில் தாமரையில் பத்மாசனமீட்டு அமர்ந்து ஒரு கரத்தில் ஸ்கந்தனை ஏந்திய வண்ணம், இருகரங்களில் தாமரையுடன், நான்காவது அருள் பொழியும் கரத்தோடு காட்சி தரும் ஸ்கந்தமாதாதேவி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் நல்குகிறாள் .

சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட போது தனது தளிரன்ன கரங்களினால் அவரது கண்டத்தை தடவி விடம் அங்கேயே தங்கச் செய்தவள் ஸ்கந்தமாதா துர்கா. அன்னை மஞ்சள் வர்ணத்தவளாக வணங்கப்படுகின்றாள். அம்பாளின் ஸ்லோகம்

ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சிதகரத்வயா |
சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்த மாதா யசஸ்விநீ ||

(பொருள்: சிம்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் தாமரை மலரை ஏந்தியுள்ள ஸ்கந்தனின் அன்னையான ஸ்கந்தமாதா துர்கா அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)


******************


திரௌபதியம்மன் கொலு


ரோக நிவாரணி அஷ்டகம் 

திருமக ளானாய் கலைமக ளானாய்
மலைமகளானாய் துர்க் கையளே |
பெருநிதி யானாய் பேரறி வானாய்
பெருவலி யானாய் பெண்மையளே ||
நறுமலரானாய் நல்லவளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (5)

********************



தக்ஷிணா முர்த்தி தேவி


துக்க நிவாரணி அஷ்டகம்

பஞ்சமி பைரவி பர்வதபுத்திரி
பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனைக்
கொடுத்த நல்குமரியளே

சங்கடந் தீர்த்திடச் சமரது செய்தநற்
சக்தியெனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (5)


**************





நவராத்திரியின் ஐந்தாம் நாள் இரவு கற்பகவல்லி  சிவபெருமானுக்குரிய ரிஷப வாகனத்தில்  மஹேஸ்வரியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். அம்மனின் வாகனம் சிம்மம் ஆயினும் ஈஸ்வரியாக சாந்த சொரூபியாக அருள் பாலிக்கும் போது அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவாள். இது பக்தர்களை காப்பதை யும், ஈசனின் பெருமையில் அன்னையும் நீக்கமற நிறைந்தவள் என்பதைக் உறிக்கின்றது. 




ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 


கற்பகாம்பாள் பத்மாசனி  கொலு 

அம்மனின் பின்னழகு
இரண்டு ஜடைகளுடன் அலங்காரம்

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

14-17 ஸ்லோகங்கள்


 குடை- சாமரம் முதலியவற்றால்  உமையம்மைக்கு  உபசாரங்கள் செய்வித்து மரியாதை செய்வதை இந்த பதினான்காவது ஸ்லோகத்தில் ஜகத்குரு சங்கரர் அருளுகின்றார்.

க்ஷ்மீ: மௌக்திக-லக்ஷ-கல்பித-
 ஸித:-சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ  ரதி: ச சாமர-வரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணாம்-ஏண-விலோசனா:ஸுமனஸாம்
 ந்ருத்யந்தி தத் ராகவத்-
பாவை: ஆங்கிக-ஸாத்விகை:
 ஸ்புட-ரஸம் மாத:! தத் ஆலோக்யதாம்  || 14

ஹே அன்னையேலக்ஷ்மிதேவிபல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள்.  பிரேமையால் இந்த்ராணியும்ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர்ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள்.  மான் விழி படைத்த மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையொட்டி கை கால் அசைவுகளாலும்ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர்.  அன்னையே இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!
ஸிதச்சத்ரம்-வெண்குடை, ரஸாத்-பிரேமையால், ஏண விலோசனா ஸுமனசாம்: மான்விழி படைத்த  தேவ கன்னிகைகள் ஸ்புடரஸம்- உள்ளத்தின் உணார்ச்சிகளை வெளிப்படுத்தும்.

மானசீக பூஜையின் நிறைவாக, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து  மலையரையன் பொற்பாவையை வணங்குவதை இந்த பதினைந்தாவது ஸ்லோகத்தில் குரு புங்கவர் சங்கர தேசிகர் அருளுகின்றார். 



ஹ்ரீம்கார-த்ரய-ஸம்புடேன
 மனுனா உபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யை:-லக்ஷ்ய-தனோ!  தவ ஸ்துதி-விதௌ
 கோ வா க்ஷமேத அம்பிகே  I
ஸல்லாபாஸ்துதயப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார: ஏவ-Sஸ்து தே
ஸம்வேசோ மனஸஸமாதி: அகிலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம் II 15
ஹே அம்பிகே! மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் நீஉபநிஷத்துக்களால் அறியத்தக்கவளும் கூடஉன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்ஆகவே,  நான்    பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும்நான் இங்கும் அங்கும்   சஞ்சரிப்பதே உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும்நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்துஉனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.
த்ரயீ – மூன்று வேதங்கள், ஸம்வேச – ஓய்வு, நித்திரை

இனி வரும் இரு ஸ்லோகங்களும் பலச்ருதியாக அமைந்தவை. அதாவது இந்த ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து தேவியை பூஜிப்பதால் உண்டாகும் பலன்களை குறிப்பிடுகின்றன.

ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 யபூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியத:
 தஸ்ய அமலம் ஸ்யான்-மன:
சித்த அம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதி-ஜா
 கேஹே ஜகத்-மங்கலா II  16.

எவரொருவர்தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோஅவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றிஅவர் ஹ்ருதயத் தாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள்பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள்வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.


இதிகிரிவரபுத்ரீ- பாத- ராஜீவ பூஷா
புவனம்- அமலயந்தீ ஸூக்தி- ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத- மகரந்த ஸ்யந்தினீ- இயம் நிபத்தாமதயது
கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா || 17
 கிரி ராஜா தனயை என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலை,  நறுமணத்தால் உலகை தூய்மை பெறச் செய்துஅன்னையின்  திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளதுசிவனின் திருப்பாதங்களின்  மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளதுஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.
 ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .

****************************


நான்காம் இரவு ஊஞ்சல் மண்டபத்தில் காய்கறிகளால் அலங்காரம்.



                                                     அபிராமி அம்மை பதிகம்                                                   

ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினில் போய்

நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர்
நவிற்றும் உபதேசம் உட்கொண்டு

ஈனம்தன்னைத் தள்ளிஎனது நான் எனும் மானம்
இல்லாமலே துரத்தி

இந்திரிய வாயில்களை இறுகப்புதைத்து நெஞ்சு
இருள் அற விளக்கு ஏற்றியே

வான் அந்தம் ஆனவிழி அன்னமே உன்னை என்
மனத் தாமரைப் போதிலே

வைத்து வேறே கவலை அற்றுமேல் உற்றுபர
வசமாகி அழியாதது ஓர்

ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (8)

பொருள்:  இப்பாடலில் பல அரிய கருத்துக்களை அபிராமிபட்டர் கூறியுள்ளார். சத்சங்கத்தின் மேன்மையும். ஐம்புலன்களையும் அடக்கி, ஆணவத்தை வென்று மனத்தாமரையில் அன்னையை அமரச்செய்வதே ஒரு ஆத்மசாதகன் முக்தி அடைய செய்ய வேண்டும் என்பதை அருமையாக காட்டுகின்றார் அபிராமி பட்டர். 

                                        
கண்ணாடியில் பிரதிபிம்பம் 


சலதி உலகத்திற் சராசரங்களை ஈன்ற
தாயாகினால் எனக்குத்

தாயல்லாவோ? யான் உந்தன் மைந்தன் அன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்

முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி என் முகத்தினை உன் 
முந்தாணையால் துடைத்து

மொழிகின்ற மழலைக்கு உகந்து கொண்டு இள நிலா
முறுவலும் பூத்து அருகில் யான்

குலவி விளையாடல் கண்டு அருள் மழை பொழிந்து அங்கை
கொட்டி வா என்று அழைத்துக்

குஞ்சரமுகன் குமரனுக்கு இளையன் என்று எனைக்
கூறினால் ஈனம் உண்டோ?

அலைகடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (9) 

பொருள்: அபிராமி அன்னையே! இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் ஈன்றெடுத்த அன்னை நீ அல்லவா? அப்படியென்றால் நீ எனக்கும் அன்னைதானே, எனது கவலைகளைப் போக்கி, உன்னுடைய முலைப்பாலை ஊட்டி, என் முகத்தை உன் முந்தானையால் துடைத்து, என் மழலைச் சொல் கேட்டு மகிழ்ந்து , மகிழ்ச்சியுடன் விளையாடுவது கண்டு மகிழ்ந்து, அருள் மழை பொழிந்து அன்பு திருக்கரங்களால் வா என்று அழைத்து , விநாயகனுக்கும், முருகனுக்கும் இளையவன் என்று கூறினால் அதனால் தங்களுக்கு ஒரு தாழ்வு ஏற்படுமோ? . அலைகள் நிறைந்த   கடலில் தோன்றிய தெவிட்டாத அமுதமே! ஆதி கடவூரில் உறைபவளே ! அமுதீசர் இடப்பாகம் அகலாத அனையே! கிளியைத் திருக்கரத்தில் ஏந்தியவளே!  அருள் புரியும் அபிராமியே! என்று உரிமையுடன் வேண்டுகின்றார் அபிராமிபட்டர்.   

(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)
*************************


                                                                                                                                                                                                                                                                                                                                                     அம்மன் அருள் தொடரும். . . . .. ... 


No comments: