Tuesday, January 14, 2020

திருப்பாத தரிசனம் - 2


எண் ஏழின் சிறப்புகள்

எம்பெருமான் தியாகராஜராக சப்த அதாவது ஏழு தலங்களில் எழுந்தருளி அருள் பாலிப்பதால் ஏழு என்னும் எண்ணின் சிறப்புகளை முதலில்  காணலாமா அன்பர்களே. சப்த  என்ற வடமொழி சொல்லுக்கு ஏழு என்றொரு பொருள் உண்டு. ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண். ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் எனப் பொருள். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கப்படுகின்றது. ஏழு என்பதற்கு அளவில்லாது என்றொரு பொருளும் உண்டு. ஆகவே எண்ணற்றப் பிறப்புகளை ஏழு பிறவிகள் என்று ஆன்றோர்கள் வகுத்தனர்.  சப்த ரிஷிகள், சப்த மாதர்கள், சப்த ஸ்வரங்கள், சப்த கன்னியர், சப்த கிரி என ஏழின் பெருக்கங்கள் பல உள்ளன அவைகளில் சிலவற்றைப் பற்றிக் காணலாம்.

அப்பர் பெருமான் அப்பூதி அடிகளின்,  பாம்பு தீண்டி இறந்த மகனை எழுப்பிய பதிகத்தில் எண் ஏழின் சிறப்பை இவ்வாறு பாடுகின்றார்.
ஏழுகொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழுகொலாம் அவர்கண்ட இருங்கடல்
ஏழுகொலாம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழுகொலாம் இசையாக்கின தாமே – ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப்பட்டன. அவர் படைத்த கடல்கள் ஏழு வகை,  அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள், அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவமுடையவை.

சப்த மாதர்கள் 

சப்த மாதர்கள் என்று வணங்கப்படும் அன்னையர்கள் எழுவர் ஆவர். சண்ட முண்டர்கள் என்னும் அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும் ஆண் பெண் இணைப்பில் பிறக்காமலும் அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்தில் இருந்து தோன்றியவர்கள் இந்த சப்த மாதர்கள். இவர்கள் சப்த கன்னியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி,  சாமுண்டி என்ற ஏழு கன்னியர் சப்தமாதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிராம்மி தோலுக்கும், மகேஸ்வரி நிணத்திற்கும், கௌமாரி இரத்ததிற்கும், நாராயணி சீழிற்கும், வாராஹி எலும்பிற்கும், இந்திராணி தசைக்கும், சாமுண்டி நரம்பிற்கும் அதிதேவதைகள் என்றும் புராணங்கள் பகர்கின்றன.  மகேஸ்வரி சினத்தையும், வைஷ்ணவி பேராசையும், பிராஹ்மி காமத்தையும், கௌமாரி மாயையையும், இந்திராணி குற்றம் கண்டுபிடித்தலையும், சாமுண்டி கோள் சொல்லுவதையும், வாராஹி பொறாமையையும் அழிக்கும் தெய்வங்கள். சப்த கன்னியரையும் வழிபட இவ்வேழு தீய குணங்களும் அழியும்.

மோட்சபுரிகள் என்று காசி காண்டம் போற்றும், இறைவனின் தொடர்பினால் முக்தி அளிக்கும் நகரங்கள் காசி, அயோத்தி, மதுரா,  மாயாபுரி என்னும் ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜயினி, துவாரகை  என்று ஏழு.

அனுமன், விபீஷணன், மகாபலிச் சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன் ஆகியோர் சப்த  சஞ்சீவிகள். அனுமன் தன்னலம் பாராமல் இராமருக்கு சேவை புரிந்ததற்காகவும்,  விபீஷணன் அண்ணன் என்றும் பாராமல் இராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும், மகாபலி தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும், மார்க்கண்டேயர் இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக எமனையே வென்றதாலும், வியாசர் மகாபாரதம் என்னும் அழியா காவியத்தை எழுதி அதை வாசிப்பவர்களின் பாவங்களைப் போக்கி அருள் புரிந்ததாலும், பரசுராமர் தான் கொண்ட கடமையில் இருந்து விலகாமல் தந்தை சொல்லை மந்திரமாக கொண்டதாலும், அசுவத்தாமன் இறுதி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்கு விசுவாசமாக இருந்ததாலும் சஞ்சீவி நிலையை அடைந்தனர். இவ்வாறு சாகா வரம் பெற்ற சஞ்சீவிகள் ஏழு.

