Monday, July 28, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 3

சைதை காரணீஸ்வரர் கிராத வேடம்


இந்த வருடம் மாசி பௌர்ணமி திதி முதல் நாள் அன்றும் மக நட்சத்திரம் மறு நாளும் வந்தது இது வரை தாங்கள் பார்த்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் பௌர்ணமியன்று நடந்தது இப்பதிவில்  சென்னை சைதாப்பேட்டையின் இரு  ஆலயங்களின் மாசி மக அருட்காட்சிகள் ஆகும். 



காரணீஸ்வரர் மாசி மகத்தன்று கிராத வேடத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றர். அது என்ன கிராதக வேடம் என்று யோசிக்கின்றிர்களா? அர்ச்சுனனுக்கு பாசுபதஸ்திரத்தை வழங்கிட சிவபருமான் வேடுவ வேடம் கொண்டும் உமையம்மை உடன் வேடுவச்சி கோலம் வருவதுதான் இந்த கிராதக வேடம். சிவபெருமானது 25 மூர்த்தங்களுள் கிராத மூர்த்தமும் ஒன்று. 

இதையே மாணிக்க வாசகர் தமது போற்றித் திருஅகவலில் 

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்

பொருள்:  ( அர்ச்சுனனுக்கு  பாசுபதாஸ்திரம் அருள) வேடுவ உருவம் கொண்டு கையில் பினாகம் ஏந்தி முள் முருக்க மலர்  போன்ற சிவந்த உதடுகளை உடைய உமையம்மையுடன் எழுந்தருளினார் என்று பாடுகின்றார். 

கிராதன் என்றால்   ஈவு இரக்கம் இல்லாமல் சிறிது கூட இல்லாமல் கொலை செய்யும் வேடன் என்று பொருள். இங்கு சிவபெருமான் அர்ச்சுனனுக்கு அருள் இந்த் கொலையே செய்யும் வேடுவர் வேடம் தாங்கி உமையம்மையை வேடுவச்சி ஆக்கி அர்ச்சுனன் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் இடத்திற்கு வருகின்றார் நான்கு வேதங்களையே நாய்களாககி கூட்டிக்கொண்டு வருகின்றார். 

அதே சமயம் துரியோதனால் அர்ச்சுனனைக் கொல்ல அனுப்பப்பட்ட   மூகாசுரன் பன்றி வடிவம் எடுத்து அர்ச்சுனை தன் கோரைப் பற்களால் கொல்ல பாய்ந்து ஓடி வருகின்றான். இருவரும் ஒரே நேரத்தில் அம்பு எய்கின்றனர். மூகாசுரன் மாண்டான். ஆனால் வேடுவனுக்கும் அர்ச்சுனனுக்கும் சர்ச்சை துவங்குகின்றது. முதலில் விற்போர்  இருவரும் சரமாரியாக அம்புகளை  விடுத்து   போரிடுகின்றனர்.  இதையே அன்பர்கள் "விஜயன் வில்லால் அடித்தான், சாக்கியன் கல்லால் அடித்தான்"   என்று கொண்டாடுகின்றனர். வேடுவனாக வந்த சிவபெருமான் அர்ச்சனுடைய காண்டீபத்தை உடைக்க பின்னர் இருவருக்கும் மல்யுத்தம் துவங்குகின்றது. தன் திருமேனி ஸ்பரிசம் அர்ச்சுனனுக்கு கிடைக்க அந்த பரமகருணாமூர்த்தி செய்த திருவிளையாடல் இது. 

பின்னர் சிவபெருமான் உண்மைக் கோலம் காட்டி அவனை காக்கவே தான் இவ்வடிவத்தில் வந்ததை உணர்த்தி பாசுபதாஸ்திரத்தையும்  வழங்குகிறார்.    




காரணீஸ்வரத்தில் மாசி மகத்தன்று காலை சுமார் பத்து மணி அளவில் சந்திரசேகரர் சன்னதி தெருவில் உள்ள செங்குந்த விநாயகர் கோவிலுக்கு எழுந்த்ருளுகிறார். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெறுன்றது. பின்னர் இரவு சுவாமி கிராத மூர்த்தி  வேடத்தில் அருட்காட்சி தந்து வீதி உலா வருகின்றார்.   


”கொத்தலர் குழலியோடு விசயர்க்கு நல்கு
 குணமாய வேட விகிர்தன் ”


 என்று  திருஞான சம்பந்தர் போற்றிய வேட உருவைக் கண்டு களியுங்கள்.


அடுத்து தாங்கள் காண்பது செங்குந்த கோட்ட சிவசுப்பிரமணிய சுவாமியின் மயில்வாகன சேவை ஆகும்.  இந்த அலங்காரத்தின் சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ள அடுத்த படங்களைப் பாருங்கள்.






ஆம் அன்று ஓம் என்னும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை என்பதால் நான்முகனைக் குட்டி சிறையில் அடைத்து அந்த மெய்ப்பொருளை  தகப்பனுக்கே உபதேசம் செய்த தகப்பன்சுவாமி இங்கே ஓம் என்னும் பிரணவத்தின் இதையே ஓம்கார சொருபமாக  பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  

ஆமாம் பிரணவத்தின் பொருள்தான் என்ன? "ப்ர" என்றால் விசேஷமானது. "நவம்" என்றால் புதுமை என்றும் ஒரு பொருள். அதாவது சிந்திக்க, சிந்திக்க - அனுபவிக்க அனுபவிக்க புத்தம் புதிய  சிறப்பான உண்மைகளை உணர்த்துவது பிரணவம் . என்றும் வாடாமல், காலத்தால் தேயாமல் எப்போதும் புதுமையாகவே இருக்கும் ஆன்மதத்துவம்தான் பிரணவம் என்பார் வாரியார் சுவாமிகள். 





 மிக்க  நன்றி

கோமதி அரசு அம்மா


7 comments:

கோமதி அரசு said...

வணக்கம் , வாழ்க வளமுடன். உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விருது இருக்கிறது. அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

கோமதி அரசு said...

http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.html
என் வலைத்தள முகவரி.
அன்புடன்
கோமதிஅரசு

S.Muruganandam said...

//பன்முக திறமைகள் உடையவர்கள்:-

முருகானந்தம் சுப்பிரமணியன் அவர்கள் , தன் வலைப்பூவை ஆனந்த தாண்டவநடராஜமூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ என்கிறார்.
ஆன்மீக யாத்திரை போக விரும்புவர்கள் இவரது வலைத்தளத்தைப் படித்துப் பயன்பெறலாம்.

என்று கூறி versatile blogger என்று விருதும் கொடுத்த கோமதி அம்மாவிற்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

விருதைப் பெற்றுக் கொண்டு உங்கள் தளத்தில் அதை போட்டுக் கொண்டமைக்கு நன்றி.

ஆன்மீக பரப்பும், கடவுள் சிந்தனை உள்ளவர் என்பதில் இந்த விருதை அளித்து மகிழ்ந்தேன்.

மேலும், மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

http://mathysblog.blogspot.com/2014/09/blog-post_28.html
ஆல்யங்களில் நவராத்திரி விழா என்று புது பதிவு என் தளத்தில் முடிந்த போது பாருங்கள்.
நன்றி, வணக்கம்.

S.Muruganandam said...

தங்களை கௌரவிக்கவே விருதை ஒப்புக்கொண்டேன் அம்மா.

S.Muruganandam said...

தங்களின் நவராத்திரி அனுபவங்கள் அருமை அருமை.