Showing posts with label மணிகண்டன். Show all posts
Showing posts with label மணிகண்டன். Show all posts

Friday, November 18, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா -2

                                                 ஹரிஹரசுதன்  அவதாரம் 


இத்தொடரின் மற்ற பதிவுகள்:   

              4                  10    11    12     13    14    15    16    17    18    19    20    21     22     23     24   



சிவபெருமானுடைய சக்தியும் நாராயண மூர்த்தியினுடைய சக்தியும்,  இணைந்து அவதரித்தவர் ஹரிஹர புத்திரரான ஐயப்பன்.   

சிவன் யோக சக்தி,  விஷ்ணு போக சக்தி இருவரும் இணைந்து உருவானவரே ஐயப்பன். இது குறியீட்டு முறையில் கூறப்பட்டுள்ளது. 



சுவாமியே சரணம் பொன் ஐயப்பா

(சென்னை மேற்கு போக் சாலை முத்துமாரியம்மன் ஆலய ஐயப்ப பக்தர்கள் ஒரு வருடம் ஐயப்ப சாமி பூஜையின் போது அப்படியே சபரிமலை  ஐயப்ப சன்னிதானத்தை சென்னையில் அமைத்தனர் அதன் காட்சிகளை இப்பதிவில் காணுகின்றீர்கள் அன்பர்களே )
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம்  பெறுவதற்காகவும்;  துருவாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும்;  மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக்  கடைந்தார்கள். அப்போது வாசுகி வேதனையால் கக்கிய "ஆலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து "ஆலகால விஷமாக" திரண்டு தேவர்களையும், அசுரர்களையும் அழிக்க துரத்தியது.


தேவர்களும் அசுரர்களும் திருக்கயிலாயம் சென்று  பரமசிவனிடம் தம்மை காப்பாற்ற வேண்டினர். பரமசிவன் அந்த  ஆலகால விஷத்தினை ஏந்தி அதனை அருந்தி தேவர்களையும், அசுரர்களையும், சகல ஜீவராசிகளையும்  காப்பாற்றி தியாகராஜனாக அருளினார். ஐயனின் வயிற்றில் கொடிய விடம் சென்றால் அகில லோகமும் அழியுமே என்று அவரது வாம பாகத்தில் அமர்ந்திருந்த உமையம்மை தனது தளிரன்ன கரத்தினால் அவ்விதத்தை ஐயனின் கழுத்திலேயே நிறுத்தினால். செம்பவள மேனி வண்ணனின் கழுத்திலே விடம் நின்றதால் அவர்      திருநீலகண்டன் ஆனார்.



சபரிமலை ஐயன் சரிதம் 
அதன் பின்னர் அவர்கள் திருபாற்கடலைக் கடைந்த போது; திருபாற்கடலில் சங்கமித்த இந்திரனின் செல்வங்களான சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி,  காமதேனு, கற்பக  விருட்சம், ஐராவதம், உச்சைசிரவம்   முதலானவை வந்தன. பின்னர் இலக்குமியும் பாற்கடலில் இருந்து வந்தாள்.  இறுதியாக அமிர்த கலசத்தை தாங்கியவாறு தன்வந்திரி பகவான் வந்தார்.
திருமால் அமிர்தத்தை அசுரர்கள் அருந்தினால் அவர்களும்  சாகாவரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் ஒரு தந்திரம் செய்தார்.   அசுரர்களின் பலவீனத்தை (அழகான பெண்களைக் கண்டால் தம்மை இழந்து மயங்கும் தன்மையை) நன்குணர்ந்த அவர்  "மோகினி"  அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை வஞ்சித்து  அமிர்தத்தை  தேவர்களுக்கு மட்டும்  பகிந்தளித்தார்.


ஹரியின் மோகினி" அவதாரத்தை சாதகமாக்கி; விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்ததுவதற்காக; கைலாசபதியான ஸ்ரீ பரமேஸ்வரன் (ஹரன்); மோகினியின் அழகில் மயங்கி, ஆழ்ந்து பரவசம் கொள்ள; அவ்விரு மூர்த்திகளின் ஆற்றல்கள் முழுவதும் ஒன்றாகப் பெற்ற ஸ்ரீஹரிஹர புத்திரன் - தர்ம சாஸ்தா அவதரித்தார் என விஷ்ணு புராணம்  கூறுகின்றது.


ஐயப்பன் சன்னதி 

பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெரும் தவம் செய்து சிவபிரானிடம் தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக போக வேண்டும்  என்னும் அரிய வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்சித்து பார்க்கத் துணிந்தான்.


சிவபிரான் செய்வது அறியாது ஓட,  அசுரனும் அவரைத் துரத்திக்கொண்டு ஓடினான்.  சிவபெருமானைக் காப்பாற்ற   மகாவிஷ்ணு மோகினி ரூபமெடுத்து  பஸ்மாசுரன் முன் தோன்றி  அவனின் எண்ணத்தை திசை திருப்பி; அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து அவனை  பஸ்பமாக்கினார். அந்த மோகினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்த்துவதற்காக நாராயண மூர்த்தியாகிய மோகினி  மேல் மோகம் கொள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன்   அவதரித்ததாக பத்ம புராணம் கூறுகின்றது.


ஐயப்ப சுவாமி தரிசனம் 
இவ்விரு புராணங்களும்  ஐயப்பன் அவதாரம்; நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைந்ததால் அவதரித்தவன்  ஹரிஹரபுத்திரன் என்பதை கூறுகின்றன.  ஐயனாகிய சிவனும், அப்பனாகிய விஷ்ணுவும் இணைந்து உருவானவர் என்பதால் இவருக்கு ஐயப்பன் என்று திருநாமம்.
ஹரிஹர புத்திரரான தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயண மூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக  (ஐயனாராக) ஆசீர்வதித்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். (நாராயண மூர்த்தியின் கையில் அவதரித்தமையால் கைஅப்பன் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்பு அப்பெயர் மருவி ஐயப்பன் ஆகிற்று என்று ஒரு சாரார் கூறுகின்றனர்). 


ஜோதி தரிசனம் 

குறுகிய காலத்திலேயே சகல சாஸ்திரங்களையும்  பிரம்மாவிடம் கற்று "மஹா சாஸ்த்ரு" என்ற நாமத்தையும் பெற்றார். தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்மசாஸ்தாவின் திருவவதாரமே ஐயப்பன் என்பது ஐதீகம்.  இது ஐயப்பனின் திருவவதார  வைபவம்.   அடுத்த   பதிவில்  சாஸ்தா புஷ்கலை மற்றும் பூர்ணாவை மணந்த வைபவத்தைக் காணலாம் அன்பர்களே. 


கருப்பண்ணசாமி

ஆண்டவனின் அவதாரங்கள் அனைத்துமே அவரது சங்கல்பத்தால் நிகழ்வன. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும் என்றபடி அசுரர்கள் தங்களின் தவத்தின் பயனால் பல்வேறு வரங்களை பெற்று சகலருக்கும் துன்பம் விளைவித்தால் அவர்கள்  கொடுமையை ஒழிக்க இறைவன் அவர்கள் பெற்ற வரத்திற்கேற்ப  அவதாரம் எடுக்கின்றார். ஹிரண்யனை அழிக்க அவன் பெற்ற வரத்தின்படி நரசிம்மம், மகிஷாசுரனை அழிக்க துர்க்கை, சூரபத்மனை அழிக்க முருகன் அவதாரம். அது போலவே  மகிஷி பெற்ற வரத்திற்கேற்ப  திரிமூர்த்திகளின் இருவரின் மகனாக பிறந்து மானிடராக 12  ஆண்டுகள் சேவை செய்கின்றார் மணிகண்டன்.

விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணுசம்போ: ப்ரியம்ஸுதம் |
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .


Thursday, November 23, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -4

மணிகண்டன் அவதாரம் 



இப்பதிவுகளையும்  காணலாமே         5   6   7   8   9   10  11   12   13   14   15   16   17   18   19   20   21





ஐயப்ப சுவாமி 


பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் |

ஆர்த்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம்   ப்ரணமாம்யஹம் ||

பொருள்: பாண்டிய வம்சத்தில் வந்த தலைவரும் கேரள நாட்டில் திவ்ய ரூபத்துடன் திருவிளையாடல் புரிந்தவரும் எளியோர்க்கு உதவும் மேலான தெய்வமும் ஆகிய ஐயப்பனே உன்னை நான் வணங்குகின்றேன்  - . என்பது  ஐயப்ப நமஸ்கார  ஸ்தோத்திரத்தில் ஒரு ஸ்லோகம். 

அங்கற்கண்ணி அம்மையும் ஆலவாய் சொக்கநாதப்பெருமானும் அரசாண்ட பாண்டிய வம்சத்தின் ஒரு கிளையினர் பந்தள தேசத்தை ஆண்டு வந்தனர். அப்பந்தள ராஜனுக்கு பளிஞனும்  பிறந்து வளர்ந்து  ராஜசேகரன் என்னும் பெயருடன் அரசாண்டு வந்தான்.  ராஜசேகர மன்னன் ஒர் சிவபக்தன்.  மகாராணி கோப்பெருந்தேவி விஷ்ணு பக்தை.   விவாகமாகி பல ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கென ஒரு வாரிசு இல்லையே என்ற பெரும் கவலையோடு பிரார்த்தனை செய்து மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வரலாயினான். 
பாண்டி நாட்டில்தான தர்மங்கள் செய்து, தர்மசீலனாய் வாழ்ந்து சர்வேஸ்வரனையே வழிபட்டு வந்த விஜயன் என்னும் பிராமணன்; ஐயனின் அருளினால் பந்தள தேசத்தில்  ராஜசேகரன் என்னும் பெயருடன் பிறந்து அரசாண்டு வந்தான் என கூறுவாருமுளர்.
மன்னனின் மன வேதனைகளையும், அவனது தயாள குணத்தையும் பலவீனமாக உணர்ந்து கொண்ட அந்நாட்டு மந்திரி அதனைச் சாதகமாக வைத்து நாட்டில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இராச்சியத்தை தானே கைப்பற்றும் நோக்கோடு பல சூட்சிகள் செய்யலானான். 
வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.
மஹிஷாசுரனின் தோற்றமும் மறைவும்

தனு என்ற அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற  இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான்.  அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.


திருமயிலை கற்பகாம்பாள் மஹிஷாசுர மர்த்தினி அலங்காரம் 
உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும்காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய்  பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் என்னும் பெயருடன் பிறந்தான்.
மகிஷாசுரன் கடும் தவம் செய்து பிரமதேவனிடம் பல வரங்கள் பெற்றான்.  தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தான். .  மகிஷாசுரன் தனக்கு ஓர் பெண்ணால் அன்றி மரணம் ஒரு போதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். ஒரு பெண்ணால் தன்னை வெல்ல முடியாது என்று அகம்பாவம் கொண்டிருந்தான் மகிஷன்.
அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.
மகிஷாசுரனிடம்  தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த  இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மகிஷாசுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இறைஞ்சி  நின்றனர்.
தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்த்திகளும்  மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மகிஷாசுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு பெண்ணால்  மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு,  பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் மற்ற தேவர்கள் அனைவரும்  தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சங்கார மூர்த்தியை" சிருஷ்டித்தார்கள்.
அந்த சங்கார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக "துர்கா தேவி"  ஆவிர்பவித்தாள். 
மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மகிஷாசுரனுடன் போர்புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள். மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால்  துர்க்காதேவி  "மகிஷாசுரமர்த்தினி" என்று  பெயர் பெற்றாள்.

மகிஷியின் வரலாறு : 
மகிஷாசுரன் வதத்திற்கு பிறகு  கரம்பன் மகளான மகிஷி தந்தையின் தூண்டுதலினால்;  தன் சகோதரனான  (தந்தையின் சகோதரன் மகனான) மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் எனக் கருதி அவர்களை பழிவாங்க முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற்றுக்கொள்ள அவள் பிரம்மாவை நோக்கி நெடுநாள் கடும் தவம் புரிந்தாள்.   
மகிஷியின் கடும் தவம் கண்டு மகிழ்ந்த பிரம்ம தேவன், அவள் முன் தோன்றி, உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம்.  வேண்டும் வரம் கேள் என்றார். ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கி பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கும் பிரம்மச்சாரியான குழந்தையால் மட்டும் அன்றி வேறு எவராலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது  என்றும், தான் இறந்த பின்பு தன் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும் என்னும் வரத்தையும் மகிஷி  கேட்டுப்  பெற்றுக் கொண்டாள்.  
இரண்டு புருஷ மூர்த்திகளால் ஒரு புத்திரன் பிறக்கமாட்டான் என்று எண்ணிய மகிஷி; தான் அழியாவரம் பெற்றுவிட்டதாக கர்வம் கொண்டு  தேவலோக சிம்மாசனத்தை கைப்பற்றியதோடு தேவர்களையும், பூலோகத்தில் முனிவர்களையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தாள். மகிஷியின் கொடுமையை தாங்க இயலாத தேவர்கள் பரமேஸ்வரனிடம் சென்று  முறையிட்டு தம்மை காப்பாற்ற வேண்டினர் 
யார் இந்த மஹிஷி ?: முற்பிறப்பில் தனது கணவனான தத்தாத்ரேய ரிஷியின் சாபத்தால் அசுர குலத்தில்  பிறந்து வாழ்ந்து வந்தாள். முற்பிறப்பில் அவர்கள் கணவன் மனைவியாக இருந்த போது தத்தாத்ரேய ரிஷிக்கும் அவன் மனையியான லீலாவதிக்கும் இடையில் அவர்களின் பக்தியின் சக்தியை கூறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது லீலாவதி ஆணவ மேலீட்டினால் "நீ மகரிஷி அல்ல மகிஷி" என பழித்தாள். மகரிஷிக்கு கோபம் பொங்கவே  மெளடீகமும், பிடிவாதம் கொண்ட எருமைபோல் இருக்கிறாயே "நீ  அசுரகுலத்தில் மகிஷியாகக் பிறக்கக் கடவது" எனச் சபித்தார். இதைக்கேட்ட லீலாவதி  நீ என்னை சபித்துவிட்டாயா? எனக்கூறி பதிலுக்கு லீலாவதியும் "நீயும் சுந்தரமஹிஷமாக அசுர குலத்தில் பிறந்து எனக்கு கணவனாகக் கடவது" எனச் சபித்தாள். இருவருடைய சாபங்களும் பலித்தன. 

 (விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் காலவன் என்னும் முனிவரும் அவரது மகள் லீலாவதியும், சீடனாகிய தத்தாத்ரேயன் என்பவனும் வாழ்ந்து வந்தனர். தத்தாத்ரேயனிடம் விருப்பம் கொண்ட லீலாவதி அவனிடம் காதல் வயபட்டாள். தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். லௌகீக வாழ்க்கையில் ஆர்வம் காட்டாத தத்தாத்ரேயன் அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை. 
ஒருநாள் தத்தாத்ரேயர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவனை நோக்கி, "தாங்கள் என்னைப் "பட்ட மஹஷி" (மனைவி) ஆக்கவேண்டும்" என லீலா வேண்டினாள். . அந்நேரம் கோபம்கொண்ட தத்தாத்ரேயன், நீ மஹிஷியாகவே (எருமை) போ என சபித்தானாம். அவ்வாறாக அவள் கரம்பன் என்னும் அசுரனின் மகளாக எருமைத் தலையோடு பூமியில் பிறந்தாள் என கூறுவாருமுளர்.)
மணிகண்டன் அவதாரம்:

கைலாசவாசன் தேவர்களின் குறை தீர்க்க எண்ணி விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ-வைஷ்ணவ ஜோதியான  ஐயனாரிடம் சென்று மகிஷியை மர்த்தனம் செய்து தேவர்களைக் காப்பாற்றவும், பந்தள மன்னனின் பிள்ளைக் கலி தீரக்கவும், சபரிக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவும்  பாண்டிய நாட்டின்  ராஜசேகர  மன்னனுக்கு மகனாக அவதரிக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது என அனுக்கிரகித்து; பூலோகத்தில் உனது அவதார நோக்கம் நிறைவுற இதோ இந்த "மணி" உனது கழுத்திலே "ரட்சா பந்தனமாக இருக்கட்டும்" என்று கூறி ஒரு மணி மாலையை அணிந்தார். அதன் பின் ஐயப்பனை  ஒரு குழந்தையாக்கி பம்பா நதிக்கரையை அடைந்தார். அங்கு அவர் ஓர் ரிஷிபோல் ரூபமெடுத்து சாஸ்தாவாகிய குழந்தையுடன் வேட்டைக்கு வந்த தனது பக்தனான ராஜசேகரனின் வரவை எதிர்பார்த்து ஒரு மரத்தடியில் காத்திருந்தார். 
  
மணிகண்டன் அவதாரம் 
வனத்தில் வேட்டைக்கு வந்த பந்தள தேசத்து மன்ன பம்பா நதிக்கரை பக்கம் வந்தபோது ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.  குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மன்னன். என்ன ஆச்சரியம் கோடி சூரியனின் பிரகாசத்துடன் ஒரு ஆண் குழந்தை கழுத்தில் மணியுடன் அழுது கொண்டிருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போல மன்னனைப் பார்த்ததும் சிரித்தது. மன்னன் கையில் எடுத்தான் அந்தக் குழந்தயை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான்,  யாரையும் காணவில்லை.
அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.  "மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணர்வாய் என்று கூறி மறைந்தார்.
கழுத்தில் மணி இருந்ததால் "மணிகண்டன்" என்னும் பெயர் சூட்டினார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மணிகண்டன் வளர்ந்து வந்தான்.  மணிகண்டன் வந்த ஆண்டுகளுக்குப்பிறகு.  இராணி சூல் கொண்டாள். உரிய காலத்தில் அவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அப்பிள்ளைக்கு இராஜராஜன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். 
ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தான். தெய்வக்குழந்தையான அவன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தான். குருகுல வாசம் முடிந்தபின் குரு தட்சணையாக பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை பேச வைக்குமாறு குரு வேண்டினார்.  மணிகண்டனும் குருவின் மகனை  பேச வைத்தான். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும் செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார்  என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பனை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டு தோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினான்.
மணிகண்டன் திறமைகளைக் கண்டு  பொறாமையும், வெறுப்பும் கொண்ட மந்திரியார்; மணிகண்டன்  யார் என்பதை உணராது;  அவர் இராஜாவானால் தனக்குள்ள எல்லாச் செல்வாக்கும், வசதிகளும் பறிபோய்விடும் என எண்ணி மணிகண்டனை கொன்று விட தீர்மானித்து பலவழிகளாலும் முயற்சிகள் செய்தான். உணவில் நஞ்சூட்டச் செய்தும், நஞ்சு பூசப்பெற்ற அம்புகளை ஏவச்செய்தும், பலரை ஏவிவிட்டு தாக்கியும் அவரைக் கொல்ல எடுத்த எல்லா முயற்சிகளும்  அவரின் தெய்வ சக்தியாலும், இறைவனின் அருளிளாலும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையில் மணிகண்டன் பந்தள தேசத்தில் கொள்ளையிட துர்க்கிஸ்தானிலிருந்து படை வீரர்களோடு வந்த கடற் கொள்ளைக்காரனான வாபர் என்ற  கொள்ளைக்காரனை தனது அன்பு வார்த்தைகளினால் அடிபணியச் செய்து அவனைத் தனது நண்பனாக்கினார்.  அதன் பின்னர் பந்தள நாட்டை ஆக்கிரமிக்க வந்த உதயனையும் அவனது தம்பிமாரான உக்கிர சேனன், பத்திர சேனன் ஆகியோரையும், படைகளையும் வாபரின்  உதவியுடன் அழித்து. பந்தள நாட்டை பேராபத்தில் இருந்து காப்பாற்றினார்.
மணிகண்ட குமாரனின் வரவால் நாட்டில் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகர மன்னன், மணிகண்ட குமாரனுக்கு "பட்டாபிஷேகம்" செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால் வேதனை அடைந்த மந்திரி அரசனிடம் சென்று அதனைத் தடுப்பதற்காக பல காரணங்களை முன்வைத்து பட்டாபிஷேகத்தை நிறுத்த முயற்சித்தான்.

இதற்கிடையில்; இறை அருளால் மஹிஷிக்கு தேவலோக வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டதனால், லௌகீக வாழ்கையில் நாட்டம் ஏற்பட்டு; முற்பிறப்பில் தனது கணவனாக இருந்த ததாத்திரேயன் தனது சாபத்தினால் அசுர குலத்தில் பிறந்து சுந்தரமஹிஷன் என்ற பெயருடன் பூலோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதை அறிந்து; பூலோகத்திற்கு வந்து சுந்தரமஹிஷனை  விவாகம் செய்து லௌகீக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தாள்.
மந்திரியார்  மகாராணியாரை அணுகி; இந்த நாட்டை அரசாளும் உரிமை அரசபரம்பரையில் வந்த ராசராசனுக்கே உண்டு என்றும், காட்டில் கண்டெடுத்த மணிகண்டன் முடிசூடினால் மகாராணியாரின் சொந்த மகனான ராஜராஜனுக்கு அரசாளும் வாய்ப்பு கிடையாமலேயே போகும் என்றும் ராஜ பரம்பரையில் வந்த ராஜ ராஜனை யுவராஜன் ஆக்குவதே ராஜ நீதி என்றும் பல துர்ப்போதனை செய்து  கோபெருந்தேவியின் மனத்தை மாற்றினான். 

மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய இராணி அவன் கூறியபடி 
தீராத தலை வலியால் துடிப்பதுபோல் நாடகமாடினாள். தலைவலிக்கு மருந்தாக புலிப்பால் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லுமாறு மந்திரியார் அரண்மனை வைத்தியரை கூறவைத்து, தந்திரமாக மணிகண்டனை புலிகள் நிறைந்த காட்டிற்கு அனுப்பி கொல்ல நினைத்தான்.
மணிகண்டனும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்து அவை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதால்; புலிப்பால் கொண்டுவர சம்மதித்து காட்டிற்கு செல்ல ஆயத்தமானார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மனம் கலங்கிய மன்னனையும் மணிகண்டன் ஒத்துக் கொள்ள வைக்கிறான்.
அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தன் அருமைக் குமாரன் தவிப்பானே என எண்ணி; மணிகண்டன் தனது குலதெய்வமான சிவனைப் பூஜை செய்வதற்காக; ஒரு துணியின் ஒரு பக்கத்தில் மூன்று கண்ணுள்ள தேங்காயும், பூசைக்குரிய பொருட்களும்; மற்றைய பக்கத்தில்; மணிகண்டன் பாதையில் உண்பதற்கான ஆகாரப் பொருட்களும் வைத்து இரண்டு முடிச்சுகளும் தலையில் இருக்கக் கூடியதாக ஒன்றாக இணைத்து; பூஜைப் பொருட்கள் உள்ள முடிச்சு முன்பக்கம் இருக்கக் கூடியாக, "இருமுடிபோல்" ஐயப்பனின் தலைமீது வைத்து வழியனுப்பி வைத்தான்.
அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள், முனிவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஒரு சிம்மாசனத்தில்  மணிகண்டனை  அமர்த்தி, அவரை போற்றித் துதித்து மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள்.
மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப்படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது.
மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண் வடிவெடுத்து  ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கிறாள்.
அப்போது ஐயன்;  என்னுடைய அவதார நோக்கமே மகிஷி சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் மாளிகைபுறத்தம்மன் (மஞ்ச மாதா) என்ற பெயருடன் என் பக்தர்களுக்கு அருள்புரிவாயாக"என்று கூறினார் . எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று கூறினார்.
மகிஷியின் கொடுமைகள் நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலிகளாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் செல்ல ஆயத்தமாகினர்.


வன் புலி வாகனன் ஐயப்பன் 

புலியாக மாறிய இந்திரன் மீது மணிகண்டன் அமர்ந்து பந்தளம் நோக்கிச் செல்லும் போது வழியில் உள்ள ஒரு மலையில்; சாபத்தால் கிழரூபம் அடைந்த "சபரி" என்ற  வித்யாதர ஸ்திரீ தவம் செய்து கொண்டிருந்தாள். கடும்புலியின் சிம்மத்தின்மீது வருகின்ற மணிகண்டனை அவள் உபசரிக்கவே அவளையும், அவள் சாபத்தையும் அறிந்த ஐயனும் அவளுடைய சாபத்தை நீக்கி தேவலோகம் செல்லும்படி அருளினார்.
தன் சாபம் எந்த மலையில் நிவர்த்தியாயிற்றோ அந்த மலை (சபரி) தன் பெயரால் வழங்க வேண்டும் என்றும் அம்மலையை அடையும் மானிடர்கள் பிறவி என்னும் சாபத்திலிருந்து நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்து, பதினெட்டு பிரதட்ஷனை நமஸ்காரங்கள் செய்தாள்.
மணிகண்டனும் வித்யாதர மங்கை தன்னைப் பதினெட்டு சித்திகளையும் பதினெட்டு படிகளாக அமைத்து கோயில் கொள்ளுவதாகவும், ஒவ்வொரு வருஷமும்; தன்னைத் தரிசிக்க வருபவர்கள் ஒவ்வொரு சித்தியையும் அடைந்து பதினெட்டு வருஷங்கள் தரிசித்தவர் சித்த புருஷர்களான முமூச்சுகளாவார்கள் என்றும் அதற்காகச் செய்ய வேண்டிய தவத்தை தானே அங்கு செய்வதாயும் வாக்களித்து பந்தள தேசத்திற்குப் புலிக்கூட்டத்துடன் வந்து சேர்ந்தார்.
புலிக்கூட்டம் ஒன்று பந்தள அரண்மனை நோக்கி வருவதையும் பெரிய புலி ஒன்றின்  மீது மணிகண்டன் அமர்ந்திருப்பதையும் கண்டு மக்கள் அதிசயமும், பீதியும் அடைந்தனர். மணிகண்டனை யாரென்று அறிந்த பந்தள தேசத்து மந்திரியார் தன்னுடைய குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான்.   
மணிகண்டனும், நீங்கள் எவரும் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றும்; எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில்  எதற்காக அவதரித்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. கலியுகத்தில் அதர்மம் தலை தூக்கியுள்ள இந்த வேளையில் இறைவனின் ஆணைப்படி தர்மத்தை நிலைநாட்ட தர்மதாஸ்தாவாக தவம் செய்யப் புறப்படும் காலம் நெருங்கி விட்டது எனக் கூறினார்.   
இதைக்கேட்டு மனமுடைந்த மன்னனும், மகாராணியாரும் தங்கள் பட்டாபிஷேகம் நடைபெறும்போது அணிவதற்காக பலநாட்களாக தேடி வைத்துள்ள ஆபரணங்களை அணிந்து ஒருநாளாவது சிம்மாசனத்தில் அமர்ந்து எங்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என பிடிவாதமாக கேட்டனர்.
ஐயப்பரும் பந்தள சிம்மாசனத்தை விட மேன்மையான சிம்மாசனம் எனக்காக காத்திருக்கின்றது. அது இறைவனின் நியதி. அதனை விலக்கவோ தடுக்கவோ இயலாத காரியம் என்று கூறி; தாங்கள் எனக்காக அன்போடு வைத்திருக்கும் அந்த ஆபரணங்களை "மகர ஜோதி தினத்தன்று அணிந்து தங்களுக்கு காட்சி தருவேன்" என்று உறுதியளித்தார். அத்துடன்  அத்திருவாபரணப் பெட்டி எவ்வாறு யாரால் சபரி மலைக்கு எடுத்து வரப்பட வேண்டும், எந்த ஆலயங்களில் இறக்கப் பெற்று ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதனையும் மன்னனுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
மன்னன் "பகவானே " தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்தி, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு ஓர் கோயில் எழுப்புங்கள் என்றான்.
அந்த அம்பு சபரிமலையில் வீழ்ந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும், இடப்பாகத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறி; தான் இனி அரச மாளிகையில் தங்க முடியாது என்றும், சபரிமலைக்குத் தவம் செய்யப் போவதாயும் கூறி மறைந்தார்.


ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பன் 
மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். புத்திர சோகத்தினால் வருந்திய அரசன் அகஸ்திய முனிவரால் ஹரிஹரப் புத்திரரின் தத்துவங்கள் உபதேசிக்கப்பெற்று ஐயனின் உத்தரவுப்படி கோவில் அமைத்தார், சுவாமியின் சிலையை பிரதிஸ்டை செய்ய வேண்டிய தருணத்தில் பரசுராமர் தோன்றி குந்தாளமிட்டு அமர்ந்து யோக பட்டயத்துடனும், தந்தையைப் போல வல திருக்கரத்தில் சின் முத்திரையுடன் கூடிய விக்கிரகத்தை தந்தருளினார். இவ்வாறு பந்தளராஜா  மானிடப் பிறவியின் நற்கதி பெற அருள் புரிந்தார்.


சன்னிதானம் 

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் அனுஷ்டித்து சபரிமலை வந்து சத்தியமான பொன்னு  பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு "ஜோதி" வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். மணிகண்டன் தனது குருவுக்கு குரு தட்சணையாக ஆண்டு தோறும் "மகர ஜோதியாக" காட்சிஅளிக்கிறார்.  இது மணிகண்டன் வரலாறு.
******

ஐயப்பமார்கள் அனைவரும் தாய் தந்தையருக்கும் , குல தெய்வத்திற்கும் உரிய மரியாதை கொடுத்து வணங்க வேண்டும் என்று ஐயப்பன் தனது வாழ்க்கையில் தானே நடந்து காட்டினா. எனவே முதல் தடவை மாலையிடும் போது பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின்பே மாலை அணிய வேண்டும். அதுவும் அவர்கள் கரங்களால் மாலை அணிந்து கொள்வது மிகவும் உத்தமமானது.

அது போலவே சபரி மலை செல்வதற்கு முன் ஒரு குலதெய்வத்தின் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு என்று குருசாமி அவர்கள் கூறுவார்.

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .