Tuesday, October 20, 2020

கோலாகல நவராத்திரி - 4

ஸ்ரீசண்டி மஹிமை


யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள், நோய் நொடிகள் என, எல்லா துன்பங்களையும் போக்கி, அன்னையின் அருளால், நினைத்த வரங்களைப் பெற்று, இன்பமாய் வாழலாம். சுரதன் எனும் அரசன், பூவுலகம் முழுவதையும், நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவனது வளர்ச்சியைக் கண்டு, கோலா வித்வம்சினர்கள் என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர். ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை மற்றும் இதர உடைமைகளையும், அவனது சுற்றத்தாரும், அமைச்சர்களும் எடுத்துக் கொண்டு, அவனை ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால் மனமுடைந்த சுரதன், காட்டுக்குச் செல்கிறான். தனிமையான இடத்தில் இருந்து, நடந்ததை எண்ணி எண்ணி, மனம் சோர்ந்து கொண்டிருந்தான்.அப்போது, அங்கு ஒருவர் தன்னைப் போலவே சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' என, வினவுகிறான். அவரும், தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த செல்வந்தர் என்றும், மனைவி, மக்களே தம்மை ஏமாற்றி, செல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும், அதனால், வாழ்க்கையை வெறுத்து, காட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.

இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட இருவரும், தங்களின் விடிவுகாலம் மற்றும் மோட்சம் பற்றி அறிய, அங்கு தவம் செய்து கொண்டிருந்த, சுமேதஸ் என்ற முனிவரை அணுகி, தங்களது கதைகளை கூறி, துன்பம் நீங்க வழிகாட்டியருளுமாறு வினவினர். முனிவரும், அவர்கள் மீது கருணை கொண்டு, 'அன்னையைச் சரணடைந்தால், உங்கள் துன்பங்கள் அகலும் என்று கூறினார். அரசாட்சியிலும், வியாபாரத்திலும் காலம் செலுத்தி வந்த அவ்விருவரும், அம்பிகையை அறிந்திருக்கவில்லை. எனவே அவர்கள், முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்; அவளின் மகிமைகள் என்ன?' என, வினவினர்.முனிவரும், அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன், மதுகைடபன், மகிஷாசுரன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக, காளி, துர்கை போன்ற அவதாரங்கள் எடுத்து, அசுரர்களை அழித்து, மூவுலகையும் காப்பாற்றிய புராணங்களை அருளினார்.

இவற்றையெல்லாம் கேட்ட அரசனும், வணிகரும், 'அந்த அம்பிகையை வழிபட்டு, நாங்களும் அருள் பெற வழி கூற வேண்டும்' என, வேண்டினர்.'நவராத்திரி தினங்களில், அன்னையின் வரலாறுகளைப் படித்தும், கேட்டும், கொலு வழிபாடு செய்தும், அம்பிகைக்குப் பிரியமான, ஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால், நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம் எனக்கூறினார்.

இருவரும் அவ்வாறே செய்ய, யாக குண்டத்திலிருந்து ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்க, இழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும் வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும், வழிபாட்டிலும் மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்; இதற்கு வரமாக, இப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக ஆண்டும், அடுத்த பிறவியில், சூரியனுக்கு மகனாகப் பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம் முழுதும், உன் பெயரால் உலகை ஆள்வாயாக' என்று வரமருளினாள். தற்போது நடப்பது, உலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில், ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம். அடுத்து வரப்போகும், சாவர்ணிக மன்வந்திரமாக, சுரதன் விளங்கப் போகிறான். வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்; உன்னையே வணங்கி, தவமிருந்து, கண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்' என்றார். 'அப்படியே ஆகட்டும்...' என, அன்னை சங்கரி தேவி வரமளித்த வரலாறு, மார்க்கண்டேய புராணம் எனும் நுாலில் கூறிய வண்ணம், நாமும் சிந்தித்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன் வாழலாம்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்.



நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பகை ஒழியும். இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி | சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் || 

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோ, அந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

                              

சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாக, புலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள். அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம். மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா. சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.

பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |

ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.



 ( ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )

                                                   

மூன்றாம் நாள்

த்ரிதியையன்று  -  வாராஹி

மலர்: சம்பங்கி

நைவேத்தியம் : சர்க்கரை   பொங்கல்

நிறம்: சாம்பல்

கோலம் : பூ கோலம்.

ராகம் : காம்போதி ராகம்

ஸ்லோகம் :

ஓம்  மகிஷத்வஜாய  வித்மஹே  தண்ட ஹஸ்தாய தீமஹி |

தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ||

அம்மன் அருள் பெருகும் . . . 

Sunday, October 18, 2020

கோலாகல நவராத்திரி - 3

சண்டி தேவி

நவராத்திரி புராணம் :


முன்னொரு சமயம்  வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் அவர். இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான். பிரம்மனும் பிரசன்னமாகி அவனுக்கு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்று வினவ அவனும் எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.



துர்க்கை அம்மனுக்கு நவரத்ன கவசம்

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.


அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.


அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.


இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 



நவராத்திரியின் இரண்டாம் நாள் துவிதியையன்று  அன்னையை மூன்று வயது குழந்தையாக பாவித்து  த்ரிமூர்த்தியாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் தனதான்ய வளம் கிட்டும். இன்றைய ஸ்லோகம்


சத்வாதிபிஸ் திரிமூர்த்தியர்த்திர்யா தெளர்ஹி நாதா ஸ்வரூபிணி த்ரிகால வாபினிசக்திஸ் திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

(சத்துவம் போன்ற குணங்களால், அனைத்து ரூபமாக, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்னும் முக்காலங்களிலும் எந்த சக்தி வியாபித்திருக்கிறதோ அந்த த்ரிமூர்த்த்தியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

* * * * *

                                       

                                                                       


                                                                     ப்ரம்ஹசாரிணி
துர்கா

நவராத்திரியின் இரண்டாம் நாள் அன்னையை, இமவான் மகளாக பிறந்து சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்காக தவம் செய்யும் பருவத்தில் கன்னியாக, யோகினியாக, தபஸ்விணியாக ப்ரும்மசாரிணியாகவும் வழிபடலாம். சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் ப்ரம்ஹசாரிணி எனப் போற்றப் பட்டாள். நீல வடிவினாளாக அதாவது பக்தி வசமானவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

 ததாநாகர பத்மாப்யாம் அக்ஷ மாலா கமண்டலூ |

தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அநுத்தமா ||

என்பது ப்ரம்ஹசாரிணி துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

(தனது தாமரைக் கரங்களில் அக்ஷமாலை, கமண்டலம் தாங்கி சச்சிதானந்த நிலையை அருளும் அன்னை ப்ரஹமசாரிணி அடியேனை காக்கட்டும். )

                                                                               ******


சில அன்பர்கள் அன்னையை உமாவை, சைலேந்திர தனையை  கௌரியை இன்று முருகப்பெருமானின் சக்தியாகிய கௌமாரியாக வழிபடுவர். கௌமாரியின் வாகனம் - மயில், கொடி - சேவல், படை  - வேல் ஆகும். 

 துவிதியையன்று  -  கௌமாரி

மலர்: செவ்வரளி

நைவேத்தியம் : புளியோதரை

நிறம்: பச்சை

கோலம் : கோதுமை மாவினால் கட்டங்கள் கொண்ட கோலம்.

ராகம் : கல்யாணி ராகம்

ஸ்லோகம் :

ஓம் சிகி வாஹனாய வித்மஹே  சக்தி ஹஸ்தாய தீமஹி |

தன்னோ கௌமாரி ப்ரசோதயாத் ||

 

அம்மன் அருள் பெருகும் . . . . 

Saturday, October 17, 2020

கோலாகல நவராத்திரி - 2

ஶ்ரீசித்சக்தி மஹிமை

அகில ப்ரஹ்மாண்ட கோடிகளையும் தன் கர்பத்தில் தாங்கும் பராசக்தியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை விசேஷமாக ஆராதிக்க வேண்டிய திருநாள் நவராத்ரி. வசந்த நவராத்திரியில் அவளை பரம ஸௌம்ய மூர்த்தியாக பாவிப்பதும், சரத் காலத்தில் அவளையே சற்றே சினமுடைய கொற்றவையாக பாவிப்பதும் வழக்கம்!!

சண்டிகா பரமேச்வரியாக அம்பாளை பாவித்து பூஜிக்க வேண்டிய புண்ய தினங்களே நவராத்ரி. மென்மையான கொடி போல் துவளும் கரங்களில் தங்கத்தினாலான பாசாங்குசங்களையும், கரும்புவில்லையும் மலர்க்கணைகளையும் ஏந்தியருளும் காமாக்ஷியே, துஷ்ட நிக்ரஹத்திற்க்காக பதினெட்டுக் திருக்கரங்களில் பதினெட்டு ஆயுதங்களைத் தாங்கிய ஶ்ரீசண்டிகா மஹாலக்ஷ்மியாக ஆவிர்பவிக்கிறாள்.


