மூஷிக வாகனத்தில் விநாயகர்
மேற்கு சைதாப்பேட்டை சௌந்திர விநாயகர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆருத்ரா தரிசனத்தின் முதல் நாள் இரவு வெள்ளை சாத்திப் புறப்பாடு. அதிகாலை ஆருத்ரா அபிஷேகம் அதன் பின்னர் உதயாதி நேரத்தில் நடராஜர் சிவகாம சுந்தரி திருக்கல்யாணம். பின்னர் பஞ்ச மூர்த்திகள் திருவீதிப்புறப்பாடு. அழகிய பொன் வர்ண மூஷிக வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர், ககன கந்தர்வ விமானத்தில் நடராஜர் மற்றும் மானச கந்தர்வ விமானத்தில் சிவகாம சுந்தரி, தங்க மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் மற்றும் சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழிலாக திருவீதி வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். பின்னர் மதியம் திருஊடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த திருஊடல் உற்சவத்தைப் பற்றி விரிவாக இப்பதிவில் காணலாம்.
சிவானந்த வல்லி
திருவீதிஉலா நிறைவு பெற்ற பின் ஒரு பக்கம் ஐயனும் அம்மையும், மறு பக்கம் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என்று எதிர் எதிராக இருக்க பஞ்ச மூர்த்திகளுக்கும் ஏக காலத்தில் கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. பக்தர்கள் அனைவரும் பரவசத்துடன் கற்பூர ஆரத்தி கண்டு அருள் பெறுகின்றனர். பின்னர் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் யதாஸ்தானம் அடைகின்றனர். அம்மை ஐயனும் தேரில் இருந்து இறங்கி முதலில் ஆலயத்தின் உள்ளே சென்று கதவை சார்த்திக்கொள்ள திருவூடல் உற்சவம் துவங்குகின்றது. எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் தூது செல்கின்றார்.
ஆனந்த தாண்டவ மூர்த்தி
சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நடந்த
ஊடல் வைபவம்
கோபுர தரிசன மகிமை
இங்ஙனம் அத்தருணத்தில் பொன்னாலமைந்த ரதம் பிரகாசிக்கவும் ஏழு பச்சை புரவிகள்
பறக்கும்படிக்கு பூட்டி அருணனானவன் சாரத்தியம் நடத்த திருவாழி கடகடவென உருள
நவரத்தின கிரீடம் புனைந்து இரண்டு செவிகளிலும் மகரகுழைகள் பிரகாசிக்க செந்தாமரை
பூமாலை ரத்தினாபரணங்கள் முப்புரிநூலும்
மார்பிலிலங்க கந்தகளப கஸ்தூரிகள் கமகமவென வாசனை பரிமளிக்க சிவந்த திருமேனியும் மூன்று கண்களும் ஆயிரம் கிணைகளும் தகதகவென ஜொலித்தாற்போல்
சங்கராந்தி புண்ணியகாலத்தில் தனக்குச்செய்யும் பொங்கல் நைவேத்தியத்தை
சம்பரமத்துடன் கொண்டு வெகு சந்தோஷமாக வேடிக்கையே படு சனிபகவான் பரமசிவத்தை
பிடிக்கும் வகையை கண்ணார காணவேண்டுமென்று
ஆவலோடு கிழக்கு திசையில் உதயகிரியில் சூரியபகவான் உதயமாகினார்.
அதுகாலம் உஷத்காலமான அருணோதய காலமானதால் சகலமான தேவராதி முனிவர்
கெருடர் காந்தர்வர் திக்பாலகர் நாரதர் தும்புரு மற்றுமுண்டானவர்களும் சிவபெருமானை தரிசனம் செய்யும் பொருட்டாக திருக்கைலாயத்திற்கு வந்தார்கள். அந்த சமயம் சுயம் ஜோதிப்பரம்பொருளாகிய பரமசிவமும் உமாதேவியும் தம்பதி
சமேதராக திருக்கோபுர வாயிலை அடுத்த மஹாவினோதகரமான சித்ரமணிமண்டபத்தில்
இருக்கக்கண்டு "ஹர ஹர சிவ சிவ" வென்று துதித்து கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ஆஹா ஆஹா இது நல்ல வேளை என்று வெகு ஆனந்தம்
பரமானந்தம் கொண்டு யாவரும் வந்தனை வழிபாடுகள் புரிந்து சிவபெருமானை பணிந்து
தீர்க்க தெண்டம் செய்து பலவிதமான தோத்திரங்களையும் செய்தார்கள் அப்போது
ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தன. தசவாயுக்களும் வாத்தியங்களாக
சப்தித்தார்கள். தும்புரு நாரதர் தம் தம் வீணைகளை மீட்டிப் பாடினார்கள். தேவதாந்திரிகளும் பலவிதமான
பரிவட்டங்கள் இசைத்தார்கள். நந்திகேஸ்வரர் மத்தளம் தொனித்தார் பிருங்கி முனியானவர்
தாளம் கொட்டி நடனமிட்டார் ரிஷிகேஸ்வாரதிகளெல்லாம் வேதகோஷம் புரிந்தார்கள்
தேவேந்திரன் முதலான சமஸ்த தேவர்களும்
சந்தனம் கதம்பகஸ்தூரிகளை வாரி வாரி கை கொண்ட மட்டும் தெளித்தார்கள் பன்னீர்
சொரிந்தார்கள் சிவகணங்கள் கற்பூர தீபம் சாம்பிராணி தூபங்கள் ஏந்தினார்கள் இவ்வித
வைபவத்துடன் எல்லாம் வல்லபரமசிவனுடைய காட்சியை பெற்று அவரவர்கள் யதாஸ்தானம் போய் சேர்ந்தார்கள் அதன் பிறகு
இருவருக்கும் ஊடல் ஏற்பட்டது.
தூது செல்லும் சுந்தர மூர்த்தி நாயனார்
ஸ்ரீ சிவ பெருமான் திருவூடல்
பரமேஸ்வரனும் பார்வதி அம்மனும் தர்க்கமாடிக் கொண்டே கைலாய கோடிவாயிலைக் கடந்து கைலாய மாடவீதியின் கண்
எழுந்தருளியபிறகு சுவாமியானவர் அம்மனைப்பார்த்து அடி என் மனோகரமான மயிலே மானே தேனே
உனக்கென்ன சிரிதும் புத்திஇல்லையா அச்சமில்லையா கற்புள்ள ஸ்திரி ஜாதிகள்
அந்தப்புறத்தை விட்டு தெருவில் பகிரங்கமாக
இவ்வளவு தூரம் வரலாகுமா? இது சர்வத்திரி
நாளும் உலாவி நடமாடும்படியான தெருவல்லவா? பார்த்தவர்கள் நகையார்களா மெட்டுடனே
அரண்மனைக்கு போய் சேர் என்று கூறி தான் சற்று விரைவாக முன்னே நடந்தார்.
