Wednesday, June 22, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 23

 சிவன்மலை ஆண்டவர் தரிசனம்



அடியோங்கள் இந்த யாத்திரையின் போது சிவன் மலை செல்ல வாய்ப்பு அமையவில்லை என்றாலும், சென்னிமலை, சிவன்மலை என்று இப்பகுதியில் இரண்டு முருகன் ஆலயங்களையும் சேர்த்தே சொல்லுவர் என்பதால் சிவன்மலை ஆண்டவரையும் தரிசிக்கலாம் அன்பர்களே.  இத்தலத்தின் தனி சிறப்பு உத்தரவுப் பெட்டியாகும்.

சிவன் மலை என்பதாலும் ஆண்டவர் என்று அழைப்பதாலும் இம்மலையில் இருப்பது சிவன் கோவில் அல்ல மாறாக இங்கு முருகன் கோவில் இருப்பது சிறப்பு. திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது.  கங்கையால்  தாங்கப்பட்டதால் முருகருக்கு காங்கேயன் என்ற திருநாமமும் உண்டு அப்பெயரே ஊருக்கு ஏற்பட்டு இன்று காங்கேயம் என்று அழைக்கப்படுகின்றது. கங்கை குல வேளிருக்கு உரியது, கங்கர்கள் ஆண்டது என்பதால் இப்பெயர் பெற்றது. காங்கேய நாடு கோவில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோவில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என அழைக்கின்றனர். அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோவில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள் கொண்டது.  

அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்டது இத்தலம்.  மூன்று பாடல்களில் இத்தலத்தை பாடியுள்ளார் அருணகிரிநாதர். மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

சிவபெருமானின் அஷ்டவீர செயல்களுள் ஒன்றான  திரிபுர சம்ஹாரத்தின்  சமயம் மேரு மலையை வில்லாகப் பயன்படுத்திய போது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. இவ்வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ குறிப்பிடப்படுகின்றது.

அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்

செய்ய வளைக்குங் காலை

முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு

வந்த சிவமலை இம்மலையே! ’  -  புராணங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றிலும் சிவ மலை என்றே உள்ளது. 

 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நூலை இயற்றிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர் அமைத்த கோவில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பழனியாண்டவரை எவ்வாறு போகர் என்னும் வடிவமைத்தாரோ அது போல சிவவாக்கியர் சிவன்மலை ஆண்டவரை வடிவமைத்தார் என்றொரு நம்பிக்கையும் உள்ளது. வெகு  காலத்திற்கு முன்னர் இந்த சிவன்மலை அடிவாரத்தில் சில சித்தர்கள் தங்கி இருந்தார்கள்  அப்படி தங்கி இருந்தவர்களில் சிவவாக்கிய சித்தர் என்ற ஒருவரும்  இருந்தார்.  இவர் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே,  சித்தர்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியே சென்றுவிடுவார். சூரியன் மறைந்த பின்பே ஆசிரமத்திற்கு திரும்புவாராம். உடன் இருக்கும் சித்தர்கள் உட்பட யாரிடமும் பேசாமல் மௌனவிரதம் இருந்து வந்தாராம். எங்கே செல்கிறீர்?! என்ன செய்கிறீர்கள்?! சாப்பிட்டீர்களா என  யார் என்ன கேட்டாலும் அமைதியாவே இருப்பாராம். இப்படியே ஆறுமாத காலம் கழிந்தது. ஆறு மாதத்திற்கு பிறகு, மௌனம் கலைத்து, எல்லோரையும் அழைத்துக்கொண்டு  சிவன்மலையின் உச்சிக்கு சென்றாராம் . அங்கு, கள்ளி மரத்தடியில், தான் வடிவமைத்திருந்த சிவன்மலை ஆண்டவர் சிலையை  அனைவருக்கும் சிவவாக்கிய சித்தர் காட்டினாராம். ஆண்டவரின் சிலையின் தெய்வாம்சம் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நல்லதொரு நாளில் சிவன்மலை ஆண்டவர் சிலையை அவரே பிரதிஷ்டையும் செய்து வைத்தாராம்.  அதனால் சித்தரின் பேரினால் சிவமலை என அழைக்கப்பட்டு இப்போது சிவன்மலை ஆகிவிட்டது.  

  சிவாசலம், சிவராத்திரி, சிவமாமலை. சிவசைலம், சிவநாகம், சிவகிரி எனவும், புலவர்கள் தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என புகழ்ந்து பாடியுள்ளனர்.

 பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த இத்தலத்திற்கு, வள்ளி மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக் கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து திருத்தணியில் கோவில் கொண்ட பிறகு  முருகன் இங்கு  முதன் முதலாக வந்து சில காலம் தங்கியிருந்தார் என்று  தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.  

வள்ளியை முருகன் கவர்ந்து வந்தபோது, வேடுவர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து, மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றது.

இம்மலையை சுற்றிலும், அஷ்ட துர்க்கைகள் காவல் காப்பதாக  கூறப்படுகிறது. ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காள பரமேஸ்வரி, காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனூரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் இம்மலையை சூழ்ந்துள்ளதாக, சிவமலை குறவஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் “பயிரவி யருள்பட் டாலி யூர்வரு  பெருமாளே” என்று பாடியுள்ளார்.

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும் என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியதாக தல புராணம் தெரிவிக்கிறது.   

உமையம்மனின் திருப்பாதங்களில் உள்ள அணிகலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றியதால்  வீரமாபுரம் என பெயர் பெற்றதாகவும்  நம்பிக்கை உள்ளது.

இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.


சிவமலை முருகனைச் சுப்பிரமணியர், சிவசுப்பிரமணியர், கல்யாண சிவசுப்பிரமணியர், காங்கயன், கந்தசுவாமி, வேலன், வேலுசாமி, முத்தய்யன், முருகையன், சிவாசலபதி, குகன், சிவாசலவேந்தன், சிவாத்திரிநாதன், வள்ளிமணாளன், கந்தவேள், குமரன், துரைசாமி, மரகதமயூரன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். இப்பெயர்களில் எப்பெயரிட்டு அழைத்தாலும் சுப்பிரமணியர் அதனை மிக உவப்பாக ஏற்றுக்கொள்கிறார். மலையை வணங்கினாலே சிவன்மலையாண்டவரை வணங்கிய பேறு பெறலாம் என்பது ஐதீகம்.

10-13ம் நூற்றாண்டில் இப்பகுதி மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததை கோவில் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.! கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்ததாம்.  வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என பழங்கால பாடல்களில் சிவன்மலையைப்பற்றி குறிப்பு உள்ளது. அதற்கு தகுந்தமாதிரி இப்பகுதியில், அரிய வகை கற்கள், நவரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவமணிகள் பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம் ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை அமைந்துள்ளது.  496 படிகள் உள்ளன. அடிவாரத்தில் பாலவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. பதினெட்டாம் படியைச் சத்தியப்படி என அழைப்பார். அங்கு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இப்பதினெட்டாம்படி புராணப்படி என்றும் அழைக்கப்பெறும். இங்குதான் சடைச்சியம்மன் வழிபட்டதும், குடியிருப்பதுமாகும் என்று குறவஞ்சியில் கூறப்படுகிறது. இங்கு அர்த்தமேரு அமைக்கப்பட்டுள்ளது அதன்மேல் திருவடிகள் உள்ளன. மேலே வண்டியில் செல்ல முடியும், தேவஸ்தான பேருந்தும் உள்ளது.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது. சிவன்மலையில் இன்றும் ஏராளம் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். புண்ணியம் செய்தோர் கண்களில்அவ்வப்போது சில சித்தர்கள் புலப்படுவதுண்டு.

தல இறைவன் : சுப்பிரமணிய சுவாமி.

தல இறைவி: வள்ளி, தெய்வானை.

தல விருட்சம் : தொரட்டி மரம்.

தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.

இராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் என ஆகமவிதிப்படி கட்டப்பட்ட இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது. சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர்  சூலம், மயில் மற்றும் தண்டபாணி வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்கு முகமாக உள்ளன. நவகன்னியருக்கும், நவவீரர்களுக்கும், இங்கு தவமிருந்த உமாதேவியாருக்கும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி அருள் கொடுத்தவர் கைலாசநாதர். மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னி மூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் அருள் பாலிக்கின்றனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அது தவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன. பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக அருட்காட்சி தருகின்றார். கருவறைக்கு அருகில் சிவவாக்கியர் குகை.  சிவன்மலை ஆண்டவரை அருணகிரி நாதர் இவ்வாறு பாடியுள்ளார்.

இருகுழை யிடறிக் காது மோதுவ

     பரிமள நளினத் தோடு சீறுவ

          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர

 எமபடர் படைகெட் டோட நாடுவ

     அமுதுடன் விடமொத் தாளை யீருவ

          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்

 உருகிட விரகிற் பார்வை மேவுவ

     பொருளது திருடற் காசை கூறுவ

          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்

 உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்

     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை

          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே

 முருகவிழ் தொடையைச் சூடி நாடிய

     மரகத கிரணப் பீலி மாமயில்

          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே

 முரண்முடி யிரணச் சூலி மாலினி

     சரணெனு மவர்பற் றான சாதகி

          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்

 பருகினர் பரமப் போக மோகினி

     அரகர வெனும்வித் தாரி யாமளி

          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்

 பறையறை சுடலைக் கோவில் நாயகி

     இறையொடு மிடமிட் டாடு காரணி

         பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.

பொருள்: காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை சீறிக் கோபிப்பன. நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. இரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின்  காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ?

நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே.

வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு ஏற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள்,  கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி,  சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில் (சிவன்மலையில்) வீற்றிருப்பவனுமான, பெருமாளே.

 

 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.  மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கு நடைபெறும் ஆனால்  இத்தலத்தில்  முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன. நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார். அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.

வேறெந்த முருகன் கோவில்களிலும் இல்லாத வகையில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இங்கு வேட்டு வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘பொட்லி’ என்று பெயர். இதற்கான இடம் மலை மீது உள்ளது.

உத்தரவு பெட்டி : சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு “காரண மூர்த்தி” என்ற பெயர் உள்ளது. சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் என்று வழிபடுகின்றனர் பக்தர்கள்.  சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார். அதன்படி, சுவாமியின் பாதத்தில் மலர் வைத்து  உத்தரவு கேட்கப்பட்டு, வெள்ளைப்பூ வந்து  உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் பக்தர்களின் கனவில் வந்ததாக கூறி ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்ட காலத்தில் சுனாமி வந்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடில் மஞ்சள் விலை ஏறியபோது மஞ்சளும், வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்தியா, சீனா யுத்தம் வந்தபோது துப்பாக்கி வைத்து பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது. பாலை வைத்து பூஜை நடந்த போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது சிவன்மலை.

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தர் சஷ்டி, தை பூசம்,  மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன

சிவமலை என்று சொன்னால் என்னென்ன நடக்கும் என்று ஒரு பாடல்.

 சிவமலை என்றிடத்  சிதையுந்தீவினை

 சிவமலை என்றிடத் திருவந்தெய்திடும்

 சிவமலை என்றிடத் சேரும் புண்ணியம்

 சிவமலை என்றிடத் சித்தியாகுமால்.

சென்னிமலை தரிசனத்திற்குப்பின் ஈரோடு சென்றோம், முதலில் அங்கு தங்க திட்டமிட்டிருந்தோம், ஆனால் விடுதி முன் பதிவு செய்திருக்கவில்லை எனவே  அதை மாற்றி நேராக திருச்செங்கோடு சென்று அங்கு தங்கினோம்.

இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவை, அவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Friday, June 17, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 22


சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி தரிசனம்

“குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்”  என்பது பழமொழி, எனவே குன்றுகள் நிறைந்த கொங்கு மண்டலத்தில் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனின்   எண்ணற்ற  ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றான சென்னிமலையை தரிசிக்கும் பாக்கியம் இந்த யாத்திரையின் போது கிட்டியது.  

கந்தர் சஷ்டி கவசத்தில்  சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக”  என்று வரும் அந்த சிரகிரியில் தரிசனம் எவ்வாறு இருந்தது என்று அறிந்து கொள்ள வாருங்கள் அன்பர்களே.  அன்று 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த கொங்குமண்டலத்தின் ஒரு பகுதி இப்பூந்துறை நாடு.  அன்றைய பூந்துறையே இன்றைய பெருந்துறை.  இப்பெருந்துறை வட்டத்தில் .  நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது சென்னிமலை சுப்பிரமணியர் ஆலயம். இக்கோவிலுக்கு முன்பு சிரகிரி என பெயராம். சிரம் என்றால்  தலை, சிறப்பு, உச்சி, மேன்மை. சென்னி’ என்ற சொல்லுக்கும்  அதே பொருள். அதனால் பின்னாளில் சென்னிமலை என மாறி விட்டது என்கிறார்கள். மலைகளில் தலைமையானது என்றும்  பொருள்  கொள்ளலாம். அருணகிரி நாதரும் தம் திருப்புகழில்  சிரகிரி என்றே பாடி இருக்கிறார்.

ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 13 கி.மீ தொலைவிலும், ஈரோடுக்கு அப்பால் உள்ள ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சென்னிமலை. ஈரோட்டிலிருந்து பேருந்து வசதி உண்டு.

 இவ்வாலயம் சுமார் 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைக் கோயிலாகும். கந்தர் சஷ்டிக் கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலம்.  அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற தலம், 18 சித்தர்களுள் ஒருவரான புன்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்தியடைந்த திருத்தலம் இது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம் எனவே ஆதி பழனி என்றும் அழைக்கப்படும் தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியரை இத்தலத்தில் தரிசிக்கலாம். வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சன்னிதி வேறு எங்கும் காண முடியாத அரியதாகும்.

உலகம் முழுவதும் முருக பக்தர்களால் அனுதினமும் பக்திப் பூர்வமாகப் பாராயணம் செய்யும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீபாலன் தேவராயசுவாமிகள் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள மடவளாகம் என்னும் பழைமையான ஊரைச் சேர்ந்தவர் என்றும், கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை திருக்கோவில் உகந்த இடமென்று முருகப் பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இத்திருக்கோவிலில்தான் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது.  

சென்னிமலைக்கு அருணகிரியார் வாழ்வில் ஒரு சிறப்புண்டு. சம்பந்தருக்கும் அப்பருக்கும் சிவபெருமான் திருவீழிமிழலையில் படிக்காசு அளித்தார். அது போல சென்னிமலையில் முருகன் அருணகிரிநாதருக்கு படிக்காசு அளித்தார்.  

நாட்டில் அருணகிரி நாதன் சொல் திருப்புகழ்

பாட்டில் மகிழ்ந்து படிக்காசளித்த பிரான்

தாலமிகுஞ் சென்னிமலை தன்னில் வளர் கல்யாண

வாலசுப்ப ராயனென்று வாணர்புகழ் வாசலினான் -  என்ற பாடல் சென்னிமலை ஆண்டவன் காதல்  என்ற நூலில் வருகிறது.

 சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்,  சிறந்த முருக  பக்தரான சிவாலயச் சோழன் என்ற மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக, முருகப்பெருமானே நேரில் வந்திருந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கியதாக ஒரு நம்பிக்கை காலம் காலமாகப் பக்தர்களிடையே நிலவுகிறது.

தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகவும், நைவேத்தியம் தயாரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் தீர்த்தம் மலையடிவாரத்தில் இருந்துதான் கொண்டு வர வேண்டும். இதற்காகவே இரண்டு காளைகள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் இக்காளைகள் மூலம்தான் தீர்த்தம்  மேலே கொண்டு வரப்படுகிறது.  

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதும்  மழையில்லாத  சமயத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம் உள்ள தலம். இவையெல்லாம் இத்தலத்தின் சிறப்புகள். வாருங்கள் இனி இத்தலத்தை பற்றிய இன்னும் சில வரலாறுகளைப்பற்றி காணலாம்.














இராஜகோபுரம்

புராணக் காலத்தில் ஆதிசேஷனுக்கும்  வாயு தேவனுக்கும் இடையில் ஒரு பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாகச் சுற்றிப் பிடித்துக்கொண்டான். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க வேண்டி, வாயுதேவன் எதிர்த்துத் தாக்கினார். அவ்வளவில் மேருமலையின் சிகரப் பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப் பகுதி சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது சென்னிமலை என்றழைக்கப்படுகிறது.   

 முந்நூறு ஆண்டுகளுக்கு முன்,   பத்து வயது  சிறுவன் ஒருவன், அவன் பிறந்த ஊர் காரணமாக செங்கத்துறையான் என்று அழைக்கப்பட்டான். பஞ்சம் பிழைக்க சென்னிமலைக்கு வந்து, ஒரு பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்தான். தன்னுடைய 25வது வயதிலும் அப்பாவியாக இருந்த அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, கையில் வேலுடன் சென்னியாண்டவர் காட்சி தந்தார். கூடவே அவனை, “நிலத்தம்பிரானே!” என்று அழைக்கவும் செய்த அவர், ‘இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோவில் கட்டு!’ என்றருளி மறைந்தார்.

 சென்னிமலை முருகனுக்கு மலைமேல் மண்டபம் கட்ட தீர்மானித்தார் நிலத்தம்பிரான். கட்டும் போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்குச் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த அவரும், அவருடைய சீடர்களும் அம்மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.

அப்போது அங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களைத் தடுத்தார். “யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன்!’ என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான். காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்ததுதான். அதைக்கேட்டு திடுக்கிட்ட அதிகாரியால், தனக்குச் சமமாக அவர் ஆங்கிலம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே தன் கோபத்தைக் காட்டினார். “மரத்தை வெட்டுவதுமட்டுமில்லாமல், திமிராக பேசுகிற இவனை மரத்திலே கட்டி வைங்கடா?’ என்று உத்தரவிட்டார். ஆனால் உடன் இருந்தவர்கள் தயங்கினார்கள். ‘‘ஐயா, இவர் பெரிய மகான். இவரை தண்டிக்கறது நமக்குதான் அழிவு’’ என்றார்கள். அவர்கள் பயப்படுவதற்குக் காரணங்கள் இருந்தன.

ஒரு நாள், பண்ணையில் வேலை செய்யும் ஒருவனை நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர். “இவனை நாகப்பாம்பு கடிச்சுட்டுது. வைத்தியர் வீட்டுக்குப் போக வண்டி கேட்க வந்தோமுங்க!’ என்றனர். அப்போது பக்கத்தில் இருந்த செங்கத்துறையான், பாம்புக் கடிபட்டவனை நெருங்கினான். பச்சிலையைக் கசக்கி அவன் மூக்கருகில் சிறிது நேரம் வைத்திருந்து, வேறு சில தழைகளைக் கசக்கி, அவன் வாயில் சாறை விட்டான். பின்பு வேப்பிலையால் அவன் உடல் முழுவதையும் நீவி விட்டான். சற்று நேரத்தில் பாம்பு கடிபட்டவன் எழுந்து உட்கார்ந்தான். இக்காட்சியை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இவ்வித்தையை எங்கே கற்றான் அவன்? ஆனால், செங்கத்துறையானோ, ‘எல்லாம் சென்னியாண்டவன் செயல்’ என்று மட்டுமே சொன்னான்.

 கோவில் திருப்பணிகள் நடந்தபோது தம்பிரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன்மூலம் கிடைத்த தொகையுடன்  கட்டிடப் பணியாட்களுக்குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார். அவர் கூலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலலையை கலக்குவது போல, பணத்தை பொரியுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார். அப்பணத்தை எண்ணிப் பார்த்தால் அவரவர் செய்த வேலைக்கான கூலி துல்லியமாக இருக்கும்! இதுபோனற பல அற்புதங்களைச் செய்த தம்பிரானையா மரத்தோடு கட்டிப் போடுவது?

அப்போது தம்பிரான், “ஐயா, என்னைக் கட்டிப் போடுவது இருக்கட்டும். உங்கள் மனைவிக்கு சித்தம் கலங்கி, கொள்ளிக் கட்டையை எடுத்துக்கொண்டு, ‘ஊரைக் கொளுத்தப் போகிறேன்’ வருகிறார்கள். முதலில் அவரைக் கட்டுப்படுத்துங்கள்,’’ என்று சாதாரணமாகச் சொன்னார். அதே நேரம் அதிகாரியின் வேலையாள் வேகமாக ஓடிவந்து, நிலத்தம்பிரான் சொன்ன தகவலை உறுதி செய்தார். பதட்டத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அதிகாரி, வேலைக்காரப் பெண்கள் தன் மனைவியை அமுக்கிப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது அவள்முன் வந்து நின்ற தம்பிரான், தன்னிடமிருந்த விபூதியை எடுத்து அவள் தலையில் மூன்று முறை போட்டுவிட்டு, “சென்னியாண்டவா, இக்குழந்தையைக் காப்பாற்று!” என்று வேண்டிக் கொண்டார். அடுத்த கணமே அவள் பழைய நிலைக்கு வந்தாள். இதைக் கண்டு வியந்த அதிகாரியும் அவர் மனைவியும், தம்பிரான் காலில் விழுந்து வணங்கினர்.

அதோடு, அதிகாரியே தன் ஆட்களைக் கொண்டு, அம்மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அம்முன்கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது. கோவில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த சமாதியில் போய் அமர்ந்தார். அந்நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார். 

 மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோவில் கட்டியிருக்கிறார்கள்.மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை உள்ளது. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த  தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம். அதனால் இப்போதும் அச்சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்!


பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட  சென்னிமலை ஆலயம்  கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட குரங்குகள் மற்றும் மயில்கள் நிறைந்த அழகிய வனப்பகுதியில் உள்ளது.

அடிவாரத்தில் ஒரு விளக்குத்தூண் உள்ளது. அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 படிக்கட்டுகள் அமையப் பெற்றிருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறிய பின்  கடம்பவனேஸ்வரர், இடும்பன், ஆகியோரின் சன்னதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்' என்னும் மலைக் காவலர் சன்னதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக வரும் ஆற்றுமலை விநாயகர் சன்னதியையும் தரிசித்துவிட்டு, மேலே சென்றால், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அடையலாம். மலையேறும் போது இளைப்பாற ஏதுவாக மண்டபங்கள் உள்ளன. வழியில் நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது.  வாகனம் மூலமாகவும்   மேலே செல்ல இயலும். அடிவாரத்திலிருந்து தேவஸ்தான பேருந்து வசதியும் உள்ளது.  மேலேறியவுடன் ஐந்து நிலை இராஜகோபுரமும், நான்கு கால் மண்டபத்துடன் கூடிய விளக்க்கு தூணையும் காணலாம்.

