Friday, February 17, 2012

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -19

மலையின் மேலே மேலே செல்ல செல்ல விண்ணின் விளையாடல்களை கண்ணுறலாம் . ஜோதிர் மடம், விஷ்ணுப் பிரயாகை, கோவிந்த்காட், , ஹனுமத்சடடி வழியாக வந்து பத்ரிநாத் அடைந்து  பத்ரிநாதரின் அற்புதமான தரிசனம்  கண்ட மனமகிழ்ச்சியில்  பஞ்ச பத்ரி என்னும் ஐந்து தலங்கள் எங்கெங்குள்ளன என்று பார்ப்போமா அன்பர்களே?  பத்ரிநாதரை இப்போது நாம் தரிசித்த விஷால் பத்ரி, மற்றும் யோக பத்ரி, பவிஷ்ய பத்ரி, விருத்த பத்ரி, ஆதி பத்ரி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம். 


விஷால்  பத்ரி: பத்ரி விஷால் எனப்படும் நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அலக்நந்தாவின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் பத்ரிநாதரின் பிரதானத் தலமாகும், பூஜை நடைபெறும் போது பக்தர்கள்     “ஜெய் பத்ரி விஷால் கீ“ என்று கோஷம் எழுப்புகின்றனர்.

யோக த்யான் பத்ரி : ஜோஷிமட் பத்ரிநாத் - பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில்  1920  மீ உயரத்தில் பாண்டு கேச்வரர்  புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. பாண்டு மன்னர் தமது இறுதி காலத்தை இங்கேதான் கழித்தார். பாண்டாவ்ர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராஜ்ஜியத்தை பரிஷித்திற்கு ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்காரோஹணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து துவங்கினர்.      கோயில் கருவறையில் யோக த்யானத்தில் பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். இத்தலம் பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தூரத்திலும், ஜோஷிமட்டிலிருந்து 20  கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. 


பவிஷ்ய பத்ரி: ஜோஷிமட் - மலாரி பஸ் தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது.  பவிஷ்ய என்றால் எதிர்காலம் அதாவது வருங்காலம் என்று பொருள் கொள்ளலாம்.    ஜய விஜயர்கள் என்ற இரு மலைகளுக்கு நடுவில் அலக்நந்தாவை கடந்து நாம் பத்ரிநாத்திற்கு செல்கின்றோம்.  ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது இந்த  ஜய விஜய மலைகள் (குதிரை மற்றும் யாணை மலைகள் - பார்ப்பதற்கு இவ்வாறு தோற்றம் அளிப்பதால் இப்பெயர்) இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் வழி அடைபட்டு விடும் அப்போது இந்த பவிஷ்ய பத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். தற்போது நரசிம்ம மூர்த்தியின் ஆலயம் இங்குள்ளது. 


விருத்த பத்ரி:  ஜோஷிர்மட் - பீபல்கோட் பஸ் சாலையில் ஜோஷிர்மட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது. அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த தலம், விருத்த என்றால் வயதான அதாவது பழைய என்று பொருள்  இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.  நாரதர்தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராச்சாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

  

 

த்யான் பத்ரி :  பீபல்கோட் - ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹெலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் - கிராமத்தை அடையலாம். அங்கு ஊர்வா ரிஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு ஆலயத்தில்  சதுர் புஜங்களுடன் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.


ஆதி பத்ரி:  சிலர் த்யான பத்ரி - யோக பத்ரி இரண்டையும் ஒரே க்ஷேத்திரமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதிபத்ரி என்ற ஒரு க்ஷேத்திரத்தையும் கூறுகிறார்கள். கர்ண ப்ரயாக் க்ஷேத்திரத்திலிருந்து ராணிகேத் பஸ் மார்க்கத்தில் சிம்லீ கிராமம் உள்ளது. சிம்லீயிலிருந்து 11கி.மீ. நடைபயணமாக  ஆதி பத்ரி சென்றடையலாம்.

பஞ்சபத்ரிகளைப் பற்றி பார்த்தோம் இனி பஞ்ச ப்ரயாகைகளைப் பற்றிக்காணலாமா அன்பர்களே. ப்ரயாகை என்றால் சங்கமம் அதாவது கூடுதுறை என்று பொருள். இரண்டு நதிகள் கூடும் இடமே ப்ரயாகை. இமயமலையெங்கும் எண்ணற்ற சங்கமங்கள் உள்ளன அவற்றுள்  பரம பவித்ரமான அலக்ந்ந்தாவின் ஐந்து சங்கமங்களே இந்த   பஞ்ச ப்ரயாகைகள். இவையனைத்தும் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளன எனவே சார்தாம் யாத்திரை செல்லும் அன்பர்கள் இந்த பஞ்ச ப்ரயாகைகளில் புனித நீராடலாம், அவையாவன


1.விஷ்ணு ப்ரயாகை
2.நந்த ப்ரயாகை
3.கர்ண ப்ரயாகை
4.ருத்ர ப்ரயாகை
5.தேவ ப்ரயாகை

விஷ்ணு ப்ரயாகை: சதோபந்த ஏரியிலிருந்து  உற்பத்தியாகி வஸுதரா நீர் வீழ்ச்சியாகியாக விழுந்து ஒடி வரும்   அலக்நந்தா மானா கிராமத்தில் சரஸ்வதி நதியுடன்   கேசவ ப்ரயாகையில் கூடி பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்டு ஓடி வருவதால் விஷ்ணு கங்கை என்னும் நாமத்துடன், தவுலிகிரியிலிருந்து  பாய்ந்து வரும் தவுலி கங்காவுடன் சங்கமம் ஆகின்றாள். இந்த சங்கமம் எனவே  விஷ்ணு ப்ரயாகை என்னும் பெயர் பெற்றது. நாரத முனிவர் இக்கூடுதுறையில்  தவம் செய்து மஹாவிஷ்ணுவின் தரிசனம் பெற்றார்.  இக்குடுதுறையில் எண்கோண விஷ்ணு ஆலயம் உள்ளது.  இதை கட்டியவர் இந்தோர் மஹாராணி அகல்யாபாய் ஆவார். விஷ்ணு குண்டம் மற்றும் காகபுஜண்டர் ஏரி அருகில் உள்ளன். ஜோஷிர்மட்டிலிருந்து 10 கி.மீ தூரத்தில் 1372 மீ உயரத்தில் விஷ்ணு ப்ரயாகை அமைந்துள்ளது. 

 
நந்த ப்ரயாகை : அடுத்த கூடுதுறை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான நந்தாதேவியிலிருந்து ஓடி வரும் நந்தாகினியும், அலக்நந்தாவும் கூடும் சங்கமம் ஆகும். நந்தன் என்னும் மன்னன் யாகம்  செய்ததால் இவ்விடம் இப்பெயர் பெற்றது என்பர்.  மற்றொரு ஐதீகம் யாதவ ரத்தினம் நந்தகோபனும், யசோதையும். வசுதேவரும் தேவகியும் மஹா விஷ்ணு தங்கள் புத்திரனாக வர வேண்டும் என்று வேண்ட கிருஷ்ணாவதாரத்தில் இருவருக்கும் அருள  ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தார்.    கர்ணபிரயாகையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் 914 அடி உயரத்தில் அமைந்துள்ளது நந்த ப்ரயாகை. கோபாலருக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது. ரூப் குண்ட்  நடைப்பயணம் செல்பவர்களை இங்கு அதிகம்  காணலாம்.  



கர்ண ப்ரயாகை: பிண்டாரி பனியாற்றிலிருந்து ஓடி வரும் பிண்டாரி நதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப்ரயாகை. மஹாபாரதத்து கர்ணனின் பெயரால் இந்த் கூடுதுறை இப்பெயர் பெற்றது. தங்களது மூத்த சகோதரன் கொடை வள்ளல்  கர்ணனுக்கு பாண்டவர்கள் பிண்டதானம் செய்த தலம். தானத்தினால் பெயர் பெற்ற கர்ணனிடம் பாண்டவர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க , எங்கு இறுதி கர்மம் நடைபெறவில்லையோ அங்கு தனக்கு இறுதி காரியம் நடைபெறவேண்டும் என்று கூற, இங்கு ஒரு இடம் கிட்ட அர்ச்சுனன் பாணம் விட பிண்டாரி உற்பத்தியாகி வந்தாள்.  இதன் கரையில் கர்ணனுக்கு ஒரு சிறு கோயில் உள்ளது. மறு கரையில் கிருஷ்ணருக்கும், சிவபெருமானுக்கும், துர்கா தேவிக்கும்  கோயில்கள் உள்ளன. கன்வ முனிவரின் ஆசிரமம் இங்குதான் இருந்திருக்கின்றது. துஷ்யந்தன் சகுந்தலை காதல் நாடகம் அரங்கேறியதும் இங்குதான். அதைத்தான் காளிதாசன் இயற்றிய அற்புத இலக்கியமாக இயற்றினார். விவேகானந்தர் இங்கு சில நாட்கள் தங்கியுள்ளார். இங்கிருந்து நைனிதால் மற்றும் இராணிகேத்திற்கு பாதை செல்கின்றது.

