Sunday, July 28, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 -2

அதிகார நந்தி  சேவை

பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயம்,  குரு பரிகாரத்தலத்தின் பிரம்மோற்சவ காட்சிகள் தொடர்கின்றன. இன்றைய தினம் மூன்றாம் திருநாள் காலை அதிகார நந்தி சேவையை தரிசிக்கலாம் அன்பர்களே.


பத்தரொடு பலரும் பொலியம் மலா் அங்கைப்புனல் தூவி
ஒத்த சொல்லி உலகத்தவா் தாம் தொழுது ஏத்த உயா் சென்னி 
மத்தம் வைத்த பெருமான் பிாியாது உறைகின்ற வலிதாயம்
சித்தம் வைத்த அடியாா் அவா் மேல் அடையா மற்று இடா் நோயே!  என்று வலிதாயத்தை தங்கள் சித்தத்தில் வைத்துள்ள அடியாா்களை இடா்களும் நோய்களும் அண்டாது என திருஞானசம்பந்தப் பெருமான்  பாடிய இத்தலத்தின்


இறைவர் : வலிதாய நாதர், வல்லீஸ்வரர். திருவலிதாயமுடை நாயனார்.
இறைவியார்  : ஜகதாம்பாள், தாயம்மை., புவனநாயகி.
தல மரம் : பாதிரி, கொன்றை
தீர்த்தம் : பரத்வாஜ தீர்த்தம்.
வழிபட்டோர் : பரத்வாஜர், இராமர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், குரு பகவான்,  வலியன் (கருங்குருவி) முதலானோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - பத்தரோடுபல ரும்பொலியம்மலர்.

மாட வீதியில் ஆலயத்திற்கு எதிரே சன்னதி விநாயகர் எழுந்தருளியுள்ளார் அவரை வணங்கி ஆலயத்தை நோக்கி சென்றால், 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் பிரதான கோபுரம் நம்மை வரவேற்கின்றது அதில் சிவ சிவ என்னும் மந்திரம் மற்றும் திருவலிதாயம் என்ற ஆலயத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.  கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம்,  பலி பீடம்   நந்தியெம்பெருமான்  சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே  தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.  நான்கு கால் முக மண்டபம்  தற்கால கட்டிட அமைப்பு அதன் மேல் உள்ள சுதை சிற்பத்தில் நடு நாயகமாக சோமாஸ்கந்தர், அவருக்கு இருபுறமும் விநாயகர், முருகர் மற்றும் திருஞானசம்பந்தர், பரத்வாஜேஸ்வரர். ஒரு காலத்தில் மரத்தடி கோவிலாக இருந்த ஆலயம் சோழர் காலத்தில் கற்றளியாக மாறியுள்ளது. இன்றும் பெரிய மதில் சுவர் சூழ இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது ஆலயம்.



புறாக்கள் நிறைந்த ஆலயம்

அகன்று விரிந்த வெளிப் பிரகாரத்தில் பக்தா்கள் புறாக்களுக்கு தானியங்கள் தூவி உணவளிக்கின்றனா்.  நமது முன்னோா்கள் புறா வடிவில் வந்து நாம் அளிக்கும் இத்தானியங்களை உண்பதாக இங்கு வழிபடும் அன்பா்களின் நம்பிக்கையாக உள்ளது. பிரகாரத்தில் ஆன்மீக நூலகம்,  நந்தவனம் உள்ளது. அதன் வேலியில் திருமுறைப் பாடல்கள்.  அலங்கார மண்டபம், பசு மடம், யாக சாலை, நவக்கிரக சன்னதி மற்றும் குரு பகவானின் சன்னதி இப்பி[ரகாரத்தில் உள்ளன. நவகிரக சன்னதிக்கு எதிரே உள்ள கிணறு பரத்வாஜ தீர்த்தம்.





திருவலிதாயநாதர் அதிகாரநந்தி சேவை


வெளிப் பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தை வணங்கி,  பலி பீடத்தில் நமது மும்மலங்களை பலியிட்டு,  நந்தியெம்பெருமானை வணங்கி அவர் அனுமதியுடன் உள் மண்டபத்தில் நுழைந்தவுடன்

சிந்தை நின்ற சிவாநந்த செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றம் கணக்கது  என் கொலோ! -  என்று வள்ளாலார் பாடிய  மூலவர் சுயம்பு மூர்த்தி. சதுர ஆவுடையுடன் அனைவரும் நன்கு தரிசிக்கும் வண்ணம் அருள் பாலிக்கின்றார்.   இவரது  விமானம் தொண்டை நாட்டுக்கே உரிதான  கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது. வள்ளலார் பெருமான்  ஈசனை வல்லிகேச, வலிதாய தலைவ, வலிதாய மருவிய ஈசனே என்றெல்லாம் அழைத்துப் படியுள்ளார். ஐயனுக்கு எதிரே கைலாய நந்தியெம்பெருமான்.






2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான கோவில். உங்கள் மூலமாக நானும் தரிசித்தேன். நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி, தொடர்ந்து வாருங்கள் ஐயா.