ஜோஷிமட் நரசிம்மர் ஆலய முகப்பு வாயில்
(நரசிம்மர், வாசுதேவர், நவதுர்கா ஆலயம் மூன்றும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன)
அதிகாலை 6 மணியளவில் பாதை
திறக்கப்படும் என்பதால் சீக்கிரம் எழுந்து தயாரானோம். இன்னும் சரியாக விடியவில்லை முதலில் நரசிம்மர்
ஆலயம் சென்றோம், நாங்கள் சென்றபோது சன்னதி திறக்கப்படவில்லை ஆயினும் கோயிலை வலம்
வந்த போது சன்னதி திறந்திருந்தது நரசிம்மரையும்,நவ துர்க்கைகளையும் திவ்யமாக சேவித்து விட்டு, இந்தத் தடவைதான்
கவனித்தோம் அருமையான ஒரு வெங்கல கருடன்
வாசுதேவருக்கு முன்னர் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பாதை திறந்தபின் பத்ரிநாத்திற்கு புறப்பட்டு பத்ரிநாதத்தை
இரண்டு மணி நேரத்தில் அடைந்து தேஷ்பாண்டே
அவர்கள் தங்கியிருந்த அனந்த மடத்திற்கு
சென்று பொருட்களை எல்லாம் வைத்து விட்டு,
உடனே தப்த்குண்ட் சென்று தீர்த்தமாடி விட்டு பத்ரிநாதரை தரிசனம் செய்ய
புறப்பட்டோம்.
நவதுர்கா
முட்கல் அவர்கள் எவ்வாறு
தப்த்குண்டத்தில் தண்ணீர் நாம் குளிப்பதற்கு ஏதுவாக கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்கின்றனர்
என்று கூறினார். தப்த் குண்டத்தில் நீராடி பின் ஆதி கேதாரீஸ்வரரை முதலில் தரிசனம்
செய்து விட்டு பின் பத்ரிநாதர் சன்னதிக்கு சென்றோம்.சிம்ம
துவாரத்தின் மேற்பகுதியில் இந்த வருடம் சங்கும் சக்கரம்ம் புதிதாக
அமைத்திருக்கின்றார்கள். விஜயதசமியும் பெருமாளின் நட்சத்திரமுமான திருவோணமும்
கூடி வந்த (திருமலையில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி நடைபெறும்) மிக புண்ணீய நாளில்
பத்ரிநாதரின் திவ்யமாக சேவித்தோம். நாம் எப்போது அவரை தரிசனம் செய்கின்றோம் என்பதை
நிர்ணயம் செய்பவர் அவர் அல்லவா. இந்தத் தடவை கேதார்நாத்திலும் சரி பத்ரிநாத்திலும்
சரி அருமையான நாட்களில் தரிசனம் கிட்டியது. பரமபதத்தில் பெரிய பிரட்டியார், பூமா
தேவி, நீளா தேவியுடன், கருடன், அனந்தன், விஷ்வஷேனர் முதலிய நித்ய சூரிகள்
கைங்கர்யம் செய்ய, ஆதித்தர் அநேகர் ஒளி மழுங்க ஜோதிக்கதிர் வீசும் மணி
மண்டபத்தில், நவரத்தினம்பதித்த ஆனிப்பொன்னால் செய்த திவ்ய சிம்மாதனத்தில் கருடர்,
கின்னரர், கந்தருவர், கிம்புருடர், தேவர்கள், முனிவர்கள் சூழ சேவை சாதிக்கும் கார்
முகில் போல் மேனி வண்ணன் மஹா விஷ்ணுவை, மயிற்பீலி அழகனை, சகஸ்ர கவசனை வென்று
பூலோகத்தை காப்பாற்றிய வள்ளலை, நாரதர் தினமும் சேவிக்கும் நாதரை, சங்கு சக்ர
தாரியை பத்மாசானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் பரமனை அவரது பரிவாரங்களுடன்
அற்புதமாக சேவித்தோம் சுற்றி வந்து மீண்டும் மீண்டும் திகட்டாத ஆராவமுதை
சேவித்தோம். பின்னர் பிரகாரத்தில் மஹா லக்ஷ்மித்தாயாரையும் திவ்யமாக சேவித்து
பிரசாதம் பெற்றோம். நரநாராயணர் சந்ந்தியில் ஊர்வசி நவராத்திரி விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பெருமாளை திவ்யமாக சேவித்த மனதிருப்தியுடன் இந்தத் தடவையும் ராவல் அவர்களை தரிசனம் செய்து பெருமாளின்
அபிஷேக சந்தனமும் துளசிப்பிரசாதமும் பெறும் பாக்கியம் கிட்டியது.
பத்ரிநாதர் சுதை சிற்பம்
( கருடன், நாரதர் சேவிக்க நர நாராயணராய் பெருமாள் சேவை சாதிக்கின்றார்)
புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சங்கு சக்கரங்கள்
தேவராஜன், அடியேன், இரவி, முட்கல்
வைத்தி தனுஷ்கோடி, முட்கல்
நாரதர் ஷிலா
அலக்நந்தா கரையோரம்
யோகாசனம் செய்யும் தேஷ்பாண்டே அவர்கள்
காலையிலிருந்து மாலை வரை பலவிதமான
கட்டண சேவைகள் பத்ரிநாத்தில் உள்ளன, நாங்கள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம சேவைக்காக
சீட்டு வாங்கினோம். இன்னும் தங்க விளக்கு, வெள்ளி விளக்கு, காலை அபிஷேகம் ஆகிய
கட்டண சேவைகளும் உள்ளன. எங்களுக்கு அடுத்த நாள் காலை அபிஷேகத்திற்கான சீட்டு
கிடைக்கவில்லை. பின்னர் மடத்திற்கு திரும்பி வந்து சிறிது நேரம் ஒய்வெடுத்தோம்.
திரு தேஷ்பாண்டே குடும்பத்தினர் தங்கள் பித்ரு காரியங்களை பிரம்மகபாலத்தில்
முடித்து விட்டு வந்த பின் மானா
கிராமத்திற்கும், பீமன் பாலத்திற்கும் புறப்பட்டோம்.
பத்ரிநாத்தை சுற்றி இரண்டு கிராமங்கள்
உள்ளன முதலாவது பாம்னி கிராமம் இங்கு
ஊர்வசிக்கு ஒரு கோயில் உள்ளது, மற்றும் பத்ரிநாதரின் பாத கமலங்கள் உள்ளன இது
சரணபாதுகா என்று அழைக்கப்படுகின்றது.
அடுத்தது மானா கிராமம் இங்கு நர நாராயணர்களின் அன்னையான மாதா மூர்த்தி
கோவில், வியாச குகை, கணேச குகை, பீமன் பாலம் ஆகியவை உள்ளன. இந்த மானா கிராமம் வரை
டெல்லியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை NH-58
போடப்பட்டடுள்ளது.
மானா கிராம செழிப்பு
முதலில் நாங்கள் சென்றது மானா
கிராமத்திற்கு இங்கிருக்கின்ற கணேசர் குகைக்கு ஒரு சிறப்பு உண்டு அது என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக
உள்ளதா? அப்படியென்றால் இந்த சிறிய கேள்விக்கு என்ன விடை என்று யோசித்துப் பாருங்கள்.
மஹா பாரதம் எழுத பயன்படுத்தப்பட்ட எழுது கோல் எது? அட இது தான் நமக்கு தெரியுமே விநாயகரின் வலது
கொம்புதானே என்றால் உங்கள் விடை சரிதான்.
இவ்வாறு விநாயகப் பெருமான் வியாச
பகவான் கூற தனது கொம்பினால் ஐந்தாம் வேதமாகிய மஹாபரதத்தை எழுதிய இடம் இந்த மானா
கிராமத்தில் உள்ளது. முதலில் அந்த முழு முதற் கடவுளை
முத்தமிழடைவினை
முற்படுகிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முற்பட எழுதிய ...... முதல்வோனே
மஹாபாரதம் எழுதிய கணேசர் குகை
என்று
மேருமலையில் முத்தமிழையும் இந்த இமய மலையில் மஹாபாரதத்தையும் எழுதிய மூலமுதல்வனை
தரிசித்து வணங்கினோம். வேத வியாசர் பாரதம் கூறிய போது அதை எழுதியவர் விநாயகர் ,
அப்போது விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தாராம். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருக்க
வேண்டும் நிறுத்தினால் எழுதுவதையும்
நிறுத்தி விடுவேன் என்றாராம். ஆகவே வியாச பகவான்
முதலில் ஐந்து ஸ்லோகங்களை சொல்லுவாராம் அதை விநாயகப்பெருமான் தனது
கொம்பினால் எழுதி முடிப்பதற்குள் அடுத்த ஐந்து ஸ்லோகங்களை மனதில் உருவாக்கி
விடுவாராம்.
அடுத்து வியாச பகவானின் குகைக்குச்
சென்றோம். வியாச பகவானைப்பற்றி விஷ்ணு
சகஸ்ரநாம பூர்வ பாகத்தில் இவ்வாறு இரண்டு ஸ்லோகங்கள் வருகின்றன.
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ர
– மகல்மஷம் |
பராசராதமஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்
||
வ்யாஸ பகவானின் மூதாதையர்களை கூறும் ஸ்லோகம் இது. பிரம்ம ரிஷியான வஷிஸ்டரின் கொள்ளுப்பேரன்,
சக்தி ரிஷியின் பேரன், பராசரர்- சத்தியவதியின் திருக்குமாரர் அது மட்டுமா இவரது
புத்திரர் சுகபிரம்ம ரிஷி. உலக நன்மைக்காக பல்வேறு நன்மைகளை செய்து நீதிகளை
அருளியவர்கள் அத்தனை பேரும்.
வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய
விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்ட்டாய நமோ
நம: ||
வியாசர் குகை
வஷிட்டரின் குலத்திலே பிறந்த வ்யாஸரே
விஷ்ணு, விஷ்ணுவே வியாசர். மஹா
விஷ்ணுவின் அவதாரங்களில் "தேவுடைய
மீனமாயாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூவுருவிலி ராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்" என்று பெரியாழ்வார் அருளிய தசாவதாரத்தைப்
பற்றி நாம் அனைவரும் நன்றாக
அறிவோம். ஆனால் ஹயக்ரீவர்,
அன்னம், மச்சம், கூர்மம்,
தன்வந்திரி, மோகினி, வராகம்,
நரசிம்மர், வாமனர், பரசுராமர், இராமர்,
பலராமன், கிருஷ்ணர், நர நாரயணர், கபிலர், யக்ஞர், வேத
வியாசர், ரிஷபர், தத்தாத்ரேயர், பருது‘ர், புத்தர், கல்கி என்று இருபத்தி
இரண்டு அவதாரங்கள் என்று
ஆன்றோர்கள் கூறுவார்கள். இந்த கலியில் நாம் எல்லாஉம் உய்ய
பெருமாளே வியாசராக அவதாரம் செய்து வேதங்களை பகுத்து, பாரதமும், பாகவதமும் நமக்கு
அருளிச் சென்றார்.
விஷ்ணு ரூப வியாஸ பகவானின் திருநாமம்
காரணப்பெயராகும். வியாஸம் என்றால் பகுத்தல் என்று பெயர். இவர் துவாபர யுகத்தில் பிறந்தார் அதுவரை
வேதங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தன அதை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்று
பகுத்து அளித்தவர் இவர் எனவேதான் இவர் வேத வியாசர் என்று அழைக்கப்படுகின்றார்.
மேலும் இவர் அனைத்து நீதிக்கதைகளையும் உள்ளடக்கிய இதிகாசம் மஹாபரதத்தையும்,
கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளைக் கூறும் ஸ்ரீமத் பாகவதத்தையும் நமக்கு அருளினார்.
இமயமலையின் கிழக்குப் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கு பியான்ஸ் பள்ளத்தாக்கு என்று
இவர் பெயரால் அழைக்கப்படுகின்றது, திருக்கயிலாய யாத்திரை செல்பவர்கள் இந்த
பள்ளத்தாக்கில் நடந்து செல்வர் மேலும் இவருக்கு பல இடங்களில் கோவில்களும் உள்ளன.
வியாசர் குகையில் தற்போது வியாசர் கூற
விநாயகப்பெருமான் பாரதம் எழுவது போல சுதையில் சிற்பங்கள் உள்ளன. அங்கு சென்று விஷ்ணு ரூப வியாசரை வணங்கி
விட்டு அடுத்து பீமன் பாலத்தையும் சரஸ்வதி
நதியையும் தரிசிக்க சென்றோம். அதற்கு முன்னர் ஒரு கதையை பார்த்து விடலாமா? என்ன
கதை என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா அடுத்த பதிவுவரை பொறுங்கள் அன்பர்களே.
8 comments:
இனிய பயண அனுபவத்தை தந்தமைக்கு நன்றி !
தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...
வர்ணனை நேரில் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது.
நல்லதொரு நாளில் தரிசனம் கிட்டியதை மிக அழகாக எழுதி உள்ளீர்கள் ஐயா. "வியாசர் குகை" இடம் சார்ந்த தகவலுக்கு நன்றி ஐயா .
வாருங்கள் திண்டுக்கல் தனபாலன், அன்பே சிவம்.
மிக்க நன்றி கந்தசாமி ஐயா.
மிக்க நன்றி LOGAN ஐயா.
நான் வியாசர் குகைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் அதற்கு தங்களின் மேலான ஆலோசனை வேண்டும் (கோயம்புத்தூரிலிருந்து வியாசர் குகைக்கு செல்லவேண்டும்)
பத்ரினாத் அருகில் உள்ள மானா கிராமத்தில் அமைதுள்ளது வியாசர் குகை.
பத்ரினாத் செல்ல புது தில்லி, ஹரித்வார் தேவப்ரயாகை ஜோஷிர்மத் வழியாக பயணம் செய்ய வேண்டும். அக்ஷய திருதியை முதல் தீபாவளி வரை மட்டுமே செல்ல முடியும். ஹரித்வாரிலிருந்து பேருந்து கோவில் வரை செல்லுகின்றது. அதிக விவரங்களுக்கு மின்னஜ்ல் செய்யவும்
Post a Comment