Tuesday, June 17, 2008

பிச்சைத் தேவர்

இரவலர் கோலத்தில் சிவபெருமான்

சிவபெருமான் அருவமாக ஆகாய வெளியாகவும், அட்ட மூர்த்தியாகவும், அருவஉருவமாக சிவலிங்கமாகவும், 64 உருவ வடிவிலும் வணங்கப்படுகின்றார். எம்பெருமானின் திருமேனிகளில் மிகவும் சிறப்பு பெற்ற திருமேனி அவர் ஆனந்த தாண்டவனாக ஐந்தொழில் புரியும் ஆண்டவனாக அருள் பாலிக்கும் நடராஜ மூர்த்தம். அடுத்த சிறப்பு பெற்ற மூர்த்தம் தியாக ராஜ மூர்த்தம் எனப்படும் சச்சிதானந்த , ஓங்கார ரூப சோமாஸ்கந்த மூர்த்தம் சிவன். அம்மை மற்றும் ஸ்கந்தனுடன் கூடிய போக மூர்த்தம். அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியிருக்கும் மற்றொரு மூர்த்தம் உமையம்மையுடன் நின்ற கோலத்தில் பிறைச் சந்திரனை அணிந்த சந்திரசேகரர் மூர்த்தம. அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் இன்னொரு மூர்த்தம் தான் பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி என்றெல்லாம் அழைக்கப்படும் பிச்சைத் தேவர் மூர்த்தம்.







பூதகணங்கள் புடை சூழ கையில் பிச்சைப் பாத்திரம் எந்தி பிச்சை கேட்டு வருபவராய் திகம்பர கோலத்தில் எழில் சுந்தரராக ஐயன் அருள் பாலிக்கும் கோலமே பிக்ஷாடணர் கோலம். ஐயன் நிற்கும் கோலமே ஒரு எழில் ஒயிலாக சாய்ந்துதான் நிற்பார் , தோளில் திரிசூலத்தை தாங்கி, மோகனப் புன்னகையுடன் தோளில் பாம்பு தொங்க ஐயன் அளிக்கும் அருட்கோலமே ஒரு அழகுதான். திருக்கோவில்களின் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலை பிக்ஷாடண்ர் உற்சவம் என்னும் இரவல்ர் கோலவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. தாருகாவனத்து இருடிகளின் செருக்கை அடக்கி ஆன்ந்த தாண்ட ஆடிய கோலமே "இரவலர் கோலம்."





ஆணவம் கொண்ட பிரம்மதேவரின் ஒரு தலையை சிவபெருமான் தன் நகத்தால் கிள்ளினார் ஆனால் அந்த பிரம்ம கபாலம் ஐயன் கையிலேயே ஒட்டிக் கொண்டது. அந்த பிரம்ம க்பாலத்தை கையில் பிச்சை பாத்திரமாக ஏந்தி இல்லம் இல்லமாக பிச்சை கேட்டு ஐயன் வந்த கோலமும் பிச்சைத்தேவர் கோலம் தான் .





ஆயினும் பிச்சைத்தேவராக கொண்டாதப்படும் மூர்த்தம், தாருகாவன்த்து இருடிகளின்(ரிஷிகள்) கர்வத்தை அடக்க ஐயன் சுந்தரராக சென்ற கோலம் தான். அந்தக்கதையை இப்பதிவில் காணலாம். நடராஜ பெருமானான ஐயனின் ஆனந்த தாண்டவம் முதன் முதலில் தாருகாவனத்தில்தான் நடந்தது. . தாருகாவனத்து முனிவர்கள் கடவுள் கிடையாது தாங்கள் செய்கின்ற வேள்விகளினாலேயே எல்லாபலன்களும் கிட்டுகின்றன எனவே கடவுளை வணங்க வேண்டியதில்லை என்று இறுமாந்திருந்தனர். முனி பத்தினிகளும் தங்கள் கற்பின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அகந்தை கொண்ட முனிவர்களின் அஞ்ஞானத்தை போக்க எம்பெருமான் சுந்தர மூர்த்தியாகவும்(பிக்ஷாடணர்), மஹா விஷ்ணு மோகினியாகவும் தாருகவனத்துக்கு சென்றனர்.


