ஐயன் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது இருவருக்கும் சேர்ந்தார்ப் போல ஒரே மஹா மண்டபம். அந்த மஹா மண்டபத்தின் தூண்களிலே அனைத்து கடவுளர்களும் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் பூலோக கயிலாயம். இம்மண்டபத்தில் ஒரு தூணில் எழுந்தருளியுள்ள ஹனுமன் சிறந்த வரப்பிரசாதி. இம்மண்டபத்தில்தான் நந்தி தேவருக்கு கோபுரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.
மண்டபத்தூண்களில் உள்ள சில சிற்பங்கள்
இவருக்கு பிரதோஷம் தோறும் சிறப்பாக அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகின்றது. 108 சங்காபிஷேக சங்குகள் பூஜை செய்யப்படுவது நந்தி தேவரின் திருமுன் தான். ஆனி உத்திர பிரதோஷ வேளையிலும், ஆருத்ரா தரிசன அருணோதய காலத்திலும், அநாதிமல மூலனாகிய சிவ பரம்பொருள், அநாதிமல பக்தனாயிருக்கும் ஆன்மாக்கள பந்தம் வீடு என்னும் இருவகை நிலையினையடைந்த அவ்வனாதிமல பந்தத்தினின்றும் நீங்கி, உணர்பொருளும், உணர்வானும், உணர்வானும் உணர்வுமெனும் பகுப்பொழியாது, ஒளிந்த பானுப்புணர விழியும், நீர் நிழலும், தீயிருப்பும், புனல் உருவும், பருதி மீனும், துனைய இரண்டறு கலப்பில் (சிவமாகிய) தன்னுடங்கிய பேரின்பத்தைத் துய்த்து இடையறாமல் கும்பிடும் கொள்கையை பெறுதற் பொருட்டு தோற்றம், நிலை இறுதி, மறைப்பு, இருள் என்னும் பஞ்சகிருத்தியத் தாண்டவம் புரியும் தாண்டவேசனாகிய ஸ்ரீ நடராஜ பெருமானுக்கும் சிவகாம சுந்தரிக்கும் அபிஷேகம் நடப்பதும் இம்மண்டபத்தில்தான், பங்குனிப் பெருவிழா தொடக்கமாக சோமாஸ்கந்தராம் கபாலீஸ்வரருக்கு அபிஷேகமும் இம்மண்டபத்தில்தான். வெள்ளி தோறும், தங்கத்தேர் புறப்பாட்டின் போதும் அம்மன் கொலு வீற்றிருப்பதும் இம்மண்டபத்தில் தான். அம்மைக்கு முக்கியத்துவம் தருவது போல் இம்மண்டபத்தில் தெற்கு வடக்காக ஒன்பது தூண்கள். கிழக்கு வடக்காக நான்கு தூண்கள் என மொத்தம் 36 தூண்கள்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா - தேவி
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட (கற்பகவல்லி)
என்ற படி அம்மண்டபத்தின் தூண்களிளும் தி்ருக்கோவிலெங்கும் பல அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளன.
கபாலீஸ்வரரின் சன்னதிக்கு வடப்பக்கம் அம்மையின் சன்னதி, கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் கற்பகமாய், பூஜையின் சிறப்பை உலகுக்கு தானே மயிலாய் வந்து உணர்த்தியவளாம், வாயிலார் நாயனார் சிவ பெருமான் திருவடி நிழற்புக, வாயிலாய் நின்றருள் செய்த அம்மை கற்பகவல்லி, பூரணி, மனோன்மணி, தயாபரி, பராபரி புராதனி தராதரம் எல்லாம் பொற்புடன் அளித்த சிவசக்தி இமவான் உதவு புத்ரி, மகமாயி என்று பல் வேறு நாமங்களால் தாச்சி அருணாசல முதலியாரால் பதிகம் பெற்ற அம்மை கருணை முகத்துடன், நான்கு கரங்களுடன் மேற் கரங்களில் அங்குச பாசம் தாங்கி வல கீழ்க்கரத்தால் அபயம் அளித்து இட கீழ்க்கரத்தால் என் பாதமே உங்களுக்கு சரணம் என்று வரத முத்திரையுடன் எழிலாய் நின்ற கோலத்தில் அருட் காட்சி தருகின்றாள். அம்மையைப் தரிசிக்கும் போதெல்லாம் மனதில் பெரிய நிம்மதி, நமது துயரங்களை எல்லாம் அவளது பாதத்தில் இறக்கி வைப்பதே ஒரு பெரிய நிம்மதி. அம்மையின் அருளை உணர கணம் அவள் சன்னதியில் நின்றால் போதும் அம்மைக்கு எவ்வளவு சேலைகள், மாலைகள் வந்து குவிகின்றன என்பதைப் பார்த்தால் போதும் வேறு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. வீயாத