Monday, July 18, 2016

நானேயோ தவம் செய்தேன் - 5
 இப்பதிவில்  மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா பற்றி காணலாம். . சதா சர்வ காலமும் திருவேங்கடவனையே நினைந்து உருகி தன்னை அவருக்கே அர்ப்பணித்து அவரை தன் கணவனாக பாவித்து திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவர்.
தயிர்பானைக்கு தெலுங்கில் தரிகொண்டா என்று பெயர்.  ராய துர்க்க பகுதியின் மக்கள் ஒரு சமயம் பஞ்சத்தின் போது குடிபெயர்ந்து பிரத்தமிட்டா என்ற பகுதியில் தங்கிய போது லட்சுமி நரசம்மா  என்ற அந்தணப்பெண் தயிர் கடையும் போது அந்தப் பானையில் வந்து தோன்றினார் லட்சுமி நரசிம்மர். எனக்கு கோவில் கட்டி கும்பிடுங்கள் நல்லது நடக்கும்  என்ற அசரீரி கேட்டது. தங்களது கிராமத்தில் அவரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள். எனவே கிராமத்தின் பெயரும் தரிகொண்டா ஆனது.
இக்கிராமத்தில் கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதிகளுக்கு திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் மகவு பிறந்தது. சிறு வயது முதலே திருவேங்கடவனையே தன் கணவனாக வரித்த வெங்கமாம்பா தனக்கு திருமணம் நடந்து இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருந்தாள். அந்த கணவர் நோய்வாய்பட்டு இறந்த போதும் தன் மங்கலச் சின்னங்களை  அகற்ற அவர் அனுமதிக்கவில்லை. அவரது உறுதியைக் கண்ட உறவினர்கள் அவரை தேவுடம்மா என்று வழிபட ஆரம்பித்தனர். வெங்கமாம்பா வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலைக்கு வந்து சேர்ந்தார்.  

                                                        மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா
இவர் ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றியுள்ளார். திருமலையையும், திருவேங்கடவனையும்   பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலை சிறந்த கவியாக  திகழ்ந்த மாத்ருஸ்ரீவெங்கமாம்பா தான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிவு செய்திருக்கின்றார்.
தன் உடல், பொருள்,  ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேங்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின் போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் ஏழுமலையானை  அவர் கண்டு மெய்மறந்தார்
அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ருஸ்ரீவெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியாலு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளித்தட்டில், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன.
தனது 87வது வயதில் தான் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாகத்திற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே தற்போது அன்னக்கூடம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் இவரது சிலையையும் அமைத்துள்ளனர். 
 ஸ்ரீவாரி சேவையின் போது ஒரு நாள் காலை வெங்கமாம்பாள் பிருந்தாவனத்திற்கு சென்று தரிசித்து விட்டு வந்தோம். 


இத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்

சேவை தொடரும் . . . . . . . 

No comments: