Thursday, August 11, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 27

 நாமக்கல் நரசிம்மர் தரிசனம்


தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

கொங்கேழ் தலங்களில் ஆறில் தரிசனம்  நிறைவு செய்து சென்னை திரும்பும் வழியில் புகழ் பெற்ற சில தலங்களை தரிசித்தோம்.  அவற்றுள் முதலாவது நாமக்கல்.   நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது.  சேலத்திலிருந்து  57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரம், கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் திரளாக வழிபாடுகளில் பங்கேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

 

உலக புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம்  நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். நாமக்கல்  ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பதும் வாலில் மணி இருப்பதும் ஒரு சிறப்பு அம்சம்.

 தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கிச் செல்லும் புகழ் பெற்ற கோவில். எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

 கண்டேன் கற்பினுக்கணியை என்று மொழிந்த சொல்லின் செல்வரை தரிசிப்பதற்கு முன்னர் அவரது  பெருமைகள் சிலவற்றைப் பற்றி காண்போம் அன்பர்களே.

 இராம கைங்கரியத்திற்காக ருத்ர அம்சமாக அவதரித்தவர் என்பதனால் வைணவ மற்றும் சைவ ஆலயங்களில் எழுந்தருளுபவர்.

 வைணவ சம்பிரதாயத்தில் இவரை திருவடி என்று போற்றுகின்றனர்.

தாயாரையும் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைத்த சுந்தரன்.

விபீஷணின் பிரம்மாஸ்திரத்தினால் மயக்கமடைந்த இலட்சுமணனை  காக்க துரோணகிரியிலிருந்து சஞ்சீவி மலையைக் கொணர்ந்து காத்த சஞ்சீவிராயர்.

 சூரியனிடம் பாடம் கற்ற நவ வியாக்ரண பண்டிதர்.

 இராவணனிடம் நான் இராமதூதன் என்று பெருமையுடன் கூறி, இலங்கைக்கு தீயிட்ட  தீரர்.

 அலைகடலை அநாயாசமாக கடந்த அசகாய சூரன்.

 பஞ்ச பூதங்களும் அனுமனில் எப்படி சம்பந்தம் பெற்றுள்ளன என்பதை கம்பர் இவ்வாறு பாடுகின்றார்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

 

இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை. முதல் வரியில் இடம் பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புத்ரன்  அனுமன் என்பதனைக் குறிக்கும்.  அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும். அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றான  ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்ததை குறிக்க்கின்றது. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என பொருள்படுகிறது. நிறை வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்து எரித்தான் எனப்படுகிறது. அவன் எம்மை அளித்துக் காப்பான் இத்தகைய இராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இப்பாடலின் பொருள். எனவே தான் ஆஞ்சநேயராகிய அனுமனை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.

வாருங்கள் இனி இத்தலத்தில் அனுமன் திருக்கோவில் கொள்ள காரணம் என்னவென்று காணலாம். இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அப்படித் திரும்பும் வழியில் இமயமலையில் கண்டகி நதியில் ஒரு பெரிய சாளக்கிராமக் கல்லைப் பார்த்தார். சாளக்கிராமக் கல், பகவான் விஷ்ணுவின் வடிவம் என்பர். அப்படி ஒரு கல்லில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியிருப்பதைக் கண்ட அனுமன், அப்பெருங்கல்லை வழிபாட்டுக்காகப் பெயர்த்தெடுத்து வான் வழியே பறந்து வந்தார். அந்நேரத்தில் சூரியன் உதயமான படியால், வான்வழியாக வந்து கொண்டிருந்த இங்கு கமல தீர்த்தத்தின் கரையில் நரசிம்ம்மரை தரிசிக்க  தவம் செய்து கொண்டிருந்த   மஹாலக்ஷ்மி(நாமகிரி) தாயாரின் கையில் ஸ்ரீநரசிம்மர் ஆவிர்பவித்திருந்த அச்சாளக்கிராமத்தைக் கொடுத்தார். தான் நீராடிவிட்டு, திரும்ப வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் சென்றார். குறித்த சமயத்தில்  வந்து விட  வேண்டும் என்ற நிபந்தணையுடன் சாளக்கிராமத்தை பெற்றுக்கொண்ட தாயார் குறித்த நேரத்தில் அனுமன் திரும்பி வராததால் அச்சாளகிராமத்தை தரையில் வைத்து விட்டார். சந்தியாவந்தனம் முடித்து திரும்பி வந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. அது பெரிய மலையாக வளர்ந்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றினார். தன்னை நோக்கி தவமியற்றிய தாயாருக்கு தரிசனமும் அளித்து அருள் புரிந்தார். இதன் பின்னர், அவர் அருள் பெற்ற அனுமனும் இங்கேயே தங்க நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.  அனுமன் ஆலய சுவற்றில் இவ்வரலாறு வண்ண ஓவியமாக வரையப்பட்டுள்ளது. மேலும் உக்ர நரசிம்மர் மற்றும் கார்கோடகனில் பள்ளி கொண்ட அரங்கநாதர் மூலவர்  இருவரது ஒவியங்களையும் நாம் தரிசிக்கலாம்.  

