பழனி ஆண்டவர்
நடனம் ஆடீனார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (நடனம்)
வடகயிலையில் முன்னாள் மாமுனிக்கருள் செய்தபடி
தவறாமல் தில்லைப் பதியில் வந்து தை மாதத்தில்
குரு பூசத்தில் பகல் நேரத்தில்
தாம் ததிகிட தகஜம் தகணம் திரிதோம் தித்ருஜோம்
தகஜம் தரிணம் ததினுஜ தாரம் தத்தனு துது தைய தைய
த்த்கிட தான தக்கிட திடதாம் தத்தோம் திடதோம் என்று
அட்ட திசையும் கிடுகிடுங்க சேடன் தலை நடுங்க
அண்டமதிர கங்கைத்துளி சிதற கொண்டாரடும் கொண்டாட
இட்டமுடனே கோபால கிருஷ்ணன் பாட சடையாட
அரவ படமாட தோளில் தொடியாட தொந்தோமென்று
பல வேகத்தில் தந்தோமென்று
, தில்லையிலே கனக சபை அமைத்து அம்மை சிவகாமியுடன் முதன் முதலில் ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசம் ஆகும், சிவபெருmaaனின் நெற்றிக் கண்ணிலிருந்து உற்பவித்த பால நேத்ர முருகப்பெருமானுக்கே உரிய சிறப்பான விழாவாக தைப்பூச விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. குன்று தோறும் குடியிருக்கும் குமரனுக்கு அன்று உண்மையிலேயே கொண்டாட்டம். தமிழகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா, வேல் முருகா, வெற்றி வேல் முருகா, என்று ஊனும், உள்ளமும் உருக பாத யாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாள்.
முருகப்பெருமான் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள், முருகப்பெருமான் வள்ளி நாயகியை மணந்த நாள் என்று பல்வேறு ஐதீகங்களால் தைப்பூசம் முருகன் திருத்தலங்களில் கொண்டாடப்படுகின்றது. தட்சன் நடத்திய முறையற்ற யாகத்தில் கலந்து கொண்டதற்காக தேவர்கள் எல்லாம் சூரபத்மனின் மூலம் துன்பப்பட்டுக் கொண்டிருந்து போது , தேவ குரு வியாழ பகவானின் அறிவுறையின் பேரில் மத்தமும் மதியமும் அணியும் அரன் மகன் அழகன் முருகனிடம் என்று தங்கள் குறையை முறையிட்ட நாள் என்பாரும் உண்டு. பின் ஏறு ஊர்வார் ஏறு ஸ்கந்தப் பெருமான் சூரர்களை அழித்து சகலருக்கும் அருள் பாலித்தார். அது போல இந்நாள் நாமும் நம் குறைகளை அந்த ஞான தண்டாயுத சுவாமியின் திருப்பாதங்களில் சம்ர்பிக்க அவர் அவற்றை நீக்கி அருளுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பழனி, மருதமலை முதலிய தலங்களில் திருத்தேரோட்டம் நடை பெறும் நாள். எண்கண் தலத்திலே 10 நாள் பிரம்மோற்சவம், தைப்பூசத்தன்று தீர்த்தவாரி , ஆறுமுகப் பெருமானின் சபா அபிஷேகமும் காணக்கிடைக்கும் இன்று. வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன் என்று ஜீவ காருண்யத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த வள்ளலார் அந்த அருட் பெருஞ்ஜோதியுடன் ஜோதியாக கலந்த நாள். வடலூரிலே ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காணும் நாள். இந்த மானுட வாழ்வின் நோக்கம் அந்த ஜோதி வடிவான இறைவனுடன் நாமும் நமது மலங்களை ஒழித்து ஜோதியாக சேர வேண்டும் என்பதை உணர்த்தும் நாள். திருவிடை மருதூரிலே மஹாலிங்கேஸ்வரர் பத்து நாள் பெருவிழாக் கண்டருளி காவிரியில் தைப்பூசத்தன்று தீர்த்தவாரி கண்டருளுகின்றார்.
