மாங்கனி என்றாலே அனைவருக்கும் மஞ்சள் நிற பழத்தின் சுவைதான் நினைவுக்கு வரும். ஒரு சிலருக்கு அது ஞானப்பழம் என்று தெரியும், வெகு சிலருக்கே அது தன்னுடைய ஒரு பக்தைக்காக சிவபெருமான் கொடுத்த பழம், அதைக் கொண்டு ஒரு அற்புதத் திருவிளையாடல் அந்த ஆண்டவன் நடத்தினார் என்பதும் அந்த மாங்கனியின் பெயரால் ஒரு திருவிழாவே நடைபெறுகின்றது என்பது வெகு சிலருக்கே தெரியும் அந்த வரலாற்றைப் பற்றியும் மாங்கனித் திருவிழாவைப்பற்றியும் இப்பதிவுகளில் காணலாம்.
சிவத்தொண்டே உயிர் மூச்சாகக் கொணடு, தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவ பெருமானுக்கே அர்ப்பணித்து, யாரும் செய்ய நினைக்க முடியாத செயல்களையும் செய்து சிவனருள் பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். நாயன்மார்கள் அறுபத்து மூவருள் மூவரே பெண்கள் அவர்களுள் மூத்தவர் அம்மையார். அனைத்து உயிர்களுக்கும் அமுது படைக்கும் அந்த சர்வேஸ்வரனுக்கே அன்புடன் அமுது படைத்தவர்தான் காரைக்காலம்மையார்.
எம்பெருமானுடைய திருவாயினாலேயே வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் என்று பார்வதி தேவிக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். என்புருவுடன் திருக்கயிலாய மலையில் காலால் நடந்து செல்லக்கூடாது என்று தலையால் நடந்து சென்றவர். தற்போதும் ஐயனின் காலடியில் திருவாலங்காட்டில் அவரின் திருப்பாத நிழலில் அமர்ந்து ஐயனது புக்ழைப்பாடிக்கொண்டிருப்பவர். அவரது வரலாற்றையும் ஐயன் மாங்கனி அருளிய லீலையும் காண்போமா?
பேயுருவில் காரைக்காலம்மையார் திருமூர்த்தம்
காரைக்கால் என்னும் கடிநகரிலே ஒரு வணிகரின் குடும்பத்திலே தனதத்தர் என்பருவக்கு திருமகளராய் சிவபெருமானின் அருளால் அம்மையாரின் அவதாரம் நடைபெற்றது. வாராதது வந்த மாமணியாம் திருமகளாரை "புனிதவதி" என்னும் திருநாமமிட்டு, தமது கண்ணின் மணியாக அம்மையாரை வளர்த்தார் இவரது தனதத்தர் , கூடவே சிவஞானப்பாலையும் ஊட்டி வளர்த்தார். காரைக்காலில் உள்ள சௌந்தராம்பிகா சமேத கைலாச நாதரை தினமும் வணங்கி வழிபட்டு வளர்ந்தார் அம்மையார். சிவனடியாரைப் பேணுதல் இவருக்கு இயற்கையாகவே வந்திருந்தது, எப்போதும் அம்மையார் வீட்டில் சிவனடியார் திருக்கூட்டம் நிறைந்திருக்கும். உரிய காலத்தில் இறையருளால் பருவமும் எய்தினார் காரைக்காலம்மையார். இவரது தந்தையார் நாகபட்டிணத்தை சேர்ந்த பரமதத்தருக்கு திருமணம் செய்து வைத்து இருவரையும் காரைக்காலிலேயே வசிக்க வசதி செய்து கொடுத்தார்.
பரமதத்தரும் காரைக்காலில் ஒரு கடை நடத்தி வந்தார். இவ்வாறு இவர்கள் இல்வாழ்க்கை நலமாக சென்று கொண்டிருக்கும் போது அம்மையாருடைய பக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் எம்பெருமான். ஒரு நாள் ஒரு நண்பர் இரண்டு புது வகை மாங்கனிகளை தனதத்தருக்கு பரிசாக வழங்கினார், அவரும் அக்கனிகளை பணியாள் மூலம் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்.