 

அடியோங்கள் வண்டி மூலம் மேலே சென்றோம். செல்லும் வழியில் மரங்களில் பல மயில்களைக் கண்டோம். மலை பச்சை பசேலென்று இருந்தது. அந்தி சாயும் நேரத்தில் சென்றதால் இரம்மியமான சூழல் நிலவியது. வண்டி நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தினோம் . முதலில் இராஜகோபுரமும் அதன் அருகில் உள்ள கார்த்திகை மண்டபமும்.   கண்ணில் பட்டது. ஐந்து நிலை இராஜகோபுரம் வழியாக ஆலயத்திற்குள் நுழைந்தோம். சுவாமி சன்னதி உயரமாக அமைந்திருந்தது. கொடிமரம் தங்ககவசம் பூண்டிருந்தது.

 

திருக்கோயிலின் தெற்கு பிராகாரத்தில் மார்க்கண்டேஸ்வரர், இமயவள்ளி சன்னதியும், தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னதியும், வடக்கில் காசி விசுவநாதர், விசாலாட்சி சன்னதியும் அமைந்திருக்க, இவர்களுக்கு நடுவில் நாயகனாய் அருட்காட்சி தருகிறார் முருகப்பெருமான்.

தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு, பொருள் செல்வத்தோடு ஞானச் செல்வத்தையும் அருளும் வகையில், ஞான தண்டாயு தத்தை தன் வலத் திருக்கையில் ஏந்தி, இடத் திருக்கரத்தை இடையில் பொருத்தி, பேரொளியும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான். இவரை

பகலிறவினில் தடுமாறா       பதிகுருவெனத்  தெளிபோத

ரகசியமுறைத் தநுபூதி          ரத நிலைதனைத் தருவாயே

இகபரமதற் கிறையோனே       இயலிசையின் முத்தமிழோனே

சகசிரகிரிப்   பதிவேளே       சரவணபவப் பெருமாளே.

பொருள்: நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிராமலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே என்ற திருப்புகழ் பாடி வழிபட்டோம்.  (இங்கே "பகலிரவு" என்பது  நினைவும் மறப்பும் என்பதைக் குறிக்கும். இந்த இரண்டும் அற்ற நிலையே யோக அநுபூதி நிலை).

சென்னிமலையில் வீற்றிருக்கும் தண்டபாணி மூர்த்தி திருமுகம், பூரணப்பொலிவுடனும், இடுப்புக்கு கீழ் திருப்பாதம் வரை வேலைப்பாடற்றும் காணப்படுகிறது. இம்மலையின் ஒரு பகுதியில் காராம்பசு தினமும் பால் சொரிய விட்டதைக் கண்ட பண்ணையார், அவ்விடத்தைத் தோண்டிப் பார்த்துள்ளார். அபோது பூர்ண முகப்பொலிவுடன் ஒரு கற்சிலை கிடைத்தது. அவ்விக்ரஹத்தின் இடுப்புவரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது. ஆனால், இடுப்புக்கு கீழ், பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருந்தது. அதை ஒரு குறையாக எண்ணி, அப்பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்த போது, சிலையிலிருந்து இரத்தம் கொட்டியதாகவும், இதனால் அதே நிலையில் சென்னிமலையில் அச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது. சென்னிமலையில் மூலவருக்கு ஆறு கால பூஜை வேளையில் மட்டும் அபிஷேகமும், இதர நேரங்களில் உற்சவருக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது.

 மூலவர் விமானம்

மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக, செவ்வாய் அம்சமாக அமைந்தும், மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களில் எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் பாங்குடன் அமைந்தும் அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவகிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இத்தலம் செவ்வாய் பரிகாரச் சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னிமலையண்டவர் விமானத்தில் புராணங்களில் கூறப்பட்டுள்ள பலவிதமான அற்புத கோலங்களை தரிசிக்கலாம் என்பது சிறப்பு

இக்கோவிலில், ஞானதண்டாயுதபாணியாக முருகப் ருமான் திருக்காட்சி தந்தாலும், இரண்டு தேவியரும் தனிச்சன்னதியில் அருள்கிறார்கள். மூலவர் ஞான தண்டாயுதபாணி சன்னதிக்குப் பின்புறம் இருக்கும் படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்றால், வள்ளி, தெய்வானை ஆகியோரின் சன்னதிகளைத் தரிசிக்கலாம். இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன்  சென்னிமலையில் தவம் இருந்து முருகப் பெருமானை மணந்து கொண்டதாக ஐதீகம். இருவரின் திருமேனிகளும் பிரபையுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலையின் தனிச்சிறப்பு.