ருத்ர ப்ரயாகை: கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து வரும் மந்தாங்கினியும், அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ர ப்ரயாகையாகும். இசையில் தன்னை வெல்ல வந்த  நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம். ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம்.   சதி தேவி யாக குண்டத்தில் தக்ஷன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாக, மலைமகளாக, கௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம். அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாத்ஜீக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளது. இங்கிருந்து ஒரு பாதை மந்தாங்கினியின் கரையோரம் கேதார்நாத்திற்கும், மற்றொரு பாதை அலக்நந்தாவின் கரையோரம் பத்ரிநாத்திற்கும் செல்கின்றது. நாங்கள் தற்போது பயணம் செய்யும் பாதை இப்பாதைதான்.

தேவப்ரயாகை: கோமுக்கிலிருந்து ஓடிவரும் பாகீரதியும்,  வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம்  கழுவ் ஓடிவரும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் இந்த தேவப்ரயாகை. இதன் கரையில் அமைந்துள்ள இரகுநாத்ஜீ ஆலயம்தான்   பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் என்னும் திவ்யதேசம் ஆகும். இராமபிரான் இந்த கூடுதுறையில் தவம் செய்துள்ளார்.
  
இந்த பிரயாகைகளில் இப்பிரதேச மக்கள்  உத்தராயண புண்ணியகாலமான  மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மஹா சிவராத்திரி, இராமநவமி ஆகிய புண்ணிய நாட்களில் புனித நீராடி தங்கள் பாவம் போக்குகின்றனர்.

இந்த பிரயாகைகள் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. முதல் பிரயாகையில் தவுலியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆனால் அதற்குப்பின் தவுலி இல்லை அலக்நந்தாதான், அது போலவே இரண்டாவது சங்கமத்தில் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் இணைகின்றனர் அதற்குப்பின் நந்தாங்கினி இல்லை, மூன்றாவது பிரயாகைக்குப்பின் பிண்டாரி இல்லை, நான்காவது பிரயாகைக்குப்பின் மந்தாங்கினி இல்லை, ஐந்தாவது சங்கமத்திற்க்குப் பிறகு பாகீரதியும் இல்லை, அலக்நந்தாவும் இல்லை, கங்கையாக மாறுகின்றனர், இறுதியாக கடலில் கலந்தபின் கங்கையே இல்லை. அது போல ஜீவாத்மாக்களாகிய நாம் எண்ணற்ற நாமம் கொண்டாலும் அவையெல்லாம் இறுதியி பரமாத்மாவுடன் இணையும் போது மறைந்து போகும், ஆகவே நான் என்னும் ஆங்காரமும் எனது என்னும் மமகாரமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை இந்த ப்ரயாகைகள் நமக்கு உணர்த்துகின்றன.   

வழியெங்கும் இது போல நிலச்சரிவுகள் 


இனி நாங்கள் 16-09-11 அன்று  பீபல்கோட்டிலிருந்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்த கதையை கேளுங்கள். காலை 8 மணியளவில் பீபல் கோட்டிலிருந்து புறப்பட்டோம். முதலில்  கர்ணபிரயாகையை தரிசனம் செய்தோம். அன்று இரவே ஹரித்வார் அடைய வேண்டும் என்பதால் ப்ராயாகையில் நீராடவில்லை புனித நீரை தலையில் தெளித்துக் கொண்டு உடனே புறப்பட்டுவிட்டோம். அடுத்து ருத்ரபிரயாகையை வந்தடைந்தோம் அங்கும் ப்ரயாகையை தரிசனம் செய்து விட்டு, காலை சிற்றுண்டியை முடித்து விட்டுக்கிளம்பினோம். ஸ்ரீநகரில் ஒரு மருத்துவரைப்பார்த்து தேவேந்திரன் அவர்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு ஹரித்வார் நோக்கிக் கிளம்பினோம்.  சிறிது தூரம்தான் சென்றிருப்போம் ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் சுமார் ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் நின்றிருந்தோம்.