முக்குண ஸம்பந்தமும் துளியுமில்லாத பூரண ஞானரூபிணியே லலிதையாகிற காமாக்ஷி எனில், மூன்று குணங்களும் சரிசமமாக ஏற்றக்குறைச்சல் இல்லாமல் விரவியிருக்கும் ப்ரஹ்மசக்தியே ஶ்ரீசண்டிகை. இரண்டுமே தேவியின் ஒரே ஸ்திதியைக் குறிப்பது என்றும் கூறலாம்!!

அப்படிப்பட்ட லோகாம்பிகையை புண்யமிகு நவராத்திரி சமயத்தில்,  பரையை ஆராதிப்பதைக்காட்டிலும்  உத்தமமானது வேறொன்றுமில்லை.

கருணை மிகுந்த வடிவுடையவளான பராசக்தியை பல்வேறு துதிகளாலும் போற்றிப்புகழ வேண்டிய நாட்கள் எல்லாமே என்றாலும் அதென்ன நவராத்ரி தினங்கள் மட்டும் விசேஷம்!!? என்றால், அம்பிகை பூரண ப்ரஹ்மசக்தியாக, அத்வைத ரூபிணியாக தன்னைத் தவிர வேறொன்றில்லாத ஆத்மஸ்வரூபிணியாக பொலியும் ஒன்பது தினங்களே நவராத்ரி நாட்கள்.

                                    

                                                     

தேவி மாஹாத்ம்யத்தில் ஶ்ரீசண்டிகை சும்பனிடம் கூறுவாள் "மூடனே!! இவ்வுலகில் என்னைத் தவிர உள்ளது எது!! நானொருத்தியே எல்லாமாக விளங்குகின்றேன் என்பதை உணர்ந்துகொள்!!" என்கிறாள் அம்பிகை!!

வேதங்களில் அத்வைதம் எப்படி ஸூசிக்கப்படுகிறதோ, போலே வேத துல்யமான ஶ்ரீசண்டி ஸப்தசதியிலும் அத்வைதமே ஸூசிக்கப்படுகிறது.

உலகிற்கெல்லாம் பெரிய துன்பமிழைத்த மஹாஸுரனான மஹிஷாஸுரனை ஒழிக்க, ஸர்வ தேவர்களும் சேர்ந்து லோகமாதாவான பகவதியைத் துதித்தார்கள்.  ஸர்வ தேவ சரீரங்களிலிருந்து தேஜஸ் கிளம்பி மூலசக்தியான அம்பாளிடம் ஒடுங்கியது. அதைக் குறிக்கவே நாம் கொலு பொம்மைகளை வைக்கின்றோம்!!

ஸர்வ தேவ சரீரங்களிலிருந்தும் சக்திகள் வெளிக்கிளம்பி ஸர்வசக்தி ரூபிணியான ஶ்ரீஅம்பாளிடம் ஐக்யமாகிவிடுவதால், ஸர்வ தேவர்களும் சக்தி ஹீனர்களாக விளங்குவதைக் குறிக்கவே மண்ணால் செய்யப்பட்ட பதுமைகளை வைக்கிறோம்!!

கலசத்தில் பவானியை ஆவாஹனம் செய்து ஆராதிப்பது ஸர்வமங்களங்கும் பெருக காரணமாகும்!! ஶ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரியாக ஶ்ரீலலிதேச்வரியாக அம்பாள் பண்டாஸுரனை ஒழிக்க ஆவிர்பவிக்கும் போது ஸகல தேவர்களும் மஹாசம்புநாதர் இயற்றிய மஹாயாகத்தில் ஆஹுதி ஆனார்கள். மஹாசம்புவான பரமேச்வரன் மட்டுமே ஶ்ரீசக்ரராஜ ரதத்தில் தோன்றிய ஶ்ரீலலிதையை ஆனந்த பாஷ்பம் பெருக கண்டு களித்தார்.

ஶ்ரீதுர்காம்பிகையாக மஹிஷனை ஒழிக்க ஶ்ரீராஜராஜேச்வரி தோன்றிய போது மீள ஸர்வ தேவர்களும், எந்த அம்பாளிடமிருந்து தங்கள் சக்தியைப் பெற்றனரோ, அதே அம்பாளிடமே தங்கள் சக்தி மறுபடி ஒடுங்கக் கண்டனர்.

இரண்டு சரித்ரங்களிலுமே ஏகசைதன்ய மூர்த்தியாக அம்பிகை தானொருத்தியே விளங்கி அசுர நிக்ரஹத்தைச் செய்தனள்.