எம்பெருமான் ஆரம்பித்தார் தமது திருவிளையாடலை, திருமாலும் பிரம்மனும் காண முடியா மலர்ப்பாதங்கள் நோக பிக்ஷாடணராக ( பிச்சைத் தேவராக) அம்மையாரின் திருவாயில் முன் வந்து பிச்சை கேட்டார் எம்பெருமான். சிவனடியாரைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அவரை வீட்டிற்குள் அழைத்து அமுது படைத்தார். தமது கணவர் அனுப்பி வைத்திருந்த மாங்கனிகளில் ஒன்றையும் அவருக்கு அம்மையார் படைத்தார். தான் வந்த காரியம் நடந்த திருப்தியில் அம்மையாரை வாழ்த்திவிட்டு சென்றார் சிவனடியாராக வந்த எம்பெருமான். மதிய உணவிற்கு வந்த கணவருக்கு உணவிற்குப்பின் மற்றொரு மீதமிருந்த கனியை பதம் செய்து அளித்தார் அம்மையார். மாங்கனியின் சுவையில் மகிழ்ந்த அவர் மற்றொரு கனியையும் கேட்டார், திகைத்தார் அம்மையார்,மற்றொரு கனியைத்தான் சிவனடியாருக்கு படைத்து விட்டோமே என்ன செய்வது என்று தவித்த அம்மையார் அந்த முக்கண் முதல்வனிடமே சரணடைந்தார். "இறையருளால் அவர் கையில் ஒரு அற்புத மாங்கனி தோன்றியது" . மகிழ்ச்சியுடன் கணவருக்கு அதை அளித்தார் அம்மையார். இந்த கனியின் சுவை முன்னதை விட அதிகமாக இருந்ததால் என்ன நடந்தது என்று வினவினார் கணவர். இறையருளால் மாங்கனி கிடைத்த உண்மையைக் கூறினார் அம்மையார்.
நடந்ததை நம்பமுடியாத அம்மையாரின் கணவர் இன்னொரு முறை கனி பெற்றுத்தருமாறு கேட்க அம்மையாரும் அவ்வாறே பெற்றுத்தந்தார். பரமதத்தர் கரத்தில் வந்ததும் அந்த தெய்வீகக் கனி உடனே மறைந்து விட்டது. அதைக் கண்ட அவர் அம்மையார் தெய்வப் பிறவி இனி அவருடன் வாழ்வது பாவம் எனக் கருதி அவரை விட்டு விலகி யாரிடமும் ஒன்றும் கூறாமல் பாண்டி நாட்டிற்க்கு சென்று விட்டார். அம்மையாரும் கணவர் திரும்பி வருவார் என்ற நினைப்பில் இறை சிந்தனையுடன் காலத்தை கழிக்கலானார்.
பாண்டி நாடு சென்ற கணவர் காலப்போக்கில் அங்கு வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தாள். அப்பெண்ணுக்கு புனிதவதி என்று அம்மையாரின் பெயரையே இட்டு வளர்த்து வரலானார். இவ்வாறு நாட்கள் சென்று வரும் போது அம்மையாரின் உறவினர் ஒருவர் பாண்டி நாட்டில் இவரது கணவரைக் கண்டதைக் கூறினார். அம்மையாரும் பாண்டி நாடு புறப்பட்டு சென்றார். ஆனால் இவரைக் கண்ட கணவர் மனைவி மற்றும் மகளுடன் அம்மையாரை விழுந்து வணங்கினார்.
பெரிய புராணத்திலே இதைக்கூற வந்த சேக்கிழார் பெருமான் பரமதத்தரே கூறுவதாக அமைத்த பாடல்
" மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெரும் தெய்வமாதல் நானறிந்த பின்பு
பெற்ற இம்மகவு தன்னை பேரிட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்..
கணவனே தன்னை தெய்வமென கால்களில் வீழ்ந்து வணங்கியவுடன் ஊனுடைவனப்பை எல்லாம் உதறி ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரன் தாள் பரவி நின்றார். அந்நிலையில் அவருக்கு உலக பந்த பாசங்கள் அனைத்தும் நீங்கி உணர்வெல்லாம் சிவமேயாகும் ஒப்புயர்வற்ற ஞானம் உதித்ததுஅந்த அற்புத ஆனந்த ஞான நிலையிலேயே அம்மையார் அற்புதத்திருவந்தாதி பாடியருளினார்.
