Friday, October 26, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -31


தேவப்ரயாகையென்று வழங்கும்

கண்டமென்னுந் திருப்பதி

பாகீரதியும் அலக்நந்தாவும் சங்கமமாகி 
கங்கையாகப் பாயும் அழகு 


தேவபிரயாகையின் எழிற் தோற்றம்  



செந்தூர அனுமன் 

இவ்வாறு கட்டு ஷ்யாமின் கதையைகேட்டுக் கொண்டே தேவப்பிரயாகையை அடைந்தோம். ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் அல்லது கேதார்நாத் நோக்கி செல்லும் போது நாம் முதலில் தரிசிக்கும் ப்ரயாகை( சங்கமம்) தேவப்ரயாகையாகும். ரிசிகேசிலிருந்து 70 கி..மீ தூரத்தில் உள்ளது.  கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதியும் வஸுதராவில் தோன்றி பல்வேறு சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலக்நந்தாவும் சங்கமமாகி  புனித கங்கையாக மாறுவது இந்த தலத்தில்தான்.  பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராட ரூபம் என்பது ஐதீகம். அந்தப்பெருமானின் நாபிக்கமலம்தான் தேவப்ரயாகை. தசரத சக்ரவர்த்தியும், பின்னர்  இராம பிரான் இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீரவும் தவம் செய்த தலம் தேவப்ரயாகை. இதனால் இங்கு இராமருக்கு ஒரு கோவில் உள்ளது. இது இரகுநாத்ஜீ ஆலயம் என்று அறியப்படுகின்றது.  பெரியாழ்வார் இந்த இராமபிரானை புருடோத்தமன் என்றும் தேவப்ரயாகையை  கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்த தலம் என்பதால் அவர் பெயரால் தேவ பிரயாகை என்று அழைக்கப்படுகினறது. இயற்கை எழில் கொஞ்சும் இத்தலம் 618 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டேராடூனுக்கும், தேஹ்ரிக்கும் பாதைகள் செல்கின்றன.



கண்டமென்னும்  கடிநகர்
மஹாதுவாரம் 


இரகுநாதர் ஆலயம் 

இரம்மியமாக இருக்கின்றது தேவப்ரயாகை, இரு வேறு வண்ணங்களாக ஓடி வரும் இரு ஆறுகள் ஒன்றாக இணைந்து வேறு வண்ணமாக பாயும் அழகை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நெடுஞ்சாலையில் இருந்து கீழே இறங்கி அலக்நந்தா ஆற்றின்  குறுக்காக உள்ள பழைய பாலத்தை கடந்து மறு கரையில் கீழிறங்கி சென்றால் நாம் சங்கமத்தை அடையலாம். தண்ணீர் பாயும் அளவில் பக்தர்கள் சங்கமத்தில் நீராட ஏதுவாக பல அடுக்குகளாக படித்துறைகள் அமைத்துள்ளனர். இரகுநாத்ஜீ ஆலயம் இக்கரையில்தான் அமைந்துள்ளது. முதலில் அலகாபாத் திரிவேணி சங்கமத்திரற்கு இணையான  புனிதமான  தேவ பிரயாகை சங்கமத்தில் நீராடி விட்டு பின் இராமசந்திர மூர்த்தியை சேவிக்கலாமா?  நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் மிகவும் கீழாகத்தான் ஒடிக்கொண்டிருந்து. சங்கமத்திற்கு  அருகில் கங்கா மாதாவின் அழகிய சிலை உள்ளது. மகர வாகினியாக வெள்ளைப் பளிங்கில் ஒளிர்கின்றாள் முக்திதாயினி கங்கம்மா.  அருகில்  பாறையில் செதுக்கப்பட்ட செந்தூரம் பூசிய அனுமன் சிலையையும்  தரிசனம் செய்கின்றோம்.  பாகீரதியின் எதிர்கரையில் ஒரு மணிக்கூண்டு உள்ளது.


பாகீரதியின் அக்கரை மணிக்கூண்டு 

 விஷ்ணுவின் நாபிக் கமலமான இந்த சங்கமத்தில் பித்ருகளுக்கு பிண்டஸ்ரார்த்தம் செய்வது மிகவும் உத்தமமானது. அதற்காகவே பல பண்டாக்கள் யாத்திரிகளுக்காக இங்கு காத்திருக்கின்றனர். வேண்டுபவர்கள் அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிறிது கவனமாக இருக்கவும். கங்கையில் நீராடி விட்டு  புருசோத்தமனை சேவிக்க மேலேறி சென்றோம்.  பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயம். முழுவதும் கல்லால் ஆன ஆலயம். இமயமலைக்கோவில் போல கோபுரம் மேலே வட்ட வடிவக்கல், மேலே கலசம்  காவி வர்ணக்கொடியுடன் எழிலாக நிமிர்ந்து நிற்கின்றது ஆலயம். ஒரு பிரகாரம். பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடி கருடன். உயரமான கருவறையில் இலக்குவணுடனும் மைதிலியுயுடனும்  15 அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார் கோதண்டராமர். மூவரும் சாளக்கிராம மூர்த்திகள், முகமண்டலங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தங்கையைமூக்கும் தமயனைத்தலையும்
தடிந்த எந்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்தரசாண்ட
எம்புருடோத்தமனிருக்கை
கங்கைகங்கை யென்னவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேற்கைதொழநின்ற
கண்டமென்னுங்கடிநகரே.  

மூன்றெழுத்த்தனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏற்றுக்கொண்டிருப்பார்க்குஇரக்கநன்குடைய
எம்புருடோத்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னுங்கடிநகரே.     

என்னும் பெரியாழ்வாரின் பாசுரங்களின் இரு பாசுரங்களை எழுதி வைத்திருக்கின்றர்.

தேவப்ரயாகையென்று வழங்கும் கண்டமென்னுந் திருப்பதியின் மகிமையை பெரியாழ்வார் எப்படி பாடியுள்ளார் என்று பார்க்கலாமா?

சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில் தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனற்கங்கைக் கண்டமென்னுங்கடிநகரே...

 வாமனனாக வந்து மாபலியிடம் மூவடி மண் கேட்டு, பின்  அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உத்தமனாக மூவுலகையும் அளந்த போது பெருமாளின் திருப்பாதத்தில், பிரம்மதேவன் செய்த அபிஷேக நீர்தான் பின்னர் சிவபெருமானின் சடையில் தங்கி பின் கங்கையாக பூமியில் பாய்ந்தாள் அந்த கங்கையின் கரையில் கண்டமென்னும் கடிநகரில், தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கையையும், மூத்தவனான இராவணனின் பத்து தலைகளையும் அறுத்த புருடோத்தமனான ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார் வேயர் குலத்துதித்த விஷ்ணுசித்தர்.  மேலும்

இமவந்தந்தொடங்கியிருங்கடலளவும் இருகரையுலகிரைத்தாட
கமையுடைப் பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே..

உயர்ந்த இமயமலையில் தொடங்கி கடல் வரையும் இரு கரைகளும் அகலமாக விளங்கும் கங்கையின் கரையில் வலம்புரி கையில் ஏந்தி அசுரர்களின் தலைகளை இடரும் புருடோத்தமன் கோயில் கொண்டு சேவை சாதிக்கின்றான் என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

சிவபெருமானின் சடையின் கொன்றை மலர், திருமாலின் பாத திருத்துழாய், ஐராவதத்தின் மதநீர், கற்பக மலர், நீராடும் தேவ மங்கையரின் சாந்து ஆகியவை சேர்ந்து பாயும்

எழுமையுங்ககூடியீண்டியபாவம் இறைப்பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும்பெருமை கங்கையின்கரைமேல் கண்டமென்னுங்கடிநகரே

 என்றும் பாடுகின்றார் வில்லிபுத்தூர்க்கோன்.

இராமபிரான் அமர்ந்த கல் சிம்மாசனம் 

இவ்வாறு பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்து  மனதார பெருமாளை வணங்கிவிட்டு கோவிலை வலம் வரும் போது இராமர் அமர்ந்திருந்த கல் சிம்மாசனத்தை கண்டோம். கோவிலின் சுவர்களில் அருமையான சிற்பங்கள் உள்ளன. குளிர் காலத்தில் பத்ரிநாத்தின் பண்டாக்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.



 பழைய தொங்கு பாலத்தில் தேஷ்பாண்டே

இனி இத்தலத்திற்கு அருகில் உள்ள இன்னும் சில ஆலயங்கள்.   தற்போது ரிஷிகேசத்தில் பரதன் ஆலயத்தில் உள்ள பரதன் சிலையை முஸ்லிம் படையெடுப்பின் போது  காப்பாற்ற மறைத்து வைத்திருந்த அழகிய சிறிய  பரதன் ஆலயமும் இங்குள்ளது. கோவிலிருந்து சிறிது தூரத்தில் வாமனரின் குகை உள்ளது.மேலும் இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் பாகீரதியின் நடுவில் தசரதர்  தன் முன்னோர்கள் முக்தியடைய அமர்ந்து தவம் செய்த சந்திர சிலா எனப்படும் பாறை உள்ளது. இதன் அருகில் நீராடுபவர்கள்களின் எல்லா எண்ணமும் ஈடேறும் என்பது ஐதீகம்.   இங்கிருந்து தெஹ்ரி செல்லும் பாதையில் சுமார் 30  கி. மீ தூரத்தில் மலை மேல் சந்திரபதனி கோயில் அமைந்துள்ளது.   

மிகவும் திருப்தியாக  பின் திரும்பி வந்து சென்றபோது மறந்து தேநீர் குடித்த இடத்தில் மறந்து விட்டு போன செல்போனை திருப்பிவாங்கிக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரிஷிகேசத்தை அடைந்து சென்ற வருடம் தங்கிய திருக்கோவிலூர் மடத்தில் தங்கினோம். 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படங்கள்...

இனிய பயண அனுபவம்...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

S.Muruganandam said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

S.Muruganandam said...

Welcome Jayadev. Many visit the site in future also.