அம்மனும் விடாமற்படிக்கு தானும் பின்னாகவே தொடர்ந்து வந்து குறுக்காக நின்று
வழி மறித்து தடுத்து அவரது கரத்தை பற்றி இழுத்து போகாதீர் அரண்மனைக்கு தாங்களும்
வாரும் போகலாம் என்றுறைத்து
மன்றாடினார்.
அப்போது சுவாமியானவர் தனதுதேவியாகிய அம்மன் பிடித்திருந்த கரத்தை தான் திமிறிக்கொண்டு தன் இடக்கரத்தினால் உமையவளை பின்
புறமாக தள்ளி அரண்மனைக்கு போடியென்று அதட்டி துரத்தினார். இவ்விதமாக அவர்கள்
இருவரும் வாவென்றும் போவென்றும் முன்னும் பின்னுமாக ஊடளிட்டார்கள் அப்பொழுது சுவாமியாகிய
பரமேஸ்வரருக்கு இஞ்சித்து
கோபமுண்டாகி அடி நீலி கபாலி கங்காளி சண்டி சாமுண்டி மாதங்கி வேதகாளி சக்கிலிச்சி
வள்ளுவச்சி புரத்தி கொள்ளிக்கண்ணி முக்கண்ணி வாணிச்சி மாயகாளி விந்தைகாளி நீ
எனக்கு பெண்டல்ல இப்பொழுது என்னைபிடிக்க போகிறவன் சனியனுமல்ல நீயேதான் எனக்கு
சனியனாக ஏற்பட்டாய் நீயே கொல்லும் நமனாகவும் வந்துற்றாய் உடுத்தும் புடவையே உரகமென்று சொல்வது போலாயிற்று.
குண்டோடே நடுவீட்டில் இரு என்றால் திட்டுண்டு தெருவில் நிற்பது போலாயிற்று இனி
நான் உன்முகத்தில் விழிக்கமாட்டேன் போடியென்று தம்முடைய ஹஸ்தத்தினால் அம்மனிட தாடையில் குத்தினார்.
உடனே அம்மனுக்கு கோபம் பெருகிஅடியாளை அடித்த தங்கள் கை எரியாதா பொரியாதா என்று
பற்பலவிதங்களாக நிந்தித்து பேசினார். பிறகு சிவபெருமானை பார்த்து சுவாமி தாங்கள்
என்னை விட்டு தனியாக பிரிந்து செல்லக்கூடாது. தங்கள் பேரில் ஆணை ஆணை
ஆணை என்று முக்காலும் சொல்லி கைலாயத்திற்கு சென்றுவிட்டார்.
அம்மன் ஆணையிட்டு சென்றபிறகு அம்மனை சமாதானம் செய்து ஆணையை விடுவிக்கும்
பொருட்டு தனது அடியவர்களில் ஒருவரான தம்பிரான் தோழன் என அழைக்கப்படும்
சுந்தரமூர்த்தி நாயனாரை நினைந்தருளினார்.
தேர்களில் அம்மையப்பர்
எதிரே விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரர்
சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமியிடம் ஓடோடி
வந்து வணங்குதல்:
சுந்தரமூர்த்தி நாயனார்: எம்மை அடிமைகொண்ட லோகரட்சகரே அடியேனை
நினைந்தருளின விஷயத்தை தெரிவிக்க
வேண்டுகிறேன் சுவாமி.
சிவபெருமான்: கேளும் பிள்ளாய் சுந்தரமூர்த்தி நீ முன்பு பரவைநாச்சியாரிடம் பிணக்குண்ட போது அது சமயம் யான் உங்கள் இருவருக்கும்
தூதுவன் போலாகி பாயையும் தலையணையும் என் தலை
மீது சுமந்து படுக்கையமர்த்தி இருவரையும் ஒருங்கு சேர்த்து வைத்தேனே உமக்கு ஞாபகம்
இருக்கிறதா? அதற்கு பதிலாக நீ இப்பொழுது எனக்கோர் உபகாரம் செய்யவேண்டும் அதாவது நீ போய்
உன் தாயாராகிய உமையவளுக்கு சமாதான மொழிகள் கூறி சம்மதிக்கச்செய்து அவள் என் மீது வைத்துள்ள ஆணையை விடுதலை செய்து கொள்.
நான் போய் வருவதற்குள் சீக்கிரம் சென்று வருவாயாக.
சுந்தரமூர்த்தி
சுவாமிகள் உமைபார்வதியை கண்டு வணங்கிதரிசித்து சொல்லுதல்:
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:- என் தாயே உனது திருவடிகளுக்கு நமஸ்காரம் சகல உயிர்களையும் ஈன்றெடுத்த
ஜென்மாதாவே! அடியேனது விண்ணப்பம் தாங்கள் செவிகொடுத்து கேட்பீர்களாக அதாவது
யாதெனில் உலகத்திலுள்ள எந்த ஸ்திரிகளுக்கும் பதியே பரமேஸ்வரன், பதியே ஜெகதீஸ்வரன். பதியே முக்தி அளிக்கும் முதல்வன் பதிக்கு
எதிர்மொழி கூறுதல் பிசகல்லவோ? தாங்கள் இருவருக்குமுள்ளாக விவாதம்
வந்துவிட்டால் என்ன அம்மணி! அதை யார்தான் தீர்த்து வைப்பார்கள்? தயவுசெய்து
தாங்கள் எனது பிதாவாகிய பராபர பொருளுக்கிட்ட ஆணையை விடுதலை செய்து திருவாக்கருளி
சுவாமியை அனுப்பி வையும் தாயே பராபரியே…
உமைபார்வதி:- அப்பனே சுந்தரமூர்த்தி நீ கூறியவை யாவும் சரியே
நான் தெரிவிப்பதை சற்று கவனிப்பாய் கேள். பதியே மாதா பிதா
குரு தெய்வம் என்பது உலக உண்மை தான் புருஷர்கள் சொல்லை ஸ்திரீகள்
தள்ளக்கூடாதென்பது மெய்தான் புருஷன் மாத்திரம் ஸ்திரீகள் சொல்லை தள்ளலாகுமா இது
நியாயமா? அநியாயமா? ஒரு ஸ்திரீயை
விவாகம் செய்கின்ற காலத்தில் நாகதேவன் அரசானிக்கால் அக்கினிதேவன்
முப்பத்துமுக்கோடி தேவர்கள் நாற்பத்தென்ணாயிரம் ரிஷிகள் வேதபிராமனாள் தாய் தந்தை
பந்துமித்திரர்கள் யாவரும் அறிய சாட்சி வைத்து தாரை வார்த்துக் கொண்டபோதே சதியும்
பதியும் ஒருமைப்பட்டதல்லவா! அப்போதே சுகம் துக்கம் தனம் ரொணம் நன்மை தீமை
இருவருக்கும் சொந்தம் தானே அல்லது வேறுபட்டதாகுமா? ஒருவருக்கொருவர் இசைந்து இல்லறம் நடத்த வேண்டிய
கடமையே அல்லது வேறுண்டோ? இதுவும் தவிர நான் அகோர தவம் செய்து அவருடைய
சரீரமும் என்னுடைய சரீரமும் அர்த்தபாகமாக
இருக்க என்னை மாத்திரம் பிரிந்து
போவதற்கு என்ன நியாயம் அதற்கு நான் ஒப்புவேனோ? என்னை மாத்திரம் இங்கு தனியாக விட்டு விட்டு
தனது வைப்பாட்டியாகிய கங்கையை மட்டும் ஜடைமீது சும்மாடு போல் புஷ்பம் போல் தலை மீது வைத்துக்கொண்டு
போகலாமா? என்னையும் தன்
கூட அழைத்துப்போனாலொழிய நான் அவரை தனியாக மாத்திரம் அனுப்ப மாட்டேன் ஒரே
பிடிவாதமாக சொன்னேன் என்று அவரிடம் போய் கண்டிதமாக சொல்லிவிடும் சுந்தரா என்று
உமாதேவியார் கூற அம்மன் கூறியதை சுந்தரமூர்த்தி நாயனார் சிரமேற் கொண்டு
சுவாமியிடம் சொல்லுதல்:-
சுந்தரமூர்த்தி:-
அம்மன் கூறியதை யாவும் சுந்தரமூர்த்தி சொல்லிய பிறகு
சிவபெருமான்:- அடாய் குழந்தாய் சுந்தரா உன்னிட தாயார்
மாச்சிரியத்தை நீ கண்டதில்லையா? ஆ! ஆ!! நான் அப்படி கெட்ட எண்ணம் இது நாள்
வரைக்கும் என் மனதில் வைக்கவில்லையே இருவரையும் இரண்டு விழிகளாக தானே பாவித்து
வருகிறேன் விரல் நீக்கி பால் குடிப்பான் நானில்லைவே ஒருத்தியை இடையிலும் ஒருத்தியை
தலையிலும் வைத்து தானே காத்து வருகிறேன். அப்பா சுந்தரா வீண் காலமாகிறது தற்காலம் நடக்கவேண்டிய சூட்சுமம் ஒன்றிருக்கின்றது. அதனுடைய உண்மையை
தெரிவிக்கின்றேன் கேள். அது என்னவெனில் சனியனுக்காக நான் தனித்து மறைந்து கொள்ள
வேண்டிய காரணம் ஒன்றிருக்கின்றது அதுவும் தவிர நெடுநாளாக மனோ வைராக்கியத்துடன்
மானச பூசையில் சக்தியை நீக்கி நாம் தனித்து காட்சிதர வேண்டுமென்று ஞானமுறட்டு
வேடுவனென்பவன் தன்வாயினால் தனித்து எப்போது வருவானோ? என்மனதை எப்போது கவர்வானோ! ஒருவனாக வரமாட்டானா? வரத்தை தந்து
போகானோ ஒண்டி ஓகனாய் வருவானோ என்று பற்பல விதமாக கூவி கதறுகிறான். அவன் கருத்துப்படி நான்
ஒருவனாகவே அவனிடம் சென்று அவனுடைய பேரவாவை தீர்த்து வைக்க வேண்டியது எனது
கடமையாகும். அதற்கு இதுவே நல்ல தருணம் ஆதலால் நான் கங்கையையும் விட்டுவிட்டு
தனித்து போகிறேன். நீபோய் உன் தாயார் மனதை தேற்றி நல்லதொரு விடையை பெற்றுக்கொண்டு
விரைவில் வருவாயப்பா சுந்தரம்.
உமையவளிடம் சுந்தரமூர்த்தி இரண்டாம் தூது
வருதல்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:- அம்மணி
இதென்ன விபரீதம் தேடிக்கொண்டீர்களே
ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்க சொன்னால் முடவனுக்கு கோபம் என்பது போலும்
எருதும் எருதும் மிகப்போராடி நடுவிலிருக்கும் புல்லைத்தேய்ப்பது போல அடியேன் தங்கள் இருவருக்கும் மத்தியில்
அகப்பட்டு கசங்கி நசுங்கலானேன் மேலும் அடிமை வார்த்தைகள் அம்பலத்திற்கு ஏறாது.
முன்னொரு காலத்தில் சிருஷ்டிப்பு பெரிது
ரட்சிப்பு பெரிது என்று பிரம்மாதி விஷ்ணுக்கள் போரிட அதுசமயம் தீர்ப்பு கூற எனது
தந்தையாகிய சிவபெருமானுக்கே முடியாமல் போய்
இவருக்கு சொன்னால் அவருக்கு கோபம் அவருக்கு சொன்னால் இவருக்கு கோபம் வருமென அவ்விருவருக்கும் மத்தியில்
அக்கினி ஸ்தம்பமாகி விளங்கினாரே தவிர நியாயம் சொல்ல அவராலேயே முடியவில்லை தங்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ளவூடலைத்
தீர்க்க சிறியேனாகிய என்னால்
ஆகுமோ? உங்கள்
இருவருக்கும் மத்தியில் ஆலையில் அகப்பட்ட கரும்பு போல் தயங்குகிறேன். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ஈரேழு புவனங்களையும் ஆக்கவும்
அழிக்கவும் வல்ல சிவகாமசுந்தரி உமது மனமிரங்கி சுவாமிகள் கேட்டபடி விடைதந்தருளும்
அம்மணி!
உமைபார்வதி: என் கண்ணே சுந்தரம் உன்னுடைய தந்தையின்
வார்த்தையை சிலாக்கித்து சொல்கின்றாயே அன்னவர் வார்த்தையை நம்புலாகுமா? நீயோ
சின்னஞ்சிறியவன் உனக்கொன்றும் தெரியாது நான் சொல்வதையாகிலும் கேள் ஆதிகாலத்தில் மார்கண்டேயருக்கு பதினாறு
வயதைக்கொடுத்து அதைப்பிறப்பு இன்றும் பதினாறே என்று பெறும் பொய்யை கூறி; எமதர்மராஜனை
ஏமாற்றினார். இன்னமும் கேள் முற்காலத்தில் பிருங்கிமுனி என்பவன் என்னை நீக்கி
சுவாமியை மாத்திரம் பிரதட்சன நமஸ்காரம் புரிவது வழக்கம் அதனால் எனக்கு கோபம்
உண்டாகி நரம்பு தோல் எலும்பு தசை உதிரம் சுக்கிலம் ஆக ஆருதாரத்தில்
கண்டிக்கின்றபடிக்கு எனக்குரிய பாகமாகிய தசை
மூளை ரத்த மாமிஷம்
இம்மூன்றையும் கொடுத்து விடும்படி கேட்டேன். அப்போது அந்த பிருங்கி முனியானவன்
தான் என்கின்ற அகங்காரத்தோடு தன் திரேகத்தை உலுக்கினான். அப்படி உலுக்கவே அவன்
திரேகத்தில் கலந்திருந்த ரத்தம் மாமிசம் சுக்கிலம் இம்மூன்றும் பூமியில்
விழுந்துவிட்டது. அப்பால் நரம்பு தோல் எலும்பு மாத்திரம் நிற்க திரேகம் சக்தியற்றவனாகி
நிற்கிறான். அதுவேளை சுவாமியானவர் அவனுக்கு ஆதாரமாக ஊன்றுகோல் ஒன்றை கொடுத்து
உதவினார் அதுமுதல் அம்மகரிஷிக்கு மூன்று காலாச்சுது அப்பொழுது நாங்கள் ஒருவராக
இருக்க இப்படி செய்யலாகுமா என்று கேட்டவருமல்ல! எங்கேயப்பா எனக்கும் அவருக்கும்
சம்பந்தா சம்பந்தம் இருக்கிறது என்று கூறுகிறார்.