பொற்பதம் போற்றும் நற்கணங்களுள் நாமும் ஒன்று ஆனேன் என்று மகிழ்ச்சி கொண்டார். வானவர் பூமாரி பொழிந்தனர். சிவகணங்கள் ஆனந்த பெருங்கூத்து ஆடின. வானவரெல்லாம் மகிழ்ந்து பாரட்டும் போது, அம்மையார் முன்னே நின்றிருந்த மானுடமாகிய சுற்றத்தார் எல்லாம் அஞ்சி அகன்றனர். பேய் உரு ஏற்று திருக்கைலாயம் ஏகினார். கைலாய மலையிலே தன் கால்கள் படக்க்கூடாது என்று தலையாலே நடந்து செல்லும் போது
இவரை பார்த்த உமையம்மை, " இறைவா வருவது யார்" ? என்று வினவ,
எம் ஐயனும் "வருமிவள் நம்மைப் பேணும் அம்மை காண்" என்று கூறினார்.
மேலும் "அம்மையே வருக" என்று அழைத்து,
வேண்டும் வரம் யாது ? என வினவ,
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்.
பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
"அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க"
என்று எப்போதும் தங்களின் பாத மலரடிகளிலேயே அமர்ந்து தங்களின் பெருமையை பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற வரம் கேட்க, ஐயனும் அவ்வாறே ஆகட்டும், "திருவாலங்காட்டிலே எம் திருவடிக்கீழ் வந்து சேர்க" என்று பணிக்க இன்றும் அம்மையார் இறைவனின் திருவடி நிழலில் அங்கு வாழுகின்றார்.
இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண
ஏழுலுகும் போற்றிசைப்ப எம்மை ஆளும்
அம்மைத் திருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங்காடாம் - திருஞான சம்பந்தர்
சைவ சமய மரபுப்படி இவரை நாயன்மார்களுக்குள் மூத்தவராகக் கருதுவர். இதன் காரணமாக இவர் பாடிய திருப்பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள் " (உயர்ந்தது) என அழைக்கப்பெறுகின்றன . கடவுட் பக்தியுணர்வு மட்டுமின்றி அவர் ஒப்புயற்வற்ற சிறந்த கவிதைத் திறம் வாய்ந்தவராயும் விலங்கினார் அம்மையார். இவர் அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணி மாலை, திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம், திருவாலங்காட்டு திருப்பதிகம் ஆகிய பதிகங்கள் பாடியுள்ளார். இவரது பதிகங்கள் பதினொன்றாம் திருமுறைகளாக விளங்குகின்றன.
எந்த வடிவில் இறைவனை நிணைத்து தவம் செய்தாலும் அந்த வடிவில் அவன் அடியாருக்கு தோற்றமளிப்பான் என்பதை
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தலங்கள் செல்வார்க்கும்
அக்கோலத்து அவ்வ்ருவாம் இறைவன்
என்ற அடிகளில் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாங்கை அழகாக கூறுகின்றார்.
இறைவன் எங்கிருக்கிறான் ? என்பதற்கு
வானர்த்தான் என்பாரும் என்க மற்று உம்பர் கோன்
தானத்தான் என்பாரும் தாம் என்க - ஞானத்தால்
முன் நுஞ்சத்தால் இருண்ட மொய்யொளிச் சேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான்.
என்று தம் நெஞ்சத்தையே இறைவன் வாழும் இடமாக கூறுகின்றார் அம்மையார்.
உலக வாழ்வின் உயர்ந்த முடிவு மெய்ஞான உணர்வே என்பதை இவரின் பாடல்கள் உணர்த்துகின்றன.
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே;
அறிவாய் அறிவிப்பான் தானே; -அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே; விரி சுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.
என்று வேறாகியும், ஒன்றியும், உடனாகியும் எல்லா உயிர்களினுள்ளும். அட்ட மூர்த்தியாகவும் திகழ்பவன் சிவனே என்னும் சைவ சித்தாதந்த்தின் உயிர்ப்பான தத்துவ உண்மையைப் பாடுகின்றார் ஒப்புயர்வற்ற காரைக்காலம்மையார்.
இனி இவர் பொருட்டு "ஆனி பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் காரைக்கால் சௌந்தராம்பாள் உடனமர் கைலாசநாதர் திருக்கோவிலில் நடைபெறும் மாங்கனித் திருவிழாபற்றி நாளை காண்போம்.
2 comments:
அம்மையாரின் சரித்திரம் அதி அற்புதம்.
வளர்க தங்கள் தொண்டு.
நன்றி முருகனருள் அவர்களே.
Post a Comment