இராஜ அலங்காரத்தில் ஞான தண்டாயுதபாணி சுவாமி
பழனி, குன்றக்குடி, திருப்புடை மருது‘ர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, திருப்பரங்குன்றம் முதலிய தலங்களில் தைப்பூச பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. திருநெல்வேலியிலே தாமிர சபா நடனம் தந்தருளுகின்றார் ஆடல் வல்லான். கருமாரியாக சுயம்புவாக எழுந்தருளி அம்மை அருள் புரியும் திருவேற்காட்டிலே அம்மனுக்கு பிரம்மோற்சவமும், தெப்ப உற்சவமும் தைப்பூசத்தை ஒட்டித்தான். அங்கயற்கண் அம்மை உடனுறை ஆலவாய் அண்ணல் எழுந்தருளி அருள் பாலிக்கும் மதுரையில் பத்து நாள் உற்சவம் இத்திருவிழாவிலே சொக்க நாதப்பெருமான் வலை வீசி மீன் பிடித்த லீலை, நாட்கதிரறுப்பு விழா முதலியன கண்டருளி தைப்பூசத்தன்று வண்டியூர் எழுந்தருளிப்போற்சவம் கண்டருளுகிறார். திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக்கோவில், சைதை காரஸ்வரர் திருக்கோவில், குன்றக்குடி , திருப்புடை மருதூர் முதலிய தலங்களில் தெப்போற்சவம் நடை பெறுகின்றது
பெரிய தங்க மயில் வாகன சேவை
ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் கோபம் கொண்டு கார்த்திகேயன் வந்த தலமான திருஆவினன்குடியின் திருவிழாக்கள் இரண்டு ஒன்று தைப்பூசம் , பக்தர்களின் நடைப்பயணத்திற்க்கு புகழ் பெற்றது. இரண்டாவது பங்குனி உத்திரம் முருகனுக்கு விருப்பமான காவடிக்கு பேர் போன விழா. பழனியில் தைப்பூசம் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. உற்சவத்தின் முதல் நாள் காலை பெரிய நாயகி அம்மன் ஆலயத்தில் கொடியேற்றம். வேல் மயில் வளர் பிறை வரையப்பட்ட மஞ்சள் கொடி ஏற்றப்படுகின்றது. உச்சிக் காலத்தில் மலைக் கோவிலில் காப்புக்கட்டுதல். திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் , விளா பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்கின்றன. மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு,புதுச்சேரி சப்பரம், பெரிய த்ந்தப் பல்லக்கு, பெரிய தங்க மயில் வாகனம் என்று வாகன சேவை தந்தருளுகின்றார் முத்துக்குமார சுவாமி. ஆறாம் நாள் மாலை இரவு 7.30 மணிக்கு வள்ளி, தெய்வநாயகி, முத்துகுமார சுவாமி திருக்கல்யாணம், பின் வெள்ளித் தேரோட்டம், ஏழாம் நாள் தைப்பூசத்தன்று மஹா தேரோட்டம். காலை 11 மணிக்கு முத்துகுமார சுவாமி திருத்தேரில் எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், நான்கு வீதிகளில் தேரோட்டம். பத்தாம் நாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முக நதியில் தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தெப்பத்தில் தெப்பத்தேர் நிகழ்ச்சி என்று பழனியிலே தைப்பூசம் சிறப்பாக கொண்டாதப்படுகின்றது. தைப்பூசத்தின் போது முருகனைக் காண நடந்து வரும் பக்தர்கள் இலடச்சக்கணக்கானோர்.
தைப்பூச தேர்
புலம் பெயர்ந்த தமிழர்களாலும் தங்கள் இஷ்டதெய்வத்தை மறக்க முடியவில்லை. வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா! வடிவேலன் துணை இல்லாமல் சிறல்லவில்லை முருகா என்று சிங்கப்ப்பூர், மலேசிய. மொரீஷிய தமிழர்கள் (சீனர்களும் கூட) பத்தினி இருவரை விட்டுவிட்டு பாய்மரக் கப்பலில் வந்த முருகனுக்காக காவடி எடுத்தும், அலகு குத்தியும் கொண்டாடும் தைப்பூச திருநாளில் தமிழெடுத்து அருணகிரி நாதர் அருளிய ஒரு திருப்புகழைப் பாடி மகிழ்வோம்.
நாத விந்துக லாதீந மோநம
வேத மந்த்ரசொ ரூபாந மோநம
ஞான பண்டித சாமீந மோநம
வெகுகோடி
நாம சம்புகு மாராந மோநம
போக அந்தரி பாலாந மோநம
நாக பந்தம யூராந மோநம
பரசூரா
சேத தண்டவி நோதாந் மோநம
கீத கிண்கிணி பாதாந மோநம
தீர சம்ப்ரம வீராந மோநம
கிரிராச
தீப மங்கள சோதீந மோநம
தூய அம்பல லீலாந மோநம
தேவகுஞ்சரி பாகாந மோநம
அருள் தாராய்
ஈத லும்பல கோலால பூசையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு
மறவாத
ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம னோகர
ராச கெம்பிர நாடாளு நாயக
வயலூரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமுன் நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி
லையேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்நன் நாடதில்
ஆவி னன் குடி வாழ்வான தேவர்கள்
பெருமாளே.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
4 comments:
பழனியாண்டவரின் ராஜ கம்பீரத் திருக்கோலம், அதுவும் சிவலிங்கப் பின்னணியில் மிகவும் அருமை கைலாஷி ஐயா!
முருகன்-ஈசன்-அம்மை என்று அவரவர் நிகழ்வுகளை ஒட்டிய தைப்பூசம் பற்றிய தகவல்களுக்கும் நன்றி!
நன்றி KRS அவர்களே.
Mikka nandru
Thank You.
Post a Comment