Sunday, September 17, 2017

காவிரி மஹா புஷ்கரம்

நேற்று காவிரி மஹாபுஷ்ரத்திற்காக மாயவரம் சென்று துலாகட்டத்தில் நீராடி பின்னர் அபயாம்பிகை சமேத மயூரநாதரையும், ஞானாம்பிகா சமேத வதான்யேஸ்வரரையும் மேதா தக்ஷிணாமூர்த்தியையும், பரிமள நாயகி சமேத பரிமள ரங்கநாதரையும், காசி விஸ்வநாதர் , விசாலாக்ஷி அம்பாள், டுண்டி விநாயகரையும் தரிசனம் செய்து காவிரி அன்னையின்  மாலை  ஆரத்தியையும் தரிசிக்கும்  பாக்கியம் சித்தித்தது.  சில படங்கள் அன்பர்கள் பார்த்து இன்புற பதிவிடுகின்றேன்.  

சித்தி புத்தி சமேத மங்கள விநாயகர் 

நீரின் சிறப்பை முதலில் காணலாம். “நீரின்றி அமையாது உலகு” என்று தமிழ் வேதமாம் திருக்குறளிலே  பாடினார் வள்ளுவப் பெருந்தகை. “தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”  என்பது ஆன்றோர் வாக்கு. தண்ணீரிலிருந்தே பூவுலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் தோன்றின. தண்ணீரிலிருந்து ஒரு செல் கொண்ட உயிரினமான அமீபா முதலில் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து தற்போது மனிதன் வரையிலான உயிர்கள் தோன்றின என்கிறது விஞ்ஞானம். திருமாலின்  தசாவதாரத் தோற்றங்கள்- மனிதன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதேயாகும். (திருமாலின் முதல் அவதாரம் தண்ணீரில் தோன்றிய மச்சாவதாரம்). தண்ணீர் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்கின்றது.

நீரை இறைவனின் வடிவமாக நினைத்து நீர் நிலைகளை போற்றினர் நம் முன்னோர்கள். “ஆர்வுற்ற என்னையொழிய என்னின் முன்னம் பாரித்துத்தான் என்னை முற்றப் பருகினான்” என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது இறைவனை கண்டால் அப்படியே விழுங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவன் அதற்கு முன்பாகவே தனது அன்பால் என்னை நீராக மாற்றி அப்படியே விழுங்கி விட்டான் என்கிறார்.

மாணிக்கவாசகரோ சிவபெருமானை அருள் மழை பொழியும் மேகன் என்கிறார். ஈசனின் ஐந்தொழில்களில் படைத்தல், அழித்தல் இரண்டும் நீரின்  மூலமாகவே நடைபெறுகின்றன. இவ்வுலகம் ஊழியால் அழியும் போது எழும் கடல் அலைகளில் சிக்கித் தவிப்போரிடம் ஈசன் “அலைவாயில் வீழாமல் அஞ்சலென்றானே" என்கிறார் திருமூலர்.

இளகுதல் என்றால் நீர் மிகுத்தல், எப்பொருளும் இளகி விட்டது என்றால் கெட்டித்தன்மை மாறி விட்டது என்று பொருள். மனிதர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக  இருக்க வேண்டுமென்றால் அவர்கள் உள்ளத்தில் அன்பெனும் நீர் பெருக வேண்டும். கருணை கொண்டு வாழ வேண்டுமென்றால் நெஞ்சில் ஈரம் கசிய வேண்டும். மனிதர்கள் இன்பமான வாழ்க்கை வாழ  உடலிலும் உள்ளத்திலும் நீர் வற்றாமல் இருக்க வேண்டும்.

நாரம் + அயனம் = நாராயணம். “நாரம்” என்றால் நீர். “அயனம்” என்றால் மாற்றம். “நாராயணம்” என்றால் உயிர்கள் அனைத்தும் நீரின் மாற்றத்தால் தோன்றியது எனப் பொருள். திடப் பொருளாக உள்ள அனைத்திற்கும் மூலப் பொருளாக உள்ளது நீர்மப் பொருள் தான். நீருக்கு மூலமாக இருப்பது, எல்லாம் வல்ல இறைவனான “நீயே தான்”. அவ்வாறான நாரா + அயணமான உன் திருநாமத்தை,  நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் “நாராயணா” என்னும் நாமம் என்று திருமங்கையாழ்வார் பாடுகின்றார். .

“நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே! ஆராவமுதா!”     -  , என்னை நீராக மாற்றி நான் கரைந்து போகும்படி என்னை உருக்குகின்ற இறைவனே என்பது நம்மாழ்வார் வாக்கு

மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் “மந்திர புஷ்பம்” என்னும் சுலோகம் ஓதப்படுகின்றது. யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22) இந்த மந்திர புஷ்பத்தைக் கொண்டிருக்கிறது.   “ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் சுலோகம்  துவங்குகின்றது. மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய்ச் சொல்லி முடிக்கிறது மந்திர புஷ்பம். ஒன்பதாவது சுலோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது. செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது சுலோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன. தண்ணீரே அனைத்திற்கும் ஆதாரம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றது மந்திர புஷ்பம்.

தண்ணீர் பிரவாகமெடுத்து வரும் நதிகளை வெறும் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் அவற்றை தெய்வமாகவேக் கருதி வழிபடும் வழக்கம், பன்னெடுங்காலம் தொட்டு வழங்கி வருகின்றது. ஆன்மீகம் தண்ணீரை - தீர்த்தம்  என்று மிக உயர்வாகக் கொண்டாடுகின்றது. நீரில்லாத எவ்வித ஆன்மீக வைபவமும் இல்லை. தண்ணீர் கொண்டு தெய்வங்களுக்கு திருமஞ்சனம்  செய்யப்படுகின்றது. அந்நீரே தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தமாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது.  பஞ்சபூதங்களாகிய  ஆகாயம், தண்ணீர், நெருப்பு, காற்று, மண்  இவற்றில் தண்ணீருக்கு மட்டுமே இச்சிறப்பு உண்டு.

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே என்று திருநாவுக்கரசர் சிவபெருமானையே தீர்த்தங்களின் வடிவாக குறிபிட்டுள்ளார். மாணிக்கவாசகரும், “எங்கள் பிராட்டியும் எங்கோனும் எங்கள் பிராட்டியும் போன்றியைந்த பொங்கு மடு” என்றும் ஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்றும் பாடியுள்ளார்.

மகாபாரதக் கதையில் அருச்சுனன் பல தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வரம் பெற்ற செய்திகளை கூறும் சருக்கத்தின் பெயரே தீர்த்த யாத்திரை சருக்கம்.

ஆதி சங்கரபகவத் பாதாள் தாம் அருளிச்செய்த சிவானந்த லஹரியில் புண்ணிய தீர்த்தங்களை சிவதியானத்திற்கு ஒப்பாக வைத்துப் போற்றியுள்ளார்.

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களுக்கு அன்பும், தெளிவும் தவமும் பரஞானமும், இறைவனுக்கு அடிமைத்திறமும் அவருடைய ஏவல்வழி நின்றொழுகும் பெரும்பேறும் கிட்டும்.

அருளு பொருளும் கைகூடும் அவலம் அகலும் கவலையறும்
இருளும் மடியும் மிடியும் போம் ஈறில் செல்வம் தழைத்தோங்கும்
தெருளும் திருவும் குடிகொள்ளும் சித்தி முத்தி உண்டாகும்
மருளும் பேயும் நோயும் போம்  - என்ற பாடலில் தீர்த்தப்பயன் கூறப்பட்டுள்ளது.

புண்ணிய நதிகளில் ஒரு முறை நீராடினால் ஆயிரம் கோதானம் செய்த பலன் கிட்டும் என்று கூறப்படுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் சென்று நீராடுவதைப் போலவே அப்புனித தீர்த்தங்களை கண்ணாரக்கண்டு தரிசனம் செய்தாலும், அத்தீர்த்தப் புனலைக் கண்டு நீராடுவோம் என்று மற்றவர்களை விரும்பி அழைத்தாலும், கையினால் அத்தீர்த்த நீரை தொட்டு தலை மேல் தெளித்துக் கொண்டாலும், பக்தி மிக அத்தீர்த்தக் கரையில் தங்கி இருந்தாலும் அதற்கு முன் அவர்கள் செய்த கொத்தானப் பாவக்குவியல் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல கெட்டொழியும், புண்ணியம் கை கூடும்.  

நாம் எந்தப் பாத்திரத்தில் தண்ணீரை வைக்கின்றோமோ, அப்பாத்திரத்தின் வடிவத்தையே அது  சார்ந்துவிடும். குடத்திலிட்டால், அக்குடத்தின் வடிவத்திலேயே தண்ணீரும் அமைந்துவிடும். பானையிலிட்டால், பானையின்  வடிவத்தை அடைந்துவிடும்.  ஆகையால் தண்ணீரைக் கொண்டு, வழிபடு வைபவங்கள் நடத்தப்படுகின்றன. தெய்வங்களை ஆவாகனம் செய்யும் குடங்களில் நாம் பிரார்த்தனை செய்யும் கடவுள் நீரின் வடிவிலே அதாவது நமது எண்ணத்தின் படியே அமைந்து விடுகின்றார். 

குடமுழுக்கு  விழாவில் கோபுர கலசங்களில் புண்ணிய நதிகளின் தீர்த்தங்களினால் அபிஷேகம் செய்கின்றனர். மன்னர்கள் திருமுடி சூட்டிக்கொள்ளும்  போதும் புனித நீரால் நீராட்டும் வழக்கம் இருந்தது. பெண்கள் பூப்பெய்தும் விழா, பூப்பு நன்னீராட்டு விழா என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு  ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் நீரால் செய்யப்படும் பல  சடங்குகளை உருவாக்கினர் நம் முன்னோர்கள். பிறந்ததும் நீராடும் குழந்தை, வயது முதிர்ந்து இறந்த பின்னும் நீராடிய பிறகே  உடல் மண்ணுக்குள் செல்கின்றது.

தண்ணீர் குளிர்ச்சி, தன்னலம் இல்லாமை, பிறர்க்கு உதவுதல், அழுக்குகளை களைதல் ஆகியவற்றிக்கு அடையாளமாக விளங்குகின்றது. இந்நீரின் ஆதாரம் ஆறுகள்.  “ஆறு இல்லா ஊருக்கு அழகு இல்லை”. ஆறும் கோவிலும் இருந்து விட்டால் போதும் அவ்வூரின்  நலமும் மக்கள் நலமும் செழிக்கக் காரணமாகி விடுகின்றது.  நதிக்கரைகளில் நாகரீகம் உருவாகியது. பண்பாடும்  கலாச்சாரமும் வளர்ந்ததை நதிக்கரை நாகரீகம் என்கிறோம், . எனவே நதிகளை தெய்வமாக வணங்குவது பண்பாடாகியது.
நாம் எந்த புனிதத்தலத்திற்கு செல்லும் போதும் அங்குள்ள நீர்நிலையில் புனிதநீராடிய பிறகே நாம் இறைவனை வழிபடுகிறோம். தங்கத்தை  தீயில் இட்டால் எப்படி அழுக்கு நீங்கி சுத்தமாகின்றதோ அது போல புனித நதிகளில் நீராடினால் நம் மாசுகள் கரைந்து நாமும் சுத்தத்தங்கம் போல் புனிதமடைகின்றோம்.  கும்பமேளா, மஹாமகம், புஷ்கரம்,  துலா நீராடல், முடவன் முழுக்கு, ஆடிப்பதினெட்டாம் பெருக்கு  போன்ற விழாக்கள் அனைத்தும்  நீர்நிலைகளில் புனித நீராடுவதை அடிப்படையாகக் கொண்டவை தானே. அனைத்து ஆலயங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புண்ணிய நீர்நிலைகள் உள்ளன.

இராஜஸ்தானத்தில் புஷ்கரத்தில் எம்பெருமான் தீர்த்த ரூபியாகவே எழுந்தருளியுள்ளார். இதன் கரையில்தான் பிரம்மா பெரிய வேள்வி இயற்றினார். அம்பிகை பார்வதியே  தீர்த்தமாக மானசரோவரத்தில் அமர்ந்து சிவபெருமானை பூஜிப்பதாக  புராணங்கள் போற்றுகின்றன.

வேதகால மகரிஷிகள் தங்களது ஆசிரமங்களை புனித தீர்த்தக்கரைகளில் அமைத்துக் கொண்டனர். வியாச பகவான் தமது இதிகாச இரத்தினமான மஹாபாரதத்தை சரஸ்வதி நதி உற்பத்தியாகும் மானா என்ற திருத்தலத்தில் உள்ள ஒரு குகையில் அமர்ந்துதான்  எழுதினார்.


நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது    எனவே நீராடுதல் என்பது மனத்தை தூய்மையாக்கும் அகச்சுத்திக்கு முதற்படியாகும்.  மாசி மகத்தன்று இறைவனே நீர்நிலைகளுக்கு எழுந்தருளி அவற்றில் நீராடி அவற்றை புனிதமாக்குகின்றார். ஆலயங்களின் பெருவிழாக்களில் நிறை நாள் இறைவன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குகின்றார் (அருள் வழங்குகிறார்) அல்லவா?  இவை அனைத்தும் புனித நீராடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.


இனி புனித தீர்த்தங்களில் நீராடும் சில முறைகளைப் பற்றி  நமது சாத்திரங்கள் என்ன சொல்கின்றது என்று காண்போமா? புனித தீர்த்தங்களில்  அனைத்து நாட்களும் நீராடலாம் என்றாலும்  குறிப்பிட்ட நாட்களில் நீராடுவது சிறப்பு  வாய்ந்தது.

கதிரின் மதியம் கலந்திருநாள் கதிர்பூரணை ஆடிப்பிறப்பு
மதிசேர் தைமாதப்பிறப்பு மற்றை மாதப்பிறப்புகளில்
விதியாம் உருக்கள் விதிபாதம் விறல் வைகாசிப் பூரணையில்\
அதிக மாசி மாதத்தில் அந்த மகத்தில் அந்நாளில்  - என்ற பாடலின் படி புண்ணிய நாட்களான  அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மஹாமகம் ஆகிய நாட்கள்  புனித நீராட  மிகவும் உகந்தவை.  ஆ, கா,  மா, வை அதாவது ஆடி, கார்த்திகை, மாசி, வைகாசி ஆகிய மாதங்களின் பௌர்ணமியன்று புனித நீராடுவது மிகவும் புனிதமானது. சூரிய உதயத்திற்கு மூன்று நாழிகைக்கு முன் நீராடுவது மிகவும் உத்தமமானது. நீராடுவதற்கு முன் திதி, வாரம், முதலியவற்றையும் புனித நதிகளாக இருப்பின் அதன் பெயரையும் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

நீராடும்போது பிரவாகங்களுக்கு எதிராகவும், குளங்களில் நீராடும்போது, சூரியன் இருக்கும் திசையை நோக்கியும் நின்று கொண்டு நீராட வேண்டும். நீராடிக் கரையேறும்போது இருகைகளில் நீரை நிரப்பிக் கொண்டு, என் உடலிலுள்ள அழுக்குகளை இந்நீரில் கழுவி, குற்றம் செய்திருக்கிறேன். அக்குற்றம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இரண்டு கைகளில் உள்ள நீரையும் கரையில் விட்டு ஏறவேண்டும். உடலினை உடனே துடைத்துவிடக் கூடாது. உடலிலிருந்து  வடியும் நீரை தேவர்களும், பித்ருக்களும், ஏனைய உயிரினங்களும் பெறுவதாகச் சாத்திரம் கூறுகிறது.

பொதுவாக நீராடுதல் ஆறு வகைப்படும். நித்தியம், நைமித்திகம், காம்யம், கிரியாங்கம்,  மலாபக்ஷணம், கிரியா ஸ்நானம் என்று ஆறு வகைப்படும். தினசரி செய்ய வேண்டிய எந்தவிதக் கடமைகளையும் குளித்து விட்டே தொடங்க வேண்டும். காலைக் கடன்களில் முக்கியமான கடன் நீராடுதல். தினசரிக் கடமைகளில் ஒன்றாக இக்குளியல் வருவதால் இதை நித்தியம் என்று சொல்கிறோம். தீட்டுகளால் ஏற்படும் அசுத்தியைப் போக்கிக் கொள்ள நீராடுவதை நைமித்திகம் என்கிறோம். சில விழாக்களுக்காகப் பிரத்தியேகமாக நீராடுதல் காமியமாகும். சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றிற்காக நீராடுதல் கிரியாங்கமாகும். அதாவது ஒரு கிரியைக்கு அங்கமாக இது அமைந்திருக்கிறது. உடம்பின் சுத்திக்காக நீராடுவது மலாபக்ஷணமாகும். புண்ணிய நதிகளில் நீராடுவது கிரியா ஸ்நானமாகும். 


காவிரி அன்னை 


நந்தி கட்டம் என்னும் துலா கட்டம் 


காவிரி ஸ்நான மகிமை: 
ஜென்ம ஜென்ம புண்ணியம் செய்தவர்களுக்கே காவிரியைக் காணும் பாக்கியம் கிட்டும் என்கிறது காவிரி மகாத்மியம். காண்பதற்கே அவ்வளவு புண்ணியம் வேண்டும் என்றால் நீராட எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நதிகளில் உயர்ந்த காவிரியில் புஷ்கர காலத்தில் நீராடி பாவங்கள் அனைத்தையும் தொலைக்கலாம். இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரம். இதை ஆதி புஷ்கரம் என்று மகான்கள் சொல்வார்கள்.
ஒருமுறை கன்வ மகரிஷி என்ற முனிவரை மூன்று நங்கையர்கள் வாடிய முகத்தோடு வந்து பார்த்தார்கள். கண்மூடி இருந்த முனிவரும் மெல்ல கண் திறந்து பார்த்து, ஞானக்கண்ணால் அவர்களைப் புரிந்துகொண்டாலும் யார் நீங்கள்? ஏன் இப்படிக் கறுத்து வாடிப் போயிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது தாளாத வருத்தத்தோடு ‘‘நான் கங்கை. இவர்கள் யமுனையும் சரஸ்வதியும்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டு இந்த மனிதர்கள் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் கழுவிக் கொள்வதனால் நாங்கள் இப்படிக் கருமை நிறம் கொண்டுவிட்டோம்.
இந்த நிலையை மாற்ற வழி கூறுங்கள் என்று வணங்கிக் கேட்டுக்கொள்ள, கண்களை மெல்ல மீண்டும் மூடிக்கொண்டார் கன்வ மகரிஷி. ஆழ்ந்து சிறிது தவம் செய்துவிட்டு பின் மீண்டும் கண் விழித்த மகரிஷி, நீங்கள் மூவரும் தென் பாரத தேசம் சென்று அங்கே உள்ள புண்ணிய தலமாம்  "ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"  என்று புகழ் பெற்ற  மாயூரம் நகரில் உள்ள துலாக்கட்டத்தில் காவிரி நதியில் துலா மாதத்தில் நீராடி பாவங்களை தொலைத்து மாயூரநாதரையும், பரிமள ரங்கநாதரையும் தரிசனம் செய்து புதிய பொலிவோடு வாருங்கள் எனக் கூற அவர்களும் அவ்வாறே செய்து திரும்பியதாக புராணம் கூறுகிறது. அவ்வாறு கங்கை மாயூரம் வந்த போது உடன் வந்தவர்களே டுண்டி விநாயகர், காசி விசாலாக்ஷ்மி சமேத விஸ்வநாதர் என்பது ஐதீகம். 




புஷ்கரம் : நவக்கிரக நாயகர்களில் ஒருவரான குரு பகவான் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்து குரு பகவானைத் தன்முன் வரவழைத்துவிடுகிறார். “உன் தவத்தின் நோக்கமென்ன? எதற்காகக் கடும் தவம்?” எனப் பிரம்மன் கேட்கிறார். “உங்களிடம் உள்ள புஷ்கரத்தை எனக்குத் தாருங்கள்” என்கிறார் குரு பகவான். பிரம்மனும் மகிழ்ந்து, “அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்” என்கிறார்.


