Saturday, February 27, 2010

மாசி கடலாட்டு காணாதே போதியோ?

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்
கபாலீச்சரம் அமர்ந்தான் கடலாட்டு
காணும் அற்புத காட்சி

பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் நிறைந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய அற்புதம் செய்த போது பாடிய இப்பதிகத்தில் கபாலீஸ்வரப் பெருமானின் பல்வேறு திருவிழாக்களில் மாசி கடலாட்டு விழாவை காணாமல் போகலாமா? என்று வினவுகிறார். இவ்வளவு சிறப்புப் பெற்ற அந்த மாசி மக கடலாட்டு விழாவைப் பற்றிக் இப்பதிவில் காண்போமா அன்பர்களே?

சென்னை சைதை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி
ஓம் என்னும் பிரணவத்தில்
வெள்ளி மயில் வாகன சேவை

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.

செங்குந்த கோட்டம் சிவ சுப்பிரமணிய சுவாமி

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் சிறந்தது போல, மாசியில் சிறந்து விளங்குவது மக நட்சத்திரம். ஏன் இப்படி என்று ஆராய்ந்தால், நமது முன்னோர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் "பௌர்ணமி' திதி வரும் நன்னாளில் என்ன நட்சத்திரம் உள்ளதோ, அதையே அந்த மாதத்தின் பெயராகவும் வரும்படி அமைத்துள்ளார்கள். (உதாரணமாக சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி, சித்திரை நட்சத்திரத்தில் உதிப்பதால் அந்த மாதத்திற்கு "சித்திரை' என்று பெயர்). அந்த வரிசையில் மாசி மாதம் வரும் பௌர்ணமியில் மக நட்சத்திரம் பிறப்பதால், இந்தத் தமிழ் மாதம் "மாக மாதம்' (மாசி) என்று பெயர் பெற்றது.

சிவசுப்பிரமணிய சுவாமி

பொதுவாகவே ஆலயங்களிலே திருவிழாக்களைத் தொடங்குவது அல்லது விழாக்கள் கொண்டாடுவது ஒரு முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். அவ்வகையில் இந்த மாசிமாதம் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மகத்திருவிழா, - தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்றினில் தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறும் விழாவாக அமைந்துள்ளது. இதனை "மாக ஸ்நானம்' என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.

ரிஷபாரூடராக மகிழடி சேவை
சாதிக்கும் சிவசக்தி - திருவொற்றியூர்


புராணங்களும் இந்நன்னாளைப் போற்றுகின்றன. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.
மயிலை விருபாக்ஷீஸ்வரர்

மாசி மக கடலாட்டு விழா கொண்டாட்டத்திற்காக சில ஐதீகங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போமா? தில்லை சிற்றம்பலமாம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே , கிள்ளையில் கடற்கரையில் உள்ளது குய்ய தீர்த்தம். இருளில் வந்த குருவை வருணன் பகைவன் என்று எண்ணி அவர் மீது பாசத்தை விட அதனால் அவர் இறந்தார். வருணனை அக்கொலைக் குற்றம் பற்றியது எனவே ஒரு பிசாசு அவனுடைய காலையும் கையையும் கழுத்துடன் கட்டி கடலில் இட்டது. வருணனும் நீண்ட காலம் அங்கு கிடந்தான். அதானால் பூமியெங்கும் மழை இல்லாமல் போனதால் தேவர்கள் வேண்ட அவ்வாறு கிடந்த வருணனுக்கு விமோசனம் அளிக்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான் ஒரு மாசி மக நாளில் இத்துறைக்கு எழுந்தருளி அப்பாசக் கட்டு அற்றுப் போகும் படி அருள் புரிந்தார் எனவே இத்துறை "பாசமறுத்ததுறை" என்றும் பெயர் பெற்றது அன்று முதல் மாசி மக நாளன்று அனைத்து தெய்வ மூர்த்தங்களும் கடலுக்கு எழுந்தருளும் கடலாட்டு விழாவும் துவங்கியது.


