Sunday, May 13, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24


திருக்கேதாரம்
பனி மூடிய சிகரங்களுக்கிடையே
இமாலயத்தில் திருக்கேதாரம் 

 திருக்கேதாரம் இமய மலையில்   வட நாட்டில் இருந்த போதும் பாடல் பெற்ற தலம்அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளூடையபிள்ளை திருஞானசம்பந்தரும், எம்பிரான் தோழர் சுந்தரரும்  திருக்கேதாரத்திற்கு பதிகம் பாடியுள்ளனர்பாரத          தேசமெங்கும் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று இந்த தலம். பரதகண்டமெங்கும் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்கள்

1.சௌராஷ்டிரே சோமநாதம் :
குஜராத் மாநிலத்தில் கடற்கரை ஓரம் சோமனாதத்தில் சந்திரன் வழி பட்ட சோமனாதராய் தழல் தூணாய்  சோமநாதராய்  எழுந்தருளி அருள் பாலிக்கின்றார், கல்லுயிராய் நின்ற கனலே  என்று இறையருளால் செந்தமிழ் ஞானமும் இசை பாடும் ஆற்றலும் பெற்ற வாகீசர் என்னும் திருநாவுக்கரசர்  பாடிய எம்பெருமான்.

2. ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம் :
ஆந்திர பிரதேசத்திலே மல்லிகார்ஜுன பர்வதத்திலே  மஹா லக்ஷ்மி, முருகர் வழிபட்ட ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி என்று ஓங்காரம் உணர்ந்த மாணிக்க வாசகர் பாடிய  எம்பருமான் ஜோதி ரூபனாய் மல்லிகார்ஜுனராய்  எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

3:உஜ்ஜன்யாம் மகாகாளம் :
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினி நகரத்தில்  சிப்ரா நதிக்கரையில் மஹா காளி பூசித்த        எம்பெருமான் நள்ளிரவில் சுடு காட்டு சாம்பல் அபிஷேகம் காணும் மஹா காளேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

4. ஓங்காரம் மாமலேஷ்வரம் :
மத்திய பிரதேசத்தில் இந்தூருக்கு அருகே பாண லிங்கங்கள் நிறைந்த நர்மதை நதிக்கரையில்  சுயம்பு மூர்த்தியாய் அமலேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எம்பெருமான்.

5. பரல்யாம் வைஜ்யனாதம் :
மஹாராஷ்டிர மாநிலத்தில்  பரலியில் நோய்களை எல்லாம் நீக்கும் பரம வைத்தியராய் வைத்தியநாதராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

6. டாகின்யாம் பீமசங்கரம் :
மஹாராஷ்டிர மாநிலத்தில் புனேக்கு அருகே உள்ள பீமசங்கர மலையில்  அசுரன் பீமன் வழிபட்ட ஜோதி லிங்கமாய் அருள் பாலிக்கின்றார்.7. சேதுபந்தே து இராமேஷம் :
தமிழக்த்திலே கடற்கரையிலே இராம பிரான் சேதுபந்தனம் செய்த இராமேஸ்வரத்தில்,     ஸ்ரீ இராமர், சீதாதேவி வழிபட்ட  இராமேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

8. நாகேஷம் தாருகாவனே:
 மஹாராஷ்டிர மாநிலம்  ஒளண்டாவிலே நாக தெய்வம் வழிபட்ட நாகேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் எம்பெருமான். தேவதாரு மரங்கள் நிறைந்த தாருகா வனமாம் உத்த்ராகண்ட மாநிலம் ஜாகேஸ்வரத்தில் நாகேஸ்வர ஜோதி லிங்கமாய்          எம்பெருமான் எழுந்தருளி உள்ளார் என்பாரும் உண்டு.

9.வாரணாஸ்யாம் து விஸ்வேஷம் :
 உத்திர பிரதேஷ மாநிலத்தில் கங்கை  நதி தீரத்தில்  இறக்க முக்தி தரும் காசியில், அம்மை விசாலாக்ஷயாயும், அன்ன பூரணியாகவும் அருள் கொடுக்கும் வாரணாசியில், கால பைரவர் காவல் காக்கும் புண்ணிய பூமியில் விஸ்வனாதராய் அருட்காட்சி தருகின்றார்.

10. த்ரயம்பகம் கௌதமீதடே :
மஹாராஷ்டிர மாநிலத்தில்  நாசிக் நகருக்கு அருகில் நர்மதை நதி உற்பத்தியாகும் த்ரயம்பகேஸ்வரத்தில் மும்மூர்த்திகள் பூசித்த எம்பெருமான் மும்மூர்த்தி ரூபமாகவே எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

11. ஹிமாலயே து கேதாரம் :
உத்தராகாண்ட் மாநிலத்தில் அன்னை பார்வதியின் தாய் வீடாம், ஹிமவான் நாடாம் பனி நிறைந்த இமய மலையிலே  திருக்கேதாரத்தில்,   உமா தேவியார்  கேதார விரதம் அனுஷ்டித்த போது  சுயம்பு லிங்கமாய் தோன்றிய எம்பெருமான் கேதாரீஸ்வரராய் அருள் பாலிக்கின்றார்.

12. குஷ்மேஷம் சிவாலயே :
மஹாராஷ்டிர மாநிலம் எல்லோராவிலே  பராசக்தி வழிபட்ட ஜோதி லிங்கமாய் கிராணேஸ்வரராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

அவரே ஜம்மு காஷ்மீர் மாநிலம்  அமர்நாத்தில் பனி லிங்கமாகவும், பாணலிங்கமாகவும், திருபாச்சிலாசிரமத்திலே மூங்கில் லிங்கமாகவும் நெல்லை மாவட்டம் பாபனாசத்தில் ருத்ராக்ஷ லிங்கமாகவும்எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
 
  திருக்கேதார கோபுரம் பகலிலும் இரவிலும் 


 
திருக்கேதாரத்தில் ஈசன் ஒரு மலை உச்சியாக சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவரை  உமையம்மை, விஷ்ணு, பரசுராமர், நர நாராயணர்கள், கண்ணன், கௌதம முனிவர், பாண்டவர்கள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். ஐயன் கேதாரீஸ்வரர், கேதார நாதர், கேதார கிரீசன் என்று அழைக்கப்படுகின்றார்தற்போதைய உத்தராகண்ட் (உத்தராஞ்சல்) மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில்  கடல் மட்டத்திலிருந்து 3584 மீட்டர் அதாவது சுமார் 11800 அடி உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில், மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில்  ருத்ர இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது திருக்கேதாரம் என்னும் கேதார்நாத் தலம்.   சமோலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 200 சிவாலயங்கள் உள்ளன அவற்றுள் மிகவும் முக்கியமானது திருக்கேதாரம் ஆகும்.

இமய மலையில் உள்ள பாடல்  பெற்ற தலங்களுள் ஒன்று இத்தலம்திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரர்  தேவாரப்பாடல் பெற்ற தலம் இருவரும் திருக்காளத்தியிலிருந்து  இத்தலத்தைப்பற்றி பாடியுள்ளனர். இமய மலையில் உள்ள மற்ற பாடல் பெற்ற  தலங்கள்       கௌரி குண்டம், இந்திர நீல பர்வதம்,  திருக்கயிலாயம் ஆகியவை  ஆகும்.   கருட புராணத்தில் பாவமனைத்தையும் போக்கும் தலம் என்று திருக்கேதாரத்தைப்பற்றி கூறப்பட்டுள்ளது. சிவ புராணத்தில் திருக்கேதாரத்தை  தரிசனம் செய்யாத பிறவி  பயனற்றது என்றும் இங்கு இறைவனை தரிசனம் செய்தவர்கள் எவ்வளவு மஹா பாவியாக இருந்தாலும் புனிதமடைவான் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தில் ஒரு அத்தியாயம் இந்த கேதார க்ஷேத்திரத்தின் மகிமையை கூறுகின்றது.                                                                                                                                                                              
 

கேதாரம் என்ற சொல்லுக்கு பனி, மயில், வயல் வெளி நீர் நிலை என்று பல பொருட்கள் உண்டுகேதம் என்றால் வடமொழியில் துன்பம் என்று பொருள். கேத+ஹர+ஈஸ்வரர் என்றால் நம் துன்பங்களை நீக்குவதில் தலைவர் என்பது பொருள். கேதார முனிவர் வழிபட்டதால் கேதாரீஸ்வரர் என்ற நாமம் என்பதும் ஐதீகம். கேதாரம் என்றால் கவலை நீக்குதல் என்று பொருள். சுயம்பு பாறையே இங்கு ஜோதிர் லிங்கம். பிரமிட்  வடிவில் சேவை சாதிக்கின்றார் எம்பெருமான். கங்கை நதி மற்றும் கௌரி தேவி உருவாக்கிய கௌரி குளம் ஆகியவை தீர்த்தங்கள். கௌரி குளம் வரை பேருந்தில்    செல்லலாம். கேதார பர்வதம்       செல்ல மந்தாங்கினி நதியின் கரையோரமாக பாதை     செல்கின்றது மந்தாங்கினி நதி அமைதியாக பாய்கின்றது  அதன் அழகை ரசித்துக்   கொண்டே அது ஓடும் அந்த சங்கீதத்தை இரசித்துக் கொண்டு பயணம் செய்வதே ஒரு அலாதி இன்பம். ராம் பாடா என்ற கிராமத்தில்  சிற்றுண்டி கிடைக்கின்றது.

 ஐயனை தரிசிக்க செல்லும் வைத்தி அவர்கள் 

கௌரி குண்டத்திலிருந்து   14 கி,மீ நடைப்பயணம் தான், உயர்ந்த பனி சூழந்த பகுதியில் நடந்து செல்ல முடியாதவர்கள் குதிரையிலோ, பல்லக்கு அல்லது கூடை ஆகியவற்றிலோ செல்லலாம். இமயமலையின் ஒரு உச்சியில் சுமார் 12000 அடி உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் எனவே சித்திரை மாதம் அட்சய திரிதியை நாளிலிருந்து தீபாவளி வரை மட்டுமே ஐயனை திருக்கேதாரம் சென்று தரிசிக்க முடியும். அதுவும் பருவ மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் போது யாத்ரீகள் சில சமயம் துன்பத்திற்க்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. தீபாவளியன்று கோவில் மூடப்பட்டு நந்தா விளக்கு என்னும் நெய் தீபம்  ஏற்றப்படுகின்றது ஆறு மாதங்கள் மனிதர்களும் ஆறு மாதம் தேவர்களும் கேதாரீஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம்பின் ஐயன் உற்சவ மூர்த்தி ரூபத்தில்   கீழே வந்து ஊக்கிமத் மடத்தில் தங்குகிறார்ஆறு மாதங்கள் கழித்து கோவில் திறக்கும் போது அந்த நந்தா விளக்கு எரிந்து  கொண்டிருக்கும் அதைக்காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். அந்த நந்தா விளக்கை தரிசிப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகின்றது.

திருக்கேதாரத்தின் பல்வேறு காட்சிகள் 

இறைவன் - கேதாரீஸ்வரர்.
இறைவி - கேதாரகௌரி.
சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.
இருவரும் தென்கயிலாயமான திருக்காளத்தியிலிருந்தே இமயமலைச் சாரலில் உள்ள இத்தலத்தைப் பாடித் தொழுதனர்.