மலை மேலிருந்து ஆலயத்தின் காட்சி

சென்னிமலை முருகப்பெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வரும் பக்தர்கள், தங்களின் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், கோயிலுக்கு வந்து மூலவருக்கு அர்ச்சனை செய்து, முருகப் பெருமானின் சிரசுப்பூ உத்தரவு கிடைத்த பிறகே முடிவு செய்கிறார்கள். திருமணமான தம்பதியர் சந்தான பாக்கியம் வேண்டி, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும், தீர்க்கசுமங்கலியாக இருப்பதற்குச் சன்னதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. அதேபோல் இக்கோவிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணிஎன்னும் சித்திப்பொருள் இருப்பதாகவும், அம்மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், இக்கோவிலுக்கு வந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.


தேவியர் சன்னதிக்கு செல்லும் படிகள்

மூலவர் சன்னதிக்குப் பின்னால்,  சிறிது தூரம் நடந்து சென்றால் சுந்தரவல்லி, அமிர்தவல்லி சன்னதியும், ஸ்ரீபிண்ணாக்குச் சித்தர் குகை அமைந்துள்ளது. இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்பிரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்

தேவியர் விமானம்

ண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது.  நவகிரகங்களில் சுக்கிரனைப் பிரதிபலிக்கும் இவரை, வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டால், சுக்கிர தோஷம் விலகும் என்கிறார்கள் பக்தர்கள். புண்ணாக்கு சித்தர் கோவில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. சிவமறையோர் குலத்தில் பிறந்து, சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர், சிரகிரி வரலாற்றை எழுதியபோது, முருக்கடவுள் காட்சியருளினார். அவரது சமாதிக் கோயிலும் அருகே உள்ளது.   இத்தடவை  அங்கு செல்ல இயலவில்லை, ஆனால் முன்னர் ஒரு சமயம்சென்ற போது தேவியர்களை தரிசித்துள்ளோம்.

சென்னிமலையில் உள்ள 1320 திருப்படிகளையும் இரட்டை மாட்டு வண்டி ஏறிய அதிசயம் 1984 பிப்ரவரி 12-ல் நடந்தேறியது. இத்தலத்தில்  வேங்கை மரத்தால் செய்யப்பட்ட மரத்தேர் உலா மற்றொரு சிறப்பம்சம்.

இக்கோயிலில் வளர்பிறை சஷ்டித் திருநாளிலும்,  கார்த்திகையன்றும், ஐப்பசி மாத கந்தர் சஷ்டி திருவிழா நாட்களிலும், பக்தர்கள் சந்தான பாக்கியம் வேண்டி விரதமிருக்கின்றனர். அதேபோல, ஜனன ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இங்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி அருள் பெறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஊருக்கு மற்றுமொரு வரலாற்றுப் பெருமையும் இருக்கிறது. அது தமிழ்நாட்டின் மிக முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகியான “கொடி காத்த குமரன்”  என்று சிறப்பாக அழைக்கப்படும் திருப்பூர் குமரன் பிறந்த ஊர். அவரது சிலை அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சென்னிமலை கைநெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். சென்னிமலையில், கிட்டத்தட்ட 35 நெசவாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இச்சங்கங்களின்  மூலமாகத் போர்வைகள், துண்டுகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறை ஆகியவை நெய்யப்படுகின்றன.  அடியோங்கள் செல்ல முடியவில்லை என்றாலும் முக்கியத்துவம் கருதி அடுத்து சிவன்மலை ஆண்டவரை தரிசிக்கலாம் அன்பர்களே.