அந்த ஒப்பந்தம் இதுதான். அதாவது குரு பகவான் சஞ்சரிக்கும் 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்குரிய புனித நதிகளில் புஷ்கரம் வாசம் செய்து மக்களுக்கு அருளும். மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - சிந்து, மகரம் - துங்கபத்திரா, கும்பம் - பிரம்மபுத்ரா, மீனம் – பரணீதா. எந்தெந்த ராசிகளில் குரு பகவான் இருக்கிறாரோ அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி அருள் வழங்கப்படுகிறது.அதைக் கேட்ட புஷ்கரம் (பிரம்மன் கையிலுள்ள கமண்டல நீர்) “என்னை உங்களிடமிருந்து பிரித்துவிட வேண்டாம்” எனக் கெஞ்சியதாம். தர்மசங்கடத்துக்குள் மாட்டிக்கொண்ட பிரம்மா, குரு பகவானுக்கும் புஷ்கரத்தும் இடையில் ஓர் ஒப்பந்தம் போட்டு சமாதானம் செய்தார். இருவரும் ஒப்புக்கொண்டு புன்னகைத்தார்கள்.

மேற்படி நாட்களில் அந்தந்த நதிகளில் மக்கள் நீராடித் துன்பங்கள், பாவங்கள் அகன்று அளவிலா வளமையும் செழிப்பும் மகிழ்வும் பெற்று வாழ்வார்கள். இதுவே புஷ்கரத்தின் சிறப்பு.



யாக சாலை 


 புஷ்கர முதல் நாள் தீர்த்தவாரி 





துலாகட்ட அரசமரம் 



காவிரி அன்னைக்கு மாலை ஆரத்தி 



Friday, September 15, 2017

விஸ்வகர்மா பூஜை


கிழக்குப் பிரதேசத்தின் ஆயுத பூஜை
              
 
              
நமது பரத கண்டமெங்கும் பல் வேறு பிரதேசங்களில் பண்டிகைகள் வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றன. பண்டிகை ஒன்றாக இருந்தாலும் அதை கொண்டாடும் விதங்கள் பலவிதமாக உள்ளன. நமது தேசத்தின் வடகிழக்கு பகுதியில் பணி  செய்யும் சமயம் இறைவன் அருளால் அங்கு நடைபெறும் விஸ்வகர்மா பூஜையை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.  அன்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள  வேண்டும் என்று இப்பதிவு.

               தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நவராத்திரி சமயத்தில் நவமியன்று  சரஸ்வதி பூஜையுடன் நாம் ஆயுத பூஜையையும் சேர்த்துக் கொண்டாடுகின்றோம்,  ஆனால் கிழக்கு பிரதேசங்களா, ஒரிசா, வங்காளம் மற்றும்  வட கிழக்கு மாநிலங்களில் நேபாளத்தில் கூட  ஆயுத பூஜை என்பது விஸ்வகர்மா பூஜையாகும்.   அசாமின் வருடப்பிறப்பும் நம் தமிழ் வருடப் பிறப்பும் ஒரே நாள் வருகின்றது. இவர்கள் வருடப் பிறப்பை ரெங்ஹாலி பிஹூ என்று ஒரு வாரப்  பண்டிகையாக மிகவும் மிக சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மகர சங்கராந்தியான தைப் பொங்கலை இவர்கள் கடி பிஹூ என்றும் கொண்டாடுகின்றனர்.  இவர்களுடைய  வருடமும்    சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுவதால் நம்முடைய மாதங்களுடன் ஒத்துச் செல்கின்றன.

ஷடசீதி புண்ய காலமான் நமது புரட்டாசி மாத முதல் நாளன்று  விஸ்வகர்மா பூஜை சிறப்பாக இப்பகுதிகளில் நடைபெறுகின்றது. இங்கு இவர்களின் பத்ரா மாதத்தின் கடைசி நாள், அடுத்த நாள்  மாத சங்கராந்தி ஆஸன் மாதம் தொடங்குகின்றது.

 விஸ்வ கர்மா பூஜையைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு விஸ்வகர்மாவைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.  விஸ்வ கர்மா தேவ தச்சன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வேதங்களிலும் புராணங்களிலும், இதிகாசகங்களிலும் இவர் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளார்  என்று பார்ப்போமா? ரிக் வேதத்திலே அனைத்து  உலகங்களையும் படைக்கும் ஆற்றல் உள்ளவராய் இவர் சித்தரிக்கப்படுகின்றார். இப்பூவுலகை தன்  திருக்கரங்களால்  உருவாக்கியவர் என்று கூறப்பட்டுள்ளது.. புர'ணங்கல்  சிற்பியாக மட்டுமல்ல மற்றும் எல்லா திவ்யாயுதங்களையும் உருவாக்குபவராகவும் சிறப்பிக்கப்படுகின்றார். அக்னியாஸ்திரத்தை உருவாக்கியவர்  இவரேகட்டிடக் கலை (Architecture), சிற்ப சாஸ்திரம், இயந்திர சாஸ்திரம் (Mechanical Engineering), முதலியவற்றின் தந்தையாக இவர் கருதப்படுகின்றார். எனவே  இன்றும் சுவாமி மலையை சார்ந்த ஸ்தபதிகள் தங்களை இவரின் வழித்தோன்றல்களாகவே கருதுகின்றனர். மஹா பாரதத்தில் இவர் கலைகளின் அதிபதியாகவும், திவ்யாபரணங்களை வடிவமைப்பவராகவும், தேவர்களின் தச்சராகவும், திவ்ய இரதங்களை உருவாக்குபவராகவும், கை வினைஞர்கள்  வழிபடும் தெய்வம்  இவரே என்று போற்றுகின்றது. இராமயணத்தில் இலங்கை நகரை கட்டியவர் மற்றும் இராம பெருமானுக்கு பாலம் கட்டிய நளனுக்கு அச்சக்தியை அளித்தவர் இவர் என்றும்  கூறப்பட்டுள்ளது.  ஒரே இரவில் துவாரகை நகரை சொர்ண நகரமாக கட்டியவரும் இவரே.

புராணங்களின் படி  இவர் அஷ்ட வசுக்களின் கடைசி வசுவான பிரபாசருக்கும் அவரது மனைவி யோக சித்தியின் குமாரர்.  இவரது மகளான சஞ்சனாவை சூரிய பகவான் திருமணம் செய்து கொள்கிறார். சூரியனுடைய காந்தியை  சஞ்சனா தாங்கிக்  கொள்ள முடியாத போது, சூரியனை தனது இயந்திரத்தில் வைத்து  வெட்டி அவரது தேஜஸ்ஸிலிருந்து எட்டின் ஒரு பகுதியை நீக்கினார். அப்போது பூமியில் விழுந்த துகள்களிலிருந்தே, மஹா விஷ்ணுவிற்காக சுதர்சன சக்கரத்தையும். மஹா தேவருக்காக திரி சூலத்தையும், குபேரனுடைய ஆயுதத்தையும், முருகப் பெருமானின் வேலாயுதத்தையும், மற்ற தெய்வங்களின் திவ்யாயுதங்களையும் இவர்  உருவாக்கினார் என்பர். தேவ சிற்பியான இவர் பிரஜாபதி என்றும் அழைக்கப்படுகின்றார்.

நாம் இப்போது வழிபட்டு வரும் பல்வேறு திவ்ய தெய்வ விக்கிரகங்களை உருவாக்கியவர் இவரே. அவற்றுள் சில பூரி ஜகந்நாதர்சப்த விடங்க ஸ்தல தியாக ராஜ மூர்த்தங்களை  இந்திரனுக்காக  செய்து அருளினார்.  முசுகுந்த சக்ரவர்த்தியினால் இவர்கள்  பூலோகம் வந்தனர். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர், குருவாயூர் குருவாயூரப்பன்  முதலிய மூர்த்தங்களை உருவாக்கியவரும் இவரே எல்லா  கைவினைஞர்களும் குறிப்பாக பொற் கொல்லர்கள், இரும்பு கொல்லர்கள், தச்சர்கள், ஸ்தபதிகள் ஆகியவர்களின் தெய்வமும் மூல குருவும் இவரே. சென்னை தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவிலில் விஸ்வகர்மாவிற்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இவரை விஸ்வகர்மா சமூகத்தினர்.





                              ஓம் சத்யோஜாத  முகாய பிரம்மதேவனே நம:
                              ஓம் வாமதேவ முகாய விஷ்ணு தேவனே நம:
                              ஓம் அகோர முகாய ஈஸ்வர தேவனே நம:
                              ஓம் ஈசான்ய முகாய இந்திர தேவனே நம:
                              ஓம் தத்புருஷ முகாய சூரிய தேவனே நம:
                              ஓம் தேவ தேவ மஹா தேவ விஸ்வப்பிரம ஜகத் குருவே நம:
 என்று அகில ஜகத்திற்கும் குருவாக வணங்குகின்றனர்.

இத்தகைய  சிறப்புகள் படைத்த இவரையே கிழக்கு பிரதேசங்களில் எல்லாத் தொழில் நிறுவனங்களிலும் சிறப்பாக  வழிபடுகின்றனர்.  சிறு பெட்டிக்கடை முதல் பெரும் தொழிற்சாலை வரை எல்லாவிடத்திலும். யானை மேல் சுகாசனத்தில், மீசையுடனும் , நான்கு திருக்கரங்களில் கோடரி, ஏர், வில், தராசு தாங்கி, இடையிலே உடைவாளையும், முதுகில் அம்புறாத் தூணியையும் தரித்தவராய், பிரபையில் எடைக்கல், கத்திரி, கொறடு, உளி, பூட்டு, சாவி, அரிவாள், அங்குசம், தையல் யந்திரம், சுத்தியல். திருப்புளி, பூச்சுக் கரண்டி என்று சகலவிதமான ஆயுதங்களையும் -கொண்டவராய், குருக்கள் பூசை செய்ய, தம்பதியர் இவரை வழிபடும் கோலத்தில் இவரது படத்தை நாம் காணலாம்.  

