Friday, June 26, 2009

அம்பலவாணரின் ஆனி உத்திர தரிசனம்


திருநல்லம் சுயம்பு நடராஜப்பெருமான்



இன்று ஆனி உத்திர தரிசனம் அம்பலத்தாடும் எம் ஐயனுக்கு அதிகாலை நேரத்தில் ஆனந்த திருமஞ்சனம். பின்னர் சர்வ லோக நாயகராக சித்சபைக்கு ஐயன் ஆனந்த தாண்டவமாடியபடி ஆனி உத்திர தரிசனம் தரும் நாள்.

தில்லையில் வருடத்திற்க்கு இரண்டு பெருவிழாக்கள் முதலாவது உதய காலம் ஆருத்ரா தரிசனம் இரண்டாவது பிரதோஷ கால பூஜை ஆனித்திருமஞ்சனம். பூமியின் சுழற்சியில் ஏற்படும் காலங்களில் வசந்த காலத்தில் ஆனி உத்திரம் நீண்ட பகல் பொழுதை ஒட்டி ஆனி உத்திரம் வருகின்றது, குளிர்காலத்தில் மிக குறுகிய பகல் பொழுதைக் கொண்ட நாட்களை ஒட்டி ஆருத்ரா தரிசனம் வரும். வாருங்கள் சித் சபேசரின் தரிசனம் காண்போம்.

ஒரு சிறு போட்டி:

இப்படங்கள் எக்கோவிலில் எடுக்கப்பட்டன?


நடராச பெருமானின் திருவுருவில் பஞ்ச பூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள், அனைத்து தெய்வ தத்துவங்களும் அடக்கம் அவற்றை விரிவாக காண்போம்.

ஆனந்த நடராச மூர்த்தியின் மூர்த்தம் ஸ்ரீ சக்கர வடிவிலும், ஓம் பிரணவத்தையும், நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. வலக்கரத்திலுள்ள உடுக்கை - படைத்தல் தொழிலையும், அபய கரம் - காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள தொழிலையும், முயலகனின் மேல் அக்னி - அழித்தல் தொழிலையும் ஊன்றிய பாதம் - திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது.

தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்- ஊற்றமாய்
ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு


திருவடிவே பஞ்ட்சாட்சரம் திருப்பாதம் - , உதரம் - , தோள் - சி, முகம் - , திருமுடி - எனலாம்.

உடுக்கை - சி, வீசிய கரம் - அபய கரம் - , அக்னி - , முயலகன் - எனலாம்.

வலப்பக்கம் - சிவாய , இடப்பக்கம் - நம எனலாம்

திருவாசி ஓம் என்னும் பிரணவம். சடைமுடி- ஞானம். சடை விரித்தாடுவது ஞானத்தை வழங்குவதற்காக. வீசிய கரம் மாயையை உதறித்தள்ளுவதையும் ஊன்றிய பாதம் மலத்தினை நீக்குவதையும், தூக்கிய திருவடி அருளை அளித்து ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் அழுத்துவதையும் குறிக்கும்.

பஞ்ச பூதங்களை குறிக்கும் வண்ணம் எம் ஐயனின் சிலை வடிக்கப்படுகின்றது. பஞ்ச பூதத் தத்துவராகவும் எம் ஐயன் விளங்குகின்றார். மூக்கு காற்றையும் , முகம் பூமியையும், நெற்றிக்கண் அக்னியையும், முகத்தின் காந்தி ஆகாயத்தையும், விரி சடை நீரையும் குறிக்கின்றது.





1. இளம் பிறை : தக்கன் சாபம், காம தகனம், உயிர் வளர்ச்சி, ஒளஸதி நாதன்.

2. மயிலிறகு : கிராதார்ஜுனம், பார்த்தனுக்கு அருளிய பரம மூர்த்தி.

3. கொக்கிறகு : குண்டாசுரவதம், அரசத்தன்மை.

4.இடக்கண் : சந்திர மண்டலம், இடநாடி, இச்சா சக்தி.

5.வலக்கண் : சூரிய மண்டலம், பிங்கலை நாடி, ஞான சக்தி.

6. நுதல் விழி : அக்னி அம்சம், கழுமுணை நாடி, காம தகனம், கிரியா சக்தி.

7.திருநீறு : பிருத்வி தன்மை, லய சிருஷ்டி, திரிபுரமெரித்தல், திரி சத்யம், சுடலையாடல்.

8. பிரம்ம கபாலம்: பிரம்மச் சிரச்சேதம், பிக்ஷாடணர்.

9. ஊமத்த மலர் : அஷ்ட மூர்த்தம்.

10.கங்கை : ஜலமய மூர்த்தம், கங்காதரர், பாவ விமோசனம்.

11.நுண் சிகை : தக்ஷிணா மூர்த்தி, ஞானம்.

12.கொன்றை மலர்: கற்பக வல்லி

13. குழை - இடது காது, சக்தி அம்சம், அர்த்தநாரீஸ்வரர், பிரக்ருதி.

14:தோடு - வலது காது, சிவ அம்சம்.

15. நீலகண்டம் - அமிர்தம் கடைதல்,சமன் பாட்டு நிலை, தீதகற்றல், அமரத்துவம், தியாக ராஜ மூர்த்தம்.

16.தோள்கள் - திரிவிக்ரம நிலை, திசைகள், காற்று.



17: துடி : தோற்றம், ஆக்கல் தொழில், துடியாடல்.


17. தீயகல் : சம்ஹாரம், அழித்தல் தொழில், தீ-எரியாடல்.


18.திருவாசி சுடர் - த்வனி, பீஜ மந்திரங்கள்.




