உ
ஓம் சக்தி
தானாக வந்து தடுத்தாட் கொண்ட தயாபரி
நாட்டுக்கல் பாளையம் அங்காள பரமேஸ்வரி
குல தெய்வ வழிபாடு
நாம் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் தெய்வம்தான் குல தெய்வம். நமது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகின்றது. எனவேதான் சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்ற பழமொழி வழங்கப்படுகின்றது. ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகு போல வேரூன்ற அவர்களின் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிட்டாது. குல தெய்வத்தின் அருளினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நிரந்தர பணி கிட்டும், குடும்பப் பிரசினை தீரும், உடல் உபாதைகள் சரியாகும்.
முளைப் பாலிகையில் விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன்
குல தெய்வம் என்பது , நமது குலத்தில் தோன்றிய முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது நமது குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது நமது குலதெய்வமே.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து வருவோம். ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது . நாம் குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து, மாவிளக்கு படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்புகின்றோம். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.
பிரதான யாக குண்டத்தின் நடுவே பஞ்சாசனத்தில் அம்பாள்
குல தெய்வ வழிபாட்டைப் பற்றி ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாப்பெரியவர் இவ்வாறு கூறுகின்றார். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் நமது குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
கூர்மாசனம் ( ஆமை), நாகாசனம் ( ஆதி சேஷ நாகம்), யோகாசனம், சிம்மாசனம், பத்மாசனம்( தாமரை) என்ற பத்மாசனத்தில் அம்பாள் நான்கு கால பூஜை கண்டருளுகின்றாள்
யாக சாலையின் முகப்பு அலங்காரம்
விநாயாகர், முருகர், அங்காளம்மன், மீனாக்ஷி அம்மன் திருவுருவங்கள்
அந்த குலத்தில் பிறந்த அனைவரும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் என்பதினால்தான் கோத்திரம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். இதையே நமது முன்னோர்கள் "கோத்திரமறிந்து பெண்ணையெடு பாத்திரமறிந்து பிச்சையிடு" என்று அருளியுள்ளனர். எதற்காக இப்பதிவில் இந்த முன்னுரை என்று யோசிக்கின்றீர்களா?
நாம் இப்பதிவில் காணப்போகின்ற பொள்ளாச்சி வட்ட நாட்டுக்கல்பாளையத்தில் தானே வந்து தடுத்தாட்கொண்ட அங்காளம்மன் அடியேனின் இல்லாளின் பிறந்த வீட்டு குல தெய்வம் ஆவாள். அந்த அம்மனுக்கு ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது அதை தாங்களும் கண்டு களியுங்கள் அன்பர்களே.
பூத்தவளுக்கு புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவளுக்கு
மூன்றாக் கால பூஜை
குறத்தி மீனாக குடத்தில் வந்த சுயம்பு உற்சவர் அம்மன் கும்பம்
அது என்ன குறத்தி மீன், குடம் என்று யோசிக்கின்றீர்களா? அம்மனின் கதையை படியுங்கள் புரியும். ஒரு சமயம் வணிக மக்கள்
சிலர் சதங்கைகள் பூட்டிய மாடுகள் பூட்டிய
வண்டிகளிலே மஞ்சள், மிளகு, மற்றும் மயில் தோகை
முதலியவற்றை ஏற்றிக் கொண்டு சந்தைக்கு
சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சோதித்து
அருள கருணைக்
கடலாம் அந்த அகிலாண்ட நாயகி
, உலக மாதவாய் ஏக நாயகியாய்
உக்ர ரூபிணியாய் திருமேனி கொண்டு பக்தர்களுக்கு உண்டாகும்
பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை
போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம்
கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா
நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும் "மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி” சுருக்கம்
விழுந்த தோலுடன் தலை
நரைத்த கிழவியாய் கையில் கோலு‘ன்றி அவர்களிடம்
வந்து மக்களே வண்டியிலே என்ன
கொண்டு செல்கிறீர்கள்?" என வினவ அவர்களும்
உண்மையைக் கூறாமல் நாங்கள் "தவிடும்,
புண்ணாக்கும் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம் தாயே! " என்றனர். அனைத்தையும் அறிந்த அன்னை சிரித்து "அப்படியே ஆகட்டும்" என்று சென்று விட்டாள்.
வணிகர்கள் சந்தை சென்று வண்டிகளை
பிரித்துப் பார்த்த போது பொருட்கள்
அனைத்தும் தவிடும் புண்ணாக்குமாக இருக்கக்
கண்டு மனமுருகி மன்னிப்புக்
கேட்க அம்மையும் தான் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி
என்றும் தன்னை குல தெய்வமாக கொண்டு
வழிபட்டு வரவும் நான் உங்கள்
குடி உயர செய்வேன் என்று கூறினாள்
அது முதல் அவர்களும் அங்காள
பரமேஸ்வரியை தங்கள் குல தெய்வமாக
வழிபட்டு வந்தனர்.
ஆனந்த கும்பாபிஷேகம்
அவ்வாறு அவர்கள் அங்காள பரமேஸ்வரியை வணங்கிக் கொண்டு வரும்
நாளில் ஒரு
சமயம் அவர்கள் குடும்பத்தின் பெண்கள்
நீர் கொண்டுவர குடகனாற்றுக்கு சென்ற போது குறத்தி
மீனின் வடிவிலே அவர்கள் குடத்திலே
குபு குபு என்று வந்து
புகுந்து கொண்டாள் அந்த அங்காளியானவள்.
அந்தப் கன்னிப் பெண்களும் அந்த
குடத்தை சுமக்க முடியாமல் சுமந்து வந்த வீடு
சேர்ந்த பிறகு அம்மை மீன் வடிவத்தில் அவர்களுக்கு
தெய்வமாய் தானே
வந்திருப்பதாக கூறினாள். அவர்கள் பாலும் தேனும்
பகிர்ந்தளிக்க அந்த
ரூபத்திலேயே குடத்தோடு
வந்த தாய் குலத்தோடு தங்கி விட்டாள். "திரை
கடல் ஓடியும் திரவியம் தேடும்" வணிகர்களான அவர்கள் ஒரு வெள்ளிப் பேழையிலே
அம்மையை அந்த ரூபத்திலேயே எழப் பண்ணி தங்களுடன்
தாங்கள் செல்லும் இடமெல்லாம் தாயையும் கொண்டு சென்று வெள்ளிக்
கிழமைகளில் அத்தாய்க்கு
பூஜை செய்து வந்தார்கள்.
அம்மன் விமானத்திற்கு கும்பாபிஷேகம்
ஒரு சமயம் அவர்கள் புளியம்பட்டியில்
ஒரு ஒலைக் குடிசையில் அம்மையை
வைத்து வணங்கி
வரும் போது அம்மன்
தான் நிலையாக குடிகொள்ள வேண்டி
ஒரு நாடகம் ஆடினாள். அந்த
ஓலைக் குடிசையில் பற்றியது அக்னி. ஆனால் "அக்னி
ஜூவாலையையே மகுடமாக அணிந்த அந்த
மகேஸ்வரியை எந்த அக்னிதான் என்ன
முடியும்". எரிந்தது ஓலைக் குடிசை மட்டுமே
ஆனால் அம்மை இருந்த வெள்ளிப்பேழை
மட்டுமே அப்படியே இருந்தது.
பரிவார தேவதைகள் கலசங்கள்
எனவே அவர்கள் அம்மனிடம்
தாயே! "எங்களுடன் நீயும் ஏன் அலைய
வேண்டும் உனக்கு நிலையான ஒரு
கோவில் கட்ட ஒரு இடத்தை
கூறு" என்று மனமுருகி வேண்டி
நிற்க, அந்த தாயும் கொங்கு
மண்டலத்தில் பொள்ளாச்சிக்கு அருகில் நாட்டுகல்பாளையம் என்ற
கிராமத்தில் உள்ள ஜமீன்தாரின் வளர்ப்பு
பிள்ளைக்கு தங்கள் பெண் ஒருத்தியை
மணம் செய்து கொடுங்கள், பேழையுடன்
என்னையும் சீதனமாக கொடுங்கள் நான் அங்கே கோவில்
கொள்கிறேன் என்றாள். அவர்களும் அவ்வாறே அந்த
ஜகன் மாதாவுக்கு கோவில் கட்டி சிறப்பாக
இன்றும் வழிபட்டு வருகின்றனர். இது தான் இந்த குக்கிராமத்தில் தானே வந்து அம்மன் கோவில் கொண்ட வரலாறு.
விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம்
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மையை பேழையிலிருந்து எடுத்து பொன்னூஞ்சல் ஆட்டுகின்றனர். அம்மைக்கு உகந்த மஹா சிவராத்திரி திருவிழாவின் போது இரவு அம்மை ஆற்றுக்கு எழுந்தருளி அருள் முகத்துடன் கோவிலுக்கு எழுந்தருளி மேல் மலையனூர், குடகனாறு தீர்த்தவாரி கண்டருளி பின் இரவில் பள்ளய பூஜை கண்டருளுகிறாள். மறுநாள் மாலையில் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்தருளி உஞ்சல் உற்சவம் கண்டருளுகிறாள்.