Sunday, November 3, 2013

கந்தன் கருணை பொழியும் திருச்செந்தூர்


 செந்திலாண்டவன் மேலை  இராஜ கோபுரம்

அண்மையில் ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருட சேவையை சேவிக்க சென்ற போது திருச்செந்தூரில் செந்திலாண்டவனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது.  இந்த கந்தர் சஷ்டி சமயத்தில்  அவரின் தங்கத் தேர் பவனியை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. 

மூலவர் கிழக்கு நோக்கி  நின்ற கோலத்தில் தலையில் ஜடா மகுடமும் வல  மேல் கரத்தில்  வஜ்ராயுதமும் கீழ் கரத்தில் அர்ச்சனை செய்யும் தாமரையும்  இட மேல் கரத்தில்   ருத்திராக்ஷ  மாலையும் இடகீழ்க்கரம் கடி ஹஸ்தமாகவும் விளங்க பால சுப்பிரமணியராக சிவ பூஜை செய்யும் கோலத்தில்  அருள் வழங்குகின்றார்.   

மேலே தாங்கள் காண்கின்ற இராஜ கோபுரம் மேற்கில் உள்ளது. மூலவர் கிழக்கே கடலை நோக்கி உள்ளார். எனவே இதன் கதவு எப்போதும் பூட்டப்பட்டே இருக்கும். கந்தர் சஷ்டி ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு, ஏழாம் நாள் தெய்வயாணை திருமணத்தின் போது நள்ளிரவில் மட்டுமே இக்கதவு திறக்கப்படுகின்றது. அப்போதும் பக்தர்கள் யாரும் இவ்வழியாக செல்ல அனுமதிப்பதில்லை. 


கந்தனின் ஆறு படை வீடுகளில் இது இரண்டாவது படை வீடு. சூரபத்மனுடன் போரிட  தேவர் படையுடன் பால முருகன் வந்து அமர்ந்த தலம். சூரனை சம்ஹாரம் செய்து ஆணவமாம் அவனை ஞான வேலால் பிளந்து மயிலாகவும் சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் கொண்டு சூரனுக்கு பெருவாழ்வளித்து ஜயந்தி நாதராக நின்ற தலம்.  எனவே  இங்கு கந்தர் சஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்றைய தினம் கடல் உள்வாங்கும் அதிசயம் நடைபெறும் தலம். சுனாமியின் போதும் மற்ற இடங்களில் கடல் பொங்கி வர இங்கு மட்டும் கடல் உள் வாங்கியது எனவே இவர் சுனாமியை வென்ற சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகின்றார். வியாழ குருவும் தேவர்களும் பூஜித்த தலம்.

சூரனைக் கொன்ற பாவம் தீர சிவ பூஜை செய்த தலம். முருகர் பூஜித்த லிங்கம் செந்திலாண்டவனுக்கு பின் புறம் உள்ளது.  கடற்கரையில் அமைந்ததால் நற்சீரலைவாய் என்னும் பெயர் பெற்ற தலம். வீரபாகு தூது சென்றதால் வீரபாகு பட்டிணம் என்றும் அழைக்கப்படுகின்றது.  

இத்தலத்தில் முருகர் ஞானகுருவாக அருள் பாலிக்கின்றார். அசுரர்களை அழ்ப்பதற்கு முன்பு  குருபகவான் முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை இத்தலத்தில் கூறினார் எனவே இது குருத்தலம் ஆகும். 

 சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அவன் அம்சமாகவே பிறந்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் முருகப்பெருமான். பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்தவர். மஹா விஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். இவ்வாறு மும்மூர்த்திகளின் சம்பந்தம் கொண்டு திகழ்பவர்.  எனவே ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக அருட்காட்சி தந்தருளுகிறார். விழாவின் ஏழாம் நாள் மாலை ஆறுமுக நயினார்  பல்லக்கில் சிவப்பு சார்த்தி சிவ அம்சமாக அருட்காட்சி தருகின்றார் முன்பக்கம் முருகராகவும், பின் பக்கம் நடராசராகவும் அலங்காரம் செய்கின்றனர். மறு நாள் காலை வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சார்த்தி பிரம்மன் அம்சமாக  அருளுகின்றார்.  அன்று மதியம் அவரே பச்சை சார்த்தி விஷ்ணு அம்சமாக அருளுகின்றார்.  

 இத்திருக்கோவிலில் நான்கு உற்சவர்கள்.  தாங்கள் இப்பதிவில் காணும் அறுபடை வீட்டை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அறுகோண தங்கத் தேரில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் ஜெயந்தி நாதர் ஆவார். இவர் மூலவரைப் போலவே வல மேற்கரத்தில் வஜ்ராயுததுடன் அருள் பாலிக்கிறார்.   குமார விடங்கர் மாப்பிள்ளை சுவாமி சூர சம்ஹாரத்திற்குப் பின் தெய்வயாணையை மணம் புரிந்து அருள்பவர் இவர்.   ஆறுமுக நயினார் என்று பக்தர்களால் அன்புதன் அழைக்கப்படும் சண்முகர் மற்றும் அலைவாய்ப்பெருமாள் ஆகியோரும் அருளுகின்றனர். நால்வரும் தெற்கு நோக்கி தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.  

இந்த சண்முகரை ஒரு சமயம் டச்சுக்காரர்கள் கொள்ளையடித்துக்கொண்டு  கடலில் சென்ற போது புயல் மழை ஏற்பட்டது எனவே பயந்த டச்சுக் கொள்ளையர்கள் சண்முகரை கடலில் போட்டுவிட்டு இலங்கை ஓடி விட்டனர். பின்னர் ஒரு சம்யம் வடமலையப்ப பிள்ளை என்பவர் கனவில் முருகன் வந்து நாளை கடலுக்குள் செல் நான் இருக்கும் இடத்தில் எலுமிச்சம் பழம் மிதக்கும் கருடன் பறக்கும் என்று அருளினார். வடமலையப்பப் பிள்ளை மறு நாள் படகில்  கடலில் செல்ல முருகன் குறிப்பிட்டவாறே கருடன் பறக்க எலுமிச்சம்பழம் மிதந்த இடத்தில் மூழ்க சண்முகருடன் ஒரு நடராஜர் சிலையும் கிடைத்தது. ஆகவே இன்றும் சண்முகர் முகத்தில் உப்பு நீரால் ஏற்பட்ட அரிப்பைக் காணலாம்.     



திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு  ஆகும். சூரபத்மனுக்கு பெரு வாழ்வு அளித்த பின் தன் படை வீரர்களின் தாகம் தணிக்க முருகன் தனது சக்தி வேலால் உருவாக்கியது இந்து நாழிக்கிணறு  ஆகும்.      கடலுக்கு  மிக அருகில் இருந்தும் இன்றும் இக்கிணற்றில் நல்ல தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.  



ஒரு காட்டில் வழி தெரியாமல் நின்ற அருணகிரி நாதரை மயில் உருவில் வழிகாட்டி முருகர் திருச்செந்தூர் அழைத்து வந்தார். அருணகிரி நாதர் முருகனை சிவ வடிவாகவே கண்டார். எனவே முருகர் அருணகிரி நாதருக்கு நடனக் காட்சி காட்டியருளினார். எனவே அருணகிரி நாதர் கயிலை மலையணைய செந்தில் வாழ்வே என்று பாடினார்.   
         
இயலிசையிலுத வஞ்சிக்                                     கயர்வாகி
             இரவுபகல் மனது சந்தித்து                      உழலாதே
உயர் கருணை  புரியும்  இன்பக்                        கடல்மூழ்கி
            உனை எனதுள் அறியும் அன்பைத்      தருவாயே 
மயில் தகர்கலிடைய  ரிந்தத்                             தினைகாவல்
             வசனகுற மகளை வந்தித்(து)               அணைவோனே
கயிலைமலை அனைய செந்திற்                     பதிவாழ்வே
             கரிமுகவன் இளைய கந்தப்                   பெருமாளே!   
             


ஒரு சமயம் அபிநவ குப்தன் என்பவன் சண்மத ஸ்தாபகர் ஆதி சங்கரரின் மேல் அசூயை கொண்டு  அபிசார பிரயோகம் செய்தான் அதனால் ஆதி சங்கரருக்கு தீராத வயிற்றுவலி உண்டானது. ஆச்சார்யர் திருக்கோகர்ணத்தில் இருக்கும் போது " திருச்செந்தில் சென்று முருகனை வழிபட்டால் நோய் தீரும் என்று அசரீரி கூறியது. சங்கரர் கோவிலின் உள்ளே நுழையும் போது பாம்பைக் கண்டார். செந்திலாண்டவனை  வணங்கிய பின் இவரது வயிற்றுவலி நீங்கியது.  எனவே பாம்பு வளைந்து நெளிந்து செல்வதைப் போன்ற சுப்பிரமணிய புஜங்கம் இயற்றினார் ஆதி சங்கரர்.  இந்த கந்தர் சஷ்டி சமயத்தில் சுப்பிரமணிய புஜங்கம் படிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம் மநோஹாரி
தேஹம் மஹச்சித்தகேஹம்   |
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்மஹாதேவ
பாலம் பஜேலோகபாலம்  ||

மயில் வாகனத்தில் ஏறியவறும், மஹா வாக்கியத்தின் உட்பொருளானவரும், அழகு வாய்ந்த தேகமுள்ளவரும் மகான்களின் மனத்தை வீடாகக் கொண்டவரும், பூதேவர்களான வேத வித்துக்களால் உபாஸிக்கப்படுபவரும், உபநிஷத்துக்களின் பொருளும், பரமசிவனின் புத்திரனும் உலகங்களைக் காப்பவருமான தங்களை பூஜிக்கிறேன் என்று மகான்களின் மனத்தில் குடியிருக்கும் வேதப்பொருள் சுப்பிரமணியரை போற்றுகிறார்.

இந்த புஜங்கத்தில் ஒரு பாடலில் ஆச்சார்யர் சண்முகர் சந்நிதியில்  பன்னீர் இலை வைத்து தரப்படும்  விபூதியின்  மகிமையைப் பற்றி பாடியுள்ளார்.

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ஸ:
ப்ரமேஹ-ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:  |
பிஸாசஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம் விலோக்ய
க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே  ||

 பன்னீர் இலை விபூதியை கண்ட மாத்திரத்தில் கைகால் வலிப்பு, காசம், சயம், குஷ்டம், முதலிய நோய்கள் நீங்கும் பூதம் பிசாசம் செய்வினை விலகும்  என்று பாடுகின்றார் ஆதி சங்கரர்.  பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் உள்ளன இவை முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கின்றன. எனவே  முருகனே தன் திருக்கரங்களால் விபூதி வழங்குவதாக ஐதீகம். பன்னீர் இலையின் வடிவமும் வேல் போல இருக்கும். முருகனை வழிபட்ட தேவர்களே பன்னீர் மரங்களாக மாறினர் என்பது ஐதீகம். பன்னீர் இலையில் திருநீறு வைத்திருந்தால் பெரும் ஐஸ்வர்யம் இருப்பதற்கு சமம். 


குமரகுருபரர் ஐந்து   வயது வரையில் வாய்   பேசாமல் இருந்தார்.      அவரது பெற்றோர் அவரை    திருச்செந்தூர்    அழைத்து வந்த   போது கந்தன்   தனது கருணையினால் வேலினால் அவர் நாவில் எழுதி அவனை பேச வைத்தார். அவர் கந்தர் கலி வெண்பாவில் குட்டி கந்த புராணம்  இயற்றினார், மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழும் அவர் இயற்றினார். 


சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால்,பெரு நோயான குஷ்டத்தால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார்.அவ்வயம்,கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத் தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத் தொடங்கினார் அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரமொன்றிலிருந்து ஒரு அரச இலையை விழச் செய்தது.அவ்விலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது .இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.சிவ பூஜை செய்ய மறந்த நக்கீரனை கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்செந்தூரில் உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித் துதித்தும் பயனில்லாததால் ,தம்மை  உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார். நிறைவாக,


"உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரையான் பின் செல்லேன்;பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா!  செந்தில் வாழ்வே! "

என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார்.அவருடன் சிறை வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் நமக்குக் கிடைத்தது.


பகழிக்கூத்தர் என்ற அன்பர் வைணவர் இவருக்கு ஒரு சமயம் தீராத வயிற்றுவலி வந்தது. இவர் கனவில் முருகப்பெருமான் வந்து பிள்ளைத் தமிழ் பாடு உன் வயிற்று வலி நீங்கும் என்று கூற அவரும் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடி தனது வயிற்று வழி நீங்கப்பெற்றார். 



தண்டையணி  வெண்டையங்  கிண்கிணிச  தங்கையுந்
தண்கழல்சி  லம்புடன்    கொஞ்சவேநின்-
தந்தையினை  முன்பரிந்  தின்பவரி  கொண்டுநன்
சந்தொடம  ணைந்து நின்     றன்புபோலக்;   

கண்டுறக டம்புடன் சந்த மகுடங்களுங்                   
கஞ்ச மலர்   செங்கையுஞ்  சிந்துவேலும்- 
கண்களுமு   கங்களுஞ் சந்திரநி  றங்களுங்
கண்குளிர  என்றன்முன்  சந்தியாவோ;

புண்டரிக  ரண்டமுங் கொண்டபகி  ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது-
பொன்கிரியெ னஞ்சிறந்தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர்  தந்தையுஞ்  சிந்தைக்கூரக் ;

கொண்டநட னம்பதஞ்  செந்திலு மென்றன்முன்
கொஞ்சி நட  னஞ்கொளுங்  கந்த வேளே
கொங்கைகுற  மங்கையின்  சந்தமண  முண்டிடுங்
கும்பமுனி  கும்பிடுந்   தம்பிரானே
   


தங்கத்தேரில் ஜெயந்திநாதர்

கடைசி நிமிடத்தில்தான் என் நண்பர் இவ்வாறு திருச்செந்தூரும் செல்கிறேன் என்று கூறினார். அங்கு அருமையாக  தங்கத்தேர் தரிசனம் முதலில் கிட்டியது, நாங்கள் சென்ற சமயம்  மே மாதம் பள்ளி விடுமுறை என்பதால் சரியான கூட்டம். எனவே ஒரு  போலீஸ்காரரை அனுகினோம் சென்னையில் இருந்து வந்திருக்கின்றோம் இந்த நிறுவனத்தில் பணி புரிகின்றோம்  தரிசனத்திற்கு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டோம். கந்தனின் கருணையினால் அபிஷேக சமயத்தில் அழைத்து சென்று அருமையாக தரிசனம் செய்து வைத்தார் .  அது போலவே மறு நாள் காலை நாழிக்கிணற்றில் நீராடும் பாக்கியமும், சண்முகரிடம் பன்னீர் இலை விபூதியும் கிடைத்தது கந்தன் அருளால். . 

முருகன் அருள் முன்னிற்கும்



சென்னை செங்குந்தக் கோட்டம்
சிவசுப்பிரமணீய சுவாமி
கந்தர் சஷ்டி சிறப்பு அலங்காரத்தில்


வண்ண மயில் ஏறும் வடிவேல் அழகா
வள்ளி தெய்வாணையுடன் காட்சிதரும் ஆறுமுகா
பன்னிரு விழிகளிலே  பரிவுடன் ஒரி விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும் சண்முகா.

முத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -5


தங்க குதிரை வாகனம்

கால்கள் கீழே பதியாமல் குதிரை பாய்ந்து வருவது போல அருமையாக அமைத்துள்ளனர். உலா வரும் போது குதிரை ஆடும் போது அப்படியே குதிரை ஓடி வருவது போல தோன்றுகின்றது. அற்புதமான அமைப்பு .


தங்கக் குதிரை வாகனத்தில் சண்டிகேஸ்வரர்



பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர்கள்

நாதஸ்வரம் ,  கேரளாலிருந்து செண்டை மேளம்  , ஆந்திராவிலிருந்து ட்ரம்கள், கர்நாடகாவிலிருந்து யக்ஷ கான குழுவினர், பேண்ட் குழுவினர் என்று பல் வித கலைக் குழுவினர் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். 

வீரபாகு  , அம்மையப்பர்

உடன் விநாயகப் பெருமான்

தாயார்கள், முத்துகுமார சுவாமி பால சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர்


 அனைத்து  மூர்த்திகளும்   ஒரே வரிசையில் தரிசனம்  தருகின்றனர்


அனைத்து மூர்திகளுக்கும் ஏக காலத்தில் தீபாரதனை

ஏக காலத்தில் அனைத்து மூர்த்திகளுக்கும் தீபாரதனை நடைபெற்ற போது வானத்தில் அற்புதமாக வாண வேடிக்கை நடைபெற்றது. அன்று நாளை நடைபெற்ற இந்த  அற்புத உற்சவத்தை முழுமையாக படங்களில் கொண்டுவருவது என்பது மிகவும் கடினம் முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன்.  இது வரை வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.

இன்று முதல் கந்தர் சஷ்டி விரதம் துவங்குகின்றது. 
கந்தன் அருள் அனைவருக்கும் கிட்ட அவர் தாள் இறைஞ்சுகின்றேன். 
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Saturday, November 2, 2013

கேதார கௌரி விரதம்

ஓம் 

திருசிற்றம்பலம் 



இது ஒரு மீள் பதிவு. பொதுவாக விடிய விடிய தீபாவளி விடிந்த பின் அமாவாசையாக இருக்கும்,   ஆனால் இந்த வருடம்  அமாவாசை  இன்று        (02-11-13) இரவு 8.13 மணிக்கு மேல் தான் ஆரம்பமாகின்றது. நாளை இரவு 7.32 வரை அமாவாசை உள்ளது  எனவே நாளை நோன்பு அனுஷ்டிப்பது உத்தமம்.  இப்பதிவில் "அம்மையப்பர் போற்றி"யும் இனைத்துள்ளேன்.

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐப்பசி அமாவாசை நாள்தான் கேதார கௌரி விரத நாள். ஆயினும் எல்லோரும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பது இல்லை என்பதற்கு காரணம், 21 நாட்கள் நியமத்துடன் கடைப் பிடிக்க வேண்டும் என்பதாலோ, தாயாரோ அல்லது மாமியாரோ இந்த விரதத்தை பெண்களுக்கு எடுத்து கொடுத்த பிறகே இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பதாலோ?

கேதார கௌரி விரதம் அம்மை கௌரியே அனுஷ்டித்த விரதம். அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீசுவராக ஆனது இந்த விரத மகிமையினால். இந்த கேதார கௌரி விரதத்தை எப்போது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முதலில் காண்போம். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவசை முடிய மொத்தம் 21 நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. கேதார கௌரி விரத்தின் பிரசாதம் அதிரசம் ஆகும். வெல்லப்பாகு, பச்சரிசி மாவு கலந்து செய்யப்படும் பக்ஷணம் இது . பெண்கள் திருமணம் ஆகி செல்லும் போது இந்த அதிரசத்தை கேதாரீஸ்வரர் பிரசாதமாக கொடுத்து அனுப்பும் வழக்கும் இன்றும் உள்ளது.


கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர் . மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மாங்கல்ய பாக்கியமும், கணவன், மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம்.  தம்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக  வாழும் வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க  வேண்டும். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிர்ச்சினை உள்ளவர்கள் இவ்விரதத்தை  அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபிட்சமான வாழக்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றாகிய விரதமே கேதார கெளரி விரதமாகும். இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு , நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.


திருச்செங்கோடு
அர்த்த்நாரீஸ்வரர் (மூலவர்)

கேதார கௌரி விரதம் தோன்றிய வரலாறு:

ஆதி காலத்தில் ஸ்ரீ கைலாயத்தில் நவரத்தினங்கள் இழைத்த பொன் சிங்காதனத்தில் பால் வெண்ணிறணிந்த பவள மேனியராம் சிவ பெருமானும், பச்சைக் கொடியாம் பார்வதி தேவியும் கமனீயமாய் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும் சமயம் , பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷ’கள், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகந்தர்வர், சித்த வித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதி தினம் வந்து தியாகராஜனாம் பரமசிவனையும் கௌரியையும் பிரதக்ஷிணமாக வந்து நமஸ்காரஞ் செய்து கொண்டு போவார்கள். இப்படியிருக்க ஒரு நாள் ஸமஸ்த தேவர்களும் ரிஷ’களும் வந்து ஈஸ்வரரையும் ஈஸ்வரியையும் பிரதிக்ஷணம் செய்து நமஸ்காரம் செய்து விட்டு செல்லும் போது பிருங்கி என்கிற ரிஷி ஒருவர் மட்டும் கௌரி அம்மனை புரம் தள்ளி ஈஸ்வரரை மட்டும் பிரதக்ஷிணம் செய்து வணங்கி விட்டு ஆனந்தக் கூத்தாடினார். அதனால் கோபம் கொண்ட உமையம்மை அடுத்த நாள் ஐயனுடன் இடைவெளி இல்லாமல் அமர்ந்தார். அப்போது பிருங்கி முனிவர் வண்டு ரூபம் எடுத்து பரம சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். அதனால் மஹா கோபம் கொண்ட பார்வதியம்மன் ஈஸ்வரரை வினவுகின்றாள் பிரபுவே! பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷ’களும், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகாந்தர்வர், சித்த வித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர் கௌதமர் அகஸ்தியர் என சகலரும் நம் இருவரையும் வலம் வந்து வணங்கிக் கொண்டு செல்கின்றனர். ஆனால் இந்த பிருங்கி முனிவர் மட்டும் நம்மை புறம்பாகத் தள்ளி உம்மை மட்டும் நமஸ்கரித்து நிற்கின்றானே ஏன்? என்று கேட்கிறார். அதற்கு பரமசிவன் பர்வதராஜ குமாரியே! பிருங்கிரிஷி பாக்கியத்தை கோரியவனல்ல மோக்ஷத்தைக் கோரியவனான படியால் எம்மை மாத்திரம் பிரதக்ஷிண நமஸ்காரம் செய்தான் என்று சொல்ல பரமேஸ்வரி சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை, மலை மகள், பிருங்கி ரிஷியைப் பார்த்து ஒ! பிருங்கி ரிஷியே , உன் தேகத்திலிருக்கின்ற இரத்தம் மாமிசம் நம்முடைய கூறாச்சுதே! அவைகளை நீ கொடுத்து விடு என்று சொல்ல அப்பொழுது பிருங்கி ரிஷி தன் சரீரத்திலிருந்த இரத்த மாமிசத்தை உதறி எலும்பும் தோலுமாய் நிற்க முடியாமல் அசக்தனாய் நின்றார். அவ்வாறு நின்ற பிருங்கி ரிஷியை பரமேஸ்வரன் பார்த்து " ஏ பிருங்கி ரிஷியே! ஏன் அசக்தனானாய் " என்று வினவ பிருங்கி பரமனை வணங்கி தேவ தேவா, மஹா தேவா, மஹேஸ்வரா, பரமேஸ்வரா! அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் நாம் வணங்கியதால் அம்பிகை கோபம் கொண்டு அடியேனுக்களித்த் தண்டனை இது என்று கூற பரமேஸ்வரர் மனம் இரங்கி பிருங்கிக்கு மூன்றாவது ஒரு காலை கொடுத்தார். அந்தக்காலுடன் பிருங்கி ரிஷி மெல்ல நடந்து தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். நாம் பல் வேறு திருக்கோவில்களில் எலும்பும் தோலுமாய் மூன்று கால்களுடன் பார்க்கும் சிற்பம் இந்த பிருங்கி முனிவர்தான். சென்னை காளிகாம்பாள் திருக்கோவிலில் நடராஜப்பெருமான் சன்னதியில் பிருங்கி முனிவர் சிலை உள்ளது. ஆருத்ரா தரிசனத்தின் போது பிருங்கியைக் கொண்டு ஊடல் உற்சவமும் நடைபெறுகின்றது. ஐயன் அர்த்தநாரீஸ்வரராக சேவை சாதிக்கும் திருச்செங்கோட்டுத்தலத்திலும் பிருங்கி முனிவரைக் காணலாம். சிவசக்தி என்பது ஒன்றே என்பதை வேதம் உணர்ந்த பிருங்கி மஹரிஷி உணர மறந்து விட்டார். ஆகவே இவர் இவ்வாறு அன்னையால் தண்டிக்கப்பட்டார்.