19 அபய கரம் - காத்தல் தொழில், சுப மூர்த்தம்.

20. அரவணி - நாக சக்தி, ஜ“வாத்மா, குண்டலிணி.

21.கரங்கள் - விராட புருடத்தன்மை.

22. கஜ ஹஸ்தம் (வீசு கரம்): திருவடி காட்டல், இன்ப வழி காட்டி.


23.ஸ்தித பாதம் - ஊன்றிய திருவடி, காலாந்தகர், மறைத்தல் தொழில், பதி நிலை, நிலம், வினைப்பயன் ஊட்டல்.

24முயலகன் - கோயிற் புராணம், தாருகா வனம், மும்மலம்.

25.கமல பீடம் - தகராலயம், இதய கமலம், சகஸ்ராரம்.



26. குஞ்சித பாதம் : சிதம்பர மகாத்மியம், அருளல் தொழில்.

27.சிலம்பு - வேதங்கள் (இடது), கேளா ஒலி

28. கழல் - வீரட்டம், பிறப்பறுத்தல், பதிநிலை, புருடன்.

29.வீர கண்டாமணி - வீரம், திருவுரு, வெற்றித் திறன்.

**********************
ஐயனின் அற்புத தரிசனத்தை வள்ளலார் பெருமான் இப்படிப் பாடுகின்றார்.

தனித்தனிமுக் கனிபிழிந்து
வடித்தொன்றாக் கூட்டிச்

சர்க்கரையும் கற்கண்டின்

பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து

பசும்பாலுந் தெங்கின்

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம்
பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்யளைந்தே
இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும்

இனித்திடுந்தெள் ளமுதே

அநித்தமறத் திருப்பொதுவில்
விளங்கு நடத் தரசே

அடிமலர்க்கென் சொல்லணியாம்
அலங்கணிந் தருளே.


போட்டிக்கான விடை :

வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா!
நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா!
என்று புலம் பெயர்ந்து சென்றாலும் குலம் பெயரவில்லை என்று அன்புடன் தமிழர்கள் மலேசியாவில் திருமுருகனுக்கு கட்டிய பத்துமலைக் கோவிலில் உள்ள பிரம்மாண்ட நடராஜப்பெருமானின் அருட் காட்சிகளைத்தான் இப்பதிவில் கண்டீர்கள். பிரம்மாண்ட சிவகுமாரனையும் தரிசியுங்கள்.

(படங்களின் மீது சொடுக்கினால் பெரிதாகக் காணலாம்)

Thursday, June 25, 2009

அங்காள பரமேஸ்வரியின் ஆனந்த மஹா கும்பாபிஷேகம் -5

கும்பாபிஷேக நாளும் வந்தது அதிகாலையிலேயே ஆவலுடன் எழுந்து விட்டோம். மனதிலே ஆயிரம் மத்தாப்புக்கள் 90 வருடங்களாக எதிர்பார்த்த ஒரு புண்ணிய நிகழ்ச்சி இன்று நிறைவேறப் போகின்றது என்று பேரானந்தம். அதே சமயம் அம்மா எந்த வில்லங்கமும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மானிட இயல்பில் சிறு வேண்டுதல். சிறு வயது முதல் என்னை ஈன்ற அன்னையின் கனவாக இருந்த ஒரு ஆசை நிறைவேற போகின்றதே அதைக் கண் மடுக்க அவர்கள் இல்லையே என்ற ஒரு சிறு சோகம் என்று மனதெங்கும் ஒரு அற்புத கலவையாக கனத்து இருந்தது. சூரியன் அற்புதமாக தோம்றினான் வானம் நிர்மால்யமாக இருந்தது, பறவைகள் அற்புதமாக பூபாளப் பண் பாடின, அனைத்து சகுனங்களும் நல்லதாகவே இருந்தன.

அடியேனை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தியது என் அன்னை சரவணம்மாள் அவர்கள். சிறு வயதிலேயே அடியேனுக்கும், என் தம்பிக்கும் சோறு ஊட்டும் போது ஆன்மிகக் கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தியதும் என் அன்னை தான். ஒவ்வோரு மஹா சிவராத்திரியன்றும் எங்கள் குல தெய்வத்தை தரிச்சிக்க எங்களை் அழைத்துச் செல்ல என் அம்மா தவறியதில்லை. அவர்கள் இறக்கும் தருவாயில் கூட அங்காளம்மா உன் கோயில் கும்பாபிஷேகம் பார்க்காமல் போகின்றோமே என்ற அங்கலாய்ப்பு அவரிடம் இருந்தது. இன்று அவர்களுடைய கனவை நிறைவேற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரும் கடமையை முடித்த பெரும் திருப்தி.

இந்த கும்பாபிஷேக பதிவுகள் அனைத்தும் எனை ஈன்ற என் தாய்க்கு சமர்ப்பணம்.

அன்னை அங்காள பரமேஸ்வரி

உற்சவர் அம்மன்

வேதம் நான்கிற்கும் சாரமாய் விளங்கும் நாரணன் சோதரிக்கு
நான்காம் கால யாக பூஜை

அதிகாலையிலேயே மங்கள இசையுடன் திருவிழா தொடங்கியது. கும்பாபிஷேகம் என்பது கும்பத்திலிருக்கும் சக்தியை பிம்பத்திற்க்கு மாற்றுவதுதானே. பூரண சக்தியுடன் கும்பத்தில் அன்னை அருள் புரிய வீற்றிருந்தாள். முதலில் பிம்ப சுத்தி - இரவு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் முதலில் சுத்திகரிக்கப் பட்டன, பின்னர் பிம்ப ரக்ஷாபந்தனம் - பிம்பங்களுக்கு ரக்ஷாபந்தனம் என்னும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து வேதபாராயணம் முடிந்து ஸ்பர்சாகுதி என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பது யாக குண்டத்திலிருந்தும் ஆகுதி நெய் மூல மூர்த்திக்கு கொண்டு செல்லப் பெற்று அம்மனுக்கு சக்தி ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் நாடி சந்தானம் நடைபெற்றது. தர்ப்பைக் கயிறு, சிவப்பு நூல். வெள்ளிக் கம்பி மூலம் மூலவர் அம்மனும் பிரதான கும்பமும் இனைக்கப்பட்டன மந்திரங்களின் மூலம் பிராண சக்தியின் தத்துவங்கள் மூல மூர்த்திக்கு மாற்றப்பட்டன. இதை சிவாச்சாரியார் பிம்பம் என்பது ஒரு பிறந்த குழந்தை போல அதற்கு பெயர் கிடையாது குணமும் கிடையாது. அந்த குழந்தைக்கு அங்காள பரமேஸ்வரி என்று பெயர் சூட்டுவதே இந்த நாடி சந்தானம் என்று விளக்கினார். நான்காம் கால யாக சாலை நிறைவாக விசேஷ த்ரவ்யாகுதி மற்றும் மஹா பூர்ணாகுதி நடைபெற்று கும்பங்கள் புறப்பட்டன.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மஹா திரிபுர சுந்தரி
அங்காள பரமேஸ்வரிக்கு மஹா கும்பாபிஷேகம்


மூலவர் கும்பம் மற்றும் விமான கலச கும்பம் புறப்பாடு

கேரள ஜெண்டை மேளம், நாதஸ்வரம் ஒலிக்க தோரணங்கள். பதாகைகளுடன் கலசங்கள் புறப்பட்டன அருள் முகத்துடன் சிவாச்சாரியார்கள் கும்பங்களை தாங்கி வந்த போது எங்கள் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பொங்கியது தாயே! இவ்வளவு காலம் கழித்து இன்று நீ அருள் புரிந்து அடியோங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாயே என்று மனம் முழுவதும் ஒரு அற்புத நிம்மதி பரவியது.

கோபுர கலச கும்பம் விமானத்தை அடைகின்றது.


விமான கலசங்களுக்கு பூஜை

விமான கலசங்களுக்கு மந்திர நீரால்
மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் அற்புத தருணம்.


குறித்த மங்களகரமான நேரத்தில் கோபுர விமான கலசத்திற்க்கு பூஜைகள் நடைபெற்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாகம் நடைபெற்றது. கலச புனித நீர் வந்திருந்த பக்தர்கள் அனைவர் மேலும் தெளிக்கப்பட்டது.

பின்னர் விநாயகருக்கு முதலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது அடுத்து மூலவர் அம்மனுக்கும் அடுத்து ஆதி அங்காளம்மன், நாகர், பால முருகர் ஆகியோருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மற்ற பரிவார தேவதைகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.



பால முருகருக்கு மஹா கும்பாபிஷேகம்


மஹா கும்பாபிஷேகம் ஆனந்தமாக நடந்து முடித்த பின் தசதானம், தச தரிசனம் நடைபெற்று அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது, நதியாய்ப் பாயும் திரவியங்களால் அம்மன் மனம் குளிர அபிஷேகம் நடைபெற்றது. பின் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் அனைவருக்கும் அற்புத தரிசனம் தந்தாள்.



அம்மன் திருக்கல்யாணம்




கும்பாபிஷேகம் என்பது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வெறும் திருக்கோவிலை சீர்படுத்துவது மட்டுமில்லை. அந்த தெய்வத்தை வணங்கும் அனைவருக்கும் நன்மையை வேண்டியும் , அக்கோவில் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள அனைவரின் நன்மையும் வேண்டித்தான். எனவேதான் கும்பாபிஷேகம் நடந்த அன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு உள்ள தோஷங்கள் நீங்கி அவர்கள் விரைவில மணம் கூட இந்த உற்சவங்கள் நடைபெறுகின்றன.

திருக்கல்யாணம் முடிந்த பின் காப்பு நீக்கும் நிகழ்ச்சியும் , முளைப்பாலிகைகள் கங்கை ( அமராவதி) ஆற்றில் சேர்க்கப்பட்டன. தற்போது நந்தா தீபமும் மண்டாலாபிஷேக நித்ய அபிஷேகங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.



அடியேனின் வேண்டுகோளை ஏற்று கும்பாபிஷேகத்திற்க்கு பொருள் உதவி செய்த அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள். அம்மன் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

அங்காள பரமேஸ்வரியின் மஹா கும்பாபிஷேகம் - 4

அதிசயமான வடிவுடைய அஹம் காளி
முக்கண் முதல்விக்கு மூன்றாம் கால யாக பூஜை


ஆனந்தமாய் நடைபெறும் யாக சாலை பூஜை கண்டருளும் உற்சவர் அம்மன்
நாக பீடத்தில் குண்டலினி சக்தியாக தரிசனம் தரும் அழகு



சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்

வந்து அரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே


சுந்தரி - அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன் தலைமேல் அந்தரி - அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே

அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை (கபாலத்தை)தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

