திருமயிலை கற்பகாம்பாள் அன்ன வாகனம்
வழக்கம் போல இந்த நவராத்திரி சமயத்தில் அன்னையின் அருட்கோலங்கள் கண்டு அருள் பெறுங்கள் அன்பர்களே. உடன் அபிராமி பட்டர் இயற்றிய பதிகங்கள் .
கொலு மண்டபத்திற்கு எழுந்தருள
இருக்கின்றாள் கற்பகவல்லி
அன்னையின் அழகு
ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலாய காட்சி
ருத்திராக்ஷம் மற்றும் மலர் அலங்காரம்
அலங்கார மண்டபத்திலிருந்து கொலு மண்டபத்திற்கு
எழுந்தருளுகின்றாள் விரை மலர் குழல் வல்லி
மரைமலர் பதவல்லி விமலி கற்பகவல்லி
அம்மனின் முதல் நாள் கொலு
அன்ன வாகனம்
ஆடும் மயிலாய் உருவெடுத்து இறைவன் தாள்
நாடி அர்சித்த நாயகி
அன்னையின் பின்னழகு
அபிராமி அம்மை பதிகம்
காப்பு
தூய தமிழ் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லா வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! (1)
பொருள்: திருக்கடவூரில் வாழ்கின்ற அபிராமி அம்மையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அருளைப் பொழிபவளே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம் அகலாமல் இருக்கும் அன்னையே! பாற்கடலில் யோக நித்திரை கொள்ளூம் மாயன் திருமாலின் தங்கையே! உன்னை வணங்கும் அன்பர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கு அம்மா என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.
காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலுமு(ம்) மதிமுக மண்டலம் நுதற்
கத்தூரிப்பொட்டும் இட்டுக்
கூர் அணிந்திடுவிழியும் அமுத மொழியும் சிறிய
கொவ்வையின் கனி அதரமும்
குமிழ் அனைய நாசியும் குந்தநிகர் தந்தமும்
கோடு சோடான களமும்
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணி நூபுரப்பாதமும்
வந்து எனது முன்னின்று மந்தகாசமுமாக
வல்வினைகள் மாற்றுவாயே
ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே! (2)
பொருள்: வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கும் மணி மாலைகள் பூண்ட அபிராமி அம்மையே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம் அகலாதவளே!. கிளியைத் திருக்கரத்தில் எந்தியவளே! அருளை வழங்கும் அபிராமியே! மேகம் போன்ற கரிய கூந்தல், அதில் மலர் மாலைகள், வில் போன்ற கரிய புருவங்கள், காதுகளில் விளங்கும் குண்டலங்கள், அழகிய திருமுகத்தில் கஸ்தூரிப்பொட்டு, அமுத மொழி, கொவ்வைப்பஜம் போன்ற இதழ்கள், குமிழம்பூ போன்ற நாசி, சங்கு போன்ற கழுத்து, தளராத திருத்தனங்கள், மெல்லிய இடையில் மேகலை , திருப்பாதங்களில் நூபுரங்களுடன் அடியேன் முன் புன்னகையுடன் தோன்றி என் கொடிய வினைகளை அகற்றி ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.
அம்மன் அருள் தொடரும். . . . .. ...
4 comments:
அருமை!!!!
தொடர்கின்றேன்.
இனிய நவராத்திரி விழா வாழ்த்து(க்)கள்!
தங்களுக்கும் இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் துளசியம்மா.
அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க தினம் அன்னையின் தரிசனம் காண வைத்து அன்னையின் பாடல் பகிர்வும் தரும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கோமதி அம்மா.
நவ்ராத்திரி நல்வாழ்த்துக்கள்.
Post a Comment