Tuesday, May 22, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -25

குதிரை லாயம் அடுத்து சுங்கச்சாவடி

சென்ற வருடம் திருக்கேதாரீஸ்வரரை தரிசனம் செய்ய முடியவில்லை என்பதால் இந்த வருடமும் திரும்பி வந்தோம் அவர் தன் கருணை மழையை  வர்ஷித்து அருளினார் ஆகவே அவனருளால் அவன் தாள் வணங்க மலைப்பாதையிலே புறப்பட்டோம். யமுனோத்ரியில் வெறும் ஐந்து கி,.மீ தூரம்தான் நடைப்பயணம் ஆனால் இங்கோ பதினான்கு கி.மீ நடைபயணம். இரு நெடிதுயர்ந்த மலைகள் இரண்டு மலைத்தொடர்களுக்கு இதையில் பொங்கி நுப்பும், நுரையுமாக பாய்ந்து வரும் மந்தாங்கினி நதி. வழியெங்கும் இயற்கையன்னையின் எழிற் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இரு பக்கமும் எண்ணற்ற நீர் வீழ்ச்சிகள் சிற்றரசர்கள் சக்ரவர்த்திக்கு கப்பம் கட்டுவது   போல தங்களுடைய தண்ணீரைக் கொண்டு வந்து மந்தாங்கினியில் சேர்க்கின்றன. இந்த தண்ணீர் எல்லாம் பனி உருகுவதால் உண்டானவை எனவே வருடம் முழுவது தண்ணீர் இருந்து கொண்டே இருக்கின்றது. 

 நர நாராயண மலைச்சிகரம் 
மலைப்பாதையின் இரு புறமும் மலை ஏறுபவர்கள் சிரமபரிகாரம் செய்வதற்காக, தேநீர், சிற்றுண்டி கடைகள் அமைந்துள்ளன.  இங்கு கவனித்த இன்னும் ஒரு அருமையான சௌகரியம். குடி தண்ணீர் வசதியும், கழிவறை வசதியும் பாதையெங்கும் அமைத்துள்ளனர்.  அதிக தூரம் என்பதால் அதிக நேரம் மலை ஏற வேண்டும் என்பதால்  இவ்வளவு வசதிகளை செய்திருக்கின்றனர். இரு பக்கமும் பச்சை கம்பளம் போர்த்தியது போல் உள்ள மலைத்தொடர்களில் நெடிதுயர்ந்த மரங்கள், பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள், பாய்ந்து வரும் வெள்லி அருவிகள் என்று இயற்கை அழகை இரசித்துக்கொண்டே மலையேறுகிறோம். 
இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்
  இருக்கொடு தோத்திரம்  இயம்பினர் ஒரு பால்
துன்னிய பினை மலர்க் கையினர் ஒரு பால்
  தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால் . . . .
என்று சிவபெருமானையே குருவாகப் பெற்ற மாணிக்கவாசப் பெருமான் தமது திருப்பள்ளியெழுச்சியிலே பாடியபடி நடந்தே மலையேறி ஐயனைக்காண வருபவர்கள் , குதிரையேறி ஒய்யாரமாக, பய‘ன்து கொண்டே வருபவர்கள்,  பல்லக்கில் அமர்ந்து வருபவர்கள், பிட்டு என்னும் கூடையில் வருபவர்கள், மேலும் சாமான்களை தங்களின் தோளிலும், தலையிலும் சுமந்து வரும் அன்பர்கள் என்று அனைவரும்  ஒரே பாதையில் போட்டி போட்டுக்கொண்டு எறுகின்றனர். வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் சப்தங்கள், சோ என்று ஓடிக் கொண்டிருக்கும் மந்தாங்கினியின் சப்தம், குதிரைகளின் குளம்படி சத்தம், அதனை வழி நடத்தும் வழி காட்டிகளின் அதட்டல் ஒலி, பக்தர்கல் எழுப்பும் ஜெய் கேதார்நாத் ஜீ கீ ஜெய், ஓம் நமசிவாய என்னும் கோஷம், இவற்றுடன் தலைக்கு மேல் பறந்து செல்லும் ஹெலிகாப்டர்களின் சத்தம் இந்தக் கலவை சப்தத்துடன், கேதார ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக மலையேறிச் சென்றோம்.
குதிரையில் பயணம் செய்யும் இரவி அவர்கள்

முன்னரே கூறியது போல ஃபாடா, குப்த காசி, டேராடூன் ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. கேதாரத்தில் பைரவர் ஆலயத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் தளம் உள்ளது. ஹெலிகாப்டரில் வருபவர்கள் ரூ.1000/- சிறப்பு தரிசன  அனுமதி சீட்டு பெற்றுக்கொண்து உடனே தரிசனம் முடித்து விட்டு திரும்பிச் செல்கின்றனர்.  

வளைந்து செல்லும் மலைப் பாதையில் 
தொங்கும் பாறைகள்

ராம்பாராவில் சிற்றுண்டி
 நடு நடுவே நீர் வீழ்ச்சிகள் கடக்கும் இடங்களில் தகரத்தால் ஆன பாலங்கள், கிளம்பி சுமார் 4  கி. மீ தூரத்தில் அப்படி ஒரு பாலத்தை தவிர்க்க குதிரை மலையோரம் செல்ல, அதனால் பயந்து விட்ட ஒரு இளம் பெண் குதிரைக்காரனிடம் சரியாக குதிரையை நடத்திச்செல் என்று சொல்லிக்கொண்டிருந்த போது, பின்னே அந்தப் பெண்ணின் கணவணுடன் குதிரையில் வந்த கொண்டிருந்த குழந்தை அம்மா என்றி அழைக்க அந்த அம்மாவின் முகத்தில் வந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்ல.  இளம் தம்பதியர் பலர் சிவபெருமானின் அருள் பெற கைகோர்த்துக் கொண்டு பொறுமையாக மலை ஏறினர். அருவிகளின் பெயர்கள் சிவபெருமானின் நாமங்களாக உள்ளன.  மலை ஏற ஆரம்பித்த போது மேகங்களே இல்லை நல்ல வெயில் இருந்தது  ஆனால் சிறிது நேரத்திலேயே எங்கிருந்தோ மேகக்கூட்டம் வந்து சீதோஷண நிலை  மோசமாகி விட்டது , எனவே ஹெலிகாப்டர் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. குளிர் காற்று வீசியதால் மலை ஏறி வருபவர்களுக்கு இதமாக இருந்தது. வளைந்து வளைந்து மேலே ஏறும் போது மலைப்பாதை குறுகலாகிக்கொண்டே சென்றது. இது நாம் மலை  சிகரத்தை  நெருங்குகின்றோம் என்பதை உணர்த்தியது. 

தகரப் பாலங்கள் 

மந்தாங்கினி மாதா ஆலயம்

இவ்வாறாக மிக்கார் அமுதுண்ண தான் ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டரின் தரிசனம் காண மலையேறி ராம்பாடாவை அடைந்தோம். நடந்த வந்த களைப்பு தீர சிறிது நேரம் அங்கு இளைப்பாறினோம். காலை சிற்றுண்டி அளவாக உண்டோம் தேநீர் அருந்தினோம். பின்னர் மலையேற்றத்தை தொடர்ந்தோம். இப்பாதையில் ஒன்றை கவனித்தோம். குதிரைகள் தினமும் இதே பாதையில் செல்வதால்  மிகவும் சரியாக அதன் பாதையில் செல்கின்றது ஒரு இடத்தில்தான் தண்ணீர் குடிக்கின்றது, சிறுநீர் கழிப்பதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான்  என்று வழக்கப்படுத்திக் கொண்டுள்ளன. நம் ஊரில் ஆட்டோ உரிமையாளர்கள் ஒருவரும் ஓட்டுநர் ஒருவராகவும் உள்ளது போல குதிரை சொந்தக்காரர்கள் ஒருவராக இருக்க குதிரை நடத்துபவர்கள் இப்பகுதி இளைஞர்கள், இவ்வாறு இங்கு மலையேற்ற அவசியத்தினால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிட்டுகின்றது. 

 இறுதியில் ஐயனின் தரிசனம் 


மலர்களே! மலர்களே!

ராம்பாராவில் இருந்து கருட்சட்டியின் கட்டிடங்கள் கண்ணில் படுகின்றன. அதுதான் கேதார்நாத் என்று எண்ணி மலையேறினோம். அங்கு சென்றபின்னர் தான் அது கருட்சட்டி என்று தெரிந்தது. அங்கு கருடபகவானுக்கு ஒரு சிறு கோவில் உள்ளது. மேலே செல்ல செல்ல பாதை குறுகலாகிக்கொண்டே சென்றது மேலும் செங்குத்தாகிக் கொண்டே  சென்றது. இவ்வாறு கேதார்நாத்தை நெருங்கும் போது திருக்கேதாரத்தின் கோபுர கலசம் கண்ணில் பட்டது மனதில் மகிழ்ச்சியுடன் மந்தாங்கினியை கடந்து அதன் கரையில் உள்ள மந்தாங்கினி மாதாவை வணங்கி விட்டு திருக்கேதாரீஸ்வரரின் சன்னதி தெரு அடைந்து ஐயனின் திருக்கோவிலைக் கண்டு வணங்கினோம். ஐயனின் தரிசனம் எவ்வாறு அமைந்தது அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.

6 comments:

பழனி.கந்தசாமி said...

//குதிரையேறி ஒய்யாரமாக, பய‘ன்து கொண்டே வருபவர்கள்//

குதிரையேறி வருவது ஒய்யாரமல்ல. அனுபவித்தால்தான் தெரியும் அதன் வேதனை.

Kailashi said...

//குதிரையேறி வருவது ஒய்யாரமல்ல. அனுபவித்தால்தான் தெரியும் அதன் வேதனை//

உண்மைதான் ஐயா. முன் ஒரு பதிவில் குதிரையில் வருபவர்களின் அனுபவங்களை எழுதியுள்ளேன்.

Sparkarts Sparkarts said...

மிக அருமையாக உள்ளது

Logan said...

பல உபயோகமான தகவல்களுடன், மிக அழகாக விவரித்துள்ளீர்கள் ஐயா

Kailashi said...

மிக்க நன்றி,spark arts ஐயா.

Kailashi said...

மிக்க நன்றி LOGAN ஐயா.