பிக்ஷாடணர் கோலம்\

(மான் இரு காலில் நிற்கும் அழகைக் காணுங்கள்)


சிவபெருமானின் சுந்தர வேடம் எப்படி இருந்தது தெரியுமா? கட்டிய வேதமாகிய கோவணமும் திருமேனியில் விபூதிப்பூச்சும், பாடும் கனி வாயும், புன் முறுவல் பூத்த திருமுகமும், கிண்கிணி பொருந்திய திருவடிகளில் தரித்த பாதுகைகளும், பலியேற்கும் கபாலமும், தமருகமும், ஏந்திய திருக்கரங்களும் கொண்ட பிக்ஷாடணர் கோலம் பூண்டார் இறைவர் சிவபெருமான். மன்மதன் தவ வடிவம் எடுத்து வந்தார் போல தாருகா வனத்திற்க்கு எழுந்தருளினார் சிவபெருமான். உடன் அனைவரையும் மயக்கும் மோகனப்புன்னகையும் அகன்ற கண்களும், பெருத்த தனங்களும், சிறுத்த இடையும் கொண்டு திரிபாங்கியாக கண்டவரை மயக்கும் மோகினி அவதாரத்தில் உடன் வந்தார் மஹாவிஷ்ணு.




.
அப்பொழுது சுந்தரருடைய திருவடியில் சூழ்ந்த சிலம்பின் ஒலியும், திருமிடற்றினிலின்று வரும் கீதவொலியும், திருக்கரத்தில் ஏந்திய உடுக்கையின் ஒலியும் ஒன்றாகக் கூடி காற்றில் சென்று ரிஷி பத்தினிகளின் காதுகளின் வழியே பாய்ந்து அவர்களை பரவசப்படுத்தின. அவர்கள் நிறையழிந்தனர். தம்மை மறந்தனர். பள்ளத்தை நோக்கி ஓடி வரும் வெள்ளம் போல விரைந்து வந்து பிச்சையிட்டதோடு தங்கள் கை வளையல்களையும், போட்டுவிட்டு ஐயனின் எழில் திருமுகம் கண்டு , சூரியனைக் கண்டு மலரும் தாமரை போல காத்துக் கிடந்தனர். தம்மை இழந்ததோடு, நாணமும் இழந்து, இடையிலிருந்த மேகலையுமிழந்தனர். மன்மதன் அம்பு பட்டு கண்ணீர் சொரிய நின்றனர். சிலர், ஆடை இழந்து நின்றனர் சிலர். அசைவற்று நின்றனர் சிலர், சேரச்சொல்லியும், கூடச்சொல்லியும் பிதற்றினர் சிலர்.


காரைக்கால் பிச்சாண்டவர் வெள்ளை சாத்திப் புறப்பாடு







ரிஷி பத்தினிகளின் நிலை இவ்வாறு என்றால் கர்வம் கொண்ட ரிஷிகளின் நிலையும் ஒன்றும் கூறும்படியில்லை, மோகினியைக்கண்ட அவர்கள் தேனைக்கண்டு ஓடும் தேனியின் நிலையை அடைந்தனர் அவர்கள் தாங்க்ள் செய்து கொண்டிருந்த யாகங்களை எல்லாம் மறந்து விட்டு மோகினியின் பின்னே ஓடினர், மோகினியின் கண் அசைவில் அப்படியே சரிந்து விழுந்தனர், அவள் ஒயிலாக நடந்து செல்ல பித்தாகி அவள் பின்னால் பாடினர், தங்கள் நிலை மறந்து மயங்கி நின்றனர். அவள் கை அசைவில் இவர்கள் பைத்தியமாகி மோகினியின் பின்னால் ஓடினர். இவ்வாறு ரிஷிகளையும் . ரிஷி பத்தினிகளையும் தன் வயம் இழக்கச்செய்த சுந்தரரும் மோகினியும் தம் மாயையை சிறிது விலக்கினர். ரிஷிகள் உண்மை நிலையை உணர்ந்தனர், கோபம் கொண்டு தங்களை இவ்வாறு ஆக்கிய சுந்தரரையும் மோகினியையும் அழிக்க அபிசார வேள்வி நடத்தினர்.





ஐயன் தனது ஆனந்தத் தாண்டவத்தை ஆரம்பித்தார்.





யாகத்திலிருந்து நாகங்கள் புஸ் புஸ் என்று சீறிக்கொண்டு வந்தன அவற்றை ஏதோ மண் புழுவைப் போல எடுத்து ஆப்ரணங்களாகவும், மாலைகளாகவும் அணிந்தார் ஆலகாலத்தையே உண்டு மிடற்றினில் அடக்கிய நீல கண்டர்.





கூரிய கொம்புகளுடன் கூடிய கலை மான் அவரைக் கொல்ல துள்ளி வந்தது மானின் கொம்புகளை உடைத்து அதை சாதுவாக்கி கரத்தில் ஏந்தினார்.





இதனால் கோபம் கொண்ட முனிகள் புலியை உண்டாக்கி அனுப்பினர், கொல்லப்பாய்ந்து வந்த கொடும்புலியைப் பிடித்து அதைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார் ஆனந்தத்தாண்டவர்.





மிருகங்களால் முடியவில்லை என்று அசுரனை அனுப்பினர், முயலகன் வந்தான் பிரம்மாண்டமாக சுந்தரரை விழுங்க, அவனை சிறுவனாக்கி திருவடியில் போட்டு அடக்கினார் திருக்கயிலை நாதர்.





அவர்கள் ஓதிய மந்திரங்கள் ஐயனின் கால் சிலம்பின் நாதமாயிற்று தீமையே இங்கு நன்மையாயிற்று.





இறுதியாக அவர்களின் யாகத்தை அழிக்க யாகத்தீயையே அகலாக்கி கையில் அனல் ஏந்தி ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.





மோகினியாக வந்த மஹா விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களூம் கண்டு மகிழந்தன்ர் ஐயனின் ஆனந்த தாண்டவத்தை. . நடராச மூர்த்தத்தின் சிவபெருமானின் அனைத்து தத்துவங்களையும் குறிக்கும் அடையாளங்கள் உள்ளன அவற்றுள் புலியதளாடை, முயலகன், அனல், நாகங்கள் ஆகியவை இவ்வாறு ஐயன் சுந்தரராக சென்று தாருகாவனத்து இருடிகளின் கர்வத்தை அடக்கிய இந்த திருவிளையாடலின் அம்சங்கள் ஆகும்.









இனி சுந்தர மூர்த்தமான பிக்ஷாடண மூர்த்தத்தின் சிறப்பு அம்சங்களை பார்ப்போமா? திருவடிகளில் மிகப்பெரிய பாதுகைகள், பாதங்களில் சிலம்பு, . ஒயிலாக தோளில் திரிசூலத்தை தாங்கிய லேசாக சாய்ந்த கோலம். திகம்பர வேடம், இடையில் அரைஞாண், இடக்கரத்தில் பிச்சைப் பாத்திரம், வல கரம் மானுக்கு அருகம் புல் ஊட்டும் நளினம். உடம்பு முழுவதும் ஆபரணங்களாக நாகங்கள். எழிலார் திருமுகத்தில் மோகனப்புன்னகை, தலையில் சடாமுடி என்று பிக்ஷாடணர் மூர்த்தம் எழிலாக அமைக்கப்படுகின்றது.

தாருகாவான்த்து முனி பத்தினிகளின் கற்பு நிலையை சோதிக்க திகம்பரராய் வந்து அவர்கள் நிறையழித்த அற்புதத்தை ஒரு கவிஞ்ர் இவ்வாறு பாடுகின்றார்.