கேதாரீஸ்வரர் ஆவாஹனம்

ஐயனின் செய்கையால் கோபம் கொண்ட மலை மங்கை பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து நீர் என்னை உபேக்ஷை செய்யலாமா? இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயத்தை விடுத்து பூலோகம் வந்தார். அங்கு கௌதம மஹரிஷி சஞ்சரிக்கும் பூங்காவனத்தில் ஒரு விருக்ஷத்தின் அடியில் எழுந்தருளினாள் அம்பிகை. அத்திசையில் பன்னிரண்டு ஆண்டு மழையின்றி விருக்ஷங்கள், செடிகள் உலர்ந்து வாடியிருக்க அம்மை வந்தவுடன் அவையெல்லாம் துளிர்த்துத் தழைத்து புஷ்பித்து காய்த்து பழுத்து இன்னும் அனேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கொங்கு, இருவாக்ஷ’, மந்தாரை, பாரிஜாதம், சண்பகம், சிறு முல்லை, புன்னை, பாதிரி, வில்வம், பத்திரி, துளசி மற்றுமுண்டான சகல ஜாதி புஷ்பங்களும் விஸ்தாரமாய் மலர்ந்து அந்த நறுமணம் நாலு யோஜனை தூரம் பரவிற்று. அந்த சமயத்தில் கௌதம ரிஷி தம் பூங்காவனத்தைப் பார்த்து அதிசயப்பட்டு பன்னிரண்டு வருடமாய் மழை இல்லாமல் உலர்ந்திருந்த விருக்ஷங்களெல்லாம் எவ்வாறு இவ்வாறு மாறின என்று அறிய ஆவல் கொண்டு பூங்காவனம் வந்தார்.

வனத்தை சுற்றி வந்த முனிவர் கோடி சூரிய பிரகாசத்துடன் அம்பிகை ஒரு விருக்ஷத்தனடியில் எழுந்தருளியிருப்பதைக் கண்ணுற்று , அம்பாளை தண்டனிட்டு வணங்கி, மூவருக்கும் முதன்மையான தாயே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்களுக்கும் அருள் வழங்கும் பராசக்தியே! நான் எத்தனை கோடி தவஞ் செய்தேனோ இந்த பூங்காவனத்திலே ஈஸ்வரி எனக்கு காக்ஷ’ கொடுக்க திருக்கைலாயத்தை விடுத்து பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் என்னவோ தாயே? என்று வினவினார். மஹா திரிபுர சுந்தரி அம்பிகையும் மலையரசன் பொற்பாவையுமான கௌரி " கௌதம முனிவரே ஸ்ரீ கைலாயத்தில் பரமேஸ்வரரும் நாமும் ஒரு நவரத்தின சிம்மானத்தில் எழுந்தருளியிருக்கையில் மற்ற அனைவரும் எங்கள் இருவரையும் வலம் வந்து வணங்கி விட்டு செல்ல வேதம் கற்ற பிருங்கி மட்டும் ஞானம் இல்லாமல் வண்டு உருவம் எடுத்து சுவாமியை மட்டும் வலம்வந்து வணங்கி விட்டுச் சென்றான். அதற்கு தண்டணையாக யாம் நம்முடைய கூறான இரத்த மாமிசங்களை வாங்கிக் கொண்டேன். அப்பொழுது பரமேஸ்வரர் அவனுக்கு மூன்றாவது காலை கொடுத்தார். இவ்வாறு செய்யலாமோ என்று கேட்டதற்கு அவர் மறு மொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்கு கோபம் பிறந்து பூலோகத்திற்கு வரும் வழியில் இந்த பூங்காவனத்தில் தங்கினோம் என்று இமவான் புத்ரி, மலைமங்கை கௌதமருக்கு உரைக்க, அவரும் அம்பிகையை தனது ஆசிரமத்திற்கு எழுந்தருளும்படி வேண்ட, அம்பாளும் அவ்வாறே அவரிஷ்டப்படி எழுந்தருள முனிவரும் அம்மனிருக்க ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டு பண்ணி அதில் ஆதி பராசக்தியை எழுந்தருளப் பண்ணிணினார்.


மலையன்னை மஹா கௌரி

கோபம் குறைந்த அன்னை கௌதம முனியைப் பார்த்து, ஓ! தபசியே இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலான விரதம் ஒன்றிருக்குமாயின் அதை எனக்கு பகர வேண்டும் என்று கேட்க. கௌதம முனிவர் அம்பிகையை தொழுது, தாயே! லோக மாதாவே! அபிராமியே! திரிபுர சுந்தரியே! சிவானந்தவல்லி! கௌரி! கைலாச வாசினி! மலை மகளே! விபூதி ருத்ராக்ஷி! கிருபாசமுத்ரி! உம்முடைய ஸன்னிதானத்தில் அடியேன் ஒரு விண்ணப்பம் செய்கின்றேன். அம்மையே அதைக் கேட்டு திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று சொல்ல அதென்னவென்று அம்பிகை கேட்க, ஜெகத்ரக்ஷியே! இந்த பூலோகத்தில் ஒருவருக்குந் தெரியாத ஒரு விரதமுண்டு அந்த விரதத்திற்கு கேதார விரதமென்று பெயர் அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்கவில்லை அனைத்து உலகத்திற்க்கும் அன்னையே தாங்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்ட சித்தியாகும் என்று உரைத்தார்.

அதை பரமேஸ்வரி கேட்டு அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விவரமாய் சொல்ல வேண்டும் என்று கேட்க கௌதமர் சொல்லுகின்றார். புரட்டாசி மாதம் சுக்கில பக்ஷ அஷ்டமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷம் தீபாவளி அமாவாசை வரை இருபத்து ஒரு நாள் பிரதி தினம் ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரமணிந்து ஆல விருக்ஷத்தினடியில் கேதாரீஸ்வரரை (சிவலிங்க ரூபத்தில்) பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்து, விபூதி, சந்தனம் சார்த்தி, மலர் கொண்டு அலங்கரித்து, வெல்ல உருண்டை, சந்தன உருண்டை, மஞ்சள் உருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய் , தாம்பூலம், இவைகளை வகைக்கு ஒன்றாக வைத்து வில்வார்ச்சனை செய்து தூப தீபம் காட்டி நமஸ்கரித்து இருபத்தோரிழையிலே  ஒரு கயிறு முறுக்கி அதைத் தினம் ஒரு முடியாக முடிந்து தினமும் உபவாசமிருந்து நைவேத்தியஞ் செய்த அதிரசத்தை மட்டும் உண்டு இருபத்தொரு நாளும் கிரமமாக இவ்விரதத்தை அனுஷ்டித்தால் இருபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசையன்று பரமன் ரிஷப வாகனராய் எழுந்தருளி கேட்ட வரம் கொடுப்பார் என்று கௌதமர் சொல்லக் கேட்டு அம்பிகை மகிழ்ந்து அதே பிரகாரம் புரட்டாசி மாதம் அஷ்டமி முதல் ஐப்பசி மாதம் அமாவாசை வரை இருபத்தொரு நாளும் கௌதமர் தெரிவித்த படி நியம நிஷ்டையுடன் உபவாசமிருந்து விரதம் இருக்க பரமேஸ்வரியின் விரதித்திற்க்கு மகிழந்து பரமேஸ்வரன் தேவ கணங்கள் புடை சூழ காட்சியளித்து இடப்பாகத்தை அம்மைக்கு அருளி அர்த்தனாரீஸ்வரராய் திருக்கையிலாயத்திற்கு எழுந்தருளி வீற்றிருந்தார். அம்மை அனுஷ்டித்ததால் இவ்விரதம் கேதார கௌரி விரதம் என்று வழங்கப்படுகின்றது.