இக்கோவிலில் தட்டையான நுழைவாயில் கோபுரம் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரின் சிலை 5ம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கருவறைக்கு மேலே விமானம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களில் ஜப மாலையுடனும்,  இடுப்பில் வாளுடனும், சாலிகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். எதனுள்ளும் கட்டுப்படாதவர் அனுமன் என்பதை உணர்த்துவதாய் இத்திருக்கோவிலில் அனுமன் மேலே உயர்ந்து, விமானத்துள் கட்டுப்படாது நின்று அருளுகிறார். லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீஆஞ்சநேயர் திறந்த வெளியில் விமானம் இல்லாமல் வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் சேவை சாதிக்கின்றார். ஒரு பெரிய தூண்களுடன் கூடிய  முன் மண்டபம், மண்டபத்தில் எங்கு நின்றாலும் நாம் அனுமனை தரிசிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. கூட்டம் அதிகமில்லை நிம்மதியாக, அருமையாக மாருதியை தரிசித்தோம் .

 புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ஹநுமாத் ஸ்மரணா பவேத் ||

 விளக்கம்: புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு வாக்கு வன்மை இவையனைத்தையும் ஆஞ்சேநேயர் தன்னை வழிபடுபவர்களுக்கு அருள்கின்றார் என்று போற்றப்படும் சொல்லின் செல்வனை திவ்யமாக தரிசித்தோம்.

 இராம நாமம் சொல்லி அனுமனை வழிபட சனி பகவானால் ஏற்படும் துன்பம் குறையும்.

 அனுமனுக்கு வடைமாலை அணிவித்து தானம் செய்தால் இராகு தோஷம் நீங்கி செல்வ பாக்கியம் பெறலாம்.

 அனுமனுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராமன் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.

 அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்துவதால் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.

 அனுமனுக்கு எலுமிச்சை மாலை சார்த்த வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறலாம்.

 அனுமனுக்கு வெண்ணை காப்பு சார்த்துவதால் அவ்வெண்ணை உருகுவதற்கு முன்னர் நாம் நினைத்த காரியம் நடந்துவிடும் என்பதெல்லாம் பக்தர்களின்  நம்பிக்கை.

 எனவே நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம், துளசி மாலை சார்த்துதல், தங்க கவசம் சார்த்துதல், தங்கத்தேர் இழுத்தல்,  வடைமாலை சார்த்துதல், முத்தங்கி  சார்த்துதல்  வெள்ளிக் கவசம் சார்த்துதல், சந்தனக்காப்பு, 108 தங்க மலர் அர்ச்சனை ஆகிய பல  நேர்த்திக் கடன்களை  செலுத்துகின்றனர் பக்தர்கள், ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில், வெண்ணைய்க் காப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும்  வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.

 நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் உரிய கட்டணம் செலுத்தி தங்க முலாம் கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களின் நம்பிக்கை. வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடையும்.