அடியில் தொடுத்த பாதுகையும்
அமைந்த நடையும் இசை மிடறும்

வடிவில் சிறப்ப நடந்தருளி
மூஹை ஏந்தி மருங்கனைந்த

தொடியில் பொலி தோன் முனி மகளிர்
சர மங்கையரை மயல் மூட்டி

படியிட்டு எழுதாப் பேரழகால்
பலிதேர் பகவ்ன் திருவுருவம்.



பிச்சைப்பாத்திரம் ஏந்திய ஒரு குண்டோதரன், (பூத கணம்), அல்லது குடைப்பிடிக்கும் குண்டோதரனுடன் இரண்டு குண்டோதரர்கள் ஐயனுடன் எப்போதும் இருப்பர்.. ஐயன் மானுக்கு புல்லுருத்தும் அந்தப் பாங்கும் அதை வாங்க இரண்டு கால்களுடன் துள்ளும் அழகு என்னும் அம்சங்களும் இம்மூர்த்தத்தின் சிறப்பு.
அநேகமாக அம்மை இல்லாமல் தனியாகத்தான் எழுந்தருளுவார் பிச்சாண்டவர்.



காரணீஸ்வரத்தில் எட்டாம் நாள் இரவு பிக்ஷாடணர் உற்சவம்

(ஐயனின் எழிலே எழில் இந்த சுந்தரைக் கண்டு தாருகாவனத்து ரிஷிகளின் பத்தினிகள் எவ்வாறு தன் வசம் இழந்து ஐயனின் பினனால் ஓடாமல் இருந்திருக்க முடியும் சொல்லுங்கள். )






சில தலங்களில் அன்னம் பாலிக்கும் அன்னபூரணியாக அம்மையும் எழுந்தருளுகின்றாள்.



அன்னம் பாலிக்கும் அன்னபூரணி

கோலத்தில் சொர்ணாம்பாள்







வெள்ளீஸ்வரத்தில் மான் ஐயனை முன்னிருந்து ஒயிலாக திரும்பி நோக்கும் வண்ணம் சிறப்பாக அமைந்துள்ளது.





திருமயிலையில் ஒன்பதாம் நாள் ஐயன் இர்வல்ர் கோலத்துடன் மாட வீதி வலம் வரும் போது விமானத்தில் ரிஷி பத்தினிகள் தம் வசம் இழந்து பித்தாகி மயங்கி வரும் நிலை அழகாக சித்தரிக்க்ப்படுகின்றது.





ஐயன் ஆனந்த தாண்டவம் ஆடும் சிதம்பரத்தில் எட்டாம் நாள் இரவு பிக்ஷாடண்ர் உற்சவம் நடைபெறுகின்றது ஐயனின் திகம்பர வேடம் தெரியுமாறு அலங்காரம் செய்கின்றனர், தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார் பிச்சாண்டி.





பல்வேறு ஆலயங்களில் பிச்சாண்டவர் சிற்பம் கல்லிலே கவினாக வடிக்க்ப் பட்டுள்ளதை காணலாம். மேலை சிதம்பரம் எனபப்டும் கோவை பேரூர் பட்டீஸ்வரத்தில் சபாநாயகர் மண்டபத்தில் அமைந்துள்ள எழிலார் சிற்பங்களுள் ஒன்று பிக்ஷாடணர் சிற்பம். மதுரையில் பிக்ஷாடண்ர் சிற்பத்தை காணுங்கள் ( நன்றி - சிவமுருகன்)


மதுரை பிக்ஷாடணர் சிற்பம்

( குண்டோதரன் மற்றும் ரிஷி பத்னியுடன்)




காரைக்காலில் மாங்கனித்திருவிழாவில் வெள்ளை சாத்தி ஆனந்தத் தாண்டவத்துடன் புறப்பாடு கண்டருளி, ருத்ராபிஷேகம் கொண்டருளி, பிச்சைத்தேவராக ஐயன் வரும் அழகைக் காண நாளை வரை பொறுத்திருங்கள் அவரது அழகை நாளை காணலாம். .

No comments: