Showing posts with label ஜோஷிமட். Show all posts
Showing posts with label ஜோஷிமட். Show all posts

Saturday, November 26, 2016

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை - 61

ஜோஷிர்மட் 


சங்கரமடம்  (தற்போது  நரசிம்மர் சன்னதி)

புராணங்களின்படி ஜோஷிர்மட் கந்தமாதன பர்வதத்திற்கு நுழைவாயில். குளிர்காலத்தில் பத்ரிநாதர் ஆலயம் மூடப்படும் போது உற்சவர் இங்கு  ந்து தங்குகின்றார். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பிருதி திவ்விய  தேசம் இது.  தற்போது பெருமாள் சௌம்ய  ரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். பிரகலாதனுக்காக இவ்வாறு சாந் கோலத்தில் சேவை சாதிக்கின்றாராம். யோகேந்திரன்  பிரகலாதன் சதா சர்வ காலம் நம் வினைக்கு நஞ்சான  நாராயண மந்திரம் செபித்துக் கொண்டிருக்கும் தலம் இது. பத்ரிநாத யாத்திரை ஜோஷிர்மட் தரிசனத்தாலே முழுமையடைகின்றது என்பது ஐதீகம்.

இங்குள்ள ற்பகமரம் சுமார் 2400 வருடங்கள் பழமையானது. இதன் அடியிலுள்ள ஒரு குகையில் ஆதிசங்கரர் தவம் செய்து  ஞானம் பெற்றார், தனது முதல்  மடத்தை நிறுவினார் அம்மதம் உத்தராம்னாய மடம் என்றழைக்கப்படுகின்றது.. அதர்வண வேதத்தைப் பரப்ப நிறுவிய மடம் ஆகும்.  எனவே இவ்வூர் ஜோஷிர்மடமானது.

இவ்வூரில் ஆதிசங்கரர் அமர்ந்து தவம் செய்த 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பகமரத்தையும், அவர் தங்கியிருந்த குகையையும், அகண்ட சோதியையும் அவர் வழிபட்ட லக்ஷ்மி நாராயணரையும், தரிசனம் செய்யலாம்

ஜோஷிர்மட்  இமயமலையின் பல தலங்களுக்கு  நுழைவாயில் ஆகும். மூன்று பக்கங்களிலும் திரிசூலி, பத்ரி, காமெட் ஆகிய  பனிச்சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. மேகம் இல்லாத நாட்களில் இப்பகுதியின் விண்ணளவு உயர்ந்து நிற்கும் நந்தாதேவி பனிச்சிகரத்தைக் காணலாம்.  பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் என்னும் சீக்கியர்களின் புனிதத்தலம், மலர் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு இங்கிருந்து செல்லலாம்மேலும் திரிசூல், காமெட், நந்தாதேவி மலை சிகரங்களுக்கு மலையேறும் வீரர்களுக்கு ந்நகரம் ஆதார முகாம். அவுலி என்னும் பனி சறுக்கு விளையாட்டுத்தலமும் அருகிலமைந்துள்ளது.

இங்கிருந்து 11 கி.மீ தூரத்தில் தபோவனம் என்னும் பள்ளத்தாக்கில் பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி உள்ளது.  இக்கலிகாலத்தில் ஜோஷிர்மட் நரசிம்ம மூர்த்தியின் இடது திருக்கர  பருமன் குறைந்து கொண்டே வருகிறதாம் அது இவ்வாறு முழுதுமாக குறைந்து எப்போது உடைந்து விழுகின்றதோ அப்போது ஜய-விஜயர்களாகிய இரு மலைகள் இணைந்து தற்போது பத்ரிவனத்திற்கு  நாம் பயணம் செய்யும் பாதை அடைபடும் அதற்குப்பின் இப்பவிஷ்ய (எதிர்கால) பத்ரியில் நாம் பத்ரிநாதரை தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம்.

ஆதிசங்கரர் மடத்திற்கு அருகில் முக்தியளிக்கும் நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளதுஇவர் சுயம்பு சாளக்கிராம மூர்த்தி,  ஆதிசங்கரர் ஆராதித்த இவர் இடது காலை மடக்கி, வலது கால் மண்டியிட்டது போல் இருக்க, இடது திருக்கரத்தை கீழே ஊன்றி  வலது காலின் மேல் சக்கரம் தாங்கிய வலத்திருகரத்தை வைத்து எழிலாக  சாந்த  கோலத்தில் சேவை சாதிக்கின்றார். காலை 6:30 மணிக்கு தினமும் திருமஞ்சனம் டைபெறுகின்றது. அப்போது பெருமாளின் முழுயுருவையும் சேவிக்கலாம்.

திருமஞ்சனம் சேவிக்கும் பாக்கியம் அடியோங்களுக்கு கிட்டியது. தேவி மஹாத்மியம், விஷ்ணு சகஸ்ரநாம, ஸ்ரீசூக்தம்,  லக்ஷ்மிரசிம்ம கராவலம்பம் முதலிய  சுலோகங்களை பாராயணம்  செய்து கொண்டே பட்டர் திருமஞ்சனம் செய்கின்றார். முதலில் அலங்காரம் களைத்து பெருமாளை உண்மையான கோலத்தில் அனைவருக்கும் சேவை செய்து வைக்கின்றார். பின்னர் அவருக்கான திருமஞ்சன பீடத்தில் வைத்து பால், குங்குமப்பூ சாறு, சந்தனம் ஆகியவற்றால் மூல மூர்த்தி, திருப்பாதுகைகள்,  உக்ர ரசிம்மர், தவழும் கண்ணன், அனுமன், வேணு கோபாலர், விஷ்ணு ஆகிய உற்சவர் சிலைகளுக்கும் திருமஞ்சனம் செய்து .பின்னர் அலங்காரம் செய்து ஆரத்தி காட்டுகின்றார். இச்சமயத்தில் ஊன்றிய இடக்கை மிகவும் மெலிதாக இருப்பதை சேவிக்க முடியும். மற்ற சமயங்களில் அலங்காரத்துடன் முகச்சேவை மட்டுமே கிட்டுகின்றது.  பெருமாளுடன் குபேரன், கருடன், பத்ரிநாதர், கண்ணன், சீதா லக்ஷ்மணன் சகித இராமர், இராதாகிருஷ்ணர், உத்தவர், கிராம தேவதை சண்டி ஆகியோர் பஞ்சாயதான முறையில்  சேவை சாதிக்கின்றனர். .

மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!
என்ற திருமங்கையாழ்வாரின் திருப்பிருதி பாசுரம் சேவித்தோம். பெருமாளுக்கு எதிரில் ஆதி சங்கரரும், வேத வியாசரும் ஆராதித்த பெரிய பிராட்டியார் சேவை சாதிக்கின்றார்.

அருகிலேயே  வாசுதேவர்  ஆலய வளாகம் உள்ளது. இக்கோயில் வளாகம் பஞ்சாயதன முறையில் அமைந்துள்ளது. நடுநாயமாக வாசுதேவராக திருமால் நின்றகோலத்தில் சேவை சாதிக்கின்றார் உடன் அண்ணன் பலராமனும் சேவை சாதிக்கின்றார்,  நான்கு திசைகளில்  அட்டபு கணேசராக விநாயகர், கௌரி சங்கரராக  சிவன் (சோதீசுவர மஹாதேவர்), காளியாக  அம்பாள் மற்றும் சூரியன், பைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இவ்வாறு ஐந்து தெய்வங்களையும் வழிபடுவது பஞ்சாயதன முறை ஆகும்இக்கோயில் வளாகத்தின் தெய்வ மூர்த்தங்கள் அருமையான கலை நயத்துடன் அமைந்துள்ளன. அனைத்து தெய்வ மூர்த்தங்களும் தத்ரூபமாக ஆடை ஆபரணங்களுடன் அமைத்த சிற்பிகளின் கைவண்ணத்தை வியக்காமல் இருக்க முடியாது. மேலும் இக்கோயில் வளாகத்தில் நவதுர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. ஷைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்தரகாந்தாகூச்மாண்டா, கந்த மாதாகாத்யாயனிகாலராத்திரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்று மலைமகள் அன்னை பார்வதியை வழிபடுவது நவதுர்க்கை வழிபாடு ஆகும். வடநாட்டில்  நவராத்திரியின் போது நவதுர்கா வழிபாடு சிறப்பு.  அருமையான வெண்கலத்தால் ஆன கருடன் சிலை வாசுதேவருக்கு எதிரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அனுமனுக்கும், சிவபெருமானுக்கும்  தனிச் சன்னதிகள்  உள. இரவு நேரத்தில் மின் விளக்குகளின் ஒளியில் மிளிர்கின்றது இவ்வாலய வளாகம். 

2015ல் சென்றபோது பழைய  ஆலயம் இடிக்கப்பட்டு அவ்விடத்தில் புது ஆலயம் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தோம். அப்போது பெருமாளையும் தாயாரையும் அருகிலிருந்த ஆதிசங்கரரின் மடத்தில் பாலாலயத்தில் நிறுவி இருந்தனர். மறுவருடம் கற்றளி வேலைகள் முடிந்திருந்தன மேலே உள்ள மரவேலைப்பாடுகள் பாக்கி இருந்தன மறுமுறை செல்லும் போது புது ஆலயத்தில் பெருமாளை சேவிக்க இயலும் என்று எண்ணுகிறேன். 
  



புது ஆலயம் 




 ஆதி சங்கரர் சன்னதி 



யானை மலை( ஹாத்தி பஹாட்)  - ஜெயன்

குதிரை மலை (கோடா பஹாட்) - விஜயன் 



திருப்பிருதி திவ்யதேசத்தைப் பற்றிய குறிப்பு

திருப்பிருதி திவ்ய தேசம்

பெருமாள்: பரமபுருடன், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
தாயார்: பரிமளவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : இந்திர, கோவர்த்தன தீர்த்தங்கள். மானசரோவர சரஸ்.
விமானம் : கோவர்த்தன விமானம்
காட்சி நல்கியது: பார்வதி தேவிக்கு.
பாசுரம்: திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் பாடியபடி  அடர்ந்த காடுகள் வனவிலங்குகள் புஜங்கசயனப் பெருமாள் ஆலயம் இப்போது இங்கு இல்லை. எனவே ஒரு சாரார் நல்+இமயத்துள் என்று ஆழ்வார் பாடியுள்ளதால் இத்திவ்விய தேசம் மானசரோவர் தடாகமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். பெருமாள் அருகே உள்ள திருக்கயிலாய மலையில் பார்வதிதேவிக்கு திருக்காட்சி நல்கியதும் இதை உறுதிப்படுத்துகின்றது என்பது அவர்கள் கருத்து. 

ஒரு சிலர் வாசுதேவர் ஆலயமே ஆழ்வார் பாடிய ஆலயம் பிற்காலத்தில் இவ்வாறு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒரு சிலர் அருகில் உள்ள நந்தப்பிரயாகையை  திருப்பிருதி திவ்விய தேசமாக  கருதுகின்றனர். நரசிம்மரின் நிஜரூபமும், திருமஞ்சனமும் சேவித்த மகிழ்ச்சியில் பத்ரிநாத் புறப்பட்டோம். 

                                                            யாத்திரை தொடரும் . . . . . . .

Tuesday, July 17, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -28


  ஜோஷிமட் நரசிம்மர் ஆலய முகப்பு வாயில்
 (நரசிம்மர், வாசுதேவர், நவதுர்கா ஆலயம் மூன்றும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன)

அதிகாலை 6 மணியளவில் பாதை திறக்கப்படும் என்பதால் சீக்கிரம் எழுந்து தயாரானோம்.  இன்னும் சரியாக விடியவில்லை முதலில் நரசிம்மர் ஆலயம் சென்றோம், நாங்கள் சென்றபோது சன்னதி திறக்கப்படவில்லை ஆயினும் கோயிலை வலம் வந்த போது சன்னதி திறந்திருந்தது நரசிம்மரையும்,நவ துர்க்கைகளையும்  திவ்யமாக சேவித்து விட்டு, இந்தத் தடவைதான் கவனித்தோம் அருமையான ஒரு வெங்கல  கருடன் வாசுதேவருக்கு முன்னர் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.  பாதை திறந்தபின்  பத்ரிநாத்திற்கு புறப்பட்டு பத்ரிநாதத்தை இரண்டு மணி நேரத்தில் அடைந்து   தேஷ்பாண்டே அவர்கள் தங்கியிருந்த  அனந்த மடத்திற்கு சென்று பொருட்களை எல்லாம் வைத்து விட்டு,   உடனே தப்த்குண்ட் சென்று தீர்த்தமாடி விட்டு பத்ரிநாதரை தரிசனம் செய்ய புறப்பட்டோம்.



 நவதுர்கா
  
முட்கல் அவர்கள் எவ்வாறு தப்த்குண்டத்தில் தண்ணீர் நாம் குளிப்பதற்கு ஏதுவாக  கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்கின்றனர் என்று கூறினார். தப்த் குண்டத்தில் நீராடி பின் ஆதி கேதாரீஸ்வரரை முதலில் தரிசனம் செய்து விட்டு பின் பத்ரிநாதர் சன்னதிக்கு சென்றோம்.சிம்ம துவாரத்தின் மேற்பகுதியில் இந்த   வருடம் சங்கும் சக்கரம்ம் புதிதாக அமைத்திருக்கின்றார்கள்.   விஜயதசமியும் பெருமாளின் நட்சத்திரமுமான திருவோணமும் கூடி வந்த (திருமலையில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி நடைபெறும்) மிக புண்ணீய நாளில் பத்ரிநாதரின் திவ்யமாக சேவித்தோம். நாம் எப்போது அவரை தரிசனம் செய்கின்றோம் என்பதை நிர்ணயம் செய்பவர் அவர் அல்லவா. இந்தத் தடவை கேதார்நாத்திலும் சரி பத்ரிநாத்திலும் சரி அருமையான நாட்களில் தரிசனம் கிட்டியது. பரமபதத்தில் பெரிய பிரட்டியார், பூமா தேவி, நீளா தேவியுடன், கருடன், அனந்தன், விஷ்வஷேனர் முதலிய நித்ய சூரிகள் கைங்கர்யம் செய்ய, ஆதித்தர் அநேகர் ஒளி மழுங்க ஜோதிக்கதிர் வீசும் மணி மண்டபத்தில், நவரத்தினம்பதித்த ஆனிப்பொன்னால் செய்த திவ்ய சிம்மாதனத்தில் கருடர், கின்னரர், கந்தருவர், கிம்புருடர், தேவர்கள், முனிவர்கள் சூழ சேவை சாதிக்கும் கார் முகில் போல் மேனி வண்ணன் மஹா விஷ்ணுவை, மயிற்பீலி அழகனை, சகஸ்ர கவசனை வென்று பூலோகத்தை காப்பாற்றிய வள்ளலை, நாரதர் தினமும் சேவிக்கும் நாதரை, சங்கு சக்ர தாரியை பத்மாசானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் பரமனை அவரது பரிவாரங்களுடன் அற்புதமாக சேவித்தோம் சுற்றி வந்து மீண்டும் மீண்டும் திகட்டாத ஆராவமுதை சேவித்தோம்.    பின்னர் பிரகாரத்தில்  மஹா லக்ஷ்மித்தாயாரையும் திவ்யமாக சேவித்து பிரசாதம் பெற்றோம். நரநாராயணர் சந்ந்தியில் ஊர்வசி நவராத்திரி விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெருமாளை திவ்யமாக சேவித்த மனதிருப்தியுடன் இந்தத் தடவையும்  ராவல் அவர்களை தரிசனம் செய்து பெருமாளின் அபிஷேக சந்தனமும் துளசிப்பிரசாதமும் பெறும் பாக்கியம் கிட்டியது.
 பத்ரிநாதர் சுதை சிற்பம்

( கருடன், நாரதர் சேவிக்க நர நாராயணராய் பெருமாள் சேவை சாதிக்கின்றார்)

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கு சக்கரங்கள் 

 தேவராஜன், அடியேன், இரவி, முட்கல்

வைத்தி தனுஷ்கோடி, முட்கல்

 நாரதர் ஷிலா 
 
 அலக்நந்தா கரையோரம் 
யோகாசனம் செய்யும் தேஷ்பாண்டே அவர்கள்

காலையிலிருந்து மாலை வரை பலவிதமான கட்டண சேவைகள் பத்ரிநாத்தில் உள்ளன, நாங்கள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம சேவைக்காக சீட்டு வாங்கினோம். இன்னும் தங்க விளக்கு, வெள்ளி விளக்கு, காலை அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகளும் உள்ளன. எங்களுக்கு அடுத்த நாள் காலை அபிஷேகத்திற்கான சீட்டு கிடைக்கவில்லை. பின்னர் மடத்திற்கு திரும்பி வந்து சிறிது நேரம் ஒய்வெடுத்தோம். திரு தேஷ்பாண்டே குடும்பத்தினர் தங்கள் பித்ரு காரியங்களை பிரம்மகபாலத்தில் முடித்து விட்டு வந்த பின்   மானா கிராமத்திற்கும், பீமன் பாலத்திற்கும் புறப்பட்டோம்.  

பத்ரிநாத்தை சுற்றி இரண்டு கிராமங்கள் உள்ளன  முதலாவது பாம்னி கிராமம் இங்கு ஊர்வசிக்கு ஒரு கோயில் உள்ளது, மற்றும் பத்ரிநாதரின் பாத கமலங்கள் உள்ளன இது சரணபாதுகா என்று அழைக்கப்படுகின்றது.  அடுத்தது மானா கிராமம் இங்கு நர நாராயணர்களின் அன்னையான மாதா மூர்த்தி கோவில், வியாச குகை, கணேச குகை, பீமன் பாலம் ஆகியவை உள்ளன. இந்த மானா கிராமம் வரை டெல்லியிலிருந்து  தேசிய நெடுஞ்சாலை NH-58 போடப்பட்டடுள்ளது. 

 மானா கிராம செழிப்பு

முதலில் நாங்கள் சென்றது மானா கிராமத்திற்கு இங்கிருக்கின்ற கணேசர் குகைக்கு ஒரு சிறப்பு   உண்டு அது என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியென்றால் இந்த சிறிய கேள்விக்கு என்ன விடை என்று யோசித்துப் பாருங்கள். மஹா பாரதம் எழுத பயன்படுத்தப்பட்ட எழுது கோல் எது?  அட இது தான் நமக்கு தெரியுமே விநாயகரின் வலது கொம்புதானே என்றால் உங்கள் விடை சரிதான்.  இவ்வாறு விநாயகப் பெருமான்   வியாச பகவான் கூற தனது கொம்பினால் ஐந்தாம் வேதமாகிய மஹாபரதத்தை எழுதிய இடம் இந்த மானா கிராமத்தில் உள்ளது. முதலில் அந்த முழு முதற் கடவுளை


முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

 மஹாபாரதம் எழுதிய கணேசர் குகை 

என்று மேருமலையில் முத்தமிழையும் இந்த இமய மலையில் மஹாபாரதத்தையும் எழுதிய மூலமுதல்வனை தரிசித்து வணங்கினோம். வேத வியாசர் பாரதம் கூறிய போது அதை எழுதியவர் விநாயகர் , அப்போது விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தாராம். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் நிறுத்தினால்  எழுதுவதையும் நிறுத்தி விடுவேன் என்றாராம். ஆகவே வியாச பகவான்  முதலில் ஐந்து ஸ்லோகங்களை சொல்லுவாராம் அதை விநாயகப்பெருமான் தனது கொம்பினால் எழுதி முடிப்பதற்குள் அடுத்த ஐந்து ஸ்லோகங்களை மனதில் உருவாக்கி விடுவாராம்.

அடுத்து வியாச பகவானின் குகைக்குச் சென்றோம்.  வியாச பகவானைப்பற்றி விஷ்ணு சகஸ்ரநாம பூர்வ பாகத்தில் இவ்வாறு இரண்டு ஸ்லோகங்கள் வருகின்றன.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ர – மகல்மஷம் |
பராசராதமஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் ||

வ்யாஸ பகவானின்  மூதாதையர்களை கூறும் ஸ்லோகம் இது.  பிரம்ம ரிஷியான வஷிஸ்டரின் கொள்ளுப்பேரன், சக்தி ரிஷியின் பேரன், பராசரர்- சத்தியவதியின் திருக்குமாரர் அது மட்டுமா இவரது புத்திரர் சுகபிரம்ம ரிஷி. உலக நன்மைக்காக பல்வேறு நன்மைகளை செய்து நீதிகளை அருளியவர்கள் அத்தனை பேரும்.

வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்ட்டாய நமோ நம: ||  

வியாசர் குகை

வஷிட்டரின் குலத்திலே பிறந்த வ்யாஸரே விஷ்ணு, விஷ்ணுவே வியாசர். மஹா விஷ்ணுவின்  அவதாரங்களில்  "தேவுடைய மீனமாயாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவிலி ராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்" என்று பெரியாழ்வார் அருளிய  தசாவதாரத்தைப் பற்றி நாம் அனைவரும் நன்றாக அறிவோம். ஆனால்  ஹயக்ரீவர், அன்னம், மச்சம்கூர்மம், தன்வந்திரி, மோகினிவராகம், நரசிம்மர், வாமனர், பரசுராமர், இராமர், பலராமன், கிருஷ்ணர், நர நாரயணர்கபிலர், யக்ஞர், வேத வியாசர், ரிஷபர், தத்தாத்ரேயர், பருதுர், புத்தர், கல்கி  என்று  இருபத்தி இரண்டு அவதாரங்கள்  என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இந்த கலியில் நாம் எல்லாஉம் உய்ய பெருமாளே வியாசராக அவதாரம் செய்து வேதங்களை பகுத்து, பாரதமும், பாகவதமும் நமக்கு அருளிச் சென்றார். 

விஷ்ணு ரூப வியாஸ பகவானின் திருநாமம் காரணப்பெயராகும். வியாஸம் என்றால் பகுத்தல் என்று பெயர்.    இவர் துவாபர யுகத்தில் பிறந்தார் அதுவரை வேதங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தன அதை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்று பகுத்து அளித்தவர் இவர் எனவேதான் இவர் வேத வியாசர் என்று அழைக்கப்படுகின்றார். மேலும் இவர் அனைத்து நீதிக்கதைகளையும் உள்ளடக்கிய இதிகாசம் மஹாபரதத்தையும், கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளைக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தையும் நமக்கு அருளினார். இமயமலையின் கிழக்குப் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கு பியான்ஸ் பள்ளத்தாக்கு என்று இவர் பெயரால் அழைக்கப்படுகின்றது, திருக்கயிலாய யாத்திரை செல்பவர்கள் இந்த பள்ளத்தாக்கில் நடந்து செல்வர் மேலும் இவருக்கு பல இடங்களில் கோவில்களும் உள்ளன.

வியாசர் குகையில் தற்போது வியாசர் கூற விநாயகப்பெருமான் பாரதம் எழுவது போல சுதையில் சிற்பங்கள்  உள்ளன. அங்கு சென்று விஷ்ணு ரூப வியாசரை வணங்கி விட்டு  அடுத்து பீமன் பாலத்தையும் சரஸ்வதி நதியையும் தரிசிக்க சென்றோம். அதற்கு முன்னர் ஒரு கதையை பார்த்து விடலாமா? என்ன கதை என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அடுத்த பதிவுவரை பொறுங்கள் அன்பர்களே.