எந்த ஒரு இந்திய நகரத்தையும் போல காத்மாண்டு நகரிலும் சரியான
போக்குவரத்து நெரிசல், நகரை விட்டு வெளியே வரவே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு
மேல் ஆனது. திரிபுரேஸ்வரர் ஆலயத்திற்கருகில் பிருத்வி நெடுஞ்சாலையை அடைந்தோம். இந்த நெடுஞ்சாலை போக்ரா வழியாக இந்திய எல்லை நகரமான கோரக்பூர் வரை செல்லுகின்றது. இங்கிருந்து ஒரு அருமையான பயணம் தொடங்கியது. இரு வழிப்பாதை திரிசூலி நதியின் கரையோரம் இப்பாதையை அமைத்துள்ளனர்.
இரு புறமும் நெடிதுயர்ந்த மலைகள் பச்சை போர்வை போர்த்துக்கொண்டு எழிலாக காட்சி தருகின்றன. முடிந்த வரை உச்சி
வரைக்கும் அடுக்குப்பாசனம் செய்ய ஏதுவாக தோட்டம் அமைத்துள்ளனர். வாழை,
மக்காச்சோளம், நெல் எல்லாம் பயிரிடப்படுகின்றன. பாதை முழுவதும் வீடுகள், கடைகள்,
தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் என்று நிறைந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கான சிற்றாறுகள் அவற்றின் குறுக்கே பாலங்கள்
அமைத்துள்ளனர். பார்ப்பதற்கு உத்தராகாண்ட் மாநிலம் போலவே உள்ளது. வீடுகள்
அனைத்தும் அதே போல மூன்றடுக்காக அமைத்துள்ளனர். ஆனால் வீடுகளை ஆற்றின் பக்கம்
கட்டாமல் மலையின் பக்கம் கட்டியுள்ளனர். பல
வீடுகளில் கூரையில் சாய்ந்த பகோடா அமைப்பில் சிறு பூஜை அறை அமைத்துள்ளனர் என்பதை
கவனித்தோம். நாங்கள் பயணம் செய்தது நமது
புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால்
சிறப்பாக பல கிராமங்களில் "விஸ்வகர்மா பூஜை" சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. பாதை நெளிந்து நெளிந்து ஏற்றமும்
இறக்கமுமாக சென்றது. போக்குவரத்தும் அதிகமாகவே இருந்தது. இடையில் மலேகூ என்ற ஒர் இடத்தில் மதிய உணவு அருந்தினோம்.
இவ்வாறு நான்கு மணி நேரம் பயணம் செய்து மனோகாம்னா என்னும் ஊரை அடைந்தோம். வாருங்கள் இவ்வூரில் கோவில் கொண்டுள்ள பகவதி பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் மனோகாம்னா அன்னையை தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு நான்கு மணி நேரம் பயணம் செய்து மனோகாம்னா என்னும் ஊரை அடைந்தோம். வாருங்கள் இவ்வூரில் கோவில் கொண்டுள்ள பகவதி பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் மனோகாம்னா அன்னையை தரிசனம் செய்யலாம்.
(2015ன் நில நடுக்கத்தில் இந்த பாதை சேதம் அடைந்துள்ளது. நில நடுக்கத்தினால் மிகவும் துன்பம் அடைந்துள்ளனர், அவர்கள் இயல்பு வாழ்விற்கு திரும்ப முடிந்த உதவிகளை செய்ய தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்)
இக்கோவிலுக்கு நாம் இழுவை வண்டி (Rope way) மூலமாக செல்ல
வேண்டும் என்பது ஒரு சிறப்பு. திரிசூலி
ஆறு மற்றும் இரண்டு மலைத்தொடர்களை தாண்டி சுமார்
2.8 கி.மீ தூரம் இழுவை வண்டியில் பயணம் செய்தே இக்கோவிலை அடைய முடியும்.
மூன்று அடுக்காக அமைந்துள்ளது இந்த தொடர். முதலில் 1 கி.மீ உயரமான ஒரு ஏற்றம் திரிசூலி நதியைக் கடக்கின்றோம்.
மேலிருந்து அமைதியாக பாயும் நதியைப் பார்ப்பதுவே ஒரு ஆனந்தம் பலர் நதியில்
படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு பல கிராமங்களையும் அடுக்கு பாசன மலைகளையும் இரசித்துக்கொண்டே பயணம் செய்த பிறகு இறுதியில் இனி ஒரு ஏற்றம் மனோகாம்னா தேவி ஆலயத்தின் அடிவாரத்தை அடைகின்றோம். அங்கிருந்து ஆலயத்தை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். பாதையின் இரு புறமும் கடைகள் பல்வேறு கலைப்பொருட்கள், ஒவியங்கள் விற்கின்றனர். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு நினைவுப்பொருள் வாங்கினர். கோயிலின் நுழைவில் அருமையான பூங்கா உள்ளது.
இழுவை வண்டியில் மேலே இருந்து திரிசூலி நதியின் அழகான காட்சிகள்
ஆற்றில் செல்லும் படகுகள் சிறு புள்ளி போல தோன்றுகின்றன
பின்னர் இன்னொரு மலையைத் தாண்டிய பின் சம
அளவில் பயணம் செய்கின்றோம். பல கிராமங்கள்
மலைகளில் அமைந்துள்ளன. கூரைகளுக்கெல்லாம் கத்திரிப்பூ வர்ணம் பூசியுள்ளனர்.
கூர்ந்து கவனித்தபோது அது NCELL எனப்படும் நேபாளத்தின் ஒரு தொலைத்தொடர்பு
நிறுவனத்தினர் தங்களது விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்று
புரிந்தது. ஐரோப்பியர்கள் இந்த
கிராமங்களில் வந்து தங்கி இவர்களுடன் தங்கி இப்பகுதியின் சிறப்பான தக்காளி (Takali - நம்முடைய
தக்காளிப்பழம் அல்ல ) அதாவது ஒரு வகை
சிறப்பு அசைவ சமையலை இரசித்து சாப்பிட்டு செல்கின்றனராம். மேலும் இக்கிராமங்களில் விளையும்
ஆரஞ்சுப்பழங்கள் மிகவும் சுவைக்காக பேர் போனவை.
சுவைக்கு பேர் போன ஆரஞ்சுகள்
இவ்வாறு பல கிராமங்களையும் அடுக்கு பாசன மலைகளையும் இரசித்துக்கொண்டே பயணம் செய்த பிறகு இறுதியில் இனி ஒரு ஏற்றம் மனோகாம்னா தேவி ஆலயத்தின் அடிவாரத்தை அடைகின்றோம். அங்கிருந்து ஆலயத்தை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். பாதையின் இரு புறமும் கடைகள் பல்வேறு கலைப்பொருட்கள், ஒவியங்கள் விற்கின்றனர். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு நினைவுப்பொருள் வாங்கினர். கோயிலின் நுழைவில் அருமையான பூங்கா உள்ளது.
ஆலயத்தின் அருகில் ஒரு பழைய கட்டிடம்
இழுவை வண்டியில் சுகமான ஒரு பயணம்
நேபாளத்தின் இந்த சுயம்பு அம்மன் கோவில்
மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மனோகாம்னா என்றால்
மனதில் நினைக்கும் அனைத்து விருப்பங்களையும் அதாவது பக்தர்களின் வேண்டுதல்களை
நிறைவேற்றி வைக்கும் அன்னை என்று பொருள். அன்னை பார்வதி விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் பகவதியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இரண்டடுக்கு பகோடா அமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. கருடன் நம்மை வரவேற்கின்றார் மற்றும் வழியனுப்புகிறார்.
ஆலய முகப்பில் உள்ள ஒரு செயற்கை அருவி
இரண்டடுக்கு பகோடா அமைப்பு மனோகாம்னா தேவி ஆலயம்
ஆலயத்தின் அருகில் ஒரு பிரம்மாண்டமான மரம்
கோபுரத்தில் இருந்து தொங்கும் பட்டைகள் என்ன என்று வினவிய போது அம்மனுக்கு பக்தர்கள் அர்ப்பணம் செய்த நெற்றிச் சுட்டி என்று பதில் கிட்டியது. நேபாளத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் நாம் காணலாம். தாந்த்ரீக முறைப்படி பூஜைகள் நடைபெறுவதால் இன்றும் மிருகங்கள் பலியிடப்படுகின்றது. இழுவை வண்டிகளில் பொருட்கள் மற்றும் மிருகங்களை மேலே கொண்டு செல்லவும் தனி வண்டிகள் உள்ளன.
