Tuesday, April 5, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 17

 

உடுமலைப்பேட்டை மாரியம்மன் தேர்த் திருவிழா


உற்சவர் அம்மன்

(நன்றி : நம்ம ஊரு உடுமலை  முகநூல் பக்கம்)

இந்த கொங்குதேச பாடல் பெற்ற தலங்கள் பத்தியுலாவின் இடையே பண்ணாரியம்மனின் குண்டம் திருவிழாவை எழுதும் போது சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் அடியேன் கண்டு களித்த மாரியம்மன் தேர்த்திருவிழா நிகழ்வுகளை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஏனென்றால்  கொங்கு மண்டலத்தில் மாரியம்மன் ஆலயங்களில் கோடைக்காலத்தில் சிறப்பாக மாரியம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. கம்பம் போடுதல் இம்மண்டலத்திற்கே உரிய சிறப்பு.  அடியேன் அறிந்த வரையில்  தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இவ்வாறு கொண்டாடுவதில்லை. எனவே  அதை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பகுதி. அடியேன் இரசித்த திருவிழாவை தாங்களும் தரிசிக்க வாருங்கள் அன்பர்களே

தை மாதம் அறுவடைக்கு பிறகு கிராம மக்கள் ஓய்வாக இருப்பர், கோடைக்காலம் துவங்கிவிட்டதால் அம்மை போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருந்ததால், வேப்பிலை, மஞ்சள் பயன்படுத்தும் விதமாக இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டுமென்றபடி கிராமத்தார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விழாவைக் கொண்டாடினர். பொதுவாக விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் இயற்கை ஒளியுள்ள பௌர்ணமி காலத்தில் வருமாறு பார்த்துக்கொண்டனர். இவ்வாறு கொண்டாடுவதால் மழை பொழியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதனால் மாசி மாதம் துவங்கி சித்திரை வரை மாரியம்மன் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. மாரியம்மனின் திருவிழாவை தரிசிப்பதற்கு முன்னர்  எமது  ஊரின் சிறப்பு என்ன என்று காணலாம் அன்பர்களே.

அக்காலத்திய அம்மன் விமானம்

மூன்று பக்கமும் அர்த்த சந்திர வடிவில் மலைகளால் சூழப்பட்டதால், கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலைப்பேட்டையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது.  பாலக்காட்டு கணவாய் வழியே வரும் இதமான காற்றும் மேற்குமலைச்சாரலில் தொடங்கும் மழையும் உடுமலையை எப்போதும் ஒரே மாதிரியான சீதோஷண நிலையை உணர வைக்கிறது. ஈரக்காற்று எப்போதும் உடுமலை பகுதி மக்களின் மனதை வருடிக்கொண்டே இருக்கும் ஆகவே உடுமலை "ஏழைகளின் ஊட்டி" என்ற சிறப்பை பெற்றுள்ளது! எனவே ஆதி காலத்தில் இருந்தே பல பஞ்சாலைகள் இவ்வூரில் அமைந்துள்ளன. காற்று வருடம் முழுவதும் வீசுவதால் தற்போது காற்றாலைகள் அமைந்துள்ளன. 

மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகி அதுவும் திருமூர்த்தியாக அருள் பாலிக்கும் மண். திருமூர்த்தி மலை அருகில் உள்ளதால் திருமூர்த்தி மண் என்றும் அறிப்படும் இந்நகரத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சிறுவாணிக்கு அடுத்து சுவையானது திருமூர்த்தி தண்ணீர். இம்மலையில் முன்னர் உடும்புகள் அதிகம் இருந்ததால் உடும்பு மலைப்பேட்டை என்பதே உடுமலைப்பேட்டை  ஆகியது. ஈழத்திலிருந்து மேற்கு கடற்கரைக்கு செல்லும் பாதையில் மலைபடும் பொருட்களை விற்கும் சந்தையாக விளங்கியதால் பேட்டை என்று அழைக்கப்பட்டது என்பது ஒரு கருத்து.    அதற்கு சான்றாக ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன.

கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்று பெயர் பெற்றது என்பது ஒரு சாரார் கருத்து.

இவ்வளவு சிறப்புப்பெற்ற ஊரின் மையத்தில் அமைந்துள்ள 500 வருடங்களுக்கு மேற்பட்ட புராதான ஆலயமே மாரியம்மன் ஆலயம். இந்த அம்மனும் சுயம்புவாக தோன்றியவள்தான், பசு மாடு பால் சொரிந்து காண்பித்துத்தர வந்து கோவில் கொண்ட அம்மன். ஊர்க்கவுண்டர் பின்னர் அம்மனுக்கு கோவில் கட்டினார், தர்மகர்த்தாவாக  அவர் சந்ததியினர் இன்றும் ஆலயத்தை நிர்வகிக்கிறார்.

                         

மாரி என்றால் மழை என்று பொருள். சகல உயிர்களும் வாழ தேவையான நீரை வழங்குகின்ற மழையின் பெயரைக் கொண்டு அருள்பாலிக்கின்றாள் மாரியம்மன். அம்மனுக்கான முதல் புராணக்கதை. ஜமதக்னி முனிவர் – ரேணுகா தேவி தம்பதியர் பரசுராமரின்  பெற்றோர். இரைவத மஹாராஜாவின் மகளான ரேணுகாதேவி ஜமதக்னி முனிவரை மணந்தார். பதிவிரதையானதால் கமண்டல ஆற்றுக்கு சென்று ஈர மணலால் குடம் செய்து அதில் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். இவ்வாறு ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் முகர்ந்து கொண்டிருந்த போது ஒரு கந்தவர்வன் மேலே பறந்து சென்றான், அவனது பிம்பம் தண்ணீரில் பிரதிபலித்தது. எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று மனதில் ரேணுகா தேவி நினைத்தவுடன், அம்மண் குடம் உடைந்தது. தண்ணீர் இல்லாது ஆசிரமம் வந்த ரேணுகா தேவியைப் பார்த்து நடந்ததை தனது ஞான திருஷ்டியினால் அறிந்து கொண்டார். கோபத்தில் தனது மகன்களை அழைத்து தங்கள் தாயை கொல்ல உத்தரவிட்டார். பரசுராமரின் ஆறு அண்ணன்மார்களும் மறுத்துவிட்டனர். ஆனால் பரசுராமர் தன் பரசுவினால் தன் தாயின் தலையை கொய்தார். பின் தந்தையிடம் ஒரு வரம் கேட்டார், தன் தாயை உயிர்ப்பித்து தருமாறு வேண்டினார்.  தாயின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து தந்தை தந்த தீர்த்தத்தை தெளித்து  உயிர் பெறச் செய்யும் அவசரத்தில் அருகில் கிடந்த வேறு ஒரு பெண்ணின் தலையை வைத்து உயிர்பித்து விட்டார். இவ்வாறி தலை மாறியதால் அம்மன் மாரியம்மன் என்று பெயர் பெற்றாள் என்பது ஒரு ஐதீகம். தமிழகத்தின் வட மாவட்டங்களில் ரேணுகா தேவியாக அம்மனின் சிரசை வழிபடும் வழக்கம் உள்ளது.

கிருஷ்ணனருடன் பிறந்த மகாமாயையே,  மகமாயி என்பது இன்னொரு ஐதீகம். வடமதுரையில் தேவகிக்கும் வசுதேவனுக்கும் திருமணம். வசுதேவன் தன் மனைவி தேவகியை அழைத்துச் செல்லும் தேரை தேவகியின் அண்ணன் கம்சன் ஓட்டிச்சென்றான். தேவகியின் எட்டாவது பிள்ளையால் கம்சனுக்கு மரணம் என்று அசரீரி சொல்கிறது. தேவகியைக் கொல்ல முயன்ற கம்சனைத் தடுத்த வசுதேவன், பிள்ளைகள் பிறந்தவுடன் கம்சனிடம் தருவதற்கு ஒப்புக்கொண்டான். அப்படியே ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஆயர்பாடியில் நந்தகோபனும் யசோதையும் குழந்தை வேண்டி கடவுளிடம் வந்தனர். மகாமாயையை அழைத்த கடவுள் யசோதையின் கர்ப்பத்திற்குள் போகச்சொன்னார். யசோதைக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தேவகியிடமும் தேவகியின் ஆண் குழந்தையை யசோதையிடமும் மாற்றி விடும்படி நந்தகோபனுக்குக் கட்டளையிட்டார். அப்படியே நடந்தது. கம்சன் இதுதான் தேவகியின் எட்டாவது குழந்தை என எண்ணி, கொல்வதற்காகத் தூக்கும்போது நழுவிய பெண் குழந்தை வில் அம்பு வாள் ஏந்திய மகாமாயையாக மாறினாள். அம்மாயாதேவியே மாரியம்மனாகத் தோன்றி அரக்கர்களையும், தீவினைகளையும், நோய்களையும் போக்கி கண்கண்ட தெய்வமா விளங்குகிறாள்.

அம்மன் தேர்

அடியேனின் இல்லத்தில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் கோவில் இருந்தது என்பதால் நோன்பு சாட்டுகின்ற தினத்தில் இருந்து திருவிழா முடியும் வரை தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் கோவிலே கதி என்று இருந்தேன். நடக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் அருகிருந்து கவனித்துள்ளேன், முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன். 

பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று நோன்பு சாட்டுதல் நடைபெறும், சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனிடம் உத்தரவு வாங்கிய பின் அனைவருக்கும் திருவிழா நடப்பதை அறிவித்தலே நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியாகும். ஒருவர்  சிறு பறையுடன்  வீதி வீதியாக சென்று மாரியம்மன் நோன்பு சாட்டியுள்ளது,  கம்பம் என்றைக்கு தேரோட்டம் என்றைக்கு என்று அறிவித்து வருவார். பொதுவாக நோன்பு சாட்டிய பின் திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டு வெளியூருக்கு செல்ல மாட்டார்கள்.

நோன்பு சாட்டிய செவ்வாய்க்கு அடுத்த செவ்வாய் கம்பம் போடுதல், வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றம், தேர் அலங்காரத்திற்காக தேரில் ஆரக்கால் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது.   பூவோடு எடுத்தல் ஆரம்பம். அன்றிரவிலிருந்து அம்மன் வாகன புறப்பாடு. கலை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.  அடுத்த புதன்கிழமை காலையிலிருந்து மாவிளக்கு, நள்ளிரவில்  திருக்கல்யாணம். வியாழன் அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளுதல், அன்று மாலை தேரோட்டம், தேர் நிலைக்கு வந்த பின் இரவு கம்பம் கங்கை சேர்தல். வெள்ளிக்கிழமை இரவு நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் குதிரை வாகனத்தில் உச்சி மாகாளியுடன் அம்பாள் புறப்பாடு. சிறப்பு வாண வேடிக்கை. மறுநாள் சனிக்கிழமை காலை கொடி இறக்கம், மஹா அபிஷேகம், மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு. 

ஆலயத்தின் இன்றைய தோற்றம்

நோன்பு சாட்டிய நாள் பழனியிலிருந்து தேர் அலங்காரம் செய்பவர்கள் வந்து தங்கள் வேலையை ஆரம்பிப்பார்கள். முதலில் கம்ப மண்டபம் அலங்காரம் ஆரம்பமாகும்.  வண்ண வண்ண காகிதங்களால் விதானம் தூண்களுடன் அமைப்பர், இரு பக்கங்களிலும் சிறு சிறு சுவாமிப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும். கம்பத்திற்கு நேர் மேலே மாலை தாங்கிய அழகிய தேவதையை தொங்க விட்டிருப்பார்கள். அருமையாக அலங்காரம் செய்வார்கள்.  கோவிலை அறநிலையத்துறை எடுத்துக் கொண்டபின் முதலில் இந்த அலங்காரத்தை நிறுத்திவிட்டனர்.

அடியேன் பள்ளி படிப்பை முடித்த பின்னர் படிப்பிற்காக சென்னை வந்து, படிப்பை முடித்த பிறகு வேலை நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றிய காலத்தில் பழைய ஆலயம் மாறி புது ஆலயமாக மாறி விட்டது, தரை மட்டத்தில் இருந்த அம்மனும் உயரமாக சென்று விட்டாள். இவ்வருடம் (2022) நடந்த கும்பாபிஷேகத்தின் போது  கம்ப மண்டபம் முன்பு அலங்காரம் செய்வது போல பல்வேறு   ஆலய அம்மன் திருஉருவங்கள் சுதை சிற்பங்களாக மிளிர அருமையாக அமைத்துள்ளதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது தேர் அலங்காரம் முழுவதும் வண்ண காகிதங்களைக் கொண்டு செய்யப்பட்டது.  அலங்கார பொம்மைகள் எல்லாம் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், அதில் முதலில்  சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் ஆகிய வண்ண காகிதங்களை ஒட்டுவார்கள், மஞ்சள் ஜிகினா காகிதம் கொண்டு மேலும் கீழும் அலங்கரிப்பார்கள், அதன் மேல் அலங்காரமாக வெள்ளை கோலங்களை ஒட்டுவார்கள்.  தேரோடும் சமயத்தில் பறக்கும் விதமாக அடிபாகத்தில் விசிறி காகிதம் ஒட்டி அலங்காரத்தை நிறைவு செய்வார்கள். கலசத்துடன் சேர்ந்து மொத்தம் ஐந்து நிலைகள் ஒவ்வொரு நிலையாக அலங்காரம் செய்து பாதுகாப்பாக எடுத்து வைப்பார்கள். அடியேன் அரசமரத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் அமர்ந்து  அவர்கள் செய்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பேன்.  அவர்களுக்கு சிறு சிறு உதவியும் செய்துள்ளதால் அப்படியே சொல்ல முடிகிறது. தற்போது துணியால்  தேரை அலங்கரிக்கப்பதால் புதிதாக இருக்கும் போது பளிச்சென்று இருக்கும், வருடம் செல்ல செல்ல வர்ணம் மங்குகின்றது. ஆனால் அப்போது ஒவ்வொரு வருடமும் அலங்காரம் செய்ததால் எப்போதும் தேர் மின்னிக் கொண்டிருந்தது.

                                   

அடியேன் படித்த அரசினர் உயர்நிலைப் பள்ளி

சிறுவர்களுக்கு பிடித்த ரங்கரட்டினம், குடை ராட்டினம், மற்றும் சோப்பு, சீப்பு, கண்ணாடிக் கடைகள் குட்டையை சுற்றி வந்து விடும். அடம் பிடித்து  அங்கு சென்று அதில் விளையாடி மகிழ்வோம். சுற்றி வந்து வேடிக்கை பார்ப்போம். இக்குட்டைக்கு அருகில் அடியேன் படித்த பள்ளியும் உள்ளது. 

இன்று நோன்பு சாட்டுதல் என்பதால் இப்பதிவு. 



அடுத்த பதிவில் திருவிழாவைப்பற்றி விரிவாக காணலாம் அன்பர்களே. 


இப்பதிவில் உள்ள படங்கள் அனைத்தும்    

 https://www.facebook.com/NammaOoruUdumalpet/  இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.

No comments: