Showing posts with label தவளகிரி. Show all posts
Showing posts with label தவளகிரி. Show all posts

Monday, May 25, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 4

     போக்ராவிலிருந்து ஜோம்சம் விமானப் பயணம்                   


போக்ராவிலிருந்து அன்னபூரணா மலைச்சிகரங்கள்



அன்னபூரணா மலைத்தொடர்களில் மொத்தம் ஆறு சிகரங்கள் அமைந்துள்ளன
         



அன்னபூரணா மலையேற்றம் செல்பவர்களும் மற்றும் முக்திநாத்  யாத்திரை செல்பவர்களும் போக்ராவில் தங்கி செல்கின்றனர். ஆனால் புனல் மின்சாரம்  அபரிமிதமாக தயாரிக்கக்கூடிய தேசமாக இருந்தும் கூட  காத்மாண்டுவிலும் சரி இங்கு போக்ராவிலும் மின்சாரம் எப்போதும் இருப்பதில்லை. எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை இரவு மட்டும் தங்கும் விடுதிகளில் மின்ஜெனரேட்டரை இயக்குகின்றனர். போக்ரா 800 மீ உயரத்தில்தான் அமைந்துள்ளதால் வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்வெட்டரை  கழற்றினோம் மின் விசிறி தேவைப்பட்டது.








ஜோம்சமின் நீலகிரி சிகரம்


மறு நாள் போக்ராவில் அதிகாலை 5 மணிக்கே  விமான நிலயத்திற்கு கிளம்பினோம். சூரிய உதய காலத்தில் அன்னபூர்ணா சிகரம் பொன் மயமாக மின்னும் அழகை ரசித்தோம். மேகம் இல்லாமல் வானம் நிர்மலமாக இருந்ததால் அன்னபூரணாவின் ஆறு சிகரங்களையும் அற்புதமாக பார்த்தோம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த போக்ராவிலிருந்து ஜோம்சம் செல்லும் விமான பயணம் ஒரு பக்கம் நெடிதுயர்ந்த அன்னபூரணா மலைத்தொடர்கள் மறு புறம் அதே அளவு உயரமான தவளகிரி மலைத்தொடர்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே விமானப்பயணம் என்பதால், மழையோ   அதிக மேகமூட்டம் இல்லாத போது  பொதுவாக காலை 6 மணி முதல் 11 மணி வரையே இயக்கப்படுகின்றன. அதற்கப்புறம் காற்றின் வேகம் அதிகமாகிவிடுவதால் விமான இயக்கம் நிறுத்தப்படுகின்றது. எனவே வானிலை சரியாக இருந்தால் அதிகபட்சமாக 4 முறை மட்டுமே ஒரு நாளில்  விமானங்கள் சென்று வருகின்றன. பனி மூட்டமாகவோ அல்லது காற்றின் வேகம் அதிகமாகவோ இருந்தால் விமானங்கள் இயக்கப்படுவதில்லை.


போக்ரா விமான நிலையம்


விமானத்திலிருந்து போக்ரா நகரம்


அடியோங்களின் சுற்றுலா அமைப்பாளர் Simrik Airlines என்ற விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். இன்றைய தினம் வானிலை நன்றாக இருந்ததால் நான்கு தடவை  விமானப் பயணம் நடைபெற்றது குழுவினர் அனைவரும் ஜோம்சம் வந்தடைந்தோம். ஒரு விமானத்தில் அதிகபட்சம் 20 பேர் பயணம் செய்யலாம். சுமார் 11000 அடி உயரத்தில் 400 கி.மீ வேகத்தில் விமானத்தை இயக்குகிறனர். ஜோம்சம் அடைய சுமார் 20 நிமிடங்கள் ஆகின்றன. இப்பயணத்தில் Turbulance எனப்படும் காற்று சுழற்சியில் இரு தடவை விமானம் தடுமாறியது. 

போக்ராவில் இருந்து ஜோம்சம்  பேருந்தில் பயணம் செய்தால் கரடு முரடான கற்கள் பாவிய நெளிந்து வளைந்து செல்லும் மலைப்பாதை என்பதால் எலும்பை முறிக்கும் பயணம், எந்த நிலசரிவும் இல்லையென்றால்  சுமார் 12 நேரத்தில் ஜோம்சம்  அடையலாம்.  விமானத்தில் பறக்கும் போது அன்னபூரணா மற்றும் தவளகிரி மலைத்தொடர்களின் சிகரங்களை தெளிவாகக் காண முடிகிறது. திருக்கயிலாய யாத்திரையின் போது அன்னபூரணா மற்றும் தவளகிரி மலைத்தொடர்களின் இந்தியப்பகுதி மற்றும் திபெத்திய பகுதிகளின் அழகை முன்னரே கண்டிருந்தோம் இன்றைய தினம் நேபாளப் பகுதியின் அழகை விமானத்தில் இருந்து அருகாமையில் இரசித்தோம்.



போக்ராவிலிருந்து  கூம்பு போல தோன்றும்   சிகரம்  மறு புறம்
 மீன்வால் போல காட்சி தருகின்றது

 குறிப்பாக போக்ராவில் கூம்பு போன்று காட்சி அளிக்கும் “மச்சேபுச்சரே” (Machapuchare) எனப்படும்   “மீன் வால் சிகரம்" பார்த்து இரசித்தோம். விமானத்தில்  இருந்து பார்க்கும் போது அப்புறம் இச்சிகரம் மீனின் வால் போலவே உள்ளதால் இப்பெயர்.   இந்த சிகரத்தை நேபாள  மக்கள் சிவபெருமானின் இருப்பிடமாக புனிதமானதாக கருதுகின்றனர்.


ஜோம்சம் விமானநிலையம் பனி மூடிய நீலகிரி சிகரங்களை பின்னணியாகக் கொண்டு அருமையான சூழ்நிலையில் அமைந்துள்ளது.  குறைந்த உயரம் (1500 மீ) தான் என்றாலும் அதிக குளிராக இருப்பது போல தோன்றியது. அனைவரும்  ஜோம்சம் வந்து சேர சுமார் 11 மணி ஆனது அது வரை சத் சங்கத்தில்  “குறையொன்றும் இல்லாத கோவிந்தனை”  போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தோம். பின்னர் பேருந்து மூலம் சாளக்கிராமங்கள் கிடைக்கின்ற மிகவும் புனிதமான கண்டகி நதியை அடைந்தோம். காளி கண்டகி, சாளக்கிராமி, நாராயணி, கிருஷ்ண கண்டகி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்நதியின் குறுக்கே தற்போது ஒரு பழைய பாலமே உள்ளது அதுவும் பழுதடைந்து விட்டதால் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை, மேலும் பாதசாரிகளும்  ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் செல்ல வேண்டாம்  என்று எச்சரிக்கின்றனர். பாலத்தை கடந்து அப்புறம் உள்ள பேருந்து நிலயத்தை அடைந்தோம். அருகில் ஒரு புது பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.  அங்கிருந்து சிறு பேருந்துகளும், ஜீப்களும் முக்திநாத் வரை செல்கின்றன. நாங்கள் ஒரு  பேருந்தில் முக்திநாத் புறப்பட்டோம்.



புதுப்பொலிவுடன் லூப்ராவில் உள்ள போன்பா  புத்த விகாரம்

இவ்விடம் ஒரு புத்தவிகாரமும் உள்ளது.  ஜோம்சம் கிராமத்தில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. சாளக்கிராமமும் பல கடைகளில் கிடைக்கின்றன. ஜோம்சமிலிருந்து குதிரை மற்றும் இரு சக்கர  வாகனங்கள் மூலமாகவும் முக்திநாத் செல்ல முடியும். முன்னர் காத் ஜ்மாண்டு/ போக்ராவிலிருந்து  கோவில் வரை ஹெலிகாப்டர்கள் சென்று கொண்டிருந்தன தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறினர். 

ஜோம்சமில் தங்கிய விடுதி

விடுதியின் உட்புறம்

ஜோம்சம் ஒரு சிறு நகரம் தான் தங்கும் விடுதிகளும், உணவகங்களும் கடைகளும் நிறைந்திருக்கின்றன. மற்ற நேபாள நகரங்களைப் போலவே நிறைய சுற்றுலாப் பயணிகளை அதிலும் அன்னபூரணா மலைச்சிகரம் ஏற முயலும் ஐரோப்பியர்களை அதிகம் காணலாம். முன்பே கூறியது போல இங்கு இவர்களின் சிறப்பு உணவான தக்காளி உணவு கிடைக்கின்றது.  அளவான உணவே வழங்குகின்றனர். அனைத்து பொருட்களும் விலை அதிகமாகத்தான் உள்ளது.