நமது பாரத நாட்டை வளப்படுத்தும் சப்த நதிகள்  கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகியவை ஆகும். தினமும் நாம் நீராடும் போது, நாம் அந்நீரை கங்கையாகக் கருதிக் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே நீராடத் துவங்கும் முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு “கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்” என்று கூறிவிட்டு நீராடினால் சாதாரண குளியல் கூட புனித நீராடல் ஆகிவிடும் என்பது ஐதீகம். புண்ணிய நதிகள் ஏழு.

அகத்தியர், காஷ்யபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர்  என்று   சப்த ரிஷிகள் எழுவர் ஆவர்.

தேவர், மக்கள், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்   என்று தோற்றங்கள் ஏழு.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு. 

ஒரு வாரத்திற்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என  நாட்கள் ஏழு.

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார். பாடியபடி, உப்பு, தேன், கள், தயிர், பால், கருப்பஞ்சாறு, தண்ணீர்   என  கடல்கள் ஏழு. 

ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்று வானவில்லின்  நிறங்கள் ஏழு. (இவை ஏழும் சூரியனின் ஒற்றைத் திகிரியை இழுக்கும் ஏழு குதிரைகள் என்று கூறுவர்).

மானிட உடல் உருவாக காரணமான தாதுக்கள்;  இரசம், உதிரம், மாமிசம், கொழுப்பு மஜ்ஜை, மூளை சுக்கிலசுரோணிதம் என்று தாதுக்கள்  ஏழு.

எண்களில் மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஏழு. 

வால்மீகி இராமாயணத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்காந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம்   என்று காண்டங்கள் ஏழு.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிக்கா  என்று இப்பூவுலகின் கண்டங்கள் ஏழு.

உத்தமோத்தம   தலங்களுக்கு   வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்று அமைய வேண்டிய புண்ணியங்கள் ஏழு.

மூலாதாரம்,  ஸ்வாதிஷ்டானம்,  மணிபூரகம்,   அனாகதம்,  விசுத்தி,  ஆக்ஞை, சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் என்று உடலை கட்டுப்படுத்தும் சக்கரங்கள் ஏழு.

நாம் - முதல் தலைமுறை,  தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,  பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை , சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை , பரன் + பரை - ஏழாம் தலைமுறை என்றொரு ஏழு தலைமுறைக்கு ஒரு  கணக்கு உண்டு.

தன்னை  ஒன்றாவதாக எண்ணிக் கொண்டு தகப்பன், பாட்டன், பெரிய பாட்டன் மூவரை மேலேயும், மகன், பேரன், கொள்ளுப் பேரன் என கீழே மூவரையும் கணக்கிட்டால் ஏழு தலைமுறை ஆகும் என்றொரு கணக்கும் உண்டு. இவ்வாறு தலைமுறைகள் ஏழு.
இசையில் ஏழு ஸ்வரங்கள் ச,ரி,க,ம,ப,த,நி  என்று ஏழு.  தமிழிசையில் இவை குரல், தத்தம், கைக்கிளை, உழை, இளி, உளரி, தாரம் என்றழைக்கப்படுகிறது. தவிலுக்குரிய தாளச்சொற்கள் தா, தீ, தொம், நம், கி, ட, ஜம் என்று ஏழு.

திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு. ஒவ்வொரு திருக்குறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டினால்  அதுவும் ஏழுபகுதிகளாக வரும். திருக்குறளில் "கோடி' என்ற சொல்  பயின்று வந்துள்ள இடங்கள் ஏழு.

மேலுலகங்கள்,  சத்யலோகம், தபோலோகம், ஜனோலோகம், மஹர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம், பூலோகம்  என்று ஏழு. கீழுலகங்கள்  அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தலாதலலோகம், மகாதலலோகம், ரஸாதலலோகம், பாதாளலோகம் என்று ஏழு. (இவையிரண்டையும் சேர்த்து ஈரேழு பதினாலு லோகம் இப்பிரபஞ்சத்தில் உள என்பது மரபு.)

மயிலுக்குப் போர்வை அளித்த பேகன்

மயிலுக்குப் போர்வை அளித்த பேகன், முல்லைக்குத் தேர் தந்த பாரி, ஈர நன்மொழி கூறிய காரி, நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்த ஆய், நெல்லிக் கனியை ஔவைக்கு அளித்த அதியமான், துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன்.  நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கிய நள்ளி, தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு (யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். ஓரி என்று கடை வள்ளல்கள் எழுவர்.

ஏழு இடங்கள் என்பது சப்தஸ்தானம் என்பது வடமொழியில் அழைக்கப்படுகின்றது. தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான  திருவிழாக்கள்  அல்லது ஏழூர்த் திருவிழா எனப்படும், ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அவற்றுள் தஞ்சாவூர்  மாவட்டத்தின் திருவையாறு சப்த ஸ்தான திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. நந்திகேஸ்ரரின் திருமண விழாவைக் கொண்டாடும் விதமாக திருவையாறு ஐயாரப்பர் திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக திருவையாற்றுக்குத் திரும்பும் சப்தஸ்தான திருவிழா சிறப்பானது.

திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுகிறன. அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகியவை ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மலை மகள் பார்வதி,  சப்த மாதர்கள் மற்றும் அநவித்யநாதசர்மா, அனவிக்ஞை  தம்பதியினர் வழிபட்ட  சப்த மங்கை  தலங்கள்  அமைந்துள்ளன. அவையான திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய சப்த மாதர் தலங்கள் ஏழு.

கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருவேங்கடவன் அருள் பாலிக்கும் திருமலையில்  அடங்கியுள்ள மலைகள்  சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி என்று ஏழு. 

திருமயிலையில் சிவபெருமான் கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விரூபாட்சீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று அருள் பாலிக்கும் தலங்கள் ஏழு.  

ஆலமுண்ட நீலகண்டனாக, விடங்கராக, புண்ணியபுரி நாதனாக, மறை தேடும் பிறையனாக, சர்வலோக நாயகனாக, வேதாந்தச் சுடராக, ஆனந்த ஸ்வரூபியாக, ஏழைகளின் கற்பகமாக, பரஞ்சுடராக, கருணைக் கடலாக, மாசற்ற மணி விளக்காக, தயாநிதியாக தியாகராஜனாக சிவபெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலங்களும் ஏழு.

இது வரை எண் ஏழின் சிறப்புகளைக் கண்டோம், வாருங்கள் அன்பர்களே அடுத்து விடங்கம் என்றால் என்ன என்று காணலாம்.

                                                                     தரிசனம் தொடரும் . . . . . .

Friday, January 10, 2020

ஆருத்ரா தரிசனம்

இன்றைய ஆருத்ரா தரிசன அருட்கோலங்கள்


சென்னை அசோக்நகர் மல்லிகேஸ்வரர் ஆலயம்


ஓம் க்ருபா சமுத்ரம் சுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்  |

சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி  ||

கருணைக் கடலானவரும்,  மங்கள திருமுகத்தினரும்,  முக்கண்ணரும்,  உமையன்னைக்கு இடது பாகத்தை அளித்தவரும், என்றும் மங்கள வடிவினரும், எல்லையற்ற  உருவங்களை தரித்தவரும், சிதம்பரத்தில் அருள் பாலிக்கும் ருத்ரரை தியானிக்கின்றேன்.



ஆடல் வல்லான்




சிவானந்தவல்லி


மாணிக்கவாசகர்


*********************

சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் ஆலயம் 






தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி !
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி !!



ஆனந்த கூத்தர்


சிவகாம சுந்தரி


கண்ணாடி சேவை

******************

சென்னை சைதாபேட்டை சௌந்தரேஸ்வரர் ஆலயம்


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலஉலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

****************

சென்னை சைதாபேட்டை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம்

விநாயகர்

அம்பலவாணர்

சண்முகர் 

மானாட  மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
 மாலாட நூலாட மறையாட திறையாட  மறைதந்த பிரமனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு னியட்ட  பாலகருமாட 
 நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட  நாட்டியப்பெண்களாட 

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை  விருதோடு  ஓடிவருவாய்
யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லை வாழ் நடராசனே


திருப்பாத தரிசனம் - 1

சப்த விடங்கத் தலங்கள் யாத்திரைத் தொடர்

முத்து விதானம் மணிப் பொற் கவரி முறையாலே
பக்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்தலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

என்று அப்பர் பெருமான் ஞானசம்பந்தருக்கு திருவாரூரில் அவர் தரிசித்த ஆருத்ரா தரிசனத்தை  விளக்குகிறார். அத்திருவாதிரைநாளில், எம்பெருமான் இன்று ஆனந்த நடராஜராக இன்று தரிசனம்  நாளில், திருவாரூரில் தியாகேசர் பாத தரிசனம் தந்தருளும் நாளில்  சப்தவிடங்க தலங்களின் யாத்திரைத் தொடரை அவனருளால் தொடங்குகிறேன். வந்து தரிசியுங்கள் அன்பர்களே.


 தியாகராஜர் - கமலாம்பாள்


அடியேனுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அடியேனது தந்தையார் தெய்வத்திரு. உ.சா.சுப்பிரமணியன் அவர்கள்.  ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் ஒரு புது  அனுபவத்தை பெறுகின்றோம் என்று அவர் கூறுவார்.  தாயார் தெய்வத்திரு. சு.சரவணம்மாள் அவர்கள் உணவு ஊட்டும் போது ஆன்மீகக் கதைகளைக் கூறி ஆன்மீகத்தையும் சேர்த்து ஊட்டினார் என்றால் தந்தையார் சிறு வயதிலேயே எங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள பொது நூலகத்திற்கு அடியேனையும் மற்ற குழந்தைகளையும் அழைத்துச் சென்று சித்திரப்பட புத்தகங்களை எடுத்துக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். அப்போது படித்த பெலிக்கனின் கதை, ஓநாய் பையன் கதை முதலிய நூல்கள் இன்றும் பசுமரத்தாணிப் போல மனதில் பதிந்துள்ளது.

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது தன்னுடைய நூலக உறுப்பினர் கணக்கை, அடியேன் பெயரில் மாற்றிக் கொடுத்தார். பின்னர் பல புத்தகங்களைப் வாசிக்க ஆரம்பித்தேன். தந்தையார் மற்றும்  உடன் பிறந்தவர்கள் புத்தகங்களில் முழுவதும் மூழ்கியவர்கள்  என்பதால் அப்பழக்கம் அடியேனையும்  எளிதாகத் தொற்றிக் கொண்டது.  தமக்கைகள் வழிகாட்டியபடி சரித்திர புதினங்களை படிக்க ஆரம்பித்த போது கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு முறை படித்து விட்டு மறந்து விடக்கூடிய புதினமா அது?. இது வரை எத்தனை முறை படித்திருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. அதில் வரும் ஒரு சம்பவம் இந்நூலை எழுதுவதற்கு ஒரு பொறி எனலாம்.  அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளாதா? இதோ சொல்லி விடுகிறேன்.

பொன்னியின் செல்வனில் ஒரு சம்பவம், அருள்மொழிவர்மர் திருவாரூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது அங்கிருந்த ஆலயத்தார்களைப் பார்த்து “இக்கோயிலின் இறைவருக்கு தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது”? என்று கேட்பார். தேவர்களுக்குள் மகாதேவரும் மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார்கள் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள் புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப் பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டு தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். எல்லா உலகங்களுக்கும் இறைவர் பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றி பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியதுப் பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்

அத்தியாகராஜப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருவாரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்”,  என்று கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில் எழுதியுள்ளார். அந்த பொன்னியின் செல்வன் புதினமே தியாகத்தை அடிப்படையாக கொண்டதுதானே. ஐந்தாம் பாகத்தின் தலைப்பும் தியாகச் சிகரம்தானே. 

அன்று முதலே அத்தியாகராஜ எம்பெருமானை தரிசிக்க வேண்டும் என்று ஒரு ஆவல். மேலும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படம் பார்த்த போது திருவாரூர் தியாகராஜப்பெருமான் கோவிலைப் பற்றி கூறிய குறிப்புகள் அந்த ஆவலை அதிகப்படுத்தியது.  பல வருடங்கள் கழித்து  வேலை நிமித்தமாக காரைக்கால் வந்த போது அவ்வாசை அவனருளால் நிறைவேறியது.


கமலாலயத் திருக்குளம்

தியாகராஜப் பெருமானை திருவாரூரில் முதல் முறை தரிசித்த போது பாத தரிசனம் கிட்டவில்லையே என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது ஆருத்ரா தரிசனத்தன்றும், பங்குனி உத்திரத்தன்று மட்டுமே பாத தரிசனம் மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டும்தான் என்று கூறி ஆவலை இன்னும் அதிகப்படுத்தினர். ஆருத்ரா தரிசனத்திற்காக காத்திருந்து பாத தரிசனமும் பெற்றேன். அவரது அபிஷேகங்கள்,  திருநடனம், தேரோட்டம், தெப்போற்சவம் தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியது. சப்தவிடங்க தலங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

காரைக்கால் பகுதியில் பணி என்பதால் திருநள்ளாற்றில் எழுந்தருளியுள்ள நகவிடங்க செண்பக தியாகேசரை பின்னர் பலமுறை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அவரது பிரம்மோற்சவத்தின் ஒரு சமயம் அன்பர்களுடன் ஒரு அடிமையாக அவரை எழுந்தருளப் பண்ணும் பாக்கியமும் கிட்டியது. இவரது அபிஷேத்தை பல முறை தரிசனம் செய்ய வைத்தார். குறிப்பாக ஆருத்ரா தரிசனத்தன்று இவருக்கும் நடராசப்பெருமானுக்கும் ஒரே காலத்தில் அபிஷேகம் நடப்பதை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.

அடியேனுடன் பணிபுரியும் ஒரு அன்பர் நாங்கள் ஒரே நாளில் சப்த விடங்கத்தலங்கள் ஏழினையும் தரிசனம் செய்வோம் என்று கூறினார்.  அங்கு வசித்த போது ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலவில்லை. அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும். பின்னர் பல வருடங்கள் கழித்து ஒரு புனித பயணத்தின் போது இவ்வேழு தலங்களையும் ஒரே சமயத்தில் தரிசிக்கும் பாக்கியம் சித்தித்தது.  “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றபடி அவ்வனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்நூல்.  வாருங்கள் ஏழு தியாகராஜர்களையும் தரிசிப்போம்.

முசுகுந்த சக்கரவர்த்தியால் இந்திரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இம்மூர்த்திகள் எழுவரும் கொண்டு வரப்பட்டனர். இவர்களுள் திருவாரூர் வீதி விடங்கப்பெருமான் திருமால் தன் மார்பில் வைத்து பூஜித்த மூல மூர்த்தி ஆவார். மற்ற ஆறு மூர்த்திகள் திருநள்ளாறு, திருநாகை, திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருக்கறாயில் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ளனர். வாருங்கள் அன்பர்களே இவர்களை ஒவ்வொருவராக தரிசிக்கலாம்.

ஒவ்வொரு தலத்தைப் பற்றியும் எண்ணற்ற நூல்கள் தமிழிலும், வடமொழியிலும் உள்ளன. அவைகளை இந்த அவசர உலகத்தில் படிக்க யாருக்கு அவகாசம்  உள்ளது? எனவே இத்தலங்களைப் பற்றி அடியேன் படித்து பல அன்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட சில தகவல்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இந்நூல்.

தியாகராஜர் எப்போதும் முக தரிசனம் மட்டுமே தந்தருளுகின்றார். அவரின் பாத தரிசனத்திற்காக காத்துக்கிடக்க வேண்டும். அது கிடைப்பதே பெரும் பாக்கியமென்பதால் இத்தொடருக்கு  “திருப்பாத தரிசனம்” என்று தலைப்பு.  

சப்தவிடங்கத்தலங்களுடன்,  திருவாரூர் போலவே தியாகேசர் சுந்தரருக்காக தூது சென்ற திருவொற்றியூர் தலம் மற்றும் தொண்டை மண்டலத்தின் உபய விடங்கத்தலங்களைப் பற்றிய தகவல்களும்   இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இனி மேல் இந்த யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைவாக அடியோங்கள் சென்ற சப்தவிடங்க தல யாத்திரை பற்றி ஒரு சிறு குறிப்பையும் கொடுத்துள்ளேன்.

பல தடவை இவ்வாலயங்களுக்குச் செல்லும் போது அத்தலங்களின் சிறப்பை கூறுவதற்கு யாரும் இருப்பதில்லை, அனைத்து செய்திகளும் ஒரே இடத்தில் கிடைப்பது இல்லை என்பதால் அடியேன் படித்து, பலரிடம் பேசி சேர்த்த குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். அவற்றை எழுதிய அடியேனுக்கு உணர்த்திய அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக பட்டினத்தார்தாசன் திரு.காசி அவர்கள் திருவாரூர் பற்றிய பல அரிய தகவல்களை அளித்தார், தியாகராசரின் பங்குனி உத்திர பாத தரிசனத்திற்கும் அழைத்துச் சென்றார் அவருக்கு என் மனமார்ந்த நன்றி.  இந்நூல் வருங்காலத்தில் இத்தலங்களுக்கு செல்ல விழைகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்புகிறேன். வாருங்கள் ஜகத்தீரே சிவானந்தத் தேன் கொட்டிக் கிடக்கின்றது அதில் ஒரு சிறு துளியை சுவைக்கலாம்.


குழலொலி யாலொழி  கூத்தொலி எங்கும் குலாம் பெருகி
விழவொலி விண்ணளவுங் சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவினை யாற்கு வழிவழி யானாய் மணஞ்செய் குடிபிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே

                                                                                            - ஆனந்த சேந்தனார்


தரிசனம் தொடரும் . . . . . .