வழி சரியாக காத்திருக்கும் போது பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரையான பாதையைப் பற்றிய விவரங்களை காணலாமா?

புறப்படும் இடம்
செல்லும் இடம்
தூரம் கி.மீ
உயரம் மீ
பத்ரிநாத்
தேவதர்ஷனி
2
3101
தேவதர்ஷனி
ஹனுமான்சட்டி
13
2286
ஹனுமான்சட்டி
பாண்டுகேஷ்வர்
9
1829
பாண்டுகேஷ்வர்
கோவிந்த்காட்
4
1829
கோவிந்த்காட்
விஷ்ணு ப்ரயாகை
10
1372
விஷ்ணு ப்ரயாகை
ஜோஷிமட்
10
1850
ஜோஷிமட்
ஹெலாங்
14
1524
ஹெலாங்
தங்கானி
6
1677
தங்கானி
கருட்கங்கா
6
1372
கருட்கங்கா
பீபல்கோடி
5
1311
பீபல்கோடி
பிராஹி
9
1100
பிராஹி
சமோலி
8
1069
சமோலி
நந்த ப்ரயாகை
10
914
நந்த ப்ரயாகை
கர்ணப்ரயாகை
22
795
கர்ணப்ரயாகை
கௌச்சார்
11
790
கௌச்சார்
கோல்டிர்
10
645
கோல்டிர்
ருத்ர ப்ரயாகை
34
610
ருத்ர ப்ரயாகை
ஸ்ரீநகர்
34
579
ஸ்ரீநகர்
தேவப்ரயாகை
35
472
தேவப்ரயாகை
ரிஷிகேசம்
70
340
ரிஷிகேசம்
ஹரித்வார்
24
250
 
வழியெங்கும் வண்ணத்துப் பூச்சிகள் 

இரு பக்கமும் வண்டிகள், நிலச்சரிவின் காரணமாக பாதை பல இடங்களில் ஒரு வழிப்பாதையாக மாறி விட்டிருந்ததால் மாற்றி மாற்றி இரு பக்க வண்டிகளையும் காவல் துறையினர் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆகவே இந்த தாமதம். எண்ணற்ற சீக்கியர்களை இன்றைய தினம் கண்டோம். ஹேமகுண்ட் சாகிப் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நாங்கள் நின்ற இடத்தில் இருந்த இயற்கை காட்சிகளை குறிப்பாக பட்டாம்பூச்சிகளை இரசித்த்துக்கொண்டிருந்தோம். முதலில் சிறிது நேரத்தில் முன்னே சென்று விடலாம் என்று நினைத்தோம், சமயம் ஆக ஆக எரிச்சலும், அதே சமயம் பதினெட்டாம் தேதியன்று டெல்லியிலிருந்து விமானம் செல்ல பதிவு செய்திருப்பதால், சரியான சமயத்திற்கு சென்று சேர்ந்து விட முடியுமா? என்ற கவலையும், தேவேந்திரன் அவர்களின் உடல் நிலை இன்னும் மோசமாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்குப்பின்  எறும்பு ஊர்வது போல வண்டி ஊர்வலம் நகர்ந்தது  பல நிலச்சரிவுகளை கடந்து மாலை ஏழு மணியளவில் ருத்ர ப்ரயாகையை வந்து அடைந்தோம். சுமார் 30 கி.மீ தூரத்தை கடக்க சுமார்  9  மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இன்றைய தினம் முழுவதும் நடு ரோட்டில் நின்று கொண்டு ஆங்காங்கே மண்டை காய்ச்சலுடன்  பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தோம். 

என்ன செய்வது என்று புரியாமல் 
அமர்ந்திருக்கும் வைத்தி அண்ணன்

வழியில் பெரிய நகரம் ஏதும் இல்லாமல் இருந்ததால் மதியம் எதுவும் சாப்பிட கிடைக்கவில்லை. ருத்ரபிரயாகையிலும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக எந்த உணவும் கிட்டவிலை, வெறும் பன்(Bun)தான்  இருந்தது. அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு சாயா குடித்து விட்டு,  கருங்குல் நேரத்தில் அப்படியே ருத்ரபிரயாகையை தரிசனம் செய்துவிட்டு இனியாவது பாதை சரியாக வேண்டுமென்று கிளம்பத் தயாரானோம்.

 அப்போது இனி ஒரு குழுவினர் அவர்களது பேருந்து  எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். நாங்கள்  GMVN மூலம்  12 நாள் சார்தாம் யாத்திரைக்காக கிளம்பினோம், அவர்கள் 10 நாள் யாத்திரைக்காக இரண்டு நாள்  கழித்து கிளம்பியவர்கள், இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அன்பர்கள்,  அவர்கள் வழிகாட்டியின் உதவியினால் நான்கு தலங்களையும் தரிசனம் செய்து விட்டு மிகவும் மகிழ்ச்சியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். அனைவரும் கேதார்நாத்தில் குதிரை மூலமாக பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழைத்து சென்று வெற்றிகரமாக கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு வந்தோம் என்று கூறினார். அவரே ரிஷிகேஷம் வரைதான் பேருந்து செல்லும் அங்கு இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்துள்ளேன், உங்களுக்கும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று கூறினார். நாங்களும் சரி என்று ஒத்துக்கொண்டோம், இந்த வழிகாட்டி நம்முடன் வந்திருந்தால் நாமும் நான்கு தலங்களையும் தரிசனம் செய்திருக்கலாமோ? என்ற எண்ணம் மனதில் தோன்றியது, எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன், நம் கையில் என்ன இருக்கின்றது, எங்கோ சிறு தவறு செய்து விட்டோம், சரியாக சங்கல்பம் செய்து விட்டு புறப்படுவரவில்லை, இனி ஒரு சமயம் அவர் அழைக்கும் போது வந்து தரிசனம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். 

மிகுந்த உழைப்பாளிகளான
 மலைப் பிரதேச மக்கள் 

நள்ளிரவில்தான் ரிஷிகேஷை அடைவோம் என்பதால் இனி ஹரித்வார் செல்லவேண்டாம் ரிஶிகேஷிலேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். பத்ரிநாத்தில் சந்தித்த தேஷ்பாண்டே அவர்கள், ஹரித்வாரில் கர்நாடக சங்கத்தில் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.  ரிஷிகேஷத்தில் தங்க முடிவு செய்ததால், திரு இரவி அவர்கள், அவருக்கு தெரிந்தவர் மூலமாக, திருக்கோவிலூர் மடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். தேவ ப்ரயாகையில் இருந்து பாதை சரியாக இருந்தது, எனவே எங்கும் நிற்காமல் சுமார் 11 மணியளவில் ரிஷிகேஷ் வந்தடைந்தோம், GMVN யாத்திரை செய்ததன் பரிசாக பழ ரசமும், கங்கா தீர்த்தமும்  தந்தார்கள், அதிக ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும் 12  நாட்களும் எங்களை வழி நடத்திச்சென்ற வழிகாட்டி, வண்டி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியவர்களுக்கு சிறிது அன்பளிப்பு கொடுத்தோம். ஆச்சிரியத்துடனும் அதே சமயம் மகிழ்ச்சியுடனும் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இரவு  உணவை திருப்தியாக முடித்தோம். பல நாட்களுக்குப்பின்  சரியான உணவாக அமைந்தது அமிர்தமாக இருந்தது. பின்னர் கிளம்பி திருக்கோவலூர் மடம் வந்து சேரும் போது நள்ளிரவாகி விட்டது அங்கு தங்கினோம். தேவேந்திரன் உடல் நிலை எவ்வாறு சீராகியது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் அதை  அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே?.

4 comments:

Spark Arts Kovai said...

மிக விரிவாக எழுதி உள்ளீர்கள், எல்லோருக்கு பயன்படக்கூடிய தகவல், வாழ்த்துக்கள், நன்றி

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி

S.Muruganandam said...

வரவேற்கின்றேன் கந்தசாமி ஐயா.