Wednesday, May 27, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 6

முக்தி நாதர் தரிசனம்

முக்திநாதர் ஆலய வளாகத்தின் நுழைவு வாயில்
(கருடனும் நாக கன்னிகைகளும்)

முக்திநாதர் ஆலயம் மிகப்பெரிய வளாகம் ஆகும். இந்து மற்றும் பௌத்த அம்சங்கள் இணைந்த பல சன்னிதிகள் இவ்வளாகத்தில் உள்ளன. ஆலய வளாகத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அலங்கார வளைவில் கருடனும் நாக கன்னிகைகளும் முக்திநாதரை சேவிக்க வரும் நம்மை வரவேற்கின்றனர். 


முக்திநாதர் ஆலய வளாக வரைபடம்

அருகில் மூன்று   பெரிய பிரார்த்தனை உருளைகள் உள்ளன. இந்த உருளைகளின் உள்ளே மந்திரங்கள் எழுதிய காகிதங்கள் வைத்துள்ளனர். நாம் அந்த உருளைகளை சுற்றும் போது அவ்வளவு மந்திரங்களை ஜபித்த பலனை நாம் பெறுகின்றோம் என்பது இவர்கள் ஐதீகம்.



நுழைவு வாயில் அருகே உள்ள பிரார்த்தணை உருளைகள்
(அருகே உயர்ந்த மதில் சுவரைக் காணலாம்)

நுழைவு வாயிலைத் தாண்டியவுடன் சாங்தோ புத்தவிகாரம் அமைந்துள்ளது. இவ்விகாரத்தில் புத்தர்,  அவலோகிதேஸ்வரர் மற்றும் திபெத்திற்கு புத்தமதத்தை கொணர்ந்த பத்மசம்பவரும் அருள் பாலிக்கின்றனர். முக்திநாத்தின் லாமாக்களும், இங்கு பூசை செய்கின்ற  புத்த பிக்குணிகளும் இதன் அருகில் உள்ள கட்டிடத்தில்  தங்குகின்றனர். 



விஷ்ணு பாதம் - சுவாமி நாராயண்
( இவரது பக்தர்கள்தான் மதில் சுவரை எழுப்பினார்களாம்)


அடுத்து இடப்பக்கத்தில்   சுவாமி நராயண் என்று தற்போது அழைக்கப்படும் சுவாமிகளின் நினைவிடம் உள்ளது அதில் விஷ்ணு பாதம் அமைத்துள்ளனர். இவர் தனது பதினோராவது வயதில் முக்திநாத் வந்து சில காலம் இங்கு கடுமையான தவத்தில் இருந்து சித்தி பெற்றார். பின்னர் சபீஜ் யோகத்தை உலகெங்கும் பரப்பினார். இவ்வாலயத்தின் இப்போதுள்ள  சுற்று மதிலை இவரின் சீடர்கள்தான் கட்டினார்களாம். 


யக்ஞ சாலை - திருமங்கையாழ்வார் பாசுரங்கள்


அடுத்து யக்ஞசாலை அமைந்துள்ளது. அதன் முகப்பில் திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் எழுதிய  பலகை வைத்துள்ளனர். இமயமலையில் இவ்வளவு உயரத்தில் தமிழ் படித்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.
சிவ பார்வதி சன்னதி - பெரிய சாளக்கிராமம்


அடுத்து நாம் சேவிப்பது சிவபார்வதி சந்நிதி. நடுநாயகமாக இரண்டடுக்கு பகோடா அமைப்பில்   பெரிய சிவன் சன்னதியும் அதன் நான்கு திசைகளிலும் சிறிய இராமர், கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் கணேசர்களுக்கு சிறு சன்னதிகள் என்றபடி பஞ்சாயதன அமைப்பில் அமைந்துள்ளது. சிவபார்வதி பளிங்குச்சிலை பெரிய சாளக்கிராமம் ஒன்றும் சன்னதியில் உள்ளது. சிவபெருமானுக்கு எதிரே சிறு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புத்தமத கலப்பில்லாமல் இந்த வளாகத்தில்  முழுதும் இந்து கோவிலாக அமைந்துள்ள சந்நிதி இது ஒன்றுதான். சிவபார்வதியை வணங்கிவிட்டு முக்கிய மைய  சன்னதியை நோக்கி சென்றோம். இருபுறமும் பெரிய மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்பது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும். பொதுவாக இந்த உயரத்தில் (3750 மீ) மரங்கள் வளராது. வளாகத்திற்ககுள் சிறு ஆறு ஒடுகின்றது.