திரு குமரன் அவர்களின் விளக்கம் மேலே உள்ளது. நன்றி குமரன் ஐயா . இப்பாடலில் அங்காள பரமேஸ்வரி அம்மனின் ஒரு சரித்திரம் பற்றி கூறப்பட்டுள்ளது. எம் ஐயன் செய்த அஷ்ட வீரச் செயல்கலுள் ஒன்று ஆணவம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரம் கொய்தது. அவ்வாறு கொய்த போது பிரம்மன் கொடுத்த சாபத்தால் அந்த பிரம்ம கபாலம் ஐயனின் கையில் ஒட்டிக் கொண்டது ஐயனும் பிக்ஷாடணராய் அலைந்தார், ஐயனின் நிலை கண்டு அன்னை அந்த பிரம்ம கபாலத்தை தன் கையில் வாங்குகின்றாள். அதானால் அன்னைக்கு பித்து பிடிக்கின்றது அவள் மயானத்தில் அலைகின்றாள். அன்னையின் நிலையை மாற்ற அண்ணாமலையார் வருகின்றார் , அன்னை அவரை தொடர்ந்து செல்லும் போது மேல் மலையனூரில் அக்னி தீர்த்தத்தை ஐயன் கடந்து சென்று விட அம்மன் ஆழத்தில் நின்று விடுகின்றாள். அப்போது ஐயன் அம்மையை அங்காழம் பெண்ணே என்று அழைத்ததே அம்மன் திருப்பெயராக அங்காளம்மன் ஆகியது. பின்னர் ஏழு ஊர் மயானமான மேல் மலையனூரில் அண்ணன் மஹாவிஷ்ணு யோசனையின் படி ஒரு மஹா சிவராத்திரியன்று அம்மன் சோறு சூரையிட அந்த பிரம்ம கபாலம் கீழே இறங்க அம்மன் மேல் மலையனூரில் நாம் எல்லோரும் உய்ய திருக்கோயில் கொண்டாள் என்பது வரலாறு.


லலிதா சகஸ்ரநாம பூஜைக்காக அமைக்கப்ப்ட்ட லலிதா திரிபுர சுந்தரி
யாக சாலையில் எழிலாக கொலுவிருக்கும் அழகு

லலிதா பரமேஸ்வரி, மூலவர் அம்மன், உற்சவர் அம்மன் மூவரையும் மற்றும் யாக குண்டத்தினையும் ஒன்றாக இப்படத்தில் தரிசனம் செய்கின்றீர்கள். மாலை மூன்றாம் நாள் யாக பூஜையின் போது ஷடத்வா ஹோமம், மூல மந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம் அஸ்திர மந்திர ஹோமம் ஆகிய ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதற்குப்பின் அம்மனை வாக் தேவிகள் துதித்த ஆயிரம் நாமங்களால் அதாவது லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது.



அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி என்பதால் தானே அன்னை அங்காள பரமேஸ்வரி மஹா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகின்றள். அன்னை அற்புதமாய் பூரண அலங்லாரத்தில் கொலுவிருந்து அருள் புரியும் இக்கோலத்தை காணக் கண் கோடி வேண்டுமல்லவா.



நவ குண்டங்களில் நவ சக்திக்கு ஆனந்தமாய் ஹோமங்களும், அர்ச்சனையும், விசேஷ த்ரவ்யாகுதி நடக்கும் அற்புத காட்சி, இதை அடுத்து பூர்ணாகுதி நடைபெற்று உபசாரங்கள் சிறப்பாக நடைபெற்றது.

மூன்றாம் கால யாக பூஜை நிறைவாக அம்னுக்கு தீபாரதனை
( கும்ப தீப தரிசனம் காண்கின்றீர்கள்)


உபசாரம் என்பது ஒருவரை புகழ்ந்து கூறுதல் என்று பொருள் படும். இங்கே சகல புவனத்திற்கும் இராணியாக விளங்கும் அன்னைக்கு உபசாரங்கள் நடைபெறுகின்றன அதில் கவரி வீசி அன்னையை குளிர்விப்பதை தரிசனம் செய்கின்றீர்கள்.

மூன்றாம் கால யாக பூஜையை தரிசனம் செய்வதால் ஐஸ்வர்யம் சித்திக்கும் என்பது ஐதீகம்.

இரவு பத்து மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளை அவர்களுடைய பீடத்தில் அமர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் பீடத்தில் நவரத்தினங்கள், சொர்ணம் முதலிய விலையுயர்ந்த பொருட்களும், யந்திர ஸ்தாபனமும் நடைபெற்று பின் பிம்பங்கள் அமைக்கப்பட்டு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.


அடுத்த பதிவில் நான்காம் கால யாக பூஜை , கும்பாபிஷேக மற்றும் திருக்கல்யாண அருட்காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........

அங்காள பரமேஸ்வரியின் மஹா கும்பாபிஷேகம் -3

மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடி கோமளவல்லிக்கு முதற்கால யாக பூஜை

விநாயகர் மற்றும் பால முருகன் கும்பங்கள்


விமான கலச கும்பங்கள்

யாக சாலையில் அங்காள பரமேஸ்வரியம்மன் கும்ப ரூபத்தில்
பூரண அலங்காரத்தில் பொலிவுடன் விளங்கும் அழகைக் காணுங்கள்.


யாக சாலையின் நான்கு வாயில்களே நான்கு யுகங்கள் எனவே ஒவ்வொரு கால பூஜையிலும் முதலில் விக்னேஸ்வர பூஜை நடைபெறுகின்றது பின் நான்கு துவாரங்களுக்கும் பூஜை நடைபெறுகின்றது. துவார பூஜைக்குப்பின் வேதிகார்ச்சனை. பின்னர் நான்கு யாக குண்டங்களிலும் அக்னி விபாஜனம் ஆகி முதல் கால யாகம் நடைபெற்றது.

யாகத்தின் போது பல திரவியங்கள் யாகத்தீயில் இடப்படுகின்றன. அவற்றினால் உண்டாகும் புகை நமது உடலின் பல நோய்களை தீர்க்கவல்லன ஆகவே தான் கும்பாபிஷேக காலத்தில் கலந்து கொள்வது மிகவும் நல்லது. முதற்கால பூஜையின் நிறைவாக தீபாரதணை நடைபெற்றது.

யாக சாலையில் உற்சவர் அம்மன்.

உற்சவர் அம்மனை பற்றி கூறும் போது ஒன்றை கூறாமல் இருக்க முடியாது. 70களில் நடந்த சம்பவம். கிராமத்துக் கோவில் என்பதால் அதிக பாதுகாப்புக் கிடையாது. உற்சவ அம்மன் மூர்த்தி சிறிது தான் ஆனால் அம்மையின் கீர்த்தி பெரிது. அம்மையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, இடக்காலை மடக்கி வலக்காலை தொங்க விட்டு வீராசனத்தில் நான்கு கரங்களில், சூலம், கபாலம், உடுக்கை, பாசம் தாங்கி அக்னி ஜுவாலையுடன், திருவாசியில் உள்ள கோலங்கலும், ஓம் என்னும் பிரணவமும், ஐந்து தலை நாகம் குடைப் பிடிக்க மிகவும் எழிலாக வீற்றிருக்கும் அம்மையின் அழகை நேரில் காண்கின்றீர்கள். ஒரு பக்கம் இருந்து பார்த்தால் அன்னை உக்ர ரூபிணியாய் காட்சி தருவாள் அந்த ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அதே நாம் மனக் கனிந்து தாயே நான் உன் பிள்ளையல்லாவா? லோக மாதாவே என்று பார்த்தால் அப்படியே சாந்த சொரூபியாக காட்சி தருவாள் அன்னை திரிபுர சுந்தரி இராஜ ராஜேஸ்வரி இவ்வாறு ரௌத்ரமும் சௌந்தர்யமும் இனைந்த மூர்த்தம் அன்னை அங்காள பரமேஸ்வரி.

அன்னையின் அழகில் மயங்கிய சில துஷ்டர்கள் அந்த லோக மாதாவையே திருட முயற்சி செய்துள்ளனர். அம்மை தன்னை கோவிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதித்தாள், திருடர்களும் மனம் மகிழ்ச்சி கொண்டு கோவிலின் வெளியே சென்றனர். அங்கு தான் அன்னை தன் சக்தியை அவர்களுக்கு காண்பித்தாள் அக்னி ஜுவாலையையே மகுடமாக கொண்ட அந்த அங்காள பரமேஸ்வரி, ஆதி சக்தி தீப்போல தகித்தாளோ? அல்லது ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்த அம்மை எவ்வாறு கனந்தாலோ? அல்லது அவர்கள் முன் தன் நாக ரூபத்தைக் காட்டி மிரட்டினாளோ? என்ன சோதனை கொடுத்தாள் என்று தெரியவில்லை, துஷ்டர்களை கருவறுக்கும் அம்மனின், துர்கா தேவியின், காளியின் உக்கிரம் தாங்க முடியாமல் , அன்னையை திருடிய அந்த கயவர்களால் அப்படியே அருகில் இருந்த வேலியில் அம்மனைப் போட்டு விட்டு ஓடி விட்டனர். அடுத்த நாள் காலை பூசை செய்ய வந்த பூசாரி, உற்சவ அம்மனைக் காணாது திகைத்தார். அம்மை தன் இருந்த இடத்தை உணர்த்த கோவிலை சுற்றி தேடிய போது வேலியில் அன்னை கிடைத்தாள். இது தாய் நடத்திய ஒரு திருவிளையாடல்.

யாக பீடத்தில் அம்மன்


முதற்கால யாக பூஜை முடிந்து தீபாராதனை


முதற்கால யாக பூஜையை தரிசனம் செய்வதால் ஞானம் சித்திக்கும் என்பது ஐதீகம்.

***********

இம்மையிலும் இன்பம் சேர்க்கும் இறைவிக்கு இரண்டாம் கால யாக பூஜை

எந்த மனிதனுக்கும் மூன்று வித கடன்கள் உள்ளன அவையாவன தங்களுடைய மூதாதையர்களுக்கு செலுத்த வேண்டிய பித்ரு கடன், ரிஷிகளுக்கு செலுத்த வேண்டிய ரிஷி கடன், மூன்றாவது தேவர்களுக்கு செலுத்த வேண்டிய தேவ கடன், குல மக்கள் சார்பாகவும், கிராம மக்கள் அனைவருக்காவும் சிவாச்சாரியார்கள், இரண்டாம் கால யாக பூஜைக்கு பூர்வாங்கமாக இம்மூன்று கடன் தீர்க்கும் சடங்குகளை செய்கின்றனர்.

தாங்கள் காண்பது பிம்ப சுத்தி எனப்படும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படும், பால முருகன் விக்ரகம், பலி பீடம் மற்றும் விமான கலசங்கள் ஆகியவற்றிக்கு முதலில் அபிஷேகம் நடைபெற்று பின் பூஜைகள் நடைபெற்று நூதன ஸ்தூபி ஸ்தாபனம் என்னும் கலசங்கள் விமானத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.



சயனாபிஷேகம் கண்டருளுகின்றார் புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள பால முருகன்.

இரண்டாம் நாள் காலை விமானத்தில் உள்ள அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும் ஸ்தபதிகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின் வேத பாராயணம், தேவார திருவாசக பாராயணம், முடிந்து தீபாராதணையும் அ்தைத் தொடர்ந்து உபசாரங்களும் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாம் கால யாக பூஜையை தரிசனம் செய்வதால் வைராக்கியம் சித்திக்கும் என்பது ஐதீகம்.