புரட்டாசி முதல் நாளன்று (கன்யா சங்கராந்தி) விஸ்வ கர்மா பூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கிழக்குப் பகுதியில் நடைபெறும் பெம்பாலான பூஜைகள்  சர்வஜனிக் என்று அழைக்கப்படும் கூட்டு வழிபாடுகளாகவே நடைபெறுகின்றன.  சிறப்பாக பந்தல் அமைத்து அதில் அந்த தெய்வத்தின் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை வைத்து, கலச ஸ்தாபனம் செய்து அதில் அந்த தெய்வத்தை ஆவாஹனம் செய்து மிகவும் சிறப்பாக பூஜை நடத்தி பின் மறு நாள் அந்த கலசத்தையும் தெய்வத்தையும் கங்கையில் (நீர் நிலைகளில்சென்று கரைக்கின்றனர். இந்த விஸ்வ கர்மா பூஜையும் அவ்வாறே -கொண்டாடப்படுகின்றது. யானை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில், கிழக்கு பிரதேசத்திற்க்கே உரித்தான அந்த கிரீடங்களையும், ஆபரணங்களையும், கரும் கூந்தலையும் தாங்கள் கண்டு மகிழலாம். அன்று வாகனங்கள், இயந்திரங்கள், சகல விதமான ஆயுதங்கள், புத்தகங்கள் அனைத்திற்கும் நான் ஆயுதபூஜையன்று வழிபடுவது போல் இவர்கள் இன்று வழிபடுகின்றனர்.



பூஜையின் போது இவர்கள் படைக்கும் நைவேத்தியம், அரிசியும்,  பாசி பருப்பும் சேர்த்து தயாரிக்கப்படும் கிச்சடி என்றழைக்கும்  போக் ஆகும். அந்த பிரசாதம் எல்லாருக்கும் வழங்கப்படுகின்றது. சில தொழிற்சாலைகளில் சிறப்பு விருந்துகளும்  நடைபெறுகின்றன .இப்பிரதேசத்தின் மக்கள் மிகவும் சிரத்தையாக இந்த பூஜையை கொண்டாடுகின்றனர். அன்று ஒவ்வொரு தெருவிலும் ஒரு பூஜா பந்தலையாவது நம்மால் காண முடியும். குறிப்பாக தொழில் நிறுவனங்களில் அன்று இயந்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். எல்லா ஆயுதங்களும் விச்வ கர்மாவினால் உருவாக்கப்பட்டவை என்பதால் ஆயுதங்களுக்கும் பூஜை இன்றே பூஜை நடைபெறுகின்றது. வாகனங்கள் அனைத்தும் இன்று நன்றாக கழுவப்பட்டுவெள்ளை மணிகள் , வாழை கன்றுகள் , மாவிலை  முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு வெள்ளோட்டம்  விடப்படுகின்றது. வியாபார நிறுவனங்களில் கணக்கு புத்தகங்களும் இன்றே பூசிக்கப்படுகின்றன. கிழக்கு பகுதிகளில் சரஸ்வதி பூஜை வசந்த பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது ஆனால் அவர்களின் ஆயுத பூஜை இந்த விச்வ கர்மா பூஜைதான். சமயம் கிடைக்கும் போது இவர்கள் இவ்விழாவினை கொண்டாடும் சிறப்பினை   காணும் வாய்ப்பினை இறைவன் தங்களுக்கு  வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.


Tuesday, September 12, 2017

நவ துவாரகை யாத்திரை - 22

உதய்பூர் 

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள்   
 
1    2    3   4   5     6    7    8    9    10    11    12 

   13    14   15   16   17   18   19   20    21    22   23  24   25   26   27   28


பருவக்காற்று அரண்மனை

அரண்மனையின் ஒவியம் 

வதுவாரகைகளில் ஸ்ரீநாத்ஜீ துவாரகை இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரையின் போது குஜராத் பகுதியின் துவாரகைகளை தரிசனம் செய்த பிறகு
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே என்று ம்மாழ்வார் அறிவுறுத்தியபடி ஸ்ரீநாத்ஜீயை சேவித்து அவன் நாமம் பாட நாத்துவாராவிற்காக புறப்பட்டோம். வழியில் இராஜஸ்தானத்தின் ஒரு பெரிய கரான உதய்பூர்  வருவதால் அந்நகரில் சிறிது நேரம் செலவிடலாம் என்று முடிவு செய்து, உதயப்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்று வண்டி ஓட்டுனரிடம் விசாரித்தோம், அவரும் எனக்குத் தெரிந்த ஒரு வழிகாட்டி உள்ளார் அவரை அழைக்கின்றேன் அவர் உதய்ப்பூரை சுற்றிப் பார்ப்பதற்கு உதவுவார் அவருடைய கட்டணம்  ரூ.500/-  ஆகும் என்றார். சரி அவரை அழையுங்கள் என்று கூறினோம். அகமதாபாத்திலிருந்து உதய்ப்பூர் 250 கி.மீ தூரம், எனவே அடியோங்கள்  உதய்ப்பூரை நெருங்கும் போது சுமார் 10:30 மணி ஆகிவிட்டது. வழிகாட்டி எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.




இராஜஸ்தான் மாநிலம் வீரத்திற்கும், கற்புக்கரசிகளுக்கும், கோட்டை கொத்தளங்களுக்கும், பிரம்மாண்டமான கலை அம்சம் நிறைந்த அரண்மணைகளுக்கும், அழகிய ஏரிகளுக்கும் பெயர் போனது. இம்மாநிலம் இரண்டு பகுதிகளாக அதாவது  பாலைவனப்பகுதி மார்வார் என்றும் ஆரவல்லி மலை மற்றும் அதனுடன் இனைந்த பகுதி மேவார் என்றும் சரித்திர காலத்தில் அறியப்பட்டிருந்தது.




