Monday, July 22, 2019

சித்திரைப் பெருவிழாக்கள் 2019 -1

திருவலிதாயம் (குரு பரிகாரத்தலம்) கொடியேற்றம்

அவனருளால் இவ்வருடம் வடசென்னையின் சில ஆலயங்களின் பெருந்திருவிழாக்களைக் காணும் பாக்கியம் கிட்டியது. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றபடி அக்காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள். தேவாரப்பாடல் பெற்ற திருவலிதாயம்  ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர்,  கோசை என்றழைக்கப்படும் கோயம்பேடு   அறம் வளர்த்த நாயகி உடனுறை குசலவபுரீஸ்வரர் என்னும் குறுங்காலீஸ்வரர்  சித்திரைப் பெருவிழா காட்சிகளையும், வில்லிவாக்கம் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரரின் வைகாசிப் பெருவிழாவின் சில காட்சிகளையும் காண வாருங்கள் அன்பர்களே கை கூப்பி அழைக்கின்றேன்.

திருவலிதாயம் ஆலய இராஜகோபுரம்

சென்னை  மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள  படவேட்டம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம். மேனகையின் சாபத்தால் குருவியாக மாறிய பரத்வாஜ முனிவர் இங்கு வந்து, நெடுந்தவம் செய்து, சிவ வழிபாடு செய்து விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். மேலும் இராமர்  ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன், இந்திரன்குரு பகவான் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம்.  



கொடியேற்ற மண்டபத்தில் அம்மையப்பர்




சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 254 வது தேவாரத்தலம், தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 தலங்களில் இத்தலம்  21வது தலம் ஆகும்.. அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். மேலும் அருணகிரிநாதர்,, பாம்பன் சுவாமிகள்வள்ளலார்  இராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.



அம்பாள்

குருபகவான் சிவபூஜை செய்து வழிபட்டு பாவ நிவர்த்தி பெற்ற தலம் இது என்பதால், குரு பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் உள்ள சில  குரு பரிகாரத் தலங்கள் திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடி திட்டை,  உத்தமர் கோவில் மற்றும் பாடி ஆகியவை ஆகும்.  இத்தலத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவான் கொள்ளை அழகு! கமண்டலம், தண்டு மேற்கரங்களில் ஏந்தி, அபய வரத கீழ் கரங்களுடன், யானை வாகனத்துடன்  நின்ற கோலத்தில் எழிலாக தரிசனம் அளிக்கின்றார் குரு பகவான்.  குரு பார்க்க கோடி நன்மை என்பதால் இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்கினால், சகல தோஷங்களும் விலகும் என்கின்றனர். வியாழக்கிழமைகளில், காலையும் மாலையும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால் கோடி புண்ணியம் நிச்சயம்!



பிரம்மாவின்  இரு புதல்விகளான  கமலை, வல்லி   ஆகியோரை விநாயகர் இத்தலத்தில் மணந்து கொண்டார் என்றும் வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. எனவே  விநாயகர் உற்சவர் இரு தேவியருடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்






பாடி என்ற ஊரின் பெயர் போர்க்கால பாடி வீட்டின் அடிப்படையில் எழுந்திருக்கலாம். சோழ மன்னர்களும், விஜய நகர மன்னர்களும் இவ்வூரை பாடிவீடாகப் பயன்படுத்தியிருக்கலாம். இதற்கு சிறந்ததொரு சான்றாக படைவீட்டு அம்மன் விளங்குகிறது. படைவீரர்கள் போருக்குச் செல்லும் முன் வீரதேவதையாகிய காளியை வணங்கிச் செல்வது வழக்கம். வெற்றி பெற்றால், அவ்வீரர்களே தங்கள் தலையை அரிந்து காணீக்கையாக வழங்குவதும் வழக்கிலிருந்தது. அத்தகைய படைவிட்டு அம்மன்என்றும் அதுவே பேச்சு வழக்கில் படவடம்மன் ஆகியிருக்கலாம். . எனவே இவ்வூர் முற்றுகையின் போது தங்கியிருக்கப் பயன்படுத்தப்பட்ட பாடி வீடாக இருந்திருக்க வேண்டும் என்று  கொள்ளலாம்.





இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் சித்திரைப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. இப்பதிவில்  முதல் நாள் காலை கொடியேற்றத்தின் சில காட்சிகள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. இனி வரும் பதிவுகளில் மற்ற திருநாட்களின் காட்சிகள் இடம் பெறும் வந்து தரிசியுங்கள்.

4 comments:

கோமதி அரசு said...

சித்திரைத் பெருவிழாக்கள் தொடர வாழ்த்துக்கள்.
தரிசனம் செய்தேன்.
விவரங்கள் அறிந்தேன்.
அருமையான பதிவு.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்களும் சிறப்பான தகவல்களும்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அரசு அம்மா.

S.Muruganandam said...

மிக்க நன்றி வெங்கட் ஐயா.