“குன்று
இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”
என்பது பழமொழி, எனவே குன்றுகள் நிறைந்த கொங்கு மண்டலத்தில் குறிஞ்சி நிலக் கடவுளான
முருகனின் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான சென்னிமலையை தரிசிக்கும்
பாக்கியம் இந்த யாத்திரையின் போது கிட்டியது.
கந்தர் சஷ்டி
கவசத்தில் ’சிரகிரி
வேலவன் சீக்கிரம் வருக” என்று
வரும் அந்த சிரகிரியில் தரிசனம் எவ்வாறு இருந்தது என்று அறிந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே. அன்று 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த கொங்குமண்டலத்தின்
ஒரு பகுதி இப்பூந்துறை நாடு. அன்றைய பூந்துறையே
இன்றைய பெருந்துறை. இப்பெருந்துறை வட்டத்தில்
. நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சென்னிமலை
சுப்பிரமணியர் ஆலயம். இக்கோவிலுக்கு முன்பு சிரகிரி என பெயராம். சிரம் என்றால் தலை, சிறப்பு, உச்சி, மேன்மை. சென்னி’ என்ற சொல்லுக்கும்
அதே பொருள். அதனால் பின்னாளில் சென்னிமலை என
மாறி விட்டது என்கிறார்கள். மலைகளில் தலைமையானது என்றும் பொருள் கொள்ளலாம். அருணகிரி நாதரும் தம் திருப்புகழில் சிரகிரி என்றே பாடி இருக்கிறார்.
ஈரோட்டில் இருந்து
தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 13 கி.மீ
தொலைவிலும், ஈரோடுக்கு அப்பால் உள்ள ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சென்னிமலை.
ஈரோட்டிலிருந்து பேருந்து வசதி உண்டு.
இவ்வாலயம்
சுமார் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைக் கோயிலாகும். கந்தர் சஷ்டிக் கவசம் அரங்கேற்றம்
செய்யப்பட்ட தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ்
பாடப் பெற்ற தலம், 18 சித்தர்களுள் ஒருவரான புன்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்தியடைந்த
திருத்தலம் இது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே
பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம் எனவே ஆதி பழனி என்றும்
அழைக்கப்படும் தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியரை
இத்தலத்தில் தரிசிக்கலாம். வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன்
வீற்றிருக்கும் தனிச் சன்னிதி வேறு எங்கும் காண முடியாத அரியதாகும்.
உலகம் முழுவதும் முருக பக்தர்களால் அனுதினமும் பக்திப் பூர்வமாகப் பாராயணம் செய்யும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீபாலன் தேவராயசுவாமிகள் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள மடவளாகம் என்னும் பழைமையான ஊரைச் சேர்ந்தவர் என்றும், கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை திருக்கோவில் உகந்த இடமென்று முருகப் பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இத்திருக்கோவிலில்தான் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது.
சென்னிமலைக்கு அருணகிரியார் வாழ்வில் ஒரு சிறப்புண்டு. சம்பந்தருக்கும் அப்பருக்கும் சிவபெருமான் திருவீழிமிழலையில் படிக்காசு அளித்தார். அது போல சென்னிமலையில் முருகன் அருணகிரிநாதருக்கு படிக்காசு அளித்தார்.
நாட்டில் அருணகிரி
நாதன் சொல்
திருப்புகழ்
பாட்டில் மகிழ்ந்து
படிக்காசளித்த பிரான்
தாலமிகுஞ் சென்னிமலை
தன்னில் வளர்
கல்யாண
வாலசுப்ப ராயனென்று
வாணர்புகழ் வாசலினான் - என்ற பாடல் சென்னிமலை ஆண்டவன் காதல் என்ற நூலில் வருகிறது.
தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகவும், நைவேத்தியம் தயாரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் தீர்த்தம் மலையடிவாரத்தில் இருந்துதான் கொண்டு வர வேண்டும். இதற்காகவே இரண்டு காளைகள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் இக்காளைகள் மூலம்தான் தீர்த்தம் மேலே
கொண்டு வரப்படுகிறது.
12
ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதும் மழையில்லாத
சமயத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு
திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம் உள்ள தலம். இவையெல்லாம்
இத்தலத்தின் சிறப்புகள். வாருங்கள் இனி இத்தலத்தை பற்றிய இன்னும் சில
வரலாறுகளைப்பற்றி காணலாம்.
இராஜகோபுரம்
புராணக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் இடையில் ஒரு பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாகச் சுற்றிப் பிடித்துக்கொண்டான். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க வேண்டி, வாயுதேவன் எதிர்த்துத் தாக்கினார். அவ்வளவில் மேருமலையின் சிகரப் பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப் பகுதி சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது சென்னிமலை என்றழைக்கப்படுகிறது.