அடுத்த பதிவில் மூன்றாம் கால யாக பூஜை மற்றும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை காட்சிகளைக் காணலாம் அன்பர்களே.

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........

அங்காள பரமேஸ்வரியின் ஆனந்த கும்பாபிஷேகம் -2


விமானத்தின் நடு தளத்தில் அருள் பாலிக்கும்
அன்னை அங்காளபரமேஸ்வரி

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்த பூரணிக்கு ஆகமவிதிப்படி நடைபெற்ற பூர்வாங்க பூஜைகள். முதல் நாள் காலை விக்னங்கள் அனைத்தையும் போக்கும் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பின் கோ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றன. அன்று மாலை ப்ரவேச பலி - பூத, பிசாச, பிரம்மராக்ஷஸர்களுக்கு பலி (நைவேத்யம் முதலாகிய உபசார பொருட்கள்) கொடுத்து அவற்றை ஏற்றுக் கொண்டு வேறிடம் செல்லுமாறு அவர்களை வேண்டிக் கொண்டு இடையூறுகளை நீக்கிக் கொள்ளும் நிகழ்ச்சியும், ரக்ஷோக்ன ஹோமம் எனப்படும் ஆலயத்தின் உள்ளிருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றும் ஹோமமும் நடைபெற்றது.

இரண்டாம் நாள் காலை நவக்ரஹ பிரீத்திக்காக நவக்ரஹ ஹோமம் நடைபெற்றது. அன்று மாலை வாஸ்து சாந்தி - என்னும் இடத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகஹ்திற்க்கு முன் இடத்திற்க்கு தேவதையாக உள்ள வாஸ்து புருஷனையும், அவரது அதி தேவதையான ப்ரம்ம தேவரையும் சக்திகளையும் பூசித்து , ஏணைய தெய்வங்களையும் வழி்பட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுதும் இழுத்து சென்று சுத்திகரித்து , இறுதியாக புண்யாஹவாசன கலச நீரால் அவ்விடங்களை சுத்தி செய்வது வாஸ்து சாந்தியின் நிறைவு.

மூன்றாம் நாள் காலை அனைவரும் அறம் செய்து நல்ல பொருள் பெற வேண்டி மஹாலக்ஷ்மி ஹோமம் மற்றும் தன பூஜை சிறப்பாக நடைபெற்றது. மேலும் திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமமும் சிறப்பாக நடைபெற்றது.





நவ யாக குண்டங்கள்

நவ சக்தியாக அருள் பாலிக்கும் அன்னை அங்காளபரமேஸ்வரிக்கு யாக சாலையில் நவ குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எட்டு திசைகளுக்கு எட்டு யாக குண்டங்கள் மற்றும் ஒரு பிரதான யாக குண்டம் சேர்த்து மொத்தம் ஒன்பது யாக குண்டங்கள்.

மூன்றாம் நாள் மாலை பூர்வாங்க பூஜையின் நிறைவாக அங்குரார்ப்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாசாரியார் 5 நாள் முன்னதாக மங்கள முறைப்படி முளையிட்டு நன்கு வளர்ந்திருந்த பயிர்கள் யாக சாலையை சுற்றி வைத்து அலங்கரித்தோம். அடுத்து ரக்ஷா பந்தனம் என்னும் காப்புக்கட்டு நடைபெற்றது. விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக சிவாசாரியார்கள் மற்றும் ஐந்து பேருக்கும் மூல மூர்த்திக்கும் மற்ற பரிவார தேவதைகளுக்கும் தத்தம் இடத்தில் ரக்ஷா பந்தனம் செய்தனர். இனி வரும் படங்கள் கும்பாலங்காரம் மற்றும் கும்பஸ்தான நிகழ்ச்ச்சிகளின் படங்கள்.

இங்கே மூலவர் அம்மன், விமான கலசம் மற்றும் விநாயகர்
ஆகிய மூன்று கும்பங்களுக்கு அலங்காரமும் ஸ்தானமும் நடைபெறுகின்றது.


இறைவனை தற்காலிகமாக உருவேற்றி பூஜிப்பதற்கென கும்பங்கள் கலாகர்ஷணப் பொருளாக ஸ்தாபிக்கப் படுகின்றன. இது அல்லது கடஸ்தாபனம் அல்லது ஸ்நபனம் எனப்படும். இப்படி ஸ்தாபிக்கப் பட்ட கும்பமே மூர்த்தியாக பாவிக்கப்படுகின்றது.

கும்ப பாத்திரம் மண் ( உலோகம்) உடலுக்கு உரிய அம்சம், அதில் சுற்றியுள்ள நூல் எழுபத்து இரண்டு ஆயிரம் நாடிகள், அதில் சுற்றப்படும் வஸ்திரம் தோல், கும்பத்தில் நிரப்பப் படும் புனித நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள், கும்பத்தில் இடப்படும் நவரத்தினம், பொன், வெள்ளி முதலியன சுக்கிலம், உள்ளே இடப்படும் கூர்ச்சம் முள்ளந்தண்டு எனப்படும் முதுகெலும்பு, மாவிலை அன்னையின் ஜடாமுடி, தேங்காய் அன்னையின் திருமுகம், மேலே இடப்படும் கூர்ச்சம் குடுமி, கீழே பரப்பப்படும் தானியங்கள் ஆசனம், உத்தரீய மாலைகள் மலர்கள் முதலியன அலங்காரப் பொருட்கள். கும்பத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து நியாஸங்கள், முதலான மந்திரங்களின் மூலம் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது. கும்பாபிஷேகத்தின் போது கும்பத்திலிருந்து இந்த சக்தி பிம்பத்திற்க்கு மாற்றப்படுகின்றது.

பூரண கும்பங்கள்

அன்னைக்கு இமய முதல் குமரி வரையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும் வந்து சேர்ந்தன. இது மிகையாக கூறப்படவில்லை உண்மைதான். பாதத்திலிருந்து ஆரம்பிப்போம். நீலக்கடல் ஒரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னைனையின் பாதம் வருடும் முக்கடலும் சங்கமிக்கும் தீர்த்தம் வந்தது. திருச்செந்தூரிலிருந்து முருகன் தீர்த்தம் வந்தது. இராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தம் முதலான 32 தீர்த்தங்களும் வந்தன. தண் பொருநை என்னும் தாமிரபரணி நதி தீர்த்தம் வந்தது. மீனாக்ஷி அம்மனின் வைகை நதி தீர்த்தம் வந்தது. கொங்கு மண்டலமாம் கோவை மாவட்டத்தின் தீர்த்த ஸ்தலங்களான, திருமூர்த்தி மலை, கொடுமுடி காவிரித் தீர்த்தம் வந்தது, அன்னையின் தாய் வீ டு மேல் மலையனூர் அங்கிருந்து அன்னை பித்தம் தெளிய நின்ற அக்னி தீர்த்த நீர் வந்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்பர்கள் கிருஷ்ணா நதி நீரைக் அன்னைக்கு அர்பணித்தனர். கங்கா தீர்த்தம் இல்லாமல் இருக்குமா கங்கை தீர்த்தமும் வந்தது.
மலைகளுக்கு அரசன் இமயமலையில் இருந்து கேதார்நாத் பத்ரிநாத் கங்கை தீர்த்தமும் வந்தன.

திருக்கயிலாயம் முடியல்லவா, அத்திருக்கயிலாயத்தின் உள்ள , அன்னை மலையரசன் பொற்பாவை, மலைமகள், கிரிஜா, கிரி கன்யா, பார்வதி, இமவான் புத்ரி, கௌரி தானே தன் சேடிகளுடன் நீராடும் கௌரி குள தீர்த்தமும், அன்னை தானே ஆன மானசரோவர் தீர்த்தமும் அன்னையின் ஆனந்த அபிஷேகத்திற்க்காக வந்தது.

பாரத தேசத்தின் அடி முதல் முடி வரை உள்ள தீர்த்தங்கள் நிரப்பப்பெற்று கும்ப அலங்காரம் நிறைவு பெற்று கலாகர்ஷணம் இனிதே நிறைவு பெற்றது.

அம்மன் திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டதால் அன்னை பாலாலயம் என்னும் இளங்கோவிலில் கடந்த ஒரு வருட காலத்திற்க்கும் மேல் இருந்து அருள் பாலித்துக்கொண்டு இருந்தாள். கும்பம் அங்கு எடுத்து செல்லப்பெற்று பாலாலயத்திலிருத அம்மன் கும்பத்திற்க்கு மாற்றப்பட்டாள். பின் யாக சாலை பிரவேசம் செய்து யாக பீடத்தில் குண்டலினி சக்தியாக குரு தக்ஷிணா மூர்த்தியாக நான்கு கால பூஜை கண்டருள அன்னை ஆசனம் கொண்டாள்.


விமானத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள
திக் பாலக சக்திகள் இருவர்

அடுத்த பதிவில் நான்கு கால யாக பூஜை நிகழ்ச்சிகளையும் மற்றும் நிறைவாக கும்பாபிஷேகம் காட்சிகளையும் வந்து தரிசியுங்கள்.

கும்பாபிஷேகத்தின் முதல் பகுதியை இங்கே தரிசியுங்கள்

(படங்களின் மேல் கிளிக்கினால் அவற்றை முழுதாக பார்க்கலாம்)

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........

Wednesday, June 24, 2009

அங்காள பரமேஸ்வரியின் அற்புத கும்பாபிஷேகம் -1

"கல்லால் கோவில் அமைத்தோர் கயிலை விட்டு அகலார்" என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு திருக்கோவில் அமைத்து கும்பாபிஷேகம் செய்வது என்பது ஒரு பெறர்கரிய பேறு. எங்கள் குல தெய்வத்திற்க்கு 28-05-09 அன்று நான்கு கால யாக பூஜைகள் நிறைவேறி அற்புதமாக மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அம்மனின் அருகிலேயே இருந்து பெற்ற அந்த தெய்வீக அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள் அனைவரும் வந்து தரிசித்து அம்மன் அருள் பெறுமாறு தாழ்மையுடன் அழைக்கின்றேன்.

அடியேனின் குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி. அம்மன் கோவில் கொண்ட இடம் தற்போதைய திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், காரத்தொழுவு கிராமம். அமராவதி ஆற்றங்கரையில் அன்னை கோவில் கொண்டிருக்கின்றாள். அந்த அன்னைக்கு பல வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேகத்தின் சில காட்சிகள்.

புதுப் பொலிவுடன் வர்ண கலாபங்களுடன் மின்னும்
நூதன விமானத்தில்
அன்னை அங்காள பரமேஸ்வரி

பஞ்ச கிருத்ய பாராயணி அன்னை பராசக்தி பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டு நம் அனைவருக்கும் நலம் அருளும் பொருட்டு பக்தர்கள் அனைவரின் குறைகளையும் களையும் பொருட்டு கருணையே வடிவாகி அன்பே உருவாகி ஓங்காரரூபமாய் அவதரித்து அன்னையாய் அரவணைத்து அனைத்து உலகங்களையும் படைத்தல், காத்தல், அழித்தல் மறைத்தல், அருளல் எனும் ஐம்பெரும் தொழில் தன்னகத்தே கொண்டு உலக உயிர்கள் இன்புற்று வாழ ஆதிபராசக்தி, அங்கயற்கண்ணி, நாரணன் சோதரி, பத்ரகாளி, வனதுர்கா, வாமா, ஜேஷ்டா, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலபிரதமனி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் ஆயிரமாயிரம் நாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கும் பொருட்டு குலம் தழைக்கவும், குழந்தைச் செல்வம் தரும் பொருட்டும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும் பொருட்டும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பயன் பொருந்தும் பொருட்டும் கும்பாபிஷேகம் கண்டருகின்றாள்.


