பஞ்ச கேதாரங்கள்
அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு (2013) நல்வாழ்த்துக்கள்
அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு (2013) நல்வாழ்த்துக்கள்
முன்னொரு பதிவில் பஞ்ச கேதாரங்கள் உருவான புராணத்தை பார்த்தோம் இப்பதிவில் அந்த கேதாரங்களை த்ரிசனம் செய்யலாமா அன்பர்களே? இந்த ஐந்து கேதாரங்களும் இமயமலையின் கொடுமுடியான பனி மூடிய சிகரங்களான நந்தா தேவி, சௌகம்பா, கேதர்நாத்,
நீலகண்ட் ஆகியவற்றில் அடிவாரத்தில் அமைந்துள்ளன
என்பது சிறப்பு. சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எல்லா கேதாரங்களையும் தரிசனம் செய்ய மலையேற்றம் மிகவும்
அவசியம். திருக்கேதாரம் மந்தாங்கினி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்ற கேதாரங்கள் அலக்நந்தா மற்றும் மந்தாங்கினி பள்ளத்தாக்கிதிற்கு
மேற்கு பகுதியில் அமைந்துள்ளன.
துங்கநாத் ஆலயம்
துங்கநாத்: உலகின் உயரமான சிவாலயம் துங்கநாத்தான். பஞ்ச கேதாரங்களில் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள தலமும் இதுதான். மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரத்தில் ஆதி சங்கர பகவத் பாதாள் அன்னை பார்வதியை அழகிய சடையுடன் கூடிய மலைமகளை, (ரம்ய கபர்த்தினி சைலஸுதே)
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே.....
அதாவது இமயமலையின் சிகரங்களில் துள்ளி விளையாடுபவள் என்று குறிப்பிடுகின்றார். துங்கம் என்பால் சிகரம். அந்த சிகரங்களுக்கெல்லாம் ஈசர் துங்கநாத்தில் நமக்காக அருள் பாலிக்கின்றார். துங்கம் என்றால் கரம் என்றும் பொருள் இங்கு ஐயன் கர ரூபமாக வணங்கப்படுகின்றார். இங்கிருந்துதான் ஆகாஷ்காமினி நதி உருவாகி பாய்கின்றாள்
சந்திரசிலா பனி சிகரத்தின் அடிவாரத்தில்
சுமார் 3680 மீ உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். சந்திர சிலாவில்தான் இராமபிரான் தவம்
செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இங்கிருந்து
கொண்டல்கள் கொஞ்சும் மஞ்சு திகழும் பஞ்சசுலி,
நந்தாதேவி, தூனாகிரி, நீலகண்ட், கேதார்நாத் மற்றும் பந்தர்பூஞ்ச் சிகரங்களை காணலாம்.
துங்கநாத் கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் பாதையில் ஊக்கிமட்டிலிருந்து
30 கி.மீ தூரத்திலும், சோப்டாவிலிருந்து 5கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில்
அர்ச்சுனன் இக்கோவிலை கட்டி சிவபெருமானை வழிபட்டான் என்பது ஐதீகம்.
துங்கநாதர்
துங்கநாத
ஆலயத்தில் சிவபெருமான் ஒரு அடி உயரத்தில் கருப்பு நிறமுடைய சுயம்பு லிங்கமாக இடப்பக்கம்
சற்று சாய்ந்தவாறு அருட்காட்சி தருகின்றார். இத்தலத்தில் ஐயனின் பாஹூ அதாவது தோள்(புஜங்கள்- கரம்)
வெளிப்பட்டன. இங்குள்ள பிரதான சந்நிதியில்
சிவபெருமான் புஜங்களோடு வெகு அழகாக தரிசனம் தருகின்றார். அஷ்ட உலோகத்தால் ஆன வியாசர்
மற்றும் கால பைரவரின் சிலைகள் உள்ளன. இக்கோவிலில் அம்மை மலைமகள் பார்வதிக்கு ஒரு தனி சன்னதி
உள்ளது. இங்குதான் இராவணன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
மற்ற கேதாரங்களை ஒப்பிடுகையில் துங்கநாத்தை அடைய 5 கி.மீ தூரம்தான் நடைப்பயணம்
செய்ய வேண்டும். ஆனால் பல இடங்களில் பாதை செங்குத்தாக
உள்ளது. வழி முழுவதும். பசுமையான
ஆல்பைன் மர காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ரோடன்டென் (rhodenton) எனப்படும் அழகிய மலர் புதர்களும், மற்றும் இமயமலைக்கே உரிய பல அரிய மலர்களும் நீர் வீழ்ச்சிகளும் நிறைந்து
காணப்படுகின்றது மேலே ஏற சுமார் 3 அல்லது 4 மணி நேரம்
ஆகும்.
புல் வெளி புல் வெளி புல் வெளி
பனித்துளி பனித்துளி
என்று மெல்ல பாடிக்கொண்டே புல்வெளிகளை இரசித்துக்கொண்டே
மூச்சு வாங்கிக்கொண்டே இயற்கையை இரசித்துக்கொண்டு தூய மூலிகை காற்றை
சுவாசித்துக்கொண்டே மலையேறுவதும் ஒரு இனிய அனுபவம்தான். பாக்கியம் செய்த சிலருக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கிட்டும் என்பதில் ஐயமில்லை. முதலில் மலையேற்றம் செய்வதற்கு மனம் வேண்டும், பின்னர் உடல்நிலையும் ஒத்துழைக்க வேண்டும் பின்னர் விடுமுறை, பணம் என்று எல்லாம் கூடி வந்தால் மட்டுமே இந்த யாத்திரைகளை நாம் மேற்கொள்ள முடியும் என்பதுதானே உண்மை செல்லும் பாதை கல்வேயப்பட்டுள்ளது, களைத்துவிட்டால் அமர்ந்து இளைப்பாற பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன. துங்கநாத
ஆலயத்தில் இருந்து சந்திரசிலா சிகரம் சுமார் 2 கி.மீ தூர நடைப்பயண தூரத்தில் உள்ளது.
பனிக்காலத்தில் துங்கநாத் ஆலயம்
ருத்ரநாத்: சிவபெருமானின் திருமுகம்
ருத்ரநாத்தில் தோன்றியது. எனவே எம்பெருமான் அழகிய திருமுகத்துடன் அருட்காட்சி தருகின்றார். இவ்வாலயத்திலும் ஆலமுண்ட நீலகண்ட சுயம்பு
லிங்கமாக அருள் பாலிக்கின்றார். இடப்புறத்தில் ஐந்து சிறு லிங்கங்கள் உள்ளன.
வலப்புறத்தில் சரஸ்வதி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது . ருத்ரநாத கோவிலின் அருகிலே சூர்ய குளம், சந்திர குளம், நட்சத்திர குளம், மனக்குளம் என்னும் குளங்கள் உள்ளன, இவ்வாலயத்தின் அருகிலே வைதாரிணி என்னும் ஆறு
ஓடுகின்றது, இறந்த ஆத்மாக்கள் பூலோகத்திலிருந்து தேவலோகம் செல்லும் போது இந்த
ஆற்றைக்கடந்து செல்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த முக்தியாற்றின் கரையில்
பித்ருகளுக்கு பிண்டபிரதானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. கடல்மட்டத்திலிருந்து
சுமார் 2286 மீ உயரத்தில் இவ்வாலயம் மலைக்குகையில் காடு சூழ்ந்த அருமையான சூழலில்
அமைந்துள்ளது. இங்கிருந்து நந்தா தேவி, திரிசூலம், நந்தா குண்டி
ஆகிய மலைச் சிகரங்களை காணலாம்.
ருத்ரநாதர்
இவ்வாலயம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மலையின் மேல் ஏறி பின்னர் கீழே இறங்கவேண்டும். சுமார் 2286 மீ உயரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ருத்ரன் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள இந்திரன் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இந்திரியங்களுக்கு அடிமைப்பட்டு அவற்றின் வழி நடப்பவன் இந்திரன். அப்சரஸ்கள், பதவி ஆசை என்று இருப்பவன். அந்த இந்திரியங்களை அடக்கி வென்று யோகத்தில் அமர்ந்து காமனை கண்ணால் எரித்த மஹேஸ்வரன்தான் ருத்ரன். இத்தலம் அந்த ருத்ர மூர்த்தியின் திருநாமத்தால் ருத்ரநாத் என்று அழைக்கப்படுகின்றது.
அனைத்து கேதார்களிலும் ருத்ரநாத்தான் செல்வதுதான் மிகவும் கடினமானது. ருத்ரநாத் செல்ல மொத்தம் மூன்று வழிகள் உள்ளன. முதல் வழி கோபேஷ்வரிலிருந்து சாகர் என்னும் கிராமம் வரை வண்டியில் சென்று அங்கிருந்து 20 கி.மீ நடைப்பயணம் செய்யலாம். இப்பாதை அடர்ந்த புல் வெளி மற்றும் ஒங்கி உயர்ந்த ஓக் மரங்கள் நிறைந்த பாதைகளின் வழியாக செல்லும் பாதையும் மிகவும் வழுக்கும் என்கின்றனர். இரண்டாவது வழி கோபேஷ்வரிலிருந்து கங்கோல்காம்வ் சென்று அங்கிருந்து பனார் மற்றும் நைலான் வழியாக 17 கி.மீ மலையேறி செல்லும் பாதை. மூன்றாவது வழி கோபேஷ்வரிலிருந்து மண்டல் அனுசுயாதேவி 19 கி.மீ வழியாகும்.
. இங்கிருந்து திரிசூல், நந்தா தேவி மற்றும் நந்தா குண்டி ஆகிய பனிச்சிகரங்களை கண்டு களிக்கலாம். ஆவணி மாத பௌர்ணமி அதாவது ரக்ஷாபந்தன் அன்று மிகவும் விசேஷம் . இத்தலத்தின் பூசாரிகளும் தென்னிந்தியாவின் ஆதி சங்கரரின் சீடர்களான தஸ்நாமிகளும் கோசைன்களும் ஆவர். இவ்வாறு ஆதி சங்கரர் தெற்குப்பகுதி பூசாரிகளை வடநாட்டு ஆலயங்களில் பூசை செய்யும் முறையை ஏற்படுத்தி கலாசார பரிவர்த்தனைக்கு அடிகோலினார் என்றால் மிகையாகாது. பனிக் காலத்தில் ஐயன் கோபேஷ்வருக்கு எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
மத்மஹேஷ்வர்: மத்திய மஹேஸ்வர் என்றும் அழைக்கப்படுகின்றது. இமாலயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மணிபூரக லிங்கம் இருக்கின்ற மத்திய மஹேஸ்வரில் ஐயனின் தொப்புள் வெளிப்பட்டது. குப்தகாசியில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உயரமான இடத்தில் சௌகம்பா சிகரங்களின் அடிவாரத்தில் சுமார் 3497 மீ உயரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அடர்ந்த காட்டின் இதையே இவ்வாலயம் அமைந்துள்ளது. பாண்டவர்களில் பீமன் இவ்வாலயத்தை கட்டி சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம். பார்வதி தேவி,
அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சரஸ்வதிக்கு தனி சன்னதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் தண்ணீர் மிகவும் புனிதமானது ஒரு துளியை தலையில் தெளித்துக்கொண்டாலும் அது கங்கையில் நீராடியதற்கு சமம். இங்கு கர்நாடகாவை சார்ந்த லிங்காயத் பூசாரிகள் பூசை செய்கின்றனர். குளிர் காலத்தில் கோவில் மூடப்பட்டு உற்சவ மூர்த்தி ஊக்கிமத்திற்கு கொண்டு வரப்பட்டு பூசிக்கப்படுகின்றார். ஊகிமத்திலிருந்து உனியான் ரான்சி, கௌண்தார் மத்யமஹேஸ்வர் கங்கா மற்றும் மர்ய்த்யேந் கங்கா நதிகள் சங்கமம் ஆகும் பண்டோலி வழியாக மத்திய மஹேஸ்வர் நடைப்பயணம் சுமார் 19 கி.மீ ஆகும்.
கல்பேஷ்வர்: சிவபெருமான் ஜடாதரன், வானமே அவரது ஜடை,
எனவே அவர் வ்யோமகேசன் என்றும் அழைக்கப்படுகின்றார். திசைகளே அவரது ஆடைகள். அந்த வ்யோமகேசரின் கங்கை மற்றும் பிறை சந்திரன் அலங்கரிக்கும் ஜடாமுடி வெளிப்பட்ட இடம்தான் கல்பேஷ்வர். எனவே ஐயன் இங்கே ஜடாதரன் அதாவது ஜடேஸ்வரர் என்று வணங்கப்படுகின்றர். ஜடாதரர் சிவபெருமான் கபர்த்தின் என்றும் அழைக்கப்படுகின்றார் எனவேதான் அன்னை கௌரியை ஆதி சங்கரர் ”ரம்ய கபர்த்தினி சைல ஸுதே”
என்று மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தில் அன்பொழுக அழைக்கின்றார். வருடம் முழுவதும் நாம் தரிசனம் செய்யக்கூடிய கேதாரம் இது ஒன்றுதான் பனிக்காலத்திலும் இங்கு சிவபெருமானை தரிசனம் செய்யலாம். இவ்வாலயம் 2200
மீ உயரத்தில் ஊர்கம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது ஒரு குகைக் கோவில் ஆகும். ரிஷிகேஷ் பத்ரிநாத பாதையில் அமைந்துள்ள ஹெலாங் நகரிலிருந்து தற்போது ஊர்கம் வரை வண்டிகள் செல்கின்றன அங்கிருந்து கல்பேஷ்வர் சுமார் 2
கி.மீ நடைப்பயணம் தூரம்தான். ஊர்கம் கிராமத்தில் பஞ்ச பத்ரிகளில் ஒன்றாக கருதப்படும் தியான பத்ரி அமைந்துள்ளது. வாழியெங்கும் ஆப்பிள் பழ தோட்டங்களும் உருளைக்கிழங்கு தோட்டங்களும் உள்ளன. இத்தலம் தவம் செய்ய மிகவும் உகந்த இடம் என்பதால் பல ரிஷி முனிகள் இவ்விடத்தில் தவம் செய்துள்ளனர். குறிப்பாக அர்க்ய முனிவர் இங்கு தவம் செய்து தேவ அப்சரஸ் ஊர்வசியை படைத்தார் என்று நம்பப்டுகின்றது. ஊர்வசியின் பெயரால் இந்த பள்ளத்தாக்கு ஊர்கம் பள்ளதாக்கு என்றழைக்கப்படுகின்றது. மேலும் அத்ரி மற்றும் அநுசுயாவின் புதல்வர் துர்வாச முனிவர் இத்தலத்தில் உள்ள கற்பக விருட்சத்தின் அடியில் அம்ர்ந்து தவம் செய்த்தார் என்பது ஐதீகம் .
இங்குதான் அவர் பாண்டவர்களின் அன்னை குந்தி தேவிக்கு வரம் அளித்த்தாகவும் ஐதீகம். இந்த கற்பக விருஷத்தினால் இத்தலம் கல்பநாத் என்றும் அழைக்கப்படுகின்றது. ருத்ரநாத்தைப் போல ஆதி சங்கரரின் சீடர்களான தஸ்நாமிகளும் கோசைன்களும் இத்தலத்தில் பூசை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இன்னும் 2 கி.மீ மேலேறி சென்றால் விருத்த கேதார் ( புடா கேதார்) ஆலயத்தில் விருத்த கேதாரீஸ்வரரை தரிசனம் செய்யலாம்.
பஞ்ச கேதாரம் செல்லும் பாதையைக் காட்டும் வரைபடம்
ஐந்து கேதாரங்களையும் ஒரே தடவையில் தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினம். சுமார் 170 கி.மீ நடைப்பயணம் அவசியம் மேலும் சுமார் 16 நாட்கள் கடினமாக நடைப்பயணம் செய்ய வேண்டி வரும். மேலும் தங்குமிடங்களும் உணவும் நாம் நினைப்பது போல் கிடைக்காது. என்னுடன் திருக்கயிலாயம் வந்த ஒரு அன்பர் மத்யமஹேஸ்வர் சென்ற போது குக்கர், ஸ்டவ் உணவு பொருட்கள் எல்லாம் எடுத்து சென்றதாக கூறினார் அங்கு எதுவும் கிடைக்காதாம். மேலும் வழிகாட்டியும் அவசியம். இந்த யாத்திரைகளை கோடைக்காலமான மே-ஜூன் மாதங்கள் அல்லது பருவ மழை முடிந்த செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளலாம் ஆனால் அப்போது குளிருக்கு தகுந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். பஞ்ச கேதாரங்களையும் தரிசனம் செய்தபின் பத்ரிநாதரை சாட்சிக்காக தரிசனம் செய்யவேண்டும் என்பது ஐதீகம். ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்த நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்த ஒரு சம்பிரதாயம் இது.
இவ்வாறு ஐயனின் உடல் பாகங்கள் இமயமலையின் பல இடங்களில் வெளிப்பட்டபோது இது போன்று சிவனின் நெற்றி வெளிப்பட்ட இடமே நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் தலம் என்று கூறுவாரும் உண்டு.
இனி வரும் பதிவுகளில் இந்த வருடம் அடியேன் சென்ற சீக்கியர்களின் புனித தலமான ஹேம்குண்ட சாஹிப், பூக்களின் சமவெளி மற்றும் பஞ்ச பத்ரி யாத்திரைகளின் விவரங்களை காணலாம் அன்பர்களே தொடர்ந்து வாருங்கள்.
3 comments:
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.
துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர், கல்பேஷ்வர் திருத்தலங்களை பற்றி அழகாகவும், பனி / பயண சூழல்களை விரிவாகவும் கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா.
தங்களின் புதிய பயண/பதிவு யாத்திரை இனிதே தொடரட்டும் ஐயா.
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா.
துங்கநாத், ருத்ரநாத், மத்மஹேஷ்வர், கல்பேஷ்வர் திருத்தலங்களை பற்றி அழகாகவும், பனி / பயண சூழல்களை விரிவாகவும் கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா.
தங்களின் புதிய பயண/பதிவு யாத்திரை இனிதே தொடரட்டும் ஐயா.
மிக்க நன்றி LOGAN ஐயா.
Post a Comment