முக்கண் இடத்தினில் வளரும் விரைமலர் குழல்வல்லி மறைமலர்ப் பதவல்லி, கற்பகவல்லியை வழிபடுவதால் உடல் சம்பந்தமான எந்த நோயானாலும் விரைவில் குணமாகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், ஐஸ்வர்யம் கிடைக்கும். நாம் கேட்பதை மட்டுமல்ல நமக்கு வேண்டுவது அனைத்தையும் தன் கடைக்கண் பார்வையினால் வழங்குபவள்தான் அன்னை. ஒவ்வொரு வெள்ளியும் சிறப்பானதுதான் மேருவை வளைத்தவன் இடத்தில் வளர் அமுதமாம் அம்மைக்கு,
அதிலும் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அந்த அஞ்சுகக் கிளி மொழியாள் ஆனந்த வல்லி, சிங்காரவல்லி, கற்பகவல்லி 1008 தங்க காசுமாலை வைரக்கிளி தடாங்கம் அணிந்து எழிற் பொங்க காட்சி தரும் அம்பிகையை ஒரு தடவை தரிசனம் செய்தவர்கள் மறுபடியும் மறுபடியும் அம்மையை தரிசிக்க வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. அம்மனுக்கு புஷ்பப்பாவாடை சார்த்துவது ஒரு சிறந்த நேர்த்திக்கடன். அன்னையை வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது கண்கூடு. ஒவ்வொரு முறை செல்லும் போதும் அம்மைக்கு ஒரு வித அலங்காரம் கண்டு களிக்கலாம். அம்மையின் சன்னதியில் வலப்புற மூலையில் பள்ளியறை அமைந்துள்ளது. தினமும் காலையில் திருவனந்தல் பூஜை நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் அம்மையின் சன்னதியின் உட்பக்கம் முழுவதும் அம்மனின் பல்வேறு ரூபங்களைக் காட்டும் சித்திரங்கள் இருந்தன. ஆனால் தற்போது கற்சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டபின் அவைகளை எடுத்து விட்டனர். ஆயினும் அம்மையின் பின் பக்கம் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், கற்பகாம்பாள் பதிகம் ஆகியவை கல்வெட்டுக்களில் பதியப்பற்றுள்ளன. அம்மன் சன்னதியின் சுவர்களில் அழகான தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அபிராமி பட்டரால் இயற்றப்பட்ட அபிராமி அந்தாதியை அம்மையின் திருக்கோவிலிலே படித்து மனப்பாடம் செய்தவர்கள் பலர் அதில் அடியேனும் ஒருவன் கல்லூரியில் படிக்கும் போது வெள்ளிக்கிழமைகளில் அம்மனை தரிசிக்க சென்று அபிராமி அந்தாதியை மனப்பாடம் செய்தேன். திருக்கோவில் முழுவதும் பல்வேறு பதிகங்கள், ஸ்தோத்திரங்கள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.அம்மையின் சன்னதியின் முன் நின்று
.... நீ ஆதரித்து என்னை பாதுகாத்தருள் செய்து
நெடுநாட்படும் பாடெல்லாம்
நீக்கி அழியாத சுகமெய்தச் செய்தாலன்றி
நீச்சு நிலை இல்லையம்மா ( அம்மா கற்பகவல்லியே)
வீயாத முக்கண்ணிடத்தினில் வளர் அமுதமே
விரிபொழில் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப் பதவல்லி
விமலி கற்பகவல்லியே! என்று மனமுருக பாடி நெஞ்சுருகி வேண்டி கும்பிடும் போது அர்ச்ச்கர் கற்பூர ஆரத்தி காட்டுகின்றார், அம்மனுடைய கருணை ததும்பும் அந்த திருக்கண்கள் நமது சகல துன்பங்களையும் நீக்குகின்றன. அம்மனின் திருப்பாதத்திற்கும் கற்பூர ஆரத்தி காட்டுகின்றார் அர்ச்சகர் பாடகம் தண்டை கொலுசு சிலம்பு என்று சர்வாபரண பூஷிதையாக நிற்கும் இராஜாராஜேஸ்வரி, லலிதாம்பாள். மஹா திரிபுரசுந்தரியின் பொற்பாதங்களில் . இக்கோவிலில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் போது குங்குமத்தை அம்மனின் பாதத்தில் தான் செய்கின்றனர், நமக்கு வழங்கப்படும் குங்குமமும் அம்மன் திருப்பாதத்தில் பட்ட குங்குமம் தான்.