ல்யாண சுந்தரர் - சங்கிலி நாச்சியார்
திருக்கல்யாணக் கோலத்தில்

இன்னுமொரு ஐதீகம். ஒரு சமயம் திருக்கயிலையிலே ஐயனுக்கும் அம்மைக்கும் இடையிலே ஒரு பிணக்கு . அருளே தன் உருவம் என்று கூறிய அம்மையின் தற்பெருமையினால் உலக இயக்கம் ஒரு விநாடி நின்றது. தவறை உணர்ந்தாள் அன்னை பிராயசித்தமாக தக்ஷப்பிரஜாபதியின் தவத்தின் பயனாக அவருக்கு மகளாகப் பிறந்து தாக்ஷாயணி என்ற பெயருடன் வளர்ந்து, தவம் செய்ய, தான் வந்து மணம் முடிப்பதாக ஐயன் வரமளித்தார். எனவே ஒரு மாசி மக நாளன்று அம்பிகை வலம்புரி சங்கு வடிவில் தாமரை மலரில் வடிவெடுத்தாள். அன்று காளிந்தி நதிக்கு நீராட தன் மனைவி வேதவல்லியுடன் வந்த தக்ஷன் சங்கை கையில் எடுக்க அது ஒரு அழகான குழந்தையாக உருமாறியது. ஆகவே அன்னையின் ஜென்ம தினம் இந்த மாசி மக நாள் இன்னாளில் விரதம் இருந்து அன்னையை வழிபட திருமணப்பேறு கிட்டும்.

திருமயிலை வாலீஸ்வரர்

மாசி மகத்திற்க்கு மிகவும் பெயர் போனது கும்பகோணம் ஏனென்றால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம இராசியில் குருவும் சந்திரனும் ஒன்றாக சேர்ந்து இருக்க , சிம்ம ராசியின் ஏழாவது வீடான கும்ப ராசியில் சூரியன் இருந்து சிம்ம ராசியில் உள்ள குருவையும் சந்திரனையும் பார்க்கும் அமைப்பில் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் சந்திரன் முழு நிலவாக ஒளிர்வான் இந்த நாள் தான் மஹாமகம் தினம்.

திருமயிலை வீரபத்திரர்
( ஆட்டுத்தலையுடன் தக்ஷன்)


இன்றைய தினம் கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு என்னும் ஒன்பது நதிகளும் மஹாமக குளத்தில் நீராடி தங்கள் பாபங்களை போக்கி கொள்கின்றனர். , இந்தக் குளத்தில் நீராடினால் சகல தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கிறது.


திருமயிலை ஏகாம்பரேஸ்வரர்
தீர்த்தவாரி பாலாபிஷேகம்

பாவங்கள் தொலைகிறது. அன்று நாம் மஹாமக குளத்தின் நடுவில் உள்ள கன்னியா குளத்தில் நீராடி குளக்கரையில் நம் முன்னோர்களுக்கு எள்ளினால் நீர்த்தார் கடன் செய்தால், நூறு தலைமுறையினர் நரகத்திலிருந்து கரையேறுவார்கள் என்பது ஐதீகம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கும்பகோணம் நகரத்தின் சிறப்பு என்னவென்று பார்ப்போமா?

அஸ்திர தேவர் பாலாபிஷேகம்

ஒரு பிரளய காலத்தில் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளின் வித்துகளையும் ஒரு அமுத குடத்திலிட்டு அதை பிரளய நீரில் மிதக்க விட்டார். அந்த குடம் பிரளய வெள்ள நீரில் மிதந்து தற்போது கும்பகோணம் உள்ள இடத்தில் வந்து தங்கியது. மீண்டும் சிருஷ்டியை ஆரம்பிக்க சிவபெருமானே வேடுவ (கிராதக) வேடத்தில் வந்து பாணம் எய்தி குடத்தை உடைத்தார், குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாய்ந்து அப்பகுதிகளைச் செழுமையாக்கியது. அதன் பிறகு பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் சம்மதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடி யேற்றம் செய்து, பெருமானையும் தேவியையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார். ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்தார். பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வரச் செய்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மக விழாவை ஆரம்பித்து வைத்தார். அந்த அடிப்படையில்தான் மாசி மக விழா ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கும்பகோணத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களின் மூர்த்திகளும் மஹாமக குளத்தில் தீர்த்தம் கொடுக்கின்றனர். அதே சமயம் வைணவப் பெருமாள்கள் காவிரிக் கரையில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர்.

சென்னை சைதை செங்குந்த கோட்டம்
மாசி மக நடராஜர் உற்சவம்


மகாமகத்திலிருந்து மகாமகம் வரைக்கும் உள்ள பன்னிரண்டு ஆண்டு காலகட்டத்தை அவர்கள் "மாமாங்கம்" என்று குறிப்பிட்டார்கள். அது அவர்களுக்கு நீளமான காலமாகத் தெரிந்திருக்கிறது. "மாமாங்கத்துக்கு மாமாங்கம்" என்ற சொல்லடைவும் அதனால் ஏற்பட்டதுதான். மகாமகம் என்பதுதான் மாமாங்கம் என்று ஆகிவிட்டது. ஐந்து மாமாங்கம் கொண்டது ஒரு "ஷஷ்டியப்தம்" என்னும் அறுபதாண்டு.

அங்காளபரமேஸ்வரி அம்மன்

மகாமகத்தன்று சூரியோதய காலத்தில் இக்குளத்தில் நீராட பிரம்மஹத்தி மற்றும் அது போன்ற கொடிய பாவங்களையும் நீர் தேவதை நீக்கி அருள் புரிகின்றார். பொதுவாகவே மாசி ஐப்பசி, கார்த்திகை, வைகாசி மாதங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது பாவங்களைப் போக்கும் என்கின்றன புராணங்கள்.

திருமயிலை காரணீஸ்வரர் தீர்த்தவாரி

மாசி மகத்தன்று மகா மகக் குளத்திலோ வேறு புண்ணிய தீர்த்தத்திலோ குளித்தால் பிதுர் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். மாசி நீராடல் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு மாக புராணம் படிக்கலாம். அல்லது பிறர் படிப்பதை கேட்கலாம்.

திருமயிலை ஏகாம்பரேஸ்வரர்
சூரிய பிரப வாகனத்தில்

சாபத்தால் கழுதையான இந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரையில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அன்று நெல்லி மரத்தடியில், துளசிச் செடியின் கீழ் உள்ள மண்ணை உடலில் பூசிக் கொண்டு திருமாலை நினைத்தபடி நீராடினால் சகல பாவங்களும் விலகி விடும்.

திருமயிலை திருவட்டீஸ்வரர்
ரிஷப வாகனத்தில்

மாசி மக நட்சத்திரத்தன்று கோள்களின் அமைப்பின் காரணமாக ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.

திருமயிலை எல்லம்மன்

இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும். முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மகா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.

இராயப்பேட்டை ஸ்ரீநிவாசர் கருட சேவை

இது முருகனுக்கும் உகந்த நாள். அன்று முழுவதும் விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை. அன்று ஏழைக்கு அன்னதானம் செய்யும் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்கும். மக நட்சத்திரக் கடவுள் குரு பகவான். இருவருக்கு மஞ்சள் உடை அணிவித்து மஞ்சள் மலரால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும். அன்று தான் முருகன் சிவனுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தார். இரண்யாட்சகனை சம்ஹரித்து பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் மாசிமகம்.