அம்மன் விமானத்தில் அமைக்கப்பட்ட கலசங்கள்

கர்ப்பகிரகத்தில் இருந்த கோணவட்டக் கல்லில் பிளவு ஏற்பட்டதால் பழைய ஆலயம் முழுவதையும் பிரித்து எடுத்து அந்த கற்களைக் கொண்டே நூதன ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பகிரம், அர்த்த மண்டபம் கட்டி, மஹா மண்டபத்துடன் நூதன விமானமும் கட்டப்பட்டு பால முருகன் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மனின் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் விரோதி வருடம் வைகாசி மாதம் 14ம் தேதி வியாழக்கிழமை சுக்ல பக்ஷ பஞ்சமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோ சுப தினத்தில் சிறப்பாக நடைபெற்றது.


விமானத்தின் முன் பக்க தோற்றம்


கிழக்கு நோக்கிய விமானம் மூன்று அடுக்காக அமைந்துள்ளது, கீழ் அடுக்கில் முன் பக்கம் அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் அஷ்ட திக் பாலக சக்திகளின் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இரண்டாம் அடுக்கிலும் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பூதம் பூதகிகள் விமானத்தை தாங்குவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேல் அடுக்கில் அம்மனின் வாகனம் நந்தி வாகனம் அமைக்கப்படுள்ளது. பெரும்பாலான திருக்கோவில்களில் அம்மனின் வாகனமாக அன்னைக்கு இமவான் அளித்த சிம்மமே வாகனமாக இருக்கும். வெகு சில தலங்களில்தான் அன்னைக்கு நந்தி வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும், இத்தலத்தில் நந்தி வாகனமாக இருப்பது ஒரு சிறப்பு. நந்தி வாகனம் அன்னை ஈஸ்வரி அம்சமாக இருப்பதை குறிக்கின்றது.



விமானத்தின் தெற்கு தோற்றம்

கீழ் தளத்தில் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கையில் வைத்த மதுரை அரசாளும் மீனாக்ஷி அம்மன். இரண்டாம் தளத்தில் மான் மழுவேந்திய சங்கரி.



விமானத்தின் பின் பக்க தோற்றம்

பின் புறத்தில் காசியிலே அருள்பாலிக்கும் விசாலாக்ஷி அம்மன் கீழ் தளத்தில் நடு தளத்தில் சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கும் மஹாலக்ஷ்மி அம்மன் அலங்கரிக்கின்றாள்.


விமானத்தின் தெற்கு பக்க தோற்றம்

கீழ் தளத்தில் மஹா லக்ஷ்மியையும், மஹா சரஸ்வதியையும் தன் கண்களாகக் கொண்டு கடாக்ஷிக்கும் மாநகர் காஞ்சி காமாக்ஷி. நடு தளத்தில் நான்கு முகங்களுடன் பிராஹ்மி, மேல் தளத்தில் வீணையுடன் மஹா சரஸ்வதியும் அலங்கரிக்கின்றனர்.

அம்மனின் விமானம் கண்டோம் இனி அம்மனின் கும்பம் ஸ்தாபிக்கப்படும் பிரதான யாக சாலையின் பீடத்தைக் காண்போம்.

யாக சாலை பீடத்தின் முன் பக்க தோற்றம்

இப்பூமியை தாங்கும் மஹா கூர்மம் இங்கு அம்மனின் பீடத்தையும் தாங்குகின்றது. மஹா கூர்மத்தின் மேல் குண்டலினி சக்தியாக அம்மன் ஆதி சேஷனாக காட்சி தருகின்றாள். மஹா நாகத்தின் மேல் அம்மனின் வாகனமான சிம்மம் எட்டு திக்கையும் காவல் காக்கின்றது. என் கோண மேல் தளத்தில் சனகர், சனந்தர் , சனாதனர், சனத் குமாரர் ஆகிய நான்கு சனகாதி முனிவர்கள் யோக கோலத்தில் காட்சி தருகின்றனர். மேல் தளத்தில் அம்மனுக்கு பத்ம பீடம். இவ்வாறு குண்டலினி சக்தியாக சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாகவே உண்மைப் பொருளை உணர்த்திய் ஆதி குரு தக்ஷிணா மூர்த்தி ரூபிணியாகவும் அன்னை விளங்கும் வண்ணம் அன்னைக்கு பீடம் அமைக்கப்பட்டது.

யாக சாலை பீடத்தின் தெற்கு தோற்றம்

பீடத்தின் பின் பக்க தோற்றம்

யாக சாலை பீடத்தின் வடக்கு தோற்றம்

பீடத்தில் தாங்கள் பார்க்கும் கலசங்கள் எல்லாம் பரிவார தேவதைகளுக்கான கலசங்கள். பிரகாரத்தில் நிருதி விநாயகர், கருப்பணசாமி, மன்மதன்- ரதி, பைரவர் ஆகிய பரிவார தேவதைகள் அருள் பாலிக்கின்றனர் இத்தலத்தில்.

மஹா கும்பாபிஷேக காட்சிகள் தொடரும்...........