Tuesday, August 2, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 26

                          திருச்செங்கோடு மாதொருபாகர் தரிசனம் - 3



அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர், உமையொருபாகர், ஈருருவமும் ஓருருவமானவர் அர்த்தாம்பிகேசர், அர்த்தசிவாம்பிகை, வவ்விய பாகத்து இறைவர்,  சிவசக்தி என்றெல்லாம்  அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி தரிசனம்  அளிக்கிறார்.  இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்
.

 தெற்கு இராஜ கோபுரம்

உளிபடாதது விடங்கம் - அடியில் சதுரபீடம். சுவாமியின் நெற்றில் பள்ளம் - சந்தனத்தை திலகமாக அப்பியுள்ளார்கள்.  வலது திருக்கரத்தால் தண்டாயுதத்தை தாங்கியவாறு பராபரையின் பாகமாகிய இடது திருக்கரத்தை  இடையில் பிடித்திருக்க உடலை சற்று வலதுபுறமாக சாய்த்து மகரகுண்டம் காதில் அசைய முத்துமணி இரத்தினம் இடது காதில் அணி செய்ய தாமரையும் நீலோற்பலமும் ஒரே சமயத்தில் மலர்ந்திருப்பதை போல ஒன்றுக்கொன்று உற்று நோக்கிய கண்களில் இனிய தோக்கும் பூண்டு பச்சைநிற  பட்டாடை இடது தொடையையும், புலித்தோலாடை வலது தொடையும், அலங்கரிக்க முப்புரி நூல் ஒரு பக்க மார்பிலும், சுவர்ண சிமிழ் போன்ற நெருங்கிய தனபாரம் மறுபக்கமும், இயமனை உதைத்த நாக வீர வெண்குடையும், அணிந்த திருவடி ஒருபாகமும், அழகிய சிலம்பின் பிரபை விளங்கிய திருவடி ஒரு பாகமும் கொண்டு அம்மையப்பனாய் ஒரே திருமேனியாய் காட்சியளிக்கிறார் அம்மையப்பர். அவரை வணங்கும் போது அபிராமி பட்டரின்

உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில் வந்து  

எமையும் தமக்கன்புசெய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்

சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,

அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே என்ற பாடலையும் பாடி தரிசித்தோம்.

மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இத்தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

கேதாரகௌரி அம்பாள் வழிபட்ட மரகதலிங்கத்திற்கு தினமும் பால் அபிஷேகம் நடைபெறுகின்றது. இவரை மார்கழி மாதத்தில் அதிகாலை 5 மணிக்கு முன்னர் மட்டுமே தரிசிக்க முடியும்.

                ஊர்த்துவ தாண்டவர்                                            தில்லைக்காளி


அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் சிவபெருமானின் 25 மூர்த்தங்களுள் ஒன்று, வலது புறம் ஐயனும் வாம பாகம் என்னும் இடப்புறம் அம்மையுமாக எழுந்தருளி அருள் பாலிக்க்கும் கோலம். மாணிக்க வாசகர் தொன்மைக் கோலம் என்று பாடியதையும் அபிராமி பட்டர் உமையும் உமையொரு பாகரும் ஏக உருவு என்றும், வவ்வியபாகத்து இறைவர் என்றும்  திருமூலர் பரஞானம், அபரஞானம் இரண்டையும் வழங்கும் அற்புதக்கூத்து என்றும் போற்றுகின்றனர்.    

உமையம்மை வழிபாட்டு நெறியை வலியுறுத்தும் பரமாகமம் என்ற நூலில்  உமையம்மையானவள் தான் மட்டும் தனித்து நின்று ஒன்றாய்  அருளும்போது மோக்ஷத்தையும் இறைவன் என்ற தன் கணவனாகிற சிவனோடு உடனாய் நின்று அருள்கிற போது உலகியல் சார்ந்த வீடு, மனைவி,  மக்கள், செல்வம் போன்ற விருப்பங்களை நிறைவேற்றும் யோகத்தையும், ஆண்பாதி, பெண் பாதியாக ஒரே வடிவத்தில் இருவேறாக தோன்றுவதால்  ஞானத்தையும் அருள்கிறாள் என்று கூறியுள்ளது.

1. உடல் சார்ந்து பசி, தாகம், பிணி, மல, ஜல அவஸ்தைகள் குறைவுபடுதல்,
2. உள்ளம் சார்ந்து காமம், கோபம், பற்று, காதல், ஆணவம், பொறாமை போன்ற தீய குணங்கள் அற்றுப் போதல்.
3. அறிவு சார்ந்து - ஐயம், திரிபு, பொய் இவை அற்றுப் போதல்.
4. ஆன்மா சார்ந்தது - துன்ப இன்பங்கள் அற்றுப் போதல் என்பதாகும்.
5. இவைகளுக்கு மாறாக உடல் எடை குறைதல். எப்பொழுதும் உண்ணாமல் இருக்கும் போதும் சுறுசுறுப்பாக இருத்தல்.
6. உள்ள உணர்வுகளால் பாதிக்கப்படாமல் அமைதியுற்று இருப்பான்.
7. அறிவு முக்காலத்தையும் அறியும் ஆற்றல் பெற்றும், ஆன்மாவானது இறைவனோடு தொடர்பு பெற்றுயிருப்பதே ஞானம்.


இப்பண்புகள் அனைத்தும் ஞானம் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய மேலான ஞானத்தை அருள்வதற்காக உமையம்மையை ‘‘உமையும் உமையொருபாகரும் ஏக உருவில் வந்து’’ என்று  அபிராமி  பட்டர் கூறுகின்றார்.

அக்னி வீரபத்திரர்

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் நிறைவாக  அதன் சாரமாக  வருகின்ற திருநாமங்களான “ஸ்ரீசிவா சிவசக்த்யைக்ய ரூபிணி ஸ்ரீலலிதாம்பிகா” அர்த்தநாரீஸ்வரரையே குறிக்கின்றது.  விளக்கும் ஒளியும், வாக்கும் அர்த்தமும் போல சிவனும் சக்தியும் ஒன்றான உருவமே  சர்வ மங்களகரமான ஸ்ரீலலிதாம்பிகை. அகிலம் அனைத்தும் உருவாவதும் பின்னர் அவை அனைத்தும் லயம் ஆவதும் சிவ சக்தியிடம்தான் என்பது தாத்பர்யம்.

ஸ்ரீலலிதா த்ரிசதியில் உள்ள ஒரு நாமம் “ஈச்வரார்த்தாங்க – சரீராயை  நம:“ அதாவது பரசிவத்தின்பாதி  சரீரம் உடையவள்.

ஸ்ரீருத்ரத்தில் “யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ   சிவா ருத்ரஸ்ய பேஷஜீ ||  - ருத்திரனே! எந்த பரதேவதை உன்னுடைய பாதி சரீரமோ அம்மங்கள ஸ்வரூபிணி உலகுக்கெல்லாம் மருந்து போன்றவள், உனக்கும் மருந்தாகியவள் என்று போற்றுகிறது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாக தரிசனம் தருவதும் சிவ சக்தி ஐக்ய சொரூப அர்த்தநாரீஸ்வரராகத்தான். எனவே அந்தி சாயும் நேரத்தில் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்தமாக ஆடிக்கொண்டு எழுந்தருளும் போது மலை மேல் தீபம் ஏற்றப்படுகின்றது.

அர்த்தநாரீஸ்வர ஸ்தோத்திரம்

அம்ருதாணர்வ மத்யோத்யத் ஸ்வர்ண த்வீபே மனோரமே ||

கல்பவ்ருக்ஷ வனாந்தஸ்தே நவமாணிக்க மண்டபே  ||

நவரத்னமய ஸ்ரீமத்ஸிம்ஹாஸன கதாம்புஜே ||

த்ரிகோணாந்த ஸமாஸீனம் சந்த்ர ஸூர்யாயுத ப்ரபாம்  ||

அர்த்தாம்பிகா ஸமாயுக்தம் பரவிபக்தி விபூஷணம் ||

கோடி கந்தர்ப்ப லாவண்யம் ஸதா ஷோடஸ வார்ஷிகம்  ||

மந்தஸ்மித முகாம்போஜம் த்ரிநேத்ரம் சந்த்ரசேகரம் ||

திவ்யாம்பர ஸ்ரதாலபம் திவ்யாபரண பூஷிதம் ||

பாண பாத்ரம் ச சின்முத்ராம் த்ரிசூலம் புஸ்தகம் கரை ||

வித்யா ஸம்ஸதி பிப்ராணாம் ஸதாநந்த முகேக்ஷணம் ||

மஹா ஷோடாதி தாஸேஷ தேவதாகண ஸேவிதம் ||

ஏஹம் ஏத்தாம் புஜே த்யாயேத் அர்த்தநாரீஸ்வரம் சிவம் ||

பும்ரூபம் வாஸ்மரேத் தேவி  ஸ்த்ரிரூபம்வா விசிந்தயேத்  ||

அதவே நிஷ்களம் த்யாயேத் ஸச்சிதானந்த லக்ஷணம் ||

ஸர்வ தேஜோமயம் த்யாயேத் சராசர விக்ரஹம் ||

(இந்த ஸ்லோகத்தின்  பொருளையும் சரியாக உச்சரிக்கும் முறையையும்  தயவு செய்து அவரவர்கள் குரு முகமாக அறிந்து கொள்ளவும்)

அர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனியை மஹா மண்டபத்தில் தரிசிக்கின்றோம். மிக அற்புதமான பஞ்சலோகத்  திருமேனி.  ஆண்பக்கத்தில் வலத்திருக்கரத்தில் சாய்வாக  தண்டாயுதம், பெண்பக்கத்தில் இடுப்பில் வைத்த திருக்க்கர அமைப்பு, மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை, இடையில் வாம பாகம் குறுகியும்,  திருவடிகளில் ஒன்றில், சிலம்பு மற்றொன்றில் கழல், கண்களில் கூட ஆண், பெண் பாக வேறுபாடு ஒரு மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும் காட்டப்பட்டுள்ளன.  வைகாசிப் பெருவிழாவின் போது தேருக்கு எழுந்தருளுபவர் இவரே.

சீர்பெற்ற செழுஞ் சடையுந் திருக்குழலுஞ் சிவந்த நோக்குங்

கூர்பெற்ற  கயல்விழியுங் குழைப்பணியுங் குழைத்தோடுங் குமுதவாயுங்

தார்பெற்ற கதைக்கரமுஞ் சரிக்கரமுந்  தடவுரமந் தனப்பொன்மார்பு

பேர்பெற்ற வதட்டுகிறு மிகற்பதமுஞ் சிலம்படியு மிதைபஞ் சேர்ப்பாம்

பொருள்: அழகு தங்கிய குளிர்ந்த சடையும், அழகிய கொண்டையும், சிவந்த நெற்றிக் கண்ணும், கூர்மையான மீன் போன்ற திருவிழியும், நாகக்குண்டல திருச்செவியும், இரத்தின தோடணிந்த திருச்செவியும், ஆம்பல் பூப்போன்ற வாயும், தண்டாயுதம் பற்றிய திருக்கரமும், வளையணிந்த திருக்கரமும், விசாலமான மார்பும், பொன் மணியாரம் பூண்ட முலை மார்பும், புலித்தோலாடையணிந்த இடையும், சவுந்தரியமான பூந்துகிலணிந்த சிற்றிடையும், வீரக்கழலணிந்த திருவடியும், சிலம்பணிந்த சிற்றடியுமாய் விளங்கும் அர்த்தசிவாம்பிகையை அருமையாக தரிசித்தோம்.

இம்மண்டபத்தில் அம்மை வாமபாகம்  பெற்ற வரலாறு, முருகர் இடைச்சிறுவனாக வந்து பாண்டிப்புலவரை வென்ற வரலாறு ஆகிய தல வரலாறுகள் அருமையான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. 

சுவாமி திருகதவத்தில் உள்ள கட்டை விரல் உயரமான சிவலிங்கம் மற்றும் சோமாஸ்கந்த மூர்த்தங்கள்.

அர்த்தநாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் உள்ளது  நிருத்த மண்டபம். இதன்  தூண்களில் காளி, இரதி, மன்மதன், போன்ற சிற்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன. இம்மண்டபத்தை சபா மண்டபம் என்று கூறுவர். சிலப்பதிகார உரையாசிரியார் அடியாருக்கு நல்லாரை சிறப்பித்த இடம் இவ்விடம் என்று கூறுவர்.

ஆதிசேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு தனிசன்னதியில்  அருள் பாலிக்கிறார். ஆதிகேசவப் பெருமாள்  கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்த்துடன் நின்ற திருக்கோலத்தில் நீளாதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கின்றார்.  உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பெருமாளுக்கு எதிரில் பலிபீடமும் கருடாழ்வாரும் சொல்லின் செல்வனாகிய அனுமனின் திருவுருவமும் உள்ளது.


பெருமாள் சன்னதி விமானம்

வைகாசி மாதத்தில் நடைபெறும் விசாக தேர்திருவிழாவின் போது இப்பெருமானுக்கும் திருவிழா நடைபெறும். அர்த்தநாரீஸ்வரருக்கு கொடியேற்றம் செய்த நான்காம் நாள் இப்பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு  அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளுவார் அப்போது அவருடன் சேர்ந்து ஆதிகேசவ பெருமானும் நகருக்கு  வருவார். பின் ஆதிகேசவபெருமாள் திருக்கல்யாணம் கண்டருளி,   திருத்தேரில் எழுந்தருளி நான்கு இரத வீதி வழியாக ஊர்வலம் நடைபெறும். சிவராத்திரியன்று இவருக்கும் நாலு கால பூசை நடைபெறுவது ஒரு தனி சிறப்பு, ஏகாதசியன்று கருட சேவை தந்தருளுகிறார். 

இனி ஆதிகேசவராக இவ்வாலயத்தில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு.  நாராயண மூர்த்தி நரசிம்ம உருவில் அசுரன் இரணியனின் வயிற்றை பிளந்து அதிலிருந்து வழிந்த குருதியை குடித்ததால் ஏற்ப்பட்ட பித்தத்தால் அலைந்து திரிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை கண்ட சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்து நரசிங்கத்தை கொத்தி தூக்கி கொண்டு அண்ட பகுதிக்கு பறந்து சென்று நரசிங்கத்தை குலுக்கினார். அதனால் பெருகிய குருதி வெளியே கொட்டியது. அதன் பின் நரசிங்கம் பெருமாளாக உருமாறியது அதனால் திருமால் தனக்குண்டான பிரம்மஹத்தியை போக்கி கொள்ள கொடிமாடசெங்குன்றூர் வந்து விஷ்ணு தீர்த்தமென்ற ஒரு சுனையை அமைத்து அதில் நீராடி தவம் செய்து ஆதிபரம்பொருளை வணங்கினார். அவ்வாறு தனது பிரம்மஹத்தி நீங்கிய பின் ஏகாந்த இடமாகவும், எழில் மிகுந்த இனிமை தரும் புனித பூமியாகவும் இருந்ததால் இப்பகுதியிலேயே கோவில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது. 

அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரே நாகலிங்கேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  இச்சன்னதியில் சிவபெருமான் சதாசிவ மூர்த்தமாக இலிங்கவடிவத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இச்சன்னதியின் முன் மண்டபத்தின் தூண்களில் அமைந்துள்ள குதிரை வீரர்கள் அற்புதமான கலை  நுணுக்கம் நிறைந்தவை. இம்மண்டபத்தின் கூரையிலும், கருவறை சுவற்றிலும் அருமையான கற்சிற்பங்களை கண்டு களிக்கலாம்.

 இப்பகுதியின்  திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் முதன் முதலில் மலை மேல் உள்ள அம்மையப்பனை வழிபட்டு அதன் பின்னரே தங்களது இல்வாழ்க்கையை துவங்குவது பாரம்பரியமாக கருதப்படுகிறது. எனவே முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. ஒரே நேரத்தில் நாகேஸ்வரர் சன்னதி முன் மண்டபத்திலும், ஆமை மண்டபத்தில் பல திருமணங்களும் நடைபெறுகின்றன.  வரிசை முறையில் ஒரு திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து வரிசையாக  திருமணங்கள் நடைபெறுகின்றன. 

இதைத் தவிர பஞ்சலிங்கம், நடராஜர், அம்மன், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன. தெற்குப்  பகுதியில் 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.  மலை மீது அமைந்துள்ள இக்கோவில் பண்டைய காலத்தில் நாகவழிபாட்டினையும், வேட்டுவர்கள் தங்களின் குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்கிய இடமாகவும் திகழ்ந்துள்ளது.

இவ்வாலயம் தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியின் முன் மண்டபத்தின்   வெளிப்புற தூண்களில் வரிசையாக  குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்தூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. இம்மண்டபத்தில் அமைந்துள்ள உள்  தூண்களில் பல்வேறு அற்புதமான நுணுக்கமான கலைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. சிவபெருமானின் பல்வேறு வடிவங்களையும், கிருஷ்ண லீலைகளயும் கண்டு களிக்கலாம். சுந்தரர் முதலையுண்ட பிள்ளையை கொணர்ந்த சிற்பமும் அமைந்துள்ளது சிறப்பு.  மண்டபத்தின்  மேற்கூரையில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட பல வடிவங்களை உடைய கற்சங்கலி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இம்மண்டபத்தில் பலகணிக்கு எதிரே  ஆமை மண்டபம் என்று அழைக்கப்படும் சிறியமண்டபம் ஒன்று உள்ளது. இதன் மேல்பகுதி மரத்தாலானது. வைகாசி விசாக திருவிழாவின் போது இறைவனை இம்மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது இதன் மேல்பகுதியில் மலர்களை கொட்டி இயந்திரத்தின் மூலம் இயக்கினால் இதில் உள்ள துவாரத்தின் வழியாக ஒவ்வொரு பூவாக இறைவனின் மீது விழும் இந்நிகழ்ச்சியைக்காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் முதலாம் இராஜராஜன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர் கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். இம்மரம் கோவிலின் வடக்குப் பகுதியில் நடராஜர் சன்னிதிக்கும், சிவலிங்க சன்னிதிக்கும் இடையில் அமைந்துள்ளது.


ஒரே தலையுடன் ஆறு பெண்கள்

இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107-வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116-வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார்.  திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்கோட்டுக்கு வந்தார். சிவனாரை தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீது கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்ச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இம்மலை என வர்ணிக்கிறது ஸ்தல புராணம்.  இங்கு வந்தபோது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம்பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு. இன்றைய கொரோனா நுண்கிருமி வாதையிலிருந்து விடுபட இப்பதிகத்தை ஓதினால் அன்பர்கள் நலம் பெறலாம் என்பதால் இந்நூலில் இறுதியில் இடம் பெற்றுள்ளது. அப்ப்பதிகத்தின் முதல் பாடல் 

"அவ்வினைக் கிவ்வினையாமென்று சொல்லும்ஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே

கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றது நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்".


இத்தலத்தில்  மாதந்தோறும் கீழ்கண்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரையில் சித்ரா பெளர்ணமி, வைகாசியில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா, பத்திரகாளியம்மன் திருவிழா, ஆனியில் நடராஜர் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மலைக்கோவில் கெளரி விரதம், நவராத்திரி விரதம், ஐப்பசியில் பெரிய மாரியம்மன் திருவிழா, கார்த்திகையில் திருமலையில் கார்த்திகை தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தையில் திருமலை படி திருவிழா, மாசியில் மாசி மகம், சிவராத்திரி திருவிழா, பங்குனியில் உத்திரவிழா. சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிவழியாகவும், மலைப்பாதை வழியாகவும் சென்று அம்மையப்பனை தரிசிக்கின்றனர். பௌர்ணமி, அமாவாசை மற்றும் அவரவர் ஜென்ம தினங்களில் மலையை கிரிவலம் வருகின்றனர்.


மலைக்கோவிலில், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி உள்ளிட்ட மாதாந்திர விசேஷ நாட்களிலும், வைகாசி விசாக தேர் திருவிழா, புரட்டாசி மாத கேதார  கவுரி விரதம், பார்வதி தேவி மற்றும் பிருங்கி முனிவர் வழிபாடு செய்த மார்கழி மாத மரகதலிங்க வழிபாடு ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இனி இத்தலத்தின் சிறப்ப்ய் விழாக்களைப் பற்றி சுருக்கமாக காணலாம். 

கேதார கெளரி விரதம்

சிவபெருமான் தன் பாகத்தின் பாதியை அம்மைக்கு வழங்கிய நிகழ்ச்சி ஆவணி மாதம் வளர்பிறை அஷ்டமியில்  தொடங்குகிறது. கேதார கௌரி அம்ம்மனுக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றது.   புரட்டாசி கிருஷ்ணபட்ச தேய்பிறையில் சதுர்த்தியில் கேதார கெளரி விரத விழாவாக இன்றும் இம்மலையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மஹாலய அமாவாசையன்று அர்த்தநாரீஸ்வரர் பிருங்கியுடன் திருக்காட்சியருளுகின்றார்.  இவ்விழாவின் போது பெண்கள் தன் கணவரின் நலன் வேண்டி காப்புக் கட்டிக்கொண்டு  சக்தியை (பார்வதி தேவியை) குறித்து 21 நாட்கள் விரதமிருப்பர்.

ஆதிநாகேஸ்வரர் பூஜை

அருள்மிகு நாகேஸ்வரர் வழிபாட்டு குழுவினரால் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலம் 4-30 மணிமுதல் 6-00 மணிவரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் மற்றும் விளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாகாச்சலம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்ற இப்பூஜையில் கலந்து கொள்ளும், நாகசர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்கள் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆண்களுக்கு திருமணம் நல்ல முறையில் அமையும் என்று மக்களால் நம்பப்படுகிறது.

வைகாசி விசாகப் பெருவிழா

பிரதி வருடம் வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவானது திருச்செங்கோடு மாநாகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவின் போது இறைவனின் தரிசனத்தை காண ஏழுகரைநாட்டு மக்களும் திருச்செங்கோட்டில் கூடியிருப்பார்கள். பிருங்கி முனிவரின் சாபத்தால் புலி வடிவம் பெற்றிருந்த சயங்கலம் என்ற நகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சிங்கவர்மன் தன் சாபவிமோசனத்திற்காக திருச்செங்கோடு வந்து நாகமலையை மூன்று முறை கிரிவலம் வந்து இறைவனை வணங்கி சுய உருவை பெற்றார். அந்நாளில் அப்புலி தங்கிய குகையை மக்கள் அன்று கூட்டுப்புலி குகை என்று கூறினர். இந்நாளில் அவ்விடத்தை கூட்டப்புலி என்றும் கூட்டப்பள்ளி என்றும் மக்கள் கூறுகின்றனர். இதனை போற்றும் வகையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மன்னன் தன் நாடு சென்று ஏராளமான செல்வங்களுடன் திருக்கொடி மாடசெங்குன்றூர் வந்து இறைவனுக்கு பல திருப்பணிகளை செய்து பின் சிறப்புமிகு தேர்திருவிழாவினையும் கொண்டாடினார் என்று அறியப்படுகிறது.

 இத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெறும்    இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே நகருக்கு எழுந்தருளுகின்றனர். பின் தேரோட்டம், சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருள  திருக்கொடிமாடசெங்குன்றூரின் நான்குமாட வீதி வழியாக தேர்த் இழுக்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் அதாவது 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு செல்லுவார். இவ்வாறு திருச்செஙகோட்டு மக்களால் வைகாசி விசாகத்திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.  வைகாசி திருவிழாவின் 14 நாட்கள் நிகழ்ச்சிகள்

1 ஆம் நாள் திருவிழா - காலையில் அர்த்தநாரீஸ்வர சுவாமிக்கு கொடியேற்றம் நடைபெறும் அதன் பிறகு மண்டபக்கட்டளைகள் நடைபெறும்

2, 3-ஆம் நாள் திருவிழா - மலைமேல் உள்ள மண்டபத்தில் மும்மூர்த்திகளுக்கும் மண்டபக்கட்டளை நடைபெறும்

4 ஆம் நாள் திருவிழா - காலை ஆதிகேசவ பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறும். பிறகு அன்று இரவு சுவாமிகள் மலைமேலிருந்து புறப்பாடு. மலை கீழ் வந்து வண்ண வாணவேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு வீதிகளின் வழியாக வலம் வரும் இத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது

5, 6, 7, 8 ஆம் நாள் திருவிழா - இத்திருவிழாவின் போது சுவாமிகளுக்கு திருச்செங்கோட்டை சுற்றி உள்ள ஊர்மக்களின் சார்பாக சிறப்பான பூஜைகள் மற்றும் கட்டளைகள் நடைபெறும்

9 ஆம் நாள் திருவிழா - காலை 9-00 மணிக்கு மேல் அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், செங்கோட்டு வேலவர் திருத்தேரில் எழுந்தருளல். அன்று விநாயகர், செங்கோட்டு வேலவர் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறும்

10 ஆம் நாள் திருவிழா - ஆதிகேசவ பெருமான் திருத்தேரில் எழுந்தருளல். அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல்

11 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் இழுத்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்

12 ஆம் நாள் திருவிழா - அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலைநிறுத்தம் மாலை ஆதிகேசவ பெருமான் திருததேர் இழுத்தல், நிலை சேர்த்தல் மிகச் சிறப்பாக நடைபெறும்.

13 ஆம் நாள் திருவிழா - சுவாமிக்கு மண்டபக்கட்டளையும் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும்

14 ஆம் நாள் திருவிழா - திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவாவின் போது சுவாமிகள் 14-ம் நாள் அதிகாலை இருள்பிரியும் நேரத்தில் தன் பரிவாரங்களுடன் மிகச்சிறப்பான வாண வேடிக்கையுடன் திருமலைக்கு மீண்டும் செல்லுவார்.