செங்குந்த கோட்டம் சண்முகர்

மகாமகம் சிறப்பு கும்பகோணத்திற்கு ஏற்படுவதற்கு முன்னமேயே "மாசி மக தீர்த்தவாரி' நடைபெற்ற சிறப்புடையது இந்த "திருநல்லூர்' தலமாகும். "மகம் பிறந்தது நல்லூரில்' என்ற பழமொழியே வழக்கத்தில் சொல்லப்படுவது உண்டு. இத்திருத்தலம் தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசத்தை அடுத்து உள்ளது. கர்ணணைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி அந்த பாவம் நீங்க உரோமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். முனிவர் மாசி மக நாளில் ஏழு கடலில் நீராடினால் இந்தப் பாவம் விலகும் என்று கூறினார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல் நீராடல் என நினைத்தபோது ஒரு அசரீரி “திருநல்லூர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் ஏழு கடலை நினைத்து கொண்டு மாசி மகத்தில் நீராடினால் உனக்கு பாப விமோசனம் கிட்டும்” என்று கூறியது. எனவே பஞ்ச பாண்டவர்களின் தாயான குந்தி தேவியின் பிரார்த்தனைக்கிணங்கி திருக்கோயிலின் முன்பு உள்ள "பிரம தீர்த்தம்' என்று வழங்கப் பெற்று வந்த திருக்குளத்தில் மாசி மாதம் பெüர்ணமியன்று உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்த நீரின் சுவைகளை உடைய ஏழு கடல்களையும் வருமாறு திருவருள் புரிந்தார் சிவபெருமான். குந்திதேவியும் அப்படியே செய்து பாப விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘சப்த சாகரத் தீர்த்தம்’ என்பதாகும். நாமும் அதில் மாசி மக நாளில் நீராடினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும்.

திருவண்ணாமலை ஆலய கோபுரம் கட்டிய மன்னன் வல்லாள மகாராஜா. இம் மன்னனுக்கு பிள்ளை இல்லை. எனவே ஆண்டுதோறும் மகாமகத்தன்று அண்ணாமலையாரே பிள்ளையாக எழுந்தருளி ஆண்டுதோறும் பள்ளி கொண்டாபட்டுக்குச் சென்று தீர்த்தவாரி கொடுத்து நீர்த்தார் கடன் செய்தார். தற்போதும் இது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.


பார்த்தசாரதிப் பெருமாள்

மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலயத்தில் அகோர சிவன் காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
கருடவாகன சேவை

ஆனந்த கூத்தர், சிற்றம்பல வாணர், சிவகாமி நேசர், நமையீன்ற நடராசரின் ஆறு திருமுழுக்குகளில் ஒன்று மாசி மாத சதுர்த்தசி நாளில் நடைபெறுகின்றது. இது தேவர்கள் செய்யும் முதற்கால பூஜை என்று ஐதீகம்.

சென்னையில் கடற்கரையெங்கும் பல இடங்களில் அனைத்துக் கோவில் திருமூர்த்தங்களும் எழுந்தருளி தீர்த்தக் கொடுக்கின்றனர். கலங்கரை விளக்கத்திற்கருகில் மயிலை கபாலீஸ்வரர் முதலிய சைவ திருக்கோவில் தெய்வங்கள் கடலுக்குச் சென்று தீர்த்த வாரி வழங்குகின்றனர், கடலாட்டு விழாவிற்கு சோமாஸ்கந்தர் வருவதில்லை, சந்திரசேகரர்தான் வருகின்றார் வெயில் காலம் என்பதால் பல்லக்கில் எழுந்தருளுகிறார். சுவாமி , உடன் அஸ்திர தேவரும் வருகின்றார். சந்திர சேகரர் கடலுக்குள் பல்லக்குடன் சென்று விட்டு கரைக்கு திரும்பி வந்தவுடன் முதலில் அஸ்திர தேவர் கடலில் வந்து நீராடும் போது அவருடன் பக்தர்களும் அவருடன் கடலில் நீராடி தங்கள் பாபங்களை போக்கிக்கொள்கின்றனர். பின்னர் கடற்கரையில் அஸ்திர தேவருக்கு, மஞ்சள் , திருமஞ்சனப்பொடி, சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன பின்னர் அஸ்திர தேவருக்கும் சிவபெருமானுக்கும் தீபாரதனர் நடைபெறுகின்றது. இன்றைய தினம் சிறப்பு நைவேத்யம் வெள்ளரிக்காய், கோடைக் காலம் தொடங்கி விட்டதாலோ?

காலை தொடங்கி சுமார் பன்னிரண்டு மணிக்கு கபாலீஸ்வரர் கடலாடும் வரை அனைது தெய்வ மூர்த்தங்களுடனும் நீராடும் பக்தர்களின் பக்தியை என்ன வென்று சொல்ல.

திருமயிலை காரணீஸ்வரர்

சீரணி அரங்கத்திற்க்கருகில் வைணவ தெய்வங்களின் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. அதிகாலையில் பார்த்தசாரதிப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றார். மற்ற பெருமாள்கள் பின் தொடர்கின்றனர். இங்கு சுதர்சனப் பெருமாள் கடலாடுகின்றார். இப்பதிவில் தாங்கள் காணும் படங்கள் எல்லாம் சென்னை திருக்கோவிலில் எடுத்த மாசி மகப் படங்கள்.

தென்காசி விசுவநாதர் ஆலயத் தேர்த் திருவிழா மாசி மக பிரம்மோற்சவத்தில் நடக்கின்றது, தேர் விழா முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது. பூண்டி முருகர் ஆலயத்தில் மாசி மக தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநெல்வேலியில் அன்று நடக்கும் தெப்ப விழாவிற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.

அது போல் திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள்.

கபாலீஸ்வரர்

திருச்செந்தூர், திருத்தணி ஆகிய சுப்பிரமணியத்தலங்களில் மாசி மகம் பத்து நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. திருவொற்றியூரில் சுந்தரர் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. தியாகராஜசுவாமி, சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் மகிழ மரத்தடி சேவை தந்து அருளுகின்றார்.

திருக்கண்ணபுரம் பெருமாள், திருமருகல் பெருமாளுடன் சுமார் 70 கி. மீ பயணம் செய்து பாண்டிச்சேரி திருமலைராயன் பட்டிணத்தில் மீனவர் குல மருமகனாய். மாப்பிள்ளை சாமியாக தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து கடலில் தீர்த்தம் தந்தருளுகின்றார். அன்றைய தினம் காரைக்கால் பகுதியை சார்ந்த ஏழு பெருமாள்களும் உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

அஸ்திர தேவருக்கு புண்ணிய நீர் அபிஷேகம்

கடலூர் தேவனாம் பட்டினத்தில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரர், என்று பெருமாளும் ஈசனும் ஒன்று கூடி எழுந்தருளும் வழக்கம் உண்டு மற்றும் அப்பகுதியின் சுமார் 100 மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தருளுகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு வரும் போது, முஸ்லீம் பெருமக்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது.

சண்முகர் பின்னழகு

பாண்டிச்சேரியில் வைத்திக்குப்பத்தில் மாசி மக கடலாட்டு மிகவும் சிறப்பாக நடைபெறும். நூற்றுக்கு மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தருளுகின்றனர். காஞ்சிபுரத்தில் காமாக்ஷியம்மனின் பிரம்மோற்சவம் மாசி மகநாளை தீர்த்த நாளாகக்கொண்டு நடைபெறுகின்றது. திருகடல்மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் காசி, ராமேசுவரத்துக்கு இணையான அர்த்த சேது என்ற பெருமைக்கு உரிய தலமாகும் .இங்கு மாசி மகத்திற்கு முதல் நாள் தெப்போற்சவமும், அதைத் தொடர்ந்து மறுநாள் மாசி மகம் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது.

வட நாட்டிலும் கும்பமேளாக் கொண்டாடபப்படுவதும் மாசி மகத்தை ஒட்டியே. இந்த வருடம் ஹரித்துவாரத்தில் கும்பமேளா நடைபெறுகின்றது, மஹாமகத்தின் போது திரிவேணி சங்கமமான அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறுகின்றது.

நாமும் மகத்தன்று அருகில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து பாவம் போக்கி அருள் பெறுவோமாக.

