காலத்தில் அழியாத கனக சபை கொண்ட பேரூர்
அழகிய கலை நுட்பங்கள் கொண்ட அற்புத சிற்பங்கள் கொண்ட காலத்தால் அழியாத கனக சபையில் ஆனந்த தாண்டவ நடராசர் சிவகாமியம்மையுடன் தாண்டவம் முடியும் கோலத்தில் அருள் பாலிக்கும் மேலைச் சிதம்பரத் தலம். காஞ்சி மா நதி என்னும் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தேவார வைப்புத்தலம். சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் பாடிய தலம். கச்சியப்ப சிவாச்சாரியார் தலபுராணம் பாடிய தலம். பிறவாப்புளி, இறவாப்பனை, எலும்பை கல்லாக்கும் ஆறு முதலியன விளங்கும் முக்தி தலம். வாகனமான நாய் இல்லாமல் பைரவர் ஞான பைரவராக அருள் பாலிக்கும் தலம். காமதேனு வழிபட்ட தலம், அதன் கன்று பட்டியின் குழம்புத் தழும்புடன் தேவ தேவன் மஹா தேவன் இன்றும் திருக்காட்சி தரும் தலம். விஷ்ணுவாகிய பட்டிமுனியும், பிரம்மாவாகிய கோமுனியும் வழிபட்ட தலம். நாற்று நடவு விழா நடக்கும் தலம். இவ்வளவு பெருமைகளும் கொண்ட நடராஜ தலத்தை இந்த ஆருத்ரா தரிசன காலத்தில் வலம் வரலாமா அன்பர்களே?
பாலக்காட்டு கணவாய் வழியாக மலய மாருதம் தவழ்ந்து குளிர்வித்துக் கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தின் தலை நகரான கோவை மாநகரின் அருகில் அமைந்த தலம். கோவை மாநகரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரத்தில் சிறுவாணி செல்லும் வழியில் அமைந்துள்ளது இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலம். வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஐந்து மலைகள் அரணாக சூழ இயற்கை சூழலில் எழிலால அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.
ஆதி காலத்தில் நாரதர் தக்ஷிண கைலாயமான இத்தலத்தில் உமா மஹேஸ்வரரை வெள்ளியங்கிரியில் வழிபட்டு இங்கு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்து வழிபட்டார். ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத்தொழில் செய்யும் போது சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மஹா விஷ்ணு காமதேனுவை அழைத்து “ நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட, காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தும் சிவன் அருள் சித்திக்காததால் நாரதர் ஆலோசனைப்படி தக்ஷிண கைலாயமான பேரூரில் வந்து தவம் செய்து வரும் போது ஒரு நாள் அதன் கன்றான பட்டியின் கால் குளம்பு பெருமானின் மேனியில் சிக்கிக் கொள்ள அதை தன் கொம்பினால் விடுவித்தது, இறைவன் தோன்றி இருவருக்கும் அருளினான். பட்டி வழிபட்டதால் தான் பட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுவேன் என்று வரம் அருளினார். மேலும் முக்தி தலம் என்பதால் இங்கு உனக்கு சிருஷ்டி இரகசியத்தை அருள முடியாது நீ திருக்கருகாவூர் சென்று தவம் செய் என்று அருளினார். காமதேனு மட்டும் அல்ல, வியாசர், விஸ்வாமித்திரர், யமன் ஆகியோர்கள் இப்பெருமானை வழிபட்டுள்ளார்.
இன்றும் ஐயனின் திருமேனியில் பட்டியின் குளம்பு காய தழும்பையும், காமதேனுவின் கொம்பின் நுனித்தழும்பையும் தரிசிக்கலாம். பெருமான்
பட்டீசர், பட்டி நாதர், கோட்டீசர் என்று அழைக்கப்படுகின்றார். இன்றும் கருவறையில் லிங்கமூர்த்திக்கு பின்புறம் காமதேனுவை தரிசிக்கலாம். எனவே இத்தலம் காமதேனுபுரம் என்றும்
பட்டீஸ்வரம் என்றும்
தேனுபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
"தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை." என்றபடி இத்தலத்தில் ஐயனை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது. நான்கு யுகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இத்தலம் விளங்கியுள்ளது.
பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வரர்
மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வர சுவாமி அருள்பாலிக்கும் இத்தலம் ஒரு முக்தித் தலம் ஆகும். அதற்கு ஐந்து சான்றுகள் உள்ளன. அவையாவன முதலாவது பிறவாப்புளி, இது பூப்பூக்கும் காய் காய்க்கும் பழம் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது. இராஜ கோபுரத்தின் எதிரிலே உள்ளது இப்பிறவாப்புளி. இரண்டாவது இறவாப்பனை, பெரிய கோவிலின் வடக்கே உள்ள காஞ்சிமா (நொய்யல்) ஆற்றின் தென் கரையிலுள்ள பிரம்மன் பூஜித்த வடகயிலாயம் என்னும் சிறு கோவிலின் வெளி முகப்பில் உள்ளது இந்த இறவாப்பனை, எத்தனை யுகங்களாகவோ இம்மரம் அங்கேயே உள்ளது. பேரூரில் ஆன்மாக்களுக்கு அழியாத நிலையான வாழ்வைத் தந்தருளுபவர் இறைவன். அழியாத்தன்மைக்கு சான்றாக இவ்விறவாப்பனை உள்ளது.
அறவாணர்கள் போற்றிடும் பேரூர்
அழியாமெகக்கோர் இடமாகி
உறவாம் அதனால் எமைப்போல
உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு
இறவாப்பனை ஒன்றுள்ளது.
இப்பனை மரத்தின் மேல் பட்டையை கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான நோய்கள் விலகும். மூன்றாவது இத்தலத்தின் சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவதில்லை. நான்காவது நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட எலும்புகள் வெண் கற்களாக மாறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் அஸ்தியை இக்காஞ்சிமா நதியில் கொண்டு வந்து கரைக்கின்றனர். ஐந்தாவது இத்தலத்தில் இறப்பவர்கள் வலது காது எப்போதும் மேலே இருக்கும்படி வைப்பர், ஏனென்றால் சிவபெருமான் ஓம் என்னும் ஐந்தெழுத்தை ஓதி தன்னடியில் சேர்த்துக் கொள்வார் என்பதால். எனவே இத்தலத்தில் பட்டீஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியில்லை. ஆதி சங்கரர் தன் தாய் முக்தி அடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.
இத்தலத்தைப் பாடிய சுந்தரருக்காக ஐயன் ஒரு திருவிளையாடளை நடத்தினார் அது என்ன தெரியுமா? ஐயனுன் அம்மையும் சேற்றில் இறங்கி நாற்று நட்ட லீலைதான் அது. ஒரு சமயம் சுந்தரர் பரவையாருடன் ஐயனை தரிசித்து பொருள் பெற பேரூர் வந்தார். எம்பிரான் தோழர் அல்லவா சுந்தரர், பெருமான் அவருடன் சிறிது விளையாட விழைந்தார். சர்வமும் தானே என்று சுந்தரருக்கு உணர்த்த தான் விவசாயியாக பள்ளனாகவும், அம்மை பச்சை நாயகி பள்ளியாகவும், மற்ற சிவகணங்களாகவும் நாற்று நட சென்றனர். அப்போது ஐயன் நந்தியிடம் நானும் அம்மையும் வயல் வெளிக்கு செல்கின்றோம், சுந்தரன் வந்தால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடு என்று சொல்லிவிட்டு சென்றார். திருக்கோவிலுக்கு வந்த சுந்தரர் ஐயனைக் காணாது திகைத்து நந்தியிடம் வினவ, நந்தியும் ஐயனின் ஆணையை மீறமுடியால் தெரியாது என்று கூறியது ஆனால் சுந்தரர் வண்தொண்டர் அல்லவா எனவே குறிப்பால் வயலைச் சுட்டியது. வயல் பக்கம் சென்ற சுந்தரர் வயலில் சாதாரண மக்கள் போல சேற்றில் இறங்கி நெல் நாற்று நட்டுக்கொண்டிருந்த ஐயனையும் அம்மையும் வீழ்ந்து வணங்கி, "ஐயனே எமக்காக தாங்கள் இவ்வாறு துன்பப்படவேண்டுமா? என்று அழுக, கருணாமூர்த்தியான எம்பெருமானும் சுந்தரனே யாம் உம்முடன் விளையாடவே இவ்வாறு செய்தோம் என்று கோவிலுக்கு சுந்தரருடன் திருக்கோவிலுக்கு திரும்பி வந்து அவருக்கு ஆனந்த தாண்டவக் காட்சியும் தந்தருளினார். பின்னர் சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பெறவும் அருள் புரிந்தார். இந்த நாற்று நடவு விழா ஆனி மாதம் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சரத்தில் நாற்று நடவும், உத்தரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடைபெறுகின்றது. இனி இவ்வளவு சிறப்புகள் கொண்ட இத்தலத்தை வலம் வருவோமா?
இத்தலமே ஒரு கலைப் பொக்கிஷம், சிற்பங்கள், ஓவியங்கள் நிறைந்து காட்சியளிக்கின்றது கிழக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று இறைவனின் ஸ்தூல ரூபமாக விளங்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் தூண்கள் நிறைந்த மண்டபம், இம்மண்டபத்தின் கூரையில் பேரூர் புராணத்தின் கதைகளையும், அறுபத்து நாயன்மார்களின் கதைகளையும் விளக்கும் அருமையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் இறுதியில் கொடிகம்பம் மற்றும் நந்தியம்பெருமான்.
மஹா மண்டபத்தின் கூரையில்
63 நாயன்மார்களின் சரிதம்
முதலில் கரிகால் சோழன் கருவறையை கட்டியுள்ளான், பின் 9ம் நூற்றாண்டில் சுந்தரர் இத்தலத்தைப் பாடியுள்ளார். 11-13ம் நூற்றாண்டுகளில் கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபம் மற்றும் மஹா மண்டத்தை கட்டியுள்ளனர். பின்னர் 14-17 நூற்றாண்டுகளில் ஹொய்சால, விஜயநகர மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர் “ஆரூரார் பேரூரார்” என்றும் “பேரூர் பிரம்மபுரம் பேராவூர்” என்றும் அப்பர் பெருமான் தமது ஷேத்திரக்கோவையில் இரண்டு இடங்களில் பாடிப்பரவிய இத்தலத்தில் அவர்களின் பல்வேறு கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.
மஹா மண்டபத்தில் நுழைந்தால் சிருங்க தீர்த்தத்தை காணலாம். ஐயனின் அபிஷேகத்திற்காக காமதேனு தன் கொம்பினால் (சிருங்கம்-கொம்பு) உருவாக்கிய இத்தீர்த்த தண்ணீரே பயன்படுத்தப் படுகின்றது. கருவறையில் காமதேனுக்கும் பட்டிக்கும் அருளிய பரமன் லிங்க ரூபத்தில் கிழக்கு திருமுக மண்டலத்துடன் அருட்காட்சி தருகின்றார். ஒரு கன்றுக்கும் அருளிய ஐயனின் எளிமையை என்னவென்று சொல்லுவது. அவரை ஐந்தெழுத்து நாமத்தால் மனதார வணங்கி முதல் பிரகாரம் வலம் வந்தால் 63 நாயன்மார்களை தரிசனம் செய்கின்றோம், சக்தியின்றி சிவமில்லை என்பதன் அடிப்படையில், சிவன்கோயில்களில் மூலஸ்தானத்திற்குள்ளேயே ஒரு அம்பிகை இருப்பாள். இவளை வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. ‘சிவனின் மனதிற்குள் இருப்பவள்’ என்ற பொருளில் இவளை “மனோன்மணி” என்று அழைப்பர். இந்தக் கோயிலை பொறுத்தவரை இவளை நம்மால் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் மனோன்மணி அம்மைக்கு ஒரு சன்னதி இருக்கிறது. மேலும் சூரிய சந்திரர், சகஸ்ரலிங்கம், நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கின்றனர். விஜய தசமியன்று தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் குழந்தைகளுக்கு நாக்கில் எழுத்தாணியால் எழுதி அக்ஷராப்பியாசம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.