திருச்செங்கோடு
அர்த்தநாரீஸ்வரர் (உற்சவர்)


முறையாக விரதம் இருப்பவர்கள் 21 நாட்கள் விரதம் இருக்க வேண்டும், முடியாதவர்கள் 14 நாட்கள் விரதம் இருப்பது உத்தம பட்சம் என்று அறியப்படுகின்றது. ஒருநாள் விரதம் இருப்போரும் உண்டு. கேதார கௌரி விரத திருக்கோவில் வழிபாடு: திருக்கோவில்களில் கேதார கௌரி விரதத்தன்று கேதாரீஸ்வரரையும், கௌரியையும் இரு கலசங்களில் ஆவாஹணம் செய்து அலங்கரித்து வைக்கின்றனர். விரதம் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து அதிரசம் பழ வகைகள், இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, நோன்புக்கயிறு, கருகு மணி, காதோலை முதலியன பிரசாதமாக எடுத்து வந்து அம்மையப்பருக்கு நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து விட்டுச் செல்கின்றனர். சென்னையில் பல்வேறு ஆலயங்களில் இவ்வாறு கேதார பூஜை நடைபெறுகின்றது. உத்திர மேரூரில் எம்பெருமான் கேதாரீஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தீபாவளியன்று அவரை தரிசிக்க கூட்டம் அலை மோதும். சென்னை திருவான்மியூர் வான்மீக நாதர் ஆலயத்தில் பிரகாரத்திலும் கேதாரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மற்ற விரதங்களைப் போல திருவிழாக்களாக இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுவதில்லை.

கேதார கௌரி விரதத்தின் மகிமை:


உமையம்மை இந்த விரதத்தை முதலில் அனுஷ்டித்து ஐயனின் உடலில் இடப்பாகம் பெற்றார். மஹா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்தே வைகுண்டபதியானார். பிரம்ம அன்னத்தை வாகனமாக பெற்றார், அஷ்ட திக் பாலகர்கள் பிரம்மனிடமிருந்து பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் அடைந்ததும் இவ்விரத மகிமையினால்தான். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.  இவ்விரதத்தினை அனுஷ்திப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும்  என்பது அனுபவ உண்மை. அந்நாளில் அம்பிகை மலையரசன் பொற்பாவை சிவபெருமானை நோக்கி "எம்பெருமானே இவ்விரதத்தை உலகில் யார் அனுஷ்டித்தாலும் அவர்கள் விரும்பியவற்றை அருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்.  சிவபெருமானும் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று அவ்வண்ணமே அருள் புரிந்தார். எனவே நாமும் இவ்வரிய நோன்பினை நோற்று  சிவபரம்பொருளின் பூரண கடாக்ஷத்தினை பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர். தேவியின் வேண்டுதலால் இவ்விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் தம்பதிகள் இடையில் ஒற்றுமை விளங்கும், பிணி நீங்கும், வறுமை நீங்கி செல்வம் பெருகும். கன்னியர்களுக்கு நல்ல கணவன் அமைவான்.சிவபெருமானின் பரிபூரண அருள் கிட்டும்.

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். இவ்விரதத்தை அனுஷ்டித்த இந்த இராஜ குமாரிகளின் கதை. புண்ணியவதி, பாக்கியவதி என்னும் இரு இராஜ குமாரிகள் தேவ கன்னியர் கங்கைக் கரையில் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருவதைக் கண்டனர். தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் காரணமாக விவாகமாகாத இக்கன்னியர் தேவ கன்னியரிடம் இவ்விரதம் பற்றிய விவரமறிந்து தேவ கன்னியர் கொடுத்த நோன்புக் கயிற்றையும் பெற்று வீட்டிற்கு போக வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாட மாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வரியம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சரியமடைந்து நிற்கையில் தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்துச் சென்று சுகமாக வாழந்து வரும் நாளில் இராஜ கிரி அரசன் புண்ணியவதியையும், அளகாபுரியரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் ஊர்களுக்கு சென்று புத்திர பாக்கியத்துடன் வாழந்து வந்தனர்.

இங்ஙனம் வாழந்து வரும் நாளில் பாக்கியவதி நோன்புக் கயிற்றை அவரைப் பந்தலின் மேல் போட்டு மறந்து போனதின் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றரசன் கைப்பற்றிக் கொண்டு இவர்களை ஊரைவிட்டு துரத்தி விட்டான். பாக்கியவதியும் அவள் புருஷனும் நித்திய தரித்திரர்களாகி உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி இருக்கையில் நோன்புக் கயிறு அவரைப் பந்தலிலிருந்ததால் அவரைக்காய் மிகுதியாகக் காய்க்க பாக்கியவதி அந்த அவரைக் காய்களை சமைத்து புசித்து ஜ“வித்து வந்தனர்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் பாக்கியவதி தன் குமாரனையழைத்து அப்பா நாம் நாடு நகரமிழந்து உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்கு போய் உன் பெரிய தாயாரிடம் நமது நிலையைக் கூறி கொஞ்சம் திரவியம் வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி கட்டமுது கட்டி கொடுத்து வழியனுப்பினாள். மகனும் இராஜகிரி வந்து பெரிய தாயாரிடம் தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல , அவளும் பிள்ளையை நாலு நாள் வைத்திருந்து சில வஸ்திரமும் ஆபரணமும் திரவிய முடிப்பும் கட்டமுதும் கட்டிக் கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக் கொண்டு சில தூரம் சென்ற பின் ஒருக் குளக்கரையில் மூட்டையை வைத்து விட்டு கட்டமுது சாப்பிடும் போது மூட்டையை கருடன் எடுத்துக் கொண்டு போய் விட்டது. அதுகண்ட சிறுவன் மனஸ்தாபப்பட்டு மீண்டும் பெரிய தாயாரிடம் சென்று நடந்ததை சொல்லி மேலும் சிறிது திரவியம் கட்டிக் கொண்டு வரும் வழியிலே அதை திருடர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனர். சிறுவன் துக்கப்பட்டக் கொண்டு பெரிய தாயாரிடம் சென்று அம்மா! நாங்கள் செய்த பாவமென்னவோ? தெரியவில்லை இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக் கொண்டு போய் விட்டான் என்று சொல்லி அழும் சிறுவனை தேற்றி குழந்தாய் உன் தாயார் கேதார கௌரி விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா இல்லையா என்று கேட்டாள்.

சிறுவனும் இப்போது அனுஷ்டிப்பதில்லை, நோன்புக் கயிற்றையும் அவரைப் பந்தலின் மேல் போட்டு விட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்தது என்று தெரிகிறது என்று கூறினான். இதைக் கேட்ட புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி ஐப்பசி மாதம் வரை சகோதரி மகனை தன்னிடமே நிறுத்திக் கொண்டு ஐப்பசி நோன்பு நோற்கின்ற போது பாக்கியவதிக்கும் ஒரு பங்கு நோன்பு வைத்து நோற்று அந்த நோன்புக் கயிறும் பலகாரமும், பாக்கு, வெற்றிலை, மஞ்சளும் இன்னும் சில ஆடை ஆபரணங்களுந் திரவியமும் கொடுத்துக் காவலாக சில சேவகரையுங் கூட்டி இனி மேலாவது இந்த நோன்பை விடாமல் நோற்கச் சொல்லி புத்திமதி கூறி அனுப்பினாள்.

பெரிய தாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பறித்துப் போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையைக் கொண்டு வந்து போட்டுவிட்டு உன் தாய் கேதேரேச்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதனாலேயே இவ்விதம் வந்தது இனி மேல் பயபக்தியுடனே நோன்பு நோற்கச் சொல் என்று சத்தமுண்டாக்கிக் கூற சிறுவன் ஆச்சிரியப்பட்டு பயபக்தியோடும் சந்தோஷத்தோடும் தன் வீட்டிற்க்கு திரும்பி தன் தாயாரிடம் நடந்ததைக் கூறி தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப் பட்ட நோன்பு கயிற்றையும் பலகாரத்தையும் கொடுத்தான். பாக்கியவதியும் , ஆங்காரத்தினால் கெட்டேன் என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரீஸ்வரரை நமஸ்காரம் செய்து நோன்புக் கயிற்றை வாங்கிக் கட்டில் கொண்டாள். உடனே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும் யானை, சேனை, பரிவாரங்களையும் கொடுத்து விட்டுப் போனான். பிறகு முன் போலவே பாக்யவதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே தான் முன் நோன்பு நோற்கத் தவறினதாலேயே கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தாரென்று அறிந்து அன்று முதல் தவறாமல் நோன்பைக் கடைப்பிடித்து சகல சம்பத்தும் பெருகி சுகபோகத்தோடு வாழ்ந்தாள். எனவே இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுகிரஹிப்பார் என்பது திண்ணம்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை:

அவரவர்கள் சௌகரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்’ பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள் பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம் நைவேத்தியம் செய்து தீபாரதணையான பிறகு, ஶ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்கும சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்திமாலையிட்டு புஷ்பஞ்சார்த்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி  அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர் கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து , காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்து கொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வர்ரை அர்ச்சனை செய்து, முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, பழுப்பு, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து , எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக்கயிறு ( 21 இழை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்க்கு), கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை ஶ்ரீ கேதாரீஸ்வர்ரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷதையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம் தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பூஜையின் போது அந்தணரைக் கொண்டு கேதார கௌரி விரதக்கதை பாராயணம் செய்யக் கேட்பது நல்லது.


விரதபலன்: இவ்வாறு சிரத்தையுடன் தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் பெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். உமையம்மை, கேதார கௌரி, மலைமகள், மலையரசன் பொற்பாவை, கிரிஜா, கிரி கன்யா, கிரி சுதா, சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜ தனயை, இமவான் உலவு புத்ரி, வரை மகள், பர்வதவர்த்தினி, பர்வதராஜ குமாரி, பார்வதி சகல ஸௌபாக்கியங்களையும் வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.





அம்மையப்பர் போற்றி

தேவார திருவாசக பதிகங்களில் இருந்து  திரட்டப்பட்ட துதிகள் இந்த கேதார கௌரி விரத நாளில் துதித்து அம்மையப்பர் அருள் பெறுங்கள் 


1) ஓம் அணங்கின் மணவாளா போற்றி
2) ஓம் அம்மையப்பா போற்றி
3) ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா ணியே போற்றி
4) ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
5) ஓம் அரியாடிய கண்ணாள் பங்க போற்றி
6) ஓம் அரிதரு கண்ணி யாள் ஒரு பாகா போற்றி
7) ஓம் இமவான் மகட்கு தன்னுடைய கேள்வனே போற்றி
8) ஓம் இளமுலையாள் உமை பாகா போற்றி
9) ஒம் இமயமென்னும் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவை கூற போற்றி
10) ஓம் இழையாரிடை மடவாள் பங்க போற்றி
11) ஓம் உடையாள் உன் தன் நடுவிருக்க உடையாள் நடுவுள் நீயிருத்தி போற்றி
12) ஓம் உண்ணாமுலை உமையாளுடனாகிய ஒருவன் போற்றி
13) ஓம் உமையாள் கணவா  போற்றி
14) ஓம் உமையவள் பங்கா போற்றி
15) ஓம் உமை நங்கையோர் பங்குடையாய் போற்றி
16) ஓம் ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே போற்றி
17) ஓம் ஏலவார் குழலி நாயகனே போற்றி
18) ஓம் ஏலவார் குழல் உமை நங்கை ஏத்தி வழிபட்ட காலகாலனே போற்றி
19) ஓம் ஒருமைபெண்மையுடையன் போற்றி
20) ஓம் கயல்மாண்ட கண்ணி தன் பங்க போற்றி
21)   ஓம் கருந்தடங் கண்ணி பங்க போற்றி
22) ஓம் காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா போற்றி
23) ஓம் கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனே போற்றி
24) ஓம் குரவங்கமழ் நறுமென் குழல் உமை பங்க போற்றி
25)   ஓம் குரும்பைமுலை மலர்க்குழலி பாக போற்றி
26) ஓம் கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே போற்றி
27) ஓம் கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
28) ஓம் கொத்தலர் குழலி பாக போற்றி
29) ஓம் கொம்மை வரிமுலை கொம்பு அணியாள் கூற போற்றி
30) ஓம் கோல் வளையாள் பாகா போற்றி
31) ஓம் கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூற போற்றி
32) ஓம் கோலப் பொங்கு அரா அல்குல் செவ்வாய் வெண்ணகைக் கரியவாள்கண்
       மங்கையோர் பங்க போற்றி
33) ஓம் கோல் வளையாள் பங்க போற்றி
34) ஓம் சிறு மருங்குல் மை ஆர் தடங்கண் மடந்தை மணவாளா போற்றி
35) ஓம் சுரிகுழல் பணை முலை மடந்தை பாதியே போற்றி
36) ஓம் செப்பு ஆர் முலை பங்கனே போற்றி
36) ஓம் செப்பிள முலை நன் மங்கை யொரு பாக போற்றி
38) ஓம் செந்துவர் வாயுமை பங்க போற்றி
39) ஓம் தளரா முலை முறுவல்லுமை தலைவா போற்றி
40) ஓம் திதலைச்செய் பூண்முலை மங்கை பங்க போற்றி
41) ஓம் துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை பங்கனே போற்றி
42) ஓம் தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர் போற்றி
43) ஒம் தேனையார் குழலாளை யொர் பாக போற்றி
44) ஓம் தையல் ஒர் பங்கினர் போற்றி
45) ஓம் தையல் ஒர் பாகம் வாழ் ஜகந்நாதனே போற்றி
46) ஓம் தையல் இடம் கொண்ட பிரான் போற்றி
47) ஓம் தோடுடைய செவியா போற்றி
48) ஓம் மதி நுதல் மங்கை பங்க போற்றி
49) ஓம் மலை மாது ஒரு பாகா போற்றி
50) ஓம் மலையரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திரு நாயக போற்றி
51) ஓம் மலர்க்கொன்றை மலிந்த வரைமார்பில் பெண்மகிழ்ந்த  பிரமாபுரமேவிய பெம்மான் போற்றி
52) ஓம் மலை மகளை ஒரு பாகம் வைத்தானே போற்றி
53) ஓம் மரு ஆர் மலர்க்குழல் மாது பங்க போற்றி
54) ஓம் மட்டுவார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகா போற்றி
55) ஓம் மாவடு வகிர் அன்ன  கண்ணி பங்க போற்றி
56) ஓம் மாது இருக்கும் பாதியனே போற்றி
57) ஓம் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் போற்றி
58) ஓம் மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே போற்றி
59) ஓம் மாதினுக்கு உடம்பிடம் கொடுத்தானே போற்றி
60) ஓம் மைத்தடங்கண் வெருள்புரி மான் அன்ன நோக்கி தன் பங்க போற்றி
61) ஓம் மையார் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே போற்றி
62) ஓம் பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா போற்றி
63) ஓம் பஞ்சேர் அடியாள் பங்க போற்றி
64) ஓம் பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா போற்றி
65) ஓம் பஞ்சின் மெல்லடியாள் பங்க போற்றி
66) ஓம் பந்து அணை விரலி(விரலாள்) பங்க போற்றி
67) ஓம் பருவரை மங்கை  தன் பங்க போற்றி
68)  ஓம் பண்டொத் தமொழி யாளை யொர் பாகமாய் கொண்டாய் போற்றி
69) ஓம் பணைமுலைப் பாக போற்றி
70) ஓம் பண் தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க போற்றி
71) ஓம் பண்ணின் நேர் மொழியாள் பங்க போற்றி
72) ஓம் பண் ஆர்ந்த மொழி மங்கை பங்க போற்றி
73) ஓம் பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
74) ஓம் பாடக மெல் அடி ஆர்க்கும் மங்கை பங்க போற்றி
75) ஓம் பாதி மாதொடும் கூடிய பரம்பரனே போற்றி
76) ஓம் பழுது இல் தொல் புகழாள் பங்க போற்றி
77) ஓம் புன வேய் அனவளை தோளி பங்க போற்றி
78) ஓம் பூண் முலையாள் பங்க போற்றி
79) ஓம் பெண் சுமந்த பாகத்தா போற்றி
80) ஓம் பெண் ஆளும் பாகனே போற்றி
81) ஓம் பெண் பால் உகந்த பெரும் பித்தா போற்றி
82) ஓம் பெண்ணை தென் பால் வைத்தாய் போற்றி
83) ஓம் பெண்ணின் நல்லாள் பங்க போற்றி
84) ஓம் பெண்ணோர் பாகா போற்றி
85) ஓம் பெண்ணாகிய பெருமான் போற்றி
86) ஓம் பெந்நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகா போற்றி
87) ஓம் போகமார்த்த பூண் முலையாள் பாகா போற்றி
88) ஓம் போரில் பொலியும் வெள்கண்ணாள் பங்க போற்றி
89) ஓம் மலையுடையாள் ஒரு பாகம் வைத்தாய் போற்றி
90) ஓம் மாதொரு பாகனே போற்றி
91) ஓம் மாது இயலும் பாதியனே போற்றி
92) ஓம் மாது ஆடும் பாகத்தா போற்றி
93) ஓம் மஞ்சாடும் ,மங்கை மணாளா போற்றி
94) ஓம் மான் ஓர் பங்கா போற்றி
95) ஓம் மான் நேர் நோக்கி  உமையாள் பங்க போற்றி
96) ஓம் மான் பழித்து ஆண்ட மெல் நோக்கி மணாளா போற்றீ
97) ஓம் மலையாள் மணவாளா போற்றி
98) ஓம் மை இலங்கு நல்கண்ணி பங்கனே போற்றி
99) ஓம் நங்கடம்பனை பெற்றவள் பங்க போற்றி
100) ஓம் நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாக போற்றி
101) ஓம் நாரி பாகனே போற்றி
102)  ஓம் வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக போற்றி
103) ஓம் வரை ஆடு மங்கை தன் பங்க போற்றி
104) ஓம் வளையொலிமுன்கை மடந்தையொர் பாக போற்றி
105) ஓம் வார் உறு பூண் முலையாள் பங்க போற்றி
106) ஓம் வார்கொண்ட வன முலையாள் உமை பங்க போற்றி
107) ஓம் வெண்ணகை கருங்கண்  திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் புயங்க போற்றி
108) ஓம் வேயுறு தோளி பங்க போற்றி