Wednesday, December 18, 2013

திருவெம்பாவை # 6

 
திருசிற்றம்பலம் 



மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறனே அறிவரியான்
தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோ ரெம்பாவாய்!


பொருள் : மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! " நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?

தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவுவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் வெலக என்று மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!

திருவெம்பாவை # 5

திருசிற்றம்பலம்





மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! ...........(5)

பொருள்: மாலும் அயனும் அறிய முடியா அருட்பெரும் மலை நமது திருவண்ணாமலையார், அந்த பரமேஸ்வரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!


இறைவன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு அருமையானவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை போலும்.

எம்பெருமான் அக்னி ஸ்தம்பமாக அண்ணாமலையாராக நின்ற போது அகந்தை கொண்ட மாலும் நான்முகனும் அவரது திருமுடியையும், திருவடியையும் காண முடியாமல் நின்றதையும் அதே சமயம் எளி வந்த கருணையினால் அவர் தனது பக்தர்களுக்கு அருளுபவர் என்பதை     மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம் போலறிவோம்  என்பதன் மூலம் மாணிக்க வாசக சுவாமிகள்  விளக்குகின்றார். 

Tuesday, December 17, 2013

திருவெம்பாவை # 4

திருசிற்றம்பலம்




திருவெம்பாவை #4


ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடி கசிந்துள்ளம்உள்நெக்கு
நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோ ரெம்பாவாய்! ........(4)

எழுப்புபவள்:
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?

படுக்கையிலிருப்பவள்:
கிளி போல மிழற்றும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவர்:
எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து உள்ளம் உடைந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு.

திருவெம்பாவை # 3

திருசிற்றம்பலம்



திருவெம்பாவை # 3


முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். ......(3)

பொருள்:

எழுப்புபவள்முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன்பாக எழுந்து எங்கள் எதிரே வந்து " என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய். இனியும் படுக்கையில் கிடப்பதேன். எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

உள்ளே இருப்பவள்: நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமையை பெற்றவர்கள். நானோ புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?



எழுப்புபவள்உன்னுடைய அன்புடைமை எங்களுக்கு தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம்முடைய சிவபெருமானைப் பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள் எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.


நம்முடைய சித்தம் ஸ்படிகம் போன்றது. அது நமது எண்ணத்தையே பிரதிபலிக்கும் எனவே சித்தத்தை இறைவனை நிறைத்தால் அது உட்கருத்து.

திருவெம்பாவை # 2

திருசிற்றம்பலம்


திருவெம்பாவை # 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2)

பொருள்:

எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே அரிவையே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையின் எப்போது வைத்தாய் கண்மணி?

உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, தாங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள், ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்த கூத்தன். நாம் யார்?  அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

Monday, December 16, 2013

திருவெம்பாவை # 1

திருசிற்றம்பலம்

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவெம்பாவை
திருவண்ணாமலையில் அருளியது
(சக்தியை வியந்தது)


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம். ஒரு ஜீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு ஜீவாத்மாவை இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்.

பொருள்: திருவண்ணாமலையார் ஆதியும் அந்தமும் இல்லாதவர்! பிரமனும், நெடுமாலும் அடியும், முடியும் காண முடியா அனற் பிழம்பாய், அருட்பெருஞ்சோதியாய் நின்றவர், அந்த தியாகராஜருடைய திருவடி பெருமைகளை நாங்கள் அனைவரும்( ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! என்று) பாடுகின்றோம்.

ஆனால் வீதியிலே எம்பெருமானின் திருநாமங்களை கேட்டவுடனே விம்மி விம்மி மெய் மறந்து இறைவனில் ஒன்றிவிடுகின்ற , வாள் போன்ற கூரிய கண்களைக் கொண்ட பெண்ணே! இப்போது அந்த வாழ்த்தொலிகளை கேட்ட பின்னும், செவிட்டு மங்கையைப் போல் உறங்குகின்றாயோ, உனது செவிகளுக்கு என்ன ஆயிற்று?

எம்பெருமானை மறந்து விட்டு இந்த பஞ்சு மெத்தை சுகத்திற்கு ஆளாகி தூங்குகின்றாயா? இதுதான் தூக்கத்தின் பரிசா பாவையே? அதை விடுத்து எழுந்து வா இறைவனின் புகழ் பாடி மார்கழி நீராடுவோம், அவரது திருவருளைப் பெறுவோம்.

அண்ணாமலையார் மகிமை:
தான் என்னும் அகந்தை மட்டும் யாருக்கும் இருக்கக் கூடாது. தெய்வங்களுக்குக் கூட இது பொருந்தும் என்ற அரிய தத்துவத்தை மாந்தருக்கு உணர்த்த முப்பெருந்தெய்வங்களூம் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டினர் திருவண்ணாமலையில் அந்த நாடகம் இதோ. ஒரு சமயம் திருமாலை விடவும் தானே பெரியவர் என்ற அகந்தை பிரம்மாவிற்கு ஏற்பட்டது. திருமாலிடம் சென்ற அவர் . 'உம்மிடமிருந்து பிறந்திருந்தாலும் நானே பெரியவன். நான் படைப்பதால்தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது என்று கர்வத்துடன் பேசினார். திருமால் அவரிடம், 'உனது தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும் , நானே பெரியவன் என்று அவர் வாதிட்டார். வாதம் தொடர்ந்தது இருவரும் யார் பெரியவர் என்று முடிவெடுக்க சிவபெருமானிடம் சென்றனர். சிவபெருமான் அப்போது ஒரு சோதிப்பிழம்பாய் வானமும் பாதாளமும் கடந்து நின்றார். இருவரில் பெருமானது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவர்க பெரியவர் என்றார் திருக்கயிலைவாசர்.