Thursday, February 18, 2010

தெப்போற்சவம் - 2

சென்னை மேற்கு சைதாப்பேட்டை

காரணீஸ்வரர் திருக்கோவில் தெப்போற்சவம்


தெப்போற்சவம் - 1. அவ்வ்விழாக்களுள் திருமயிலை தெப்போற்சவத்தின் முதல் நாள் சந்திரசேகரர் தரிசனம் பெற்றோம். இப்பதிவில் திருக்காரணி இரண்டாம் நாள் சிவசுப்பிரமணியசுவாமி தரிசனமும் , மூன்றாம் நாள் திருமயிலை சிங்கார வேலவர் தரிசனமும் காண்போம்.

திருக்காரணி தெப்பக்குள நீராழி மண்டபம்

திருக்காரணி தெப்பம்

சென்னை சைதை திருக்காரணியிலும் முதல் நாள் சந்திரசேகரர் தெப்போற்சவம் கண்டருளி அருள் பாலிக்கின்றார். இரண்டாம் நாள் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி தெப்போற்சவம் கண்டருளுகிறார். மூன்றாம் நாள் வன வள்ளி, கஜ வள்ளியுடன் மயில் மீதமர்ந்த கோலத்தில் ஒராறு முகமும் ஈராறு கரமும் கொண்டு சண்முகர் தெப்போற்சவம் கண்டருளுகிறார்.






சிவசுப்பிரமணிய சுவாமியின் அருட்கோலம்



-->
திருமயிலையில் இரண்டாம் நாள் சிங்கார வேலவர் தெப்பம். வள்ளி தெய்வாணையுடன் வளம் கொடுக்கும் முருகர் பூரண அலங்காரத்துடன் தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்போற்சவம் கண்டருளுகிறார். இன்று ஏழு சுற்றுக்கள் வலம் வருகின்றார். மூன்றாம் நாள் சிங்கார வேலவர் தெப்பம், இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்கள் மனம் மகிழ எம்பெருமான் முருகர் 9 சுற்றுகள் வருகின்றார்.

திருமயிலை மூன்றாம் நாள் தெப்பம்


மயில் மீது அமர்ந்த கோலத்தில் சிங்கார வேலவர் அருள் பாலிக்கும் அழகை எப்படி வர்ணிக்க.
-->

Wednesday, February 17, 2010

தெப்போற்சவம் - 1



தைப்பூசம்

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பார்கள் அறுவடையையை முடித்து நல்ல விளைச்சலுக்கு உதவியாக இருந்த சூரியனுக்கும் மற்றும் மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து வழிபடும் மாதம். வெள்ளியன்று அம்பாளை வழிபட உகந்த மாதம் . சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் "மகர சங்கராந்தி" என்று அழைக்கப்படும் உத்தராயண காலம் தொடங்கும் மாதம். இந்த மாதம் பூசம் முழு நிலவுடன் சேர்ந்து வருவதால் தைப்பூசம் மிகவும் சிறப்பு, தமிழகமெங்கும் மட்டுமல்ல, வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா, வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா என்று தமிழர்கள் கொண்டாடும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் கூட வெகு சிறப்பாக முருகனுக்கு, காவடிகள், அலகு, அபிஷேகம் என்று மிகவும் கோலாகலமாக நடைபெறும் பண்டிகை தைப்பூசம் ஆகும்.  




திருமயிலை கபாலி தீர்த்ததில்
தெப்பம் உலா வரும் காட்சி

சூல விரதத்தை அனுஷ்டிக்கும் முறை: தை அமாவசையன்று காலை எழுந்து உடல் சுத்தி செய்து சிவாய நம என்று மந்திரம் ஓதி திருநீறணிந்து மன சுத்தியுடன் திரி சூலத்தை தாங்கியுள்ள அந்த முக்கண் முதல்வனை , நீல கண்டனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, காமனை கண்ணால் எரித்த மஹேஸ்வரனை, மலை மகள், ஓம்காரி, ரீங்காரி அன்னை கௌரியுடன் கூடிய மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்து , நைவேத்தியம் செய்து நியமத்துடன் வழிபட்டு, பின் ஆலயம் சென்று வழிபட்டு அந்த ருத்ராக்ஷம் அணிந்த பெருமானின் அடியவர்களுக்கு தட்சணை அளித்து அவர்களுடன் கூடி ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.


சூல விரதத்தின் பெருமை: தூய மனதுடன் இந்த விரதத்தை அனுசரிப்பவர்களின் எதிரிகள் அனைவரும் நாசமாக்கப்படுவர், சத்ரு பயம் ஒழியும், கோடிய நோய்கள் நீங்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், சகல மங்களங்களும் உண்டாகும், செல்வம் பெருகும், இந்த இம்மை சுகங்கள் மட்டுமல்லாது, மறுமை சுகமான அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருப்பாதங்களில் சென்று சேவை செய்யும் முக்தியும் சித்தியாகும். மஹாவிஷ்ணு இவ்விரத்ததைக் கடைப்பிடித்து கால நேமி என்னும் கொடிய அரக்கனை சம்ஹாரம் செய்தார். அவரது தலை வலியும் இவ்விரத மகிமையால் விலகியது. பரசுராம அவதாரத்தில் அவரே இந்த விரதத்தை கடைப்பிடித்து ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியார்ஜுனனை வென்றார். பிரம்ம தேவரும் தனது தீராத வயிற்று வலியை இந்த விரதம் அனுஷ்டித்து தீர்த்துக் கொண்டார்.


சந்திர சேகரர் தெப்போற்சவம்

திருக்கோவில்களில் தைப்பூசம்:  குன்று தோறும் குடியிருக்கும் குமரனுக்கு அன்று உண்மையிலேயே கொண்டாட்டம். தமிழகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா, வேல் முருகா, வெற்றி வேல் முருகா, என்று ஊனும், உள்ளமும் உருக பாத யாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாள். பழனி, மருதமலை முதலிய தலங்களில் திருத்தேரோட்டம் நடை பெறும் நாள். எண்கண் தலத்திலே 10 நாள் பிரம்மோற்சவம், தைப்பூசத்தன்று தீர்த்தவாரி , ஆறுமுகப் பெருமானின் சபா அபிஷேகமும் காணக்கிடைக்கும் இன்று. வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று ஜ“வ காருண்யத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த வள்ளலார் அந்த அருட் பெருஞ்ஜோதியுடன் ஜோதியாக கலந்த நாள். வடலூரிலே ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காணும் நாள். இந்த மானுட வாழ்வின் நோக்கம் அந்த ஜோதி வடிவான இறைவனுடன் நாமும் நமது மலங்களை ஒழித்து ஜோதியாக சேர வேண்டும் என்பதை உணர்த்தும் நாள். திருவிடை மருதூரிலே மஹாலிங்கேஸ்வரர் பத்து நாள் பெருவிழாக் கண்டருளி காவிரியில் தைப்பூசத்தன்று தீர்த்தவாரி கண்டருளுகின்றார்.

தெப்பத்தில் சந்திரசேகரர் -1

பழனி, குன்றக்குடி, திருப்புடை மருதூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய தலங்களில் தைப்பூச பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. திருநெல்வேலியிலே தாமிர சபா நடனம் தந்தருளுகின்றார் ஆடல் வல்லான். கருமாரியாக சுயம்புவாக எழுந்தருளி அம்மை அருள் புரியும் திருவேற்காட்டிலே அம்மனுக்கு பிரம்மோற்சவமும், தெப்ப உற்சவமும் தைப்பூசத்தை ஒட்டித்தான் நடைபெறுகின்றது. அங்கயற்கண் அம்மை உடனுறை ஆலவாய் அண்ணல் எழுந்தருளி அருள் பாலிக்கும் மதுரையில் பத்து நாள் உற்சவம் இத்திருவிழாவிலே சொக்க நாதப்பெருமான் வலை வீசி மீன் பிடித்த லீலை, நாட்கதிரறுப்பு விழா முதலியன கண்டருளி தைப்பூசத்தன்று வண்டியூர் எழுந்தருளிப்போற்சவம் கண்டருளுகிறார். திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக்கோவில், சைதை காரணிஸ்வரர் திருக்கோவில், குன்றக்குடி , திருப்புடை மருதூர்,. முதலிய தலங்களில் தெப்போற்சவம் நடை பெறுகின்றது. வட சென்னையின் பல திருக்கோவில்களின் தெப்போற்சவம் கச்சாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறுகின்றது. இவ்வாறு பல தலங்களில் தைப்பூசம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.


தெப்பத்தில் சந்திரசேகரர் -2

தைப்பௌர்ணமியை ஒட்டி ஏன் தெப்போற்சவம் நடைபெறுகின்றது யோசித்தால் ஒரு உண்மை விளங்கும் விவசாயப்பெருமக்கள் தாங்கள் விளைவித்த நெல்லை அறுவடை செய்து வேலை ஏதும் இல்லாமல் இருப்பர் எனவே அவர்கள் முழு மனதுடன் திருவிழாக்களில் கலந்து கொண்டு தங்கள் சேவைகளை செய்யலாம் அதே சமயம் வெயில் காலம் இன்னும் ஆரம்பமாகவில்லை என்பதால் நீர் நிலைகளிலும் தண்ணீர் நிறைய இருக்கும் என்பதாலும் பௌர்ணமியன்று முழு நிலவு தனது பூரண கலைகளுடன் வெளிச்சம் தரும் என்பதாலும் தெப்போற்சவம் பல் வேறு ஆலயங்களிலும் கொண்டாடப்படுகின்றது. அந்த முக்கண் முதல்வரின் அருளால் அவரது தெப்போற்சவத்தை திருமயிலையிலும், திருக்காரணியிலும் காணும் வாய்ப்பு கிடைத்தது, எனவே இத்திருக்கோவில்களின் தெப்போற்சவத்தை பற்றி ஒரு சிறு குறிப்பு. திருமயிலையில் தைப்பூச தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. சிறப்பு அலங்காரத்துடன் திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு மாட வீதி வலம் வந்து மேற்கு கரை அடைந்து தெப்போற்சவம் கண்டருளி பின் மாடவீதி வலம் முடித்து திருக்கோவில் திரும்புகின்றனர் சுவாமிகள். முதல் நாள் சந்திர சேகரர் தெப்பம். மிகவும் கலை நயத்துடன் மிதக்கும் தேர் போல் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்திற்கு பூரண அலங்காரத்துடன் சந்திர சேகரர் அம்பாளுடன் எழிந்தருளுகின்றார். முதல் நாள் மொத்தம் ஐந்து சுற்றுகள் வலம் வருவார் எம்பெருமான். முதல் சுற்று வேத கோஷத்துடனும். இரண்டாம் சுற்று தேவார இன்னிசையுடனும், மூன்றாம் சுற்று நாதஸ்வர இன்னிசையுடனும் நடைபெறுகின்றது. அடுத்த சுற்றுக்களில் வீணையிசையை கேட்டுக்கொண்டே வலம் வந்து அருள் பாலிக்கின்றார் சந்திர சேகரர். அந்த அருமையான காட்சிகளை தாங்கள் இந்தப் பதிவில் காண்கின்றீர்கள்.



சந்திரசேகரர் முன்னழகு (அருகாமைக் காட்சி)


எம்பெருமான் தெப்பத்த்தில் வலம் வரும் போது பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வெற்றிலையில் வைத்து மிதக்கவிடுகின்றனர். தெப்பக்குளத்தின் படிகளில் தீபம் ஏற்றி வைக்கின்றனர். படிகள் அனைத்திலும் தீபம் ஜொலிக்கும் அழகே அழகு.

சந்திர சேகர் பின்னழகு

தெப்போற்சவம் இன்னும் தொடரும் .......