-"செம்மையுடன்

 அங்குன்றா தோங்கும் அணிகொள் கொடிமாடச்

 செங்குன்றூர் வாழுஞ் சஞ்சீவியே" – என்று திருஅருட்பாவில் வள்ளலார் பாடிய திருச்செங்கோட்டுத் தலத்தின் தரிசனத்தை திவ்யமாக நிறைவு செய்த பின் விஸ்வரூப அனுமனையும், நரசிம்மரையும் தரிசிக்க  நாமக்கல்லுக்கு கிளம்பி சென்றோம். 

 


Monday, July 25, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 25



                                     திருச்செங்கோடு மாதொருபாகர் தரிசனம் -2



ஆதிசேஷனின் இரத்தத்தின் காரணமாக மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது  என்பது ஐதீகம். செங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம்  போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் பெற்றது.   மேலும் நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றும் அழைக்க்கின்றனர். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது.

 லையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதி உண்டு. கோவில் நிர்வாகத்தாரால் மலை மேல் செல்ல கட்டணச் சிற்றுந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. மலை மீதிருந்து பார்த்தால் காவிரி ஆறும், ஊர் முழுவதையும் காணலாம்.

"வெந்த வெண்ணீ றணிந்து விரிநூல் திகழ்மார்பினல்ல

பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்

கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பவரே”.

 பொருள்: விரிக்கப் பெற்ற பூணுநூல் திகழும் திருமார்பினராய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்  என்று ஆளுடையப்பிள்ளையார்  உமையொரு பாகராக எம்பெருமான் எழுந்தருளியுள்ள  அழகைப் பாடிப் பரவிய இத்தலத்தின்

இறைவர்:   அர்த்தநாரீஸ்வரர். (முருகன் - செங்கோட்டு வேலவர்). ஆதி கேசவ பெருமாள்.

இறைவியார் திருப்பெயர்:    பாகம்பிரியாள்.

தல மரம்:   இலுப்பை, வன்னி

தீர்த்தம் :    தேவ தீர்த்தம். பிரம தீர்த்தம்

வழிபட்டோர்:       சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், கேதார கௌரி.

அடியேனுடன் படித்த இரு நண்பர்களின் பிள்ளைகளின் திருமணம் திருச்செங்கோட்டில் நடைபெற்றதால் இரு முறை வந்த போது அங்குலம் அங்குலமாக தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. ஒரு முறை மலையேறும் பாதையில் உள்ள நாகத்தை தரிசிக்க வேண்டி இறங்கி வந்தோம். சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இத்தலம். அவற்றை பின்னர் காண்போம். வாருங்கள் இனி மலையேறலாம்.


மலையடிவாரத்தில் தென் பக்கத்தில் கஜமுகப்பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுகர் சன்னதியும் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக் கோவிலுக்குச் செல்லும் பாதை, 1206  படிகளைக் கொண்டுள்ளது. திருமலையின் படிகளின் வழியாக செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் பக்தர்கள் இளைப்பாறவும், வழி முழுவதும் பல மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன அடிவாரத்தை அடுத்து செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மண்டபம், திருமுடியார் மண்டபம் கடந்து  தைலி மண்டபத்தை அடைகிறோம். இம்மண்டபத்தின் மேற்கு பகுதியில் பிரம்மாண்டமான நந்தியெம்பெருமான் மலையை நோக்கியவாறு அருள் பாலிக்கின்றார். மலையே சிவபெருமான் என்பதால் இவ்வாறு நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.  

பசுவன் கோவில் என்றழைக்கப்படும் இதற்கு பிறகு உள்ள பகுதி நாகமலை என்றழைக்கப்படுகின்றது.  செல்லும் போது ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் இப்பகுதியின் வலப்பக்கத்தில்   நின்ற நிலையில் இலிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போய்விடுவோம்! இந்நாகத்தின் மீது மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுகின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.  பலர் பலியிட்டு பொங்கல் வைத்து நாகருக்கு படையலிட்டு வணங்குவதை கண்டோம்.   அடுத்து உள்ள   வாகன வழியாக செல்பவர்களும் நாகர் பள்ளம் வரை சென்று நாகரை தரிசிக்க முடியும். இடதுபுறமுள்ள நாகம் கால வேறுபாட்டால் இடி, மின்னல் தாக்குதல்களால் வெடிப்புகள் ஏற்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. நாகரை தரிசித்து மேலே உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் 'சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார். ஒரே சீராக அறுபது படிகளை உடைய இவ்விடம் சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடு்த்துக்காட்டாக விளங்குகிறது.  இம்மலையில் உள்ள 1206 படிகளிலேயே இப்படிகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தத படியாகும். அன்றைய காலத்தில் கொடுத்தல் வாங்கல் மற்றும் எண்ணற்ற தீர்க்க முடியாத வழக்குகளில் உண்மை நிலையை அறிய இப்படியினை பயன்படுத்தினார்கள். இப்படியின் மீது நின்று சத்தியம் செய்து கூறும் செய்திகளை சென்னை உச்சநீதிமன்றமே ஒப்புகொண்டதாக கூறுவார்கள். இதனையடுத்து நாடார் மண்டபம், செட்டிக்கவுண்டர் மண்டபம், தேவரடியார் மண்டபம், இளைப்பாற்றி மண்டபம், கோபுர வாயில் மண்டபம், நிறுத்த (அல்லது) ஆமை மண்டபம், விலாச மண்டபம், குகை மண்டபம், திருமுடியார் மண்டபம், கோடி அர்ச்சணை மண்டபம், சிங்கத்தூண் மண்டபம், அறுபதாம் படி மண்டபம் ஆகியவை மலையேறும் படிகளில் உள்ளன.  இடையில் பல சுனைகள் உள்ளன, அடியோங்கள் சென்ற சமயம் பெரும்பான்மையானவை வறண்டு கிடந்தன.  படியேற்றம் நிறைவு செய்யும் போது வடக்கு இராஜகோபுரத்தை தரிசிக்கின்றோம்.



இத்தலத்தின் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 85 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மதில் சுவற்றில் சிவ சிவ என்ற மந்திரம் ஒளிர்கின்றது. மேற்கு, தெற்கு வாயில்களிலும்   இராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்குப்பகுதியில் மலை உள்ளது. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலைக்கும் சிறிய மலைக்கும் இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைப் தரிசிக்கலாம்.