உடனே திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து பெருமானுடைய திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்து எம்பெருமானுடைய திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார் இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின் வழியில் எம்பெருமானின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை பிரம்மதேவர் கண்டார், எம் பெருமானின் திருமுடி எங்குள்ளது என்று பிரம்மன் கேட்க அந்த தாழம்பூ நான் சிவனாருடைய சடையிலிருந்து நழுவி 40000 வருடம் கீழே பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறியது பிரம்ம தேவர் திருமுடியைக் காணும் முயற்சியை கை விடுத்து அந்த தாழம்பூவை தான் எம்பெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி கூறுமாறு வேண்டினார் தாழம்பூவும் ஒத்துக் கொண்டது. மாயவனும் திருவடி காணாமல் திரும்பி வந்தார். அவர்கள் சிவபெருமானை அடைந்து இந்த உண்மையைக் கூறினர். பொய் கூறிய பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் கோவில் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார் எம்பெருமான், படைப்புக் கடவுளின் மன்றாடலுக்கு மனமிரங்கி , ஆணவமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரம்மாவிற்கு உபதேசம் செய் து கோவிலின் அபிஷேகத் தீர்த்தம் வரும் இடத்தில் ஓரமாக பிரம்மா ஒதுங்கிக் கொள்ள சம்மதித்தார் அந்த கருணாலயன். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உபயோகப்படுத்தபடக் கூடாது என்றும் சாபம் கொடுத்து லிங்கோத்பவராக இருவருக்கும் அருட்காட்சி தந்தார் எம்பெருமான். தங்கள் பிழையை உணர்ந்த மாலும் அயனும் பின் லிங்க பூசை செய்தனர்.

பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்பரம் யாம்
பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ

என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலும் பிரம்மனும் தான் என்னும் அகந்தை நீங்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி ரூபமாககாட்சி தரும் சிவபெருமானை, அண்ணாமலையானைக் காண தேவர்களும், மகரிஷ’களும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று இத்தலத்திற்க்கு வருவதாக ஐதீகம்.


மாணிக்க வாசகர்

திருசிற்றம்பலம்

மாணிக்க வாசகர் வரலாறு

குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி

தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர்
எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.


"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.



இவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள். சிவபெருமானே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார். சைவ சமய குரவர்கள் நால்வர்களுள் ஒருவரான மாணிக்க வாசகரின் வரலாற்றை இந்த மார்கழி மாதத்தில் அவரது திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் காண்பதற்கு முன் காண்போம்.



பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர், சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை மேலும் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் இவர் இடம் பெறவில்லை. எனவே இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னன் அரிகேசரி அல்லது அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தார். "தென்னவன் பிரம்மராயர்" என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது. ஒரு நாள், அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல அரபு, பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர்.


ஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த "திருப்பெருந்துறை" என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்பதுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, "சிவ சிவ" என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு "மாணிக்கவாசகன்" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார். குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.


மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, (நரிதனை பரியாக்கி) தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் "சொக்கராவுத்தர்"என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். அப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அவ்வமயம் பிட்டு விற்கும் வந்திக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசி அன்று சோதனையாக எல்லா பிட்டும் உதிர்ந்து விட அதை உண்டு விட்டு , அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க , கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த அரிமர்த்தன பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால்  முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும்  விழ அரசன் மயங்கி நிற்க , தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.



மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் "சிவபுராணம்", "திருச்சதகம்" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் "திருவெம்பாவை", "திருவம்மானை" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார். அங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, "திருச்சாழல்" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் "அச்சோப்பதிகம்" போன்ற சிலவற்றைப்பாடினார்.

 ஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், "பாவை பாடிய வாயால், கோவை பாடுக!", என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், "இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, "அந்நூலின் பொருள் இவனே!", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து, கரைந்து, மறைந்தார்.

மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. "தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை


நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே


தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்


ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" வள்ளலார் சுவாமிகள்



நாளை முதல் முதலில் திருவெம்பாவையின் இருபது பாடல்களையும் அடுத்து திருபள்ளியெழுச்சியின் பத்து பாடல்களையும்  பொருளுடன் பார்ப்போம்.

***********



(இது ஒர் மீள் பதிவு  முதலில்http://thiruvempavai.blogspot.in என்ற வலைப்பூவில்  வெளியிட்டேன் தற்போது இந்த வலைப்பூவில அன்பர்கள் இந்த விஜய வருட (2013) மார்கழி மாதத்தில் படித்து மகிழலாம்.