அப்போது அங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களைத் தடுத்தார். “யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான். காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்ததுதான். அதைக்கேட்டு திடுக்கிட்ட அதிகாரியால், தனக்குச் சமமாக அவர் ஆங்கிலம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே தன் கோபத்தைக் காட்டினார். “மரத்தை வெட்டுவதுமட்டுமில்லாமல், திமிராக பேசுகிற இவனை மரத்திலே கட்டி வைங்கடா?’ என்று உத்தரவிட்டார். ஆனால் உடன் இருந்தவர்கள் தயங்கினார்கள். ‘‘ஐயா, இவர் பெரிய மகான். இவரை தண்டிக்கறது நமக்குதான் அழிவு’’ என்றார்கள். அவர்கள் பயப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன.
ஒரு நாள், பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். “இவனை நாகப்பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் வீட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’ என்றனர். அப்போது பக்கத்தில் இருந்த செங்கத்துறையான், பாம்புக் கடிபட்டவனை நெருங்கினான். பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான். சற்று நேரத்தில் பாம்பு கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இக்காட்சியை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இவ்வித்தையை எங்கே கற்றான் அவன்? ஆனால், செங்கத்துறையானோ, ‘எல்லாம் சென்னியாண்டவன் செயல்’ என்று மட்டுமே சொன்னான்.
அப்போது தம்பிரான், “ஐயா, என்னைக் கட்டிப் போடுவது இருக்கட்டும். உங்கள் மனைவிக்கு சித்தம் கலங்கி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு, ‘ஊரைக் கொளுத்தப் போகிறேன்’ வருகிறார்கள். முதலில் அவரைக் கட்டுப்படுத்துங்கள்,’’ என்று சாதாரணமாகச் சொன்னார். அதே நேரம் அதிகாரியின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை உறுதி செய்தார். பதட்டத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அதிகாரி, வேலைக்காரப் பெண்கள் தன் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது அவள்முன் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமிருந்த விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, “சென்னியாண்டவா, இக்குழந்தையைக் காப்பாற்று!” என்று வேண்டிக் கொண்டார். அடுத்த கணமே அவள் பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்த அதிகாரியும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினர்.
அதோடு, அதிகாரியே தன் ஆட்களைக் கொண்டு, அம்மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அம்முன்கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது. கோவில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த சமாதியில் போய் அமர்ந்தார். அந்நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால்
கட்டப்பட்ட சென்னிமலை ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி
உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட குரங்குகள்
மற்றும் மயில்கள் நிறைந்த அழகிய வனப்பகுதியில் உள்ளது.
அடிவாரத்தில் ஒரு விளக்குத்தூண் உள்ளது. அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 படிக்கட்டுகள் அமையப் பெற்றிருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறிய பின் கடம்பவனேஸ்வரர், இடும்பன், ஆகியோரின் சன்னதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்' என்னும் மலைக் காவலர் சன்னதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக வரும் ஆற்றுமலை விநாயகர் சன்னதியையும் தரிசித்துவிட்டு, மேலே சென்றால், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அடையலாம். மலையேறும் போது இளைப்பாற ஏதுவாக மண்டபங்கள் உள்ளன. வழியில் நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. வாகனம் மூலமாகவும் மேலே செல்ல இயலும். அடிவாரத்திலிருந்து தேவஸ்தான பேருந்து வசதியும் உள்ளது. மேலேறியவுடன் ஐந்து நிலை இராஜகோபுரமும், நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விளக்க்கு தூணையும் காணலாம்.
அடியோங்கள் வண்டி மூலம் மேலே
சென்றோம். செல்லும் வழியில் மரங்களில் பல மயில்களைக் கண்டோம். மலை பச்சை பசேலென்று
இருந்தது. அந்தி சாயும் நேரத்தில் சென்றதால் இரம்மியமான சூழல் நிலவியது. வண்டி
நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினோம் . முதலில் இராஜகோபுரமும் அதன் அருகில் உள்ள
கார்த்திகை மண்டபமும். கண்ணில் பட்டது. ஐந்து
நிலை இராஜகோபுரம் வழியாக ஆலயத்திற்குள் நுழைந்தோம். சுவாமி சன்னதி உயரமாக
அமைந்திருந்தது. கொடிமரம் தங்ககவசம் பூண்டிருந்தது.
திருக்கோயிலின் தெற்கு பிராகாரத்தில் மார்க்கண்டேஸ்வரர், இமயவள்ளி சன்னதியும், தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னதியும், வடக்கில் காசி விசுவநாதர், விசாலாட்சி சன்னதியும் அமைந்திருக்க, இவர்களுக்கு நடுவில் நாயகனாய் அருட்காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு, பொருள் செல்வத்தோடு ஞானச் செல்வத்தையும்
அருளும் வகையில், ஞான தண்டாயு தத்தை தன் வலத் திருக்கையில் ஏந்தி, இடத் திருக்கரத்தை
இடையில் பொருத்தி, பேரொளியும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.
இவரை
பகலிறவினில் தடுமாறா பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுறைத் தநுபூதி ரத நிலைதனைத் தருவாயே
இகபரமதற் கிறையோனே இயலிசையின் முத்தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே சரவணபவப் பெருமாளே.
பொருள்: நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிராமலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே என்ற திருப்புகழ் பாடி வழிபட்டோம். (இங்கே "பகலிரவு" என்பது நினைவும் மறப்பும் என்பதைக் குறிக்கும். இந்த இரண்டும் அற்ற நிலையே யோக அநுபூதி நிலை).
சென்னிமலையில் வீற்றிருக்கும்
தண்டபாணி மூர்த்தி திருமுகம், பூரணப்பொலிவுடனும், இடுப்புக்கு கீழ் திருப்பாதம்
வரை வேலைப்பாடற்றும் காணப்படுகிறது. இம்மலையின் ஒரு பகுதியில் காராம்பசு தினமும்
பால் சொரிய விட்டதைக் கண்ட பண்ணையார், அவ்விடத்தைத் தோண்டிப் பார்த்துள்ளார்.
அபோது பூர்ண முகப்பொலிவுடன் ஒரு கற்சிலை கிடைத்தது. அவ்விக்ரஹத்தின்
இடுப்புவரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது.
ஆனால், இடுப்புக்கு கீழ், பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக
இருந்தது. அதை ஒரு குறையாக எண்ணி, அப்பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு
உளியால் சரி செய்த போது, சிலையிலிருந்து இரத்தம் கொட்டியதாகவும், இதனால்
அதே நிலையில் சென்னிமலையில் அச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை
என்ற அதிசயமும் நிகழ்கிறது.
சென்னிமலையில்
மூலவருக்கு ஆறு கால பூஜை வேளையில் மட்டும் அபிஷேகமும், இதர நேரங்களில் உற்சவருக்கு
அபிஷேகமும் நடைபெறுகிறது.
மூலவர் சென்னிமலை
ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக, செவ்வாய் அம்சமாக அமைந்தும், மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களில்
எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் பாங்குடன் அமைந்தும் அருள்பாலிக்கிறார்கள்.
இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவகிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இத்தலம் செவ்வாய்
பரிகாரச் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
சென்னிமலையண்டவர் விமானத்தில் புராணங்களில் கூறப்பட்டுள்ள பலவிதமான அற்புத
கோலங்களை தரிசிக்கலாம் என்பது சிறப்பு
இக்கோவிலில், ஞானதண்டாயுதபாணியாக முருகப் ருமான் திருக்காட்சி தந்தாலும், இரண்டு தேவியரும் தனிச்சன்னதியில் அருள்கிறார்கள். மூலவர் ஞான தண்டாயுதபாணி சன்னதிக்குப் பின்புறம் இருக்கும் படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்றால், வள்ளி, தெய்வானை ஆகியோரின் சன்னதிகளைத் தரிசிக்கலாம். இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலையில் தவம் இருந்து முருகப் பெருமானை மணந்து கொண்டதாக ஐதீகம். இருவரின் திருமேனிகளும் பிரபையுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலையின் தனிச்சிறப்பு.
மலை மேலிருந்து ஆலயத்தின் காட்சி
சென்னிமலை முருகப்பெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வரும் பக்தர்கள், தங்களின் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், கோயிலுக்கு வந்து மூலவருக்கு அர்ச்சனை செய்து, முருகப் பெருமானின் சிரசுப்பூ உத்தரவு கிடைத்த பிறகே முடிவு செய்கிறார்கள். திருமணமான தம்பதியர் சந்தான பாக்கியம் வேண்டி, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும், தீர்க்கசுமங்கலியாக இருப்பதற்குச் சன்னதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. அதேபோல் இக்கோவிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணி’ என்னும் சித்திப்பொருள் இருப்பதாகவும், அம்மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.
மூலவர் சன்னதிக்குப் பின்னால், சிறிது தூரம் நடந்து சென்றால் சுந்தரவல்லி, அமிர்தவல்லி சன்னதியும், ஸ்ரீபிண்ணாக்குச் சித்தர் குகை அமைந்துள்ளது. இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்பிரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தேவியர் விமானம்
ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்களில் சுக்கிரனைப் பிரதிபலிக்கும் இவரை, வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டால், சுக்கிர தோஷம் விலகும் என்கிறார்கள் பக்தர்கள். புண்ணாக்கு சித்தர் கோவில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. சிவமறையோர் குலத்தில் பிறந்து, சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர், சிரகிரி வரலாற்றை எழுதியபோது, முருக்கடவுள் காட்சியருளினார். அவரது சமாதிக் கோயிலும் அருகே உள்ளது. இத்தடவை அங்கு செல்ல இயலவில்லை, ஆனால் முன்னர் ஒரு சமயம்சென்ற போது தேவியர்களை தரிசித்துள்ளோம்.
சென்னிமலையில் உள்ள 1320 திருப்படிகளையும் இரட்டை மாட்டு வண்டி ஏறிய
அதிசயம் 1984 பிப்ரவரி 12-ல் நடந்தேறியது. இத்தலத்தில் வேங்கை மரத்தால்
செய்யப்பட்ட மரத்தேர் உலா மற்றொரு சிறப்பம்சம்.
இக்கோயிலில் வளர்பிறை சஷ்டித் திருநாளிலும், கார்த்திகையன்றும், ஐப்பசி மாத கந்தர் சஷ்டி
திருவிழா நாட்களிலும், பக்தர்கள் சந்தான பாக்கியம் வேண்டி
விரதமிருக்கின்றனர். அதேபோல, ஜனன ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இங்கு
நெய் தீபமேற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி அருள் பெறுவதாக பக்தர்கள்
தெரிவிக்கின்றனர்.
இந்த ஊருக்கு மற்றுமொரு வரலாற்றுப் பெருமையும் இருக்கிறது. அது தமிழ்நாட்டின் மிக முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகியான “கொடி காத்த குமரன்” என்று சிறப்பாக அழைக்கப்படும் திருப்பூர் குமரன் பிறந்த ஊர். அவரது சிலை அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சென்னிமலை கைநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். சென்னிமலையில், கிட்டத்தட்ட 35 நெசவாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இச்சங்கங்களின் மூலமாகத் போர்வைகள், துண்டுகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறை ஆகியவை நெய்யப்படுகின்றன. அடியோங்கள் செல்ல முடியவில்லை என்றாலும் முக்கியத்துவம் கருதி அடுத்து சிவன்மலை ஆண்டவரை தரிசிக்கலாம் அன்பர்களே.
3 comments:
சென்னிமலை பல பழைய நினைவுகளை தந்தது.
முதன் முதலில் கோவை பள்ளியில் படித்த போது சுற்றுலாவில் தோழிகளுடன் படிகளை ஒடி கடந்து போனதும் கீழே இறங்கும் போது நான்தான் முதலில் என்று ஓடி கீழே வந்ததும் நினைவுகளில் .
பின் கணவர் குடும்பத்துடன் மாமனாரின் பிறந்த நாளுக்கு போன போது படிகள் சீக்கீரம் முடிந்து விடாதா என்ற நினைப்பு வந்தது.
ஒருவர் கனவில் வ்ண்டி மாட்டை முருகன் மலை மேல் ஓட்டி வர சொன்னார் என்று அவர் மாட்டு வண்டியோடு மலை படியில் ஏறியது செய்தி தாளில் படித்த நினைவுகள் வந்தது.
படங்களும் செய்திகளும் அருமை.
மரத்தில் மயில் அமர்ந்து இருப்பது அழகு.
சிரகிரி வேலவன் சீக்கீரம் வருக என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது.
பின் நாக்கு மடித்து அருள் வாக்கு சொன்னவர் பேர்
புண்ணாக்குச் சித்தர்' என்று சொல்லி விட்டார்களே!
//‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான். காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்தது//
மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு.
நிறைய வரலாறுகள் படிக்க படிக்க சென்னிமலை குமரன் பெருமைகள் புரியும்.
சென்டெக்ஸ் போர்வைகள் எல்லாம் வாங்கி இருக்கிறோம்.
அருமையான படங்களுடன் நிறைய செய்திகள் அடங்கிய பதிவு.
வாழ்த்துக்கள்.
தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.
முருகா முருகா முருகா, மால் மருகா மால் மருகா மால் மருகா அரோகரா!
Post a Comment