இதுவும் தவிர மற்றொருகாலத்தில் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்தார் அவன் இவரையே
சோதிக்க எண்ணி அன்னவர்
தலைமீதிலேயே கையை வைக்க வந்தான் அது சமயம் ஓட்டம் பிடித்து ஓங்கி வளர்ந்திருந்த
ஐவேலங்காயிற் புகுந்து ஒளிந்து கொண்டார். இந்த சிவனை விட்டேனா பார் என்று தேடி
வருகையில் எனது தமையன் வைகுண்டப் பெருமாள் மோகினி
ரூபம் கொண்டு அவன் எதிரில் போய் அவன் மயங்கத்தக்க நாட்டியமாட அதைக்கண்டு அசுரன் ஏ
பெண்மணி மும்மூர்த்திகளையும் மயக்கும் விண்மணி நீ என் எண்ணப்படிக்கு நடக்க
வேண்டும் என்று கூற அதற்கு சம்மதப்பட்டவர்போல நடித்து ஏ! அசுரேசா உன் திரேகம்
அசுசையாக இருப்பதால் ஸ்நானம் செய்து சுத்தமாக வருவாயாகில் உன் இஷ்டப்படியாகுமென
அவனும் அதற்கு இசைந்து ஜலமிருக்கும் இடத்தை தேடினான் மாயவன் எங்கும் ஜலம்
இல்லாமற் செய்ய அசுரன் எங்கு தேடியும் ஓடியும் ஜலம் கிடைக்காமல் அலுப்புற்று
வியர்த்து விடாய்த்து ஏ! பெண்கள் நாயகமே! இக்காட்டில் எங்கும் கரண்டி ஜலம் கிடையாது.
என் ஜுவன் பரிதவிக்கிறது இதுசமயம் என்னை ஆலிங்கனம் செய்வதற்கு நல்ல குளம்
இருக்கும் இடத்தை காண்பிக்க வேண்டும்.
என்று கெஞ்சி கூத்தாடி பரிதவித்தான். அதைப்பார்த்த பெருமாள் தன்னுடன்
கூட்டிக்கொண்டு போய் ஆங்கோர் இடத்தில் சேறும் தண்ணீரும் கலந்து சதுசதுப்பாக
இருக்கும்படி செய்தார். அதை கண்ட அசுரன் ஏ! பெண்மணி இதோபார் தண்ணீரும் சேறுமாக
கலந்து இருக்கின்றது இது தவிர வேறு எங்கும் ஜலம் கிடைப்பது அரிது அரிது என்று வெகு பரிதாபமாக கூறினான் அதை கேட்ட
மாயாமோகினி சேறும் தண்ணீரும் இருக்கின்ற ஜலத்தையாவது எடுத்து உன் சிரத்தில்
தேய்த்துக்கொண.டால் போதும் அதுவே சுத்தம் பரிசுத்தம் என்று கூற அதற்கவன்
சம்மதித்து அங்குள்ள சேறையும் ஜலத்தையும்
வாரியெடுத்து தலையின் மீது தேய்க்கவும் அவன் உடனே
எரிந்து சாம்பலானான். சிவபிரான் கொடுத்த சாபவிரதப்படி யானை தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொண்டது போல தானே மடிந்தான் உடனே
மாயா மோகினியாகிய மகாவிஷ்ணு மகிழ்ந்து மோகினி ரூபத்தை நீக்கி சுயரூபத்துடனே
சிவபிரானிருக்கும் ஐவேலங்காய் இருக்கும் செடியை அணுகி ஓய் சிவபிரானே வாரும் நான் தான் விஷ்ணு
அசுரனை எரிக்கச்செய்து விட்டேன் என்று கூறவும் சிவபெருமான் வெளியில் வந்து
மைத்துனரை தழுவிக்கொண்டு எந்தவிதமான கோலத்துடன் எரிக்கச் செய்தீர்கள் என்று கேட்டு
மறுபடியும் மோகினிரூபம் எடுக்கச்செய்து மகேஸ்வரன் அதை கண்டு மோகிக்க ரிஷிபிண்டம்
ராதங்காது அதுபோல ஹரி ஹரன் என்றும் புத்திரன் பிறக்க அந்த சிசுவை அப்படியே நடு
காட்டில் போட்டுவிட்டு வந்து விட்டார்கள். அச்சிசுதான் பெரிதாக வளர்ந்து ஐயனார்
அப்பன் என்று பெயர் வகித்து உலகம் முழுதும் பூசித்து வருகிறார்கள். அந்த சமயமும்
என்னை விட்டு போய் என்ன சுகத்தை அடைந்தார் சுந்தரா!
இன்னுமொன்று தெரிவிக்கிறேன் கேள் பின்னுமொரு
காலத்தில் தாருகாவனத்து ரிஷிகளுடைய உத்தமிகளாகிய நாற்பத்தெண்ணாயிரம் பேரின் கற்பை
அழிக்க வேண்டியதன் நிமித்தம் சமயம் அறிந்து சிவபிரான் பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனம் சென்று பவதி பிக்ஷாந்தேஹி என்று பிச்சை கேட்க அம்மாதர்கள் பேதமில்லாமல்
பிச்சையிட வந்தபோது
நிர்வாணிகளாக வந்து பிச்சையிட்டால் தான்
அங்கீகரிப்போம் என அதற்கு அந்த ஸ்த்ரீகள் உனது
மானியற்று பூமியில் விழக்கடவது என்று சாபம் கொடுக்க இதை அறிந்த நான் ஓடோடியும்
வந்து பூமியில் விழாமற்படிக்கு அங்கீகரித்து மன்னிக்க வேண்டுமென்று இரங்கிக் கேட்டவாறு முன்போலிருக்கவும் வந்து
சேர்ந்தார். அசளை தொடுவானேன் கவலைபடுவானேன் பார்த்தாயா சுந்தரா இவ்விந்தையை
பித்தன் என்கின்ற பெயர் சரியாக இருக்கின்றது அல்லவா என்னைவிட்டு போனால் எதேனும்
கெடுதி வருமேயென்றுதான் சிந்திக்கின்றேனே ஒழிய வேறு ஒன்றுமில்லை மைந்தா
இன்னமும் கேள் அதாவது முன்னொரு சமயம் தவத்தில் மிக்கவராகிய அத்திரிமஹரிஷியின் பத்தினியாகிய அனுசுயா தேவியாருடைய
கற்பை சோதிக்கும் பொருட்டு தான் கெடுவதோடு மட்டுமல்லாமல் எதிரியும் கெடுக்க தனக்கு
துணையாக எனது தமையனாரையும் அவரது மகன் பிரம்மதேவனையும் சேர்த்துக்கொண்டு மூவருமாக
ரிஷிகள் போல அப்பதிவிரதையின் முன் சென்று நிர்வாணமாக வந்து பிச்சையிட்டால் தான்
ஏற்றுக்கொள்வோம் என்று
சொல்ல அப்போது இவர்கள் எண்ணத்தை அறிந்த அனுசூயா தேவியார் ஆண்டிகளாக இருந்த
மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவமாக்கி மூன்று தொட்டில்களில் இட்டு சீராட்டி
தாலாட்டி அமுதூட்டி இருக்கும் சமயம் இது விஷயங்களை நாரத முனிவரால் அறிந்து நானும்
இலட்சுமியும் சரஸ்வதியுமாக கூடிக்கொண்டு வந்து அனுசுயையைக் கண்டு நாணம் விடுத்து பதிபிச்சை கேட்கவும்
அப்பதிவிரதையானவள் தன் கொழுனராகிய அத்திரி மகரிஷியின் உத்தரவின் பேரில் அன்னவர்களை
பழையபடி எழுப்பித்தாலே என்தமையனாராகிய மகாவிஷ்ணு அந்த அம்மையாருக்கு சமாதானம் கூறி ஏக சொரூபமாக
தத்தாதிரேயர் என்னும் காட்சி கொடுத்து பிரதிவருடமும் பிள்ளைகளாக இருந்து தங்கள்
மனதை திருப்தி அடைய செய்கிறோம் என்று தெரிவித்தார் இது விஷயம் மூன்று லோகமும்
அறிந்தது தானே என்னை விட்டு பிரிந்தபோதெல்லாம் இவர் அடைந்த சுகமென்ன? பெருமைதான் என்ன? ஒன்றுமே இல்லை
அல்லவா? நீ இதையெல்லாம் குறிப்பிட்டு சொன்னாலும் அவர் ஏதோ
சாக்கு போக்குகள் சொல்லி தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்னும் கதையை தான்
படிப்பார் இனி ஒருதரம் இவரை தனியாக மட்டும் எங்கும் அனுப்புவதில்லையென்பதை
கட்டாயமாக சொல்லிவிடும் சுந்தரா! சுகமாய் போய் வாரும்….
மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர்
ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்
சுந்தரமூர்த்தி
நாயனார் அம்மனின் வார்த்தைகளை சிறமேற்கொண்டு ஓடோடியும் வந்து கூறுதல்.....
சுந்தரமூர்த்தி:- பரமபிதாவே சிற்றூரில் பெருங்கூத்து வைத்தால்
போல் இருக்கிறது உங்கள் இருவர் தெரு சிரிப்பு விளையாட்டு பூசல் வினைபோல் ஆனது
போலும் தன்மானம் பிறர்மானம் என்று நினையாதார் போலும் எல்லாம் தெரிந்த நீங்கள்
இருவருமே விவாதபட்டிருந்தால் யாவருக்கும் ஏளனமல்லவா? இது நல்லதல்ல ஜெகதீசா! சர்வேசா! பரஞ்சுடரே!
பரபிரம்மமே! எவ்விதமாவது நீங்கள் ஒற்றுமையாக வாழ்வதே மேலானதாகும் மேலும் நீங்கள்
சென்ற போதெல்லாம் அம்மனை தனியாக விட்டு போய் ஏது சுகத்தை கண்டிருக்கிறீர்கள் ஒன்றேனும் இல்லை ஆதலால் அம்மன்
கூறுவதெல்லாம் நியாய விதியேயாகும் உத்தமிகள் மனம் நொந்தால் உலகமும் எதிர்நிற்க
முடியாது சுவாமி!
மூன்றாவது தூது:-
சிவபெருமான்:- அப்பா சுந்தரா உன் தாயார்
சொல்லியனுப்பியதெல்லாம் சரியே! நான் அவ்வார்த்தைகளை ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததெல்லாம் பிழை பிழைதான்
அதைபற்றி எனக்கொரு கோபமும் இல்லை ஆனால் இனி ஒருதரம் என்சொல்லை கடவாமல் உன் தாயிடம்
சென்று முடிவான சங்கதி ஒன்றைச் சொல்லுகிறேன் அதைமட்டும் சொல்லிவர வேண்டும்.
அதுயாதெனில் நான் இந்தவேளை தனித்துத்தான் போகவேண்டும்
இப்போது யான் போகின்ற
காரியத்தில் யாதொரு குற்றமும் குறையும் பங்கமும் அடையப்போவதில்லை அப்படி
ஏற்பட்டால் உன் தாயார் என்ன நிபந்தனை சொல்கிறாளோ அதற்கு தயார் நான்
பின்வாங்குவதில்லை இது உண்மை உண்மை என்று முக்காலும் சொல்லி உன்னிட தாயாரின்
பாதத்தில் விழுந்து மனதை கரைத்து சமாதானப்படுத்தி நல்லதொரு வாக்கை வாங்கிவர
வேண்டும் சுந்தரா.
உமையவளிடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூன்றாம்
முறையாக தூது செல்லுதல்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:- என்னையீன்றெடுத்த ஜெகன்மாதாவே! ஜெகதீஸ்வரி!
சர்வேஸ்வரி! கௌரி! பர்வதராஜகுமாரியாகிய எனதன்னையே!
அடியேன் சொல்லுகின்ற சிறுமொழிகளை கேட்டருளல் வேண்டும் பொறுமை கடலினும் பெரிது அல்லவா? ஆறுவதே சினம்
என்பதை அறியீரா? ஒரே பிடிவாதமாக மூர்க்கம் கொள்ளலாகுமா? உங்கள்
இருவருக்கும் மத்தியில் நான் தூது நடந்தது போதும் தாயே என் கால்களும்
வலிக்கின்றதே! என் திரேகமும் சோர்வடைகின்றதே இந்தபிள்ளை படும் வருத்தத்தை பாராமல்
நீங்கள் உங்கள் கோபத்தையே பாராட்டுகிறீர்களே! அடியேன் இத்துடன் மூன்று தரம் தூது
நடந்தேன். நீங்கள் எப்படியாவது போங்கள் என்று சொல்லி சுந்தரமூர்த்தி சுவாமிகள்
அம்மனின் காலடியில் விழுந்து பணிதல்
உமையபார்வதி:- அப்பா குமாரா எழுந்திரும் போனதெல்லாம்
போய் ஒழியட்டும் முடிவான வார்த்தை என்ன சொன்னாரோ அதை மட்டும் சொல்லுவாய் அப்பா
சுந்தரமூர்த்தி சுவாமிகள்:- அம்மணி இதுவேளை தங்களை விட்டு விட்டு தனியாகத்தான்
போக வேண்டுமென்றும் அப்படி போகிற காரியத்தில் தனக்கொரு அவபங்கமும் வராதென்றும்
ஏதேனும் பங்கம் வந்துற்றால் தாங்களிடும் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும்
ஆணையிட்டு தெரிவித்துள்ளார் தாயே!