இரண்டாம் பிரகாரமாம் வெளிப்பிரகாரத்தில் இருந்து ஐயனின் விமானத்தை அற்புதமாக தரிசனம் செய்யலாம். அஷ்டதிக்கு பாலகர்கள் சுதை வடிவத்தில் எட்டு திசைகளிலும் அருள் பாலிக்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர், மேற்குப் பகுதியில் சொர்க்க வாசல் மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்ட மண்டபத்துடன் விளங்குகின்றது.இச்சுற்றில் ஐயன் சன்னதிக்கு பின்புறம் சோமாஸ்கந்த ரூபத்தில் காசி விஸ்வநாதர், அருணகிரி நாதர் பாடிய வள்ளி தெய்வாணை சமேத முருகர், விசாலாட்சி மேற்கு முகமாக (பழனி முருகன் போல) அருள் பாலிக்கின்றனர். முருகர் சன்னதிக்கு அருகில் உள்ள வில்வ மரத்தடியில் கோரக்க சித்தர் அருவ வடிவில் உள்ளார். வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது.
இச்சுற்றில்தான் அம்மை
மரகதவல்லி என்னும் பச்சைநாயகி தனிக்கோவிலில் அருட்காட்சி தருகின்றாள். அம்மையும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக அபய வரத ஹஸ்தங்களுடனும் அங்குசம், பாசம் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சைநாயகி என்று பெயர் என்பார்கள். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இங்கு விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். அம்மன் விமானம் ஒரு கலசத்துடனும், நந்தி வாகனத்துடனும் உக்ரமில்லாத வடிவாக ஈஸ்வரி ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பு. அம்மனின் கருவறையின் முன்மண்டபத்தில் வலப்புறம் துர்க்கை சன்னதியும். இடப்புறம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளும் அருள் பாலிக்கின்றனர். அம்மனின் தூண்கள் நிறைந்த இம்மஹாமண்டபத்தில் அஷ்டலக்ஷ்மி மற்றும் தசாவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் ஈட்டி மரத்தாலான ஆஞ்சனேயர் சன்னதியும் உள்ளது.
காலத்தால் அழியாக் கனக சபை
இனி இத்தலத்தின் சிறப்புமிக்க கனக சபையை தரிசிக்க செல்வோமா? சுந்தரர் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசனம் செய்யும் போது
பாரூரும் அரவல்குல் உமை நங்கை
அவள் பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர் செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆருரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே.
என்று பேரூர் பெருமானை நினைத்துப் பாட அங்குள்ளவர்கள் பேரூர் அவ்வளவு சிறப்பானதா? என்று வினவ சுந்தரரும் ஆம் சென்று பாருங்கள் என்று கூற அவர்களும் வந்து ஆடல் வல்லானை கனக சபையில் தரிசனம் செய்து பின் சிதம்பரத்தில் உள்ளது சிற்றம்பலம் இங்குள்ளது அழகிய சிற்றம்பலம் என்று கூறிய பெருமையுள்ளது இக்கனகசபை. 17ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருடைய சகோதரர் அழகாத்திரி நாயக்கன் நடராஜப்பெருமானின் காலத்தால் அழியாத கனக சபையைக் கட்டினான்.
வெளியே இருந்து பார்க்கும் போது இச்சபை ஒரு கலச விமானத்துடன் எழிலாக விளங்குவதை காணலாம். மொத்தம் 36 தத்துவங்களை குறிக்கும் வகையில் 36 தூண்களுடன் எழிலாக விளங்குகின்றது கனகசபை. ஒவ்வொரு தூணின் மேல் முகத்தில் ஒரு முக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தூணின் மேல் உள்ள சிங்கத்தின் கம்பீரமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக பாவத்தை காட்டுகின்றது. கண், பல், வாய், நெற்றியில் உள்ள குறி, வடிவம் எல்லாம் ஒன்று போல இல்லை, இது சிற்பியின் கை வண்ணத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. கனக சபையின் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு ஜாலி வேலைப்பாடு நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
கனக சபையில் மூன்று பஞ்சாட்சரப் படிகள் உள்ளன, மஹா மண்டபத்தில் இருந்து கனக சபைக்கு செல்ல உதவும் முதல் பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் கூரையில் கல் சங்கிலி, சுழல் தாமரை போன்ற அற்புதங்கள், இருபக்க தூண்களிலும் அற்புதமான சிற்பங்கள்.