இனி இத்தலத்தின் ஐதீகங்களைக் காண்போம்அன்னை கௌரியே ஐயனை கேதாரீஸ்வரராக வழிபட்டு கேதார கௌரி விரதம் அனுஷ்டித்த தலம்.  21 தலைமுறை சத்திரியர்களை சாய்த்த பரசுராமர் வழிபட்ட ஈசர் கேதாரீஸ்வரர். கௌதமர் அகலிகைக்கு சாபம் கொடுத்தபின் இமயமலை வந்து கேதாரீஸ்வரரை வழிபட்டு தவம் செய்தார். நரநாரயணர்கள் இருவரும் வழிபட்ட ஈசர். அவர்கள் இருவரும் செம்மையான ஜீவகாருண்ய ஆட்சி புரிந்தனர், அவர்கள் மீது அழுக்காறு கொண்ட மாற்று  நாட்டரசன் படையெடுத்து வந்த போது  அவனுடன் போர் புரியாது தங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு  புனித யாத்திரை மேற்கொண்டு கேதாரீஸ்வரரை ஸ்தாபிதம்  வழிபட்டு தவம் செய்தனர். அவர்களின் தவத்தின் கடுமையைக் கண்ட இந்திரன் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று அவர்கள் தவத்தை கலைக்க தேவ கன்னியை அனுப்பினான், அவர்கள் தங்கள்     தொடையிலிருந்து அவளை விட அழகான ஊர்வசியைப் படைத்து அவளுக்கு நல்லுரை கூறி அனுப்பினர். சிவனடியார்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்த்தினர். பின் இருவரும் இறைவனுடன் கலந்தனர், கேதார மலையை பின் பக்கம் மலைச் சிகரமாக இருவரும் இன்றும் விளங்குகின்றனர். மஹா பாரதப்போருக்குப் பின் கண்ணபிரான் வந்து வழிபட்டதாகவும் ஐதீகம் உள்ளது. துர்வாச முனிவரின் சாபம் பெற்ற விஷ்ணு பூமிக்கு வந்து இமயமலையில் கேதாரநாதரை நோக்கி தவம் செய்த போது  மஹாலக்ஷ்மி துணையாக பத்ராட்சை மரமாக காவல் இருந்தாள் எனவே அத்தலம் பத்ரிநாத் எனப்பட்டது. ஆதி கேதாரீஸ்வரரின் ஆலயம் பத்ரி நாதர் தலத்திற்கு எதிரே உள்ளது.

பாண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு இத்தலத்திற்கு உண்டு. பாசுபதாஸ்திரம் பெற அர்ச்சுனன் வந்து தவம் செய்த தலம் மற்றும் தெய்வீகக்  கல்யாண தாமரை மலரைக் கண்டு பீமனை அதைக் கொய்து வர கூறுகின்றாள் அவ்வாறு வந்த போது தான் அனுமனை  பீமன் சந்தித்ததாக ஐதீகம்ஆவணி மாதத்தில் பிரம்ம கமல் என்று அழைக்கப்படும் பெரிய தாமரை மலர்கள் இப்பகுதியில் மலர்கின்றன. அம்மலர்களை கேதாரீசருக்கு    சமர்ப்பணம் செய்யும் பக்தர்கள் அநேகம். வட இந்தியர்களின் சிரவண் மாத பௌர்ணமியன்று கேதாரீஸ்வரருக்கு பிரம்ம கமல் மலர்களால்  சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது. அதற்கு முதல் நாள் சதுர்த்தசியன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.  
நந்தியெம்பெருமான்