உமையபார்வதி:- ஆ! ஆ! அப்படியா சொன்னார் ஆனால் இருக்கட்டும்
சரி! சரி!! நல்லது! எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்வோம் வாரும் குழந்தாய்! சுவாமியை பிரதட்ஷண நமஸ்காரம்
செய்து வருவோம் என்று கூறி சுந்தரமூர்த்தி நாயனாரும் உமையபார்வதியும் சுவாமியை
வலம் வந்து நமஸ்கரித்து
சுவாமியின் முன்நின்று ஆணையை விட்டேன் விடுவித்து விட்டேன் எனக்கூறி சுவாமியை
பார்த்துக்கொண்டே கைலாய கோபுர வாயிலுக்குள் செல்லுதல் சிவபெருமான் கௌதமமுனிவரால்
ஏற்படுத்தப்பட்ட பஞ்சதீர்த்தமடைதல்
அம்மன் திருவாலயத்திற்கு எழுந்தருளிய பிறகு
அன்று முழுவதும் பூசை நைவேத்தியம் இல்லாமலும் ஆடை ஆபரணங்களை களைந்துவிட்டு
சிவபிரானையே மனத்திடம் சிந்தித்த வண்ணமாகவே பஜனை செய்து கொண்டு மிகவிசனமாக பள்ளி
அறையில் சயனித்து இருந்தார்.
அம்மன் தேர் பின்னழகு
பரமேஸ்வரன் ஈஸ்வரியை பிரிந்து
நடுதெரு நாராயணா என்பவர் போல் தனித்து திகம்பரதாரியாய் ஏகாந்த சித்தராய் மனதை
ஒருவழிநிறுத்தப்படாமல் தனக்குள் ஆழ்ந்த சிந்தனையுடன் யோசிக்கலுற்றார். அது
என்னவென்றால் உத்திராயணம் பிறந்து முதற்பாகத்திலேயே தம்மை சனியன் தொடர்வதாக
சொல்லிப் போயினார் அவன் இதுவரை வரவில்லை அவன் நம்மை தொடர்வதற்கு முன்பாக அவனுக்கு
தெரியாமல் மறைந்து கொள்ள எண்ணி கௌதமர் பிதுர்யாகம் செய்யும் பொருட்டு உண்டாக்கிய
பஞ்சதீர்த்த நதியில் ஸ்நானம் செய்து எருமைக்கிடாவாக உருவெடுத்து பூலோகத்தில் ஞானமுரட்டு
வேடுவன் வாழும் படியான வேடுவச்சேரியினுள் சங்கராந்திக்கு அடுத்த நாள்
மாட்டுபொங்கல் அன்று சூரியன் மேல்
திசையில் மறைந்து விளக்கு வைக்கும் தருணத்தில் வந்தடைந்தார் அது வேளை வேடுவச்சேரியிலுள்ள மக்கள் தங்கள் மாடுகளை
சுத்தம் செய்து அலங்கரித்து அவைகளுக்கு பொங்கல் முதலானதும் கொடுத்து வழிபட்டார்கள்
பின்பு மாடுகளை துரத்தி மகிழ்ந்தார்கள் கிடாவும் மாடுகளுடன் ஓடிய பின்பு தனக்கு
தங்க இடம் இல்லாமையால் வேடுவச்சேரியிலுள்ள மக்கள் நீர் எடுக்கும் குளமாதலால்
வேடுவர்களும் வேடுவஸ்தீரிகளும்
தடியாளும் தம்பாலும் குடத்தாலும் அடித்தும் இடித்தும் துன்புறுத்தினார்கள் அந்த
அடி முழுவதும் ஞானமுரட்டுவேடுவன் மேல் விழவே கிடாவை அடித்து துன்புறுத்தாதீர்கள் ஆணைவிடுத்துதான் மட்டும் கிடாவின்
அருகே சென்று நமஸ்கரித்து மும்மூர்த்திகளில்
ஒருவனோ ஏகமூர்த்தியா வந்து
எனக்கு காட்சி அளிக்க வந்தவனோ நான் அறியேன் என் குடிமக்கள் செய்த பிழைகளை
பொருத்தருள வேண்டுமென்று கூறி வணங்கி நின்றான் உடனே சிவபெருமான் சனியன் சொன்ன
நேரம் கழிந்து விட்டபடியால்
குட்டையை விட்டு வெளியில் வந்து கிடாவிலிருந்து விடுபட்டு தன் சுயரூபத்துடன் ஞான
முரட்டு வேடுவனுக்கு அவன் விரும்பிய வன்ணம் தான் மட்டும் தனித்து காட்சி அருளினார்
பிறகு சனிபகவான் அவர் முன்தோன்றி தாங்கள் கிடாவாக வடிவெடுத்து வேடுவச்சேரியிலுள்ள
நாறுங்குட்டையில் பதுங்கி படுத்திருந்து வேடுவர்களால் துன்பப்பட நேர்ந்ததெல்லாம்
என்னுடைய மகத்துவமே என்னை மன்னித்தருள வேண்டுமென கூறி நன்ற சனிபகவானை இன்று முதல்
என்னை பற்றியதால் சனீஸ்வரன் என்ற பட்டத்தை உமக்கு அளித்தோம் என கூறி கைலாயத்தை
நோக்கி புறப்பட்டார்.
ஐயன் தேர் பின்னழகு
நாரதர் கலகம்
நாரதர்:- என் தாயே மனோகரி! மனோன்மணி! மஹேஸ்வரி! சுவாமி எங்கே? கயிலயங்கரி சூரியன் இல்லா பகல் போல் அல்லவா
இருக்கின்றது எவ்விடம் போயிருக்கின்றார் அம்மணி
உமையபார்வதி:- அப்பனே நாரதா சுவாமியானவர் இவ்விடத்தை
விட்டுப்போய் ஒரு பகலும் ஒரு இரவுமாகிறது எங்கே இருக்கின்றாரோ தெரியவில்லை. நாரத பிரம்மமே எதோவருகிறார் காணோமே இது என்ன
பரிகாச வார்த்தையாய் இருக்கிறதே என்ன
ஆச்சர்யம் ஏன் உனக்கு தெரிந்திருக்குங்காலம் நீ இதன் விபரம் தெளிய சொல்லாவிடில்
உனது வயறு வெடித்து தலையும் பிளவு பட்டு போய் விடும் தாமதிக்காமல் சொல்லுமப்பா
நாரதபிரம்மமே.