 மார்கழி மாதம் அமாவாசையன்று, அனுமத் ஜெயந்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று மட்டும் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலில் கூடுகின்றனர். அன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரம் செய்கின்றனர்.   ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோயிலில் கூட்டம் அலைமோதும். தீபாவளி, பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி,   வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு தினங்கள் என்று வருடத்தின் விசேஷ நாட்கள் அனைத்திலும் கோவில் வளாகத்தில் திரளும் கூட்டத்திற்கு அளவேயில்லை.

 மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும்ஸ்ரீஆஞ்சநேயா போற்றிஎன்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

 வடைமாலை நேர்த்திக் கடன் :  முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான இராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், இராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு இராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, இராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதற்காக ஸ்ரீ,ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள் பக்தர்கள். அனுமனை தரிசித்தபின் வாருங்கள் உன்னதமான உக்கிர நரசிம்மரை  சேவிக்கலாம்.

 புராணங்களில் நாமகிரி என்று குறிப்பிடப்படும்   புண்ணிய  நகரம், நாமக்கல். இந்நகரின் மத்தியில் ஒரே கல்லால் ஆன குன்று நடுநாயகமாக இருக்கிறது. நகரத்தை பேட்டை, கோட்டை என்று இரு பிரிவுகளாக பிரிக்கிறது. நாமக்கல்லை திருமாலின் கோட்டை என்று பக்தர்கள் அழைக்கின்றனர். மலையின் கிழக்குப்புறம் அரங்கநாதராகவும், மலைக்கோட்டையின் உள்ளே  வரதராஜராகவும், மலையின் மேற்கு பகுதியில் நரசிம்மராகவும் திருமால் அருள்பாலிப்பது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பு. இவ்வாறு மூன்று அவதாரங்களில் திருமால் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தாலும், நரசிம்மரே இங்கு பிரதானம்.

 நரசிம்மர் ஆலயத்திற்கு வெளியே  வியாசராஜ ஆஞ்சநேயர் சன்னதியும் அதை அடுத்து  தீபஸ்தம்பமும்  அமைந்துள்ளது.  எதிரே ஆலயத்தின் முகப்பில் லட்சுமி நரசிம்மரின் சுதை சிற்பம் நம்மை வரவேற்றது, மலையின் மேலே கோட்டை சுவரையும் காணலாம். நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றால் எதிரே  கொடிமர மண்டபம், கருடகம்பமும் பலி பீடமும் தரிசிக்கலாம்.


நரசிம்மர் ஆலய முகப்பு

 இடப்புறத்தில் கிழக்கு நோக்கிய நாமகிரித் தாயார் சன்னதி. நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.  நாமகிரி அம்மனின் பெருமை அளவிட முடியாதது. காரணம், இந்த அன்னை கமலாலய புஷ்கரணியில் அமர்ந்து நரசிம்மரை நினைத்து கடும் தவம் செய்து, பல சக்திகளைப் பெற்றதாக வரலாறு சொல்கிறது. எனவே முறைப்படி அவளைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரி தாயார், தாமரக் கண்கள் கொண்டவள் தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே!


நாமகிரித் தாயார்

 

உலகம் போற்றும் கணிதமேதை இராமானுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக  நாமகிரித் தாயாரை போற்றுகின்றனர். இராமானுஜர் இங்கு வந்து நாமகிரித்தாயாரை வணங்கி அருள் பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே நாமகிரித்  தாயாரை வணங்குவதால் கலை, கல்வி, ஞானம், செல்வங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 கருவறை, அர்த்தமண்டபம் என்று உயரமாக அமைந்துள்ளது தாயார் சன்னதி. மஹா மண்டபமும் உள்ளது. கோட்டை நாமகிரித் தாயாருக்கும் பேட்டை அரங்கநாயகி தாயாருக்கும்   நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி, அரங்கநாதர், அரங்கநாயகித் தாயாருக்கு குளக்கரை மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அப்போது தம் திருமண வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள் மொய்ப்பணம் வைக்கின்றனர். தாயாரை முதலில் தரிசித்து விட்டு பின்னர் பெருமாளை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

 சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் கிருஷ்ணர்,  இராமர், இராமானுஜர், வேதாந்த தேசிகர் சன்னதிகள் அமைந்துள்ளன. படிகளில் ஏறி அழகிய கற்சிற்பங்களைக் கொண்ட தூண்களுடன் கூடிய வாத்திய மண்டபத்தை அடைகின்றோம். இம்மண்டபத்தின்    மேற்குப்பகுதியில் பெருமாளை வணங்கிய கோலத்தில் கருடபகவானை சேவிக்கலாம்.     மஹா மண்டபத்திற்கு அருகே  விஷ்வக்ஷேனர் தனி  சன்னதி உள்ளது. மஹா மண்டபத்தை அடுத்து  மலையுடன் கூடிய கருவறையுடன் சேர்ந்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது.  அர்த்தமண்டபத்திலிருந்து பெருமாளை தரிசிக்க குழுவாக அனுமதிக்கின்றனர்.

 கருவறை ஒரு குடைவரைக் கோவில் ஆகும். மலையே உடலாக பெருமாள்  உள்ளார்.  புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோவில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டது என்பது ஐதீகம்.

 அளந்திட்ட தூணை அவன் தட்ட  ஆங்கே

வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க உருவாய்

உளந்தொட்டு இரணியன்  ஒண் மார்வகலம்

பிளந்திட்ட கைகளால் சப்பாணி

பேய்முலை உண்டானே! சப்பாணி.

 பொருள்: தானே அளந்து கட்டிய தூணை இரணியன் தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே வளர்ந்து தோன்றி, ஒளி பொருந்திய நகங்களை உடைய சிங்க உருவாய், இரணியன் மார்பைத் தொட்டு, மார்பு முழுவதும் பிளந்த கைகளால், கை கொட்டிச் சிரி! பேய் முலை உண்டவனே! கை கொட்டிச் சிரி!' என்று பெரியாழ்வார் பாடியபடி எங்கும் உளன் கண்ணன் என்று சிறு குழந்தையான பிரகலாதன் சொன்ன வார்த்தையை  நிரூபிக்க அதே நொடியில் தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரம்.

 நரசிம்ம சுவாமி மேற்கு நோக்கி வீராசனத்தில்  வலது திருவடி ஊன்றி இடது காலை மடித்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இரணியனை வதைத்த கரங்களோடு நரசிம்மர் வீற்றிருப்பதால் நரசிம்ம மூர்த்தியின்  வலது திருக்கர விரல் நுனிகள் சற்றே சிவந்தாற்போல் காணப்படுகிறது. முன் இடது கை தொடை மீது படர்ந்துள்ளது. பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியுள்ளார். மார்பில் மஹாலக்ஷ்மித்தாயார் அகலகில்லேன் இறையும் என்று உறைகின்றாள்.  நாமகிரித் தாயாரின் தவத்தில் மகிழ்ந்து இங்கு கோவில் கொண்டதால் லக்ஷ்மி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார். நரசிம்ம மூர்த்தியுடன்  பின்னர் பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் ஆகியோர் சுவாமிக்கு கவரி வீசுகின்றனர். மற்றும் சிவபெருமான், பிரம்மா இரு பக்கமும் நின்று சுவாமியின் உக்கிரத்தை குறைத்துக் கொள்ள வேண்டுகின்றனர். அதனால் நாமக்கல் திருமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்று என்றுப் போற்றப்படுகிறது. சூரிய பகவான், சந்திர பகவான் இருவரையும் தரிசிக்கலாம். பெருமாளின் வலப்புறம் தூணைப் பிளந்து வெளியே வந்து இரணியனை அவரது மடியில் கிடத்தி அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்மரை சேவிக்கலாம்.   குடவரை என்பதால் அர்த்த மண்டப சுவர் முழுதும் வைகுண்டநாதர், ஓங்கி உலகளந்த உத்தமரான திரிவிக்கிரமர், வராகர், வாமனர் புடைப்பு சிற்பங்கள்  நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளது. உற்சவர் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளியுள்ளார்.

 எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை

பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே என்ற பெரியாழ்வாரின் பாசுரம் பாடி லக்ஷ்மி நரசிம்மரை திவ்யமாக சேவித்தோம்.

 அனுமனின் தோள் மீதமர்ந்து போருக்குச் செல்லும் இராமபிரானை நாமக்குன்ற மீதமர்ந்த நரசிங்கமேஎன்று அனுமனை நாமக்கல் மலையாகவும், இராமனை நரசிம்மராகவும் உருவகப் படுத்தி கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியுள்ளார்.

 சுவாமியை சேவித்துவிட்டு வெளியே வந்தால் வாத்திய மண்டபத்திலிருந்து கருடன் சன்னதியின் சுவரிலும் அதை அடுத்து உள்ள பலி பீட  மண்டபத்தின் விமானத்தில் நடுவே உள்ள  ஒரு சாளரத்தின் வழியே ஆஞ்சநேயரை நாம்  சேவிக்க முடியும்.  அனுமனின் திருக்கண்கள் நரசிம்மரின் திருப்பாதங்களை பார்த்தபடி இருப்பது சிற்பக்கலையின் சிகரத்தைத் தொடுகிறது. அகழ்வாராய்ச்சியின்படி, பல்லவர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. இடப்புறம் லக்ஷ்மிநரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. மூலவரின் விமானத்தையும் சேவிக்கலாம். 

 














கருடன்                                                        சுதர்சனாழ்வார்

இத்தலத்.தில் நரசிம்ம ஜெயந்தி உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.   அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூலவர் தரிசனம் கிடையாது. உற்சவ மூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள். நடைபெறுகின்றது. மூலஸ்தான நரசிம்மமூர்த்திக்கு சுமார் 9மணி அளவில் ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை நடக்கும் தைலகாப்பு நிகழ்ச்சியில் நல்லெண்ணையால் சுத்தம் செய்து, வேறு புதிய வஸ்திரங்கள் சாத்துப்படி செய்து எம்பெருமானிடத்தில் நித்யபடி உள்ள கவசங்களை தேவஸ்தான பொற்கொல்லர் மூலம் சுத்தம் செய்து, அதை மறுபடியும் சார்த்துகின்றனர். தூணிலிருந்து நரசிம்மர் தோன்றிய பிரதோஷ நேரமான மாலை 6 மணி அளவில் பெருமாளுக்கு விஷேசமான தீபாராதனை நடைபெறுகின்றது.

 யந்தி தினத்தில் மாலை 6 மணிக்கு பிறகு பெருமாளை  தரிசிப்பவர்களுக்கு பொருளாதாரத்தினுடைய வளர்ச்சி, தோஷங்கள் நிவர்த்தியாகும். உத்யோகம், வாழ்வியலில் நம்முடைய நேர்மையான கோரிக்கைகளை பெருமாள்  அனுகிரகம் செய்து கொடுப்பார். சனி, இராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக உபாதைகள் குறையும். லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .


கொடியேற்றம்

இந்த யாத்திரையின் போது நரசிம்ம சுவாமியின் பங்குனிப் பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்து கொண்டிருந்தது. விஸ்வக்ஷேனர், கருடன், சுதர்சனாழ்வார் மற்றும் உற்சவர் பெருமாளை சிறப்பு அலங்காரத்தில் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  கொடியேற்றம் நிறைவு பெற்ற பின் அரங்கநாதரை சேவிக்க சென்றோம்.