நாம் வேண்டுவதை எல்லாம் அன்னை நிறைவேற்றி வைக்கின்றாள் என்பதை அன்னை பல்வேறு முறை உணர்த்தியுள்ளாள். அடியேனுக்கு அம்மையும் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது, எனவே அம்மையப்பரை தரிசிக்க செல்லும் போது ஒரு ருத்ராக்ஷம் அணிந்து செல்வோம் என்று ஒரு ருத்ராக்ஷம் வாங்கிக் கொண்டு முதன் முதலில் சென்றது அம்மனின் சன்னதிக்குத்தான். அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்து எடுத்துத்தருமாறு கேட்டேன். அதை அம்மனின் பாதத்தில் வைத்த அவர் கற்பூர தீபம் கீட்டி விட்டு வெளியே வந்து இன்னும் சிறிது நேரம் அம்மனின் பாதத்திலே இருக்கட்டும் அம்மன் சன்னதியை சுற்றி விட்டு வா என்று கூறியது அந்த அம்மையே என்னை வாழ்த்தியது போல இருந்தது. அம்மன் உணர்த்தியது போல அருமையான தரிசனம் கிடைத்தது. அது போலவே அந்த தெய்வீக அனுபவத்தை அவனருளால் அவன் தாள் வணங்கி எழுதவும் பணித்தான் அந்த தியாகராஜர். ஆனால் அதை பதிப்பிக்க யார் முன் வருவார்கள் என்று தெரியவில்லை, வேறு கதி ஏது அந்த அம்மனிடமே சென்றேன் எழுதிய நூலை எடுத்துக்கொண்டு, அம்மனின் பாதத்தில் வைத்து எடுத்து கொடுத்த போது அம்மனின் மலரும் சேர்த்து கொடுத்தார் அர்ச்சகர், நான் அது வரை கவனிக்காத நான் செல்லலாம் என்று நினைக்காத பதிப்பகத்தாரை கண்ணில் பட வைத்தார் அன்னை, மனதில் சந்தேகத்துடன் அவர்களை அணுகிக் கேட்டேன் அவர்களும் புத்தகத்தை பதிப்பிக்க ஒத்துக்கொண்டனர் அனைத்தும் அம்மையின் திருவருளே.
கற்பகாம்பாள் சன்னதிக்கு தெற்குப்புற தூணில் இராமர், இலட்சுமணன், சீதை அனுமன் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அம்மன் உலா வருவதற்காக ஒரு தங்கத்தேர் உள்ளது இவ்வாலயத்தில் உற்சவங்கள் இல்லாத நாட்களில் மாலையில் இந்த 15 அடி தங்க ரதத்தில் உட்பிரகார வலம் வந்து நம்மை எல்லாம் இரட்சிக்கிறாள் மதவேளை முன் வெல்லாமல் வென்றவன் இடத்தில் வளர் அமுதமாம் கற்பகவல்லி அம்மையின் சன்னதியிலிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து இனி ஐயன் சன்னதிக்கு செல்வோமா?.
6 comments:
கட்டுரையும் புகைப்படங்களும் அருமை, தங்கள் வெளியிட்ட ஆனந்தகூத்தனின் தூண் சிற்பங்கள் சிங்கையில் செண்பக விநாயகர் கோவிலிலும் இடம் பெற்றுள்ளது.
//அனைத்தும் அம்மையின் திருவருளே// நிச்சயமாக தமிழகத்தின் பல்வேறு சிவத்தலங்களின் பெருமைகளை தங்களின் வலைபூவினால் தான் தெரிந்து கொண்டேன், அவையே புத்தகத்தில் பதிவாகும் போது நடராஜரின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை...
புகைப்படங்களை வலைதலத்தில் ஏற்றி உள்ளேன் பார்த்து அருள் பெறுங்கள், மற்ற படங்கள் மற்றொரு மெமரி கார்டில் உள்ளது upload செய்த உடன் பின்னோட்டமிடுகிறேன்...
மிக்க நன்றி Logan ஐயா. கடல் கடந்து சென்றாலும் நம் பண்பாட்டை மறக்காத நம் மக்களுக்கு தலை வணங்குகிறேன்.
சிங்கை வீர மாகாளி கோவிலில் சுதை சிற்பங்களில் நவரத்தின கற்களை கண்டு அடியேனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அது போல அருமையாக அமைத்துள்ள ஆனந்த கூத்தரின் ஊர்த்துவ தாண்டவக்கோலம் மற்றும் பிக்ஷாடணர் கோல சிற்பங்கள் அருமை.
நன்றி ஐயா
அந்த சின்ன சிலை ,தலைக்கு பின்னால் சூலாயுதம் யாரு? வீர பத்திரரா? எவ்வளவு அழகாய்ய் இருக்கு . ரொம்ப வருஷங்களுக்கப்புறம் சமீபத்துல போனேன். எப்பவும் கூட்டம் தான் சாயந்திரத்தில். இல்லையா?!!
பிக்ஷாடணர் சிற்பம் Jayashree. எப்போது சென்றாலும் கூட்டம்தான் அதே போல அம்மன் சன்னதியில் சிறிது நேரம் நின்றால் அப்படியே நமது கவலைகள் எல்லாம் மறைந்து மனதில் அமைதி வருவது ஒரு அற்புதம் தான்.
Post a Comment