இழுவை வண்டி நிலையத்திலிருந்து ஆலயத்திற்கு செல்ல சிறிது தூரம் மலை ஏறி செல்ல வேண்டும். பாதையின் இரு புறமும் கடைகள், நேபாளத்தின் பல கலைப்பொருட்களை வாங்கலாம். மெல்ல மெல்ல கடைகளில் உள்ள கலைப்பொருட்களை இரசித்துக்கொண்டே மலை ஏறி ஆலயத்தை அடைந்தோம்.
இத்தலத்தின் வரலாறு இவ்வாறு கூறப்படுகின்றது. இராம் ஷா என்ற
கூர்க்கா அரசனின் பட்டத்தரசியாக அம்பாள் வந்து அவதரித்தாள். இந்த இரகசியம்
அம்மனின் பக்தரான லக்கன் தாபா என்பவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒரு நாள்
அரசன் இராணியை அம்பாளாக சுய ரூபத்தில் பார்த்தவுடன் இறந்து விடுகின்றார். அவ்வூர்
வழக்கபப்டி இராணியும் உடன்கட்டை ஏறுகின்றாள். பின்னர் லகன்தாபா வேண்டிக்கொண்டபடி
ஆறுமாதங்கள் கழித்து அம்மன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள். தந்தோஜ் தாபா என்ற குடியானவர் நிலத்தை உழும்
போது இரத்தமும் பாலும் வெளி வந்தது. லகன்
தாபா அங்கு வந்து தாந்திரீக முறையில் பூஜை செய்ய இரண்டும் நின்றது. தற்போதைய
பூசாரி இவரது 21வது தலைமுறையினர் ஆகும். தினமும் காலையில் தாந்திரீக முறைப்படி
முட்டை ஆரஞ்சுப்பழம், அரிசி, குங்குமம், சுன்ரி ( சிவப்புத் துணி) படைத்து வழிபாடு
செய்த பின் பக்தர்களை அனுமதிக்கின்றனர்.
தரிசனம் முடித்தபின் மற்றவர்களுக்காக காத்திருக்கின்றோம்
நேபாளக்கோவில்களைப் போலவே மலை உச்சியில் இரண்டடுக்கு பகோடா
அமைப்பில் அமைந்துள்ளது இவ்வாலயம். நேபாளக்கோவில்களைப் போலவே மலை உச்சியில்
இரண்டடுக்கு பகோடா அமைப்பில் அமைந்துள்ளது கோவில். தங்க முலாம் பூசப்பட்டுள்ளது சன்னல்கள்
மற்றும் கூரைகளைத் தாங்கும் மர சட்டங்களில் அருமையான வேலைப்பாடுகளை இங்கும் காணலாம்.
ஒரு பிரகாரம் சுற்றி வந்து கர்ப்பகிரகத்திற்குள் நுழைகிறோம். அம்மன் மலை சிகரமாக சுயம்புவாக
அருள் பாலிக்கின்றாள். கருவறையில் மனோகாம்னா தேவியுடன் விநாயகர், பைரவர், துர்கா, கன்யாகுமரி
மற்றும் சப்த மாதர்களும் சுயம்பு வடிவில் அருள் பாலிக்கின்றனர். மேலே சிலைகளாகவும்
அமைத்துள்ளனர் பூசாரி வரும் பக்தர்களுக்கு திலகமிட்டு அனுப்புகிறார். நாம் அன்னையை
தொட்டு வணங்க முடியும்.
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி |
தன்னோ துர்கி பிரசோதயாத் ||
என்று அம்மனை வணங்கி
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும், முக்திநாத் யாத்திரையும் எந்த சிரமமும்
இல்லாமல் முடிய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு வந்தோம். நவராத்திரி இங்கு
மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
பின்னர் இழுவை இரயில் மூலம் இயற்கை அழகை இரசித்துக்கொண்டே கீழே வந்து போக்ரா
நோக்கி பயணம் செய்தோம், வழியில் சூரியன் மறையும் அந்தி நேரம் என்பதால் அன்னபூர்ணா
சிகரங்கள் பொன் மயமாக ஒளிரும் அழகை இரசித்துக்கொண்டே போக்ரா அடைந்து அங்கு
தங்கினோம்.
2 comments:
நல்ல வர்ணனை. ரசித்தேன்.
வாருங்கள் கந்தசாமி ஐயா, முக்திநாதரின் திவ்ய தரிசனம் பெறுங்கள்.
Post a Comment