அவைகளாவன
நிருத்த கணபதி, மூஞ்சூறு வாகனத்தில் நடனமாடிய நிலையில் முதல்வன் கணேசன் தாண்டவ கோலத்தில் அருட்காட்சி தருகின்றார், மூஞ்சூறுவின் காதின் மேல் வலக்கால், மூஞ்சூறு வாகனத்தின் நகங்கள் அப்படியே தத்ரூபம்.
அடுத்து வீறு மயில் வாகனத்தில்
ஆறுமுகன் இளையவன் ஸ்கந்தன். மயிலின் ஒய்யாரமும், மார்புப் பதக்கமும் அருமை.
கனல் உமிழும் கண்களுடன்
அக்னி வீரபத்திரர். தக்ஷன் செய்த முறையற்ற யாகத்தை அழிக்க 16 வீரபத்திரர்கள் தோன்றினர். அவர்களுள் இவர் ஒருவர், கண்களும் , மீசையும் ஜடாமுடியில் சிலந்தியின் அழகையும் என்னவென்று சொல்ல வார்த்தைகள் தான் இல்லை.
தட்சன் யாகம் அழித்த
அகோர வீரபத்திரரும் உள்ளார் அவர் கையில் உள்ள வாள், வீசும் வேல் அப்படியே அற்புதம்.
யானையை விரித்து போர்த்துக் கொண்ட
கிருத்திவாஸன், யானையின் கால்கள் , ஐயனின் திருவடியில் உள்ள யானையின் தலை, ஐயனின் கைகளில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் அப்படியோர் அற்புதம்.
தாருகாவனத்து முனி பத்தினிகளின் கற்பு நிலையை சோதிக்க திகம்பரராய்,
பிக்ஷாடண கோலம் தாங்கிய பிஞ்ஞகன், குண்டோதரனுடன், நகு வெண்டலை மானுக்கு புல்லுறுத்தும் அற்புதம், அதை வாங்க இரண்டு கால்களுடன் அது தாவி வரும் பாங்கு, முனி மகளிர் நிறையழிந்த நிலைமையும் அற்புதம்.
நடனத்தில் தனக்கு நிகர் எவருமில்லை என்ற அகந்தையுடன் ஆடல் புரிந்த ஆலங்காட்டிக் காளிக்கு எதிரே அவள் கர்வம் அடங்க தாளொன்றால் பாதாளம் நீள் வலது காலால் தலைக்கு மேல் உள்ள பூவை எடுக்கும் பதினாறு கர
ஊர்த்துவ தாண்டவர் வடிவழகை எப்படி வர்ணனை செய்ய, 108 நடனக்கோலங்களுள் இதுவும் ஒன்று. ஐந்து தலை பிரம்மனும், உடுக்கை கொட்டியபபடி விஷ்ணுவும், காரைக்காலம்மையார் அடிக்கீழும், குழந்தையாக முயலகனும் அருமையோ அருமை.
ஆலங்காட்டு காளியை பக்கவாட்டில் இருந்து பார்த்தால் கோபம் தெரியும் அதே ஊர்த்தவதாண்டவரிடமிருந்து பார்த்தால் கண்களில் தோற்று விட்டோமே என்ற நாணம் தெரியும் இவ்வாறு செதுக்கிய சிற்பியின் திறமையை வியக்காமல் இருக்க முடியாது. அம்மையிம் ஜ்வாலா மகுடம், கால்களின் கோலம், ஆபரணங்கள், ஆடை அற்புதம் அற்புதம்.
ஒவ்வொரு சிற்பமும் 6 அடி உயரம், 3 அடி அகலம் , ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருமையான சிற்பங்களை செதுக்கியவர் செம்மனாச்சாரி என்ற சிற்பி, அவர் மறைந்து விட்டார் ஆனால் அவரின் உயிரோவிய சிற்பங்கள் அப்படியே உள்ளன. கம்பி வலையிட்டு பாதுகாத்து வைத்துள்ளனர் அற்புத சிற்பங்களை.
சிற்பங்களை அடுத்து இரண்டாவது பஞ்சாட்சரப்படி இதன் அருகே யாளியின் வாயும், யானையின் தும்பிக்கையும் இணைவது போன்ற சிலை. அதைத் தாண்டினால் குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும் ஒரு பக்கம் உடைந்தும் காணப்படுகின்றது.