தற்போது உள்ள கோவில் 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களால் கட்டப்பட்டது அதற்கு அருகிலே பாண்டவர்கள் கட்டிய கோவில் உள்ளது. திருக்கேதாரம் பாண்டவர்களுடன் தொடர்புடையது. மஹா பாரதப் போரில் தமது சகோதரர்களையே      கொன்றதனால் பாண்டவர்கள் கோத்ரா ஹத்யா என்னும் பாவத்திற்கு ஆளாகின்றனர், பாவ விமோசனம் பெற அவர்கள் சிவ பெருமானை தரிசிக்க செல்கின்றனர்காசியில் பரம் கருணா மூர்த்தி இல்லாததால் அவர்கள் கைலாயத்தில் உள்ள பெருமானைக் காண இமயமலை வருகின்றனர்அவர்களை ஹரித்வார் அருகில் கண்ட அந்த நீலகண்டர்  அவர்களுக்கு தரிசனம் தர விரும்பாமல்  மறைந்து விடுகிறார்.    இதைக்கண்ட தர்மர் இவ்வாறு கூறுகின்றார், " பிரபோ! நாங்கள் பாவம் செய்திருக்கின்றோம் அதற்காகவே தங்களை தரிசித்து பாவ விமோசனம் பெற வேண்டி தங்கள் பாதம் பணிய வந்தோம், ஆயினும் தாங்கள் இன்னும் மனமிரங்கவில்லை, தங்கள் திருவடி தரிசனம் தந்தே ஆக வேண்டும் , தாங்கள் மறைந்த இந்த இடம் குப்த காசி என்று அழைக்கப்பட வேண்டும்" என்று வேண்டினார். குப்த காசியிலிருந்து பாண்டவர்கள் கௌரி குண்டத்தை அடைகின்றனர். அங்கு ஒரு மாட்டு மந்தையில் ஒரு காளையை ( எருமை என்பாரும் உண்டு) நகுல சஹாதேவர்கள் காண்கின்றனர் அதன் கம்பீரத்தைப் பார்த்து சிவபெருமானே இவ்வாறு உருமாறி சோதிக்கின்றார் என்பதை உணர்ந்த அவர்கள் பீமனிடம் கூற பீமனும் தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அந்த காளையைத் துரத்த தொடங்குகின்றான். அவனிடமிருந்து தப்பிக்க எம்பெருமான் ஓட ஆரம்பிக்கின்றார். அவனிடமிருந்து தப்பிக்க எம்பெருமான் பூமிக்குள் பாய்கின்றார் ஆயினும் பீமன் அவரது திமிலைப் பிடித்து விடுகின்றான். அந்த இடத்தில் ஜோதிப் பிழம்பாக எம்பெருமான் தோன்றி பாண்டவர்களுக்கு பாவ விமோசனம் வழங்குகிறார், உங்கள் நிமித்தமாக நான் இங்கேயே ஜோதிர் லிங்கமாக விளங்குவேன் இங்கு என்னை தரிசனம் செய்பவர்கள் என்னுடைய பரம பக்தர்கள் ஆவார்கள் என்றும் வரம் தருகின்றார். எனவே அந்த இடத்திலேயே எம்பெருமான் திமிலின் வடிவமாக ஜோதிர்லிங்கமாக கேதாரீஸ்வரராக கோவில் கொள்கின்றார். பாவ விமோசனம் பெற்ற பாண்டவர்கள் பின் மேலே சென்று மோட்சம் அடைகின்றனர்.

 அவ்வாறு ஐயன் பாய்ந்த போது அவரது மற்ற அங்கங்கள் மற்ற இடங்களிலும் வெளிப்படுகின்றனஐயனின் தலை பகுதி வெளிப்பட்ட இடம் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத். தொப்புள் மதுமஹேஸ்வரரிலும், கரங்கள் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், ஜடாமுடி கப்லேஸ்வரிலும் வெளிப்பட்டன. இந்த  ஐந்து இடங்களும் பஞ்ச கேதாரம் என்று அழைக்கப்படுகின்றது.
     


மந்தாங்கினி நதியின் அழகு 

இவ்வளவுதானா ஐயனின் புகழ் இன்னும் உள்ளது மலை இன்னும் ஏற வேண்டியது பாக்கி உள்ளது ஏறிக்கொண்டே  அடுத்த பதிவில் அதைக் காணலாம் அன்பர்களே.

2 comments:

Logan said...

திரு கைலாஷி ஐயா, 12 ஜோதிர் லிங்கங்கள் பற்றியும், பஞ்ச கேதாரம், பற்றியும் மிக அழகாக விவரித்து உள்ளீர்கள். நன்றி ஐயா

Kailashi said...

மிக்க நன்றி LOGAN ஐயா.