இராஜகோபுரத்தை கடந்து வலம் வந்தால் ஆதிசேஷன் சன்னதி. பிரம்மாண்டமாக ஐந்து தலைகளுடன் எழுந்தருளியுள்ளான் நாகராஜன். மஞ்சள்பொடி தூவி பக்தர்கள் வழிபடுவதால் பொன் வர்ணத்தில் மிளிர்கிறான் சேஷன். 



அடுத்து உமையொருபாகருக்கு இணையாக அருள்பாலிக்கும் செங்கோட்டுவேலவரை முதலில் தரிசனம் செய்கின்றோம். திருக்கயிலையில் ஞானபழம் கிட்டாததால்  முருகப்பெருமான் கோபமுற்று கயிலையில் அம்மையப்பனை விட்டு பிரிந்து காடு, மலை, வனம், வனாந்திரங்களை கடந்து திருவாவினன்குடி குன்றின் மேல் நின்றார் (பழனி) அங்கிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரிந்ததால் அங்கிருந்து புறப்பட்டு கொங்கின் மீதுள்ள நாகாசலம் வந்தடைந்தார். நாகாசலத்திலிருந்து கயிலை தன் கண்களுக்கு தெரியாததால் இவ்விடமே தான் தங்குவதற்கு ஏற்றதென்று எண்ணி திருச்செங்கோட்டில் செங்கோட்டுவேலவராக கோவில் கொண்டார் என திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.



முருகர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான நின்ற திருவுருவம். கிழக்கு நோக்கிய சன்னதி. வலத்திருக்கரத்தில் சக்தி   வேலை தலைக்கு  மேலே  உள்ளவாறு தாங்கி, இடத்திருக்கரம்  இடுப்பில்  சேவலைத் தாங்கியவாறு எழிலாக  நிற்கின்ற நிலையைக் கண்டால் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து கண்ணீர் ததும்பி    வெதும்பியுள்ளம் உருகுவதை உணரலாம். இவரது அழகில் மயங்கிய அருணகிரி நாதர்   கந்தரலங்காரத்தில்

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்

சேலார் வயற்பொழிற்  செங்கோடனைச் சென்று கண்டு தொழ

நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே – என்று பாடியபடி

 நிச்சயமாக செங்கோடனின் அழகை அனுபவிக்க 'நாலாயிரம் கண்கள் தேவை'. என்பதை உணரலாம்.

மேலும்  இரு பாடல்களில்

"சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே". என்றும்

 

"தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே

வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனையான்

ஐவர்க் (கு) இடம்பெறக் காலிரண்டு ஒட்டி அதிலிரண்டு

கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே"  - என்றும் பாடியுள்ளார்.  

 

அவரே கந்தர் அநுபூதியில் பாடிய ஒரே தலம் திருச்செங்கோடு தலம் தான் அப்பாடல்

 

"கூகா வென என்கிளை கூடியழப்

போகாவகை மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலுகவித்

தியாகா சுரலோக சிகாமணியே". மேலும் திருப்புகழில்

 

அன்பாக வந்து என்று துவங்கி “செஞ்சாலி கஞ்சமொன்றாய் வளர்ந்த செங்கோடமர்ந்த பெருமாளே”  என்றும், கரையற வுருகுதல் என்று துவங்கி “ஜெகதல மிடிகெட விளைவன வயலணி  செங்கோடமர்ந்த பெருமாளேஎன்றும், சத்தியை யொக்க இடத்தினில் வைத்த தகப்பனு மெச்சிட தத்துவ தற்பர  முற்றுமுணர்த்திய சர்ப்ப கிரிச்சுரர் பெருமாளே…. என்று அர்த்தநாரீஸ்வரரையும் சேர்த்து பாடியுள்ளார். மேலும்  

காலனிடத்       தணுகாதே - காசினியிற்      பிறவாதே

சீலஅகத்           தியஞான - தேனமுதைத்      தருவாயே

மாலயனுக்     கரியானே - மாதவரைப்        பிரியானே

நாலுமறைப்    பொருளானே -  நாககிரிப்     பெருமாளே. என்றெல்லாம் பல்வாறாக போற்றிப் பாடியுள்ளார்.   

 

செங்கோடனின் உற்சவத் திருமேனியை மஹா மண்டபத்தில் தரிசிக்கலாம். கிருத்திகை நாட்களில் தங்கக் கவசம் சார்த்தி, தங்கமயிலேறித் தங்கக்காவடியுடன் புறப்பாடு நடைபெறுகின்றது. சன்னதி முன்பு ஒருபுறம் விநாயகர், மறுபுறம் அருணகிரிநாதர், நக்கீரர் சிலையும் உள்ளது.  

 தெய்வத் திருமலைச் செங்கோட்டு வேலவன் சன்னதி தரிசனமே தெய்வீகந்தான். எதிரில் உள்ள வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவம் தத்ரூபமாக உள்ளது, சிற்பக்கலையழகு வாய்ந்தது. மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் வடிவங்கள், இரதி, மன்மதன்  முதலியன மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இரு   தூண்களில் சிவன் வேட்டுவனாகவும், பார்வதி வேட்டுவச்சியாகவும் காட்சியளிக்கின்றனர். முருகருக்கு எதிரே அவரது வாகனமான மயில் ஒரு மண்டபத்தில் அற்புதமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போன்றும்  இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும் மிகுந்த அறிவு திறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது. கற்சங்கிலிகள், குறவர் நடனம், சிலந்தியை தேள் கவ்வும் காட்சி ஆகிய சிற்ப விநோதங்கள்  இம்மண்டபத்தில் அற்புதமாக அமைந்துள்ளன. வேலவனின்   இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். இம்மண்டபத்தின் கலை நுணுக்கத்தை அநுபவிக்கவே ஒரு முழு நாள் வேண்டும். இம்மண்டபம் மற்றுமல்ல இவ்வாலயம் முழுமையுமே ஒரு கலைப்பொக்கிஷம் என்பதில் எவ்வித ஐயமும் தேவையில்லை. ஆகையால் எப்போது சென்றாலும் அவசரமாக செல்லாமல், நிதானமாக தரிசிக்குமாறு செல்லுங்கள்

 செங்கோட்டு வேலவர் சன்னதியில் இருந்து மாதொருபாகரை தூரத்திலிருந்து இலவசமாக தரிசனம் செய்பவர்கள் செல்ல வழி உள்ளது.  கட்டணம் செலுத்தி தரிசனம் செய்பவர்கள் அருகே மஹா மண்டபத்தில் நின்று தரிசனம் செய்ய இயலும்.  கட்டண வழியாக செல்லும் போது  அர்த்த நாரீஸ்வரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியையும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற லிங்கத்துடன் நாகேஸ்வரர் சன்னிதியும், சிறிய அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனியையும் தரிசிக்கலாம். கேதராகௌரி, மரகதலிங்கத்தைப் பூஜித்து, இறைவனின் பாகத்தை பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. கேதாரகௌரி உற்சவத் திருமேனி உள்ளது. சிலாரூப தக்ஷிணாமூர்த்தி அழகுடையதாகத் திகழ்கிறது.


மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாசல் சுவாமிக்கு எதிரே இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி உள்ளது. மஹா மண்டபத்தின் தெற்கு வாயில் வழியாகச் சென்றுதான் ஈருருவம் ஓருருவமான பெருமானை நாம் தரிசிக்க முடியும்.

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.

பொருள்: மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின் கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும் என்று அம்மையின் ஞானப்பாலுண்ட பாலறாவாயர் பாடிப்பரவிய   அம்மையப்பரை  அற்புதமாக தரிசிக்கலாம். இப்பதிகத்தில் பல பாடல்களில் மலையரையன் பொற்பாவை கூறனை வழிபட நம் வினைகள் அனைத்தும்  அகலும் என்று ஆளுடையபிள்ளையார் அறுதியிடுகிறார்.

Thursday, July 14, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 24

                                          திருச்செங்கோடு மாதொருபாகர் தரிசனம் -1


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி

இக்கொங்கேழ் தலங்களின் யாத்திரையின் மூன்றாம் நாள் அதிகாலை எழுந்து திருச்செங்கோட்டில் மாதொரு பாகரையும், செங்கோட்டு வேலவரையும் தரிசிக்க சென்றோம். திருச்செங்கோட்டில் வந்து தங்கியதால் அன்றைய தினம் மதியத்திற்குள் திருச்செங்கோடு, நாமக்கல், தாராமங்கலம், அயோத்தியாபட்டினம் தரிசித்து இரவுக்குள் சென்னை திரும்பவும் முடிந்தது.  வாருங்கள் முதலில் திருச்செங்கோட்டை தரிசிக்கலாம் அன்பர்களே.

ஈங்கோய்மலை, மற்றும் கொடுமுடியில் நாம் கண்ட அதே வரலாறுதான் இம்மலை தோன்றியதற்கான வரலாறு ஆகும். தேவர்கள் எல்லாம் இரதமாகவும், பிரம்மன் சாரதியாகவும், மேரு மலை வில்லாகவும், வாசுகி நாணாகவும், மஹா விஷ்ணு அம்பாகவும், அக்னி தேவன் அம்பு முனையாகவும், வாயுவே விசையாகவும், விளங்க, திரிபுர அசுரர்களை அழிக்கப் புறப்பட்டு தன் புன்சிரிப்பால் திரிபுரங்களை அழித்தார். அதற்கு பின் ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களால் மேரு மலையை இறுக சுற்றிக்கொண்டார்.  வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க சகல அண்டங்களும் குலைய, மலைகள் நிலை குலைய,  நட்சத்திரங்கள் உதிர, பூமி அதிர சண்டமாருதமாக வீசினான். சகல உயிரினங்களும் படும் துன்பத்தை கண்டு இரக்கம் கொண்ட முனிவர்கள் அனந்தனிடம் வேண்டிக்கொள்ள அவன்  ஒரு சிகரத்தை பற்றியிருந்த ஒரு படத்தை  சற்றே தளர்த்தினான். எனவே வாயு அச்சிகரத்தை பெயர்த்தெறிந்தான். பறந்த அச்சிகரம் மூன்று துண்டுகளாகி மூன்று இடங்களில் விழுந்தன. அவையாவன தெற்கு சமுத்திரத்தில் விழுந்த துண்டு இலங்கை தீவானது, இரண்டாவது துண்டு திருகோணமலையானது. மூன்றாவது துண்டானது நாவலந்தீவில், தெற்கு திசையில் மூவேந்தர்களில் முதன்மையானவர்களான,   சேரர்களின் கொங்கு தேசத்தில்  அனந்தனின் ஒரு படத்துடன்  செம்மலையாக விழுந்தது. அது திருச்செங்கோடு, நாககிரியாக விளங்குகிறது. இம்மலைக்கு பிரளய காலத்திலும் அழிவில்லை என்று தலபுராணம் கூறுகிறது.




இக்கோவில் ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 45 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது.  அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் சென்னை – கோயமுத்தூர் பாதையில் உள்ள சங்ககிரி துர்க்கம் ஆகும்.

மலையின் அடிவாரத்தில் பரிமளவல்லி அம்பாள் (சுகந்த குந்தளாம்பிகை) உடனுறை  கயிலாசநாதர்  ஆலயம் உள்ளது. இவர் நிலத்தம்பிரான் என்றழைக்கப்படுகின்றார்.   திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் 211வது தலம். கொங்கு நாட்டு தலங்களில் நான்காவது  சிவத்தலமாகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்கள் பாடியுள்ளார். தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவ தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்றும், மலைத்தம்பிரான் என்றும்  அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. 

 

கோடு என்றால் மலை என்றும் மலையுச்சி என்றும் அர்த்தம். செங்கோடு, செங்குன்றம், செம்மலை, தெய்வத்திருமலை  என பல பெயர்களுடன் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த செங்கோட்டு மலை என்று அறியலாம்.

சம்பந்தர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன. இத்தலத்திற்கு வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.  இனி இத்தலத்தின் தனி சிறப்புகள் சிலவற்றைப் பற்றிக்காணலாம் அன்பர்களே.

சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும் என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் போற்றிய இத்தலம்  கொங்கேழ் தலங்களில் மலை மேல் அமைந்த ஒரே சிவத்தலம்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையுமுடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ!

என்று மாணிக்கவாசகர் திருக்கோத்தும்பியில் பாடியபடி மாதொருபாகராய் சிவபெருமான் அருள் பாலிக்கும் தலம். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் வெண்பாஷணத்தால் ஆன சுயம்பு திருமேனி கொண்டு அருள்பாலிக்கிறார். சிவபெருமான் மட்டுமல்ல அவரது அம்சமான முருகரும் செங்கோட்டு வேலவராக அருள் பாலிக்கின்றார். சைவ-வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக ஆதி கேசவராக பெருமாளும் உடன் அருள் பாலிக்கின்றார். நாக தோஷ பரிகாரத்தலம். சிவபெருமான் மதுரையில் திருவிளையாடல் புரிந்தது போல் முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்த தலம்.   அது போல் மதுரையில் கல் யானை கரும்பு உண்டது போல இத்தலத்தில் நந்தி கடலை உண்டதாம். ஆளுடையப்பிள்ளையார் பதிகம்பாடி அன்பர்கள் விஷ சுரம் தீர்த்த தலம். விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்.

அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில், அர்த்தம் என்றால் பாதி என்று பொருள்; நாரி என்றால் பெண் என்று பொருள். சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால்  அர்த்தநாரி + ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது. 

அர்த்தநாரீஸ்வரர்  எனும் பெயர் மட்டுமின்றி வேறு சில பெயர்களும் இருக்கின்றன. 1) உமையொரு பங்கன் 2) மங்கையொரு பாகன் 3) மாதொரு பாகன், என இம்மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.

சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர் மூர்த்தம். 

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வடிவமே தென்னிந்தியாவிலேயே காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பார்வதி வீணையுடனும், சிவன் காளையில் ஏறி அமர்ந்திருக்கும் கோலத்தில் காணப்படுகிறார்கள். 


இத்திருச்செங்கோடு தலத்தில்  மூலவராக அமைந்திருக்கிறார் அர்த்தநாரீஸ்வரர். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம்பிரியாள் என்ற பெயர்களும் இருக்கின்றன. இங்கு அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார். 

அம்மை சிவபெருமானின் திருமேனியில்  பாகம் பெற்றதால் பாகாயி என்றனர். இச்சொல்லே மருவி பாவாயி என வழங்குகிறது. இறைவனை குல தெய்வமாக கொண்டவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தநாரீ என்றும் பெண் பிள்ளைகளுக்கு பாவாயி என்றும் பெயரிடும் சம்பிரதாயம் உண்டு.


வடக்கு இராஜ கோபுரம் - செங்கோட்டு வேலவர் விமானம் 


இனி அர்த்தநாரீஸ்வரராக எம்பெருமான் எழுந்தருளியதற்கான காரணம் என்ன என்று காணலாம். ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், சிவபெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவனைக் தரிசிக்க வந்த பிருங்கி முனிவர்  வண்டு வடிவம் எடுத்து அம்மையை விலக்கி சிவனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.  ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை.  அதனால் பார்வதி தேவி கோபமடைந்தார்.  சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் இரத்தம் நீங்குமாறு சாபமளித்தார்.  பிருங்கி முனிவர் சதையும் இரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.  சிவன் தம்முடைய தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.  சிவன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, சிவனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.  இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி சிவனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி சிவனை நோக்கி கேதார கௌரி விரதம்  என்ற கடுமையான தவத்தினை மேற்கொண்டார். சிவன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார்.  பார்வதி தேவி இடப்பக்கம் பெற்று சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்.  பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார். திருச்செங்கோட்டில் மூலவரின் பாதத்தின் அருகில் மூன்று கால்களுடன் பிருங்கி முனிவரையும்,  கேதார கௌரியாகிய உமையம்மை வழிபட்ட மரகத லிங்கத்தையும் தரிசிக்கலாம்.  


மதுரையம்பதிக்கு வந்த ஹேமநாதப் புலவரிடம் விறகு விற்கும் எளியோனாக வந்து, ஈசன் வென்றதைப் போலவே,  ஈசனின் மகனான செங்கோட்டு வேலவர், திருச்செங்கோடு நகரின் பெருமையை உலகறியச் செய்ய ஆடிய திருவிளையாடல் பற்றி காணலாம்.  செங்கோட்டு வேலவரின் மீது தணியாத பக்திகொண்டவர் குணசீலர் என்ற பக்தர். ஒருமுறை திருச்செங்கோட்டுக்கு பாண்டிப்புலவரேறு என்ற அறிஞர் ஒருவர் வருகை புரிந்தார். இவரை வாதில் வெல்வது என்பது முடியாத காரியம். கல்வியில் இமயமான இவரை எதிர்த்து, எல்லாப் பகுதி புலவர்களும் தோற்றனர். இந்நிலையில், அவர் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர், தன்னை எதிர்க்க திருச்செங்கோட்டில் யாருமே இல்லை என்ற நிலையில் கோயிலுக்கு வந்தார். அங்கு, குணசீலர் என்ற முருக பக்தரைச் சந்தித்தார். அவர்களுக்குள் எழுந்த வாதம் இறுதியில் சவாலாக முடிந்தது. குணசீலரை நாளை போட்டிக்கு வர அழைப்பு விடுத்தார் பாண்டிப்புலவரேறு. இது என்ன சோதனை என்று குணசீலன் இரவெல்லாம் செங்கோட்டு வேலவரை வேண்டிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை, போட்டிக்காக பாண்டிப்புலவரேறு மலையின்மீது ஏறிக்கொண்டிருக்கும்போது, நாக மலையைப் பார்த்து “இது சர்ப்ப சைலம் என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை என்று பொருள் வரும் படிப் “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” என்று பாட ஆரம்பித்தார் ஆனால்  அப்பாடலை முடிக்க முடியாமல் திணறினார். எத்தனை யோசித்தும் அடுத்த  அடி  வரவே இல்லை. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் உடனே, “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" -  என்று பாடி அவரை வியக்க வைத்தான். ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இத்தனை அறிவா என வியந்து, அவனைப் பற்றிக் கேட்க, அவனோ, தான் குணசீலரின் கடைமாணாக்கன் என்று சொன்னான். புத்தி தெளிந்தது பாண்டிப்புலவரேறு என்னும் புலவருக்கு. வந்திருப்பது முருகன் என்றும், அவனது அருளைப்பெற்ற குணசீலரை எதிர்ப்பது ஆபத்து என்று உணர்ந்தார். குணசீலரிடம் மன்னிப்பு கேட்டு, செங்கோட்டு வேலவரை வணங்கி விடைபெற்றார் அப்புலவர். மலை அடிவாரத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும் வைகாசிப் பெருவிழாவில் இச்சம்பவம் நினைவு கூறப்படுகிறது.

மேற்கு இராஜகோபுர முன் மண்டபம்

கோவை மாவட்டத்தில் உள்ள காடாம்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாததூளி. இவரது மனைவி சுந்தரியம்மாள். இத்தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. எனவே அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் ஏறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இவ்வதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தான, தருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றிணைந்து திருச்செங்கோடு மலை மீது  மேற்கு இராஜகோபுரம் அமைத்துத் தந்துள்ளனர். இவ்வரலாற்றை ஒரு கல்லில் பொறித்து இராஜகோபுரத்தின் அருகில் பதித்துள்ளனர்.