முக்திநாதர் சன்னதி

ஒரு முன் மண்டபம் ஒரு பிரகாரத்துடன் மூன்றடுக்கு பகோடா அமைப்பு




இந்த ஆலயத்தை நேபாள அரசர் ஷா ராணா பகதூரின் பட்டமகிஷி சுவர்ணா பிரபா தனது கனவில் வந்து முக்திநாதர் கட்டளையிட்டபடி 1815ல்  கட்டி முடித்தார்.  நேபாளக் கோவில்களைப்போலவே மூன்றடுக்கு பகோடா அமைப்பில் எழிலாக அமைந்துள்ளது முக்திநாதர் ஆலயம். ஆலயத்திற்கு முன் புறம் இரண்டு குளங்கள் புண்ணிய-பாவ குளங்கள் உள்ளன.

புண்ணிய பாவ குளங்கள்

அரை வட்ட  வடிவில்    108 நீர் தாரைகள்

கோ முகத்து ஓர்  நீர் தாரை

 கோவிலைச் சுற்றி அரை வட்ட வடிவத்தில் 108  நீர் தாரைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. பக்தர்கள் இந்த 108 தாரைகளில் நீராடி பின்னர் இரு குளங்களிலும் முழுகி எழுந்து உடல் தூய்மையான பின் முக்திநாதரை சேவிக்க செல்கின்றனர். இந்துக்களுக்கு இந்த 108 தாரைகள் 108  திவ்ய தேசங்களை குறிக்கின்றது. பௌத்தர்கள் பத்ம சம்பவருடன் வந்த  84  சித்தர்கள் உருவாக்கிய புனித தாரைகள் இவை என்று நம்புகின்றனர். இந்த புனித நீரானது மானசரோவரின் தீர்த்தம் என்றும், வரும் காலத்தில் பாவம் செய்தவர்கள் பாவத்திலிருந்து விடுபட இந்த தீர்த்தங்களை அவர்கள் ஆசீர்வதித்து சென்றுள்ளனர் என்பதும் இவர்கள் ஐதீகம். எனவே இந்த 108  தாரைகளில் நீராட ஒருவரது கன்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.   தண்ணீர் விழும் தாரைகள் பசு முகம் போல உள்ளன, முதல் மற்றும் கடை தாரைகள் மட்டும் ட்ரேகன் போல உள்ளன. சங்பா ரின்போசே அவர்கள் இவைகளை அமைத்தாராம். மிகவும் குளிர்ந்த தண்ணீர்தான் இவைகளில் இருந்து வருகின்றன மேலும் எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் பாசமும் பிடித்துள்ளது. கவனமாக நீராடவும். பாதுகாப்பிற்காக  தடுப்புக் கம்பி வளையம் அமைத்துள்ளனர் அதை பிடித்துக்கொள்ளலாம்.  முதல் தாரையில் கீழ் வந்த உடனே அந்த சீதள நீரினால் உடல் சில்லிட்டு விட்டத. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக்கொண்டே ( முதல் பாசுரத்திலிலேயே மார்கழி நீராடத்தானே அழைக்கின்றாள் கோதை)  அவசர அவசரமாக மற்ற தாரைகளில் தலையை நனைத்துக்கொண்டே ஓடினோம். பாவக்குளத்தில் இறங்கியவுடன் உடல் அப்படியே உறைந்து விட்டது போல உணர்ந்தோம், அவசர அவசரமாக வெளியே வந்து புண்ணிய குளத்தில் மூழ்கி நீராடினோம். இரண்டும் நீங்கப்பெற்றோம். வெளியே வந்து தலை துவட்டி புது ஆடை அணிந்தவுடன் புது ஜென்மம் பெற்றது போல புத்துணர்வு பெற்றோம்.  வாருங்கள் இனி முக்திநாதரை சேவிப்போம்.

முன் மண்டபக் கதவின் ஒரு அருமையான சிற்பம்

முன் மண்டபத்தின் கதவில் அருமையான சிற்பங்கள் மற்றும் அருமையான மரவேலைப்பாடுகள் அமைந்துள்ளன. ஒரே பிரகாரம் சுற்றி வந்து முக்தி நாதரின் எதிரே நின்றோம்.
முக்தி நல்கும் ஸ்ரீமூர்த்தி


முக்தி நாராயணரின் திருமுக மண்டலம்

புத்தர் - நர நாராயணர்          

இராமானுஜர், விநாயகர், பத்மசம்பவர், கருடன்

பெரிய திருவடி
அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் முக்தி நாதர். அப்படியே நம்முடன் பேசுவது போல உள்ளது பெருமாளின் திருவழகு. பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களின் திருமேனிகள் செப்பு சுயம்பு திருமேனியாகும். அந்த ஆரவமுதை அப்படியே பருகினோம். கண்ணீர் மல்க அப்படியே நின்றோம்  நேரம் சென்றதே தெரியவில்லை. முதலில்
சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து உன்
பொற்றாமறையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றமேய்துண்ணூம் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளமல் போகாது
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்  பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்  என்று சரணாகதி செய்தோம். கண் குளிர சேவித்தோம் மனம் குளிர நன்றி கூறினோம்.

ஒரு வகையில் பார்த்தால் முக்திநாதர் தரிசனம் மிகவும் துர்லபமானது, வானிலை, உடல் நலம், நிலசரிவுகள், விமானப்பயணம் என்று ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் இங்கு வரமுடியாது, பெருமாளின் அருள் பூரணமாக இருந்தால் தான் நாம் இங்கு வரவே முடியும் அதற்கு அவருக்கு நன்றி செலுத்தினோம்.


விஷ்ணு சகஸ்ரநாமம் சேவிக்கின்றோம்

முன்பே கூறியது போல நேபாள நாட்டில் மஹா விஷ்ணுவிற்கும் புத்தருக்கும் இடையே  இவர்கள் வேறுபாடு காண்பதில்லை. முக்தி நாதர் நமக்கு பெருமாள், புத்தர்களுக்கு அவலோகிதேஸ்வரர், ஆதி சேஷன் குடைபிடித்து, பிரபையாகவும் விளங்க, வெள்ளி கிரீடம், காதுகளில் குண்டலங்கள், பட்டுப்பீதாம்பரம், முத்துமாலைகள் என்று அற்புதமான அலங்காரத்தில்  தாமரை  மலரில் பத்மாசனத்தில்  அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் முக்தி அளிக்கும் பெருமாளை திவ்யமாக  சேவிக்கின்றோம்.  நாம் உபய நாச்சியார்கள் என்று வணங்கும் தாயார்கள் இருவரும்  சாமரம் வீசும் பாணியில் நின்ற கோலத்தில் எழிலாக  சேவை சாதிக்கின்றனர். புத்தர்கள்  தாயார்களை டாகினிகள் என்று வணங்குகின்றனர். மேலும் புத்தர், நர நாராயணர்கள் (சிலர் லவ குசர்கள் என்கின்றனர்), இராமானுஜர், கணேசர், அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடன் ஆகிய மூர்த்திகளும் சேவை சாதிக்கின்றனர். பெருமாளுக்கும், உபய நாச்சியார்களுக்கும், கருடன், இராமனுஜர் ஆகியோருக்கு  திருமண் அழகு சேர்க்கின்றது. மேலும் பெரிய நரசிம்ம சாளக்கிராமமும் உள்ளது. புத்த சந்நியாசிநிகள் தீர்த்தப்பிரசாதம், சடாரி சாதிக்கின்றனர்.  பெருமாளின் திருமூக்கு சிறிது வித்தியாசமாக பட்டது, காரணம் பின்னால் தெரிய வந்தது முற்காலத்தில் நாம் கர்ப்பகிரகத்தின் உள்ளேயே சென்று  பெருமாளை ஆலிங்கனம் செய்ய முடியுமாம். 2004 முதல் அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டனராம். 

இங்கு வந்து சேவித்த அருளாளர்களில் திருமங்கையாழ்வாரையும் இராமனுஜரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். விசிஷ்டாத்வைத்தை நிலை நாட்டிய இராமானுஜர் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் ஆண்டாள் மற்றும் மணவாள மாமுனிகளுடன்   பிரகாரத்தில் உள்ள யக்ஞ சாலையிலும் எழுந்தருளியுள்ளார்.     விமானம்  வாகனங்கள் என பல வசதிகள் மிக்க இந்த காலத்திலேயே சாளக்கிராமத்தை தரிசிக்க  நாம் பெரும் பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இவர்கள்  எவ்வாறு  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்  எப்படி இங்கு வந்து, பெருமாளை தரிசனம் செய்து, மங்களாசாசனமாக பாசுரங்களை இயற்றினார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  


யாக சாலையில் யாகம்

திருமங்கையாழ்வார்  சாளகிராமத்தை பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இவற்றில் கடைசி பாசுரம் தவிர மற்றவற்றில் எல்லாம், சாளக்கிராமம் அடை நெஞ்சே என்று சொல்லி முடிக்கிறார் ஆழ்வார். சாளக்கிராமத்தை அடைவது அத்தனைக் கடினமானது என்று மறைமுகமாக உணர்த்தினாலும், அந்த சிரமம் தெரியாமலிருக்க, இராம, கிருஷ்ண காலத்துச் சம்பவங்களைச் சொல்லி, ‘அந்தப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் சாளக்கிராமத்தை அடைவாயாகஎன்று  நமக்கு அறிவுறுத்துகின்றார்.  நம்முடைய பயணச் சோர்வை நீக்க முயன்றிருக்கிறார் நம் கலியன்.  மேலும்  திருவூரகத்தானையும், குடந்தை உத்தமனாம் சார்ங்கபாணியையும், திருப்பேர்நகர் எம்பெருமானையும் குறிப்பிட்டு அந்தப் பெருமாள்களைப் போல பல பெருமாள்களைத் தரிசித்திருக்கிறீர்களே, அதேபோல இந்த ஸ்ரீமூர்த்திப் பெருமாளையும் தரிசிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தாற் போலவும் பாசுரங்களை அமைத்திருக்கிறார் என்பது சிறப்பு

தாராரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆரார் உலகத்து அறிவு உடையார் அமரர் நல்நாட்டு அரசு ஆளப்
பேராயிரமும்  ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே  என்று ஆழ்வார் பாடியபடி பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களால் பெருமாளை போற்றினோம், ஆழ்வாரின் பாசுரங்களையும் சேவித்தோம் (பிதற்றினோம்). ஆழ்வார்களின் பாசுரங்களையும் சேவித்தோம்.  
யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள்


சந்நிதிக்கு எதிரே யாக சாலை அதில் குழுவினர் சார்பாக யாகம் நடத்தினோம். இந்த யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் மூர்த்தங்கள் உள்ளன. சின்ன ஜீயர் சுவாமிகள் இந்த மூர்த்தங்களை இங்கு பிரதிஷ்டை செய்தாராம்..

மேலும் இரண்டு புத்தவிகாரங்களை நாம் முக்திநாத்தில் தரிசிக்கலாம். முதலாவது நரசிங்க கோம்பா. இந்த சன்னதி முக்திநாதர் சன்னதியை விட   சிறிது உயரத்தில் வளாகத்தின்  வடக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த புத்தவிகாரத்தில் பத்மசம்பவர் தன்னைப்போலவே உருவாக்கிய சிலை அமைந்துள்ளது. அடுத்து நாம் தரிசிக்கும் புத்த விகாரத்தில் ஒரு ஜுவாலை எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது எனவே இது “ஜ்வாலாமாயி” என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த புத்தவிகாரம் வளாகத்தின்  தெற்கு மூலையில் அமைந்துள்ளது  மெபர் லகாங் கோம்பா (Mebar Lakhang Gompa) என்றும் அழைக்கப்படுகின்றது



அணையாது எரிந்து கொண்டிருக்கும் ஜுவாலை( நீல நிறம்)

 இந்த முக்திநாத் தலத்தை பராமரிக்கும்  “லாமா  வாங்யால்”  புத்த பிக்குணிகள் இங்குதான் தங்களது புனித நூல்களை கற்கின்றனர். இங்கு தண்ணீரில் நீல நிறத்தில் எப்போதும் ஒரு ஜ்வாலை எரிந்து கொண்டிருக்கின்றது. ஜ்வாலையை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தால்  அந்த ஜுவாலை எரியும் நீர் சேரும் “துர்கா  குண்டத்தை” தரிசிக்கலாம். இவ்வாறு நீர், நிலம், அக்னி, காற்று வாயு என்று பஞ்ச பூத சம்பந்தமும் பெற்றுள்ளது முக்திநாத் தலம்.  இவ்வாறு முக்திநாதர் சேவை  அருமையாக அமைந்தது பின்னர் இரு சக்கர வண்டிகள் மூலம் அனைவரும் கீழே கிராமத்தை வந்தடைந்தோம்

4 comments:

ப.கந்தசாமி said...

அபூர்வ தரிசனம் வாய்க்கப் பெற்ற தாங்கள் புண்ணியம் செய்தவர்.

ஓதியரசு said...

அருமை சிறப்பான அருட்கட்சிகள் - எம்மை நேரிடையாக அழைத்துச்சென்றமைக்கு வணக்கங்கள் அய்யனே

S.Muruganandam said...

வணக்கம் கந்தசாமி ஐயா. அவனருளால் அவன் தாள் வணங்கும் வாய்ப்பு கிட்டுகின்றது ஐயா.அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள்.

இந்த வருட நிலநடுக்கத்தினால் மிகவும் சேதம் ஏற்பட்டுள்ளது. கண்டகி நதியும் நிலச்சரிவினால் அடைபட்டுள்ளது. அது உடைந்தால் சேதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இனி முன் போல முக்திநாத் செல்ல முடியுமா? என்று தெரியவில்லை. அந்த முக்திநாதரிடம் நிலைமை சரியாக வேண்டுவோம்.

S.Muruganandam said...

வாருங்கள் ராசு ஐயா. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.