அம்பிகை சக்தி வடிவினளாக விளங்குவாளாயினும், பூரண ப்ரஹ்ம வடிவினள். பூரண ப்ரஹ்ம நிலையிலே அவள் ஞான வடிவினள். அதனாலே அம்பாளை சைதன்ய ரூபிணி, ஸம்வித் ரூபிணி, பராஸம்வித், கேவலானந்தை என்றெல்லாம் சிவத்தை தனக்குள் ஐக்யமாய்க் கொண்டு விளங்கும் வடிவினைக் கூறுவர்.






அவளே பின் சிவமாகி சக்தியாகி சிவகாமேச்வரராக, சிவகாமேச்வரியாகி விளங்குவள்.  அந்த அத்வைதானுபாவத்தைப் பெறுவதற்கே இந்த நவராத்ரி வழிபாடு. லௌகீகமான சுகமிருப்பினும், ஆத்மீகமான அகண்டாகார வ்ருத்தியைப் பெறவே தன்னைத் தவிர்த்து வேறு இல்லாதவளாகவே உமா தேவியை பூஜிக்க வேணும்!!அம்பாளைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்பதைக் குறிக்கவே ஏக கலசத்தினை ஸ்தாபனம் செய்து, அம்பாளை அதில் ஆவாஹிக்கிறோம்!! அந்த அம்பிகை பரஞானத்தை அளித்து, அத்வைதானுபூதியை அளிப்பாளாக என்று அவளை ப்ரார்த்திப்போம்!! 

* * * * * * * * *

 நவ கன்னிகையாக வழிபடும் போது நவராத்திரியின் முதல் நாள் பிரதமை திதியான  இன்று அம்பிகையை அகில உலகத்தையும் ஆண்டு அருளும் அம்மையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து       குமாரியாக வழிபடுகின்றோம். இவ்வாறு வழிபட தரித்திர நாசம். குமாரியாக அன்னையை வழிபடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.

 1. குமார்ஸ்ய ச தத்வானி யாஸ்ருஜத்யபி ஸீலயா 

காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் || 

(ஒரு குழந்தையைப் போல லீலா வினோதங்களைச் செய்பவளை, பிரம்மன் முதலான தேவர்களை, எந்த சக்தி தனது லீலைகளினால் சிருஷ்டிக்கிறதோ, அந்த குமரியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


 
ஷைலபுத்ரி துர்க்கா

நவ துர்க்கையாக வழிபடும் போது முதல் நாள் அகில உலகத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடும் அன்னையை ஷைலபுத்ரி என்று மலைமகளாக வழிபடுகின்றோம். சதி தேவியாக தக்ஷபிரஜாபதியின் மகளாகப் பிறந்த அன்னை தக்ஷனின் ஆணவத்தின் காரணமாக பின் அந்த உடலை அழித்துக்கொண்டு பின் பர்வத ராஜ புத்ரியாக, மலையரசன் பொற்பாவையாக, கிரிகன்யாவாக, வரை ராசன் கன்னியாக பார்வதியாக, பிறந்த அன்னையாக, நந்தி வாகனத்தில் பவனி வரும் சிவபெருமானின் பத்னியாக வழிபடுகின்றோம். ஷைலபுத்ரியை ஹேமவதி என்றும் அழைக்கிறோம். பசுமை வர்ணத்தவளாக அதாவது இயற்கை ரூபிணியாக வணங்குகின்றோம்.

 
வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம் | 

வ்ருஷாரூடாம் சூலதராம் சைல புத்ரீம் யசஸ்விநீம் ||

என்பது ஷைலபுத்ரி துர்காவின் ஸ்துதியாகும்.

( பிறை நிலவை முடியில் சூடி, நந்தி வாகனமேறி பவனி வரும், திரிசூலதாரி, இமவான் மகளாக அவதரித்த ஒப்புயர்வற்ற ஷைல புத்ரியை என்னுடைய எண்ணங்கள் ஈடேற அடியேன் வணங்குகின்றேன். ) 


ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வாராகஹி.

இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.

சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.  இவ்வாறு நவசக்திகளாக அம்பாளை வழிபடும் போது பிரதமையன்று மகேசுவரியாக வழிபடுகின்றோம். இந்த அம்பாள் சிவனின் அம்சம். ரிஷப வாகனம், திரிசூலம் தாங்கி முக்கண்ணியாக அருள் பாலிக்கின்றாள். 


                            

திருமயிலை கற்பகாம்பாள் மஹேஸ்வரி அலங்காரம் 


பிரதமையன்று  -  மஹேஸ்வரி

மலர்: மல்லிகை

நைவேத்தியம் : வெண் பொங்கல்

நிறம்: மஞ்சள்

கோலம் : அரிசி மாவு

 ஸ்லோகம் :

ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே  சூல ஹஸ்தாயை தீமஹி |

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத் ||


அம்மன் அருள் பெருகும் . . .