 அரங்கநாதர் சன்னதி

மலையின் கிழக்கு புறம் அரங்கநாதர் ஆலயம்  உள்ளது. இதுவும் ஒரு குடவரைக் கோவில்தான். அனைத்து தலங்களிலும் ஆதி சேஷனில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் இங்கு ஐந்து  தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு  பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் என்பது ஒரு சிறப்பு. அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருக்கிறார். காலடியில் சங்கரநாராயணர். இக்கோவிலை மகேந்திர பல்லவன் அமைத்தான். பள்ளி கொண்ட பெருமாள் உருவம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்துக்கு வெளியிடம் மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகையும் வேலைத்திறத்தையும் நேரில் காண்பவரே உணர முடியும், வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம். கோவில் சுவர்களில் திருமால் அவதாரக் கதைகள் அழகொழுகும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.

 தந்தை காச்யப முனிவரிடம் குறும்பு செய்த கார்கோடகனை, காட்டுத்தீயில் சிக்கி அவதிப்படுமாறு சபித்தார் முனிவர். அவ்வாறு ஒரு சமயம் கார்கோடகன் காட்டுத் தீயில் சிக்க, நள சக்கரவர்த்தி அவனை அதிலிருந்து காப்பாற்றினார். தீயில் இருந்து காப்பாற்றப்பட்ட கார்கோடகன், ஸ்ரீமந்நாராயணனை நோக்கி தவமிருந்தான். நாராயணரும் அவன் முன் தோன்றி, விருப்பம் யாதெனக் கேட்டார். ஆதிசேஷன் மீது பகவான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது போல், அடியேன் மீதும் பள்ளிகொண்டு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினான் கார்கோடகன். அவன் விருப்பத்தின்படி, ஸ்ரீரங்கநாதனாக, மலையின் பின்புறம் கார்கோடகசாயியாக காட்சியளிக்கிறார் பகவான் என தல புராணம் கூறுகிறது. மேலும் கார்கோடகன் தினமும் கமலாலய குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து நித்ய ஆராதனம் செய்கிறானாம். இதற்கு சான்றாக மலைப் பாறையில் குளத்தில் இருந்து கோவில் வரை பாம்பு ஊர்ந்து சென்ற தடங்கள் காணப்படுகின்றன. மேலும் சங்கரநாராயணரையும் இங்கே தரிசிக்கலாம். அரங்கநாயகித் தாயாருக்கும் தனி சன்னதி உள்ளது. கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்த தீர்த்தக்குளமாகக் கருதப்படுகிறது. 

அரங்கநாயகித் தாயார் சன்னதி 

நரசிம்மருக்கும், அரங்கநாதருக்கும், அனுமனுக்கும் ஒரே சமயத்தில் உற்சவம் நடக்கின்றது என்பதால் இங்கு உற்சவருக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்ததால் மூலவரை தரிசிக்க இயலவில்லை அரங்கநாயகி தாயாரை மட்டும் இந்த யாத்திரையின் போது பாக்கியம்   கிட்டியது.  

 இராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்புசுல்தான் பயன் படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது. பாறையை செதுக்கி இப்படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

 நாமக்கல் நரசிம்ம சுவாமி மற்றும் ஆஞ்சநேயர்  ஆலயங்களின் முக்கிய திருவிழாக்கள் வருமாறு,  சித்திரையில் தமிழ் வருடப் பிறப்பு, தெலுங்கு வருடப் பிறப்பு. வைகாசி விசாகம், ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி, ஆடி பதினெட்டாம் பெருக்கு, ஆடி பூரத்தன்று  ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை, ஆவணியில்  பவித்ரோற்சவம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி உற்சவம், விஜயதசமி, திருகார்த்திகை தீபம் ,மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை அனுமன் ஜெயந்தி, மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி ஸ்ரீஅரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள், தை அறுவடைத் திருநாள் வருட உற்சவம். பெருவிழா பங்குனி மாதத்தில் தேரோட்டத்துடன் 15 நாட்கள் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. நரசிம்மர், அரங்கநாதர், அனுமன் என்று மூன்று சுவாமிகளும் தேரோட்டம் கண்டருளுகின்றனர்.  நாமக்கல்லில் தரிசனத்தை நிறைவு செய்தபின் சேலம் அருகே உள்ள சிற்பங்களுக்கு புகழ் பெற்ற கைலாசநாதர் ஆலயத்தை தரிசிக்க சென்றோம்.