பளிங்கு தூண்கள் 


அடியோங்கள் யாத்திரை சென்ற பகுதி மேவார் ஆகும்.   1559ல் மஹா ராணா உதய் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உதய்ப்பூர் கரிலும், பல அரண்மனைகள்,  மற்றும் ஃபதே சாகர் ஏரி, பிசோலா ஏரி, ஸ்வருப் சாகர் ஏரி, ரங்சாகர் ஏரி,  மற்றும் தூர் சாகர் என்னும்  ஐந்து ஏரிகள் உள்ளன.  எனவே இந்நகரம் கிழக்கத்திய வெனிஸ் கரம் என்றும் ஏரிகளின் கரம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஒருகாலத்தில் மேவார் பகுதியின் தலைகராக விளங்கியுள்ளது இந்கரம் 
.


அடியோங்கள் விஸ்தாரமாக உதயப்பூரை சுற்றி பார்க்க சமயம் இருக்கவில்லை, மலை மேல் உள்ள ஒரு அரண்மணைக்கு மட்டும் சென்றோம். பறவைப்பார்வையில் உதயப்பூர்  கரை இரசித்தோம். ஃபதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) இந்திய வரை படம் போல காட்சியளித்ததை கண்டு களித்தோம். பருவக்காற்று அரண்மனை (Monsoon Palace) என்னும் அவ்வரண்மணையில் அக்காலத்தில் மழைக் காலத்தில் பெய்யும் தண்ணீரை சேகரித்து, சேமித்து வைத்து வருடம் முழுவதும் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை பார்த்தபோது எவ்வளவு தொழில்நுட்ப அறிவு அக்காலத்திலேயே இருந்தது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வரண்மனையை சஜ்ஜன் சிங் மஹாராஜா தனது 21 இராணிகளுக்காக கட்டிய உல்லாச மாளிகை என்றார் வழிகாட்டி. பளிங்குக்கல் கொண்டு இழைத்திருந்தனர். அரண்மணையை முழுதுமாக சுற்றிப்பார்க்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.





பின்னர் வழிகாட்டி கலைப் பொருட்களை விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றார். நினைவுப் பரிசாக சிறு பொருட்களை வாங்கினோம். பின்னர் வண்டி ஓட்டுனர். நாம் வாங்கும் பொருட்களின் மதிப்பிற்கேற்ப வழிகாட்டிகளுக்கு கடைக்காரர் சன்மானம் வழங்குவார் என்று கூறினார். இதற்குள் மதியம் ஆகிவிட்டதால் ஒரு ல்ல உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினோம்.  டராஜ் என்றொரு குஜராத்தி உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அருமையான குஜராத்தி உணவை சுவைத்தோம். குஜராத்தில் கிச்சடி எனப்ப்டும் பருப்பு சாதம் மற்றும் கடி எனப்படும் மோர் குழம்பு அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு வகை அது இவ்வுணவகத்தில் அருமையாக கிட்டியது சுவைத்து மகிழ்ந்தோம்.




கல்லாவில் ஆடல் வல்லான்  டராஜப் பெருமானின் ஒரு சிலையும் இருந்தது. கடைக்காரரிடம் டராஜர் ஆலயம் சென்றிருக்கிறீர்களா? என்று வினவினோம். அவர் இல்லை,  எனது தாத்தா மதராஸில் டராஜர் ஆலயம் சென்று வந்த பின் சிறு கடையாக ஆரம்பித்து இப்போது இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கின்றோம். சமயம் கிடைக்கும் போது செல்கிறேன் என்றார். சிதம்பரம் என்ற ஊரில்தான் டராஜர் அருள் பாலிக்கின்றார். சமயம் கிடைக்கும் போது சென்று தரிசித்து விட்டு வாருங்கள்   என்று கூறிவிட்டு உதயப்பூரை விடுத்து அடுத்த துவாரகையான ஸ்ரீநாத்ஜீ துவாரகைக்காக புறப்பட்டோம்.


வண்டி ஓட்டுனர் சுமார்  இரண்டு  மணி நேரத்திற்கும் மேல் ஆகுமென்றார். வழியில் ஒரே கல்லால் ஆன பிரம்மாண்டமான  சிவலிங்கம் அமைந்துள்ள ஏக்லிங்ஜீ (Eklingji) என்ற ஊரில் உள்ள சிவாலயத்தை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். ஆலயம் மூடியிருந்ததால்  ஆலயத்தின் இரு புறமும் அமைந்துள்ள அருமையான வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளை மட்டும் தரிசித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.




ஏக்லிங்ஜீ சிலைகள் 


நாத்துவாராவில் அருள் பாலிக்கும் ஸ்ரீநாத்ஜீ 



நாத்துவாராவை (Nathdwara) அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டது. முதலில் தங்குவதற்கான அறைகளை பெற்று கொண்டு காலையிலிருந்து பயணம் செய்த களைப்புத்தீர சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு, சிரமபரிகாரம் முடித்து பின்னர் ஸ்ரீநாதரை சேவிக்கச் சென்றோம். இத்துவாரகையில் ஸ்ரீகிருஷ்ணரை  தரிசித்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.  

                                            நவ துவாரகை யாத்திரை தொடரும் . . .