நாரதர்:- எனது மாதாவே சனியன் கண்களுக்கு படாமல்
இருப்பதற்காக எண்ணம் கொண்டு காடு மேடுவனம் வானந்திரமெல்லாம் கடந்து கௌதமரால்
ஏறபடுத்தபட்ட பஞ்சகௌவ்விய நதியில் சஞ்சரித்து தனது சுயரூபத்தை மாற்றி எருமை
கிடாவாக வடிவெடுத்து வேடுவச்சேரியிலுள்ள ஓர் சிறிய குட்டையில் பதுங்கி படுத்திருந்து வேடுவ
வேடுவச்சிகளால் கல்லாலும் கட்டியாலும் தடியாலும் தாம்பாலும் மொத்துண்டு சூரிய உதயமானதும் ஞானமுரட்டு
வேடுவனுக்கு காட்சிகொடுத்து பிறகு சனியனை கண்டு அவனுக்கு வேண்டிய வரங்களையும்
கொடுத்து அதோ சுவாமி வருகிறார் அம்மா! இதையெல்லாம் நான் அந்தரத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருந்தேன் இது
முக்கியமான விஷயத்தை சொல்லவே ஓடோடியும் வந்தேன்.
இதை அனைத்தையும் கேட்ட உமையபார்வதி பரமசிவன்
வருவதற்கு முன்பாக கோயில் கதவை சாற்றி தாளிட்டுக்கொள்ளுதல்.
சிவபெருமான் திருக்கோயிலுக்கு வருதல்
சிவபெருமான்:- அடிபெண்ணே பர்வதா! ஏன் கதவை சாற்றி தாளிட்டு
கொண்டனை உனக்கென்ன நித்திரையோ? பொழுது விடிந்து என்னேரம் ஆகிவிட்டது பார்
கதவைத்திறவும் என் மனோன்மணியே!
உமையபார்வதி:- சுவாமிகளே ஏன் இப்படி கதவை தட்ட வேண்டுமோ ஆஹா!ஆஹா! போதும் போதும் பெண்டு பிள்ளைகளை அடியோடு
வெறுத்து ஓட்டாண்டியாகி பேய் பிடித்தவர்போல் ஆகாயம் பூமி காடு மேடு வனம்
வனாந்திரம் அதல சுதல பாதாளமெல்லாம் கடந்து கெட்டலைந்து பங்கப்பட்டு
நாணமில்லாதவராய் இருந்தால் தூக்கம் வராது எனக்கென்ன சுகமாய் வீட்டிலிருப்பளுக்கு
தூக்கம் அதிகமாகத்தானே இருக்கும் சுவாமி.
சிவபெருமான்:- அடிபெண்கள் நாயகமே உன்னிட தமையனாகிய மகாவிஷ்ணு
எந்நேரம் பார்த்தாலும் நடுகடலில் தூங்கிக் கொண்டிருக்கிறான் அல்லவா? நீ அவன் உடன்
பிறந்தவளாயிற்றே உனக்கும் அப்படியே தூக்கம் வருகின்றதோ?
உமயபார்வதி:- போதும் போதும் சுவாமிகளே என்னைத் தூக்கம்
பிடித்தவள் என்று வைத்துக் கொள்ளுமே என் முகத்தில் விழித்தால் உமக்கு சுரமதேவதை
பிடிக்கும் ஆதலால் எப்பொழுதும் ஓயாமல் சப்தத்தோடு இருக்கும் கங்கையிடம் சென்றால்
குளிர்ந்து மூழ்கி சுகிர்ந்து இருக்கலாம் சீக்கிரம் போங்கள்.
சிவபெருமான்:- ஏ கௌரிதேவி! சற்றேனும் இறக்கமின்றி கண்டபடி
பேசுகின்றாயே இது நியாயமா? கங்கையையும் இவ்விடத்தில் தானே விட்டு போனேன்
இதை நீ அறிவாய் அல்லவா?
உமயபார்வதி:- சுவாமி! அந்த வைப்பாட்டி பேச்சென்றால் கீழே
விடாமற்படிக்கு தலை மீதிலேயே எடுத்துக்கொள்வது யாருக்குத்தான் தெரியாது.
சிவபெருமான்:- இதென்ன சேடிக்கை சரி! சரி!! எல்லா சங்கதியும்
பிறகு பார்த்துக்கொள்ளலாம் தற்காலத்திய கடன் தவறலாகாது கபாடத்தை திறப்பாயடி என் கண்ணே….
உமயபார்வதி:- சுவாமிகளே! அவசரம் போலும் கொஞ்சம் நிதானியுங்கள்
தாங்கள் முன்னொரு காலத்தில் திண்ணன் என்னும் வேடுவச்சிறுவனுக்காக சிவலிங்கமாக இருந்து
அவன் மென்று தரும் எச்சிற்கறிகளைத்தின்று
தங்கள் கண்களை ஊனக்கண்ணென்று தன் கண்களை பிடுங்கி வைக்க வேண்டியதாக தன் செருப்புக்காலால் குறிவைத்துக் கொண்டு மற்றொரு
கண்ணையும் பறித்து வைக்க
எத்தனிக்கும் சமயம் அவனிடம் செருப்படியும் பட்டு
கண்ணப்பன் என்று பெயர் அளித்து மோட்சமும் கொடுத்தீர்கள் அல்லவா? போதா குறைக்கு
எமனேரும் எருமை கிடாவாக வடிவெடுத்து மூடர்குல வேடுவச்சேரியில் நாறும் குட்டையில்
படுத்திருந்து வேடுவ ஸ்திரீகளால் வையவும் அடிக்கவும் அனேக வேடுவர்கள் கூட்டம்
கூட்டமாக வந்து கல்லாலும் கட்டியாலும் தடியாலும் தாம்பாலும் மெத்துண்டு மானாபிமானம்
விட்டு ஞானமுறட்டு வேடுவனுக்கு நற்பதவி கொடுத்து பின்னர் எதிரியான சனியனுடன்
நட்புக்கொண்டும் உறவுக்கொண்டும் சனீஸ்வரன் என்னும் பட்டமும் கொடுத்து “நானொரு வெள்ளாளன் எனக்கொரு தலைவாழை இலை” என்பது போல முகம்
வைத்துக்கொண்டு என் எதிரில் வந்தீரே உலகில் ஏச்சும் வேச்சல்லவோ ஏற்பட்டு விட்டது
ஐயோ! என்ன அவகேடு தேடிக்கொண்டீர்கள் மதிப்பில்லா குடிவாழ்க்கை ஒரு வாழ்க்கையா? தாங்கள்
கட்டாயமாக என் பள்ளி
அறைக்குள் வரக்கூடாது சுகமாய் போய் வாருங்கள்.
சிவபெருமான்:- ஏ பர்வதா தேவி நான் மறைந்து போய் பட்ட
கஷ்டங்களை எவ்விதமாக கண்டறிந்தனையோ அதை
எனக்கு விவரமாக சொல்.
உமாதேவியார்:- இன்று நான் உதய காலத்தில் மிகவும் சஞ்ஜலபட்டு ஏக்கம்மாயிருந்த சமயத்தில் திரிலோக
சுஞ்சாரியான நாரதமுனிவர் இவ்விடம் வரவே எல்லா வித வினோத காட்சிகளையும்
கேட்டறிந்தேன் ஐயனே
சிவபெருமான்:-ஹோ! ஹோ! நாரதன் இங்கு வந்தானா! அவனோமிக்க
கலகக்காரன் தான் அவன் தெரிவிக்காவிட்டால் நீ இப்படி என் மீது குறை சொல்ல மாட்டாய்
நல்லது இருக்கட்டும் .
ககன கந்தர்வ விமானத்தில் நடராஜர்
ஏ கௌரிதேவி என் வார்த்தை ஒன்று கேள் அதாவது உனது தமையனும் எனது மாதுலா
காரனுமாகிய மகாவிஷ்ணு சோமுகாசூரனை வதைக்க
மச்சாவதாரம் எடுக்கவில்லையா? திருப்பாற்கடலில் அமிர்தம் கடையும் பொருட்டு மந்திரகிரியை
தாங்க கூர்மாவதாரம் எடுக்கவில்லையா? பூமியை கொண்டு
போய் நடுகடலில் ஒளித்த இரண்யாக்ஷணை சம்ஹரிக்க வேண்டி வராஹஅவதாரம் எடுக்கவில்லையா? தானே தெய்வமென்று பிரகலாதனை இம்ஸித்த இரண்யனை கொல்லும் பொருட்டு
கற்றூணில் நரசிம்மமாக வரவில்லையா? தானென்னும்
அகம்பாவம் கொண்ட மகாபலி சக்கரவர்த்தியை பாதாளத்தில் அமிழ்த்தவில்லையா அது தான்
வாமனாவதாரம் அல்லவா? ஜமத்கனி
முனிவனுக்கு மகனாக பரசுராமனாய் வந்து ரேணுகாதேவியை கார்த்தவீர்யார்ஜூனனை கொல்லவில்லையா? தசமகாசூரனை சம்மரித்து சீதையை சிறை மீட்கும் பொருட்டு குரங்கு கூட்டங்களுக்கு தலைவனாக
வந்தவன் ஸ்ரீராமபிரானல்லவா? பிரஹஸ்தனை கொன்று கஸ்திபட்டவன் பலராமன் அல்லவா? ஆடுமாடுகளை
மேய்த்து வெண்ணை திருடி மத்தடியுண்டு கோபிகாஸ்திரிகளின் எச்சிலை உண்டவன் கண்ணன்
என்னும் ஸ்ரீ கிருஷ்ணனல்லவா? விஷ்ணுவின் கதி இப்படி என்றாலும் நீ மட்டும்
மகா யோக்கியமோ? பேய் பிசாசு பூத கூட்டங்களுக்கு தலைவியான காளியாக வந்து மயாகத்தில் பிணங்களின்
எலும்புகளை மாலையாக கோர்த்து போட்டு கொள்ளவில்லையா? தன்னிடத்தில் குறைகளை வைத்துக்கொண்டு பிறர்
மீது குற்றம் சாட்டலாகுமா?
உமயபார்வதி:- சுவாமி தாங்கள் சமயத்திற்கு தகுந்ததொரு
வேடம் எடுப்பீர்கள் என்றும் வேளைக்குத் தகுந்த வேடம் எடுப்பீர்கள் என்றும்
ஆளுக்குத் தக்க ஆச்சாரம் கொடுப்பீர்கள் என்றும் அடியாள் அறியேனோ? போனதெல்லாம்
போகட்டும் என் தாய் வீட்டார் கொடுத்த முத்துமாலை பவழமாலை ரத்தினமாலை எங்கே?
சிவபெருமான்:- கண்மணி! அதுகளை நான் எங்கே வைத்தேனோ மாயமாய்
மறைந்து போனதோ? அல்லது சனியன் மகத்துவமோ தற்சமயம் அதன் உண்மைகளை தெரிவிக்க என்னால்
முடியவில்லை நீ சொல்கின்றபடி நான் நடந்துக் கொள்ள தயார். உன் அபிப்பிராயத்தை சொல்
என்று கூற
உமயபார்வதி:- சுவாமி தாருகா வனத்து ரிஷி பத்தினிகளை பங்கப்படுத்த வேண்டுமென்று
பிச்சாண்டி வேடம் பூண்டீர் அல்லவா? அப்போது நான் அவ்வேடத்தை பார்க்கவில்லை யானும்
அதே வேடத்தைக் கொண்டு என் தந்தையிடம் சென்று பிரம்ம கபாலத்தில் பிச்சையிடுங்கள்
என்று கேட்டு வாங்கி வருங்கள் தேவா
சிவபெருமான்:- பர்வத ராஜப்புத்திரி அந்த பிட்ஷாடனர் வடிவம் இன்று இரவு நீ
கேட்டவாறு எடுக்கின்றேன் என்று கூற
உடனே பார்வதி தேவியானவள் கோவில் கதவை திறக்கவும் சுவாமியானவர் அம்மனை
மகிழ்விக்கும் பொருட்டு தாண்டவம் ஆட அம்மன் நடனத்தை பார்த்துக் கொண்டே இருவருமாக
பள்ளி அறையை அடைந்து ஏகபோகத்தை அனுபவித்தல்.
இவ்வாறு மானிடர்களாகிய நாம் கொள்ளும் ஊடலை தெய்வத்தின் மேல் ஏற்றி மகிழ்கின்றோம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் இந்த ஜீவாத்மாகிய அம்மன் மாயையினால் பரமாத்வாவை விட்டு விலகி செல்ல பரமாதமா கருணையினால் ஜீவாத்மாவை ஆட்கொண்டு அருளுவதை இந்த ஊடல் உற்சவம் குறிக்கின்றது. ஊடல் உற்சவத்தின் நிறைவாக திருக்கோவிலின் உள்ளே அம்மையும் ஐயனும் நடனமாடி அருளுகின்றனர்.
வாழி விருத்தம்
மூவர்கள் வாழி வாழி
முனிவர்கள் அமரர் வாழி
பாவலர் மறையோர் வாழி
பரமனார் அடியார் வாழி
பூ உலகத்தோர் வாழி
ஆவலாய் படித்தோர் கேட்டோர்
அனைவரும் வாழி வாழி
நன்றி: ஆலயத்தில் அருகில் இருந்து ஊடல் உற்சவம் முழுவதையும் தரிசனம் செய்ய அனுமதித்த மற்றும் அம்மை அப்பர் சம்வாதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்த கிராமணியார் அவர்களுக்கு மிக்க நன்றி.
No comments:
Post a Comment