Tuesday, December 25, 2012

சிதம்பரத்தை சுற்றியுள்ள சிவத்தலங்கள் - 2

திருகழிப்பாலை (சிவபுரி)



ஆனந்த கூத்தரின் ஆருத்ரா தரிசன சமயத்தில்  அடுத்து நாம் தரிசிக்க இருக்கும் தலம் திருக்கழிப்பாலை. மூவராலும் பாடல் பெற்ற இத்தலம் முன்பு கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் காரைமேடு என்னும் இடத்தில் இருந்தாம். ஒரு சமயம்  கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கு திருக்கோயிலை முற்றிலும் சேதப்படுத்திவிட்டது. பின்னர்  படுகை முதலியார் குடும்பத்தில் திரு. பழநியப்ப முதலியார் என்பவர் சிவபுரிக்குத் தெற்கில் கோயில்கட்டி அதில் கழிப்பாலை இறைவரையும், அன்னையையும், ஏனைய பரிவார தேவதைகளையும் எழுந்தருளுவித்துள்ளார். சிவபுரியில் இருந்து சுமார் ½ கி.மீ தூரத்தில் தற்போது இந்த ஆலயம் உள்ளது. பாலையப்பர் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது

இறைவன் - பால்வண்ண நாதேஸ்வரர்.
இறைவி - வேதநாயகி.
தல மரம்: வில்வம்
தீர்த்தம்: கொள்ளிட நதி
மூவராலும் பாடப் பெற்ற தலம்
சோழ நாட்டு (வடகரை) 4வது தலம் 

 வான்மீகி முனிவர் பூசித்துப் பேறு எய்தினர். இத்தலத்திற்கு ஞானசம்பந்தரது பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்து, சுந்தரரது பதிகம் ஒன்று ஆக மொத்தம் எட்டுத் திருப்பதிகங்கள் இருக்கின்றன. இவற்றுள் திருநாவுக்கரசர் திருவாய் மலர்ந்துள்ள ``வனபவள வாய்திறந்து`` என்று தொடங்கும் அகப்பொருள்துறைகள் அமைந்த பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம்  இராஜகோபுரத்திற்கு வெளியிலேயே ஒரு நந்தி தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நந்தியின் தலை திரும்பியுள்ளது. இந்த நந்தி மூலவரைப் பார்க்காமல் பைரவரை பார்க்கின்றது என்று கூறுகின்றனர். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். ஒரே பிரகாரம்தான். சபையில்  நடராஜரின் சடைமுடி அள்ளி முடிந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். அருகில் சிவானந்தவல்லி, தில்லையைப் போலவே  தன் தோழிகளான லக்ஷ்மி, சரஸ்வதியுடன் அருள் பாலிக்கின்றாள்.

தல வரலாறு: கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. மனம் நொந்த முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, எம்பெருமான் உமையவளுடன் நேரில் அருட்காட்சி தந்து, முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.

பால்வண்ண நாதர் 

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே. –சுந்தரர் பாடிய பால்வண்ண நாதர் இன்றும் சதுர ஆவுடையில் பிறை வடிவத்தில் லிங்கம் உள்ளது. வெள்ளை லிங்கம், கருப்பு ஆவுடை. படத்தில் தெளிவாகக் காணலாம்.  லிங்கத்திற்கு பால் மற்றும் சந்தனம் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற அபிஷேகம் எல்லாம் ஆவுடையாருக்குத்தான். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.   கருவறையில் ஐயனுக்கு பின் புறம் அம்மையப்பர் நின்ற கல்யாண  கோலத்தில் அருளுகின்றனர், அகத்திய முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். அம்பாள் வேத நாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள். 

பைரவரை நோக்கி உள்ள நந்தி

இக்கோவிலின் சிறப்பு மூர்த்தி பைரவர் ஆவார், இவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், ஜடாமுடி, சிரசில் கபாலம், சிங்கப்பல், சர்ப்பத்தால் கோர்க்கப்பட்ட 24 மண்டை ஓட்டு மாலை, பூணூல், சர்ப்ப அரைஞாண் அணிந்து, இடக்கையில் சர்ப்பத்துடன்  திகம்பரராக தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர் கூட்டம் அன்று அலை மோதுகின்றது. இவரை வணங்கினால் காசியில் உள்ள கால பைரவரை வணங்கியதற்கு சமம்.

அம்பாள் சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடை உடுத்தி கால் சிலங்கை ஜல் ஜல் என்று ஒலிக்க கிராமத்தை வலம் வந்து காப்பதாகவும், அது போலவே பைரவரின் வாகனமான .நாயும் கிராமத்தை காப்பதாக இக்கிராம மக்கள் நம்புகின்றனர். சபரி மலை மேல் சாந்திகளின் குல தெய்வம் இந்த பால்வண்ணநாதர்தானாம். மேல் சாந்தி யார் என்பதை நடக்கும் குலுக்கல் இக்கோவிலில்தான் நடைபெறுமாம் ஆனால் சீட்டை இங்கு பிரித்து பார்க்காமல் சபரி மலை சென்று பிரித்து பார்க்கின்றார்களாம். 

இக்கோவிலிலும் கொடிமரம் கிடையாது எனவே பெரிந்திருவிழா கிடையாது. நவராத்திரி, சிவராத்திரி, விநாயக சதுர்த்தி முதலிய விசேஷ உற்சவங்கள் மட்டும் நடைபெறுகின்றன. சோழ மன்னர்களின் நான்கு கல்வெட்டுகள் உள்ளன.

புனலா டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்

உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

என்று சம்பந்தப்பெருமான் பாடிய பால்வண்ணநாதரையும், வேத நாயகி அம்பாளையும், பைரவரையும் வழிபட பாருங்கள் சிவபுரிக்கு.

3 comments:

ttpian said...

அது சரி, நடராசர் ஏன் ஒரு காலை தூக்கி இறக்காமல் இருக்கிறார்?

இன்னோரு காலில் உள்ள கொலுசும் களவு போய்விடும்.....

S.Muruganandam said...

அதெல்லாம் நம்மைப் போன்றவர்களுக்கு அருல் புரியத்தான்.

தன் கைகளினால் குஞ்சித பாதத்தை காட்டுகின்றார்,. இந்த பாதத்தை பிடித்துக்கொள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

போனால் என்ன அவருக்கு இல்லாததா?

S.Muruganandam said...

அதெல்லாம் நம்மைப் போன்றவர்களுக்கு அருல் புரியத்தான்.

தன் கைகளினால் குஞ்சித பாதத்தை காட்டுகின்றார்,. இந்த பாதத்தை பிடித்துக்கொள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார்.

போனால் என்ன அவருக்கு இல்லாததா?