மூன்றாவது பஞ்சாட்சரப்படியில் பட்டி முனி, கோ முனி அம்மையப்பரை சேவிக்கும் நிலையில். பிரம்மனும் விஷ்ணுவுமான இவர்களுக்கு இத்தலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவக் கோலக் காட்சி தந்து அருள் பாலித்திருக்கின்றார். மூன்றாவது பஞ்சாட்சரப்படியை தாண்டினால் ஆனந்தத் தாண்டவ நடராஜரையும், அம்மை சிவானந்த வல்லியையும் தரிசனம் செய்யலாம்.
சிவகாமி அம்பாளுடன் ஆனந்த தாண்டவ நடராஜர்
சபையில் ஆனந்த கூத்தர் ஆனந்த தாண்டவம் ஆடி, ஆட்டத்தை நிறுத்தும் கோலத்தில் சிவகாமியம்மையுடன் ஆனந்த தரிசனம் தருகின்றார். ஐயனின் முகத்தில் உள்ள குறும் சிரிப்பு, கதுப்பு கன்னங்கள், சடை பின்புறம் தாழ்சடையாக (சிதம்பரம் போலவே) மொத்தம் பதினாறு சடைகளுள் பதினைந்து கீழ் நோக்கி தொங்குகின்றன, ஒன்று கட்டப்பட்டுள்ளது, குஞ்சித பாதமும் நிலத்தை நோக்கி தாழ்ந்துள்ளது, இடக்கரத்தில் ஊழித்தீ, வீசுகரம், வலக்கரத்தில் உடுக்கை, அபய கரம், முயலகன் மேல் ஊன்றிய பாதத்தில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை உள்ளது. தோளில் துண்டும், இடையில் புலியதளாடையும் அணிந்துள்ளார். ஐயனின் வீசும் கரத்தின்( நீட்டிய) நீர் குஞ்சித பாதத்தின் மேல்( தூக்கிய) பாதத்தின் மேல் விழும் விழும்படியான அற்புதமான அமைப்பில் அருள் பாலிக்கின்றார் கூத்த பிரான். பிரம்மா, விஷ்ணு, அதி உக்ர காளி சுந்தரர் நந்தி ஆகியோருக்கு ஆனந்த கூத்தர் இத்தலத்தில் ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளியுள்ளார். பர சமய இருள் அழிய ஞான சம்பந்த பெருமானுக்கு தன் முலைப்பால் சுரந்தளித்த மாப்பெரும் கருணை கொண்ட சிவகாமியம்மை வலக்கரத்தில் நீலோற்பவ மலர் ஏந்தி, இடக்கரம் டோலஹஸ்தமாக அருள் பாலிக்கின்றாள்.
இத்தலத்தில் கூத்தப்பிரானை சுற்றி வந்து வழிபட முடியும், அடியேன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐயனின் தாழ் சடையை தரிசனம் செய்திருக்கிறேன் நேரிலும் தரிசிக்கலாம் என்று நினைத்து வலம் வந்தேன், ஆனால் தரிசனம் கிட்டவில்லை, அபிடேக காலங்களில் மட்டும்தான் தரிசிக்க முடியும் என்று எண்ணுகிறேன். ஐயனை வலம் வரும் போது ஜன்னல் வழியாக துர்க்கையம்மனை நேராக தரிசனம் செய்ய முடிகின்றது. நடராஜரின் மண்டபத்தின் நான்கு தூண்களும் நான்கு வேதங்கள் என்பது ஐதீகம். அவை சிறிது வளைந்து ஐயனை பணியும் நிலையில் உள்ளன.
பொதுவாக நடராஜத் தலங்களில் வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறும், இத்தலத்தில் மொத்தம் பத்து தடவை நடைபெறுகின்றது. தீபாவளி, ஆருத்ரா தரிசனத்திற்கு அடுத்த நான்காம் நாள், பங்குனி உத்திரம் அதை அடுத்த இரண்டாம் நாள் ஆகிய நாட்களே அந்த அதிகப்படியான நாட்கள், பங்குனி உத்திரத்தன்று நடன சேவை தந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனமும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது மேலைச் சிதம்பரமாம் பேரூரில்.
காப்புக் கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகின்றது. அடுத்த ஒன்பது நாட்கள் காலையும் மாலையும் திருவெம்பாவை விழா நடைபெறுகின்றது. மாணிக்க வாசகர் திருவீதிஉலா வருகின்றார். ஒன்பதாம் நாள் இரவு பச்சை நாயகி அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி திருவீதிவுலா வந்து அருள் பாலிக்கின்றார். அம்மனுக்கு நொய்யலாற்றங்கரையில் நிறை நாழி பூஜை நடைபெற்று பெண்மணிகளுக்கு மங்கல நாண் கயிறு வழங்கப்பட்டது. இரவு அம்மனும் ஐயனும் அன்னூசல் ஆடி அருளி மாணிக்கவாசகருக்கு அனுக்ரகம் செய்து கயிலாயப் பதவி வழங்கும் விழா நடைபெறுகின்றது.ஆருத்ரா தரிசனத்தன்று காலை 4.00 மணியளவில் ஆனந்த தாண்டவருக்கும் சிவானந்த வல்லிக்கும் அற்புத மஹாபிஷேகம் நடைபெறுகின்றது. பஞ்ச கவ்யம், சந்தனம், மாவுப்பொடி, திருமஞ்சனப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கருப்பஞ்சாறு, பழச்சாறுகள்,தேன், பன்னீர் என பல்வேறு திரவியங்கள் நதியாக அபிஷேகமாகின்றது அம்மையப்பருக்கு. தொடர்ந்து விலை உயர்ந்த நகைகள் மலர்களால் அலங்காரம் நடந்து வேத கோஷம், தேவார திருவாசகம் முழங்க மஹா தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் ஐயன் வெள்ளி சப்பரத்திலும், அம்மை தங்க சப்பரத்திலும் வெளிப்பிரகாரமும், பட்டி சுற்றும் மேடையை மூன்று முறையும், இரத வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். சொர்க்க வாசல் பூஜை, இராஜ கோபுர வாசல் பூஜை கண்டருளி, கனக சபையின் முன் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் தந்தருளுகின்றனர்.
கிராமங்களில் விழா கொண்டாடும்போது மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வர். இதைப்போலவே இக்கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவின்போது சுவாமி மீதுமஞ்சள் நீர் தெளித்து, பின் அதையே பக்தர்கள் மீது தெளிக்கின்றனர்.இந்த மஞ்சள்நீருக்கு, “திருப்பொற்சுண்ணம்’ என்று பெயர். இதற்காக பிரத்யேகமாக உள்ள உரலில்மஞ்சளை பொடியாக்குகின்றனர்
இனி இத்தலத்தின் சிறப்பு நாட்களை காண்போமா? தினமும் ஐந்து காலப் பூஜை நடைபெறுகின்றது. ஆனியில் நாற்று நடவு உற்சவம், கார்த்திகை சோமவாரங்களில் காலை சங்காபிஷேகம் , மாலை அன்னாபிஷேகம், பங்குனியில் பத்து நாள் பெருவிழா, ஏழாம் நாள் திருத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திரத்தன்று நடராஜர் உற்சவம்.
திருக்கோவிலுக்கு வெளியே கொங்கு மண்டலத்திற்க்கே உரித்தான தீப ஸ்தம்பம். காஞ்சிமா நதி என்னும் நொய்யல் நதியில் அமைந்துள்ள சோழன் படித்துறை அங்கு செல்லும் வழியில் உள்ள அருள்மிகு பட்டி விநாயகர் திருக்கோயில், பட்டி விநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். அரசம்பலவாணர் திருக்கோயில் மற்றம் அருள்மிகு பட்டீசவரர் கோயிலுக்கு அதன் இருமருங்கும் அமைந்துள்ள வடகயிலாயம், தென் கயிலாயம், திருக்கோயில் ஆகியவை எழிலுடன் அமைந்துள்ளன இத்தலத்தில்.
தலபுராணம், பேரூர் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியர் இயற்றியுள்ளார். மேலும் ஏயர்க்கோன் கலிக்காமர் சரிதத்தில் பெரிய புராணத்திலும், மும்மணிக் கோவையிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
என்னங்க எப்படி இருந்ததுங்க மேலைச் சிதம்பரம், கலைப்பொக்கிஷமாக திகழும் முக்திதலம் செல்ல இப்போதே கிளம்பிவிட்டீர்களா?